Sunday, April 8, 2012

கம்ப இராமாயணம் - கை நடுங்கிய இராமன்


இராமயணத்தை படிக்கும் போது கம்பனுக்கு கும்பகர்ணன் மேல் ஒரு தனிப் பாசம் இருப்பதாகவே தோன்றுகிறது.

கும்பகர்ணனிடம் போரிட்டு அனுமன் விலகி சென்று விட்டான்.

இராமன் கும்பகர்ணனின் கை இரண்டையும் அறுத்தான், பின் கால் இரண்டையும் அறுத்தான்.

அப்போதும் கும்ப கர்ணன் மிக வீரமாக போரிடுகிறான். கையும் காலும் இல்லாமல் எப்படி போரிடுவது ?

வாயால்,பெரிய கற்களை கவ்வி, அதை நாக்கால் வேகமாக துப்பி வானர சேனைகளை வாட்டி வதைக்கிறான்.

அந்த வீரத்தை கண்டு இராமனின் கையும் நடுங்கியதாம். இதை விட கும்ப கர்ணனின் வீரத்திற்கு சிறப்பு சேர்க்க முடியுமா ?

இதோ அந்தப் பாடல்.....


---------------------------------------------------------------------------------------------------------
தீயினால் செய்த கண்ணுடையான் எழும் சிகையினால் திசை தீய

வேயினால் திணிவெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி

பேயின் ஆர்ப்புடைப் பெருங்களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும்

வாயினால் செலவீசினன் வள்ளலும் மலர்க்கை விதிர்ப்புற்றான்.

--------------------------------------------------------------------------------------------------------

தீயினால் செய்த கண்ணுடையான் - கும்ப கர்ணனின் கண்ணில் இருந்து தீ பறக்றது - அவன் கண்ணே தீயால் செய்த மாதிரி இருக்கிறதாம்.

எழும் சிகையினால் = அவன் இங்கும் அங்கும் தலையை திருப்பி திருப்பி பார்க்கிறான், இங்கும் அங்கும் குதிக்கிறான் அதனால் அவன் முடி எழுந்து எழுந்து அலைகிறது

திசை தீய - அப்படி வேகமாக முடி அசையும் போது தீப் பறக்கிறது. அதனால் திசைகள் எல்லாம் தீகின்றன

வேயினால் = மூங்கில்கள்

திணிவெற்பு = அடர்ந்த மலை (வெற்பு என்றால் மலை)

நாவினால் = நாக்கினால்

விசும்புற = வானம் வரை (விசும்பு = வானம்)

வளைத்து ஏந்தி - வானம் வரை தூக்கி

பேயின் ஆர்ப்புடைப் = பேய்கள் ஆர்பரிக்கும்

பெருங்களம் எரிந்து - பெரிய போர்க் களத்தில் எரிந்து

எழ = எழும்படி

பிலம் = குகை

திறந்தது போலும் - திறந்தது போலும்

வள்ளலும் = இராமனும்

மலர்க்கை = தன்னுடைய மலர்போன்ற கைகளும்

விதிர்ப்புற்றான் = நடுக்கம் கொண்டான்

இராமனே நடுங்கும் படி இருந்தது என்பது கொஞ்சம் உயர்வு நவிற்சி தான் என்றாலும், நன்றாக இருக்கிறது அல்லவா ?

அப்படி மூக்கு இழந்து, காது இழந்து, கை இரண்டும் கால் இரண்டும் இழந்து, இரத்தம் பீறிட போர்க் களத்தில் சாகும் தருவாயிலும் என்ன நினைக்கிறான் தெரியுமா ?


1 comment:

  1. Fantastic. You missed out on translating three words (vayinal sela veesinan) by mistake.

    ReplyDelete