Sunday, September 14, 2014

சிவபுராணம் - பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே

சிவபுராணம் - பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே 



பாடல்

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

சீர் பிரித்த பின்

நிலந்தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்து  பாரிக்கும் ஆரியனே

பொருள் 

நிலந்தன் மேல் வந்து அருளி = நிலத்தின் மேல் வந்து அருளி.  மனிதன் இறைவனை காலம் காலமாய்  தேடிக் கொண்டிருக்கிறான். தேடி கண்டு அடைய முடியாதவன் இறைவன் என்று அவனுக்கு புரிவதில்லை. தேடுகிறோம் என்றால் எதைத் தேடுகிறோம் என்று தெரிய வேண்டும். அது எப்படி இருக்கும், எந்த மாதிரி இருக்கும், என்ன வடிவில் இருக்கும், தெரிய வேண்டும். அது தெரியாமல் எப்படி தேடுவது ? அது மட்டும் அல்ல, அது எங்கே இருக்கும் என்றும் தெரிய வேண்டும். தொலைத்தது ஒரு இடத்தில், தேடுவது இன்னொரு இடத்தில் என்றால் கிடக்குமா ? இத்தனையும் தெரிந்து விட்டால் பின் எதற்கு தேடுவது ?

தேடினால் கிடைக்காது என்று நம் மதம் பல விதங்களில் சொல்லி இருக்கிறது. மாலும், அயனும் தேடிக் காண முடியாத திருவடி என்று சொல்வது ஒரு குறியீடு. தேடினால் கிடைக்காது என்பது அதன் அர்த்தம்.

தேடுவதை நிறுத்தினால் ஒரு வேளை கிடைக்கலாம்.

மணிவாசகர் சொல்கிறார் - நிலத்தில் வந்து அருளினான் என்று. அவனே வந்து, அவனே அருளினான்.

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும்

என்பது மற்ற மத நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், இந்து மதம், அதிலும் குறிப்பாக சைவ மதம், தேடினால் அடைய முடியாது என்றே சொல்லி வந்திருக்கிறது.


நீள் கழல்கள் காட்டி = தன்னுடைய நீண்ட கழல் அணிந்த திருவடிகளை காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் = நாயை விட கீழாக இருந்த அடியேனுக்கு

தாயிற் சிறந்த = தாயை விட சிறந்த

தயாவான தத்துவனே. = தயாவான தத்துவனே

மாசற்ற சோதி = குற்றம் குறை இல்லாத சோதியே

மலர்ந்த மலர்ச்சுடரே = மலர்ந்த மலர் போன்ற சுடரே. சுடர் என்றால் வெளிச்சம் இருக்கும். வெப்பமும் இருக்கும். இந்தச் சுடரில் வெளிச்சம் இருக்கும், ஆனால் மலர் போல குளிர்ச்சியாக இருக்கும். மலர்ந்த மலர்ச் சுடர். ஞானத்தைத் தரும், துன்பத்தைத் தராது.

தேசனே = குரு போன்றவனே

தேனார் அமுதே  = தேனே, அருமையான அமுதம் போன்றவனே

சிவபுரனே = சிவ புரத்தில் உள்ளவனே

பாசமாம் பற்று அறுத்து  பாரிக்கும் ஆரியனே = பாசம் என்ற பற்றை அறுத்து காவல் புரியும் ஆரியனே



6 comments:

  1. சுவாமிநாதன்March 2, 2022 at 3:58 PM

    What is the meaning of ஆரியன் here?

    ReplyDelete
  2. Who can replay for Arian? What is the meaning for that?

    ReplyDelete
  3. ஆரியன் என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. சிவன்

      Delete
    2. Uyarndha gunamullavan

      Delete
    3. "ஆதியனே" என இருக்க வேண்டுமோ

      Delete