Saturday, November 29, 2014

தேவாரம் - சிலையாளி மலையாளி

தேவாரம் - சிலையாளி மலையாளி 


ஞான சம்பந்தர் திருவையாறு என்ற தலத்திற்குப் போகிறார்.

அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.

ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.

அங்குள்ள கரும்புகளில் கணுக்கள் இருக்கின்றன. அவற்றை கண் என்றும் சொல்லுவார்கள்.

கண் என்ன செய்யும் ?

பார்க்கும், அல்லது மூடித் தூங்கும்.

அவர் பார்க்கும் போது அந்த கரும்பின் கண்கள் எல்லாம் தூங்குவது போலத் தோன்றிற்று.

ஏன் தூங்க வேண்டும் ?

குளிர்ந்த , வாசமான தென்றல் காற்று சிலு சிலுவென வீசுகிறது.

அது மட்டும் அல்ல, அங்குள்ள சோலைகளில் உள்ள குயில்கள் இனிமையாக குரல் எழுப்புகின்றன. அது தாலாட்டு மாதிரி இருக்கிறது.

தென்றல் வருட, குயில் பாட...தூக்கத்திற்கு கேட்பானேன்.

அந்த மாதிரி கரும்பின் கண் வளரும் திருவையாற்றில் யார் இருக்கிறார் தெரியுமா ?

வானில் பறக்கும் மூன்று உலகங்களைச் செய்து அவற்றின் மூலம் மற்றவர்களுக்குத் துன்பம் தந்ததால் அவற்றை அழிக்க அம்பு தொடுத்த, கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.

பாடலைப் பாருங்கள்

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு 
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

சீர் பிரித்த பின்

நின்று உலாவும் நெடு விசும்பு நெருக்கி வரு புர மூன்று நீள்வாய் அம்பு  
சென்று உலாம் படி தொட்ட சிலையாளி மலையாளி சேருங் கோயில்
குன்றெல்லாம்  குயில் கூவக் கொழும் பிரச மலர் பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடி வருடச்  செழுங் கரும்பு கண் வளரும்  திருவையாறே.


பொருள்

நின்று உலாவும் = ஒரு இடத்தில் நில்லாமல் எங்கும் பறந்து திரியும்

நெடு விசும்பு = நீண்ட வானத்தில்

நெருக்கி வரு = ஒன்றாகச் சேர

புர மூன்று = மூன்று உலகங்களையும்

நீள்வாய் = நீண்ட

அம்பு சென்று உலாம் படி = அம்பு சென்று தைக்கும் படி

தொட்ட = விட்ட

சிலையாளி = வில்லைக் கொண்டவன்

மலையாளி  = கைலாய மலையில் இருக்கும் சிவன்

சேருங் கோயில் = வந்து அடையும் கோயில்

குன்றெல்லாம்  = எல்லா குன்றுகளிலும்

குயில் கூவக் = குயில்கள் கூவ

கொழும் = சிறந்த

பிரச = தென்

மலர் பாய்ந்து = மலரின் மேல் சென்று

வாசமல்கு = வாசத்தைப் பெற்றுக் கொண்டு

தென்றலார் = தென்றல் காற்றானது

அடி வருடச் = பாதத்தை வருட

செழுங் கரும்பு = வளர்ந்த கரும்பு

கண் வளரும் = கண்கள் தூங்கும்

திருவையாறே = திருவையாறே

ஏதோ கோவிலுக்குப் போனோம்,  அர்ச்சனை பண்ணினோம், பிரகாரத்தை நாலு முறை  வலம் வந்தோம் , பஸ்ஸைப் பிடித்து ஊர் வந்தோம் என்று இல்லாமல், அங்குள்ள இயற்கையை  இரசிக்கிறார்.

இறைவன் என்பவன் கோவிலுக்கு உள்ளே மட்டும் இருப்பவன் அல்ல.  எங்கும் நீக்கமற  நிறைந்து இருப்பவன்.

எங்கோ உள்ள குன்று, அதில் கண்ணுக்குத் தெரியாத குயில், அது பாடும் இசை,  தலை வருடும் பூங்காற்று, அதில் தவழ்ந்து வரும் இசை, அது கேட்டு கண் வளரும்  கரும்பு....இது எல்லாம் சேர்ந்ததுதான் இறைவன்.

இந்த பிரமாண்டமான இயற்கைதான் இறைவன்.

இறைவனை கோவிலுக்குள் மட்டும் தேடாதீர்கள். கோவிலுக்கு வெளியேயும் அவன்  தான்.

தேவாரம் ,  இப்படி எத்தனையோ அருமையான பாடல்களைக் கொண்டது.

நேரம் இருப்பின் மூலத்தைப் படித்துப் பாருங்கள்.

கொட்டி கிடக்கிறது. அள்ளிக் கொள்ளுங்கள்.

   .

1 comment:

  1. கடைசி இரண்டு வரிகளின் கற்பனை அருமை! திருஞான சம்பந்தர் எல்லோரையும்விட அழகாக இயற்கையைப் பற்றி எழுதியுள்ளார் போல இருக்கிறது!

    ReplyDelete