Sunday, July 2, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - மறந்தும் பிறன் கேடு சூழற்க

 திருக்குறள் - தீவினையச்சம் - மறந்தும் பிறன் கேடு சூழற்க 


ஏன் மற்றவர்களுக்கு நாம் தீமை செய்கிறோம்? மற்றவர்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நமக்கு ஒன்றும் பெரிய ஆசை இல்லை. இருந்தும் செய்கிறோம். 


காரணம் என்ன?


அதை எப்படி தவிர்ப்பது என்று வள்ளுவர் ஆராய்ந்து நமக்குச் சொல்கிறார். 


முதல் காரணம் - மறதி. 


தெரியாம சொல்லிட்டேன். நானா அப்படிச் செய்தேன், அப்படி சொன்னேன் என்று நாமே பலமுறை நினைத்து இருப்போம். என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்ற ஞாபகமே இருக்காது. யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்ற  நினைவு இருக்காது. 


அது ஒரு வித மறதி. 


இன்னொன்று, இப்படி பேசினால், செய்தால் நமக்கு தீமை வரும் என்ற நினைவு, இல்லாமல் பேசி விடுவது, செய்து விடுவது. 


"அவன் நாசாமா போகனும்" நு மனதுக்குள் நினைப்போம். அப்படி நினைப்பது கூட நமக்கு தீமை செய்யும் என்று அறியாமல் செய்து விடுவது. 


சரி, ஞாபக மறதியா ஒரு தீங்கு செய்து விட்டால் என்ன ஆகும்? தெரியாமல் செய்வது ஒரு குற்றமா? என்று கேட்டால், சட்டம் ஒரு வேளை மன்னித்து விடலாம். அறம் ஒரு போதும் மன்னிக்காது. 


நீ ஒருவனுக்கு தீங்கு நினைத்தால், அறக் கடவுள் உனக்கு தீங்கு நினைப்பார் என்கிறார் வள்ளுவர். 


பாடல்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post.html


(pl click the above link to continue reading)




மறந்தும் = மறந்து போய் கூட 


பிறன்கேடு = பிறருக்கு கேட்டினை 


சூழற்க = நினைக்காதே 


சூழின் = நீ நினைத்தால் 


அறம்சூழும் = அறக்கடவுள் நினைக்கும் 


சூழ்ந்தவன் = அப்படி மற்றவருக்கு கேட்டினை நினைத்தவனின் 


கேடு = கேட்டினை 


இந்த அறக் கடவுள் நம்மை மாதிரித்தானா?  நல்லது செய்தால் நல்லது செய்வார், தீமை செய்தால் பதிலுக்கு தீமை செய்வார். அவரும் நம்மைப் போலத்தானா?  என்று ஒரு கேள்வி வரும். 


நாம் மற்றவருக்கு தீமை நினைத்தால், அறக் கடவுள் நமக்கு தீமை நினைப்பார் என்றால் நினைத்து விட்டுப் போகட்டும். என்ன இப்ப? என்று நினைக்கலாம். 


பரிமேலழகர் உரை இல்லமால் இதற்கு எல்லா பதில் சொல்ல முடியாது. 


பரிமேலழகர் சொல்கிறார்:


"நீ மற்றவனுக்கு தீமை நினைக்கிறாய். அந்த தீமையை உன்னால் செயல் படுத்த முடியுமோ இல்லையோ தெரியாது. பெரிய அரசியல் தலைவர் செய்வது சரி அல்ல. அவரால்எனக்கு பெரிய பாதிப்பு. அவருக்கு ஏதாவது செய்யணும் என்று நினைத்தால் முடியுமா? முடியாது. ஆனால், நீ எப்போது மற்றவருக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்போதே அறக் கடவுள் உனக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைப்பார். உன்னால் நீ நினைத்ததை செய்ய முடியாமல் போகலாம். ஆனால், அறக் கடவுள் நினைத்தால் அவர் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர். எனவே, அவர் உனக்கு கட்டாயம் தீங்கு செய்து விடுவார். அது எப்படி என்றால், இவனிடம் நல்ல குணம் இல்லை. இவனை விட்டுப் போய் விடுவதே நல்லது என்று நினைத்து உன்னை விட்டு அவர் போய் விடுவார். அறக் கடவுள் உன்னை விட்டு போய் விட்டால் உனக்கு துன்பங்கள் தானே வரும்" 


என்பது கருத்து. 


எப்படி யோசித்து இருக்கிறார்கள். 


"சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்."


என்பது பரிமேலழகர் உரை. 


எனவே, பிறருக்கு தீமையை மறந்தும் கூட நினைக்கக் கூடாது. 


இப்போதெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு தீமை வரும் என்று சொல்லவே வேண்டாம். 



No comments:

Post a Comment