Saturday, April 27, 2013

சிலப்பதிகாரம் - பெண் என்னும் வள்ளல்


சிலப்பதிகாரம் - பெண் என்னும் வள்ளல் 


வேலை நிமித்தமாய் வெளிநாடு போய்  இருக்கிறான் கணவன். புது இடம். புது மக்கள். புது சூழ்நிலை. வேறு உணவு. வேறு கால நிலை.  வேலைக்குப் போன இடத்தில் ஆயிரம் பிரச்சனை. அலுப்பு, எரிச்சல், கோபம், ஏமாற்றம் எல்லாம் உண்டு.

என்னடா வாழ்க்கை என்று வெறுப்பு வருகிறது.

இடையிடையே மனைவியின் நினைவு வருகிறது. அவள் புன்னகை, அவளின் இனிமையான தோற்றம், அவளின் மென்மையான குரல்...எல்லாம் வந்து வந்து போகிறது.

அவளை காண வேண்டும் ஏக்கம் எழுகிறது.....

சிறிது நாள் கழித்து வேலை முடிந்து வீடு வருகிறான்.

மனைவியை பார்க்கப் போகிறோம் என்று ஆவல்.

அவளுக்கும் அவனை ரொம்ப நாள் கழித்து பார்க்கப் போகிறோம் என்று ஆவல்.

அதிகாலையிலேயே எழுந்து, ஷாம்பூ போட்டு குளித்து, அப்படியே கொஞ்சம் சாம்பிராணி போட்டு, கூந்தலை அப்படியே அலை பாய விட்டு இருக்கிறாள்....

இராத்திரி எல்லாம் தூக்கம் இல்லை...மணிக்கொரு தரம் எழுந்து மணி பார்க்கிறாள்...தூக்கம் இல்லாததால் கண் எல்லாம் சிவந்து இருக்கிறது....

இதோ வந்து விட்டான்...

அவளைப் பார்க்கிறான்...

வாவ் ...என்று வியக்கிறான்..அலை பாயும் குழல், அதற்க்கு கீழே வளைந்த கரிய புருவம், இன்னும் கொஞ்சம் கீழே சிவந்த கண்கள்...அந்த கண்ணில் காதல், அன்பு, பாசம் எல்லாம் ததும்புகிறது...

வேலைக்கு போன இடத்தில் தூது வந்ததும், அதை காண வேண்டும் என்று என்னை பாடாய் படுத்தியதும் இந்த கண்கள் தான், அந்த துன்பத்திற்கு மருந்து தருவதும் அதே கண்கள் தான்....

என்னங்க, இது எல்லாம் சிலப்பதிகாரத்தில் இருக்கிரதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

பாடலைப் பாருங்கள், அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....

பாடல்


அகிலுண விரித்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும்
மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த


பொருள்






அகிலுண = அகில் + உண்ண = சாம்பிராணி போன்ற நறுமணப் பொருள். கூந்தலுக்கு போடும் நறுமணப் பொருள். அந்த புகை போடும் போது, அவளுடைய கூந்தல் அந்த நறுமண புகையை உண்பது மாதிரி இருக்கிறதாம். அவள் கூந்தலுக்கு உள்ளே போகிறது...வெளியே வருவது தெரியவில்லை. அவ்வளவு அடர்ந்த கூந்தல்.

 விரித்த அம்மென் கூந்தல் = விரித்த அந்த மென்மையான கூந்தல். ஷாம்பூ போட்ட கூந்தல். மென்மையாதான இருக்கும்


முகில்நுழை = மேகத்திற்குள் நுழைந்த  (முகில் = மேகம்)

மதியத்து = நிலவு போல் அவள் முகம். பஞ்சு போல் கரிய கூந்தல் மேகம் போல் இருக்கிறது. அதன் பின்னால் இருக்கும் முகம் நிலவு போல அவ்வளவு நிர்மலமாய், பிரகாசமாய், குளிர்ந்து இருக்கிறது.

முரி = முறிந்த, வளைந்த

கருஞ் = கரிய

சிலைக் = வில். வளைந்த கரிய வில்லு ... வேறு என்ன புருவம் தான்

கீழ் = அந்த புருவத்தின் கீழ்

மகரக் கொடியோன் = மீன்கொடி கொண்டவன், மன்மதன் 

மலர்க்கணை துரந்து = மலர் கணைகளை விட்டு, மன்மதன் தோற்று ஓடினான்

சிதரரி = அந்த மலர் கணைகளை இவள் எடுத்து சிதற விடுகிறாள், அவள் கண்கள் மூலம்.

 பரந்த = விரிந்து


செழுங்கடைத் = செம்மையான

தூதும் = தூதும் (நான் அங்கு இருக்கும் போது  என்னிடம் தூது வந்தது எனக்கு காதல் நோய் தந்ததும் இந்த கண்கள் தான்)

மருந்தும் = இப்போது அந்த கண்ணுக்கு மருந்து தருவதும் இதே கண்கள் தான்

ஆயதிம் மாலையென் றேத்த = ஆகி வந்தது இந்த மாலைப் பொழுது

இப்ப என்ன சொல்றீங்க ?






1 comment:

  1. வழக்கம் போல, ஜொள்ளு பாட்டுக்கு வசனம் எழுத உன்னை மாதிரி யாரும் கிடையாது!

    ReplyDelete