Thursday, July 6, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - இலன் என்று

 திருக்குறள் - தீவினையச்சம் - இலன் என்று 


நாம் ஏன் சில தீமைகளைச் செய்கிறோம் என்றால் வறுமை ஒரு காரணம். பசி, மருத்துவ செலவுக்கு பணம் இல்லை, பிள்ளை படிப்புக்கு பணம் இல்லை, எனவே இலஞ்சம் வாங்கினேன், திருடினேன், கொள்ளியடித்தேன் என்று சிலர் கூறுவார்கள். 


அவர்கள் கூறுவது ஞாயம் போலத் தெரியும். 


வறுமையில் இருப்பவர்களை தீயவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். நீ இதைச் செய், உனக்கு இவ்வளவு பணம் தருகிறேன் என்று ஆசை காட்டுவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார் 


"என்னிடம் பணம் இல்லை, வறுமையில் வாடுகிறேன் என்று எண்ணி தீயவை செய்து விடாதே. அப்படிச் செய்தால், உன் வறுமையினால் உள்ள துன்பத்தோடு கூட மேலும் பல துன்பங்கள் வந்து சேரும்"  என்கிறார். 



பாடல் 


இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_6.html


(please click the above link to continue reading)



இலன்என்று = இல்லை என்று. பொருள் இல்லை என்று 


தீயவை  = தீயனவற்றை (களவு, கொலை, கொள்ளை போன்றவை) 


செய்யற்க = செய்யக் கூடாது 


செய்யின் = செய்தால் 


இலன்ஆகும் = இல்லாமல் போகும் 


மற்றும் = மற்றும் 


பெயர்த்து = மேலும், மறுபடியும், பின்பும் 


முதலில் வறுமை இருந்தது. ஏதாவது தவறு செய்தால், தண்டனை வரும், பழி வரும், இருக்கிற பணமும் வக்கீல், நீதி மன்றம், வழக்கு, வாய்தா என்று போகும். சமுதாயத்தில் பழிச் சொல் வரும். கெட்டவன் என்ற முத்திரை விழும். நல்லவர்கள் அவனோடு சேர மாட்டார்கள். நல்ல வாய்புகள் பறிபோகும். தீயவர் சகவாசம் வரும். மேலும் பல தீமைகளைச் செய்யத் தூண்டும். 


"பெயர்த்து" என்ற சொல்லுக்கு மேலும், பின்பும், மறுபடியும் என்று பொருள் சொல்கிறார்கள். அதன் விரிவு என்ன என்றால், இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, பின் வரும் பிறவிகளிலும் இந்தப் பாவம் தொடரும் என்பது. 


ஒரு பிறவியில் கொஞ்சம் பொருள் வேண்டி, பல பிறவிகளில் துன்பம் அனுபவிப்பது சரியான செயலா?  


முந்தைய குறளில் "மறந்தும் பிறன் கேடு சூழற்க" என்றார். 


எங்கே, "வறுமையின் காரணமாக தீங்கு செய்யாதே" என்கிறார். 


வறுமையைக் காரணம் காட்டி தீங்கு செய்யாதே என்கிறார் வள்ளுவர். 







No comments:

Post a Comment