Thursday, April 12, 2012

கம்ப இராமாயணம் - வாலியின் சகோதர பாசம்

காப்பியம் எங்கும் சகோதர பாசத்தை முன் எடுத்து வைக்கிறான் கம்பன். லக்ஷ்மணன், பரதன், குகன், வாலி, சுக்ரீவன், விபீஷணன், கும்ப கர்ணன் என்று அனைத்து இடங்களிலும் கம்பன் சகோதர பாசத்தை முன் மொழிகிறான். 


அப்படி சகோதர பாசத்தை கம்பன் உருக்கமாக காட்டும் ஒரு இடம்.....






இராமனின் அம்பு பட்டு வாலி விழுந்து கிடக்கிறான். சாகும் தருணம். இதற்கெல்லாம் காரணமான சுக்ரீவனை பார்க்கிறான். வாலிக்கு கோவம் வரவில்லை. அவன் மேல் பாசம் வருகிறது. 


வாலி, இராமனிடம் வேண்டுகிறான் ....







என் தம்பியாகிய சுக்ரீவனை உன் தம்பிகள் "அண்ணனை கொன்றவன்" என்று பழி சொன்னால், அவர்களை நீ தடுக்க வேண்டும்.

இது நான் கேட்பதால் மட்டும் அல்ல, நீயே அவனுக்கு வாக்கு கொடுத்து இருக்கிறாய், அவன் குறைகளை தீர்பதாக.

எனவே நீ அவனை அந்தப் பழி சொல்லில் இருந்து காக்க வேண்டும் என்ற வரத்தை கேட்கிறான்.

-----------------------------------------------------------------------------------------
'இன்னம் ஒன்று இரப்பது  உண்டால்; எம்பியை, உம்பிமார்கள்
''தன்முனைக் கொல்வித்தான்'' என்று இகழ்வரேல், தடுத்தி, தக்கோய்!
முன்முனே மொழிந்தாய் அன்றே, இவன் குறை முடிப்பது ஐயா!
பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல்ஆமோ?
----------------------------------------------------------------------------------------
இன்னம் ஒன்று இரப்பது உண்டால் = உன்னிடம் இரந்து (பிச்சை) கேட்பது இன்னும் ஒன்று உண்டு

எம்பியை = என் தம்பியாகிய சுக்ரீவனை
உம்பிமார்கள் = உன் தம்பிகள்

தன்முனைக் கொல்வித்தான் = தனக்கு முன்னால் பிறந்தவனை கொல்ல துணை புரிந்தான். அவன் கொலை செய்ய வில்லை, உன்னை (இராமனை) கொண்டு என்னை கொல்வித்தான். எனவே கொன்றவன் நீ. நீ செய்தால் அதற்கு அர்த்தம் இருக்கும். எனவே மற்றவர்கள் சுக்ரீவனை பழி சொல்லக் கூடாது என்ற தொனியில் "கொல்வித்தான்" என்றான்.

என்று இகழ்வரேல், = என்று இகழ்ந்தால், பழி சொன்னால்

தடுத்தி = அவர்களை தடுத்து நிறுத்துவாய்

தக்கோய்! = தகுதியான அனைத்து குணங்களும் நிறைந்தவனே

முன்முனே மொழிந்தாய் அன்றே = நீ முன்னாடியே சொல்லி இருக்கிறாய் (சுக்ரீவனிடம்)

இவன் குறை முடிப்பது ஐயா = அவனுடைய குறைகளை நீ முடித்து வைப்பதாக

பின் இவன் வினையின் = அதன் பின் அவன் செய்த செயல்களை

செய்கை அதனையும் பிழைக்கல்ஆமோ? = நீ அவனுக்கு வாக்கு தந்த பின், அவன் செய்த செயல்கள் எல்லாம் அந்த வாக்கை காப்பாற்றத்தான்.

அவன் மேல் எந்த பிழையும் இல்லை என்று சூசகமாகச் சொல்கிறான்.

தம்பியின் மேல் அவ்வளவு பாசம். 

1 comment: