Wednesday, September 17, 2014

இராமாயணம் - இராமன் ஏன் மறைந்து நின்று கொன்றான் ?

இராமாயணம் - இராமன் ஏன் மறைந்து நின்று கொன்றான் ?



மறைந்து இருந்து கொல்வது யுத்த தர்மம் அல்ல என்று இராமனுக்குத் தெரியாதா ? தெரியும்.

வாலியை மறைந்து இருந்துதான் கொல்ல வேண்டுமா ? வேற வழி இல்லையா ?

இருந்தது . ஏவு கூர் வாளி என்று வாலியே சொல்கிறான். இருந்த இடத்தில் இருந்து அம்பை ஏவி இராமனால் வாலியை கொன்றிருக்க முடியும். அப்படித்தான் காகாசுரனை கொன்றான். அம்பு கூட இல்லை, ஒரு புல்லினால்.

பின் அதுவும் காரணம் இல்லை.

ஏன் மறைந்து இருந்து கொன்றான் என்ற கேள்வியை கொஞ்சம் மாத்தி கேட்டுப் பார்ப்போம் ?

மறைந்து இருந்து கொல்லாமல் நேரடியாக வந்து கொன்றிருந்தால் என்ன நடந்திருக்கும் ?

வாலி இறந்திருப்பான். சுக்ரீவன் முடி புனைந்திருப்பான்.  எல்லாம் நடந்திருக்கும்....ஆனால் நமக்கு சில அருமையான பாடங்கள் கிடைத்திருக்காது.

1. நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், ஒரே ஒரு தவறு செய்தாலும் போதும், காலம் காலமாக , யுகம் யுகமாக உலகம் அதை வைத்து நம்மை பழித்து சொல்லிக்  கொண்டே இருக்கும்.  இராமன் எவ்வளவோ நல்லது செய்தான்....நல்ல குணங்களின் உறைவிடமாய் இருந்தான், இருந்தும் ஒரே ஒரு தவறு...இன்றளவும் உலகம் அவனை அந்த ஒரு தவறுக்காக மன்னிக்கத் தயாராக இல்லை. ஆயிரம் தவறு செய்தவன் கூட "அது எப்படி இராமன் மறைந்து இருந்து அம்பு விடலாம் " என்று சட்டையைப் பிடித்து கேட்காத குறையாக கேட்க்கிறான்.  எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எவ்வளவு நல்லது செய்தாலும், ஒரு தவறு அனைத்தையும் மாற்றி விடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது முதல் பாடம்.

இந்த அறிய பாடத்தை நமக்கு உணர்த்த இராமன் பழி ஏற்று நமக்கு சொல்லித் தந்த பாடம். எனக்கே இந்த கதி என்றால், உனக்கு என்ன ஆகும் என்று நினைத்துப் பார் என்று சொல்லாமல் சொன்ன பாடம்.

வாலியை நேரடியாக கொன்றிருந்தால் இந்த பாடம் கிடைத்திருக்காது.


2. பிறன் பழிக்காக நாண வேண்டும். மற்றவர்களின் தவறுகளை தேடி கண்டு பிடித்து குறை கூறி அதில் நாம் மகிழ்கிறோம். மனைவியின் உணவில் உப்பு கூட, உப்பு குறைச்சல் என்று அவளை குத்தி கிழிக்கிறோம், கணவன் ஏதாவது ஒன்றை மறந்து விட்டால் "உங்களுக்கு என்ன தான் ஞாபகம் இருந்தது இது ஞாபகம் இருக்க " என்று அவனை குறை சொல்கிறோம். பிள்ளைகளை, நண்பர்களை, உடன் வேலை செய்பவர்களை என்று எங்கு போனாலும் பிறரைப் பற்றி குறை சொல்வதிலேயே காலம் போகிறது நமக்கு. அதை விடுத்து, மற்றவர்களின் குறைக்காக நாம் நாணம் கொண்டால், இந்த உலகம் மிக மிக இனிமையாக இருக்கும்.

இது இரண்டாவது பாடம்.

வாலியை நேரடியாக கொன்றிருந்தால் இந்த பாடம் கிடைத்திருக்காது.

3. மன்னிக்கப் பழகுங்கள். சுக்ரீவன் வாலியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். வாலி மன்னிக்கவில்லை. சுக்ரீவனை அடித்து துரத்தி விட்டு, அவன் மனைவியை பிடித்து வைத்துக் கொண்டான்.  கூடப் பிறந்த தமயனிடம் அன்பு பாராட்டவில்லை.

என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்

அன்பு இல்லாதவர்களை அறம் காயும்.

இராமன் நேரடியாக போராடி இருந்தால் வாலி இராமனிடம் அடைக்கலம் கேட்டிருப்பான். இதை இலக்குவன் சொல்கிறான்.  அப்படி அடைக்கலம் கேட்டிருந்தால்  அவன் மன்னிக்கப் பட்டிருப்பான். அவன் தண்டிக்கப் பட்டிருக்க மாட்டான்.

அறம் பிறழ்ந்த வாழ்க்கை தண்டிக்கப் பட்டது.

இராமன் நேராகப் போராடி இருந்தால் இது நடந்திருக்காது.


இது மூன்றாவது பாடம்.

4. இராமனை வழி நடத்தியது எது ? கவந்தனும், சவரியும் சுக்ரீவனோடு உறவு கொள் என்று இராமனை வழி நடத்தினார்கள். ஒருவர் கூட வாலியோடு உறவு கொள் என்று சொல்லவில்லை.  இராமன் சுக்ரீவனை கண்டான், அவன் சோகக் கதையைக் கேட்டான், மனம் நெகிழ்தான், உனக்கு உதவி செய்கிறேன்,  தாரமொடு தலைமையும் தருவேன் என்று உறுதி சொல்கிறான்.

விதி இராமனை நடத்தி செல்கிறது.  அறம் அவனை நடத்திச்  செல்கிறது.

வாலியை  அழித்தது.இராவணனை அழித்தது. மாரீசனை அழித்தது. கும்ப கர்ணனை அழித்தது.

அறம் தவறியவர்களை அறம் தண்டிக்கிறது.

தண்டனை தரும்போது நேரில் நின்று சண்டையிட்டு அந்த தண்டனையை தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தண்டனை கிடைத்தது. இராமன் ஒரு கருவி.

வாலி சுக்ரீவனை மன்னித்து இருந்தால், சுக்ரீவனின் மனைவியை கவராமல் இருந்திருந்தால் இராமன் வாலியை அழித்து இருக்க மாட்டான். பழி வாலியின் பேரில்.

இது நான்காவது பாடம்.

5. நம் துன்பங்களுக்கு நாம் தான் காரணம். நமக்கு துன்பம் வரும்போது எல்லாம்  நாம் உலகில் உள்ள அனைவரையும் குறை சொல்கிறோம். ஆழ்ந்து சிந்தித்தால் நம் வலிகளுக்கும், துன்பங்களுக்கும் நாமே காரணம் என்று அறிவோம்.


முதலில் தான் இவ்வாறு மறைந்து இருந்து கொல்லப் பட்டதற்கு காரணம் இராமனின் அதர்ம யுத்தம் என்றே வாலி கருதினான். பின், அவன் உணர்ந்து கொண்டான்.

"ஆவி போம் வேளை வந்து அறிவு அருளினாய் " என்று அவனே இராமனிடம் கூறுகிறான்.

ஒரு வேளை இராமன் நேரடியாக போர் செய்து வாலியைக் கொன்றிருந்தால் வாலி இதை உணர்ந்திருக்க மாட்டான். ஏதோ, அவன் வீரம் இராமனின் வீரத்தை விட   குறைந்தது. அதனால் இராமன் வென்று விட்டான் என்று தான் நினைத்திருப்பான். தான் செய்த தவறு அவனுக்கு தெரிந்திருக்காது. இப்போது அவன் சிந்திக்கிறான். ஏன் இராமன் இப்படிச் செய்தான் என்று. தனக்கு அளிக்கப் பட்ட தண்டனை என்று அறிகிறான். எதற்கு தண்டனை என்று சிந்திக்கிறான்....அறிவு பிறக்கிறது.

இராமன் நேரடியாக யுத்தம் செய்திருந்தால் இந்த பாடம் கிடைத்திருக்காது.



6. கடைசியாக....

ஒரு ஆசிரியர் வேதியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார். இரண்டு வெவ்வேறு அமிலங்களை  கலந்தால் என்ன விளைவு நிகழும் என்று கலந்து காட்டிக் கொண்டிருந்தார்.

மாணவர்கள் பார்த்து புரிந்து கொண்டார்கள்.

அது இன்னும் ஆழமாக புரிய வேண்டும் என்பதற்காக ஆசிரியர் சொன்னார்


"மாணவர்களே முதல் அமிலத்தையும், இரண்டாவது அமிலத்தையும் சேர்த்தால்  நமக்கு இந்த ஒரு குறிப்பிட்ட வேதியல் பொருள் கிடைக்கும். மாறாக, நீங்கள் முதாலவது அமிலத்தையும், மூன்றாவது அமிலத்தையும்  கலந்தால்   என்ன்ன ஆகும் தெரியுமா, என்று கலந்தார் , படாரென்று வெடித்து சிதறியது. பார்த்தீர்களா, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மாத்தி கலந்தால்  வெடித்து  கண்ணுக்கும், தோலுக்கும் ஆபத்து விளைவிக்கும் " என்று கூறினார்.

இப்போது மாணவர்கள் மிக எச்சரிக்கையாக இருப்பார்கள். அந்த தவறை அவர்கள்  கனவிலும் செய்ய மாட்டார்கள்.


அப்படி கலந்த ஆசிரியருக்கு அது தவறு என்று தெரியாமல் இல்லை. மாணவர்கள்  மனதில் ஆழமாக பதிய வேண்டும் என்பதற்காக அப்படி செய்து  காட்டினார்.

அது போல, இராமன் செய்து காட்டிய பாடம் இது.

தவறு செய்யாதீர்கள் என்று சொன்னால் அவ்வளவாகப் மண்டையில் ஏறாது.

தானே தவறு செய்து, பார்த்தீர்களா, எத்தனை காலம் ஆகிவிட்டது இந்த குறை , பழி என்னை விட்டுப் போகவில்லை. எனவே நீங்களும் இது போல செய்து விடாதீர்கள்  என்று இராமன் கற்றுத் தந்த பாடம்.


பிள்ளையின் உடல் சரியாக வேண்டுமே என்று தாய் மருந்து உண்பதைப் போல, நாம் நல்லபடி வாழ வேண்டுமே என்று இராமன் உண்ட மருந்து இது.

பெரியவர்களின் செயல்களை விமர்சிப்பதை விடுத்து, அதில் என்ன அர்த்தம் இருக்கிறது,அதில் என்ன பாடம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள முயல வேண்டும்.

முயல்வோம்.


1 comment:

  1. ரொம்பக் கஷ்டப்பட்டு, வலிந்து பல குறிப்புகளை எழுதியிருக்கிறாய். ஒருவன் தவறு செய்தால், "நமக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதர்காகத் தவறு செய்கிறார்" என்று பாராட்டுவது போல் இருக்கிறது. இராமன் செய்தது தவறுதான் என்று விட்டு விடலாமே!

    இந்த ஒரு Blog குறிப்பு மட்டுமல்ல, இத்தனை ஆயிரம் blog குறிப்புகள் எழுதியதற்கு மிக மிக நன்றி.

    ReplyDelete