Saturday, September 27, 2014

இராமாயணம் - அறம் வெல்லும் பாவம் தோற்கும்

இராமாயணம் - அறம் வெல்லும் பாவம் தோற்கும்


அறம் வெல்லும். பாவம் தோற்கும் என்று அத்தனை இலக்கியங்களும் ஒருசேர அறிவிக்கின்றன.

இருந்தும் மனிதன் அறம் அல்லாத வழியில் சென்று வென்று விடலாம் என்று நினைக்கிறான்.

அனுமன் இலங்கையை அடைகிறான்.

இலங்கா தேவி என்ற பெண் இலங்கையை காவல் காத்து வருகிறாள். அவள் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே போக முடியாது.

அவள் அனுமனை தடுத்து நிறுத்துகிறாள்.

அனுமனுக்கும் அவளுக்கும் வாக்குவாதம் நிகழ்கிறது.

இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். ஒருவரை மற்றவர் ஓங்கி அடிப்பது, யார் தாங்க முடியாமல் கீழே விழுந்து விடுகிறார்களோ அவர்கள் மற்றவர் சொற்படி கேட்க வேண்டும் என்பது அந்த முடிவு.

முதலில் இலங்கா தேவி அடிக்கிறாள். அனுமன் திணறினாலும் சுதாரித்துக் கொள்கிறான்.

பின் அனுமன் அடித்த அடியில் இலங்கா தேவி கீழே விழுந்து விடுகிறாள்.

 எழுந்து சொல்லுவாள்.

" என்னை பிரமன் இலங்கையின் காவலுக்கு நியமித்தான். அப்போது அவனிடம் எவ்வளவு காலம் காவல் காக்க வேண்டும் என்று கேட்டேன். என்று ஒரு குரங்கு உன்னை அடித்து  வீழ்துகிறதோ,அன்றுவரை காவல் காத்து வா. என்று ஒரு குரங்கு உன்னை வீழ்த்துகிறதோ அன்றிலிருந்து இலங்கையின் அழிவு தொடங்கி விடும்" என்று கூறினான்.

என்று சொன்ன பின், மேலும் சொல்லுவாள்...

அவன் கூறிய மாதிரியே நடந்தது. இன்று ஒரு குரங்கின் கையால் நான் விழுந்தேன். அறம் வெல்லும். பாவம் தோற்கும்...இதை சொல்லவும் வேண்டுமோ ? நீ எண்ணிய எண்ணிய வண்ணம் முடிக்கும் ஆற்றல்  உள்ளவன். பொன்மயமான இந்த நகரினுள் நீ போகலாம்" என்று கூறி அவனை வணங்கி விடை பெற்றாள் 

பாடல்

அன்னதேமுடிந்தது ஐய!
     'அறம்வெல்லும் பாவம் தோற்கும்'
என்னும் ஈதுஇயம்ப வேண்டும்
     தகையதோ ?இனி மற்று உன்னால்,
உன்னிய எல்லாம்முற்றும்,
     உனக்கும்முற்றாதது உண்டோ ?
பொன்நகர் புகுதிஎன்னாப் புகழ்ந்து
     அவள்இறைஞ்சிப் போனாள்.

பொருள்

அன்னதேமுடிந்தது ஐய! = ஐயனே, அன்று பிரமா சொன்ன மாதிரியே நடந்தது

'அறம்வெல்லும் பாவம் தோற்கும்' = அறம் வெல்லும் பாவம் தோற்கும்

என்னும் ஈது = என்ற இந்த சத்ய வாக்கு

இயம்ப வேண்டும் தகையதோ ? = சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றா

இனி மற்று உன்னால் = இனி உன்னால்

உன்னிய எல்லாம்முற்றும் = எண்ணிய படி எல்லாம் நடக்கும்

உனக்கும்முற்றாதது உண்டோ ? = உன்னால் முடியாதது ஒன்று உண்டா ?

பொன்நகர் புகுதிஎன்னாப் புகழ்ந்து = பொன்மயமான இந்த இலங்கை நகரினுள் நீ செல்லலாம் என்று அனுமனை புகழ்ந்து

அவள்இறைஞ்சிப் போனாள் = அவள் வணங்கி போனாள்


அறம் வெல்லும் ! வென்று கொண்டு இருக்கிறது. இனியும் வெல்லும். 

1 comment:

  1. இப்படி ஒருவரை ஒருவர் அடிப்பதைத் தவிர இரண்டு பேருக்குமே வேறு ஒன்றும் தோன்றவில்லையா?!

    ReplyDelete