Wednesday, September 3, 2014

சிவபுராணம் - அறம் , பாவம் என்ற கயிறுகள்

சிவபுராணம் - அறம் , பாவம் என்ற கயிறுகள் 


நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்  
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி


மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

நம் புலன்கள் நமக்கு இன்பத்தை நுகரச் செய்து நமக்கு நல்லது செய்வது போலத் தோன்றும். ஆனால், இறுதியில் அவை நமக்கு நன்மைக்கு பதில் தீமையே  செய்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக, ஒன்றுக்கு மேல் ஒன்றாக மேலும் மேலும் வேண்டும் என்று நம்மை உந்தித் தள்ளி கடைசியில் நம்மை துன்பத்தில் தள்ளி விடுகின்றன.



புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை


உலகிலேயே மிகப் பெரிய பற்று இந்த உடல் மேல் கொண்ட பற்று. இந்த உடலுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறோம். தாய், தந்தை, கணவன் , மனைவி , பிள்ளைகள் எல்லாம் நமக்கு அடுத்து தான். இந்த உடல் பற்றை விட்டால், நம் செயலும் சிந்தனையும் மாறிப் போகும்.

எனவே தான் ஞானிகள் எல்லாம், இந்த உடல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

இந்த உடலுக்குள்ளே என்ன இருக்கிறது ? இந்த தோலை நீக்கிப் பார்த்தால் பார்க்க சகிக்காது. நாற்றம் அடிக்கும். உடல் எங்கும் புழுவும் அழுக்கும் நிறைந்து இருக்கிறது. ஒன்பது வாயிலைக் கொண்ட உடலில் அனைத்து வாயில்களிலும் உடற் கழிவுகள் எந்நேரமும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. இந்த உடலின் மேல் என்ன பெரிய பற்று ?



அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

தீ  வினை மட்டும் அல்ல, நல் வினையும் பிறவிக்கு வழி வகுக்கிறது.
நல்லதும் தீயதும் இல்லாமல் ஒரு வினை இருக்க முடியுமா என்ன ? Beyond Good and Evil  என்று Neitsche ஒரு புத்தகம் எழுதி இருக்கிறர். படித்துப் பார்க்க வேண்டும்.



விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

விலங்கு மனம். நல்லது சொன்னால் மனதில் நிறுத்திக் கொள்ளாது.  உணர்ச்சி ஒன்றே பிரதானமாக அலையும். உணர்ச்சி அறிவை மழுங்க அடிக்கும். அந்த விலங்கு மனத்தால் உன் மேல் அன்பு கொள்ளும் நலம் இல்லாத எனக்கு நீ தந்தாய் என்கிறார் அடிகள்.

என்ன தான் தந்தான் ?







2 comments:

  1. உலகில் உள்ள அனைத்து வண்ணங்களும், லட்சக்கணக்கில் இருந்தாலும் அடிப்படை வண்ணங்கள் - கருப்பு, வெண்மை - அடிப்படை மூன்று வண்ணங்கள் ஆகிய ஐந்து. ஆகவே, எண்ணற்ற வண்ணங்கள் இருந்தாலும் அவை அனைத்தின் அடிப்படையான நிறங்கள் ஐந்தும் உடையானே -- என்று பொருள் கொள்ளலாமா.

    ReplyDelete
    Replies
    1. நாம் எந்த பொருள் கொண்டாலும் சரி தான். நன்றி

      Delete