Sunday, July 9, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - சிந்தையால், செயலால்

 கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - சிந்தையால், செயலால் 


இறந்து கிடக்கும் வாலி மேல், அங்கதன் விழுந்து புலம்புகிறான். 


என்னடா இது நாளும் கிழமையுமா சாவு, புலம்பல் என்று வாசிக்க வேண்டி இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றலாம். 


இறப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதி. அதைக் கண்டு வெறுத்து ஓடவோ, முகம் சுளிக்கவோ தேவையில்லை. மரணத்தை பற்றி பேசக் கூட கூடாது என்றால் வாழ்க்கை இரசிக்காது. 


அப்பாவோ, அம்மாவோ, வாழ்க்கைத் துணையோ ஒரு நாள் போய் விடப் போகிறார்கள் என்று நினைத்து அவர்களைப் பாருங்கள், அன்பு பெருகும். அவர்கள் இல்லாத வாழ்வு வெறுமையானது என்றால் இருக்கும் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் அல்லவா?  இருக்கிறதா?  பெரும்பாலும் இருப்பது இல்லை. காரணம், நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், 'பிரிவே வராது' என்று. 


மரணம் வரும், பிரிவு வரும் என்று நினைத்தால் இருப்பவற்றின் மேல் பற்றும் பாசமும் பெருகும். 


நாமும் ஒரு நாள் போய் விடுவோம் என்ற எண்ணம் இருந்தால் இத்தனை சண்டை, சச்சரவு, பொறாமை, கோபம், தாபம் எல்லாம் வருமா?  இருக்கின்ற கொஞ்ச நாளை இனிமையாக கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அல்லவா?  


அது ஒரு புறம் இருக்கட்டும். 



அங்கதன் சொல்கிறான் ,


"அப்பா, நீ யாருக்கும் ஒரு தீங்கும் செய்யாதவன் ஆயிற்றே. உனக்கு இப்படி ஒரு நிலையா?  உன்னைப் பார்த்தால் எமனும் நடுங்குவானே.  அந்த எமனுக்கு எப்படி தைரியம் வந்தது உன் உயிரைக் கொண்டு போக.  உன் உயிரையே பயம் இல்லாமல் கொண்டு போய் விட்டான் என்றால், இனி அவன் யாருக்குப் பயப்படுவான்?"


என்று. 


பாடல் 


'எந்தையே! எந்தையே! இவ் எழு

      திரை வளாகத்து, யார்க்கும்,

சிந்தையால், செய்கையால், ஓர்

      தீவினை செய்திலாதாய்!

நொந்தனை! அதுதான் நிற்க, நின்

      முகம் நோக்கிக் கூற்றம்

வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர்

      அதன் வலியைத் தீர்ப்பார்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_9.html


(pl click the above link to continue reading)



'எந்தையே! எந்தையே!  = என் தந்தையே, என் தந்தையே 


இவ்  = இந்த 

எழு திரை = திரை என்றால் அலை. ஏழு கடல் அல்லது கடல் சூழ்ந்த  


வளாகத்து = உலகில் 


யார்க்கும் = யாருக்கும் 


சிந்தையால் = மனத்தால் 


செய்கையால் = செயலால் 


ஓர் = ஒரு 


தீவினை = தீமை 


செய்திலாதாய்! = நீ செய்தது கிடையாது 


நொந்தனை!  = உனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டது 


அதுதான் நிற்க = அது ஒரு புறம் இருக்கட்டும் 


நின் = உன் 


முகம் நோக்கிக் = முகத்தைப் பார்த்து 


 கூற்றம் = எமன் 


வந்ததே அன்றோ, = வந்தானே 


அஞ்சாது? = அச்சமில்லாமல் 


ஆர் = யார் 

 

அதன் வலியைத் = எமனின் வலிமையை 


தீர்ப்பார்? = எதிர் கொள்ள முடியும் இனி 




No comments:

Post a Comment