கம்ப இராமாயணம் - திரிந்த பாற்கடல்
நல்ல குணங்கள் எவ்வளவு இருந்தாலும், ஒரே ஒரு கெட்ட குணம் இருந்தால் அந்த கெட்ட குணம் எல்லா நல்ல குணங்களையும் அழித்து விடும்.
பால் எவ்வளவு இருந்தாலும், அதில் ஒரு துளி தயிரை விட்டால் அது திரிந்து போகும்.
அது போல, இராவணின் அளவற்ற வரங்கள் என்னும் பாற்க் கடலில், சீதை என்ற ஒரு துளி பட்டதும் அது திரிந்து போயிற்று என்று புலம்புகிறாள் மண்டோதரி இந்தப் பாடலில்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் முன் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல்,
தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;
திரை கடையிட்டு அளப்ப அரிய வரம்
என்னும் பாற்கடலைச் சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ,
தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?
-------------------------------------------------------------------------------------------------------------
அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் = இராவணன் அறிய பெரிய தவங்கள் செய்து சிவனிடம் மூன்றரை கோடி ஆயுள் பெற்றான். முக்கோடி என்றால் (1000000000000000000000 ). ஒண்ணு போட்டு அதற்கு பக்கத்தில் 21 பூஜியங்கள். இவ்வளவு ஆயுசு இருந்தால் இவன் எல்லோரையும் ரொம்ப படுத்துவான் என்று உணர்ந்த திருமால், முனிவன் வடிவில் சென்று "மூன்றரை கோடி என்பது கொஞ்சம் அரை குறையாய் இருக்கிறது. அது என்ன அரை கோடி? பேசாமல் இன்னொரு அரை கோடி கேட்டு வாங்கிக்கொள், மொத்தம் நாலு கோடியாய் இருக்கட்டும் என்றார். 'முன்னம் பெற்ற மூன்றரை கோடி ஒழிய அரை கோடி வேண்டும்" என கேட்டுப் பெற்றான். அவன் கேட்ட படியே, முதலில் பெற்ற மூன்றரை கோடி அழிந்து வெறும் அரைக் கோடி தான் நின்றது.
அந்த அரைக் கோடி வாழ் நாளும் கடை பட்டு போனது சீதையால்.
முன் அறிஞர்க்கேயும் உரை கடையிட்டு = அறிஞர்கள் எல்லாம் கூடி அவன் ஆற்றலை சொல்லப் புகுந்தாலும் சொல்ல முடியாத அளவுக்கு (உரை கடை இட்டு).
அளப்ப அரிய பேர் ஆற்றல் = அளக்க முடியாத அளவுக்கு பெரிய ஆற்றல்
தோள் ஆற்றற்கு = தோளின் ஆற்றலுக்கு
உலப்போ இல்லை; = அழிவே இல்லை
திரை கடையிட்டு = திரை என்றால் அலை. அலையை எல்லையாகக் கொண்ட
அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் = அளக்க முடியாத நீ (இராவணன்) பெற்ற பாற்கடல் போன்ற வரங்களை
சீதை என்னும் = சீதை என்ற
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ = பாலுக்கு பிரை குத்திய மாதிரி, அந்த பாற்கடல் போன்ற வாரங்களுக்கு சீதை என்ற பிரை இட்டதால் அழிந்து போவதனை அறிவேனோ?
தவப் பயனின் பெருமை பார்ப்பேன்? = நீ செய்த தவங்களின் பெருமையை மட்டுமே எண்ணி இருந்து விட்டேன். உன் தவறும் குறையும் அதை அழிக்கும் என்பதை அறியவில்லை என்பது பொருள்.
மிக அருமையான பாடல். ராவனனின் இந்தக் கதை எனக்கு இதற்கு முன்பு தெரியவில்லை. ஆனால் ஏளிதில் புரியாத சொற்கள். விளக்கியதற்கு நன்றி. பாலும் தயிரும் உதாரணமும் அருமை.
ReplyDelete