Thursday, April 5, 2012

கம்ப இராமாயணம் - A twist in the tale

இராவணனின் மகன் இந்திரஜித் போரில் மாண்டு விடுகிறான்.

இராவணன் மிகுந்த புத்திர சோகத்தில் ஆழ்கிறான்.

புத்திர சோகம் அவன் கண்ணை மறைக்கிறது.

இத்தனைக்கும் காரணம் அந்த சீதைதான் என்று நினைக்கிறான்.

அவளை கொல்வதற்காக வாளை உருவிக்கொண்டு வேகமாக செல்கிறான்.

யார் அவனை தடுக்க முடியும் ?

அவனை மகோதரன் தடுத்து நிறுத்துகிறான் ?

என்ன சொல்லி தெரியுமா ?

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் ?

விபீஷணன் சொல்லாத அறிவுரையா ?

கும்பகர்ணன் சொல்லாத அறிவுரையா ?

எதற்கும் அசையாத இராவணன் மகோதரனின் ஒரு வரிக்கு மடங்குகிறான்.

பாடலைப் படிக்கு முன் அது என்னவா இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் .

---------------------------------------------------------------------------------------------
தெள்ள அருங் காலகேயர் சிரத்தொடும் திசைக் கை யானை
வெள்ளிய மருப்பு சிந்த வீசிய விசயத்து ஒள் வாள்
வள்ளி அம் மருங்குல் செவ்வாய் மாதர் மேல் வைத்த போது
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால்

---------------------------------------------------------------------------------------------

"எவ்வளவோ பெரிய பெரிய வீர தீர செயல்களை செய்த உன் வீர வாள், ஒரு பெண்ணின் மேல் வைத்தால் அது வெட்கத்தால் தலை குனியுமே அல்லாமல் அவளைக் கொல்லாது"

தெள்ள அருங் காலகேயர் = தெளிந்து கொள்ள அரிதான கால கேயர் (அவ்வளவு வீரம் உள்ளவர்கள் )

சிரத்தொடும் = அவர்கள் தலைகளை கொய்த

திசைக் கை யானை வெள்ளிய மருப்பு சிந்த = எட்டு திசை யானைகளின் வெள்ளி போன்ற (=வெண்மையான ) தந்தங்கள் சிதற

வீசிய விசயத்து ஒள் வாள் = அப்படிப்பட்ட விஷயங்களுக்காக வீசிய விரைந்த வாள்

வள்ளி அம் மருங்குல் = வள்ளி செடி போன்ற கொடி இடையும்

செவ்வாய் = சிவந்த அதரங்களையும் கொண்ட

மாதர் மேல் வைத்த போது = மாதர் மேல் வைத்த போது (வாளை அவர்கள் மேல் செலுத்தினால் )

கொள்ளுமே ஆவி = அது அவர்கள் ஆவியை கொள்ளுமா (கொள்ளாது)

தானே நாணத்தால் குறைவது அல்லால் = தன்னை தான் நாணத்தால் குறை பட்டு தலை குனியும்.

அதை கேட்டு இராவணன் சீதையை கொல்லும் எண்ணத்தை கை விடுகிறான்.

ஒரு வேளை இராவணன் அவளை கொல்லப் போயிருந்தால், இராமாயணமே மாறிப் போய் இருக்கும்.

இந்த ஒரு பாடல், இராமாயணத்தின் போக்கை மாற்றி அமைக்கிறது.

2 comments:

  1. மிகவும் நன்று. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களை எடுத்து இவ்வாறு எளிமையாக பதம் பிரித்து விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒரு request - பாடல் தொகுப்பை தலைப்பு குறித்து group செய்து வைக்கவும். படிப்பவரின் மனநிலைக்கேற்ப பிரபந்தமோ பட்டினத்தாரோ சட்டென்று எடுத்து படிக்க வசதியாக இருக்கும்.

    குமரன்

    ReplyDelete
    Replies
    1. Thanks for the feedback
      I will try for Paththup Paattu, 8thogai.
      the Blog Post site does not allow indexing based on subject matter. I am trying some alternatives. Hope I will be able to find a way to do that in next couple of weeks.

      RS

      Delete