Saturday, April 28, 2012

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

திருப் புகழ் - இவர் நம்ம ஆளு !

கடைசிக் காலத்தில் எமன் வந்து தன்னை இழுத்துக்கொண்டு போகும் போது, நம்முடைய அம்மா, அப்பா, மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்து அழுவார்கள், அப்போது, முருகா, நீ எமனிடம் "பாத்துப்பா, இவர் நம்ம ஆளு, நமது அன்பன்" னு நீ வந்து சொல்லனும்னு அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகோள் வைக்கிறார் இந்தப் பாடலில்.....




 தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

பதம் பிரித்து பொருள் பார்க்கலாம்:

தந்த பசிதனை அறிந்து = குழந்தையின் பசியினை அறிந்து

முலை அமுது தந்து = மார்போடு அணைத்து அதன் பசி போக்கி

முதுகு தடவிய தாயார் = ஏப்பம் வர வேண்டி அதன் முதுகை தடவித்தரும் தாயார்

தம்பி = உடன் பிறந்த தம்பி

பணிவிடைசெய் தொண்டர் = பணிவிடை செய்யும் வேலை ஆட்கள்

பிரியமு தங்கை = அன்பான தங்கை

மருக (ர்) = மருமகன் மற்றும் மருமகள்

உயிரனவே = உயிரைப் போல

சார் = சார்ந்து இருக்கும்

மைந்தர் = பிள்ளைகள்

மனைவியர் = மனைவி

கடும்பு = சுற்றத்தார்

கடன் = கடமை 

உதவும் அந்த = அந்த உறவுக் கடமையை செய்வதற்காக 

வரிசை = வரிசையாக

மொழி பகர் கேடா = தங்கள் குறைகளை சொல்லி (நாம் இறந்த பின், நம்மை பார்க்க வருபவர்கள் "எப்படி இருந்த ஆள் பாவம் போய்டாறேனு குறை பட்டுக் கொள்வார்கள் இல்லையா?)


வந்து = அந்த குறையை சொல்ல வந்து


தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து

தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து

ஒரு = ஒரு 

மகிட மிசையேறி = எருமை மாட்டின் மேல் ஏறி

அந்தகனும் = குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர், தாய்க்கு ஒரு மகன் என்று எந்த பேதமும் பார்க்க மாட்டான்....எனவே குருடன்)

எனை அடர்ந்து வருகையில் = என்னை பிடிக்க வருகையில்

அஞ்சல் என = அஞ்சேல் என



வலிய = வலிமை பொருந்திய

மயில்மேல் = மயில் மேல்

நீ = முருகனாகிய நீ

அந்த மறலியொடு = அந்த எமனிடம்

உகந்த மனிதன் = வேண்டிய மனிதன் (நம்ம ஆளு)

நமது அன்பன் = என்னுடைய (முருகனின்) அன்பன்


என மொழிய = என்று சொல்ல

வருவாயே = வருவாயே

சிந்தை மகிழ = மனம் மகிழ

மலை மங்கை = மலை மகள், பார்வதி

நகிலிணைகள் = மார்பின் மேல்

சிந்து பயமயிலு = விளையாடும்

மயில்வீரா = மயில் மேல் ஏறிய வீரனே

திங்கள் = நிலவு (பிறை நிலவு)

அரவு = பாம்பு

நதி = கங்கை நதி

துன்று = ஒன்றாக உள்ள

சடில = ஜடா முடி உடைய (சிவன்)

அருள் = அருளிய

செந்தில் = திருச் செந்தூரில் 

உறை = வாழும்

பெருமாளே = பெறும் ஆளே (நம்மை பெற்றுக் கொள்பவன், நாம் எப்படி இருந்தாலும், நாம் நம்மை அவனுக்குத் தந்தால், நம்மை வெறுக்காமல், பெற்றுக் கொள்பவன் = பெறும் ஆள் = பெருமாள், பெரிய ஆள் = பெருமாள்)


4 comments:

  1. அப்பா... சும்மா கடா முடா என்ற பாட்டை இப்படி பதம் பதமாகப் பிரித்துச் சொல்லவில்லையென்றால் ஒன்றும் புரியாது!

    ReplyDelete
  2. என் கடன் பதம் பிரித்து கிடப்பதே !

    ReplyDelete
  3. Really your work is fabulous We are learning many tamil poems through website

    ReplyDelete
  4. Dear Sir,
    This site is excellent! I am able to learn new Tamil words and their meanings!
    Hats off!

    ReplyDelete