அபிராமி அந்தாதி - அழியா முத்தி ஆனந்தமே
உண்மை எது ? உண்மை என்பதை வரையறத்து கூற முடியுமா ? அப்படி கூற முடிந்தால் நேரடியாக சொல்லிவிடலாமே. எதற்கு இத்தனை வேதம், உபநிடதம், புராணம், இதிகாசம் எல்லாம் ? இத்தனை இருந்தும் இன்னும் உண்மை எது என்று அறிந்தபாடில்லை.
உண்மை என்பது வார்த்தைகளுக்குள் அடங்காத ஒன்று. எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் அதை அறிந்து கொள்ள முடியாது. வார்த்தையாலோ, எழுத்திலோ அதை கூற முடியாது.
இனிப்பு என்ற சுவையை எழுதிக் காட்ட முடியாது.
மனைவியின் கண்ணோரம் கசியும் காதலை வார்த்தைக்குள் அடக்க முடியாது.
பக்தியும், இறை உணர்வும் அப்படித்தான்...
அவள், "எழுதா மறையின் அரும் பொருள்". மறை என்றால் வேதம். எழுதா மறை என்றால் எழுதப் படாத மறை பொருள் அவள். அவள் வார்த்தைகளில் சிக்க மாட்டாள். யாரோ கண்டு உங்களிடம் சொல்ல முடியாது. நீங்களே தான் அவளை நேரடியாக அறிய வேண்டும்.
அவளை அறிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால்....எல்லாம் அவளாகத் தெரியும்.....நிற்பதும், இருப்பதும், கிடப்பதும், நடப்பதும் எல்லாம் அவளாகத் தெரியும்.
இன்னொரு பொருள், நிற்கும் போதும், இருக்கும்போதும் படுத்து கிடக்கும்போதும், நடக்கும்போதும், அவள் நினைவாகவே இருக்கும்.
எபோதும் வணங்குவது அவளுடைய மலர் போன்ற திருவடிகளை. எதை வணங்கினால் என்ன, எல்லாம் அவள்தானே.
நமக்கு வாழ்க்கையில் கிடக்கும் இன்பங்கள் எல்லாம் அழியக் கூடிய இன்பங்கள். ஒரு சமயம் இன்பமாய் இருக்கும். சிறிது நேரம் இருக்கும். நாள் ஆக நாள் ஆக அதில் உள்ள இன்பம் குறையும். மனம் சலிப்புறும். உடல் சலிப்புறும். பின் அதுவே கூட துன்பமாய் மாறும்
அபிராமி அப்படி அல்ல.
அவள் அழியாத ஆனந்தம் தருபவள்.
உமா என்றால் ஒளி என்று பொருள். ஒளி அநாதியானது. என்று பிறந்தவள் என்று அறிய முடியாத அன்று பிறந்தவள் அவள்..
பாடல்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.
பொருள்
நின்றும் = நின்றும்
இருந்தும் = ஓரிடத்தில் இருந்தும்
கிடந்தும் = கிடந்தும்
நடந்தும் = தேடி நடந்தும்
நினைப்பது உன்னை = நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் = நான் எப்போதும் வணங்குவது உன் மலர் போன்ற பாதங்களை .
எழுதாமறையின் = எழுதப் படாத மறையின் (வேதத்தின், மறை பொருளின்)
ஒன்றும் அரும்பொருளே = அறிய ஒரு பொருளே
அருளே = அருளே வடிவானவளே
உமையே = ஒளி வடிவானவளே
இமயத்து அன்றும் பிறந்தவளே = என்று என்று அறியமுடியாத அன்று தோன்றியவளே
அழியா முத்தி ஆனந்தமே = அழியாத முத்தியும், ஆனந்தமும் தருபவளே
No comments:
Post a Comment