Saturday, April 14, 2012

திரு அருட்பா - வள்ளலார் விண்ணப்பம்



இராமலிங்க அடிகளார் என்ற வள்ளலார், ஒரு சமய புரட்சியாளர். கோவில் பணம் பண்ணும் இடமாவது கண்டு இறைவனை ஜோதி ரூபகமாக வணங்கி, இறைவனை கோவிலில் இருந்து பக்தர்களின் பூஜை அறைக்கு கொண்டு வந்தார்.

அவரது திருஅருட்பா தித்திக்கும், உள்ளத்தை நெகிழ வைக்கும் பாடல்களின் தொகுப்பு ஆகும். 


-------------------------------------------------------------------------------
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
----------------------------------------------------------------------------------------------------

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம். 

நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம்.
அது பக்தி அல்ல. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும். 

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம்.  உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை.
நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார். 

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்

இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார். 

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்

மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்துறணும். எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும்.

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்

நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும். 


தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே

வள்ளலார் காலத்தில் சென்னை வாழ் மக்கள் மிகுந்த தர்ம சிந்தனை உள்ளவர்களாய் இருந்து இருக்கிறார்கள். ஒரு வேளை அவர் இப்போது இருந்து இருந்து இருந்தாலும் அப்படித்தான் நினைத்து இருப்பாரோ ? அப்படி பட்ட சென்னையில் உறையும் கந்தவேளே 

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார் 

20 comments:

  1. இதை விட அருமையாக ஒரு வாழ்வு நெறியை யார் நமக்குசொல்லமுடியும் ?

    THx a lot sir for uploading such wonderful tamil poems.

    ReplyDelete
  2. அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும். என்பது என்ன என்று தெரிய ?
    www.vallalyaar.com

    ReplyDelete
  3. மருவு பெண்ணாசையை இவரது தந்தை மறந்திருந்தால் என்னவாகியிருக்கும்?
    இராமலிங்கம் என்ற டுபுக்கு பிறந்தே இருக்காது !

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக எனது blog க்கு வரும் கமெண்ட் களுக்கு நான் பதில் போடுவது கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும். எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வது என்ற நிலையில் பதிலுக்கு பதில் மல்லு கட்டுவது கிடையாது.

      இருந்தும், இந்த ஒன்றுக்கு பதில் சொல்ல விருப்பம்.

      மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும்

      மருவு பெண் ஆசையை விட வேண்டும் என்று சொல்லவில்லை. மறக்கவே வேண்டும் என்றார். எப்போதும் அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி நினைத்துக் கொண்டே இருந்தால், பார்க்கிற பெண் மேல் எல்லாம் அந்த எண்ணம் பாயும்.

      அடிகாளாரின் கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புடையாதாக இல்லாமல் இருக்கலாம்.

      அதற்காக அவரை மரியாதை குறைவாக பேசுவது சிறந்த பண்பாடா?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. மனைவியிடம் கொள்வது அன்பு.
      பிற மாதரிடம் கொள்வது ஆசை.
      பிற பெண்களை மருவ ஆசைப்படுவதுதான் தவறு. எனவே பிறன்மனை ஆசையைத்தான் மறக்கச் சொல்கிறார்.

      Delete
    4. பெண் - பொருட்களின் மீதுள்ள ஆசையை ஒரு ஒப்புமைக்காக தான் "பெண்" என ஒப்பிட்டு பாடியுள்ளனர். அருணகிரிநாதர் , வள்ளலார் பெருமான் ஆகியோர் உலக பொருட்கள், செல்வம், இவற்றை எல்லாம் பெண்ணோடு ஒப்பிட்டு பாடினர். பெண்களை வெறுக்க சொல்லவில்லை.

      இருப்பினும்
      அன்பர் திரு மோகன் அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளார்.

      Delete
    5. இந்த இடத்தில் இதை சொல்லி வேண்டாமே.

      Delete
    6. மருவு பெண்ணாசைதான் மறக்க சொன்னார். மனைவியை மறக்க சொல்லவில்லை! தவத்திரு வள்ளலார் திருமணம் புரிந்து துறவரம் மேற்கொண்டார். மனித குல ஆபத்தான பசி, பிணி, மூப்பு, மரணம் வெல்லும் சாகா கலை கற்பித்த தெய்வ மகான். அவரை கொச்யை படுத்தி அழியா பாவம் தேடிக்கொள்ளாதீர் . இதனால்தான் அவர் கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று வருந்தி பாடினாரோ!

      Delete
    7. தவறான கருத்துக்களை, உடன் நீக்குங்கள் !

      Delete
    8. ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் பற்றி அவர் மறுக்கவில்லை. பெண் பித்து பிடித்து இன்று சமுதாயத்தில் உலா வரும் எத்தர்களைப் பற்றி அவர் கூறுகிறார். அதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு துறவியை பழிக்காதீர

      Delete
  4. Thiru arutpa vallalar vazhga goodmorning all

    ReplyDelete
  5. இதன் பொருள் அறிந்து பாடப் பாட..இறைவா எனக்கு மீண்டும் மீண்டும் உன் அடிகளார் என்ற பிறவி வேண்டும்

    ReplyDelete
  6. அருமையான விளக்கம்

    ReplyDelete
  7. மீண்டும் பிறவா வரம் தரவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. Very good explanation...but stupids won't understand...the simpler explanation also so ..plz ignore

    ReplyDelete
  9. Wove, Excellent advice of life, Every one should follow Adigalar and get success in life; great🙏

    ReplyDelete