Friday, April 13, 2012

கம்ப இராமாயணம் - தம்பியா? சேவகனா?


 

தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொன்னான், இராமன் அரசன் வார்த்தைக்கு கட்டுப் பட்டு போனான். அவன் மனைவி சீதை, இராமன் கூட போனதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

லக்ஷ்மணன் போக வேண்டிய அவசியம் இல்லை. "நான் இங்கேயே இருந்து பரதனுக்கு உதவியா இருக்கேன்" என்று சொல்லி இருந்தால், யாரும் ஒன்றும் சொல்லி இருக்க முடியாது.

லக்ஷ்மணன் செய்தது மிகப் பெரிய தியாகம்.

இராமன் கானகம் போகப் புறப்பட்டு விட்டான், லக்ஷ்மணன் நானும் கூட வருகிறேன் என்று கிளம்பினான்.

லக்ஷ்மனனின் தாயிடம் (சுமித்திரை) விடை பெறச் செல்கிறான். மொத்த கம்ப ராமயணத்தில் அவள் இரண்டே இரண்டு பாடல் தான் சொல்லுகிறாள். அந்த இரண்டாவது பாடல் இது.
.
"நீ இராமன் கூட போ. தம்பியாக இல்ல, ஒரு அடிமை மாதிரி போ. அவன் திரும்பி வந்தால் வா, இல்லை என்றால் அவனுக்கு முன் நீ முடி" என்றாள்.
.
தம்பி என்ற உறவு இருந்தால், ஒரு வேளை அண்ணனிடம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்.

அண்ணனையே கொஞ்சம் வேலை வாங்கலாம். "எனக்கு இன்னைக்கு ரொம்ப கால் வலிக்குது, நீயே போய் சாப்பிட ஏதாவது கொண்டு வா" என்று சொல்லலாம். அது எல்லாம் கூடாது, நீ ஒரு அடிமை மாதிரி கூடப் போ என்கிறாள்.
.
பின்னால் வரும் பாடல்களில், இராமன் லக்ஷ்மணன் பாசப் பிணைப்பை கம்பன் பல இடங்களில் சொல்லுகிறான். சீதையை பிரிந்த போது இராமன் அழவில்லை. லக்ஷ்மணன் போரில் மூர்ச்சை ஆனபோது அழுது புலம்புகிறான். "வாள் வித்தை, வில் வித்தை எல்லாம் கற்றாய், இந்த குடிசை போடும் வித்தையை எங்கு கற்றாய்" என்று இராமன் நெகுழுகின்ற இடங்களும் உண்டு.
.
லக்ஷ்மணனை இராமனுடன் கானகம் போகச் சொன்ன அந்தப் பாடல்....

-----------------------------------------------------------
பின்னும் பகர்வாள் ‘மகனே இவன்பின் செல்; தம்பி
என்னும்படியன்று; அடியாரின் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா அன்றேல்
முன்னம் முடி’என்றாள் வார் விழி சோர நின்றாள்’’
---------------------------------------------------------
 
பின்னும் பகர்வாள் ‘ = மேலும் சொல்லுவாள்
மகனே இவன்பின் செல்; = மகனே, நீ இவன் பின்னால் செல்.
 
தம்பி என்னும்படியன்று = தம்பி என்று அல்ல
 
அடியாரின் ஏவல் செய்தி = ஒரு அடிமை போல் அவன் சொன்ன வேலை எல்லாம் செய்
 
மன்னும் = வாழும்
 
நகர்க்கே இவன் வந்திடில் வா = இந்த நகர்க்கு அவன் வந்தால் நீயும் வா
 
அன்றேல் = இல்லை என்றால்
 
முன்னம் முடி’என்றாள் = அவனுக்கு முன்னால் நீ முடி (இறந்து போ என்று சொல்லவில்லை, "முடி என்றாள்" . அது தான் கம்பன்)
 
வார் விழி சோர நின்றாள்’ = சொன்ன பின், அவள் கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது


போகும் போது அவன் பின்னாடி போ.
 
அவனுக்கு ஒரு ஆபத்து என்றால் அவனுக்கு முன்னாடி போ.

2 comments:

  1. She is saying this, and then overcome by emotion. Very touching.

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் நடந்திருக்குமா என்று சந்தேகம் கொள்ளத்தக்க அளவு அதீதமான சகோதரப் பாசம், கணவனின் இன்னொரு மனைவியின் மகனின் மேல் உள்ள பாசம்...இன்று அந்த மாதிரி அதீத பாசங்களில் எஞ்சி இருப்பது குழந்தைகளின் மேல் உள்ள பாசம் மட்டும் தான் என்று நினைக்கிறேன். அதுவும் கூட நாளடைவில் மங்கி விடுமோ ?

      Delete