Sunday, September 28, 2014

கலித்தொகை - இளமையும், வாழ்கையும்

கலித்தொகை - இளமையும், வாழ்கையும் 


இளமை கொஞ்ச காலம்தான் இருக்கும். அந்த நேரத்தில்தான் பொருள் தேடவும் வேண்டி இருக்கிறது. பொருள் தேடப் போனால் மனைவியை விட்டு பிரிந்து போக வேண்டும். பொருள் தேடி வந்த பின் கணவன் மனைவி இருவரும் வயதாகிப் போகிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போகிறது.

பொருள் இல்லாமலும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.

என்ன தான் செய்வது.

இந்த சிக்கல் காலம் காலமாய் தொடர்கிறது.

கலித்தொகை, அப்படி ஒரு தலைவனையும் தலைவியையும் படம் பிடித்து காட்டுகிறது.

தலைவன் பொருள் தேடப் போனான். தனக்கோ, தன் குடும்பத்திற்கோ அல்ல...வறுமையினால் தங்களிடம் வந்து பொருள் வேண்டுவோருக்கு கொடுக்க தலைவன் பொருள் தேடப் போனான். அப்படி பொருள் தேடப் போன தலைவனே, நீ தேடிக் கொண்டு வரும் பொருள் பெரிய பொருளாகுமா ? உன் கற்பு மாறாத மனைவியின் இளமை என்ற ஒரு பொருள் போய் விடுமே. அதை விட நீ தேடிக் கொண்டு வரும் பொருள் பெரியதா என்று கேட்பது போல இருக்கிறது இந்தப் பாடல்.


பாடல்  

தொலைவாகி யிரந்தோர்க்கொன் றீயாமை யிழிவென
மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ
நிலைஇய கற்பினா ணீநீப்பின் வாழாதாண்
முலையாகம் பிரியாமை பொருளாயி னல்லதை

சீர் பிரித்தபின்

தொலைவாகி இரந்தோருக்கு ஒன்று ஈயாமை இழிவென 
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ ?
நிலை இய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் 
முலை அகம் பிரியாமை பொருளாயின் அல்லதை

பொருள்

தொலைவாகி = அயல் நாடு சென்று

இரந்தோருக்கு = உன்னிடம் யாசகம் கேட்போருக்கு

ஒன்று ஈயாமை = ஒன்று கொடுத்து உதாவமல் இருப்பது

இழிவென = இழிவான செயல் என்று எண்ணி

மலை இறந்து = மலைகளைத் தாண்டி

செயல் சூழ்ந்த = வேலை செய்து கொண்டு வரும்

பொருள் பொருளாகுமோ ? = பொருள் ஒரு பொருளாகுமோ ?

நிலை இய கற்பினாள் = நிலைத்த கற்பினை உடைய

நீ நீப்பின் வாழாதாள் = உன்னை விட்டு நீங்கினாள் உயிர் வாழதவளான உன் மனைவியின்

முலை அகம் பிரியாமை = இளமையான அழகான மார்புகளை விட்டு பிரியாமல் இருக்கும் அந்த இன்பத்தை விட 

பொருளாயின் அல்லதை = சிறந்த பொருள் அல்லாத பொருள்களை


நீ கொண்டு வரும் பொருள் ஒன்றும் பெரிதல்ல, மனைவியோடு ஒன்றாக இருந்து வாழ்வதே பெரிது என்று சொல்வது போல அமைந்து  இருக்கிறது.

கலித் தொகையைப் பற்றி கூறும்போது "கற்றறிந்தோர் ஏற்றும் கலி" என்று கூறுவார்கள்.

இந்த பாடலில் எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.


1. இல்லை என்று வருவோருக்கு இல்லை என்று சொல்வது இழிவு என்று நம் சமுதாயம்  நினைத்து வாழ்ந்திருக்கிறது. கைகேயின் மனதை மாற்ற நினைத்த கூனி கூறுவாள் "அடியே கைகேயி, நாளை இராமன் முடி சூடினால், அரண்மனை  செல்வம் அனைத்தும் கோசலையிடம்  போய் விடும். உன்னிடம்  உதவி என்று  வருபவர்களுக்கு நீ என்ன சொல்லுவாய் , கோசலையிடம் போய் நீ கையேந்தி நிற்பாயா, அல்லது உன்னிடம் உதவி என்று வருபவர்களிடம் நீ பதிலுக்கு இல்லை என்று  சொல்லுவாயா அல்லது அந்த நிலையை நினைத்து இதயம் வெடித்து இறப்பாயா" என்று கேட்கிறாள். கைகேயியால் நினைத்துப்  பார்க்க முடியவில்லை அந்த மாதிரி ஒரு நிலையை.


‘தூண்டும் இன்னலும் வறுமையும்
    தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு,
    இரு நிதி, அவளை
வேண்டி ஈதியோ? வெள்குதியோ?
    விம்மல் நோயால்
மாண்டு போதியோ? மறுத்தியோ?
    எங்ஙனம் வாழ்தி?


இந்த மண் மீது பிறக்கும் போது கொண்டு வந்தது ஒன்றும் இல்லை. இந்த உலகை விட்டு போகும் போது கொண்டு போகப் போவதும் ஒன்றும் இல்லை. இதற்கிடையில் கிடைத்த செல்வம் எல்லாம் சிவன் கொடுத்தது என்று எண்ணி மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தாங்களே வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு என்னத்தச் சொல்ல என்று வருந்துகிறார் பட்டினத்தடிகள்.


பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல் 
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் 
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது 
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.


இதையே சொல்ல வந்த வள்ளுவரும், 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 

2. பொருள் தேடும் புறத்திணையும், தலைவன் தலைவி அன்போடு ஒன்றி வாழும் அகத்திணையும் ஒன்றாக்கிக் காட்டுகிறது இந்தப் பாடல்.


3. எது முக்கியம் ? பொருள் பொருள் என்று நாளும் அலைந்து வாழ்க்கையைத் தொலைத்து  விட்டு நிற்கிறோம். பொருள் வேண்டியதுதான். அதற்காக உறவுகளை  உதறித் தள்ள வேண்டியது இல்லை. பொருள் எதற்க்காக சேர்கிறோம்  ? உறவுகளுக்காகத்தானே ? 

4. ஒரு பிச்சைகாரன் நம்மிடம் பிச்சை கேட்டால் பொதுவாக நாம் என்ன சொல்லுவோம் " சில்லறை இல்லை" என்று சொல்லுகிறோம். இல்லை என்று சொல்லுபவனிடம்  நாமும் இல்லை என்று சொல்கிறோம். அது இழிவு என்று நினைத்து  வாழ்ந்தது நம் சமுதாயம்.  கொடுத்து வாழ்ந்த சமுதாயம். 


5. பொருள் தேடும் போது இளமை போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது  என்று அறிவுறுத்துகிறது.

நல்ல பாடல் தானே ?


1 comment:

  1. அருமையான பாடல். அகத்தையும் புறத்தையும் இணைத்தது மிக இனிமை.

    ReplyDelete