இராமாயணம் - நாய் அடியனேன்
நாய் நல்ல பிராணிதான். நன்றியுள்ள பிராணிதான். இருந்தாலும் நம் சமய நூல்களில் மிக மிக கீழான ஒன்றை சுட்டிச் சொல்ல வேண்டும் என்றால் நாயை உதாரணம் கட்டுகிறார்கள்.
"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" என்பார் மணிவாசகர்.
"நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்து" என்பதும் அவர் வாக்கே.
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே
என்பார் அபிராமி பட்டர்.
ஏன் நாயை உதாரணம் சொல்லுகிறார்கள்.
நாயிடம் ஒரு கெட்ட குணம் உண்டு.
அது உணவு உண்ணும். உண்ட பின், தன் உடலுக்கு எது சரியில்லையோ அதை கக்கி விடும். கக்கிய பின், மீண்டும் அந்த கக்கியதை உண்ணும். வேறு எந்த விலங்கும் செய்யாத அருவருப்பான செயல் இது.
நாம் என்ன அப்படி செய்கிறோம் ?
தவறு என்று தெரிந்தும் அதே செயலை நாம் மீண்டும் மீண்டும் செய்வது இல்லையா ?
உடலுக்கு தீங்கு என்று தெரிந்தும் இனிப்பை, எண்ணெய் பலகாரங்களை, அதிகமான உணவை உட்கொள்வது இல்லையா.
உணவு ஒரு உதாரணம். இப்படி பலப் பல தீய செயல்களை நாம் தெரிந்தே செய்கிறோம்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று அறிந்த பின்னும் ஆசை வைக்கிறோம்.
பிறன் மனை நோக்கும் பாவம், பொறாமை, கோபம், அழுக்காறு, அவா, இன்னாச் சொல், என்று நாம் செய்யும் தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தெரிந்தே செய்யும் தவறுகள்.
தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம்.இது ஒரு அருவருப்பான செயல் இல்லையா ?
எனவே தான் நம்மை நாயோடு ஒப்பிட்டுப் பேசினார்கள் நம் சமயக் குரவர்கள்.
வாலி, இராமனின் அம்பு பட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான்.
"இராமா, உன்னுடைய கூரிய அம்பினால் எய்து, நாய் போன்ற அடியவனான என்னுடைய ஆவி போகும் வேளையில் வந்து அறிவு தந்து அருளினாய். மூவரும் நீ,முதல்வனும் நீ...."என்று போற்றுகிறான்.
அப்படி என்ன செய்த தவறையே மீண்டும் செய்து விட்டான் வாலி ?
வாலி இந்திரனின் அம்சம்.
முன்பு ஒரு முறை மாற்றான் மனைவியான அகலிகையை விரும்பினான். அதற்கு தண்டனை பெற்றான்.
மீண்டும் மாற்றான் மனைவியை (சுக்ரீவனின் மனைவியான ருமையை) பிடித்து வைத்துக் கொண்டான். செய்த தவறை மீண்டும் செய்கிறான்.
அதை அவனே உணர்ந்து சொல்கிறான் "நாய் அடியேனின் ஆவி போகும் வேளையில் நல் அறிவு தந்தாய் "என்று.
இராமன் தவறு செய்தானா இல்லையா என்பதல்ல கேள்வி.
வாலி தவறு செய்தானா இல்லையா என்பதல்ல கேள்வி.
நீங்கள் செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருக்கிறீர்களா? அது தான் கேள்வி. அது தான் முக்கியம்.
சிந்தியுங்கள். வாலி வதம் நம்மை உயர்த்திக் கொள்ள உதவி செய்தால் அது அது படித்ததின் பலன்.
பாடல்
ஏவு கூர் வாளியால்
எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய்,
அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
பகையும் நீ! உறவும் நீ!
பொருள்
இதற்கு முந்தைய ப்ளாகில் பார்த்தோம். பார்க்காதவர்கள் அந்த ப்ளாகை மீண்டும் ஒரு முறை படிப்பது நலம்.
வாலி வதம் பாடல்களில் இவ்வளவு பொருளா? யோசிக்க வேண்டிய விஷயம். நன்றி.
ReplyDelete