முத்தொள்ளாயிரம் - காணிய சென்று கதவுஅடைத்தேன்
ஒருவரிடம் சென்று உதவி கேட்பது என்றால் உடம்பு கூசித்தான் போகிறது.
நமக்கு கூசுவது இருக்கட்டும், உலகளந்த பெருமாளே மூன்றடி மண் கேட்க வாமன உருவமாய் குறுகித்தானே போனார். நாம் எம்மாத்திரம்.
ஒரு பக்கம் பணத்தேவை. வறுமை. குடும்பம் பசியால் தவிக்கிறது. உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.
இருந்தாலும், மானம் தடுக்கிறது. இப்படி ஒரு நிலைமை நமக்கு வந்து விட்டதே இரக்கம் மேலிடுகிறது.
வறுமை வாய்ப்பட்டவன் இரண்டுக்கும் நடுவில் கிடந்து உழல்வான்.
இது எப்படி இருக்கிறது என்றால், பெண் ஆசைக்கும், நாணத்துக்கும் நடுவில் கிடந்து தவிப்பதைப் போல இருக்கிறது என்கிறார் கவிஞர்.
வறுமைக்கு காதலை உதாரணம் காட்டுகிறார்.
அவள் ஒரு இளம் பெண். சேர மன்னன் மேல் காதல் கொண்டாள். சேரன் வீதி உலா வரும்போது அவனை காண நினைத்தாள். வாசல் வரை சென்றாள். நாணம் மேலிட. சீ சீ...நான் போய் எப்படி அவனைப் பார்ப்பது என்று வெட்கப்பட்டு கதவை சாத்திவிட்டு வந்து விட்டாள்.
பார்க்கவே இல்லை. அவ்வளவு நாணம், வெட்கம்.
உதவி கேட்பதா வேண்டாமா என்று தவிக்கும் ஒரு ஏழையைப் போல, சேரனை பார்ப்பதா வேண்டாமா என்று அவள் தவிக்கிறாள்.
பாடல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவுஅடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு.
பொருள்
ஆய்மணிப் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட
பைம் = பசுமையான, இங்கே புதிய
பூண் = பூண் பொதிந்த ஆபரணம்
அலங்கு = ஆடும்
தார்க் = மாலை
கோதையைக் = அணிந்த அரசனை (கோ = அரசன்)
காணிய = காண்பதற்கு
சென்று = சென்று
கதவுஅடைத்தேன் = கதவை அடைத்தேன்
நாணிப் = நாணத்தால்
பெருஞ்செல்வர் = பெரிய செல்வர்
இல்லத்து = வீட்டில்
நல்கூர்ந்தார் = ஏழை
போல = போல
வரும் = வரும்
செல்லும் = செல்லும்
பேரும் = நகரும்
என் நெஞ்சு= என் மனம்
எளிய தமிழ். மனித மனத்தின் உணர்ச்சிகளை தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கும் பாடல்.
நல்லா இருக்குல ?
https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆஹா அருமை ...
ReplyDeleteஇதெல்லாம் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னைய பாடல், அனால் இன்றும் நம் கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சி போல இருக்கிறது. அற்புதம்! நன்றி.
ReplyDelete