Friday, August 23, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூனே சிதைய 


இரத்த அழுத்தம் கூடிவிட்டது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி விட்டது. உடல் எடை கூடிவிட்டது. மருத்துவர் தினமும் உடற் பயிற்சி செய்யச் சொல்கிறார். உணவு கட்டுப்பாடு வேண்டும் என்கிறார்.

உடற் பயிற்சி செய்தால் உடம்பெல்லாம் வலிக்கிறது. மூச்சு வாங்குகிறது. முட்டு வலிக்கிறது. வேர்த்து விருவிருத்து உடம்பெல்லாம் கசகச என்று வியர்வை உப்பு எரிச்சல் தருகிறது.

போதா குறைக்கு அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே என்று கட்டுப்பாடு வேறு.

வாழ்க்கையே வெறுத்துப் போகிறது.

என்ன மருத்துவர் இவர். மனுஷனை பாடாய் படுத்துகிறாரே என்று அவர் மேல் கோபம் வருகிறது. ஒரு மருந்து மாத்திரை கொடுத்து சரி செய்யக் கூடாதா. மனுஷனை இப்படியா போட்டு வறுத்து எடுப்பது என்று எரிச்சலும் கோபமும் வருகிறது.

ஒருவழியாக ஒரு ஆறு மாதம் இதை எல்லாம் செய்து வந்த போது , உடல் இளைத்து, சர்க்கரை அளவு குறைந்து, இப்போது மிக சுகமாக இருக்கிறது.

ஆறுமாதம் துன்பம்தான். கோபம்தான். எரிச்சல்தான்.

முடிவு, இன்பம்.

அது போல, வாழ்வில் சில சமயம் துன்பம் வரும். சோகம் வரும். ஏமாற்றம் வரும்.  இந்த கடவுளுக்கு என் மேல் கருணையே இல்லையா என்று கோபம் வரும்.

சிந்திக்க வேண்டும்.

இராமன் கூனியின் மேல் மண் உருண்டையை வைத்து அம்பால் அடித்தான்.

அது அவளை கேலி செய்யவோ, துன்புறுத்தவோ இல்லையாம்.

நம்மாழ்வார் சொல்கிறார், "அது அவளின் கூன் நிமிரும் பொருட்டு இராமன் செய்த வேலை" என்று.

கூனிக்கு அது அவமானமாகப் பட்டது. இராமன் மேல் கோபம் கொண்டாள். அவனை பழி தீர்க்க வேண்டும் எண்ணினாள் .

இராமன் செய்ததோ, அவளுக்கு உதவி.  அவளின் அறிவு எட்டவில்லை.

துன்பம் வரும் போது, இந்த துன்பம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் உயர்த்தும் என்று நினைக்க வேண்டும்.

துன்பத்தைப் பொறுப்பதுவே தவம் என்பார் வள்ளுவப் பெருந்தகை.

பாடல்

மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய். மாதவா.*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*
வானார் சோதி மணிவண்ணா.* மதுசூதா. நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே

பொருள்

மானேய் = மான் போன்ற

நோக்கி  = கண்களை உடைய

மடவாளை = திருமகளை

மார்வில் = மார்பில்

கொண்டாய். = கொண்டாய்

மாதவா = மாதவா

கூனே சிதைய = கூன் அற்றுப் போகும்படி

உண்டைவில் = உண்டை வில்லால்

 நிறத்தில் = வடிவில்

தெறித்தாய் = எறிந்தாய், அம்பு விட்டாய்

கோவிந்தா. = கோவிந்தா

வானார்  = தேவர்களுக்கு

சோதி  = ஜோதி

மணிவண்ணா. = வடிவான மணி வண்ணா

மதுசூதா = மதுசூதனா

நீ அருளாய் = நீ அருள் செய்வாய்

உன் = உன்னுடைய

தேனே  = தேன்

மலரும் = சொரியும்

திருப்பாதம் = திருப்பாதங்களை

சேருமாறு = வந்து அடையுமாறு

வினையேனே = வினை கொண்ட என்னை


சற்று ஆழமாக சிந்திக்க சில விஷயங்கள்.

முதலில், துன்பம் வரும்போது, அது துன்பம் மட்டும் அல்ல. ஒரு வேளை நம்மை உயர்த்த வந்த  சோதனை என்று நாம் சிந்திக்கப் பழகிவிட்டால், துன்பம் பெரிதாகத் தெரியாது.  நன்றாக படிக்கும் மாணவனை ஆசிரியர் தேர்வு எழுத வைத்து சோதனை செய்வது போல. தேர்வு கடினம் தான். அதற்காக ஆசிரியரை கல்லால் அடிப்பதா?

இரண்டாவது, உண்டி வில் அடித்தது இராமன். நம்மாழ்வாருக்கு இராமன் மேல் குற்றம் சொல்ல  மனம் வரவில்லை. கிருஷ்ணன் மேல் பல குற்றங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாக, இந்த குற்றத்தையும் கிருஷ்ணன் மேல் சுமத்தி விடுகிறார் ஆழ்வார்.

"கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*"

கோவிந்தன் இங்கே எங்கே வந்தான். அது அடுத்த அவதாரம். இராமனை அப்பழுக்கற்ற  அவதாரமாக காட்ட விழைகிறார் ஆழ்வார்.

மூன்றாவது, எனக்கு அருள் செய் என்று அவர் கேட்பது, பணம் காசு இல்லை. உன் திருவடிகளை அடைய எனக்கு அருள் செய் என்கிறார்.   ஏன், அவருக்குத் தெரியாதா ? போய் சரண் அடைய வேண்டியதுதானே? அதுக்கு எதுக்கு அருள்?

நமக்குத்தான் தெரியும். இந்த உலகம் நிரந்தரம் இல்லை. செல்வம் நிரந்தரம் இல்லை.  வாழ்நாள் கொஞ்ச நாள் தான் என்று. இறைவனை அடைய வேண்டும் அல்லது உண்மையை கண்டறிய வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம்.

முடிகிறதா ?  ஏதோ ஒரு வேலை. முனைப்பு. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுகிறோம்.

அவன் அருள் இருந்தால் ஒழிய அவனை அடைய முடியாது என்பது ஆன்றோர் வாக்கு.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர்.

பொய் என்று தெரிந்தும் அவற்றின் பின் போய் கொண்டிருக்கிறோம்.

விட முடிவதில்லை.

பாசம் ஒரு புறம். ஆசை ஒரு புறம்.

நம்மால் விட முடியாது. அதுவாகப் போனால் தான் உண்டு. அது எப்படி போகும்.

"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி" என்பதும் மணிவாசகம்.

அவை போவதற்கு எனக்கு அருள் புரி என்று வேண்டுகிறார்.

இன்னமும் விரித்துச் சொல்லலாம். "ரொம்ப பெருசா இருக்கு...நேரம் இல்லை...அப்புறம் படிக்கலாம் " என்று படிக்காமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சி, சுருக்கமாக சொல்லி பலவற்றை விட்டு விடுகிறேன்.

பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

நாக்கில் தேன் தித்திக்கும். மனதுக்குள் எங்கேயோ சில அழுக்குகள் விலகுவது தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_97.html

1 comment:

  1. இவ்வளவு அறிவு உள்ள இராமனுக்கு முதலிலேயே, "உன் கூனை நிமிர்த்துவதற்காகத்தான் வில்லால் அடிக்கிறேன்" என்று சொல்லத் தெரியவில்லையா?!!!!!

    அடித்த பிறகு அதற்குச் சப்பைக்கட்டு கட்டுவதற்குப் பாடல் வேறு!

    ReplyDelete