Monday, September 29, 2014

குறுந்தொகை - பெண்ணின் காதல் வெளிப்பாடு

குறுந்தொகை - பெண்ணின் காதல் வெளிப்பாடு 


குறுந்தொகையில், ஒரு இளம் பெண் தன் காதல், காம உணர்வை எவ்வளவு மென்மையாக வெளிப்படுத்திகிறாள்.


அவர் கொதிக்கும் பாலைவனத்தின் வழியே போய்   இருக்கிறார். அந்த வழியில் வறண்ட, வெப்பமான காற்று  அடிக்கும். மரங்கள் எல்லாம் பட்டுப் போய் நிற்கும். அவர் என்னை அணைத்து என் மார்பில் துயில்வதை விடுத்து இப்படி துன்பப் படுகிறாரே என்று நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது.

பாடல்

வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென  
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும் 
மலையுடை யருஞ்சுர மென்பநம்     

முலையிடை முனிநர் சென்ற வாறே. 

பொருள்

வெந்திறற் கடுவளி = வெம்மையான + திறல் + கடுமையான + வெளி = வெப்பம் உடைய, வலிமையான, வேகமாக அடிக்கும் காற்று

பொங்கர்ப் = மரத்தின் கிளை(களின் ஊடே)

போந்தென = வீசுவதால் 

நெற்று = முதிர்ந்த காய்ந்த காய்

விளை = விளைந்த

யுழிஞ்சில் = உழிஞ்சில் என்ற மரத்தில் 

வற்ற லார்க்கும் = வறண்டு, வத்தல் போல சுருங்கிக் கிடக்கும்

மலையுடை = மலைகளின் ஊடே

யருஞ்சுர மென்ப = அரும் சுரம் என்ப. சுரம் என்றால் காய்ந்து போன காடு. கொடுமையான, காய்ந்து போன காடு

நம் முலையிடை = என் மார்பின் இடை 

முனிநர் சென்ற வாறே. = கோபித்து சென்றவர்

அவன் பிரிந்து சென்ற ஏக்கம் ஒரு புறம். அவன் எப்படி துன்பப் படுகிறானோ என்றோ கவலை ஒரு புறம். பெண்ணின் உணர்சிகளை பிரதிபலிக்கும் அற்புதமான பாடல்.


( மனைவியை மார்போடு அணைத்துத் தூங்குவதை ஆண்டாள்  கூறுகிறாள்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.

)


1 comment:

  1. சாதாரண மக்களின் உணர்சிகளை என்ன அழகாகக் கூறுகிறது! நன்றி.

    ReplyDelete