Saturday, April 20, 2013

திருக்குறள் - கற்க

திருக்குறள் - கற்க 


பொதுவாக மாணவர்கள் மதிப்பெண்களை நினைத்தே படிக்கிறார்கள். நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும், பள்ளியில், மாநிலத்தில், நாட்டில் முதலாவதாக வரவேண்டும் என்று நினைத்தே கல்வி கற்கிறார்கள். அப்படி படிக்கும் படிப்பு வெகு சீக்கிரம் மறந்தும் போய் விடும்.

வள்ளுவர் அப்படி படிக்க சொல்லவில்லை.

கற்றதனால் ஆய பயன் என் கொல் அவயத்து முந்தி நிர்க்காவிடில் என்று சொல்லவில்லை.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக


நீங்கள் அறிந்த குறள்தான்.

கற்பவை கற்க கசடறக் = கற்க வேண்டியவற்றை ஐயம் இன்றி கற்க. அது என்ன ஐயம் ? சந்தேகம் என்று ஒரு பொருள். பரிமேல் அழகர் ஒரு படி மேலே போகிறார். எதை கற்றாலும், சில விபரீத அர்த்தங்கள் தோன்றலாம். சில பேருக்கு மூளை குதர்க்கமாகவே சிந்திக்கும். விபரீத அர்த்தங்களை விடுத்து நல்லவற்றை அறிந்து கொள்ள வேண்டும். இராமாயணம் படித்துவிட்டு, அதில் இருந்து என்ன தெரிந்து கொண்டாய் என்றால், அப்பா அம்மா   பேச்சை கேட்டால் துன்பம்தான் மிஞ்சும்   என்று அறிந்து கொண்டேன் என்று சொல்வதைப் போல. சரி, எது விபரீத அர்த்தம் எது நல்ல அர்த்தம் என்று எப்படி அறிந்து கொள்வது ? இதற்குதான், கற்றறிந்த அறிஞர்களின் துணை வேண்டும். பெரியவர்கள் சொன்னதை கேட்க்க வேண்டும். சில சமயம், நாமே எல்லாவற்றையும் படித்து அறிந்து கொள்வோம் என்பது நடக்காது. திருக்குறளுக்கு  பரிமேல் அழகர் போன்றோர் உரை வேண்டி இருப்பது போல.

எதை கற்க வேண்டும் ? கற்க வேண்டியவற்றை கற்க வேண்டும். எது கற்க வேண்டியது ? அறம் , பொருள், இனபம் , வீடு இவற்றை தருவதை கற்க வேண்டும்.

கற்ற பின் நிற்க அதற்க்கு தக - கற்றபின், அதை உள்வாங்கி, காலம் இடம் அறிந்து அதற்க்கு ஏற்றாற்போல், தகுந்த மாதிரி நடந்து கொள்ளவேண்டும். கற்றவற்றை அப்படியே நடைமுறை படுத்தச் சொல்லவில்லை.




கல்வி என்பது தனி மனிதனுக்காகவா ? சமுதாயத்திர்காகவா ? பொதுவாக, நாம் கல்வி என்பது நமக்கு மட்டும் என்று இருக்கிறோம். நல்ல வேலை கிடைக்க, நிறைய பணம் சம்பாதிக்க, சமுதாயத்தில் ஒரு நல்ல மதிப்பை பெற...இதற்குத்தான் கல்வி என்று பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. ஒருவன் கல்வி கற்பது, தனக்காக மட்டும் அல்ல, சமுதாயத்திற்காகவும் என்று சொல்ல வருகிறார்.

மருத்துவம் படிக்கும்போது - மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைத்து படிக்கக் கூடாது ....மக்களின் வலியை தீர்க்க நான் உதவுவேன் , மக்கள் உயிர் காக்க உதவுவேன்  என்ற நினைவோடு படிக்க வேண்டும். அப்படி படிக்கும் போது, நல்லபடியாக படிக்க வேண்டும், நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும், என்னை நம்பி சில உயிர்கள் இருக்கின்றன என்ற பொறுப்போடு படிக்கத் தோன்றும்

பொறியியல் (Engineering ) படிக்கும் போது , நான் கட்டும் பாலத்தால், அணையால், வீட்டால் மக்கள் பயன் பெற வேண்டும் என்ற கனவோடு படிக்க வேண்டும்.

இதனால் தான் கல்வி என்ற இந்த அதிகாரத்தை பொது வாழ்க்கையை பற்றி பேசும் அரசியலில் வைத்து இருக்கிறார் வள்ளுவர்.

சமுதாய  சின்தனையோடு கல்வி கற்க வேண்டும்.

அப்படி ஒரு கல்வி முறை வந்தால் சமுதாயம் மேம்படும், கல்வி என்பது பொருள் சேர்க்கும் வழி என்பது மாறி உதவி செய்யும் கருணை உள்ளம் பிறக்கும் , ஏமாற்று குறையும்,...நிறைய நல்லது நடக்கும்....

யோசித்துப் பாருங்கள் ... எவ்வளவு உயர்ந்த சிந்தனை என்று ....


No comments:

Post a Comment