திருக்குறள் - புறங்கூறாமை - பகச் சொல்லி
(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)
புறம் சொல்லுவது தவறு என்று தெரிந்தும் ஏன் சிலர் புறம் சொல்கிறார்கள்?
தவறு என்று தெரிந்தாலும் ஏன் திருத்திக் கொள்ள முடிவதில்லை?
காரணம் சொல்கிறார் வள்ளுவர்.
"உறவினர்களோடு சேர்ந்து, சிரித்து பேசி மகிழ்ந்து இருக்கத் தெரியாதவர்கள்தான் உறவுகள் பிரியும்படி புறம் சொல்லித் திரிவார்கள்"
பாடல்
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html
(pl click the above link to continue reading)
பகச்சொல்லிக் = பக என்றால் பகுத்தல், பிரித்தல். பிரியும்படி சொல்லி
கேளிர்ப் = உறவினர்களை
பிரிப்பர் = பிரியும்படி செய்வர்
நகச்சொல்லி = சிரிந்துப் பேசி
நட்பாடல் = நட்போடு இருக்கத்
தேற்றா தவர். = தெரியாதவர், தெளியாதவர்
இதற்கு மிக நுணுக்கமாக உரை செய்கிறார் பரிமேலழகர்.
"கேளிர் பிரிப்பர்" : கேளிர் என்றால் உறவினர். குகனை விட்டுப் பிரியும் போது இராமன் சொல்லுவான், நீ என் தம்பி, இந்த இலக்குவன் உனக்கு உன் தம்பி. இதோ இருக்கிறாளே இந்த சீதை, இவள் உன் உறவினள் (கேளிர்)"
"நன்னுதலவள் நின் கேள்" ;: அழகான நெற்றியை உடைய இவள் (சீதை) உன் கேள் (உறவினள்)
அன்னவன் உரை கேளா,
அமலனும் உரைநேர்வான்;
‘என் உயிர் அனையாய் நீ’
இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்;
நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில்
உரிமையின் உள்ளேன்.’
புறம் சொல்லிக் கொண்டுத் திரிந்தால் உறவு பிரியும் என்று நமக்குத் தெரிகிறது. இன்று இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் நம்மைப் பற்றி புறம் சொன்னது நம் காதுக்கு எட்டும். அப்படி தெரிய வரும்போது, நம்மைப் பற்றி புறம் சொன்னவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம். "அவன் எவ்வளவு மோசமானவன். நம்மைப் பற்றி எப்படி எல்லாம் சொல்லி இருக்கிறான். அவனை நம்பினேனே...அவன் முகத்தில் இனி விழிக்கக் கூடாது" என்றுதானே நினைப்போம்?
நாம் பிறர் பற்றி புறம் கூறி இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றி அப்படித்தான் நினைப்பார்கள்.
உறவு பிரிந்து போய் விடும்.
பரிமேலழகர் கூறுகிறார், உறவையே பிரிப்பவன், உறவு இல்லாத அயலாரை பிரிக்க மாட்டானா என்று.
ஒரு குடும்பத்தில் ஒற்றுமையாக அண்ணன் தம்பி இருக்கலாம். அவர்களுக்கு இடையே புறம் சொல்லி அவர்களை பிரித்து விடுவது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இல்லாதைச் சொல்லி அந்த உறவில் விரிசல் விழும்படி செய்வது, மேலதிகாரிக்கும், அவருக்கு கீழே உள்ளவருக்கும் இடையில் ஒன்றிருக்க ஒன்று சொல்லி சண்டை மூட்டி அவர்களை பிரித்து விடுவது என்று பல அயலாரையும் பிரித்து விடுவார்கள்.
இப்படி செய்து கொண்டு திரிபவர்கள் இறுதியில் யாருமே அவருக்கு நட்போ, உறவோ இல்லாமல் தனித்து விடப் படுவார்கள் என்கிறார்.
கேளிர் பிரிப்பர் என்றால் கேளிரையே பிரிப்பவன் அயலாரை பிரிக்க மாட்டானா என்று கேட்கிறார்.
"நட்பாடல் தேற்றா தவர்" : தேற்றாதவர். என்றால் தெரியாதவர். நடிப்பின் நன்மை, சுகம், அருமை தெரியாதவர். நட்பு எவ்வளவு உயர்ந்தது என்று தெரியாதவர்கள்தான் அப்படிச் செய்வார்கள் என்கிறார். வள்ளுவர் நட்புக்கு மிக அதிக முக்கியத்வம் கொடுக்கிறார். ஐந்து அதிகாரம் எழுதி இருக்கிறார் நட்பு பற்றி.
இங்கே ஒரு இலக்கண குறிப்பு தருகிறார் பரிமேலழகர்.
தமிழில் தன் வினை, பிற வினை என்று இரண்டு உண்டு.
நான் படித்தேன் என்பது தன் வினை.
நான் படிப்பித்தேன் என்பது பிற வினை.
இங்கே, நட்பாடல் தேறாதவர் என்று இருக்க வேண்டும். (தன் வினை). தேற்றாதவர் என்று பிற வினையாக வந்திருக்கிறது. அப்படி வந்தாலும், அதை தன் வினையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். அதற்கு மேற்கோளும் காட்டுகிறார்.
தமிழில் தொக்கி நிற்பது என்று ஒரு இலக்கணம் உண்டு. தொக்கி என்றால் மறைந்து நிற்பது.
சில சமயம் சில சொற்கள் மறைந்து இருந்து பொருள் தரும்.
கடைக்குப் போய் கத்தரிக்காய் வாங்கி வரச் சொன்னேனே வாங்கி வந்தாயா என்று கேட்டால்,
கத்திரிக்காயும் வாங்கி வந்தேன்
என்று சொன்னால், அந்த 'உம்' என்ற உம்மை கத்திரிகாயோடு சேர்த்து வேறு எதையோ வாங்கி வந்தான் என்று தெரிகிறது அல்லவா?
சில சமயம் அந்த உம்மை தொக்கி நிற்கும்.
"கேளிர் பிரிப்பர்" என்பதில் கேளிரையும் பிரிப்பர் என்று ஒரு உம்மை இருக்கிறது. ஆனால், அது வெளிப்படாமல் தொக்கி நிற்கிறது என்கிறார்.
கேளிரையும் பிரிப்பார் என்றால் அயலாரையும் பிரிப்பார் என்பது சொல்லாமல் விளங்கும்.
(அறன் அல்ல
https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html
அறனழீஇ
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html
அறம்கூறும் ஆக்கம்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html
முன்இன்று பின்நோக்காச் சொல்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html
புன்மையால் காணப் படும்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html
பிறன்பழி கூறுவான்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html