திரு அருட்பா - கடவுளின் சுவை
கடவுள் எப்படி இருப்பாரு ? கறுப்பா ? சிவப்பா ? ஒல்லியா ? குண்டா ? உயரமா ? குள்ளமா ?
கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
குழந்தைகள் எதையாவது எடுத்தால் உடனே வாயில் வைத்து சுவைத்துப் பார்க்கும். பார்த்து அறிவது, தொட்டு அறிவது. சுவைத்து அறிவது.
இங்கு வள்ளலார் இறைவனின் சுவை
பற்றி கூறுகிறார்.....
தனித்தனிமுக் கனிபிழிந்து
வடித்தொன்றாக் கூட்டிச்
சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக்
கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும்
தெங்கின்
தனிப்பாலும் சேர்த்தொருதீம்
பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின்
இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும்
இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத்
தரசே !
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந்
தருளே
---------------------------------------------------------------------------------------
தனித்தனிமுக் கனிபிழிந்து = தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து
வடித்தொன்றாக் கூட்டிச் = அந்தப் பழச் சாற்றை வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து
சருக்கரையும் = கொஞ்சம் சர்க்கரை
கற்கண்டின் பொடியு = கொஞ்சம் கற்கண்டின் பொடி
மிகக் கலந்தே = நன்றாக கலந்து.
தனித்தநறுந் தேன்பெய்து = சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து
பசும்பாலும் = அதோடு கூட கொஞ்சம் பசும் பால்
தெங்கின் தனிப்பாலும் = மற்றும் தேங்காய்ப் பால்
சேர்த் = சேர்த்து
தொருதீம் பருப்பிடியும் விரவி = அதோடு கொஞ்சம் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி
இனித்தநறு நெய்யளைந்தே = அது மேல நல்ல நெய் விட்டு
இளஞ்சூட்டின் இறக்கி = லேசா சுடவச்சு இறக்கி வச்சா.....
எடுத்தசுவைக் கட்டியினும் = அந்த கட்டி எப்படி சுவையாக இருக்கும்? அதை விட
இனித்திடுந்தெள் ளமுதே = இனிப்பாக இருக்கும் தெளிய அமுதே
அனித்தமறத் = அநித்தம் + அற. உண்மை நித்தியமானது. பொய் அநித்தியமானது. அந்த அநித்தியம் அற (விட்டுப் போக)
திருப்பொதுவில் விளங்குநடத் தரசே ! = பொதுவாக நடமிடும் அரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் = உன்னுடைய திருவடிகளில் என்னுடைய சொல்லால் ஆன இந்த
அலங்கலணிந் தருளே = அணிகலனை அணிந்தருளே
Idai vida suvaiyaha yaravathu solla mudiyuma!!!
ReplyDeleteSRU
சும்மா அடையார் ஸ்வீட்டு மாதிரி!
ReplyDelete