Pages

Saturday, August 31, 2019

கம்ப இராமாயணம் - மங்கையர் மனநிலை உணர வல்லரோ?

கம்ப இராமாயணம் - மங்கையர் மனநிலை உணர வல்லரோ?


என் மனைவிக்கு என்னதான் வேணும்னு தெரியல. எதைச் செய்தாலும், சொன்னாலும் திருப்தி அடைய மாட்டேங்கிறா...சரி என்னதான் வேணும்னு கேட்டா அதுவும் சொல்ல மாட்டேங்குறா...என்ன பண்றதுன்னே தெரியல என்று மண்டைய பிய்த்துக் கொள்ளாத கணவன்மார்கள் கிடையாது.

ஆண்கள், பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கடினம்.

என்னைக் கேட்டால் அவர்களுக்கே அவர்கள் மனம் என்ன என்று தெரியுமா என்பதே சந்தேகம் என்பேன்.

தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்தால்தானே மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல முடியும்.

நம்மை விடுங்கள். சாதாரண மனிதர்கள்.

அசோகவனத்தில் இருந்து வந்த சீதையை , இராமன் இன்னதுதான் பேசுவது என்ற வரைமுறை இல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் பேசி விடுகிறான்.

அப்போது சீதை நினைக்கிறாள்,

"பிரம்மா , விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும், உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனி போல் அனைத்தையும் பார்த்தாலும், பெண்ணின் மன நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் "

என்று நொந்து கொள்கிறாள்.

இது தீக்குளிக்குமுன் அவள் நினைத்தது.....

பாடல்


‘பங்கயத்து ஒருவனும்,
    விடையின் பாகனும்,
சங்குகைத் தாங்கிய
    தரும மூர்த்தியும்
அங்கையின் நெல்லிபோல்
    அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மனநிலை
    உணர வல்லரோ?


பொருள் 

‘பங்கயத்து ஒருவனும், = தாமரை மலரில் இருப்பவனும் (பிரம்மா )

விடையின் பாகனும், = எருதின் பாகனும் (சிவனும்)

சங்குகைத் தாங்கிய = சங்கை கையில் ஏந்திய

தரும மூர்த்தியும் = தர்ம மூர்த்தியான திருமாலும்

அங்கையின் =உள்ளங்கையில்

நெல்லிபோல்  = நெல்லிக்கனி போல்

அனைத்தும் நோக்கினும், = அனைத்தையும் பார்த்தாலும்

மங்கையர் மனநிலை = ஒரு பெண்ணின் மனதை

உணர வல்லரோ? = அறியும் ஆற்றல் படைத்தவர்களா ? (இல்லை)

என் மனம் என்ன என்று இராமானுக்குத் தெரியவில்லையே. அவனைத் தவிர வேறு ஒருவரை நான்  நினைத்துக் கூட பார்ப்பேன் என்று அவன் எப்படி நினைக்கலாம் ?

என்று நினைத்து வருந்துகிறாள்.

முமூர்த்திகளுக்கே பெண்ணின் மனம் புரியாதென்றால் நாம் எம்மாத்திரம்.

பெண்ணின் மனதை அறிந்து கொள்ள முயல்வது என்பது மும்மூர்த்திகளை விட நமக்கு  ஆற்றல் அதிகம் என்ற நினைப்பால்.

எனவே, அந்த முயற்சியை சாதாரண மானிடர்கள் கைவிடுவது நலம் என்பது கம்பன் காட்டும்  பாடம்.

அது ஒரு புறம் இருக்க, இவ்வளவு தீவிரமாக யோசித்தவள், தீக்குளித்த பின்  ஏதாவது  சொன்னாளா?

"பார்த்தாயா இராமா, என்னைப் போய் சந்தேகப் பட்டாயே ..." என்று ஒரு சில வாக்கியங்களாவது  பேசி இருக்க வேண்டும் தானே ?

"நீ காட்டுக்கு வர வேண்டாம்" என்று இராமன் சொன்ன போது ,

"நின் பிரிவினும் சுடுமோ அந்த வெங்கானகம் " என்று இராமனை எதிர்த்து பேசியவன் சீதை.

அதுக்கே அப்படி பேசினாள் என்றாள், இவ்வளவு பெரிய விஷயத்துக்கு சும்மாவா இருந்திருப்பாள்?

என்ன பேசி இருப்பாள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_31.html



Friday, August 30, 2019

அபிராமி அந்தாதி - என் புந்தி எந்நாளும் பொருந்துகவே

அபிராமி அந்தாதி - என் புந்தி எந்நாளும் பொருந்துகவே 


கால வெள்ளம் அவர்களை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்துச் சென்றது. அவளுக்கு திருமணம் ஆகி, குழந்தை குட்டி என்று அவள் ஒரு பக்கம். வேலை, குடும்பம் என்று இவன் ஒரு பக்கம் போய் விட்டார்கள்.

எப்போதாவது தனிமையில் இருக்கும் போது அவள் நினைவு வரும். "...ஹ்ம்...அவள் எப்படி இருக்கிறாளோ" என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான். அவள் கணவன் எப்படி இருப்பான்? அவள் குணத்துக்கு நல்ல கணவன் தான் கிடைத்திருப்பான் அவளுக்கு என்று நினைத்துக் கொள்வான்.

நினைவு வரும்போதெல்லாம், "சே ...இத்தனை நாள் எப்படி அவளை மறந்து இருந்தேன் " என்று அவனுக்குள் ஒரு சின்ன வருத்தம் வரும். என் நினைவை விட்டுப் போனது அவ தப்புத்தான் என்று அவளை செல்லமாக கோபித்துக் கொள்வான்.

"நீயும், உன்  husband ம் ஒழுங்கா இனி மேல் என் நினைவில் இருக்க வேண்டும்" என்று அவளிடம் கண்டிப்பாக சொல்லிவிடுவான்....

அது ஒரு புறம் இருக்கட்டும் ....

பட்டர் சொல்லுகிறார்



"மனிதரும், தேவரும்,  முனிவரும்  வந்து உன் சிவந்த திருவடிகளில்  வணங்குகிறார்கள். சடை முடி மேல் நிலவையும், பாம்பையும், கங்கையையும் கொண்ட உன் கணவரோடு நீ என் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும் " என்று



பாடல்


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி*
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்*
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த*
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!


பொருள்


மனிதரும் = மனிதர்களும்

தேவரும்  = தேவர்களும்

மாயா = இறப்பில்லாத

முனிவரும் = முனிவர்களும்

 வந்து = உன்னிடம் வந்து

சென்னி = தலை

குனிதரும் = வணக்கம் செய்யும்

சேவடிக்  = சிவந்த திருவடிகளை உடைய

கோமளமே! = கோமளமே

கொன்றைவார் = கொன்றை மலர் அணிந்த

சடைமேல் = சடையில்


பனிதரும் திங்களும் = பனி பொழியும் நிலவும்

பாம்பும் = பாம்பும்

பகீரதியும் = ஆகாய கங்கையும்

படைத்த  = கொண்ட

புனிதரும் = புனிதரான சிவனும்

நீயும் = நீயும்

என் = என்னுடைய

புந்தி = புத்தியில்

எந்நாளும் = எப்போதும்

பொருந்துகவே! = பொருந்தி இருக்க வேண்டும்.


ஒரு பட்டியல் சொல்லும் போது, ஒரு முறை இருக்கிறது.

முதலில் சிறந்ததைச் சொல்லி, பின் சிறப்பு குறைவானதைச் சொல்ல வேண்டும்.

ஆசிரியரும், மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

மாணவர்களும், ஆசிரியரும் வந்தனர் என்று சொல்லக் கூடாது.

ஆசிரியர் உயர்ந்தவர்.

ஒரு மேடையில் வணக்கம் சொல்லும் போது , முதலில் தலைவர், பின் செயலாளர், பொருளாளர், பின் ஏனையோர் என்று ஒரு வரிசை வைத்துச் சொல்ல வேண்டும்.

முதலில் மைக் போட்டவரே , சீரியல் லைட் போட்டவரே , விழாவுக்கு வந்திருக்கும்  சிறுவர் சிறுமிகளே , தலைவர் அவர்களே என்று சொல்லக் கூடாது.

இங்கே பட்டர்,

மனிதரும், தேவரும், மாயா முனிவரும் என்று சொல்லுகிறார்.

மனிதர்களுக்கு என்ன அவ்வளவு சிறப்பு?

தேவர்களும், முனிவர்களும் இறைவனை வழிபடுவதையே தொழிலாக கொண்டவர்கள்.

மனிதர்களுக்கு ஆயிரம் வேலைகள். அதற்கு நடுவில் வழிபாடும் செய்கிறார்கள் என்றால்  அது சிறப்புத்தானே என்று அவர் நினைத்து இருக்கலாம்.

அபிராமியுடன் ஒரு அன்னியோன்னியம்...."நீ வந்துரு" என்று

.அவளுடய கணவரை பற்றி பேசும்போது "புனிதரும்" என்று அவருக்கு  மட்டும் மரியாதை சேர்த்துக் கொள்கிறார்.

"நீ வந்துரு. வரும் போது அவரையும் கூட்டிகிட்டு வா" என்று சொல்லுவது போல.

பட்டர் இப்படி எல்லாம் நினைத்தாரா என்றால்...பாட்டில் கரைந்து பாருங்கள்...புரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_73.html


கம்ப இராமாயணம் - யாண்டுக் கொண்டியோ ?

கம்ப இராமாயணம் - யாண்டுக் கொண்டியோ ?


இராமன் சந்தேகப்பட்டான். சீதை தீக்குளித்தாள். அவளின் கற்பின் சூடு தாங்க முடியாமல் அக்கினி தேவன் அவளை கொண்டு வந்து இராமனிடம் கொடுத்தான். "இவள் களங்கம் அற்றவள்" என்று சான்றிதழ் வேறு கொடுத்தான்.

அப்போது, இராமன் கேட்கிறான்.."நீ யார் என்று".

அதற்கு அவன் , "அக்கினி தேவன் " என்று பதில் சொல்லி விட்டு, அவன் இராமனைப் பார்த்து கேட்கிறான்.

இராம பக்தர்கள் எச்சில் விழுங்கும் இடம்.....

"தேவர்களும், முனிவர்களும் மற்றும் உயிர் உள்ள அனைத்தும், மூன்று உலகங்களும் கண்கள் மோதி நின்று "ஆ" என்று அதிர்ச்சியில் அலறியதை நீ கேட்க விலைலயா? அறத்தை நீக்கி வேறு ஏதோ ஒரு பொருளை நீ எவ்வாறு கடை பிடித்தாய் " என்று இராமனை அக்கினி தேவன் கேள்வி கேட்கிறான்.

பாடல்


'தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும், 
மூவகை உலகமும், கண்கள் மோதி நின்று, 
''ஆ!'' எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு 
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டியோ? 


பொருள்

'தேவரும் = தேவர்களும்

முனிவரும் = முனிவர்களும்

 திரிவ = திரிகின்றவை உயிர் உள்ளவை)

நிற்பவும் = நிற்பவை (உயிர் அற்றவை)

மூவகை உலகமும் = மூன்று உலகங்களும்

கண்கள் மோதி நின்று,  = கண்கள் மோதி நின்று

''ஆ!'' எனல் கேட்கிலை = ஆ என்று அதிர்ச்சியில் அலறியதை நீ கேட்கவில்லையா ?

அறத்தை நீக்கி = அறத்தை விட்டு விட்டு

வேறு  = வேறு

ஏவம் என்று ஒரு பொருள் = ஏதோ ஒரு பொருளை

யாண்டுக் கொண்டியோ?  = எப்படி கொண்டாய்

சீதையின் கற்பை இராமன் சந்தேகம் கொண்டதை மூன்று உலகிலும் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தேவர்கள், முனிவர்கள் என்று சான்றோர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அது அறம் அன்று தீக் கடவுள் கூறுகிறார்.

சீதை பேசாமல் நிற்கிறாள்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாள்.

அவள் ஒன்றும் சாதாரணமானவள் அல்ல.

"எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்"

என்றவள்.

பின் எப்போதுதான் பேசினாள் ? என்ன தான் பேசினாள் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_30.html


Thursday, August 29, 2019

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து 


இந்த  உலகம் எப்படி வந்தது ? யார் இதைப் படைத்தது? உயிர்களை இறைவன் படைத்தானா? முக்தி என்றால் என்ன? ஏன் உயிர்கள் வினையில் சிக்கித்  தவிக்கின்றன?  இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?  உயிர்களைப் பற்றும் ஆணவம் , கன்மம், மாயை போன்ற மலங்கள் எப்படி உயிரைப் பற்றுகின்றன ?

ஒரு வினையில் இருந்து மற்றொரு வினை வருகிறது என்றால், முதல் வினை எங்கிருந்து வருகிறது?

இப்படி ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் பதில் இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் இருக்கிறது.

அந்த பதில்கள் சைவ சித்தாந்தின் 36 தத்துவங்களுக்குள் அடங்கி இருக்கிறது.

எப்படி கேள்வியை மடக்கி மடக்கி கேட்டாலும், அதில் பதில் இருக்கிறது.

It is a manum opus. Great frame work of philosophy.

அதை விளக்குவது அல்ல இந்த ப்ளாக்கின் நோக்கம்.

அருணகிரிநாதர் சொல்கிறார், இந்த 36 தத்துவங்களையும் தாண்டி நான் செல்ல எனக்கு வழி சொல்ல மாட்டாயா என்று முருகளை வேண்டுகிறார்.

பாடல்


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே!

சீர் பிரித்தபின்

ஆறு ஆறையும்  நீத்து அதன் மேல் நிலையை 
பேறா அடியேன் பெறுமாறு உளதோ 
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர் 
கூறா உலகம் குளிர் வித்தவனே 

பொருள்

ஆறு ஆறையும்  = 6 x 6 = 36 தத்துவங்கள்

 நீத்து = தாண்டி

அதன் = அந்த தத்துவங்களின்

மேல் நிலையை  = மேல் நிலையை

பேறா அடியேன் = பெறாத அடியேன்

பெறுமாறு உளதோ  = பெறுவதற்கு ஒரு வழி உள்ளதா

சீறா = சீறி

வரு = வரும்

சூர் = சூரர்களின் உடலை, உலகை

சிதைவித்து = அழித்து

இமையோர்  = வானவர்கள்

கூறா = முறையிட்டு, வேண்டி வந்த

உலகம் = உலகம்

குளிர் வித்தவனே  = குளிர்வித்தவனே

"முருகா , நீ எவ்வளவு பெரிய ஆளு. சூரபத்மனை அழித்து, அவனது படைகள், உலகங்கள் அனைத்தையும் அழித்து, தேவர்களுக்கு அவர்கள் உலகை தந்தவன். அவ்வளவு பெரிய ஆள். நான் ஒரு சின்ன ஆள். எனக்கு அந்த தத்துவங்களை தாண்டி  உள்ள இடத்துக்கு கொண்டு போவது உனக்கு என்ன பெரிய  காரியமா ? உன்னால் முடியும். "

என்கிறார்.

ஆர்வம் உள்ளவர்கள் 36 தத்துவங்களை தேடி கண்டு கொள்வார்களாக !

ஒன்றைப் படிக்கும் போது, அதில் இருந்து வேறு எதை அறிந்து கொள்ளலாம் என்று தேட  வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_29.html

Wednesday, August 28, 2019

கம்ப இராமாயணம் - இனிக் கழிப்பிலள்

கம்ப இராமாயணம் - இனிக் கழிப்பிலள் 


சீதை தீக்குளித்த பின் என்ன நடந்தது, எப்படி சீதை அதை ஏற்றுக் கொண்டாள் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

முந்தைய பிளாகில் "ஊடல் தீர்க்கும் வாயில்கள்" பற்றி பார்த்தோம்.

யார் என்ன சொன்னால் என்ன, சீதை என்ன சொன்னால், என்ன நினைத்தால் என்பதுதான் முக்கியம், அல்லவா?

சீதை தீயில் புகுந்த பின், அவளின் கற்பின் சூட்டை தாங்க மாட்டாமல், அக்கினி தேவன் , அவளை கையில் ஏந்தி வந்து இராமனிடம் தந்து, இவள் மாசு இல்லாதவள் , இவளை ஏற்றுக் கொள் என்கிறான்.

அப்போது இராமன் என்ன சொன்னான் தெரியுமா ?

"அக்கினி தேவனே, இந்த உலகில் அழிக்க முடியாத சான்று நீ. இவள் பழி இல்லாதவள் என்று நீ சொல்லி விட்டாய். எனவே, இவள் என்னால் இனி கழிக்க கூடாதவள்"

என்கிறான்.

பாடல்



‘அழிப்பு இல சான்றுநீ,
    உலகுக்கு; ஆதலால்,
இழிப்பு இல சொல்லி, நீ
    இவளை, “யாதும் ஓர்
பழிப்பு இலள் ‘‘ என்றனை;
    பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள் ‘என்றனன்
    கருணை உள்ளத்தான்.


பொருள் 

‘அழிப்பு இல = அழிக்க முடியாத

சான்றுநீ = சான்று நீ (நீ = அக்கினி தேவன்)

உலகுக்கு = இந்த  உலகுக்கு

ஆதலால், = எனவே


இழிப்பு இல சொல்லி = இகழ்ச்சிக்கு இடமில்லாத சொற்களை சொல்லி

நீ = நீ

இவளை = இவளை (இந்த சீதையை)

 “யாதும் ஓர் = எந்த ஒரு

பழிப்பு இலள் ‘‘ = பழியும் இல்லாதவள்

என்றனை; = என்று கூறினாய்

பழியும் இன்று; = பழி இல்லை

இனிக் கழிப்பிலள் = இனி கழிக்கக் கூடாதவள்

‘என்றனன் = என்று கூறினான்

கருணை உள்ளத்தான். = கருணை உள்ளம் கொண்ட இராமன்

இராமன் செய்ததை தவறு என்று கம்பன் ஏற்றுக் கொள்ளவில்லை. சீதையை அவன் ஏற்றுக் கொண்டதை  "கருணை உள்ளத்தால்" என்கிறான்.

இராமன் மேல் பழி சொல்வதற்காக சொல்லவில்லை.

இது ஒரு நெருடலான இடம்.

இராம பக்தர்கள் கூட விழுங்க முடியாமல் தவிக்கும் இது.

நமக்கு என்ன தவிப்பு என்றால், சீதை என்ன சொன்னாள் , நினைத்தாள் என்பதுதான்.

இந்த சம்பவம் ஒரு பெரிய விஷயம். சீதை அதை ஏதோ ஒன்றும் நடக்காதது போல  விட்டு விட்டு போய் இருக்க முடியாது.

ஏதாவது சொல்லி இருப்பாள் தானே.

குறைந்த பட்சம் மனதிற்குள்ளாவது நினைத்து இருப்பாள் தானே?

அது என்னவாக இருக்கும் ?


சீதை இதை ஏற்றுக் கொல்கிறாளா? தன் கற்பை சந்தேகித்த கணவனை ஒரு பெண்  எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? சீதை என்ன தான் செய்தாள் ?

Tuesday, August 27, 2019

அற்புதத் திருவந்தாதி - எவ்வுருவோ நின்னுருவம் ஏது

அற்புதத்  திருவந்தாதி - எவ்வுருவோ நின்னுருவம் ஏது


காரைக்கால் அம்மையார் எழுதியது அற்புதத் திருவந்தாதி.

உண்மையிலேயே அது ஒரு அற்புதத் திருவந்தாதிதான்.

பெண்கள் சுடுகாட்டுக்கு போவது கூடாது என்ற கட்டாய நெறிமுறை இன்றும் கடைபிடிக்கப் படுகிறது.

அந்தக் காலத்திலேயே, இறைவனை சுடுகாட்டில் சென்று வழிபட்டவர் அம்மையார்.

அறிவியலும், தத்துவமும் படிக்க படிக்க நம் மனமும் புத்தியும் எதையும் ஆராயச் சொல்கிறது. கேள்வி கேட்கச் சொல்கிறது. கேட்டதை சரி பார்க்கச் சொல்கிறது.

எதையும் அலசி ஆராயாமல் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

நம்பிக்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது. தாக்கம்தான் மேலோங்கி நிற்கிறது.

எதையும் அறிவுக் கண் கொண்டு பார்க்க புத்தி விளைகிறது.

அறிவுக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது என்று மனம் திடமாக நம்புகிறது.

அம்மையாரிடம் ஒருவர் கேட்டார், "சிவன் சிவன் என்று சொல்கிறீர்களே, அவன் எப்படி இருப்பான்" என்று.

அம்மையார் சொல்கிறார்

"அவன் எப்படி இருப்பான் என்று தெரியாமலேயே  ஆட்பட்டேன். சரி அப்போதுதான்  திருவருள் கிடைக்கவில்லை. ஆட்பட்ட பின், அவன் அருள் கிடைத்தபின்  சிவன் எப்படி இருப்பான் என்றால், இப்போதும் தெரியவில்லை. அப்போதும் தெரியவில்லை. இப்போதும் தெரியவில்லை.  நீ எப்படி  இருப்பாய் என்று கேட்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன். உன் உருவம் தான்  என்ன " என்று சிவனையே கேட்கிறார் அம்மையார்.

பாடல்



அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது


பொருள்

அன்றும் = திருவருள் கிடைப்பதற்கு முன்பு

திருவுருவம் = உன் திருவுருவம்

காணாதே ஆட்பட்டேன் = காணாமலேயே ஆட்பட்டேன்

இன்றும் = திருவருள் கிடைத்த பின்பு இன்றும்

திருவுருவம் காண்கிலேன்  = உன் உருவத்தை நான் காண்கிலேன்

என்றும் = எப்போதும்

தான் = தான்

எவ்வுருவோன் =  எந்த உருவத்தவன்

 நும்பிரான் = உன் தலைவன்

என்பார்கட் = என்று என்னை கேட்பவர்களுக்கு

கென்னுரைக்கேன் = என்ன உரைப்பேன் ?

எவ்வுருவோ  = என்ன உருவமோ

நின்னுருவம் = உன் உருவம்

ஏது = எது நான் சொல்லுவேன்

உருவம் இல்லாத ஒன்றை நம்பித்தான் இருந்திருக்கிறார்கள்.

அவன் அநுபூதி பெற்றவர்களுக்கும் அவன் உருவம் தெரியாது.

நாவுக்கரசர் கூறுகிறார்....

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
    மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்
ஒப்புடையான் அல்லன் ஓருருவனல்லன்
    ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
    இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”


அவன் இப்படி இருப்பான் என்று உதாரணம் கூற முடியாது
ஒரு உருவம் உடையவன் அல்லன்

ஒரு ஊர் காரன் இல்லை

உவமை இல்லாதவன்

ஒரு நிறம் இல்லாதவன்

இப்படியன் , இந் நிறைத்தன் , இவன் இறைவன் என்று வரைந்து காட்ட முடியாது என்கிறார்.

அப்படி என்றால், அது சிந்தனைக்கு அகப்படாதது.

"சித்தமும் காணா சேச்சியோன் காண்க" என்கிறார் மணிவாசகர்

உருவம் இல்லாத ஒன்றை எப்படி காண்பதாம்?

இது பற்றி சைவ சித்தாந்தம் மிக மிக ஆழமாக சிந்தித்து எழுதி வைத்திருக்கிறது.


விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன் மாமணி சோதியன் 


என்பார் நாவுக்கரசர்.

இதை எப்படித்தான் விளக்குவது ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_27.html

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவுச் சிக்கல் - பாகம் 2

கம்ப இராமாயணம்  - கணவன் மனைவி உறவுச் சிக்கல் - பாகம் 2 


அசோகவனத்தில் இருந்து வந்த சீதையை மிக கொடுமையான வார்த்தைகளால் இராமன் பேசிவிடுகிறான். அது பொறுக்காமல், சீதை தீக்குளித்து தன் கற்பை நிலைநாட்டுகிறாள். 

அதற்குப் பின் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது கேள்வி. சீதையின் மனத்தில் அந்த சம்பவம் என்ன ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்? அவர்களுக்குள் தாம்பத்யம் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம். 

கணவன் மனைவி உறவில் ஏற்படும் சிக்கல்களை, விரிசல்களை எப்படி சரி செய்வது. 

இது இன்று நேற்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டு இந்த உறவு ஒரு சிக்கலான ஒன்றாகத்தான் இருந்து இருக்கிறது.

அதற்கு அவர்கள் ஒரு வழி முறையும் கண்டு வைத்து இருந்தார்கள் என்றுஆள் நம்ம முடிகிறதா?

அதை ஒரு வாழ்க்கை நெறியாக, அகப்பொருள் என்ற இலக்கிய நூல் பேசுகிறது. 

"ஊடல் தீர்க்கும் வாயில்கள்" என்று அதற்குப் பெயர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் உறவுச் சிக்கலை தீர்க்கும் வழி முறைக்கு  ஊடல் தீர்க்கும் வாயில் என்று பெயர். 

யார் இந்த ஊடலை தீர்ப்பவர்கள், அவர்கள் செய்யக் கூடிய வேலைகள் என்ன, அவர்கள் எப்படி ஊடலை தீர்ப்பார்கள் என்று வரையறை செய்கிறது நம் இலக்கியம். 

இவற்றை எல்லாம் விட்டு விட்டு, மேல் நாட்டு புத்தகங்களை படித்துக் கொண்டு வியந்து கொண்டிருக்கிறோம். 

நம்ம  ஆட்கள் இதை கரைத்து குடித்தவர்கள். 

பாடல் 

கொளைவல் பாணன் பாடினி கூத்தர் 
இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர் 
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக் கிழத்தி காதற் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்றுஇவை ஊடல் 
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும்

பொருள் 


கொளைவல்  = ஏவல் செய்யும் 

பாணன் = பாடல் இசைப்பவர் 

பாடினி  = பாணனின் மனைவி 

கூத்தர்  = கூத்தாடிகள் 

இளையர் = வீட்டு வேலைக்காரர்கள் 

 கண்டோர் = வழியில் தலைவனை கண்டவர்கள் 

இருவகைப் பாங்கர் = இரண்டு வகை நண்பர்கள் 
பாகன் = தேர்ப்பாகன் 

பாங்கி = தலைவியின் தோழி 

செவிலி = வளர்ப்புத் தாய் 

அறிவர் = அறிஞர்கள் 

காமக் கிழத்தி = காம கிழத்தி 

காதற் புதல்வன் = மகன் 

விருந்து = விருந்தினர் 

ஆற்றாமை   = தலைவியின் ஏக்கம் 

என்று = என்று 

இவை = இவை 

ஊடல் = ஊடல் என்ற நோயை 

மருந்தாய்த் =  மருந்து  போல 

தீர்க்கும் வாயில்கள் ஆகும் = தீர்க்கும் வழிகள் ஆகும் 

இந்தக் காலத்தில் பாணன், பானி , கூத்தன், எல்லாம் கிடையாது. அதற்கு பதில்  சினிமா, நாடகம், இசைக் கச்சேரிகள் உண்டு.

சற்று சிந்திப்போம். 

வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ ஒரு சண்டை. ஒருவரோடு ஒருவர் சரியாக பேசிக் கொள்வது இல்லை. 

அப்போது வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  இருவரும், அப்போதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். 

"வாங்க வாங்க " என்று உபசரிப்பார். "என்ன இந்த பக்கம்...என்ன சாப்பிடுறீங்க"  என்று அவர்களை கவனித்துக் கொள்வார்கள். 

மனைவி, கணவனை தனியே அழைத்து, இதை வாங்கிட்டு வாங்க, அதை வாங்கிட்டு வாங்க " என்று சொல்லுவாள். ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரிப்பார்கள். சண்டை மறந்து போகும். விருந்தினர் போன பின், சண்டையின்  உக்கிரம் குறைந்து இயல்பு நிலைமைக்கு திரும்பி விடுவார்கள். 

அதே போல், கணவன் மனைவி உம் என்று இருக்கிறார்கள். வெளியூரில் படிக்கப் போன பிள்ளை  விடுமுறையில் ஊருக்கு வருகிறான்/ள். பிள்ளையை போட்டி போட்டு கவனிப்பார்கள் இல்லையா? அதில் ஊடல் மறந்து போகும். 

நண்பர்கள் (பாங்கன் , பாங்கி) உறவின் விரிசலை சரி படுத்துவார்கள். 

"மச்சான், பொம்பளைங்கனா அப்படித்தான் இருப்பாங்க. பாவம்டா, எல்லாத்தையும் விட்டுட்டு  உனையே நம்பி வந்திருக்கா...நீ தான் கொஞ்சம் விட்டு கொடேன் ...யாருகிட்ட விட்டு குடுக்குற..உன் பொண்டாட்டி கிட்டதான...இதுல என்ன உனக்கு பெரிய கஷ்டம் " 

"சரிடி, தப்பு அவரு பேரிலேயே இருக்கட்டும். குடும்பம் நடக்கணும்ல....இப்படி  சண்டை போட்டுக்கிட்டு இருந்தா, அவரு என்ன செய்வாரு...வீட்டுக்கு வர பிடிக்குமா சொல்லு.  அங்க இங்கனு சுத்த ஆரம்பிம்பாரு...இதெல்லாம் குடுபத்துக்கு நல்லதா....கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போ "

என்று சொல்லி ஊடலை தீர்ப்பார்கள். 

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பாடலுக்கு தனியே ஒரு பிளாக் போடலாம். 

காம கிழத்தி யார் என்று சொன்னால், இன்றைய பெண்கள்  சண்டைக்கு வருவார்கள். ஆர்வம் உள்ளவர்கள் தனியே என்னிடம் கேளுங்கள் இல்லையேல்  தேடி கண்டு பிடியுங்கள்...

சரி, அதுக்கும் இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?

சீதைக்கு ஏற்பட்ட மன காயத்தை தீர்த்து வைத்தது யார் ?

யார் என்று நாளை சொல்வேன்  என்று கூறி விடை பெறுகிறேன்....

வர்ட்டா ...




Monday, August 26, 2019

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவுச் சிக்கல்

கம்ப இராமாயணம்  - கணவன் மனைவி உறவுச் சிக்கல் 



கணவன் மனைவி உறவில் சிக்கல் வருவது இயல்பு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அது நிறைவேறாத போது, மன வருத்தமும், துக்கமும் வருவது இயற்க்கை.

சில சமயம், பேச்சு , வாதமாகி மாறி, தவறான சொற்கள் வந்து விழுந்து விடலாம். உணர்ச்சிவசப் படும்போது இவை நிகழ்வது ஒன்றும் புதிது அல்ல.

அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் சில சமயம் நம்மையும் மீறி வந்து விடுவது உண்டு.

சண்டை சச்சரவு என்று கூட வேண்டாம், நேரத்துக்கு வருகிறேன், சினிமாவுக்கு கூட்டிப் போகிறேன் என்று சொன்ன கணவன் வர முடியாமல் போய் இருக்கலாம். வீடு வாங்கலாம் என்று போட்ட திட்டம் வேறு ஏதோ ஒன்றினால் மாறிப் போய் இருக்கலாம்.

கோபத்தில், தாபத்தில் வார்த்தைகள் வந்து விழுந்து விட்டால் என்ன செய்வது.

பொதுவாக, மீண்டும் எப்படி பழைய நிலைக்கு வருவது என்ற தர்ம சங்கடம் இரண்டு பேருக்கும் இருக்கும்.

நான் என்ன தவறு செய்தேன் என்று இருவரும் மருகிக் கொண்டு இருப்பார்கள்.

எப்படி, அந்த மனக் கசப்பை மறந்து விட்டு இயல்பாக இருப்பது என்று இருவரும் மனதுக்குள் போட்டு  குழப்பிக் கொண்டிருப்பார்கள்.

அவர் பேசட்டும், என்று அவளும்.

அவளுக்கு என்ன அவ்வளவு அதப்பு , பேசுனா பேசட்டும், இல்லாட்டி கிடக்கட்டும் என்று அவரும்  ஆளுக்கு ஒரு மூலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

உறவில் விழும் விரிசல் இயல்பானதுதான்.

ஆனால், ஒரு முறை அப்படி விரிசல் விழுந்து விட்டால், அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

அன்னிக்கு அப்படி சொன்னாயே, என்று மீண்டும் மீண்டும் அதையே நினைத்துக் கொண்டிருந்தால்   வாழ்க்கை சுவைக்காது.


இராமன் சீதை வாழ்வில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

இராவணன் இறந்த பின், சீதையை கொண்டு வருகிறார்கள்.

அவளை பேசக் கூடாத பேச்செல்லாம் பேசுகிறான் இராமன். எல்லோர் முன்னிலையிலும்.

சுடு சொல் தாங்காமல் சீதை தீக்குளிக்கிறாள். மீண்டு வருகிறாள்.

அக்கினிதேவன் அவள் கற்புக்கு சான்றிதழ் (Certificate) தருகிறான். சீதையை இராமன் ஏற்றுக் கொள்கிறான்.

யோசித்துப் பாருங்கள். சீதையின் மன நிலை எப்படி இருக்கும் என்று.

தன் கற்பை, தன் கணவனே சந்தேகப்பட்டான் என்றால் ஒரு பெண்ணின் மன நிலை  எப்படி இருக்கும்?

அந்த சம்பவத்துக்குப் பின், அவர்களுக்குள் உள்ள தாம்பத்யம் எப்படி இருக்கும்?

சீதை, அந்த சம்பவத்தை எளிதில் மறப்பாளா?  அது முள்ளாக அவள் மனதில் தைக்காதா?

அவள் எப்படி இராமனுடன் இயல்பாக குடும்பம் நடத்த முடியும்?

சீதை என்ன செய்தாள்? என்ன சொன்னாள் ? அவர்களுக்குள் ஊடல் நிகழ்ந்ததா? இராமன் சமாதானம் எதுவும் சொன்னானா?  இராமன் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும். சீதை என்ன சொன்னாள் என்பதுதான் முக்கியம்.

சீதை என்ன நினைத்தாள் / சொன்னாள் / செய்தாள் என்று சிந்தித்துக் கொண்டிருங்கள்.

நாளை சந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_26.html

Sunday, August 25, 2019

திருவாசகம் - புறம் புறம் திரிந்த செல்வமே

திருவாசகம் - புறம் புறம் திரிந்த செல்வமே 


தேவாரம், திருவாசகம், பிரபந்தம், குறள் , கம்ப இராமாயணம் போன்ற நூல்களை படிக்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. அதன் கருத்தாழம் பிரமிக்க வைக்கிறது.

படித்ததை, இரசித்ததை பகிர்ந்து கொள்வோமே என்று நானும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சில சமயம் பயமாகக் கூட இருக்கிறது.

பாடல்களின் ஆழம், நினைக்க நினைக்க போய் கொண்டே இருக்கிறது. ஏதோ சிறு பிள்ளையின் கிறுக்கல்கள் போல நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பாடல்களின் கருத்தாழம் காணும் போது, ஒரு நடுக்கம் வருகிறது.  நாம் பேசாமல் இருப்பதே நலம் என்று தோன்றுகிறது.

எவ்வளவோ யோசித்து, அனுபவித்து, நாலு வரியில் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் என்ன நினைத்து எழுதினார்கள் என்று தெரிந்து கொள்ள, அந்த அளவு அறிவும், ஞானமும் வேண்டும் என்றே நினைக்கிறேன்.

"பால் நினைந்து ஊட்டும்" என்ற திருவாசகத்தில், அந்த முதல் வரியிலேயே நின்று போய் இருக்கிறேன். அடடா, என்ன ஒரு வரி. குழந்தைக்கு பசிக்குமே என்று அது அழுவதற்கு முன் "நினைந்து" ஊட்டும் கருணையை எண்ணி வியந்திருக்கிறேன்.

அதை எப்படி மணிவாசகர் உணர்ந்து எழுதினார் என்று உருகி இருக்கிறேன்.

பின்னால் ஒரு வரி வருகிறது.

"புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!"

என்று.


பாடல்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

விளக்கம்

சிவன் ஏன் புறம் புறம் என்று திரிந்து கொண்டிருக்கிறான்?  அவனுக்கு ஒரு வேலை இல்லையா ?

அவன் திரிய வேண்டிய காரணம் என்ன? அவன் நினைத்தால் அவனுக்கு வேண்டியது அவன் இருக்கும் இடத்துக்கு வந்து சேராதா ?

பின் ஏன் திரிய வேண்டும்?

அப்படி திரியும் சிவனை, மணிவாசகர் கொஞ்சுகிறார்.....

"செல்வமே, சிவ பெருமானே" என்று.

அப்படி திரிந்த சிவனை, மணிவாசகர் தொடர்ந்து சென்று சிக் என்று பிடித்துக் கொண்டாராம்.  "இனி மேல் எங்க போவாய்" என்று சிவனை கேட்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம்?

யோசித்துப் பார்க்கிறேன்.

உயிர்கள், இறைவனை தேடி அலைகின்றன. அவன் இங்கு இருப்பானா, அங்கு இருப்பானா  என்று அலைகின்றன.

அவன் இருக்கும் இடத்தை விட்டு விட்டு எங்கெங்கோ அலைகின்றன.

சிவன், அந்த உயிர்களின் பின்னால் போகிறனான். "நான் இங்கே இருக்கிறேன், இங்கே இருக்கிறேன், என்னை பிடித்துக் கொள் " என்று ஒவ்வொரு   உயிரின் பின்னும் அவன் அலைகின்றான் .

வீட்டில், சின்ன குழந்தை கண்ணா மூச்சி ஆடும். "நீ ஒளிஞ்சுக்கோ, நான் கண்டு பிடிக்கிறேன் " என்று பத்து வரை எண்ணி விட்டு, அப்பாவை தேடும்.

அங்கும் இங்கும் பிள்ளை தேடும்.

ஐயோ, பிள்ளை அங்கே போகிறானே. அது மேலே ஏறி, கீழே விழுந்து விட்டால்  என்ன செய்வது என்று அப்பா மறைந்து நின்றாலும் தவிப்பார். பிள்ளை எங்கெல்லாம் போகிறதோ,  அங்கெல்லாம் அவரும் பின்னாலேயே போவார். பிள்ளைக்குத் தெரியாமல்.  பிள்ளை விழுந்து விடும் என்று தெரிந்தால், ஓடி வந்து தாங்கிக் கொள்வார்.

அது போல, ஒவ்வொரு உயிரும் ஆண்டவனை தேடி அலைகின்றன.  ஆண்டவன்   உயிர்களைத் தேடி அழைக்கின்றான்.

பிள்ளை கலைத்துப் போகும் போது , அப்பா தன்னை வெளிக் காட்டுவார். பிள்ளை ஓடி வந்து அப்பாவின் காலை கட்டிக் கொள்ளும்.  "நீ அவுட்டு..இப்ப நீ என்னை  கண்டு பிடி" என்று சந்தோஷமாக விளையாட்டைத் தொடரும் அல்லவா.

அது போல, மணிவாசகரும், ஓடி வந்து இறைவனை கட்டிக் கொண்டார். "இனி உன்னை விடமாட்டேன்...இனி மேல் நீ என்னை விட்டு ஒளிந்து கொள்ள முடியாது".

"எங்கு எழுந்து அருள்வது இனியே ?"  என்று கூறுகிறார்.

இதுதான் அர்த்தம் என்று நான் நினைக்கிறேன்.

தவறாகவும் இருக்கலாம்.

தமிழ் பக்தி பாடல்கள் பற்றி பேச/எழுத ஒன்று தமிழ் அறிவு இருக்க வேண்டும், இல்லை பக்தியாவது இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் எழுதினால்  இப்படித்தான் எதையாவது எழுத வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

பிழையிருப்பின் , பொறுக்க.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_57.html

கம்ப இராமாயணம் - இராமாயணம் காட்டும் நெறி

கம்ப இராமாயணம் - இராமாயணம் காட்டும் நெறி 


இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே உள்ள முக்கிய வேற்றுமை என்று கம்பன் காட்டுவதை முன்னர் சிந்தித்தோம்.

இராமன் , ஏக பத்தினி விரதன்.

இராவணன், பிறன் மனைவிக்கு ஆசைப் பட்டான் என்று பார்த்தோம்.

அது மட்டும் அல்ல, இன்னும் ஒரு முக்கிய வேற்றுமையை கம்பன் காட்டுகிறான்.

இராமன், தன் மேல் அன்பு கொண்ட அனைவரையும் அனைத்துக் கொண்டு அவர்களை தம்பிகளாக, உடன் பிறப்புகளாக, சொந்தமாக கொண்டாடினான்.

இராவணனோ, உடன் பிறப்பையே எதிரியாக எண்ணினான்.

சேர்த்துக் கொள்வது இராமனின் குணம்.

பிரித்துக் கொள்வது இராவணனின் குணம்.

குகன் சொல்கிறான், "நானும் உன்னுடன் கானகம் வருகிறேன். என்னையும் கூட்டிக் கொண்டு போ" என்று.

அப்போது இராமன் சொல்லுவான்,


"துன்பம் இருந்தால் தானே இன்பம் இருக்கும். உறவு எப்போது இனிமையாக இருக்கும் என்றால் அதன் நடுவில் சிறு சிறு பிரிவு இருக்க வேண்டும். முன்பு நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வர் இருந்தோம். இன்று உன்னோடு ஐந்து பேர் ஆகி விட்டோம்" என்கிறான்.



‘துன்பு உளது எனின் அன்றே
    சுகம் உளது; அது அன்றிப்
‘பின்பு உளது இடை மன்னும்
    பிரிவு உளது ‘என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம்,
    முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர்
    ஐவர்கள் உளர் ஆனோம். ‘

முன்ன பின்ன தெரியாத, பண்பாடு அதிகம் அறியாத, ஒரு கடைக் கோடியில் இருக்கும் குகனை தம்பி என்று ஏற்றுக் கொள்ள எவ்வளவு பெரிய மனம் வேண்டும்.

சரி, ஏதோ வாய் வார்த்தையாக சொன்னான் என்று இல்லை.

இந்த சீதை, உன்னுடைய உறவினள் என்று மனைவியை முன்னிறுத்திக் கூறுகிறான்.

பின்பு வீடணனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுக்கு முடிசூட்டிய பின் இராமன் கூறுவான்

"குகனோடு நாங்கள் அண்ணன் தம்பிகள் ஐந்து பேராக ஆனோம். பின் குன்று சூழும் இடத்தில் உள்ள சுக்ரீவனோடு அறுவர் ஆனோம். அகத்தில் அன்பு கொண்ட உன்னோடு எழுவர் ஆனோம்...என்னை காட்டுக்கு அனுப்பியதன் மூலம் உன் தந்தை பெருமை கொண்டான்"



குகனொடும் ஐவர் ஆனேம்
    முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்;
    எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
    நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலருங் கானம் தந்து,
    புதல்வரால் பொலிந்தான் நுந்தை.

ஒரு வேடன் , ஒரு குரங்கு அரசன், ஒரு அரக்கன் என்று எல்லோரையும் தம்பியாக ஏற்றுக் கொண்டான் இராமன். ஒரு பாகுபாடு இல்லை.

ஆனால், இராவணனோ, உடன் பிறந்த தம்பிகளையே சொந்த சுகத்துக்காக விரட்டி விட்டான்

சீதையை விட்டு விடு என்று வீடணன் எவ்வளவோ அறவுரை கூறினான். இராவணன் மண்டையில் ஒன்றும் ஏறவில்லை. கடைசியில் பல சுடு சொற்கள் கூறி, வீடணனை "உடனே இங்கிருந்து போய் விடு" என்று விரட்டி விடுகிறான்.

"என் கண் முன்னே நிற்காதே . உடனே போய் விடு" என்று உடன் பிறந்த தம்பியை விரட்டினான்.

‘பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;
ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல் விளிதி “ என்றனன்
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.


கும்பகர்ணனையும் அப்படியே சுடு சொல் கூறினான். ஆனால், கும்பன் போக வில்லை.

எல்லோரையும் சேர்த்து அணைத்துக் கொள்வது, உறவு பாராட்டுவது, நட்பாகக் கூட இல்லை, குடும்பத்தில் ஒருவராக அன்யோன்யம் பாராட்டுவது இராமன் காட்டும் வழி.

என் இன்பம், என் சுகம், அது தான்  முக்கியம்.  அதற்கு யார் ஒத்து வரவில்லையோ, அது தம்பியாக இருந்தால் கூட அவர்களை விலக்கி விடுவது இராவணன் காட்டிய வழி.

எது நம் வழி என்று நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.


மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

(rethin@hotmail.com)

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_25.html



Saturday, August 24, 2019

ஐங்குறுநூறு - புகுந்த வீட்டு பெருமை

ஐங்குறுநூறு - புகுந்த  வீட்டு பெருமை 


பிறந்த வீட்டு பெருமை பேசாத பெண் யார் இருக்கிறார்கள். ஒன்றும் இல்லாவிட்டாலும், "எங்க வீட்டுல ...." என்று ஆரம்பித்தால் எளிதில் முடிக்க மாட்டார்கள்.

என்ன செய்வது ? எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த பெண், பெருமையையாவது பேசி விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.

ஐங்குறுநூறு இதை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிறது.

ஒரு பெண். திருமணம் ஆகி, கணவன் வீட்டுக்குப் போய் சிறிது நாள் இருந்து விட்டு பின் தாய் வீட்டுக்கு வருகிறாள்.

அம்மாவுக்குத் தெரியும் , அங்கே ஒண்ணும் பெரிய சிறப்பு கிடையாது என்று. ஏதோ காதல், கத்தரிக்காய் என்று இந்தப் பெண் திருமணம் முடித்து போய் விட்டாள்.

தாய் கேட்டிருப்பாள் போல இருக்கு , "உன் புருஷன் வீடெல்லாம் எப்படி இருக்கு" னு.

அவளுக்கு கணவன் வீட்டை வீட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால், அது ஏழ்மையான வீடு என்ற உண்மையையும் மறைக்க முடியவில்லை.

அந்தப் பெண் சொல்கிறாள்

"அவங்க வீட்டு கொல்லை பக்கத்துல குப்பை கூளம் நிறைந்த தோட்டம் ஒன்று இருக்கிறது. சரியாக பராமரிக்காமல் விட்ட தோட்டம்தான். அதில் உள்ள குழியில் கொஞ்சம் நீர் தேங்கி இருக்கிறது. அது கலங்கிய நீர். சேரும் சகதியுமாக இருக்கும். அந்த நீரை மான்கள் பருகும். அந்த நீரானது, நம் வீட்டு தோட்டத்தில் நீ தரும் தேன் கலந்த பாலை விட சிறந்தது" என்கிறாள்.

பாடல்


அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத் 
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு 
உவலை கூவல் கீழ 
மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே 

பொருள்

அன்னாய்  = அன்புத் தோழியே (தோழியிடம் சொல்வது போல அமைந்த பாடல்)

வாழி வேண்டு = நீ நீண்ட நாள் வாழ வேண்டுகிறேன்

அன்னை = நம் அன்னை

நம் படப்பைத் = நம் தோட்டத்தில்

தேன்மயங்கு = தேன் கலந்து தரும்

பாலினும் = பாலை விட

இனிய = இனிமையானது

அவர் = அவர் (என் கணவர்)

நாட்டு  = நாட்டில் (அவரது வீட்டில்)

உவலை = சருகுகள்

கூவல் = நீர் கட்டிக் கிடக்கும் குழி

கீழ = அதில்

மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே  = மான் உண்டது போக மிஞ்சிய கலங்கிய நீர்

 இங்க தேனும் பாலும் இருக்கு. ஆனால், அவளுக்கு கணவன் இருக்கும் இடம்தான் பெரிதாகத் தெரிகிறது.

மான் எல்லாம் வந்து தண்ணி குடிக்கும் என்றால், அவ்வளவு அன்பும் அரவணைப்பும் அங்கே   இருக்கிறது என்று அர்த்தம்.

செல்வம் அல்ல மகிழ்ச்சியைத் தருவது, அன்பும் அரவணைப்புமே இன்பம் தரும்.

எங்கோ இருந்து வந்த மான்கள் பயம் இல்லாமல் அவங்க வீட்டு தோட்டத்தில்  நீர்  குடிக்கும் என்றால், எனக்கு அங்கு ஒரு பயமும், கவலையும் இல்லை என்று  சொல்ல வருகிறாள்.

கணவனின் அன்பு  மட்டும் இருந்துவிட்டால் போதும், ஒரு பெண் எந்த இடத்திலும்  இனிமையாக குடும்பம் நடத்துவாள் என்பது செய்தி.

பிறந்த வீடு பெருமை பேசி, புகுந்த வீட்டை மட்டம் தட்டும் பெண்களுக்கு இது ஒரு  பாடம்.

அந்தக் காலத்தில் நம் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று காட்டும் பாடல் இது.

முடிகிறதோ இல்லையோ, எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்வதில்  ஒன்றும் தவறில்லையே.....

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_24.html


Friday, August 23, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய 


இரத்த அழுத்தம் கூடிவிட்டது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி விட்டது. உடல் எடை கூடிவிட்டது. மருத்துவர் தினமும் உடற் பயிற்சி செய்யச் சொல்கிறார். உணவு கட்டுப்பாடு வேண்டும் என்கிறார்.

உடற் பயிற்சி செய்தால் உடம்பெல்லாம் வலிக்கிறது. மூச்சு வாங்குகிறது. முட்டு வலிக்கிறது. வேர்த்து விருவிருத்து உடம்பெல்லாம் கசகச என்று வியர்வை உப்பு எரிச்சல் தருகிறது.

போதா குறைக்கு அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே என்று கட்டுப்பாடு வேறு.

வாழ்க்கையே வெறுத்துப் போகிறது.

என்ன மருத்துவர் இவர். மனுஷனை பாடாய் படுத்துகிறாரே என்று அவர் மேல் கோபம் வருகிறது. ஒரு மருந்து மாத்திரை கொடுத்து சரி செய்யக் கூடாதா. மனுஷனை இப்படியா போட்டு வறுத்து எடுப்பது என்று எரிச்சலும் கோபமும் வருகிறது.

ஒருவழியாக ஒரு ஆறு மாதம் இதை எல்லாம் செய்து வந்த போது , உடல் இளைத்து, சர்க்கரை அளவு குறைந்து, இப்போது மிக சுகமாக இருக்கிறது.

ஆறுமாதம் துன்பம்தான். கோபம்தான். எரிச்சல்தான்.

முடிவு, இன்பம்.

அது போல, வாழ்வில் சில சமயம் துன்பம் வரும். சோகம் வரும். ஏமாற்றம் வரும்.  இந்த கடவுளுக்கு என் மேல் கருணையே இல்லையா என்று கோபம் வரும்.

சிந்திக்க வேண்டும்.

இராமன் கூனியின் மேல் மண் உருண்டையை வைத்து அம்பால் அடித்தான்.

அது அவளை கேலி செய்யவோ, துன்புறுத்தவோ இல்லையாம்.

நம்மாழ்வார் சொல்கிறார், "அது அவளின் கூன் நிமிரும் பொருட்டு இராமன் செய்த வேலை" என்று.

கூனிக்கு அது அவமானமாகப் பட்டது. இராமன் மேல் கோபம் கொண்டாள். அவனை பழி தீர்க்க வேண்டும் எண்ணினாள் .

இராமன் செய்ததோ, அவளுக்கு உதவி.  அவளின் அறிவு எட்டவில்லை.

துன்பம் வரும் போது, இந்த துன்பம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் உயர்த்தும் என்று நினைக்க வேண்டும்.

துன்பத்தைப் பொறுப்பதுவே தவம் என்பார் வள்ளுவப் பெருந்தகை.

பாடல்

மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய். மாதவா.*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*
வானார் சோதி மணிவண்ணா.* மதுசூதா. நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே

பொருள்

மானேய் = மான் போன்ற

நோக்கி  = கண்களை உடைய

மடவாளை = திருமகளை

மார்வில் = மார்பில்

கொண்டாய். = கொண்டாய்

மாதவா = மாதவா

கூனே சிதைய = கூன் அற்றுப் போகும்படி

உண்டைவில் = உண்டை வில்லால்

 நிறத்தில் = வடிவில்

தெறித்தாய் = எறிந்தாய், அம்பு விட்டாய்

கோவிந்தா. = கோவிந்தா

வானார்  = தேவர்களுக்கு

சோதி  = ஜோதி

மணிவண்ணா. = வடிவான மணி வண்ணா

மதுசூதா = மதுசூதனா

நீ அருளாய் = நீ அருள் செய்வாய்

உன் = உன்னுடைய

தேனே  = தேன்

மலரும் = சொரியும்

திருப்பாதம் = திருப்பாதங்களை

சேருமாறு = வந்து அடையுமாறு

வினையேனே = வினை கொண்ட என்னை


சற்று ஆழமாக சிந்திக்க சில விஷயங்கள்.

முதலில், துன்பம் வரும்போது, அது துன்பம் மட்டும் அல்ல. ஒரு வேளை நம்மை உயர்த்த வந்த  சோதனை என்று நாம் சிந்திக்கப் பழகிவிட்டால், துன்பம் பெரிதாகத் தெரியாது.  நன்றாக படிக்கும் மாணவனை ஆசிரியர் தேர்வு எழுத வைத்து சோதனை செய்வது போல. தேர்வு கடினம் தான். அதற்காக ஆசிரியரை கல்லால் அடிப்பதா?

இரண்டாவது, உண்டி வில் அடித்தது இராமன். நம்மாழ்வாருக்கு இராமன் மேல் குற்றம் சொல்ல  மனம் வரவில்லை. கிருஷ்ணன் மேல் பல குற்றங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாக, இந்த குற்றத்தையும் கிருஷ்ணன் மேல் சுமத்தி விடுகிறார் ஆழ்வார்.

"கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*"

கோவிந்தன் இங்கே எங்கே வந்தான். அது அடுத்த அவதாரம். இராமனை அப்பழுக்கற்ற  அவதாரமாக காட்ட விழைகிறார் ஆழ்வார்.

மூன்றாவது, எனக்கு அருள் செய் என்று அவர் கேட்பது, பணம் காசு இல்லை. உன் திருவடிகளை அடைய எனக்கு அருள் செய் என்கிறார்.   ஏன், அவருக்குத் தெரியாதா ? போய் சரண் அடைய வேண்டியதுதானே? அதுக்கு எதுக்கு அருள்?

நமக்குத்தான் தெரியும். இந்த உலகம் நிரந்தரம் இல்லை. செல்வம் நிரந்தரம் இல்லை.  வாழ்நாள் கொஞ்ச நாள் தான் என்று. இறைவனை அடைய வேண்டும் அல்லது உண்மையை கண்டறிய வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம்.

முடிகிறதா ?  ஏதோ ஒரு வேலை. முனைப்பு. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுகிறோம்.

அவன் அருள் இருந்தால் ஒழிய அவனை அடைய முடியாது என்பது ஆன்றோர் வாக்கு.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர்.

பொய் என்று தெரிந்தும் அவற்றின் பின் போய் கொண்டிருக்கிறோம்.

விட முடிவதில்லை.

பாசம் ஒரு புறம். ஆசை ஒரு புறம்.

நம்மால் விட முடியாது. அதுவாகப் போனால் தான் உண்டு. அது எப்படி போகும்.

"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி" என்பதும் மணிவாசகம்.

அவை போவதற்கு எனக்கு அருள் புரி என்று வேண்டுகிறார்.

இன்னமும் விரித்துச் சொல்லலாம். "ரொம்ப பெருசா இருக்கு...நேரம் இல்லை...அப்புறம் படிக்கலாம் " என்று படிக்காமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சி, சுருக்கமாக சொல்லி பலவற்றை விட்டு விடுகிறேன்.

பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

நாக்கில் தேன் தித்திக்கும். மனதுக்குள் எங்கேயோ சில அழுக்குகள் விலகுவது தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_97.html

திருக்குறள் - சொற்குற்றம் - சீர்மை சிறப்பொடு நீங்கும்

திருக்குறள்  - சொற்குற்றம்  - சீர்மை சிறப்பொடு நீங்கும்


நல்ல  பெயர் எடுப்பது என்பது மிகக் கடினமான செயல். அப்படி முயற்சி செய்து நல்ல பெயர் எடுத்தாலும், அதை கட்டிக் காப்பது அதனினும் கடினமான ஒன்று.

அப்படி முயன்று பெற்ற நல்ல பெயரும் புகழும், பயன் இல்லாத சொற்களை சொல்வதனால் , அப்படி பேசுபவர்களை விட்டு நீங்கும் என்கிறார் வள்ளுவப் பேராசான்.

பாடல்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்

பொருள்

சீர்மை  = மேன்மை, உயர்வு

சிறப்பொடு = சிறப்பான பெயர், புகழ், மதிப்பு

நீங்கும் = ஒருவரை விட்டு நீங்கும். எப்போது என்றால்

பயன்இல = பயன் இல்லாதவற்றை

நீர்மை = நீரின் தன்மை

உடையார் = உடையவர்

சொலின் = சொன்னால்

சீரும் சிறப்பும் போய் விடும் என்கிறார்.

அப்படி என்றால் நல்ல பெயர் எடுக்க வேண்டும், எடுத்த பெயரை காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது என்பது தெரிகிறது அல்லவா.

சரி, அது என்ன நீர்மை உடையார்?

நீர்மை என்ற சொல்லுக்கு பல பொருள் சொல்லுகிறார்கள்.

நீர் இன்றி அமையாது உலகு என்று சொல்லுவார்கள். நீர் அவ்வளவு உயர்ந்தது. இன்று கூட வெளிக் கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்று ஆராயும் போது , முதலில் அங்கே நீர் இருக்கிறதா என்று ஆராய்கிறார்கள்.

நீர் இருந்தால் உயிரினம் இருக்கும் என்பது ஒரு எதிர்பார்ப்பு.

நீர் உயிர் காப்பது.

நீர்மை உடையார் என்றால், உயிர் காப்பதைப் போன்று அருள் உள்ளம் கொண்டவர்கள், பெரியவர்கள், சான்றோர் என்று பொருள்.



நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.

என்று பிரபந்தம் பேசும்.

நிலவே, உன் உயரிய தன்மையை இழந்து விட்டாயா என்று கேட்கிறது அந்தப் பாசுரம்.

பயன் தரக்கூடியவற்றை எப்படி பேசுவது?

அதற்கு முதலில் பயன் தரக்கூடியவற்றை படிக்க வேண்டும். கேட்க வேண்டும்.

எது உள்ளே போகிறதோ, அது தானே வெளியே வரும்.

அரட்டைகளும், நையாண்டிகளும், துணுக்குகளும்,  பொய் செய்திகளும் உள்ளே போனால், அதுதானே வரும்.

நல்லவற்றை உள்ளே அனுப்புங்கள்.

கிழியும்படியடற் குன்றெறிந்தோன் கவிகேட்டுருகி
யிழியுங் கவிகற்றிடாதிருப்பீரெரி வாய்நரகக்
குழியுந்துயரும் விடாய்ப்படக் கூற்றுவனூர்க்குச் செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

(கந்தரலங்காரம்-56)

என்பார் அருணகிரிநாதர்.

"இழியும் கவி கற்றிடாதிருப்பீர் "...மோசமான கவிதைகளை கற்காமல் இருங்கள் என்கிறார்.

கண்டதையும் படிக்கக் கூடாது.



நல்லதைப் படித்தால், நல்ல சிந்தனை வரும்.

நல்ல சிந்தனை வந்தால், நல்ல சொல் வரும்.

நல்ல சொல் வந்தால், சீரும் சிறப்பும் தானே வந்து சேரும்.

குப்பைகளை படிப்பதை நிறுத்த வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_23.html


Thursday, August 22, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பாரித்து உரைக்கும் உரை

திருக்குறள் - சொற்குற்றம் - பாரித்து உரைக்கும் உரை 


சிலபேர் ஒண்ணும் இல்லாததை ஏதோ பெரிய விஷயம் போல விரித்து விலாவாரியாக சொல்லுவார்கள்.

முதலில், பயனில்லாத சொல்லை சொல்லவே கூடாது.  அதையும், விரித்து, பெரிதாக்கி சொல்லுவது அதனினும் கொடுமை.

இப்போது வரும் டிவி சேரியல்களைப் பார்த்தால் தெரியும்.

முதலில் அதில் ஒரு கருத்தும் இருக்காது. ஒன்றும் இல்லாத அந்த கருத்தை 300 அல்லது 400 வாரமாக இழுத்துக் கொண்டே போவார்கள். கொடுமையான விஷயம்.

செய்தித்தாள்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவன் ஒரு கெடுதல் செய்தான் என்றால் அதை விலாவாரியாக விளக்குகிறார்கள்.

ஒரு பெண்ணை சிலர் கெடுத்து விட்டார்கள் என்றால், அதை பக்கம் பக்கமாக விளக்குகிறார்கள்.

எதற்கு?

பெண்ணின் மேல் அமிலம் வீசிவிட்டார்கள், வெட்டி விட்டார்கள், யாரையோ யாரோ கொலை செய்து விட்டார்கள் என்றால் எப்படி செய்தார்கள் என்று தத்ரூபகமாக விளக்குகிறார்கள்.

இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்கிறது குறள்.

ஒருவன் பேசுவதை வைத்து ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்று அறிந்து கொள்ளலாம் என்கிறார்.

யாராவது உங்களிடம் எதையாவது பேசுகிறார்கள் என்றால் கூர்ந்து கவனியுங்கள். அது எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தரும் என்றும் அதை அவர்கள் எவ்வளவு விரிவாக சொல்கிறார்கள் என்று.

வள வள என்று சொல்லிக் கொண்டே போனால், சொல்பவர் சரி இல்லை என்று குறித்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக இந்த புரணி பேசுபவர்கள், புறம் சொல்லுபவர்கள், போட்டுக் கொடுப்பவர்கள், வஞ்சனை செய்பவர்கள், பொய் சொல்பவர்கள் போன்றவர்கள்தான்  பெரிதாக பேசிக் கொண்டே போவார்கள்.


மௌனம் , ஞான வரம்பு  என்பது தமிழ் கோட்பாடு.

சில அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டால் இது புரியும். ஒன்றும் இல்லாததை ஒரு மணி நேரம்  பேசிக் கொண்டு இருப்பார்கள். அப்படி பேசுபவர்கள்  நல்லவர்கள் இல்லை என்பதை அவர்கள் பேச்சே காட்டிக் கொடுத்துவிடும்  என்கிறார் வள்ளுவர்.


பாடல்

நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித்து உரைக்கும் உரை


பொருள்


நயனிலன் = நயன் +  இலன். நயன் என்ற சொல்லுக்கு நீதி, நேர்மை, தர்மம், அறம் என்று பல பொருள் உள்ளது. இங்கே நல்லவன் இல்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

 என்பது = என்பது

சொல்லும் = நமக்கு எடுத்துச் சொல்லும். எது எடுத்துச் சொல்லும் என்றால்

பயனில = பயன் இல்லாதவற்றை

பாரித்து = விரிவாக்கி

உரைக்கும்  = சொல்லும்

உரை = பேச்சு  (எழுத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்).

எவன் ஒருவன் பயனில்லாதவற்றை விரித்துச் சொல்லுகிறானோ, அவன் ஏதோ கெடுதல் செய்யப் போகிறான்   என்று அறிந்து கொள்ளவேண்டும்.

நாமும், பயனில்லாதவற்றை பேசுவதை தவிர்ப்பது நலம். முடியாவிட்டால், சுருக்கமாக சொல்லிவிட்டு நகர்ந்து விட வேண்டும்.


அடுத்தமுறை யாராவது, அல்லது ஊடகங்கள் டிவி, whatsapp , youtube , facebook , செய்தித்தாள்கள், தேவையில்லாதவற்றை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அந்த இடத்தை விட்டு விலகுங்கள்.

அது மட்டும் அல்ல, நீங்களும், பயனில்லாதவற்றை நீட்டி முழக்கி பேசாதீர்கள்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_22.html

Monday, August 19, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - நாட்டார் கண் செய்தலின் தீது

திருக்குறள் - சொற்குற்றம் - நாட்டார் கண் செய்தலின் தீது 



பெற்ற பிள்ளைக்கு யாராவது தீங்கு நினைப்பார்களா ? பெற்றோருக்கு? உடன் பிறப்புக்கு? நெருங்கிய நண்பர்களுக்கு?

எதிரிக்கு தீங்கு செய்தால் பரவாயில்லை. உற்றார், உறவினர், நண்பர்களுக்கு தீமை செய்வது என்பது எவ்வளவு பெரிய கொடிய விஷயம்.

அதை விட கொடியது ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

அது தான், பல பேர் முன், பயனில்லாத சொற்களை சொல்லுவது.

மற்றவர்களுக்கு தீமை செய்வது கொடிய செயல்.

அதிலும், நெருங்கியவர்களுக்கு செய்வது அதனினும் கொடுமை.

அதை விட கொடியது, பல பேர் முன்னிலையில் பயன் இல்லாத சொற்களை கூறுவது.

பாடல்


பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது


பொருள்


பயன்இல = பயன் இல்லாத. தனக்கும், மற்றவர்க்கும் , இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராத சொற்களை

பல்லார்முன் = பல பேர் முன்னிலையில்

சொல்லல்  = சொல்வது என்பது

நயன்இல = நன்மை இல்லாத

நட்டார்கண் = நெருங்கியவர்களிடத்து

செய்தலின் தீது = செய்வதை விட தீமையானது

சற்று ஆழமாக யோசிப்போம்.

"தீது" என்று யாருக்குச் சொல்கிறார். சொல்வது தீது அல்ல. செல்பவருக்கு தீது.

ஏன்?

உலகத்தில் நமக்கு பலர் முன்னே பின்னே தெரியாதவர்கள். பார்த்தும், கேட்டும் இல்லாதவர்கள்.  அவர்களை விட்டு விடுவோம். அவர்களுக்கும் நமக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.

கொஞ்ச பேர் எதிரிகள் இருப்பார்கள் - தொழில் ரீதியாக, போட்டியில், அக்கம் பக்கம், அலுவலகம் போன்ற இடங்களில் இருப்பார்கள்.

கொஞ்சம் நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள்.

மொத்தம் அவ்வளவுதானே?

இப்போது, நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் பயன் இல்லாத சொற்களை பேசினால்  என்ன ஆகும்.

"வந்துட்டாண்டா, சரியான அறுவை கேஸு...வந்தா விட மாட்டான்...எதையாவது தொண தொண என்று பேசிக் கொண்டிருப்பானே, இவனிடம் இருந்து  எப்படி தப்புவது" என்று நம்மை விட்டு விலகிப் போக நினைப்பார்கள்.

இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நண்பர்களையும், உறவினர்களையும் இழக்க நேரிடும்.

யாருமே நமக்கு உறவு என்று இருக்க மாட்டார்கள்.

மாமியார் மருமகள் சண்டை வந்து பிள்ளை அம்மாவை விட்டு  விட்டு போவதற்கு காரணம்  என்ன ? பயனில்லாத சொல்.

நண்பர்கள் பகைவர்களாக மாற காரணம் என்ன - பயனில்  சொல்

கணவன் மனைவி உறவில் விரிசல் வரக் காரணம் என்ன - பயனில் சொல்

பயன் இல்லாத சொற்களை பேசினால், மற்றவர்களிடம் இருந்து அந்நியப் பட்டுப் போவோம்.

"அவன் கிட்ட மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும், ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுவான், எந்த பிரச்சனை என்றாலும் என்னுடைய நலத்தை யோசித்து வழி சொல்லுவான்  ..." என்று மற்றவர்களை நினைத்தால் உறவு பலப்படும்.

எனவே, உறவினர்களுக்கு தீமை செய்வது எவ்வளவு தீமையானதோ, அதை விட  தீமையானது பலர் முன் பயன் இல்லாத சொற்களை கூறுவது.

பேசும்போது ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு வார்த்தை வாழ்க்கையின் திசையை மாற்றி விடும்.

எல்லோருக்கும் பயன் படும்படி எப்படி பேசுவது என்று சிந்தியுங்கள்.

அப்படி பேசுவதாக இருந்தால், உங்களிடம் நிறைய நல்ல விஷயங்கள் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் நிறைய அறிவை சேகரிக்க வேண்டும். படிப்பறிவு மற்றும் அனுபவ அறிவு.  இரண்டும் வேண்டும்.

அந்த அறிவின் மேம்பாடு உங்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகும்.

சரி தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_19.html

Sunday, August 18, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பயனில சொல்லாமை

திருக்குறள் - சொற்குற்றம் - பயனில சொல்லாமை 


ஆளுமை (personality ) எப்படி வருகிறது. நம்முடைய தோற்றம், நடை, உடை, பாவனை, நம் பேச்சு செயல் என்று இவற்றில் இருந்து நம்முடைய ஆளுமை பிறக்கிறது.

இதில் முக்கியமானது பேச்சு.

நாம் எப்படி மற்றவரிடத்தில் பேசுகிறோம் என்பதை வைத்து மற்றவர்கள் நம்மை எடை போடுவார்கள்.

இவன் படித்தவன், அறிஞன், முட்டாள், விஷயம் தெரிந்தவன், புளுகன் என்றல்லாம் நம்மை எடை போடுவார்கள்.

எடை போடுவது ஒரு புறம் இருக்கட்டும், நம் வாழ்க்கைக்கு மிக மிக தேவையான ஒன்று மற்றவர்களிடம் நாம் கொள்ளும் உறவு.

பிள்ளைகளிடம், பெற்றோரிடம், கணவனிடம், மனைவியிடம், உடன் பிறப்புகளிடம், சுற்றத்தாரிடம், நண்பர்களிடம், மாமனார், மாமியார், நாத்தனார், மேலதிகாரி , கீழே வேலை பார்ப்பவர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அத்தனை பேரிடமும் நல்லபடியாக உறவை வளர்ப்பது என்பது சவாலான காரியம்.

உறவின் பலம், பேச்சில் இருக்கிறது.

சொல்லில் ஏற்படும் குற்றங்களை களைய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவருக்கு உரை எழுத வந்த பரிமேலழகர் சொல்லின் கண் ஏற்படும் குற்றங்கள் நான்கு என்கிறார்.

அதாவது,

பொய் சொல்லுதல்
குறளை
கடுஞ் சொல்
பயனில் சொல்

"பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் லென "

என்று மணிமேகலை கூறும்.

குறளை என்றால் நிந்தனை, திட்டுதல், ஏசுதல்.

தீக்குறளை சென்றோதோம் என்பாள் ஆண்டாள்.


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் "தீக்குறளைச் சென்றோதோம்"
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா(று) எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.'


இதில், வியக்கும் விஷயம் என்ன என்றால், உரை எழுதிய பரிமேல் அழகர் கூறுகிறார், முற்றும் துறந்த முனிவர்களால் மட்டும் பொய்யை முழுவதும்   அகற்ற முடியும் . எனவே, அதை விட்டு விட்டு, மற்றவற்றை திருவள்ளுவர் சொல்லுகிறார் என்றார்.

யாருக்கு கிடைக்கும் இப்படி பட்ட ஆசான்கள்.

இதில், பயனில் சொல்லாமை என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

பயனில்லாத என்றால் என்ன?

தனக்கும் மற்றவர்க்கும் அறம் , பொருள், இன்பம், வீடு இந்த நான்கில் ஒன்றாவது  கிடைக்கும் பயன் இல்லாமல் பேசுவது பயனில் சொல்லாமை.

வாயை திறக்கிறோம் என்றால், என்ன சொல்லப் போகிறோம் என்று தெரிந்து பேச வேண்டும். நாம் சொல்லப் போவதால் யாருக்கு என்ன நன்மை என்று அறிந்து  பின் பேச வேண்டும்.

அதில் முதல் குறள்


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்


பொருள்

பல்லார் = பலர்

முனியப்  = கோபம் கொள்ளும்படி, வெறுக்கும் படி

பயனில = பயனில்லாத

சொல்லுவான் = (சொற்களை) சொல்லுவானை

எல்லாரும் = எல்லாராலும்

எள்ளப் படும் = நகைக்கப் படும்

பலர் வெறுக்கும் படி பேசுபவனை எல்லாரும் பார்த்து நகைப்பார்கள்.

வெட்டிப் பேச்சு. அரட்டை.  பொழுது போகாமல் எதையாவது பேசிக் கொண்டிருப்பது.

இப்படி பேசுபவர்களை கண்டால், எல்லோரும் கோமாளி என்று நினைத்து  நகைப்பார்கள். பழிப்பார்கள் என்கிறார்.

பயன் தரும் சொல் ஒன்றும் இல்லையா. பேசாமல் இருந்து விடுவது நல்லது.

சொல்லுக்குள் வலிமையை ஏற்ற வேண்டும்.

ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்து எடுத்து பேச வேண்டும்.

எப்படி பயனில் சொற்களை தவிர்ப்பது என்று வள்ளுவர் பாடம் நடத்துகிறார்.

கேட்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_18.html

Friday, August 16, 2019

கம்ப இராமாயணம் - இராமாயணம் சொல்ல வருவது என்ன ?

கம்ப இராமாயணம் - இராமாயணம் சொல்ல வருவது என்ன ?


கம்ப இராமாயணத்தை எத்தனையோ விதமாக அணுகலாம். அது தான் காப்பியங்களின் பெருமை. நாம் நினைக்க நினைக்க அது விரிந்து கொண்டே போகும்.

இராமாயணம் என்பது  ஒரு கதை அல்ல. அதைக் கதை என்று எடுத்துக் கொண்டு அணுகினால், அப்படி ஒன்றும் பெரிய  கதை அல்ல. இன்றைய டிவி சீரியல்கள் அதை விட உணர்ச்சி பூர்வமான கதைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பின், அந்த காப்பியத்தில் மறைந்து கிடக்கும் பாடங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு சில உண்மைகள் புலப்படும்.

அப்படி எனக்கு தட்டுப்பட்ட உண்மைகளை பகிர்ந்து கொள்ள விருப்பம்.

எந்த ஒரு கதையிலும், கதாநாயகன் நலலவன். வில்லன் கெட்டவன்.

கதாநாயகன் நல்லவன் என்பதற்கு சில சம்பவங்கள் காட்டப்படும்.

வில்லன் கெட்டவன் என்பதற்கு சில சம்பவங்கள் காட்டப்படும்.

இங்கே இராமன், கதாநாயகன். அவன் அவதாரம் என்று சொல்லி ஆகி விட்டது. எனவே, அவன் நல்ல குணங்கள் அளப்பரியன என்று சொல்லாமலே விளங்கும்.

இராவணன், இராமனுக்கு இணையான நல்லவன் என்றே கம்பன் காட்டுகிறான்.

வேறு எந்த காப்பியத்திலாவது வில்லனை இவ்வளவு உயர்வாக காட்டி இருப்பார்களா என்பது சந்தேகமே.

வாரணம் பொருத மார்பு
வரையினை எடுத்த தோள்

உடல் வலிமை மட்டும் அல்ல

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவு

தார் அணி மௌலி பத்து

சங்கரன் கொடுத்த வாள்  (தவ வலிமை)

முக்கோடி வாழ் நாள் (நீண்ட ஆயுள்)

முயன்று உடைய பெரும் தவம்

யாராலும் வெல்லப் படாய் எனப் பெட்ற வரம்

என்று அடுக்கிக் கொண்டே போகிறான் கம்பன்.

வீரம், தவம், பக்தி, அறிவு, உடல் வலிமை,  ஆயுள், என்று எதிலும் குறைவு இல்லாமல்  இருக்கிறான்.

எங்கே வந்தது அவன் குறை?

இராவணனையும் இராமனையும் இரு துருவங்களாக பிரிக்கும் ஒரே குணம் எது ?


ஒரு பெண்ணைத் தவிர வேறொருத்தியை மனதாலும் தொட்டேன் என்று சொன்னவன் இராமன்.

இருக்கிற பெண்கள் போதாது என்று மாற்றான் மனைவியும் வேண்டும் என்ற ஒழுக்கக் குறைவு   இராவணனிடம்.

அது ஒன்று தான் இருவரையும் பிரிக்கிறது .

"என்னை மணந்து கொண்ட போது, உன்னைத் தவிர வேறொரு பெண்ணை மனதாலும் தீண்டேன் என்று இராமன்  எனக்கு ஒரு வரம் தந்தான் . அதை நினைவு படுத்து   " என்று சீதை அனுமனிடம் கூறுகிறாள்.

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்

தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்

இது இராமனின் ஒழுக்கம்.


ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசில்புகழ் காதலுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவதும் காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்

இது இராவணன்.

அந்த ஒரு புள்ளிதான்.

மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைக்காத ஒரு மனம்,
மாற்றான் மனைவியையும் நினைத்தது இன்னொரு மனம்.

கதை பின்னல்களூடே இந்த துருவங்கள் மறைந்து போயிருக்கலாம்.

நினைத்துப் பார்ப்போம்.

இது ஒரு பாடம்.

இன்னும் , சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_16.html

Thursday, August 15, 2019

முத்தொள்ளாயிரம் - காணிய சென்று கதவுஅடைத்தேன்

முத்தொள்ளாயிரம் -  காணிய சென்று கதவுஅடைத்தேன்


ஒருவரிடம் சென்று உதவி கேட்பது என்றால் உடம்பு கூசித்தான் போகிறது.

நமக்கு கூசுவது இருக்கட்டும், உலகளந்த பெருமாளே மூன்றடி மண் கேட்க வாமன உருவமாய் குறுகித்தானே போனார். நாம் எம்மாத்திரம்.

ஒரு பக்கம் பணத்தேவை. வறுமை. குடும்பம் பசியால் தவிக்கிறது. உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

இருந்தாலும், மானம் தடுக்கிறது. இப்படி ஒரு நிலைமை நமக்கு வந்து விட்டதே இரக்கம் மேலிடுகிறது.

வறுமை வாய்ப்பட்டவன் இரண்டுக்கும் நடுவில் கிடந்து உழல்வான்.

இது எப்படி இருக்கிறது என்றால், பெண் ஆசைக்கும், நாணத்துக்கும் நடுவில் கிடந்து தவிப்பதைப் போல இருக்கிறது என்கிறார் கவிஞர்.

வறுமைக்கு காதலை உதாரணம் காட்டுகிறார்.

அவள் ஒரு இளம் பெண். சேர மன்னன் மேல் காதல் கொண்டாள். சேரன் வீதி உலா வரும்போது அவனை காண நினைத்தாள். வாசல் வரை சென்றாள். நாணம் மேலிட. சீ சீ...நான் போய் எப்படி அவனைப் பார்ப்பது என்று வெட்கப்பட்டு கதவை சாத்திவிட்டு வந்து விட்டாள்.

பார்க்கவே இல்லை. அவ்வளவு நாணம், வெட்கம்.

உதவி கேட்பதா வேண்டாமா என்று தவிக்கும் ஒரு ஏழையைப் போல, சேரனை பார்ப்பதா வேண்டாமா   என்று அவள் தவிக்கிறாள்.

பாடல்

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவுஅடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு.


பொருள்

ஆய்மணிப் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட

பைம் = பசுமையான, இங்கே புதிய

பூண் = பூண் பொதிந்த ஆபரணம்

அலங்கு = ஆடும்

தார்க் = மாலை

கோதையைக் = அணிந்த அரசனை (கோ = அரசன்)

காணிய = காண்பதற்கு

சென்று  = சென்று

கதவுஅடைத்தேன் = கதவை அடைத்தேன்

நாணிப் = நாணத்தால்

பெருஞ்செல்வர் = பெரிய  செல்வர்

இல்லத்து = வீட்டில்

நல்கூர்ந்தார் = ஏழை

போல  = போல

வரும் = வரும்

செல்லும் = செல்லும்

பேரும் = நகரும்

என் நெஞ்சு= என் மனம்

எளிய தமிழ்.  மனித மனத்தின் உணர்ச்சிகளை தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கும் பாடல்.

நல்லா இருக்குல ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_15.html


Tuesday, August 13, 2019

கம்ப இராமாயணம் - விழி பொழி மழையன்

கம்ப இராமாயணம் - விழி பொழி மழையன் 


கம்ப இராமாயணத்தில் எவ்வளவோ அரிய பெரிய செய்திகள் எல்லாம் இருக்கின்றன.

என்னை மிகவும் ஆச்சரியப் பட வைத்த செய்தி எது என்று கேட்டால், சகோதர வாஞ்சை என்று சொல்வேன்.

அப்படி சொல்லும் பலர் எதை உதாரணம் காட்டுவார்கள் என்றால், இராமன், குகனையும், சுக்ரீவனையும், வீடணனையும் தன் தம்பியாகக் கொண்டான் எனவே இராமாயணத்தில் விஞ்சி நிற்பது சகோதர பாசமே என்று சொல்லுவார்கள்.

 அது ஒரு புறம்  இருக்கட்டும்.

என்னை ஆச்சரியப் பட வைத்தது அந்த சகோதர வாஞ்சை அல்ல.

இராமனை காட்டுக்குப் போ என்றாள் கைகேயி.

இலக்குவனை கூடப் போ என்று யாரும் சொல்லவில்லை. அண்ணன் கூட அவனும் கிளம்பி விட்டான்.

சரி, அவர்கள்தான் போனார்கள், பரதன் என்ன செய்தான்?

நமது நெருங்கிய உறவினர் யாரவது இறந்து விட்டால் கூட, ஓரிரண்டு வருடம் துக்கம் காப்போம், அப்புறம் நாளடைவில் அது மறைந்து விடும்.

பரதன், 14 வருடம் அண்ணனை நினைத்து தவம் இருக்கிறான், நந்தியம்பதி  என்ற  கிராமத்தில். அரண்மனை சுகம் அனைத்தையும் விட்டு விட்டு அண்ணணனை நினைத்து  ஏங்கி நிற்கிறான்.

நம்மால், நினைத்துப் பார்க்க முடியுமா ?

அப்படி ஒரு சகோதர பாசமா?

மனைவியை விட்டு விட்டு இலக்குவன் போனான்.

மனைவியை விட்டு விட்டு பரதன் ஊருக்கு வெளியே கிராமத்தில் இருந்தான்.

சரி, இலக்குவன் போனான். பரதன் போனான். சத்ருகன் என்ன செய்தான்?

அவனும் அரண்மனையை துறந்து, பரதன் கூடவே இருந்தான்.

சகோதரர்கள் இடையே இப்படி ஒரு பாசத்தை காண முடியுமா ?

ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் கூட இல்லை.  மாற்றாந்தாய் மக்கள். அவர்களுக்குள் இப்படி ஒரு பாசமா?

இராவண வதம் முடிந்து இராமன் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கிறான். வருகிற வழியில் பரத்துவாஜ முனிவரை சந்திக்கிறான். அவர், பரதன் நிலை பற்றி இராமனுக்கு கூறுகிறார்.


பாடல்


வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம்  படியான்

பொருள்

வெயர்த்த மேனியன்;  = வியர்வை வழியும் மேனியை உடையவன். காரணம், சாமரம் வீசக் கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை

விழி பொழி மழையன்; = விழிகள் மழை போல் கண்ணீரை சொரிகின்றன

மூவினையைச் = மூன்று வினைகளை, மூழுகின்ற வினைகளை

செயிர்த்த சிந்தையன்; = கோபித்த சிந்தையன்

தெருமரல் = மன மயக்கத்தால்

உழந்து உழந்து அழிவான்; = உழன்று உழன்று அழிவான்

அயிர்த்து நோக்கினும் = ஐயம் கொண்டு பார்த்தாலும்

தென் திசை அன்றி = தென் திசை அல்லாது

வேறு அறியான் = வேறு திசை ஒன்றையும் அறிய மாட்டான்

பயத்த = பயத்துடன் கூடிய

துன்பமே  = துன்பமே

உருவு கொண்டென்னலாம்   = உருவமாக உள்ளவன் என்று சொல்லலாம்

படியான் = அப்படி இருந்தான்

சகோதரர்கள் நால்வரும், நாட்டைத் துறந்து, அரண்மனை சுகங்களைத் துறந்து, கட்டிய மனைவியைத் துறந்து 14 வருடங்கள் இருந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா இன்று?

ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு ஒருவர் காட்டும் உச்ச பச்ச அன்பு இது.

விட்டுப் போயிருந்தால், இனியேனும், சகோதர சகோதரிகளை கூப்பிடுங்கள், அவர்கள் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். உறவை புதுப்பியுங்கள்.

உடன் பிறந்தார் பாசம், கம்பன் படிப்பிக்கும் பாடம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_0.html

சிறுபஞ்ச மூலம் - பெண்டிர் சிறப்பு

சிறுபஞ்ச மூலம் - பெண்டிர் சிறப்பு 


ஒரு குடும்பத்தில், பெண்ணின் பங்களிப்பு மிக அதிகம்.  ஒரு குடும்பத்தை நடத்திச் செல்வதே பெண்ணின் பெருமை   என்று தமிழ் பேசுகிறது.

"நாங்கள் ஏன் குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டும். எங்களுக்கு வேற வேலை இல்லையா ? எது எக்கேடு கெட்டு போனால் எங்களுக்கு என்ன. எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். வீட்டைப்  பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. வேண்டுமானால் ஆண்கள் பார்த்துக் கொள்ளட்டும் "

என்று சில பெண்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  இந்த வாதத்தை திருமணம் முடிவதற்கு முன் அவர்கள் பிள்ளை வீட்டாரிடம் சொல்லிவிட்டால் பின் பிரச்சனை இல்லை. இந்தப் பெண் இப்படித்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். அதில் ஒரு நேர்மை இருக்கும்.

அது ஒரு புறம்  இருக்கட்டும். எத்தனையோ சீரழிவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெண்ணின் சிறப்பாக சிறுபஞ்ச மூலம் என்ற நூல் சிலவற்றை சொல்லுகிறது.

முதலாவது, வீட்டின் வரவு செலவு கணக்கை பராமரிப்பது பெண்ணின்  பெருமை என்று அது சொல்கிறது. ஆணுக்கு சம்பாதிக்கத் தெரியும். அதை எப்படி சரியான வழியில் செலவு செய்வது என்பது பென்ன்க்குத்தான் தெரியும் என்கிறது.

இரண்டாவது, செலவு மட்டும் செய்தால் போதாது, கொஞ்சம் மிச்சம் பிடித்து அதை சரியான வழியில் முதலீடு செய்து அந்த செல்வத்தை பெருக்குவதும் பெண்ணின் பெருமை என்று பேசுகிறது.

மூன்றாவது, உறவினர்கள் பயந்து ஓடும்படி பேசக் கூடாது என்கிறது.  விருந்தை உபசரிப்பது பெண்ணின் பெருமை.

நான்காவது, தெய்வத்தை தான் மட்டும் வழிபட்டால் போதாது, வீட்டில் உள்ள மற்றவர்களையும் தொழச் செய்ய வேண்டும். எல்லாரையும் எழுப்பி, குளிக்க வைத்து, சாமி முன்னால் நின்று கும்பிடப் பண்ண வேண்டியது பெண்ணின் பெருமை.



பாடல்

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பித்-திருவாக்குந்
தெய்வதையு மெஞ்ஞான்றுந் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு.


பொருள்

வருவாய்க்குத் = வீட்டின் வருமானத்துக்கு

 தக்க = தக்கபடி

வழக்கறிந்து = வழக்கம் அறிந்து, வழங்குதலை அறிந்து

சுற்றம் = உறவினர்கள்

வெருவாமை = பயப்படாமல் (அப்பா, அவளா, இராட்சசி )

வீழ்ந்து = வணங்கி

விருந் தோம்பித் = விருந்தை உபசரித்து

திருவாக்குந் = நல்ல நூல்களில் சொன்னவற்றையும்

தெய்வதையு = தெய்வத்தையும்

மெஞ்ஞான்றுந் = எப்போதும் (எஞ்ஞான்றும்)

தேற்ற = தெளிவாக

வழிபாடு = வழிபாடு

செய்வதே =செய்வதே

 பெண்டிர் சிறப்பு. = பெண்ணின் சிறப்பு

பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை நிலை நிறுத்துவது பெண் தான் என்று அது பேசுகிறது.

பெண்ணுக்கு பெரிய பொறுப்பை தமிழ் தந்திருக்கிறது. காரணம், அவளின் தகுதி கருதி.

எங்களுக்கு தகுதியும் இல்லை, எங்களுக்கு பொறுப்பும் வேண்டாம் என்று சொல்லித் திரியும் விட்டேறிகளை நாம் தள்ளி வைப்போம்.

சிறு வயதில் ஒரு பெண் பிள்ளை இவற்றை அறியும் போது, அவளுக்குள் ஒரு நிர்வாகத் திறமை வளரும்.

நான் ஒரு வீட்டை நிர்வாகம் பண்ணப் போகிறேன் என்று அவள் நினைக்கத் தலைப் படும்போது, தானே அவள் அதை கற்றுக் கொள்வாள்.

அப்படி இருந்த நாம், இன்று இப்படி ஆகிக் கொண்டிருக்கிறோம்.

சரியா தவறா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_13.html

Monday, August 12, 2019

கம்ப இராமாயணம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?

கம்ப இராமாயணம்  - துன்பம் வந்தால் என்ன செய்வது ?


துன்பம் வந்தால் துவண்டு போவது மனித இயல்பு.

துயரம் வந்தால் சோர்ந்து போய் விடுகிறோம். என்ன செய்வது என்று அறியாமல் குழம்புகிறோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று தன்னிரக்கம் கொள்கிறோம். இதற்கு யார் காரணம் என்று யாரையெல்லாமோ நினைத்து அவர்கள் மேல் குறை சொல்கிறோம்.

அந்தக் காலத்திலேயே எங்க அப்பா அம்மா என்னைய நல்லா படிக்க வச்சிருந்தா, இன்னைக்கு இந்த துன்பம் வருமா ?....

நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டிக் கொடுத்திருந்தா, நான் இன்னிக்கு இப்படி கண்ணை கசக்கி கொண்டு இருந்திருப்பேனா ?....

வேலை போய் விட்டதே, இனி என்ன செய்வேன்? எப்படி இந்த குடும்பத்தை கரை சேர்ப்பேன்? என்று தவிப்பவர்கள் உண்டு.

இப்படி எவ்வளவோ விதத்தில் துன்பம் வந்து சேரலாம்.

துவள்வது, சோர்வது, பிறரை குற்றம் கூறுவது என்பது ஒரு வழி.

அந்தத் துன்பத்திலும் இன்பம் காண்பது என்பது இன்னொரு வழி.

இது என்ன கதையா இருக்கே...துன்பம் வரும் போது , அதில் எப்படி இன்பம் காண்பது?

வள்ளுவர்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்பது இல் 

என்றார்.

என்ன அர்த்தம்?

துன்பம் வந்தால் சிரிக்க வேண்டுமாம். ஏன் என்றால், அந்த துன்பத்தைக் கண்டு சிரித்து கொண்டு  சும்மா இருக்கக்  கூடாது.அந்த துன்பத்தை நீக்க வழி காண வேண்டும். முயற்சி செய்து, அந்த துன்பத்தை கடந்து விட்டால், அப்போது வரும்  சுகம் இருக்கிறதே, அதற்கு ஈடு இணை இல்லை என்கிறார்.

உதாரணமாக, வேலை போய்விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

ஐயோ, வேலை போய்விட்டதே என்று சுணங்கி விடாமல், "ஆஹா, வேலை போய் விட்டதா ...இப்ப என்ன செய்கிறேன் பார் " என்று களத்தில் இறங்க வேண்டும். வேறு வேலை தேடி கண்டு பிடிக்கலாம், அல்லது சுய தொழில் தொடங்கலாம். எப்படியோ, முயன்று பொருள் சம்பாதித்து, குடும்பத்தை கரை சேர்த்து விட்டால், அப்போது கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும்  அளவிட முடியாது என்கிறார் .

பெண்ணுக்கு வரன் கிடைக்கவில்லையே என்ற கவலை. ஆடி ஓடி ஒருவழியாக திருமணம் முடித்து வைத்து விட்டால் , பின் பேரக் குழந்தைகளோடு விளையாடும் போது உண்டாகும்  மகிழ்ச்சி இருக்கிறதே ....

இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம்.

முடி சூட்ட இருந்த இராமனை, காட்டுக்குப் போ என்று கைகேயி விரட்டி விட்டாள். இதை விட பெரிய துயரம் இருக்குமா ?

சக்ரவர்த்தியாக இருக்க வேண்டியவன், மர உரி உடுத்து காட்டிலும் மேட்டிலும்  நடந்து போக வேண்டி இருந்தது.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

அந்த நிலையில்   இருந்தால் என்ன செய்வோம்.

அப்பா இப்படி பண்ணி விட்டாரே என்று வருத்தப் படுவோம், பரதனிடம் பேசிப் பார்க்கலாமா என்று  நினைப்போம், பேசாமல் சீதையின் மிதிலாபுரிக்கு போய் விடலாமா  என்று யோசிப்போம் ...

இராமனுக்காவது சரி, தசரதன் தந்தை. அவன் சொல் கேட்க வேண்டியது அவன் கடமை.

சீதைக்கு என்ன வந்தது? பேசாமல் அரண்மனையில் இருந்து இருக்கலாம். அல்லது, நான் என் அப்பா வீட்டுக்குப் போகிறேன் என்று போய் இருக்கலாம்.

அவளும், காட்டுக்கு கிளம்பி விட்டால்.

இரண்டு பேரும் வருத்தப் பட்டார்களா ?

இல்லவே இல்லை.

ஏதோ பிகினிக் போவது போல சந்தோஷமாக போகிறார்கள்.

இராமன், அவளுக்கு கானகத்தில் உள்ளவற்றை காட்டிக் கொண்டே வருகிறான். இருவரும் மகிழ்ச்சியாக அந்த இயற்கையை இரசித்துக் கொண்டே  செல்கிறார்கள்.

பாடல்




மன்றலின் மலி கோதாய்!
     மயில் இயல் மட மானே! -
இன் துயில் வதி கோபத்து
     இனம் விரிவன எங்கும்,
கொன்றைகள் சொரி போதின்
     குப்பைகள், குல மாலைப்
பொன் திணி மணி மானப்
     பொலிவன - பல - காணாய்!

பொருள்

மன்றலின் = மனத்தால்

மலி  = நிறைந்த

கோதாய்! = பெண்ணே

மயில் = மயிலின்

இயல்  = இயல்பை கொண்ட

மட மானே! - = மருண்ட மான் போன்றவளே

இன் துயில் = இனிய தூக்கத்தில்

வதி கோபத்து = இந்திர கோப பூச்சிகள்

இனம் = இனம்

விரிவன எங்கும், = எங்கும் விரிந்து

கொன்றைகள் = கொன்றை மலர்கள்

சொரி போதின் = கொத்து கொத்தாக மலர்ந்து

குப்பைகள் = குவியலாக

குல = சிறந்த

மாலைப் = மாலையில்

பொன் = பொன்னாலான

திணி மணி = மணி பதித்த

 மானப் = அது போல

பொலிவன பல = பலவாறாக பொலிவதை

காணாய்!  = பெண்ணே

கொன்றை மலர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்திர கோப பூச்சி சிவந்த நிறத்தில் இருக்கும்.   தங்க ஆரத்தில், வைரம் பதித்தது போல இருக்கிறது ஏங்கறான் இராமன்.

நடுவில், சீதையின் அழகை புகழ்கிறான்.

பெண்ணின் அழகை புகழ்ந்தால் அவளுக்கு அது ரொம்பப் பிடிக்கும்.

தன் அழகை , கணவன் இரசிக்க வேண்டும் என்று பெண் விரும்புவாள்.

மனம் நிறைந்தவளே , மயில் போன்றவளே , அங்க பாரு கொன்ற மலர்களும், இந்திர கோப பூச்சிகளும் எப்படி இருக்குனு என்று ஏதோ foreign vacation போன மாதிரி  சந்தோஷமாக போகிறார்கள்.

என்ன துன்பம் வந்தாலும்,

கணவனும் மனைவியும் பிரியக் கூடாது. ஒன்றாக இருக்க வேண்டும்.

அவர்கள் அன்பாக இருக்க வேண்டும்.

கணவன் இரசிக்கும் படி மனைவி இருக்க வேண்டும்.

கணவன், அவளை பாராட்டிச் சொல்ல வேண்டும்.

அப்படி இருந்து விட்டால், எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், அதை இன்பமாக மாற்றி விடலாம்


சிக்கல் என்ன என்றால், அந்த இனிமையான கணவன் மனைவி உறவையே துன்பமயமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

பின் எங்கே இயற்கையை இரசிப்பது, அன்பை பகிர்வது, மனைவியை புகழ்வது எல்லாம்?

நாங்கள் என்ன போகப் பொருள்களா? நீங்கள் இரசிக்க நாங்கள் என்ன கடையில் வைத்திருக்கும் பொம்மைகளா  ? என்று பெண்ணிய வாதிகள் கிளம்பி விட்டார்கள். தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

துன்பம் வந்தால், சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று இராமன் வாயிலாக  கம்பன் சொல்லித் தருகிறான்.

படித்துக் கொள்வோமே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_12.html

Sunday, August 11, 2019

சிலப்பதிகாரம் - அரும்பெறற் கணவன்

சிலப்பதிகாரம் - அரும்பெறற் கணவன் 


பெண்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பது சாதாரண ஆண் மகன்களின் அங்காலாய்ப்பாக இருக்கலாம்.

இளங்கோ அடிகள் போன்ற பெரும் புலவர்களுக்கும் அந்த குழப்பம் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

அப்படியும் இருக்கலாம், அல்லது பெண்ணின் இயல்பே அப்படி இருக்கலாம்.

கோவலன் அப்படி ஒன்றும் பெரிய சத்ய சீலன் கிடையாது.

மாசறு பொன்னே, வலம்புரி முத்தே என்று கண்ணகியை கொஞ்சிவிட்டு, மாதவி பின்னால் போனான். பின் மாதவியை விட்டு விட்டு, சொத்தையெல்லாம் தொலைத்து விட்டு, கண்ணகியிடம் வந்தான்.

சிலம்பு இருக்கிறது, அதை வேண்டுமானால் கொண்டு போ என்று கண்ணகி சொல்கிறாள். கோவலன் நாணப்பட்டு, "இல்லை, இந்த சிலம்பை மூலதனமாக வைத்து வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டுவேன்...என்னோடு நீ மதுரைக்கு வா " என்றது கூப்பிட்டான். உடனே கிளம்பி விட்டாள்.

போகிற வழியில், ஒரு வேடர் கூட்டத்தை சந்திக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு பெண், அருள் வந்து, கண்ணகியைப் பற்றி மிக உயர்வாக கூறுகிறாள்.

இங்கே கதையை நிறுத்துவோம்.

தன்னைப் பற்றி புகழ்ந்து பேசியதைக் கேட்ட கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும் ?

சரி என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

அல்லது

அப்படியெல்லாம் இல்லை என்று அடக்கத்தோடு மறுத்து இருக்கலாம்.

கண்ணகி இரண்டையும் செய்யவில்லை.

கோவலன் பின்னால் சென்று மறைந்து நின்று கொண்டு, புன்முறுவல் பூத்தவண்ணம் சொல்ல்கிறாள் "அந்த நிறைந்த அறிவுடைய பெண், மயக்கத்தில் என்னைப் பற்றி ஏதேதோ சொல்கிறாள் " என்கிறாள்.

அந்த இடத்தில், இளங்கோ அடிகள் ஒரு சொல்லை போடுகிறார்.

"அரும் பெறற் கணவன்" என்று கோவலனை கூறுகிறார்.

கோவலன் என்ன அவ்வளவு அருமையான கணவனா ?

கணவன் எப்படி இருந்தாலும், அவனை உயர்ந்தவனாகவே காணும் பண்பு பெண்ணுக்கு இருந்தது என்று சொல்ல வருகிறாரா ? அல்லது அப்படித்தான் இருக்க வேண்டும்  என்று சொல்ல வருகிறாரா?

பாடல்


பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப


பொருள்

பேதுறவு = பேதைமை உற்று

மொழிந்தனள் = கூறினாள்

மூதறி வாட்டியென்று = மூத்த அறிவுடைய பெண் என்று

அரும்பெறற்  = அருமையாகப் பெற்ற

கணவன் = கணவன் (கோவலன்)

பெரும்புறத் தொடுங்கி = பெரிய முதுகின் பின்னால் ஒடுங்கி

விருந்தின் = புதுமையாக , புதிதாக

மூரல் = புன்னகை

அரும்பினள் நிற்ப = அரும்பு விட நின்றாள்


விருந்து என்றால் புதுமை என்று பெயர். வீட்டுக்கு புதிதாக வந்தவர்களை விருந்தினர் என்று   சொல்வோம். அவர், ரொம்ப நாள் தங்கி விட்டால், அவர் விருந்தினர் அல்லர்.

ஆண் எப்படி இருந்தாலும், அவனை சார்ந்தே பெண் வாழ்ந்து வந்தாள் என்று காட்டுகிறார் இளங்கோ.

அது சரியா அல்லது தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும்.

குடும்பத்தில் தவறு செய்பவர்களை என்ன செய்யலாம் ? குடும்பத்தை விட்டு விலக்கி விடலாமா?

சரி தவறு என்று பார்த்துக் கொண்டிருக்க குடும்பம் என்பது என்ன ஒரு நீதி மன்றமா ?

இல்லை, குடும்பத்தில் ஒருவர் தவறு செய்து கொண்டே இருப்பார், அவரை மன்னித்துக் கொண்டே தான்  இருக்க வேண்டுமா ?

என் சிறிய வாசிப்புக்குத் தெரிந்தவரை, தமிழ் இலக்கியம் மன்னிக்கத்தான்  வேண்டும் என்கிறது.

சகித்துப் போகத்தான் வேண்டும் என்கிறது.

கைகேயி போல் ஒரு மனைவி வாய்த்து விட்டால்,, சகித்துத் தான் போக வேண்டும் என்கிறது  இராமாயணம்.

மனைவியை வைத்து சூதாடி தோற்றாலும், அவனை "தர்மன்" என்றே அவன் மனைவியும் தம்பிகளும்  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தயரதன் நினைத்து இருந்தால், கைகேயியை தூக்கி சிறையில் வைத்து இருக்கலாம்.

இராமன் நினைத்து இருந்தால், கைகேயி கேட்ட வரம் என்னைக் கட்டுப் படுத்தாது என்று சொல்லி  கானகம் போகாமல் இருந்திருக்கலாம்.

மனைவி, தாய் எவ்வளவு கொடுமை செய்தாலும், கணவனும் மகனும் சகித்தார்கள் அங்கே.

கோவலன் எவ்வளவு தவறு செய்தாலும், சகித்தாள் கண்ணகி.

பெண் விடுதலை விரும்பிகளுக்கு இரத்தம் கொதிக்கலாம். இப்படி சொல்லி சொல்லியே  பெண்ணை அடிமை படுத்தி விட்டீர்கள் என்று.

அதற்காகத்தான் இராமாயண உதாரணத்தை சொன்னேன். பெண் தவறு செய்தால், ஆண்கள் சகித்தார்கள்.

குடும்பம் என்று இருந்தால், தவறு நிகழத்தான் செய்யும். குற்றம் குறை இருக்கத்தான் செய்யும்.

சகிக்க வேண்டும். கணவன், பரத்தை வீட்டுக்குப் போக கால் சிலம்பை கழட்டிக் கொடுக்கும் வரை  கண்ணகி சகித்தாள்.

பாடம் படிப்பதும், விவாதம் பண்ணுவதும் அவரவர் விருப்பம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_11.html

Thursday, August 8, 2019

திருவருட்பா - கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்

திருவருட்பா - கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் 


ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் நாளும் ஒரே இடத்தில் இருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் இறந்து விட்டான். ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, அந்த பிச்சைக்காரனை, அவன் இருந்து பிச்சை எடுத்த இடத்திலேயே புதைப்பது என்று முடிவு செய்து, அங்கே ஒரு குழி வெட்டினார்கள்.

இரண்டு அடி தோண்டி இருப்பார்கள், "நங்" என்று சத்தம் கேட்டது. தோண்டி எடுத்துக் பார்த்தால், ஒரு பொற்குடம் நிறைய தங்கக் காசுகள்.

பெரிய பொக்கிஷத்தை மேல் அமர்ந்து கொண்டு வாழ் நாள் எல்லாம் பிச்சை எடுத்திருக்கிறான் அவன்.

அவன் மட்டுமா ?

நாமும் தான் என்கிறார் வள்ளலார்.

"இறைவா, தேவர்கள் எல்லாம் ஏங்க , அவர்களை விட்டு விட்டு நீ வந்து என் மனதில் இருந்து கொண்டாய். மனம் எல்லாம் கள்ளம் நிறைந்த நான் அதை அறியாமல் துன்பத்தில் கிடந்து உழல்கின்றேன்"

என்கிறார்.



வெள்ளிக் குடத்தில் தங்கக் காசுகளை விட, உள்ளத்தில் உள்ள இறைவன் உயர்வு அல்லவா. அது தெரியாமல், பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

Lion King படத்தில் வரும் சிம்பா போல, தான் ஒரு காட்டுக்கு அரசன் என்று தெரியாமல், பன்றியுடன் சுத்திக் கொண்டிருக்கும் சிங்கம் போல, இறைவன் உள்ளே இருப்பதைத் தெரியாமல், பன்றிகளோடு சுத்திக் கொண்டிருக்கிறோம்.

காரணம் என்ன?

தான் யார் என்று அறிய நினைக்காமல், ஊரில் உள்ளவர்கள் சொல்வதை  கேட்டுக் கொண்டு அதன் படி   செய்வது.

அந்தப் படத்தில் ரஃபிக் என்று ஒரு குரங்கு வந்து சொல்லும்..."சிம்பா நீ யார் தெரியுமா " என்று. அப்படி வரும் ஆச்சாரியர்களை துணை கொண்டு, அவர்கள் சொல்வதைக் கேட்டு, நாம் யார் என்று அறிய வேண்டும்.

"தன் பெருமை தான் அறியா சங்கரனார்" போல, நம் பெருமை அறியாமல் உழல்கிறோம்.

பாடல்

விண்ணறாது வாழ் வேந்த னாதியர் 
        வேண்டி யேங்கவும் விட்டென் னெஞ்சகக் 
    கண்ணறாது நீ கலந்து நிற்பதைக் 
        கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் 
    எண்ணறாத் துயர்க் கடலுண் மூழ்கியே 
        இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் 
    தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ் 
        சாமியே திருத்தணிகை நாதனே 

பொருள்


விண்ணறாது = விண்ணில் இருக்காமல்

வாழ் = அங்கே வாழ்கின்ற

வேந்த னாதியர்  = இந்திரன் மற்றும் தேவர்கள்

வேண்டி யேங்கவும் = வேண்டி ஏங்கவும்

விட்டென்= (அவர்களை) விட்டு என்

னெஞ்சகக்  = நெஞ்சு அகத்தில்

கண்ணறாது = கண் இமைக்கும் நேரம் கூட இடைவெளி இல்லாமல்

நீ கலந்து நிற்பதைக்  = நீ என்னுள் கலந்து நிற்பதை

கள்ள நாயினேன் = கள்ளத்தனம் நிறைந்த நாய் போன்ற  நான்

கண்டு கொண்டிலேன் = கண்டு கொள்ளவில்லை

எண்ணறாத் = எண்ணில் அடங்காத

துயர்க் கடலுண் மூழ்கியே  = துயரக் கடலுழ் மூழ்கி

இயங்கி = இயங்கி, செயல் பட்டு

மாழ்குவேன் = மாளுவேன்

யாது செய்குவேன்  = என்ன செய்வேன் ?

தண்ணறாப்  = தணல்  ஆற

பொழில் குலவும் = சோலைகள் சூழும்

போரிவாழ்  = திருப்போரில் வாழும்

சாமியே  = சாமியே (முருகப் பெருமானே)

திருத்தணிகை நாதனே  = திருத்தணிகையின் தலைவனே

நமக்குள் உள்ள ஆற்றலை நாம் அறிந்து  கொள்ள முடியாமல் இருக்கக் காரணம், கள்ளத்தனம்.

பொய், சூது, வாது, ஆணவம், போன்ற கள்ளத்தனங்கள் நம்மை , நம்முடைய உண்மையான   நிலையை அறிய விடாமல் தடுக்கின்றன.


இதையேதான் மணிவாசகரும் சொல்கிறார்

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்று சிவபுராணத்தில்.


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே'

உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம் , வாய் கோபுர வாசல் என்பார் திருமூலர்

"நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்" என்பார் சிவ வாக்கியார்


நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ


சிந்திப்போம்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_8.html 

Wednesday, August 7, 2019

நன்னூல் - எப்படி பேச மற்றும் எழுத வேண்டும்

நன்னூல்  - எப்படி பேச மற்றும் எழுத வேண்டும் 



எப்படி பேச வேண்டும் தெரியுமா?

அட, இது தெரியாமலா இத்தனை வருடம் பேசிக் கொண்டிருக்கிறோம். நல்லா தெரியுமே, விட்டா நாள் கணக்கா பேசுவேனே என்று பலர் நினைக்கலாம்.

பேசுவது, எழுதுவது, உணர்ச்சிகளை, செய்திகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை.

நமக்கு வரும் பல சிக்கல்களுக்கு காரணம் நமக்கு எப்படி பேசுவது என்று தெரியாமல் இருப்பதுதான்.

நன்னூல்  நமக்கு பாடம் சொல்லித் தருகிறது.

நாம், நம் மனதில் உள்ளவற்றை வெளிப் படுத்தும் போது, அதில் உள்ள குறைகள் என்ன என்று பட்டியல் போட்டு அவற்றை விலக்க வேண்டும் என்று கூறுகிறது.

நன்னூல் கூறியது என்னவோ எழுத்தில் வரும் குற்றம் பற்றித்தான் என்றாலும், அதை நாம் நீட்டித்து பேச்சில் வரும் குற்றத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை அறிந்த பின், அடுத்த முறை நீங்கள் டிவி பார்க்கும் போது கவனியுங்கள், அதில் எவ்வளவு குற்றம் இருக்கிறது என்று தெரியும்.

பத்துவிதமான குற்றங்களை நன்னூல் பட்டியல் போடுகிறது.

பத்துதானா என்று கேட்டால், இல்லை. அதற்கு மேலேயும் இருக்கும். பெரிய குற்றங்களை  அது எடுத்துச் சொல்கிறது. இவற்றை நீக்கினாலே பெருமளவு குற்றங்கள் குறைந்து விடும். மற்றவற்றை நாமே சரி செய்து கொள்ளலாம்.

இன்று நம்மில் பலர் அலுவலக விஷயமாக பல presentation (ppt) செய்ய வேண்டி வரும், பல விதமான ரிப்போர்ட் கள் அனுப்ப வேண்டி இருக்கலாம், பல விதமான கடிதங்கள் எழுத வேண்டி இருக்கலாம், இப்படி எழுத்து என்று எங்கு வந்துவிட்டாலும், நன்னூல் சொல்லும் குற்றங்களை களைந்து எழுதப் பழகிவிட்டால் அது நன்றாக இருக்கும்.


அது என்ன பத்து குற்றங்கள்?

பாடல்

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொ்ற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை
என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே


பொருள்


குன்றக் கூறல் = குறைத்துக் கூறுவது. எதையும் முழுவதுமாக சொல்லுவது இல்லை. அரைகுறையாக சொல்லுவது. இது முதல் குற்றம். சொல்லுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ முன் சிந்திக்க வேண்டும். என்ன சொல்லப் போகிறோம், என்று சிந்தித்தது. கேட்பவர்களுக்கு முழுமையாக புரிய வேண்டும்.

மிகைபடக் கூறல் = வள வள என்று தேவைக்கு அதிகமாக கூறுவது. பத்து நிமிடத்தில் சொல்ல வேண்டியதை அரை மணி நேரம் இழுப்பது. நேரம் மட்டும் அல்ல, விளைவுகளை மிகைப் படுத்திக் கூறுவது. அந்த ஷேர் இல் போட்டால்  30  percent வருமானம் கிடைக்கும் என்று மிகைப் பட கூறுவது. நாலு நாள்  ஆகும் என்றால், "ஒரே நாளில் செய்து விடுவேன்" என்று மிகையாகக் கூறுவது.



கூறியது கூறல் = சொன்னதையே திருப்பி திருப்பி கூறுவது. ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு புதிய செய்தி இருக்க வேண்டும்.


மாறுகொளக் கூறல் = முன்னுக்கு பின் முரணாக கூறுவது.  "அந்தப் பொண்ணை உன் மகனுக்குப் பார்க்கலாம். நல்ல பொண்ணு தான். ஆனா, அக்கம் பக்கத்தில ஒரு மாதிரி பேசிக்கிறாங்க". இப்படி சொன்னால் என்ன அர்த்தம். பொண்ணு நல்ல பொண்ணா இல்லையானு குழப்பம் வரும் இல்லையா.



வழூஉச்சொ்ற் புணர்த்தல் = தவறான சொற்களை சேர்த்துச் சொல்லுவது. சிறந்த சொற்களை தேர்ந்து எடுத்து பேச/எழுத வேண்டும். சில சமயம் சொற்கள் நல்லவையாக இருக்கும் ஆனால், உபயோகப் படுத்திய விதம் தவறாக இருக்கும்.  எந்த சூழ்நிலையில் , எந்த சொல்லை சொல்ல வேண்டும் என்று யோசித்து சொல்ல வேண்டும்.



மயங்க வைத்தல் = கேட்பவர்களை குழம்ப வைப்பது. தெளிவு பிறக்கும் படி பேச வேண்டும். "நல்லாத்தான் சொன்னாரு, ஆனா என்ன சொன்னாருனே விளங்கல" அப்படினு மத்தவங்க சொல்லக் கூடாது.

வெற்றெனத் தொடுத்தல் = சொல்ல வந்த செய்திக்குப் பொருந்தாத வெற்று , ஆடம்பர சொற்களை பயன் படுத்துதல். சில அரசியல்வாதிகள் பேசுவதை கேட்டிருக்கலாம். ஆடம்பரமாக இருக்கும் அவர்கள் பேசுவது. ஆனா, சொல்ல வேண்டிய விஷயம்  இருக்காது அந்தப் பேச்சில்.

மற்றொன்று விரித்தல் = சொல்லவந்ததை விட்டு விட்டு மற்றொன்றைப் பற்றி சொல்லுவது. சொல்ல வந்ததை விட்டு விலகக் கூடாது.


சென்றுதேய்ந் திறுதல் = சிலர் ஆரம்பத்தில் நல்லா ஆரம்பிப்பார்கள். ஆனா, போக போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையா எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிப்பார்கள். சொல்ல வந்ததில் முழு கவனம் இருக்க வேண்டும். கேட்பவர்கள் கொட்டாவி விடக் கூடாது. சுவாரசியம் குன்றாமல் சொல்ல வேண்டும்.

 நின்றுபயன் இன்மை = பயன் இல்லாத சொற்களை பேசக்  கூடாது. கேட்பவரின், வாசிப்பவரின் நேரம் பொன் போன்றது. அதை வீணடிக்கக் கூடாது.

என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே = என்ற இவை பத்து (இரண்டு ஐந்து) குற்றம் நூலுக்கே

அலுவலகத்தில் நீங்கள் எழுதும் ஒவ்வொரு ஈமெயில், ரிப்போர்ட், பவர்பாயிண்ட் presentation எல்லாம் இந்த குற்றம் இல்லாம ல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு checklist மாதிரி போட்டு வைத்துக் கொள்ளுங்கள். எழுதி முடித்தபின், இந்த குற்றங்கள் இருக்கிறதா என்று சரி பாருங்கள்.  இருந்தால் அவற்றை களையுங்கள் .

முக்கியமாக, பிள்ளைகளுக்கு சொல்லித் தாருங்கள்.

எந்தப் பள்ளியில் நன்னூல் சொல்லித் தரப் போகிறார்கள் ? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தான்   சொல்லித் தர வேண்டும்.

அவர்களுக்கு நன்னூலில் ஆர்வம் உண்டாக்குங்கள்.

நன்னூலில் இப்படி பல நல்ல கருத்துள்ள பாடல்கள் இருக்கின்றன.

மூல நூலை தேடிப்  படியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_7.html

Tuesday, August 6, 2019

சகலகலாவல்லி மாலை - பாடும் பணியில் பணித்தருள்வாய்

சகலகலாவல்லி மாலை - பாடும் பணியில் பணித்தருள்வாய் 


கொஞ்சம் ஆசை உள்ளவர்கள், இறைவனிடம், காசு பணம் கேட்பார்கள், வீடு வாசல், நகை, நட்டு, பிள்ளைக்கு வேலை, பெண்ணுக்கு வரன், உடல் நலம் என்று கேட்பார்கள்.

பேராசை கொண்டவர்கள், பெரிதாக கேட்பார்கள், சுவர்க்கம், இறைவன் திருவடி, வைகுண்டம், கைலாயம், மறு பிறப்பு இன்மை என்று பெரிதாக கேட்பார்கள்.

எல்லாம் ஆசைதானே. எதையாவது வேண்டும் என்று கேட்பது. கேட்கும் பொருள் தான் மாறுகிறதே தவிர, கேட்பது என்பது அப்படியே இருக்கிறது.

இதில் சுவர்க்கம் கேட்பவர்கள், பணம் மற்றும் புகழ் போன்றவற்றை கேட்பவர்களை பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். என்ன, கடவுள் கிட்ட போய் இந்த மாதிரி அற்ப பொருள்களை கேட்கிறாயே என்று.

அஞ்சு பத்துனு கேட்காதே, ஆயிரம் இரண்டாயிரம்னு கேளு என்று ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு சொல்லித் தருகிறான்.  பெரிய பிச்சைகாரன், சின்ன பிச்சைக்காரன்.

இதுதானே நடக்கிறது.

ஞானிகள் தங்களுக்கு என்று எதையும் கேட்பது இல்லை.

குமர குருபரர், தனக்கு என்று வேண்டும் என்று ஒன்றும் கேட்கவில்லை. அப்படி ஒரு வேண்டுதல்.

எனக்கு நல்ல வேலை செய்ய அருள் செய் என்று வேண்டுகிறார். சம்பளம் தா, பதவி உயர்வு தா, என்றெல்லாம்  கேட்கவில்லை.

நல்ல வேலை செய்ய அருள் செய் என்று வேண்டுகிறார்.

எனக்கு பாட்டு எழுத வரும். எனவே, நிறைய நல்ல பாட்டுக்கள் எழுத அருள் செய் என்று வேண்டுகிறார். பாட்டின் மூலம் எனக்கு நிறைய பொன் கிடைக்க வேண்டும், ஆஸ்கார் விருது வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை.

மக்களுக்கு நல்ல பாட்டை தர அருள் புரிவாய் ...


பாடல்

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் 
காடுஞ் சுமக்குங் கரும்பே சகலகலாவல்லியே. 

பொருள் 

நாடும் = அனைவரும் விரும்பும்

பொருட்சுவை  = பொருள் சுவை

சொற்சுவை = சொல் சுவை

தோய்தர = தோய்த்துத் தர

நாற்கவியும் = நான்கு விதமான கவிதைகளும்

பாடும் = பாடுகின்ற

பணியிற் = வேலையில்

பணித்தருள் வாய் = என்னை பணித்து அருள் செய்வாய்

பங்க யாசனத்திற் = தாமரை மலராகிய ஆசனத்தில்

கூடும் = சேர்ந்து இருக்கும்

பசும்பொற் கொடியே = பசுமையான பொற் கொடி போன்றவளே

கனதனக் குன்று = தங்க மலை போன்ற மார்பும்

மைம்பாற் = ஐம்பால், ஐந்து விதமாக வகிடு எடுத்து செய்யும்

காடுஞ் = காடு போல் அடர்ந்த கூந்தலை

சுமக்குங் = சுமக்கும்

கரும்பே = கரும்பு போல தித்திப்பவளே

சகலகலாவல்லியே.  = அனைத்து கலைகளிலும் வல்லவளே

அறிஞர்கள் பிறருக்கு தங்கள் திறமையை கொடுக்கவே வரம் கேட்பார்கள்.

"ஆடும் மயில் வேல் அணி சேவல் என 
பாடும் பணியே பணியாய் அருள்வாய் 
தேடும் கய மா முகனை செருவில் 
சாடும் தனி யானைச் சகோதரனே "

என்பார் அருணகிரிநாதர்.

பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்பது அவர் வேண்டுதல்.

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் 
இன்ப நிலை தானே எய்திடும் பராபரமே 

என்பார் தாயுமானவ சுவாமிகள்

அடுத்த முறை வேண்டும் போது , அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டாமல் , எதை சிறப்பாக மற்றவர்களுக்கு செய்யலாம் என்று சிந்தித்து அதைக் கேட்டால் என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_6.html