Friday, September 19, 2014

இராமாயணம் - அங்கதன் தூது

இராமாயணம் - அங்கதன் தூது 


இலங்கையின் வாசலில் நிற்கிறான்  இராமன்.இராவணனைக் காணோம். அருகில் நின்ற வீடணனிடம் கூறுகிறான்

"ஒரு தூதுவனை விரைவில் அனுப்புவோம். இப்போதாவது சீதையை விடுகிறானா என்று கேட்போம். விடவில்லை என்றால் அவனை அழிக்கலாம். அது தான் அறமும் நீதியும் அதுதான். என் மனமும் அதைத்தான் நினைக்கிறது"  என்று சொன்னான் கருணையின் இருப்பிடமான இராமன்.


பாடல்

'தூதுவன் ஒருவன்தன்னை இவ் வழி விரைவில் 
தூண்டி,

"மாதினை விடுதியோ?" என்று உணர்த்தவே,
மறுக்கும்ஆகின்,

காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது; அறனும்

அஃதே;

நீதியும் அஃதே' என்றான்--கருணையின் நிலயம்
அன்னான்.


பொருள்


'தூதுவன் ஒருவன்தன்னை = தூதுவன் ஒருவனை

இவ் வழி  = இந்த வழியில்

விரைவில் தூண்டி = விரைவில் அனுப்பி

"மாதினை விடுதியோ?" என்று  உணர்த்தவே = சீதையை விடுகிறாயா என்று கேட்போம்

மறுக்கும்ஆகின் = அவன் (இராவணன் ) விட மறுத்தால்

காதுதல் கடன் என்று = அவனை அழிப்பது கடமை என்று

உள்ளம் கருதியது = என் உள்ளம் கருதுகிறது

அறனும் அஃதே = அறமும் அதுவே

நீதியும் அஃதே' = நீதியும் அதுவே

என்றான் = என்றான்

கருணையின் நிலயம் அன்னான் = கருணை நிலைத்து நிற்கும் இடமான இராமன்.

இந்த பாடல் நிறைய மறைமுக செய்திகளை கொண்டுள்ளது.

1.  வாலியை கொல்ல இராமன் யாரையும் தூது அனுப்பவில்லை.  சுக்ரீவன் மனைவியை விட்டு விடு , இல்லை என்றால் யுத்தத்துக்கு வா என்று சொல்லி தூது விட்டிருக்கலாம். அனுமனை அனுப்பி இருக்கலாம். இராமன் செய்யவில்லை. அந்த தவறை இப்போது உணர்து கொண்டான். இராவணனிடம் தூது  அனுப்புகிறான்.


2. வாலியை கொல்வதற்கு முன்னால், யாரிடமும் யோசனை கேட்கவில்லை. இது நான் எடுத்த முடிவு என்று செயல் படத் தொடங்கி விடுகிறான். இப்போது, வீடணனிடம்  யோசனை  கேட்க்கிறான்.தவறில் இருந்து இராமன் படித்த  பாடங்கள்  இவை.

3. தவறு செய்வது யாருக்கும் இயல்பு. அதில் இருந்து பாடம் படிக்க வேண்டும். இது இராமன்  காட்டிய  வழி.

4. மூன்று செய்திகளை சொல்கிறான்.

என் மனம் நினைப்பது, அறம் , நீதி.

இந்த மூன்றும்  ஒத்துப் போகிறது. மூன்றும் ஒத்துப் போக வேண்டும் வாழ்க்கையில். அறம் அல்லாத வழியில் மனம் போகக் கூடாது. அறமும் நீதியின்    பால் செயல் பட வேண்டும்.  தவறு செய்பவர்களை தண்டிப்பது அரச தர்மம்.  அதை தீர விசாரித்து, நீதி வழங்க வேண்டும். இவன் தவறு செய்திருப்பான் என்று எனக்குத் தோன்றுகிறது என்று அரசன் தண்டனை தரக் கூடாது .  மனம் ஒத்துக் கொள்ளலாம் ஆனால் அது தர்மமும், நீதியும் அல்ல.

5. கருணையின் நிலையம் அன்னான் என்கிறான்  கம்பன். இராவணனை அழிப்பது எப்படி கருணையான  செயலாகும்.

'அறத்திற்கே அன்பு சார்பு' என்ப, அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

 என்பது  வள்ளுவம்.

அறத்திற்கு அன்பு துணை என்பவர்கள் அறிய மாட்டார்கள் மறத்திற்கும் அதுவே துணை.

அன்பு என்று சொல்லிக் கொண்டு அநீதிகளை சகித்துக் கொண்டு இருக்கக் கூடாது. மறத்திற்கும் அன்புதான்  அடிப்படை. (இது பற்றி இன்னொரு ப்ளாகில் விரிவாக சிந்திப்போம். )

இராவணன் தவறு செய்திருக்கிறான். உடனே   தண்டித்து  விடலாம் தான்.     இருந்தும் இராமன் செய்யவில்லை. இராவணன் மேலும் கருணை. தன் மனைவியை தூக்கிச் சென்று  சிறை வைத்த இராவணன் மேலும் கருணை  காட்டுகிறான்..


கருணையின் நிலைக் களம். 


1 comment:

  1. வாலியைக் கொன்ற நிகழ்ச்சியுடன் இதை ஒப்பிட்டது நன்றாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete