கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்
சீதை தீயில் இறங்கிய உடன், அவள் கற்பின் சூடு தாங்காமல் அக்னி தேவன் அவளை கொணர்ந்து இராமனிடம் தந்து, இவள் கற்பில் சிறந்தவள் என்று சொல்கிறான்.
அப்போது இராமன் சீதையிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. "தெரியாமல் உன் கற்பை சந்தேகப் பட்டேன்" என்றோ "உலகுக்கு உன் கற்பை நிரூபிக்க தான் அப்படி செய்தேன்" என்றோ ஒன்னும் சொல்லவில்லை.
அவள் அருகில் வருகிறான். அக்னி தேவனைப் பார்த்து சொல்கிறான்....
அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, ''யாதும் ஓர்
பழிப்பு இலள்'' என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள்' என்றனன் - கருணை உள்ளத்தான்.
அழிப்பு இல = அழிக்க முடியாத
சான்று நீ = சாட்சி நீ (அக்னி சாட்சி)
உலகுக்கு = இந்த உலகத்துக்கு
ஆதலால் = ஆதலால்
இழிப்பு இல சொல்லி = இவளைப் பற்றி நீ ஒன்றும் இழிவாக சொல்லவில்லை
நீ இவளை = நீ இந்த சீதையை
'யாதும் ஓர் பழிப்பு இலள்'' என்றனை = எந்த ஒரு பழியும் இல்லாதவள் என்றனை
பழியும் இன்று = (எனவே) இவளிடத்தில் ஒரு பழியும் இல்லை
இனிக் கழிப்பிலள் = இனி இவள் கழிக்க தக்கவள் அல்லள்
என்றனன் = என்று இராமன் கூறினான்
கருணை உள்ளத்தான் = கருணை உள்ளம் கொண்டவன்
அக்னி சொன்னதால் சீதையை ஒப்புக்கொள்வதாக இராமன் சொல்கிறானா?! ஏன் சீதையிடம் நேரடியாகப் பேசவில்லை?! சுவாரசியமான கேள்வி!
ReplyDeleteஏன் பேசவில்லை ? பேச மட்டும் இல்லை, அவளை நா கூசும் படி திட்டுகிறான். சீதையும், நொந்து போய் பதில் சொல்கிறாள்.
Delete