Wednesday, December 7, 2016

நாலடியார் - வழும்பருக்கில்லா தேரை

நாலடியார் - வழும்பருக்கில்லா தேரை 



சிலர் நிறைய புத்தகங்கள் வாசிப்பார்கள். பெரியவர்கள் பேசிய சொற்பொழிவுகளை கேட்பார்கள். அவர்கள் வீட்டுக்குப் போனால் எங்கு பார்த்தாலும் புத்தகமாய் இருக்கும். படித்தத்தில் பல மனப்பாடம் கூட ஆகி இருக்கும். பல புத்தகங்களில் இருந்து மேற் கோள் காட்டுவார்கள்.

ஆனால், நடை முறை வாழ்க்கை என்னவோ ஒன்றும் படிக்காதவன் வாழ்க்கை மாதிரித்தான் இருக்கும். "இவ்வளவு எல்லாம் படிக்கிறீர்களே , நீங்கள் செய்வதற்கும் படித்ததற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே " என்று கேட்டால் "அதெல்லாம் படிக்க நல்லா இருக்கும்...நடை முறைக்கு சாத்தியம் இல்லை.." என்று படித்ததை எல்லாம் தள்ளி வைத்து விடுவார்கள்.

இந்த தவளை இருக்கிறதே, அது குளத்தில் வாழும். குளத்தில் நல்ல தண்ணீர் தான் இருக்கும். இருந்தும், அதன் முதுகு என்னவோ அழுக்கு ஏறி வழுக்கும் படி இருக்கும். தன் உடம்பில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யத் தெரியாது. அழுக்காக அலையும்.

அது போல, நிறைய படித்தும் கேட்டும் இருந்தும், மன அழுக்கு நீங்காமல் திரிபவர்கள் பலர்.

பாடல்

செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்

தேர்கிற்கும் பெற்றி அரிது.


பொருள்

செழும்பெரும் = செழுமையான பெரிய

பொய்கையுள் = குளத்தில்

வாழினும் = வாழ்ந்தாலும்

என்றும் = என்றும்

வழும்பறுக்க = வழும்பு என்றால் அழுக்கு. அழுக்கை போக்கிக் கொள்ளாத

கில்லாவாந் தேரை:= செய்யாதாம் தேரை

வழும்பில்சீர் = குற்றம் அற்ற உயர்ந்த

நூல்கற்றக் கண்ணும் = நூல்களை கற்ற பின்னும்

நுணுக்கமொன் றில்லாதார் = நுணுக்கம் ஒன்று இல்லாதவர்கள்


தேர்கிற்கும் பெற்றி அரிது = தன்னை தேர்ச்சி கொள்ளச் செய்து கொள்ளும் வன்மை இல்லாமல் இருப்பார்கள்

இந்தப் பாடல், கயமை என்ற அதிகாரத்தில் வருகிறது.

பல படித்தும் அதை தம் வாழ்வில் கடை பிடிக்காதவர்கள் கயவர்கள்.

இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது என்ன என்றால்

"நுணுக்கமொன் றில்லாதார்"

நூலை மேலோட்டமாக படித்து விட்டு செல்பவர்கள். நுணுக்கமாக  ஆராயாதவர்கள். நூலில் சொல்லப் பட்ட உண்மைகளை, ஆழ்ந்த கருத்துக்களை  அறியாதவர்கள் தங்கள் குறைகளை போக்கிக் கொள்ள மாட்டார்கள்.

இரண்டாவது அர்த்தம்,  நுணுக்குதல் என்றால் நுண்ணியமாக வேலை செய்தல் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது, படித்தவற்றில் உள்ளவற்றை , நமது  வாழ்க்கைக்கு ஏற்றவாறு ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  அப்படியே எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது.

மூன்றாவது,

கற்க கசடு அற , கற்பவை, கற்ற பின், நிற்க அதற்குத் தக 

என்றார் வள்ளுவர். படித்தவற்றை , அப்படியே பின் பற்றக் கூடாது. அது வாழ்க்கைக்கு எப்படி  பயன்படும் என்று அறிந்து பயன்படுத்த வேண்டும்.

நான்காவது, நுணுகுதல் என்றால் கூர்மையாக்குதல் என்று பொருள். படிக்க படிக்க அறிவு கூர்மையாக வேண்டும். மேலோட்டமான அறிவு எல்லோருக்கும் இருக்கும். ஆழ்ந்த அறிவு, கூர்மையான அறிவு வளர வேண்டும்.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே " என்பார் மணிவாசகப் பெருந்தகை 


உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

என்பது திருவாசகம்

இன்றிலிருந்து ஒரு உறுதி மொழி எடுத்துக்  கொள்ளுங்கள்.

எது தேவையோ அதை மட்டுமே படிப்பது என்றும், படித்ததில் உள்ளவற்றை ஆராய்ந்து அதன்படி நடப்பது என்றும்.

படித்தபடி நடக்காவிட்டால் , படித்து என்ன பலன் ? எதைக் கேட்டாலும், இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று ஒதுக்கி விடுவதென்றால், படித்து நேரத்தை ஏன் விரயமாக்க வேண்டும் ? படிக்காமல் இருந்தால் , அந்த நேரமாவது மிச்சப்படுமே. காலத்தை வீணடிப்பானேன் ? ஏதோ பெரிய புத்தகங்களை எழுதினவர்கள் எல்லாம் நடை முறையில் நடக்கக் கூடியது எது, நடக்க முடியாதது என்று தெரியாதவர்கள் போலவும், நாம் தான் அனைத்தும் அறிந்தவர்கள் போலவும் நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும்.


ஏன் நுணுக்கமாக அறிய வேண்டும் ? புத்தி ஏன் கூர்மையாக இருக்க வேண்டும் ?

புலன்களும் புத்தியும் கூர்மையாக கூர்மையாக அவற்றிற்கு பின்னால் உள்ள உண்மை புலப்படும்.

சப்தம் வருகிறது. சங்கீத ஞானம் உள்ளவனுக்கு அதில் உள்ள இராகம், தாளம், பாவம், லயம், சுருதி எல்லாம் தெரியும். சங்கீத அறிவு இல்லாதவனுக்கு அது ஒரு சப்தம் அவ்வளவுதான். அறிவு கூர்மையாகும் போது சத்தம் சங்கீதமாகும்.

 இரைச்சலான இந்த உலகத்தின் பின்னால் இருக்கும் இனிய சங்கீதம் தெரிய வேண்டும் என்றால் , புத்தியை கூர்மை படுத்த வேண்டும்.

நுணுகி ஆராயுங்கள். உண்மை வெளிப்படும். பிரபஞ்சம் புலப்படும்.


கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா 
வெளியே, வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே! 
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!

என்று பட்டர் சொன்னது போல , உங்கள் அறிவின் அளவுக்குள் இந்த பிரபஞ்சம் வசப்படும்.






No comments:

Post a Comment