Pages

Monday, July 31, 2023

திருக்குறள் - தன் மேல் காதல்

 திருக்குறள் - தன் மேல் காதல் 


நாம் ஏன் பிறருக்கு தீமை செய்கிறோம்?  


நம்மை நாம் காதலிக்காததால் என்கிறார் வள்ளுவர். 


இது என்ன புதுக் கதை? நம்மை நாம் காதலிப்பதா? 


உலகிலேயே நமக்கு மிக நெருக்காமான நபர் யார் என்றால் அது நாம்தான். நம்மையே நாம் விரும்புகிறோமா? நம் அழகு, அறிவு, திறமை, குணம், பேச்சு, நடை, உடை, பாவனை...இதில் எவ்வளவு நாம் நம்மை விரும்புகிறோம்?


நம்மில் நமக்கு பிடிக்காத குணங்கள் எவ்வளவு இருக்கிறது? 


நாம் நம்மை காதலிக்க ஆரம்பித்துவிட்டால், அந்தக் காதல் மற்றவர்கள் மேலும் படரும். எனக்கு எது துன்பம் தருகிறதோ, அது மற்றவர்களுக்கும் துன்பம் தரும் என்று நான் சிந்திப்பேன். அந்தத் துன்பத்தை மற்றவர்களுக்கு தர மாட்டேன். 


அடிப்படை என்ன என்றால், நாம் நம்மை காதலிப்பது இல்லை. 


பாடல் 


தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_31.html


(please click the above link to continue reading)


தன்னைத்தான் = ஒருவன் தன்னைத் தானே 


காதலன் ஆயின் = காதல் செய்வான் என்றால் 


எனைத்தொன்றும் = எவ்வளவு சிறிய அளவாயினும் 


துன்னற்க = செய்யாமல் இருக்க 


தீவினைப் பால் = தீயவினைகளின் பக்கம், தீய வினைகளின் பகுதியில் 


நீ உன்னை விரும்புகிறாயா, அப்படி என்றால் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதே என்கிறார்.


ஏன்?


பிறருக்கு தீங்கு செய்தால் அந்த தீமையின் பலன் உனக்கு வரும். நீ வருத்தப்படுவாய். அந்த வருத்தத்தை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது. காரணம், நீ உன்னை விரும்பிகிறாய். 


மாற்றாக, உனக்கு உன் மேல் விருப்பு இல்லை என்றால், உனக்கு ஒரு துன்பம் வந்தாலும், நீ அதை சகித்துக் கொள்வாய். நீ ஒருவனை அடிக்கிறாய். அவன் உன்னை பதிலுக்கு அடிக்கிறான். நீ என்ன நினைப்பாய்?  நான் அடித்தேன், பதிலுக்கு அடித்தான் என்று அதற்கு ஒரு சமாதனம் சொல்வாய். அடியின் வலியும், அவமானமும் பெரிதாகத் தெரியாது. 


முதலில் நீ உன்னை காதலிக்கத் தொடங்கு. நீ உன்னை விரும்புபவன் என்றால் மற்றவர்களுக்கு ஒரு சிறிதும் துன்பம் நினைக்காதே. 


இன்று முதல் நமக்கு ஒரு புது காதலன், காதலி கிடைத்தார் என்று எண்ணிக் கொள்வோம். நம்மையே நாம் விரும்ப ஆரம்பிப்போம்.  


எவ்வளவு இனிமையான விடயம். 



Sunday, July 30, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல்

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் 


தமிழ் இலக்கியம் என்பது ஏதோ பொழுது போக்க, நேரத்தை செலவழிக்க என்று எழுதப்பட்ட இலக்கியம் அல்ல. வாழ்வைகூர்ந்து நோக்கி, அதை செம்மைப் படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, அதை அழகாக, எளிமையாக சொன்னவை நம் இலக்கியங்கள். 


அப்படிப்பட்ட ஒன்று தான் நாலடியார். நான்கே வரிகளில் வாழக்கைக்கு தேவையான நல்ல விடயங்களை எடுத்துச் சொல்லும் நூல். 


நண்பர்களை ஆராய்ந்து, தேர்ந்து எடுக்க வேண்டும். அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், பக்கத்து வீட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக ஒருவரை நட்பாகக் கொள்ளக் கூடாது. 


சரி, ஒருவரை ஆராய்ந்து நட்பாகக் கொண்டுவிட்டோம் என்றால், பின்னாளில் அவர்களிடம் சில குறை வந்தாலும், அவர்கள் நமக்கு வேண்டாதவற்றை செய்தாலும், பொறுத்துக் கொள்ள வேண்டுமே அல்லாமல் வெட்டி விடக் கூடாது. அப்படி செய்து கொண்டே போனால், ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள். குறை எல்லோரிடமும் உண்டு என்கிறது இந்த முதல் பாடல். 


பாடல் 


நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-

நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;

புல் இதழ் பூவிற்கும் உண்டு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_30.html


(pl click the above link to continue reading)


நல்லார் = இவர் நல்லவர் 


எனத் = என்று 


தாம் = நாமே 


நனி  = மிகவும் 


விரும்பிக் = விருப்பத்துடன்  


கொண்டாரை = நட்பாக்கி கொண்டவர்களை 


அல்லார் எனினும் =  அவர்கள் அப்படிப்பட்டவர் என்றாலும் 


அடக்கிக் கொளல்வேண்டும் = அதை வெளியே காட்டாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும் 


நெல்லுக்கு உமி உண்டு = நெல்லுக்கு உமி உண்டு 


நீர்க்கு நுரை உண்டு = நீருக்கு நுரை உண்டு 


புல் இதழ் = புன்மையான பூ இதழ் 


பூவிற்கும் உண்டு = பூவிற்கும் உண்டு 


அதாவது,


நாம் விரும்பி உண்ணக் கூடிய து சாதம், சோறு. அது நெல்லில் இருந்து வருகிறது. அந்த நெல்லில் உமி இருக்கும். அரிசியின் மேல் இருக்கும் தோலுக்கு உமி என்று பெயர். அதை உரித்தால் உள்ளே நெல் இருக்கும். உரித்த பின், அந்த தோலை, உமியை தூர எறிந்து விட வேண்டியதுதான். அதனால் பயன் இல்லை. உமி இருக்கிறதே என்பதற்காக நெல்லை ஒதுக்கி விட முடியுமா? ஒதுக்கினால்,  அரிசி கிடைக்காது, சோறு கிடையாது. பட்டினிதான். 


அதே போல், தாகத்தைத் தணிக்கும் நீர். அதில் சில சமயம் நுரை இருக்கும். நுரையை குடிக்க முடியாது. அது கொஞ்சம் இடைஞ்சல்தான். நுரை இருக்கிறதே என்று நீரை வேண்டாம் என்று ஒதுக்க முடியுமா? 


ஆசையோடு நாம் தலையில் வைக்கும் பூவில் சில சமயம் சில இதழ்கள் வாடி, கருகிப் போய் இருக்கும். ஒரு இதழ் கருகிப் போய் இருக்கிறதே என்பதற்காக அந்த பூவையே வேண்டாம் என்று ஒதுக்க வேண்டும். 


எல்லா நல்லவற்றிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். 


அதற்காக அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடக் கூடாது. 


அதை போல் நண்பர்களிலும் சில குறைபாடுகள் இருக்கும். அதை வெளியே சொல்லாமல், அவர்களை பொறுத்து நட்பை விட்டு விடக் கூடாது. 



Thursday, July 27, 2023

திருக்குறள் - நிழல் போல்

 திருக்குறள் - நிழல் போல் 


இந்த அற நூல்கள், நியாயம், தர்மம் என்பதில் எல்லாம் ஒரு நம்பிக்கை குறைந்து வரும் காலம் இது. 


தவறு செய்கிறவன் நன்றாக இருக்கிறான். நல்லது செய்பவன் துன்பப்படுகிறான். இதுதான் நடைமுறையில் காணக் கிடைக்கிறது. யாருக்கு நம்பிக்கை வரும்?


வள்ளுவர் சொல்கிறார்....அப்படி எண்ணாதே என்று. ஒருவனுடைய நிழல் எப்படி அவனை விட்டுப் போகாதோ, அது போல் ஒருவன் செய்த தீவனை அவனை விட்டு ஒரு போதும் நீங்காது. காத்திருக்கும். சரியான காலத்தில் தண்டிக்கும்.


பாடல்  

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_27.html


(pl click the above link to continue reading)



தீயவை = தீய வினைகளை 


செய்தார் = செய்தவர் 


கெடுதல் = கட்டாயம் கேட்டினை அடைவர்  என்பது 


நிழல்தன்னை = ஒருவனுடைய நிழல் 


வீயாது = விடாமல், நீங்காமல் 


அடி = அவன் அடிக்கீழேயே 


உறைந் தற்று = சேர்ந்து இருப்பது போன்றது 


உடம்போடு நிழல் இருப்பது எவ்வளவு உறுதியோ அது போல ஒருவனோடு அவன் வினையும் இருப்பது உறுதி என்கிறார். 


இதில் பல நுணுக்கங்கள் இருக்கிறது. 


ஒன்று, சில சமயம் நிழல் சிறிதாக, காணமல் போய் விடுவது உண்டு. ஆகா, நாம் தப்பி விட்டோம் என்று நினைக்கக் கூடாது. உச்சி வேளை சென்ற பின், மாலையில் அதே நிழல் மிக நீண்டு வரும். உடம்பில் வலு இருக்கும் போது, செல்வம் இருக்கும் போது, அதிகாரம் இருக்கும் போது செய்யும் தவறுகள், பின்னால் பெரிதாக வந்து தாக்கும். 


இரண்டாவது, ஒருவனுடைய நிழல் அவனைப் போலவே இருக்கும். அவன் நிழல் யானை போலவோ, குதிரை போலவோ இருக்காது. அதே போல், அவன் செய்த வினைகளுக்கு தக்கவாறு பலன் கிடைக்கும். கூடவும் செய்யாது, குறையவும் செய்யாது. 


மூன்றாவது, இரவில், வெளிச்சம் இல்லாத போது நிழல் தெரியாது. மறைந்து வாழ்ந்து விடலாம் என்று சிலர் நினைக்கலாம். என்றோ ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் போது, அந்த நிழல் உடனே வெளிப்படும். இத்தனை நாள், நேரம் மறைந்து இருந்த நிழல் உடனே வெளிப்படும் என்பது சர்வ நிச்சயம். அது போல, வினைகளுக்கு பயன் உண்டு என்பது சர்வ நிச்சயம். சில சமயம் அப்படி இல்லாதது போல தோன்றலாம். கட்டாயம் திரும்பி வரும். 


எனவே, உடனடியாக தண்டனை இல்லை என்று நினைத்து தீவினை செய்ய நினைக்கக் கூடாது. கட்டாயம் அது திரும்பி வரும் என்று நினைத்தால் தீ வினை செய்ய அச்சம் வரும். 


நான் இன்று ஒருவனை அடிக்கிறேன், திட்டுகிறேன் என்றால், அந்த அடியும், திட்டும் எனக்கு ஒரு நாள் திரும்பி கட்டாயம் வரும் என்றால் அதை நான் செய்வேனா?







Wednesday, July 26, 2023

பழமொழி - நீரற நீர்ச்சார் வறும்

 பழமொழி - நீரற நீர்ச்சார் வறும்


பிறவித் துன்பம் என்பது பெரும் துன்பம்.  


எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்பார் மணிவாசகர். 


மீண்டு இங்கு வாரா நெறி என்பார் வள்ளுவக் கடவுள். 


இந்தப் பிறவித் தொடரை அறுப்பது எப்படி?


வீட்டில் திரி போட்டு விளக்கு ஏற்றுவதை பார்த்து இருப்போம். விளக்கு என்றால் என்ன என்பதையே அறியாத ஒரு தலைமுறைக்குள் வந்து விட்டோம். 


அந்த விளக்கு எரிய வேண்டும் என்றால், விளக்கு வேண்டும், திரி வேண்டும், எண்ணெய் வேண்டும். இவை இல்லாமல் விளக்கு எரியாது. இன்றைய தலை முறையினருக்கு சொல்லுவது என்றால் லைட் எரிய வேண்டும் என்றால் பல்பு, எலெக்ட்ரிசிட்டி, வயர் இந்த மூன்றும் வேண்டும். 


நம் பிறவி நிகழ வேண்டும் என்றால் அதற்கு வினை வேண்டும். வினைதான் நம் பிறவிக்கு காராணம். 


அந்த வினையை மூன்றாகப் பிரிக்கிறார்கள். நாம் சேர்த்து வைத்த வினை, இப்போது செய்கின்ற வினை, இந்த இரண்டையும் சேர்த்து அதில் இருந்து நாம் அனுபவிக்கும் வினை. இந்த வினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 


இதில் நல் வினையும் அடங்கும், தீ வினையும் அடங்கும். 


வினையை அறுத்தால், பிறவி அறும். 


எப்படி எண்ணெய், திரி இவற்றை நீக்கினால் சுடர் எரிவது நின்று போகுமோ அது போல. 


ஒரு குளத்தில் மீன், தவளை, ஆமை என்று உயிரினங்கள் வசிக்கும். குளத்துக்கு நீர் வருவது நின்று போனால், கொஞ்ச காலத்தில் குளத்தில் உள்ள உயிர்கள் அழிந்து போகும் அல்லவா. அது போல. 


பாடல் 


திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக

எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்

சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்

'நீரற நீர்ச்சார் வறும்'.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_26.html


(click the above link to continue reading)


திரியும் = திரி 


இடிஞ்சிலும் = விளக்கு, அகல் 


நெய்யும் = நெய் 


சார்வாக = அவற்றைச் சார்ந்து 


எரியும் = எரியும் 


சுடரே = சுடர், தீபம் 


அனைத்தாய்த் = அது போல 


 தெரியுங்கால் = ஆராய்ந்து தெளியும் போது 


சார்வற = சார்பு அற்றுப் போக 


ஓடிப் = சென்ற பின் 


பிறப்பறுக்கும் = பிறப்பை அறுக்கும் 


அஃதேபோல் = அதைப் போல 


'நீரற = நீர் வருவது நின்று போனால் 


நீர்ச்சார் வறும் = நீர் + சார்வு + அறும்  = நீரை சார்ந்து வாழ்கின்ற உயிரினங்கள் அற்றுப் போய் விடும். 


'நீரற நீர்ச்சார் வறும்' என்பது பழமொழி. நீர் இல்லாவிட்டால், உயிரினங்கள் அழியும் என்ற பழமொழியை வைத்துக் கொண்டு, ஒரு பாடம் சொல்கிறது இந்தப் பாடல். 


எல்லோருக்கும் தெரிந்த ஒன்று பழமொழி. தெரியாத ஒன்று எப்படி பிறவித் தொடரை அறுப்பது என்பது. எவ்வளவு எளிமையாக விளக்குகிறது இந்தப் பாடல் 


(Some of my readers feel even my simple Tamil is challenging to them. To help them, I am giving a small English version:


A lamp can glow only with the lamp, and the wick. Life will be sustained only if there is water. Same way, our birth - death - rebirth will happen due to our karmas or actions. If we do good things, we will be born to enjoy the fruits of those and if we do bad things, we will be born to suffer those bad acts).







Tuesday, July 25, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நினது உருவா

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நினது உருவா 


கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ ஒரு விடயத்தில் வாக்குவாதம் நிகழும். அப்போது குழந்தை அழுதால், இருவரும் தங்கள் சண்டையை மறந்து விட்டு, பிள்ளையை தூக்க ஓடுவார்கள் இல்லையா? 


அது போல 


ஒரு சமயம் ஆதி சேடனுக்கும், கருடாழ்வாருக்கும் ஒரு வாக்குவாதம் வந்தது...பெருமாளுக்கு சேவை செய்வதில் யார் உயர்ந்தவர் என்று. இரண்டு அடியவர்களுக்கு இடையில் போட்டி என்றால், ஆண்டவன் என்ன செய்வான் பாவம். இருவரையும் சமாதனம் செய்ய தான் ஒரு குழந்தை வடிவம் எடுத்தாராம். அந்த குழந்தை வடிவைப் பார்த்ததும், இருவரும், தங்கள் போட்டியை மறந்து, அந்தக் குழந்தையை எடுத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டார்களாம். இப்படி ஒரு கதை கருட புராணத்தில் இருக்கிறது. குழந்தை வடிவம் கொண்ட பெருமாள் "பால சயன" வடிவில் திருச் சிறுபுலியூர் என்ற இடத்தில் சேவை சாதிக்கிறார். 


திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தின் மேல் பத்து பாசுரங்கள் பாடி இருக்கிறார். 


இறைவன் எந்த வடிவம் கொண்டவன்?  அவனுக்கு என்று ஒரு உருவம் இருக்கிறதா?  அப்படி என்றால் நம் சிற்றறிவால் அவனை கண்டு கொள்ள முடியுமா?  முடியாது என்பது சமய முடிவு. 


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் ...


"பெருமாளே நீ எந்த வடிவு உள்ளவன்?  மேகம் போன்றவனா? தீ போன்றவனா? நீரா? மலையா ? அல்லது வேறு ஏதாவது உருவமா?  உன் உருவம் உன் உருவம் தான். அதற்கு இணையாக எதைச் சொல்வது? திருமகள் விரும்பும் அருள் நிறைந்தவனே, உன் திருவடிகளே சரணம்" 


என்று. 


பாடல் 


கருமாமுகி லுருவா! கனலுருவா! புனலுருவா,


பெருமால்வரை யுருவா! பிறவுருவா! நினதுருவா,


திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,


அருமாகட லமுதே! உன தடியேசர ணாமே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_25.html


(pl click the above link to continue reading)


கருமாமுகி லுருவா! = கரு + மா + முகில் + உருவா = கருமையான பெரிய மேக உருவமா? 


கனலுருவா! = கனல் + உருவா = தீயின் உருவமா? 


புனலுருவா = புனல் + உருவா = நீரின் உருவமா? 


பெருமால்வரை யுருவா! = பெரு + மால் + வரை + உருவா? = பெரிய மலை போன்ற உருவமா? 


பிறவுருவா! = வேறு ஏதேனும் உருவமா?  


நினதுருவா = உன்னுடைய உருவமா ?



திருமாமகள் = அழகிய திருமகள் 


மருவும் = சேரும் 


சிறு புலியூர்ச் = சிறு புலியூர் 


சல சயனத்து = சயனித்து இருப்பவனே 



அருமாகட லமுதே! = அமுதம் நிறைந்த கடல் போன்றவனே 


உன தடியே = உனது அடிகளே 


சர ணாமே. = சரண் நாமே 


மேகத்தை நாம் பார்த்தால், நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அது போல காட்சி அளிக்கும். மான் போல, மயில் போல என்று எப்படி வேண்டுமானாலும் அது தோன்றும். அது மட்டும் அல்ல, பார்த்துக் கொண்டு இருக்கும் போதே உருவம் மாறும். 


அதற்கென்று ஒரு உருவம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. அது என்ன என்று கேட்டால் சொல்ல முடியாது. 


அது போல இறைவனும். இருக்கு, ஆனால் இல்லை. 


தீச் சுடரும், நீரும் அப்படித்தான். உருவம் இருப்பது போலத் தோன்றும். ஆனால் இது இன்ன வடிவம் என்று கூற முடியாது. 


மலையும் அப்படித்தான். நாம் அதை பார்த்துக் கொண்டு நகர்ந்து கொண்டே இருந்தால், அதன் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். இங்கிருந்து பார்த்தால் ஒரு வடிவம், கொஞ்ச தூரம் போய் அங்கிருந்து பார்த்தால் வேறு வடிவம். 


நான் சொல்லும் வடிவம் தான் சரி என்று ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை பிடித்துக் கொள்கிறார்கள். 


அங்கிருந்து பார்த்தால் அப்படி. இங்கிருந்து பார்த்தால் இப்படி. நேற்று பார்த்தால் ஒரு மாதிரி. இன்று வேறு மாதிரி. 


இதை நம்மால் பற்ற முடியாது. 


அறிவினால் இதை ஆராய்ந்து அறிய முடியாது. 


அன்பினால் திருமகள் அவனைப் பற்றி விட்டாள் என்கிறார் ஆழ்வார். எனவே, நமக்கும் அதுதான் வழி என்று அவன் திருவடிகளை சரண் அடைகிறார் அவர். 


அன்பினாலும், பக்தியாலும் உணர முடியும் என்று கூறுகிறாரோ?



Monday, July 24, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - விடாது கருப்பு

 திருக்குறள் - தீவினையச்சம் - விடாது கருப்பு 


தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதால் பலர் தவறு செய்வதில்லை. 


எந்தத் தவறுக்கும் தண்டனையே கிடையாது என்று வைத்துக் கொண்டால், தவறுகள் குறையுமா? கூடுமா?


இன்று பலர் தவறு செய்வதற்கு காரணம், சட்டத்தில் இருந்து தப்பி விடலாம் என்ற எண்ணம். ஒரு வேளை மாட்டிக் கொண்டாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள், வக்கீலின் சாமர்த்தியம், நிர்வாக குறைபாடுகள் இவற்றில் புகுந்து வெளியே வந்து விடலாம் என்ற தைரியம். 


வள்ளுவர் சொல்கிறார், தப்பிகவே முடியாத ஒரு சட்ட வரைமுறை இருக்கிறது. அது தான் வினைப்பயன். அதில் இருந்து தப்பவே முடியாது. தீவினை செய்தால் அது எங்கு சென்றாலும், விடாது வந்து நம்மைப் பற்றும் என்கிறார். 


பாடல் 


எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_24.html

(click the above link to continue reading)


எனைப்பகை = எந்த விதமான பகையை 


உற்றாரும் = உடையவர்களும் 


உய்வர் = அதில் இருந்து தப்ப வாய்ப்பு இருக்கிறது 


வினைப்பகை = வினை என்ற பகை (தீவினை) 


வீயாது = விடாமால் 


பின்சென்று அடும் = பின் சென்று பற்றும், வெல்லும், பலனைத் தரும் 


நமக்கு ஒரு பகைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனிடம் மன்னிப்பு கேட்டால், ஒரு வேளை அவன் நம்மை பெரிய மனது பண்ணி மன்னித்து விடலாம். அல்லது, அவன் ஏதோ ஒரு வகையில் பலம் குன்றி நம்மை ஒன்றும் செய்ய முடியாத ஒரு நிலைக்கு சென்று விடலாம், அல்லது நாம் மிக பலம் பெற்று அவனுடைய பகை பற்றி கவலைப் படாமல் நிம்மதியாக இருக்கலாம். 


எப்படியாவது தப்பிவிட முடியும். 


ஆனால், ஒருவருக்கு தீவினை செய்து விட்டால், அதனால் வரும் துன்பத்தில் இருந்து ஒருகாலும் தப்ப முடியாது. 


வீயாது என்றால் விடாமல். 


இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகளிலும் தொடரும். சில சமயம் சிலருக்கு நிகழும் துன்பங்களை பார்க்கும் போது, ஒன்றும் செய்யாத அப்பாவிகளுக்கும் ஏன் இவ்வளவு துன்பம் வருகிறது என்று நினைப்போம். யாருக்குத் தெரியும். என்று செய்தோ தீவினையோ இன்று வந்து பிடிக்கிறது. 


அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லாத்தானே இருக்கிறான் என்று சலிப்பவர்களுக்கு  வள்ளுவர் சொல்கிறார். இன்று அவன் நல்லா இருக்கலாம்.  அவன் செய்யும் தீவினைகள் அவனை ஒருக்காலும் விடாது. தொடர்ந்து கொண்டே இருக்கும். அவன் வலி குன்றிய நேரத்தில் அவனைப் பிடிக்கும். அப்போது தாங்க முடியாது.


எப்படியாவது தப்பிவிடலாம் என்று எண்ணவே கூடாது.  ஒருக்காலும் தப்ப முடியாது. 


எனவே, தீய வினைகள் செய்ய பயப்பட வேண்டும். 





Tuesday, July 18, 2023

கந்தரனுபூதி - அறியாமை பொறுத்திலை

 

கந்தரனுபூதி -   அறியாமை பொறுத்திலை 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பிள்ளை ஏதோ தவறு செய்து விடுகிறது. தாய் கண்டிக்கிறாள். அழுது கொண்டு போய் மூலையில் உட்கார்ந்து விடுகிறது. அழுது கொண்டே இருந்து, சாப்பிடாமல் அப்படியே சோர்ந்து தூங்கி விடுகிறது.


தாய் என்ன செய்வாள் ? போனா போகிறது என்று விடுவாளா? அல்லது, பிள்ளையை எழுப்பி, "வாப்பா, வந்து ஒரு வாய் சாப்பிட்டிட்டு போய் படு" என்று பிள்ளைக்கு ஊட்டுவாளா?


அது போல ஆண்டவனும், நாம் தவறு செய்தால் நம்மை மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கிறான். அதே சமயம், ஐயோ பாவம் என்று நம் மேல் அருள் கொண்டு, நம்மை பிறவித் துயரில் இருந்து விடுவிக்கவும் செய்கிறான். 


அருணகிரிநாதர் சொல்கிறார் 


"இந்த இல்லறம் என்ற மாயையில் நான் கிடந்து துன்பப் படுகிறேன். அதைக் கண்டு நீ பொறுக்கமாட்டாமல் வந்து எனக்கு உதவி செய்தாய். என்னே உன் கருணை" 


என்று. 


பாடல்  


இல்லே யெனு மாயையி லிட்டனை நீ 

பொல்லே னறியாமை பொறுத்திலையே 

மல்லே புரி பன்னிரு வாகுவிலென் 

சொல்லே புனையும் சுடர் வேலவனே 


பொருள் 



(pl click the above link to continue reading)



இல்லே யெனு = "இல்"லம் என்ற 


மாயையி லிட்டனை நீ = மாயையில் என்னை நீ இட்டாய். 
 

பொல்லே னறியாமை = போல்லாதவனாகிய என் அறியாமையை கண்டு 


பொறுத்திலையே = நீ கண்டு பொறுக்கமாட்டாமல், எனக்கு அருள் புரிந்தாய். 
 

மல்லே புரி  = மல்யுத்தம், சண்டை புரியும் 


பன்னிரு  = பன்னிரண்டு 


வாகுவிலென்  = பாகு என்றால் தோள். (பாகுபலி, பலமான தோள்களை உடையவன். ஆஜானுபாகு என்றால் கை தோளில் இருந்து முழங்கால் வரை நீண்டு இருக்கிறது என்று அர்த்தம். ஜானு என்றால் முழங்கால்). 


இங்கே 'பாகுவில் என்' என்றால் உன்னுடைய தோள்களில் 


சொல்லே புனையும் = என்னுடைய சொற்களை, அதாவது கவிதைகளை மலர் மாலை போல் சூடிக் கொள்ளும் 


சுடர் வேலவனே = ஒளி பொருந்திய வேலை உடையவனே 

 

 [


மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/1.html

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_24.html

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

கருதா மறவா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_23.html

வள்ளிபதம் பணியும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

அடியைக் குறியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

அருள் சேரவும் எண்ணுமதோ 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

அலையத் தகுமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post.html

நினைந்திலையோ  

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

மின்னே நிகர்வாழ்வை

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html

யானாகிய என்னை விழுங்கி 

]

Thursday, July 13, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - துன்பம் வேண்டாம் என்றால்

 திருக்குறள் - தீவினையச்சம் - துன்பம் வேண்டாம் என்றால் 


துன்பம் யாருக்கு வேண்டும்?


ஒருவரும் துன்பம் வேண்டும் என்று விரும்புவதில்லை. இருந்தும் துன்பம் வருகிறதே. ஏன்?


துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 


நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு வரும். அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? 


நல்லது செய்தால் நல்லது வரும், தீமை செய்தால் துன்பம் வரும். 


எனவே, துன்பம் வேண்டாம் என்றால் மற்றவருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும். 


இதைவிட எளிதாக இதை எப்படிச் சொல்ல முடியும்?


பாடல் 


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_13.html


(please click the above link to continue reading)


தீப்பால = தீயன 


தான் = ஒருவன் 


பிறர்கண் = பிறருக்கு 


செய்யற்க = செய்யாமல் இருக்க வேண்டும் 


நோய்ப்பால = துன்பம் 


தன்னை = ஒருவனை 


அடல் = நெருங்கி வர 


வேண்டா தான் = வேண்டாதவன், விரும்பாதவன் 


நமக்கு துன்பம் வருகிறது என்றால் நாம் எவ்வளவு பயப்படுவோம்? 


அதே அளவு நாம் பிறருக்கு துன்பம்/தீமை செய்யவும் பயப்பட வேண்டும். 


மற்றவரை திட்டும் போதும்,  மனதளவில் தீமை நினைக்கும் போதும், தீயவற்றை செயலாக்கும் போதும், நாம் பயப்படுவதில்லை. மாறாக சந்தோஷம் கொள்கிறோம். ஆனால், அது நமக்கே திரும்பி வரும் என்று நாம் நினைப்பதில்லை. 


வள்ளுவர் அதை நினைவு படுத்துகிறார். 


அடுத்த முறை யாரையாவது whatsapp இல் புண்படுத்தும் போதோ, மனம் புண் படும்படி பேசும்போதோ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் - இது திரும்பி வரும் என்று. 



Sunday, July 9, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - சிந்தையால், செயலால்

 கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - சிந்தையால், செயலால் 


இறந்து கிடக்கும் வாலி மேல், அங்கதன் விழுந்து புலம்புகிறான். 


என்னடா இது நாளும் கிழமையுமா சாவு, புலம்பல் என்று வாசிக்க வேண்டி இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றலாம். 


இறப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதி. அதைக் கண்டு வெறுத்து ஓடவோ, முகம் சுளிக்கவோ தேவையில்லை. மரணத்தை பற்றி பேசக் கூட கூடாது என்றால் வாழ்க்கை இரசிக்காது. 


அப்பாவோ, அம்மாவோ, வாழ்க்கைத் துணையோ ஒரு நாள் போய் விடப் போகிறார்கள் என்று நினைத்து அவர்களைப் பாருங்கள், அன்பு பெருகும். அவர்கள் இல்லாத வாழ்வு வெறுமையானது என்றால் இருக்கும் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் அல்லவா?  இருக்கிறதா?  பெரும்பாலும் இருப்பது இல்லை. காரணம், நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், 'பிரிவே வராது' என்று. 


மரணம் வரும், பிரிவு வரும் என்று நினைத்தால் இருப்பவற்றின் மேல் பற்றும் பாசமும் பெருகும். 


நாமும் ஒரு நாள் போய் விடுவோம் என்ற எண்ணம் இருந்தால் இத்தனை சண்டை, சச்சரவு, பொறாமை, கோபம், தாபம் எல்லாம் வருமா?  இருக்கின்ற கொஞ்ச நாளை இனிமையாக கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அல்லவா?  


அது ஒரு புறம் இருக்கட்டும். 



அங்கதன் சொல்கிறான் ,


"அப்பா, நீ யாருக்கும் ஒரு தீங்கும் செய்யாதவன் ஆயிற்றே. உனக்கு இப்படி ஒரு நிலையா?  உன்னைப் பார்த்தால் எமனும் நடுங்குவானே.  அந்த எமனுக்கு எப்படி தைரியம் வந்தது உன் உயிரைக் கொண்டு போக.  உன் உயிரையே பயம் இல்லாமல் கொண்டு போய் விட்டான் என்றால், இனி அவன் யாருக்குப் பயப்படுவான்?"


என்று. 


பாடல் 


'எந்தையே! எந்தையே! இவ் எழு

      திரை வளாகத்து, யார்க்கும்,

சிந்தையால், செய்கையால், ஓர்

      தீவினை செய்திலாதாய்!

நொந்தனை! அதுதான் நிற்க, நின்

      முகம் நோக்கிக் கூற்றம்

வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர்

      அதன் வலியைத் தீர்ப்பார்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_9.html


(pl click the above link to continue reading)



'எந்தையே! எந்தையே!  = என் தந்தையே, என் தந்தையே 


இவ்  = இந்த 

எழு திரை = திரை என்றால் அலை. ஏழு கடல் அல்லது கடல் சூழ்ந்த  


வளாகத்து = உலகில் 


யார்க்கும் = யாருக்கும் 


சிந்தையால் = மனத்தால் 


செய்கையால் = செயலால் 


ஓர் = ஒரு 


தீவினை = தீமை 


செய்திலாதாய்! = நீ செய்தது கிடையாது 


நொந்தனை!  = உனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டது 


அதுதான் நிற்க = அது ஒரு புறம் இருக்கட்டும் 


நின் = உன் 


முகம் நோக்கிக் = முகத்தைப் பார்த்து 


 கூற்றம் = எமன் 


வந்ததே அன்றோ, = வந்தானே 


அஞ்சாது? = அச்சமில்லாமல் 


ஆர் = யார் 

 

அதன் வலியைத் = எமனின் வலிமையை 


தீர்ப்பார்? = எதிர் கொள்ள முடியும் இனி 




Thursday, July 6, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - இலன் என்று

 திருக்குறள் - தீவினையச்சம் - இலன் என்று 


நாம் ஏன் சில தீமைகளைச் செய்கிறோம் என்றால் வறுமை ஒரு காரணம். பசி, மருத்துவ செலவுக்கு பணம் இல்லை, பிள்ளை படிப்புக்கு பணம் இல்லை, எனவே இலஞ்சம் வாங்கினேன், திருடினேன், கொள்ளியடித்தேன் என்று சிலர் கூறுவார்கள். 


அவர்கள் கூறுவது ஞாயம் போலத் தெரியும். 


வறுமையில் இருப்பவர்களை தீயவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். நீ இதைச் செய், உனக்கு இவ்வளவு பணம் தருகிறேன் என்று ஆசை காட்டுவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார் 


"என்னிடம் பணம் இல்லை, வறுமையில் வாடுகிறேன் என்று எண்ணி தீயவை செய்து விடாதே. அப்படிச் செய்தால், உன் வறுமையினால் உள்ள துன்பத்தோடு கூட மேலும் பல துன்பங்கள் வந்து சேரும்"  என்கிறார். 



பாடல் 


இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_6.html


(please click the above link to continue reading)



இலன்என்று = இல்லை என்று. பொருள் இல்லை என்று 


தீயவை  = தீயனவற்றை (களவு, கொலை, கொள்ளை போன்றவை) 


செய்யற்க = செய்யக் கூடாது 


செய்யின் = செய்தால் 


இலன்ஆகும் = இல்லாமல் போகும் 


மற்றும் = மற்றும் 


பெயர்த்து = மேலும், மறுபடியும், பின்பும் 


முதலில் வறுமை இருந்தது. ஏதாவது தவறு செய்தால், தண்டனை வரும், பழி வரும், இருக்கிற பணமும் வக்கீல், நீதி மன்றம், வழக்கு, வாய்தா என்று போகும். சமுதாயத்தில் பழிச் சொல் வரும். கெட்டவன் என்ற முத்திரை விழும். நல்லவர்கள் அவனோடு சேர மாட்டார்கள். நல்ல வாய்புகள் பறிபோகும். தீயவர் சகவாசம் வரும். மேலும் பல தீமைகளைச் செய்யத் தூண்டும். 


"பெயர்த்து" என்ற சொல்லுக்கு மேலும், பின்பும், மறுபடியும் என்று பொருள் சொல்கிறார்கள். அதன் விரிவு என்ன என்றால், இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, பின் வரும் பிறவிகளிலும் இந்தப் பாவம் தொடரும் என்பது. 


ஒரு பிறவியில் கொஞ்சம் பொருள் வேண்டி, பல பிறவிகளில் துன்பம் அனுபவிப்பது சரியான செயலா?  


முந்தைய குறளில் "மறந்தும் பிறன் கேடு சூழற்க" என்றார். 


எங்கே, "வறுமையின் காரணமாக தீங்கு செய்யாதே" என்கிறார். 


வறுமையைக் காரணம் காட்டி தீங்கு செய்யாதே என்கிறார் வள்ளுவர். 







Wednesday, July 5, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - கனலும், நீரும், குருதியும்

 கம்ப இராமாயணம்  - அங்கதன் புலம்பல் -  கனலும், நீரும், குருதியும் 


ஆண்களால் உணர்சிகளை எளிதில் வெளிக் காட்ட முடிவதில்லை. ஆரம்பம் முதலே ஒரு மாதிரியாக முரட்டுத் தனமாக வளர்ந்து விடுகிறார்கள். வேட்டையாடி, போர் செய்து, அந்தக் குணம் படிந்து போய் விட்டது போலும். 


அதிலும், குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவு ரொம்பவும் சிக்கலானது என்றே தோன்றுகிறது. தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு மிக மிக மென்மையானது. இனிமையானது. அதே தந்தை மகன் என்று வரும்போது ஒரு கடுமை காட்டுவதும், உள்ளுக்குள் உருகுவதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். 


உங்கள் தனி வாழ்வில் உங்கள் அனுபவம் வேறு மாதிரி இருக்கலாம். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாலி இறந்து கிடக்கிறான். 


வாலியின் மகன் அங்கதன் வந்து வாலியின் மேல் விழுந்து புலம்புகிறான். 


ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். இரு புறம் தந்தையை மற்றவர்கள் கொன்று விட்டார்களே என்ற கோபம். இன்னொரு புறம் தந்தையின் வீரத்தின் மேல் உள்ள பெருமிதம். இன்னொரு புறம் போய் விட்டானே என்ற வெறுமை/ஏமாற்றம். 


அத்தனை உணர்வுகளையும் தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கிறான் கம்பன். 



பாடல் 


கண்ட கண்  கனலும் நீரும்

      குருதியும் கால, மாலை,

குண்டலம் அலம்புகின்ற குவவுத்

      தோள் குரிசில், திங்கள்

மண்டலம் உலகில் வந்து கிடந்தது;

      அம் மதியின் மீதா

விண்தலம் தன்னின் நின்று ஓர்

      மீன் விழுந்தென்ன, வீழ்ந்தான்.


பொருள் 


(please click the above link to continue reading)


கண்ட கண் = வாலியைக் கண்ட அங்கதன் கண்கள் 


கனலும் = நெருப்பையும் (கோபத்தால்) 


நீரும் = கண்ணீரும் (துக்கத்தால்) 

 

குருதியும் = இரத்தமும் (எதிரிகளை பழி வாங்க வேண்டும் என்ற ஆங்காரமும்) 


கால = வழிய 


மாலை = கழுத்தில் அணிந்த மலர் மாலை 


குண்டலம் = காதில் அணிந்த குண்டலம் 


அலம்புகின்ற = அசைந்து, தழுவி, புரளிகின்ற 


குவவுத் = பெரிய 


தோள்  = தோள்களை உடைய 


குரிசில் = ஆண்மகன் 


திங்கள் மண்டலம் = ஒளி பொருந்திய நிலவு 


உலகில் வந்து கிடந்தது = தரையில் விழுந்து கிடக்க 


அம் மதியின் மீதா = அந்த நிலவின் மீது 


விண்தலம்  தன்னின் நின்று = விண்ணில் இருந்து 


   ஓர் = ஒரு 


மீன் = விண்மீன், நட்சதிரம் 


விழுந்தென்ன = விழுந்தது போல 


வீழ்ந்தான் = விழுந்தான் 


ஆற்றல் மிக்க தகப்பன். அன்பு கொண்ட மகன். அகால மரணம். 


உணர்வுகளின் உச்சம். கம்பனின் கவிதை அந்த உணர்வுக் கொந்தளிப்பை கொஞ்சம் கூட குறைக்காமல் நம் மனதில் பதியும்படி செய்கிறது. 


மற்ற கவிதைகளையும் பார்ப்போம். 



Sunday, July 2, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - மறந்தும் பிறன் கேடு சூழற்க

 திருக்குறள் - தீவினையச்சம் - மறந்தும் பிறன் கேடு சூழற்க 


ஏன் மற்றவர்களுக்கு நாம் தீமை செய்கிறோம்? மற்றவர்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நமக்கு ஒன்றும் பெரிய ஆசை இல்லை. இருந்தும் செய்கிறோம். 


காரணம் என்ன?


அதை எப்படி தவிர்ப்பது என்று வள்ளுவர் ஆராய்ந்து நமக்குச் சொல்கிறார். 


முதல் காரணம் - மறதி. 


தெரியாம சொல்லிட்டேன். நானா அப்படிச் செய்தேன், அப்படி சொன்னேன் என்று நாமே பலமுறை நினைத்து இருப்போம். என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்ற ஞாபகமே இருக்காது. யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்ற  நினைவு இருக்காது. 


அது ஒரு வித மறதி. 


இன்னொன்று, இப்படி பேசினால், செய்தால் நமக்கு தீமை வரும் என்ற நினைவு, இல்லாமல் பேசி விடுவது, செய்து விடுவது. 


"அவன் நாசாமா போகனும்" நு மனதுக்குள் நினைப்போம். அப்படி நினைப்பது கூட நமக்கு தீமை செய்யும் என்று அறியாமல் செய்து விடுவது. 


சரி, ஞாபக மறதியா ஒரு தீங்கு செய்து விட்டால் என்ன ஆகும்? தெரியாமல் செய்வது ஒரு குற்றமா? என்று கேட்டால், சட்டம் ஒரு வேளை மன்னித்து விடலாம். அறம் ஒரு போதும் மன்னிக்காது. 


நீ ஒருவனுக்கு தீங்கு நினைத்தால், அறக் கடவுள் உனக்கு தீங்கு நினைப்பார் என்கிறார் வள்ளுவர். 


பாடல்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post.html


(pl click the above link to continue reading)




மறந்தும் = மறந்து போய் கூட 


பிறன்கேடு = பிறருக்கு கேட்டினை 


சூழற்க = நினைக்காதே 


சூழின் = நீ நினைத்தால் 


அறம்சூழும் = அறக்கடவுள் நினைக்கும் 


சூழ்ந்தவன் = அப்படி மற்றவருக்கு கேட்டினை நினைத்தவனின் 


கேடு = கேட்டினை 


இந்த அறக் கடவுள் நம்மை மாதிரித்தானா?  நல்லது செய்தால் நல்லது செய்வார், தீமை செய்தால் பதிலுக்கு தீமை செய்வார். அவரும் நம்மைப் போலத்தானா?  என்று ஒரு கேள்வி வரும். 


நாம் மற்றவருக்கு தீமை நினைத்தால், அறக் கடவுள் நமக்கு தீமை நினைப்பார் என்றால் நினைத்து விட்டுப் போகட்டும். என்ன இப்ப? என்று நினைக்கலாம். 


பரிமேலழகர் உரை இல்லமால் இதற்கு எல்லா பதில் சொல்ல முடியாது. 


பரிமேலழகர் சொல்கிறார்:


"நீ மற்றவனுக்கு தீமை நினைக்கிறாய். அந்த தீமையை உன்னால் செயல் படுத்த முடியுமோ இல்லையோ தெரியாது. பெரிய அரசியல் தலைவர் செய்வது சரி அல்ல. அவரால்எனக்கு பெரிய பாதிப்பு. அவருக்கு ஏதாவது செய்யணும் என்று நினைத்தால் முடியுமா? முடியாது. ஆனால், நீ எப்போது மற்றவருக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்போதே அறக் கடவுள் உனக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைப்பார். உன்னால் நீ நினைத்ததை செய்ய முடியாமல் போகலாம். ஆனால், அறக் கடவுள் நினைத்தால் அவர் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர். எனவே, அவர் உனக்கு கட்டாயம் தீங்கு செய்து விடுவார். அது எப்படி என்றால், இவனிடம் நல்ல குணம் இல்லை. இவனை விட்டுப் போய் விடுவதே நல்லது என்று நினைத்து உன்னை விட்டு அவர் போய் விடுவார். அறக் கடவுள் உன்னை விட்டு போய் விட்டால் உனக்கு துன்பங்கள் தானே வரும்" 


என்பது கருத்து. 


எப்படி யோசித்து இருக்கிறார்கள். 


"சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்."


என்பது பரிமேலழகர் உரை. 


எனவே, பிறருக்கு தீமையை மறந்தும் கூட நினைக்கக் கூடாது. 


இப்போதெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு தீமை வரும் என்று சொல்லவே வேண்டாம்.