Thursday, July 27, 2023

திருக்குறள் - நிழல் போல்

 திருக்குறள் - நிழல் போல் 


இந்த அற நூல்கள், நியாயம், தர்மம் என்பதில் எல்லாம் ஒரு நம்பிக்கை குறைந்து வரும் காலம் இது. 


தவறு செய்கிறவன் நன்றாக இருக்கிறான். நல்லது செய்பவன் துன்பப்படுகிறான். இதுதான் நடைமுறையில் காணக் கிடைக்கிறது. யாருக்கு நம்பிக்கை வரும்?


வள்ளுவர் சொல்கிறார்....அப்படி எண்ணாதே என்று. ஒருவனுடைய நிழல் எப்படி அவனை விட்டுப் போகாதோ, அது போல் ஒருவன் செய்த தீவனை அவனை விட்டு ஒரு போதும் நீங்காது. காத்திருக்கும். சரியான காலத்தில் தண்டிக்கும்.


பாடல்  

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_27.html


(pl click the above link to continue reading)



தீயவை = தீய வினைகளை 


செய்தார் = செய்தவர் 


கெடுதல் = கட்டாயம் கேட்டினை அடைவர்  என்பது 


நிழல்தன்னை = ஒருவனுடைய நிழல் 


வீயாது = விடாமல், நீங்காமல் 


அடி = அவன் அடிக்கீழேயே 


உறைந் தற்று = சேர்ந்து இருப்பது போன்றது 


உடம்போடு நிழல் இருப்பது எவ்வளவு உறுதியோ அது போல ஒருவனோடு அவன் வினையும் இருப்பது உறுதி என்கிறார். 


இதில் பல நுணுக்கங்கள் இருக்கிறது. 


ஒன்று, சில சமயம் நிழல் சிறிதாக, காணமல் போய் விடுவது உண்டு. ஆகா, நாம் தப்பி விட்டோம் என்று நினைக்கக் கூடாது. உச்சி வேளை சென்ற பின், மாலையில் அதே நிழல் மிக நீண்டு வரும். உடம்பில் வலு இருக்கும் போது, செல்வம் இருக்கும் போது, அதிகாரம் இருக்கும் போது செய்யும் தவறுகள், பின்னால் பெரிதாக வந்து தாக்கும். 


இரண்டாவது, ஒருவனுடைய நிழல் அவனைப் போலவே இருக்கும். அவன் நிழல் யானை போலவோ, குதிரை போலவோ இருக்காது. அதே போல், அவன் செய்த வினைகளுக்கு தக்கவாறு பலன் கிடைக்கும். கூடவும் செய்யாது, குறையவும் செய்யாது. 


மூன்றாவது, இரவில், வெளிச்சம் இல்லாத போது நிழல் தெரியாது. மறைந்து வாழ்ந்து விடலாம் என்று சிலர் நினைக்கலாம். என்றோ ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் போது, அந்த நிழல் உடனே வெளிப்படும். இத்தனை நாள், நேரம் மறைந்து இருந்த நிழல் உடனே வெளிப்படும் என்பது சர்வ நிச்சயம். அது போல, வினைகளுக்கு பயன் உண்டு என்பது சர்வ நிச்சயம். சில சமயம் அப்படி இல்லாதது போல தோன்றலாம். கட்டாயம் திரும்பி வரும். 


எனவே, உடனடியாக தண்டனை இல்லை என்று நினைத்து தீவினை செய்ய நினைக்கக் கூடாது. கட்டாயம் அது திரும்பி வரும் என்று நினைத்தால் தீ வினை செய்ய அச்சம் வரும். 


நான் இன்று ஒருவனை அடிக்கிறேன், திட்டுகிறேன் என்றால், அந்த அடியும், திட்டும் எனக்கு ஒரு நாள் திரும்பி கட்டாயம் வரும் என்றால் அதை நான் செய்வேனா?







1 comment:

  1. நிழல் உதாரணம் மிகப்பொருத்தம்

    ReplyDelete