Tuesday, April 23, 2013

அபிராமி அந்தாதி - பெண் எனும் சீதனம்


அபிராமி அந்தாதி - பெண் எனும் சீதனம் 


பெண் கொண்டு வருவது அல்ல, அவளே ஒரு சீதனம்.

அவளை விடவா இன்னொரு பெரிய சீதனம் இருக்க முடியும் ?

திருமணம் முடித்து, முதன் முதலாய் மனைவியின் கை பிடித்து நடக்கும் போது  எப்படி இருக்கும் ?

இவள் என்னவள். எனக்கே உரியவள் என்ற சந்தோஷம் உடல் எல்லாம் படரும் அல்லவா. 

இவ்வளவு அழகானவள், இவ்வளவு இனிமையானவள் என் மனைவியா. சில சமயம் நம்ப முடியாமல் கூட இருக்கும்....

சின்ன நெற்றி, அதில் புரளும் ஓரிரண்டு முடி கற்றைகள், குழந்தை போன்ற மொழி, சில்லென்ற கை விரல்கள்....இவள் என் மனைவியா...என்னோடு இருக்கப் போகிறவளா...என்று மீண்டும் மீண்டும் மனதில் அலை அடிக்கும் அல்லவா....

அபிராமியை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. 

பட்டுச் சேலை, கன்னத்தில் வெட்கம், காதில் கம்மல்...புகுந்த வீடு போகிறாள்....

நடந்தது என்றோ...அபிராமி பட்டர் நினைத்துப் பார்க்கிறார்...

பாடல் 

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


பொருள் 



குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை = மதுரையில் உள்ள குயில் போன்ற குரல். கடம்பாவனம் என்றால் மதுரை. குரல் அவ்வளவு இனிமை.  

கோல வியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை = இமய மலையில், மயில் போல இருப்பாள். தோற்றம் அவ்வளவு அழகு. 

வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் = வானில் தோன்றும் ஒளி போல இருப்பாள். வெயில் சக்தி தரும். உயிர் தரும். பார்வைக்கு ஒளி தரும். ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மாலையில் மயக்கும், மதியம் தகிக்கும்...குளிர் காலத்தில் இதம் தரும், வெயில் காலத்தில் மழை கொண்டு வந்து தரும்...அபிராமி வெயில் போன்றவள்

கமலத்தின்மீது அன்னமாம் = தாமரை மலரில் இருக்கும் அன்னம் போல மென்மையானவள் 
 
கயிலாயருக்கு = கயிலாயத்தில் இருப்பவருக்கு 

அன்று இமவான் அளித்த கனங்குழையே = அன்று இமவான் அளித்த தங்கக் கம்மல் அணிந்த எங்கள் அபிராமியே. 

இமவான், தான் வளர்த்த பெண்ணை திருமணம் முடித்து கொடுக்கிறான்.  அந்த பெண் அபிராமி. அவள் குயில் போல், மயில் போல், வெயில் போல், அன்னம் போல் இருப்பாள். 

காதுக்கு இனிமை, கண்ணுக்கு இனிமை, மெய்க்கு இனிமை....

3 comments:

  1. நல்ல பாடல்.அது என்ன மதுரையில் உள்ள குயிலின் குரல் மட்டும் தான் இனிமையாக இருக்குமா?

    ReplyDelete
  2. One of the definitions of history is "the interpretation of events by historians". I think it can be applicable for literature also. Poems may be too good but your interpretations are mind blowing.

    ReplyDelete
  3. அழகுக்கு அழகு சேர்ப்பது போல, உன் உரைகள், கற்பனைகள், விளக்கங்கள் பாடல்களுக்கு அழகு கூட்டுகின்றன. வைரம் விலை மதிப்பானதுதான், ஆனால் அதை வெட்டி மெருகூட்டினால் அதன் மதிப்பு இன்னும் உயர்வது போல.

    ReplyDelete