Tuesday, April 10, 2012

கந்தர் அலங்காரம் - சேற்றில் ஆடிய குழந்தைகள்


 

நம் குழந்தைகள் எங்காவது விளையாடச் செல்லும்.

சில சமயம் கீழே விழுந்து சேற்றை வாரி பூசிக்கொண்டு வந்து நிற்கும்.

அப்போ, தாய் என்ன செய்வாள்?

நிறைய தண்ணிய விட்டு குளிக்க வைப்பாள்.

அந்த சேறு போக வேண்டும் அல்லவா ?
 
 
ஒரு குழந்தையாய் இருந்தால் பக்கெட்டில் தண்ணி பிடித்து குளிபாட்டிவிடலாம்.

நிறைய இருந்தால் ?
 
இறைவனுக்கு எத்தனை குழந்தைகள் ?

ஒண்ணு மாத்தி ஒண்ணு இப்படி அழுக்கா வந்து நிக்குது.

எனவே அவன் தலையின் மேலேயே ஆற்றை வைத்து கொண்டு இருக்கிறான். நம் சேற்றை கழுவ அவன் ஆற்றை வைத்து கொண்டு இருக்கிறன்.
 
அது என்ன சேறு ? அருணகிரி நாதர் சொல்லுகிறார்....

 
--------------------------------------------------------------
 
பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னை ப்ரபஞ்சமெனும்
சேற்றைக் கழிய வழி விட்டவா செஞ்சாடாவி மேல்
ஆற்றைப் பணியை யிதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புணைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே
---------------------------------------------------------------
 

 
பிரபஞ்சம் என்னும் சேறு.

பஞ்சம் என்றால் விரிந்தது என்று பொருள்.

பஞ்ச பாத்திரம் என்றால் விரிந்த பாத்திரம் என்று பொருள்.

ஐந்து பாத்திரம் அல்ல.

"பிர" என்றால் உயர்ந்தது.

 
பிரபஞ்சம் = உயர்ந்த விரிந்த ஒன்று.

இந்த பிரபஞ்சம் எப்படி வந்தது ? எங்கிருந்து வந்தது ? எவ்வளவு பெரியது ? இது எதனால் ஆனது ? ஒன்றும் புரியவில்லை. கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு. தண்ணி மேல் பாசி படிந்தாற்போல் ஏதோ மறைக்கிறது. அந்த "பிரபஞ்சம் என்னும் சேற்றை கழிய வழி விட்டவா"
 
 
யாருக்கு வழி விட்டான் ?
 
 
"பேற்றை தவம் சற்றும் இல்லாத" = பேறு என்பது முன் செய்த நல் வினையால் வருவது. நல்ல பேறு பெறுவது. தவம் என்பது இப்போ செய்வது. முன்னையும் நல்லது செய்யாமல்,இப்பவும்  நல்லது செய்யாமல் இருக்கும் தனக்கு (அருணகிரிக்கு), அவன் "பிரபஞ்சம் என்னும் சேற்றை கழிய வழி விட்டான்"
 
 
விட்டது யாரு ?
 
 
அடவினா காடு. "செஞ்சடா அடவி", அவனுடைய ஜடா முடி காடு மாதிரி இருக்கும். அதில் கங்கை ஆறு இருக்கும் (ஆற்றை), பாம்பு இருக்கும் (பணியை), கொன்றை மலர் இருக்கும் (இதழியை), தும்பை மலர் இருக்கும் (தும்பையை), நிலவின் பிறை இருக்கும் (அம்புலியின் கீற்றை). இவற்றை எல்லாம் புனைந்தவனின் (சிவனின்) மகன் (முருகன்) கிருபாகரனே.


இப்ப திரும்பி ஒருதடவை இந்த பாடலைப் படித்துப் பாருங்கள்.


No comments:

Post a Comment