இராமாயணம் - கை ஏந்திய கருணைக் கடல்
இறைவனிடம் இல்லாதது எது ? எல்லாம் இருக்கிறது அவனிடம்.
இருந்தும், மானிடப் பிறவி எடுத்ததால், மனிதர்கள் போல் வாழுந்து அவர்களுக்கு ஒரு உதாரணமான வாழ்க்கை வாழ்ந்து காட்டுகிறான்.
இராவணன், சீதையை கவர்ந்து சென்று விட்டான். சீதை இருக்கும் இடம் இலங்கை தெரிந்தது. அங்கு போக வேண்டும் என்றால் கடலை கடக்க வேண்டும்.
வருண பகவானை வேண்டுகிறான் இராமன்....சீதையை மீட்க்க ஒரு வழி தர வேண்டும் என்று தர்ப்பை புல்லில் அமர்ந்து வேண்டினான். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல ஏழு நாட்கள்.
பாடல்
'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக !' என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணைஅம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி.
பொருள்
தருண = இளமையான
மங்கையை = மங்கையை (சீதையை)
மீட்பது ஓர் நெறி தருக ! = மீட்க்க ஒரு வழி தருக
என்னும் = என்னும்
பொருள் நயந்து = பொருள் நயந்து. உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இடம். இராமன் கேட்டது ஒரு வழி தான் . அதை பொருள் என்கிறான் கம்பன். பொருள் உதவி செய்யாவிட்டாலும், அது பொருள் தான். அறிவை செலவிட்டாலும், நேரத்தை செலவிட்டாலும் அது பொருள் தான். நாம் மற்றவர்களிடம் உதவி கேட்க்கும் போது இதை மனதில் கொள்ள வேண்டும். பொருள் கேட்பது எப்படி யாசகமோ, அப்படி தான் பொருள் அல்லாததை கேட்பதும்
நல் நூல் நெறி = நல்ல நூல்களில் கூறப்பட்ட வழியில் (வேத நூல் என்று பொருள் சொல்வாரும் உண்டு)
அடுக்கிய புல்லில் = அமைத்த புல் படுக்கையில்
கருணைஅம் கடல் கிடந்தனன் = அந்த கருணை கடல் கிடந்தான்.
கருங் கடல் நோக்கி = கரிய கடலை நோக்கி
வருண மந்திரம் எண்ணினன் = வருண மந்திரத்தை மனதில் கூறினான்
விதி முறை வணங்கி = விதிப்படி வணங்கி
கருணைக் கடலே நம்மிடம் வந்து கேட்க்கிறதே என்று கடல் பணிவு கொள்ளவில்லை. அலட்ச்சியம் செய்தது .
பின் என்ன நடந்தது ?
அது ஒரு புறம் இருக்க, இந்த சூழ்நிலையை அருணகிரியார் கந்தர் அலங்காரத்தில் வடிக்கிறார்.
அந்தப் பாடல் ...அடுத்த ப்ளாகில்....
No comments:
Post a Comment