இராமாயணம் - தருமமும் தகவும்
தூரத்தில் வரும் இராம இலக்குவனர்களை அனுமன் காண்கிறான். முதலில் அவர்களை கண்ட சுக்ரீவன் தன்னை கொல்ல வாலிதான் அவர்களை அனுப்பி இருக்கிறான் என்று எண்ணி ஓடி ஒளிந்து கொண்டான். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அது போல.
அனுமன் அவர்களை எடை போடுகிறான்.
சில பேருக்கு தர்மம் செய்ய மனம் இருக்கும், வசதி இருக்காது.
சில பேருக்கு நிறைய பணம் இருக்கும், தர்மம் செய்ய மனம் இருக்காது.
இரண்டும் சேர்ந்து வருவது இனிமையானது.
இராம இலகுவனர்களைப் பார்த்தால் தருமமும் தகவும் இவர்களிடம் ஒன்றாக வந்தது போல இருக்கிறது. தருமமும், தகவும் இவர்களின் சொத்து. (தக்கார், தகவிலார் அவர் அவர்தம் எச்சத்தால் காணப்படும் என்பார் வள்ளுவர். தகவு என்றால் தகுதி)
தருமம் என்ற சொல்லுக்கு அறம் , நீதி வழி நிற்றல், தர்ம வழி நிற்றல் என்றும் பொருள் சொல்லலாம்.
சுக்ரீவன் நினைப்பது போல இவர்கள் வாலி அனுப்பி சுக்ரீவனை கொல்ல வந்தவர்கள் அல்ல.
உங்களிடம் மிக மிக அறிய ஒரு மருந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உயிர் காக்கும் மருந்து என்றால் அதன் மகத்துவம் புரியும். அந்த மருந்து ஒரே ஒரு பாட்டில் தான் இந்த உலகில் உள்ளது. அது இல்லாவிட்டால் உங்களுக்கு ரொம்ப கஷ்டம். அந்த மருந்தை, வைத்த இடத்தில் காணவில்லை. அதை எப்படி முழு மூச்சுடன் தேடுவீர்கள். அது இல்லாமல் முடியாது. கடையில் போய் வாங்கிக் கொள்ளலாம் என்றால் கிடைக்காது. அந்த மருந்து கிடைத்தால் தான் உண்டு. வெளி நாடு போபவர்களுக்கு இது புரியும். முக்கியமான சில மருந்துகளை எடுத்துச் செல்வார்கள். திடீரென்று ஒரு நாள் அந்த மருந்து பெட்டியில் வைத்த இடத்தில் இருக்காது. பெட்டியை கவிழ்த்து போட்டு உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள்.
அப்படி ஒரு மருந்தை தேடுபவர்களை போல் இவர்கள் எதையோ இழந்து விட்டு எல்லா பக்கமும் தேடி கொண்டு வருகிறார்கள்
என்று இராம இலக்குவனர்களை எடை போடுகிறான் அனுமன்.
கண்டவுடன் மனிதர்களை எடை போடுவது அறிவின் ஒரு கூறு.
பாடல்
தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,
அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள்.
பொருள்
தருமமும் = தர்மம் செய்வதும்
தகவும் = அதற்கு உள்ள தகுதியும்
இவர்; தனம் = இவர்களுடையசொத்து
எனும் தகையர் = என்று சொல்லத் தக்கவர்கள்
இவர் = இவர்கள்
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று = இவர்கள் வேறு ஒன்றையும் நினைத்து வரவில்லை (சுக்ரீவனை கொல்ல )
அது கருதின் = வேறு என்ன வேலையாக என்று நினைத்தால்
அரு மருந்து அனையது = அருமையான மருந்து ஒன்று
இடை அழிவு வந்துளது = இடையில் அழிவு வந்துள்ளது
அதனை = அந்த மருந்தை
இரு மருங்கினும் = இரண்டு பக்கமும்
நெடிது துருவுகின்றனர் = நீண்ட தொலைவுக்கு துருவி துருவி பார்க்கிறார்கள்
இவர்கள். = இவர்கள்
கம்பர் நல்ல தூள் உதாரணம் சொன்னார்!
ReplyDelete