Sunday, August 31, 2014

பட்டினத்தார் பாடல்கள் - கருப்பையூர் வாராமல் கா

பட்டினத்தார் பாடல்கள் - கருப்பையூர் வாராமல் கா 


எத்தனை எத்தனையோ புத்தகங்கள் வாசிக்கிறோம். யார் யார் சொல்வதேல்லாமோ கேட்கிறோம். எல்லாம் சரி என்று பட்டாலும், நம் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் இல்லை.

"இதெல்லாம் கேக்க படிக்க நல்லா இருக்கும்...நடை முறைக்கு சரிப் படுமா " என்று ஒதுக்கி தள்ளிவிட்டு வேலையைப் பார்க்க போய் விடுகிறோம்.

ரொம்ப ஒண்ணும் படிக்க வில்லை - ஒரே ஒரு வரிதான் படித்தார் பட்டினத்தார் - ஒம்பது கோடி சொத்தை ஒரே நாளில் உதறி விட்டு கிளம்பி விட்டார்.

அவர் வாசித்த  அந்த ஒரு வரி "காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடைவழிக்கே"

ஒரு பொறி பட்டது. கற்பூரம் பற்றிக் கொண்டது.

அவர் பாடிய ஒரு பாடல் கீழே.


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் 
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா 
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை 
கருப்பையூர் வாராமற் கா

நாம் பாட்டுக்கு பிறந்து விடுகிறோம். நம்மால் எவ்வளவு பேருக்கு வலி, எவ்வளவு  பேருக்கு சங்கடம், அலுப்பு, சலிப்பு.

ஒவ்வொரு முறை நாம் பிறக்கும் போதும் ஒரு அன்னை நம்மை சுமக்க வேண்டி இருக்கிறது. சுமந்து பெற்றால் மட்டும் போதுமா ? பாலூட்டி, கண் விழித்து, வளர்க்க வேண்டி இருக்கிறது. அவளின் உடல் என்ன பாடு பாடும். ஏதோ ஒரு முறை   என்றால் பரவாயில்லை. எத்தனை பிறவிகள், எத்தனை தாய் வயிற்றில்  பிறந்து அவளை சங்கடப் படுத்துகிறோம்.

நாம் ஒவ்வொரு முறை பிறக்கும் போதும் பிரம்மா நம் தலையில் விதியை எழதி  அனுப்பிகிறான். எழுதி எழுதி அவனுக்கும் கை சலித்து போய் இருக்கும். அத்தனை  பிறவிகள்.

பிறந்த பின் சும்மா இருக்க முடிகிறதா. அங்கும் இங்கும் எங்கும் அலைந்து திரிகிறோம்.  நடையாய் நடந்து கால் சலித்துப்  போகிறோம்.

எல்லாம் போதும், இருப்பையூர் வாழும் சிவனே, இன்னும் ஓர் அன்னையின் கருப்பையில்  வாராமல் என்னை காத்தருள்வாய்.


இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 5

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 5


அசோக வனத்தில் உள்ள சீதையிடம் இராவணன் தொடர்ந்து பேசுகிறான்.

"அற வழியில் வந்த செல்வம் போன்றவளே. அமிழ்தை விட இனிமையானவளே. என்னை பிறக்காதவன் என்று ஆக்க  வந்தவளே.என் மானம் போக, நான் செய்த பெரிய செயல்கள் எல்லாம் மறந்து போக, நீங்கள் எனக்காக இரங்கும் நாள் வரும் என்ற மருந்தினால் இறந்து இறந்து பிழைகின்றேன். இது யாருக்குத் தெரியும்"

என்று கூறுகிறான்.

பாடல்

‘அறம் தரும் செல்வம் அன்னீர்! அமிழ்தினும் இனியீர்!
                                       என்னைப்
பிறந்திலன் ஆக்க வந்தீர்; பேர் எழில் மானம் கொல்ல,
"மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும்
                                      ஈட்டார்?

பொருள்

அறம் தரும் செல்வம் அன்னீர்! = அறம் தரும் செல்வம் போன்றவளே. அற வழியில் சேர்த்த செல்வம் என்று சொல்லவில்லை. அறம் தரும் செல்வம் என்றான். அறம் செல்வத்தை கொண்டு சேர்க்கும். அறம் அல்லாதது செல்வத்தை அழிக்கும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை.

என்பார்  வள்ளுவர்.


அமிழ்தினும் இனியீர்! = அமிழ்தத்தை விட இனிமையானவளே

என்னைப் = என்னை

பிறந்திலன் ஆக்க வந்தீர்;= பிறக்காதவன் என்று ஆக்க வந்தீர்.  அதாவது இராவணன் என்ற ஒருவன் பிறக்கவே இல்லை. அவன் யார் என்று உலகம் அறியாது என்ற நிலையை உண்டாக்கி விட்டீர்கள்.

 பேர் எழில் மானம் கொல்ல, = பெருமை பெற்ற அருமையான மானத்தை கொல்ல


மறந்தன பெரிய = நான் செய்த பெரிய காரியங்கள் எல்லாம் மறந்து போய் விட்டன.


போன வரும் = நீங்கள் இதுவரை என் மேல் இரக்கம் கொள்ளாமல் போனீர்கள். நீங்கள் என் மேல் இரக்கம் கொள்ளும் நாள் வரும். 


மருந்து தன்னால் = அந்த நாள் வரும் என்ற நம்பிக்கையே எனக்கு மருந்து. அந்த மருந்தினால்

இறந்து இறந்து உய்கின்றேன் யான்; = இறந்து இறந்து பிழைக்கின்றேன். 

யார் இது தெரியும் ஈட்டார்? = யாருக்கு இது தெரியும்


காமம் தலைக்கு ஏறும்போது தான் யார் என்பது மறந்து போகிறது.  எண்ணில் அடங்கா  உதாரணங்கள் சொல்லலாம்....பெண்ணின் மயக்கத்தில் தான் யார், தன் நிலை   என்ன அறியாமல் தவறு செய்பவர்கள் ஆயிரம் ஆயிரம்  பேர். 

பெருமைகள் எல்லாம் மறந்து போகிறது. 

காமம் , உயிர் போகும் வலி. 

இல்லையென்றால் அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு  இப்படி நிற்பானா ? 



சிவ புராணம் - மனம் கழிய நின்ற மறையோனே

சிவ புராணம் - மனம் கழிய நின்ற மறையோனே


பாடல்

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

பொருள்

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே = சொல்லும் மனமும் கடந்து நின்ற மறையோனே

கறந்தபால் = அப்போதுதான் கறந்த பாலோடு

கன்னலொடு= கன்னல் என்றால்  கரும்பு. இங்கே  சர்க்கரை

நெய்கலந்தாற் போலச் = நெய் கலந்தார்ப் போல

சிறந்தடியார் = சிறந்து அடியார்

சிந்தனையுள் = சிந்தனையுள்

தேனூறி நின்று  = தேன் ஊற நின்ற

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் = பிறந்த பிறப்பை அறுக்கும் எங்கள் பெருமான்

ஏதோ மாணிக்க வாசகர் சர்கரைப் பொங்கல் செய்வதற்கு சொல்லித் தருவது போல இருக்கிறதா ?

அப்படி அல்ல.

மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை மாணிக்க வாசகர் அருளிச்  செய்திருக்கிறார்.

எல்லோரும் இன்பம் வேண்டும், இன்பம் வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆனால் துன்பம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏன் ?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று தெரிகிறது.

ஆசை புலன்கள் வழி வருகிறது.

புலன்கள் மனதால் செலுத்தப் படுகிறது.

புலன்களை அடக்க வேண்டும் என்றால் மனதை அடக்க வேண்டும்.

மனதை எப்படி அடக்குவது ?

அது தான் சிக்கலான விஷயம்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மனதை கட்டுப் படுத்த நினைக்கிறோமோ அவ்வளவுக்கவளவு அது நம்மை மீறிச் செல்லும்.

மருந்து சாப்பிடுவதற்கு முன் குரங்கை நினைக்காதே என்றால் கட்டாயம் நினைக்கும்.

மனதை அடக்குவது என்றால் எது மனதை அடக்கும் ?

மனம் தான் மனதை அடக்க வேண்டும். அது எப்படி மனமே மனதை அடக்க முடியும் ?

மனதை அடக்க இரண்டு வழிகள்.

ஒன்று , மனதை ஒன்றில் இலயிக்க விடுவது. மனம் ஒன்றில் இலயித்து விட்டால் வேறு ஒன்றின் பின்னால் போகாது.

ஆனால் ,  இந்த இலயிப்பு நிரந்தரமாக இருக்காது. இலயிப்பு தீரும்போது, மீண்டும் மனம் அதன் வழியில் தறி கேட்டு ஓட ஆரம்பிக்கும்.

அதற்கு நிரந்திர தீர்வு, "மனோ நாசம்".

மனமே இல்லை என்றால் ?

இதைத்தான் மனோ நாசம் என்கிறார்கள்.

இதைத்தான் இரமண மகரிஷி


பாடல்

இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளதெழு முந்தீபற
வெழாதுரு மாய்ந்ததே லுந்தீபற

சீர் பிரித்த பின்

இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்க
இலயித்துளது எழும் உந்தீ பற
எழாது உரு மாய்ந்ததேல் உந்தீபற.


மனம் ஓடுங்கள் மனோ இலயம், மனோ நாசம் என்று இரண்டு உண்டு.
இலையித்துள்ளது (அதாவது இலயித்த மனம்) மீண்டும் எழும்.
மீண்டும் எழாது உரு மாய்ந்தால். அதாவது மனம் நாசம் ஆனால், அது மீண்டும் எழாது.

அதைத்தான் - "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே"   என்றார்.

மனம் கழிந்த பின் நிற்பவன் அவன்.


"கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று"

சிற்றின்பம் தாண்டி பேரின்பம் அடையும் போது அந்த இன்பம் பாலோடு, சர்க்கரை சேர்த்து , அதோடு நெய்யும் கலந்து தேன் போல தித்திக்கக் கூடியது.

அந்த பரமானந்தம் பெற்றவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சொல்கிறார்கள்.


"அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை " என்பார்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.


களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை என்று கரை புரண்டு ஓடும் ஆனந்த  வெள்ளத்தைப் பற்றி கூறுகிறார் அபிராமி  பட்டர்.

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!

இராமலிங்க அடிகளார் கூறுகிறார்

தனித் தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியு மிகக் கலந்தே

தனித்த நறுந் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்த நறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே

பேரின்பம் எப்படி இருக்கும் என்றால் சிற்றிபத்தைத்தான் உதாரணம் சொல்ல முடியும். 

இது ஒரு சுவை. இதை விட பெரிய சுவை பேரின்பம்.

ஆழ்ந்து படித்து உணர வேண்டிய பாடல்கள். 










Saturday, August 30, 2014

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 4

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 4


அசோகவனத்தில் சிறை இருந்து சீதையிடம் இராவணன் பேசுகிறான்.

"ஈசன் முதல் மானிடர் வரை அனைவரும் அஞ்சும்படி மூன்று உலகும் கட்டி காக்கும் என்னை, வீரர்கள் வரிசையில் உள்ள ஒருவர்க்கும் நான் தோற்றது இல்லை. ஆனால், இன்று ஒரு பெண்ணிடம் வைத்த ஆசை நோய் என்னை கொன்று விட்டது என்று சொன்னால், என் ஆண்மை மாசு அடையாதோ ?"

பாடல்

ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக்
கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால்
                                        வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான்
                                    மாசுணாதோ?

பொருள்

ஈசனே = ஈசன்

முதலா = முதல்

மற்றை மானிடர் இறுதி ஆகக் = மனிதர்கள் வரை

கூச = அஞ்சிக் கூசும்படி

மூன்று உலகும் காக்கும் = மூன்று உலகையும் காக்கும்

கொற்றத்தென் = என் அரசின்

வீரக் கோட்டி = வீரர்கள் கோட்டில், வீரர்கள் வரிசையில் 

பேசுவார் ஒருவர்க்கு = பேசப்படும் ஒருவர்க்கும்

ஆவி தோற்றிலென் = ஆவி தோற்றது இல்லை

பெண்பால் வைத்த = பெண் மேல் வைத்த

ஆசை நோய் கொன்றது என்றால் =ஆசை நோய் கொன்றது என்றால்

ஆண்மைதான் மாசுணாதோ? = என் ஆண்மை மாசு அடையாதா ?

ஆசை என்பது நோய். அந்த நோய்க்கு மருந்து இதுவரை கண்டு பிடிக்கவில்லை. மருந்து இல்லாத நோய் வந்தால் மரணம் ஒன்று ஒன்றுதான் முடிவு.

பேராசை எனும் நோயில் (பிணி) கட்டப்பட்டு (பிணிபட்டு ) என்பார் அருணகிரிநாதர்.

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.


துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஆசை வேண்டாம் என்று இருக்க வேண்டும். ஆசை இருந்தால் அதன் மூலம் மேலும் மேலும் துன்பம் வந்து கொண்டே இருக்கும் என்பார்  வள்ளுவர்.

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல்,
தவாஅது மேன்மேல் வரும்.

ஒரு பக்கம் ஆசை என்னும் நோய். 

இன்னொரு பக்கம் ஆணவம் - ஈசன் முதல் மனிதர் வரை எல்லோரும் அஞ்சும்படி  மூவுலகையும் ஆண்டேன் என்ற ஆணவம். 

இன்னொரு பக்கம் பயம் - புகழுக்கு பங்கம் வந்து விடுமோ, உயிர் போய் விடுமோ என்ற பயம்.

ஆண்மை என்பது மூன்று உலகையும் ஆள்வது  என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். 

பிறன் மனை நோக்காதது பேராண்மை என்று அவன் அறியவில்லை. 

இராவணனுக்கு வந்ததை கம்பர் நமக்குக்  காட்டுகிறார். ஆழ்ந்து சிந்தித்தால் வாழ்வின்  தத்துவங்கள் விளங்கும். 

விளங்கிக் கொள்வோம். 




Friday, August 29, 2014

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்து , புண் சுமந்த கதை

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்து , புண் சுமந்த கதை


திருவிளையாடல் புராணம்.

அரசன் குதிரை வாங்கத் தந்த பணத்தில் திருபெருந்துறையில் கோவில் கட்டினார் மாணிக்க வாசகர்.

இறைவன் நரிகளை பரிகளாக்கி  தந்தான். பின் , அந்த பரிகள் மீண்டும் மீண்டும்   நரிகளாகி காட்டுக்குள் சென்று விட்டன.

கோபம் கொண்ட அரசன், மாணிக்க வாசகரை சுடு மணலில் உருட்டும்படி கட்டளை இட்டான்.

மாணிக்க வாசகரின் துயர் தீர்க்கும் பொருட்டு , மாணிக்க வாசகரின் பெருமையை உலகம் அறியும் பொருட்டு சிவன் நடத்திய திருவிளையாடலை காண்போம்.

திருவிளையாடல் என்றால் ஏதோ இறைவன் பொழுது போகாமல் செய்த விளையாடல் என்று நினைக்கக் கூடாது. அந்த கதைகளின் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.

அவற்றைப் பற்றி சிந்திப்போம்.

பாடல்

பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடியார்மனம்
புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நகரி ளாயடவி போனபின்
விண்சு மந்தசுர நதியெ னப்பெருகு வித்த வையையிது விடையவன்
மண்சு மந்துதிரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை யோதுவாம்.

சீர் பிரித்த பின்

பண் சுமந்த மறை நாடரும் பொருள் பதம் சுமந்த முடியார் மனம்
புண் சுமந்த துயர் தீர வந்த பரி நரிகளாய் அடவி போனபின்
விண் சுமந்த சுர நதி என பெருகுவித்த வையை இது விடையவன்
மண் சுமந்து திருமேனி மேல் அடி வடு ச்சுமந்த கதை ஓதுவாம் 


பொருள்

பண் சுமந்த = இசையோடு கூடிய பாடல்களை கொண்ட

மறை நாடரும் =  மறைகள் ஓதும் நாடார்

பொருள் = பொருள் செறிந்த

பதம் = திருவடிகளை

சுமந்த = சூடிய

முடியார் = தலையினை கூடிய மாணிக்க வாசகரின்

மனம் = மனம்

புண் சுமந்த துயர் தீர வந்த = புண் படும்படி நிகழ்ந்த துயர் தீர வந்த

 பரி நரிகளாய் அடவி போனபின் = குதிரைகள் நரிகளாகி கானகம் போன பின்

விண் சுமந்த = ஆகாயம் சுமந்த

சுர நதி என  = கங்கை என

பெருகுவித்த வையை இது = பெருகி வந்த வைகை இது

விடையவன் = எருதின் மேல் ஏறிய சிவன்  

மண் சுமந்து = மண் சுமந்து

திருமேனி மேல் = தன்னுடைய திருமேனியில்

அடி வடுச் சுமந்த கதை ஓதுவாம் = அடி பட்டு வடு சுமந்த கதையைச் சொல்லுவாம்

எவ்வளவு அழகான பாடல் !

மேலும் சுவைப்போம் , சிந்திப்போம்


Thursday, August 28, 2014

இராமாயணம் - புண் எலாம் எனக்கே ஆக்கி

இராமாயணம் - புண் எலாம் எனக்கே ஆக்கி 


அசோக வனத்தில் சீதையை சந்திக்கிறான் இராவணன். அவளிடம் தன் மனதில் உள்ள காதலை சொல்லுகிறான்.

"எந்த பெண்ணைப் பார்த்தாலும் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. யார் பெயரைக் கேட்டாலும் உங்க பேர் மாதரியே இருக்கு. எந்த கண்ணைப் பார்த்தாலும் உங்க கண்ணைப் பார்ப்பது போலவே இருக்கு. மன்மதனை என் மேல் அம்பு தொடுக்கும்படி செய்து, அந்த அம்பு தைத்து வரும் புண் எல்லாம் எனக்கே என்று ஆக்கி இதுவரை நடக்காத ஒன்றை செய்து விட்டீர்கள் "

என்றான்.

பாடல்

‘பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர்.

பொருள்

‘பெண் எலாம் நீரே ஆக்கி = எல்லா பெண்களையும் நீங்களே ஆகி

பேர் எலாம் உமதே ஆக்கி = எல்லா பெயர்களையும் உங்கள் பெயராக ஆக்கிக் கொண்டீர்கள்


கண் எலாம் நும் கண் ஆக்கி = எல்லா கண்களையும்  உங்கள் கண்களாக ஆக்கி

காமவேள் என்னும் நாமத்து = காம வேள் என்ற நாமம் கொண்ட

அண்ணல் = அண்ணல்

எய்வானும் ஆக்கி = என் மேல் குறிவைத்து எய்து 

ஐங் கணை  = ஐந்து மலர் அம்புகளை

அரியத் தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி = இதுவரை இல்லாத புண்களை எல்லாம் எனக்கே ஆக்கி

விபரீதம் புணர்த்து விட்டீர் = விபரீதம் செய்து விட்டீர்கள்

மன்மதனை , காமவேள் என்னும் நாமத்து அண்ணல் என்று மிக மிக மரியாதையுடன் குறிப்பிடுகிறான். காதல் படுத்தும் பாடு.

மன்மதனுக்கு வேறு ஒரு வேலையும் இல்லை. முழு நேரமும் இராவணனன் மேல் அம்பு விடுவதுதான் அவன் வேலை. "புண் எலாம் எனக்கே ஆக்கி".

வேறு யாருக்கும் புண் இல்லை. எனக்கு மட்டும்தான்.

பெண் எலாம் நீயே ஆகி என்று சொல்லி இருக்கலாம். சொல்ல வில்லை. நீரே ஆகி  என்று மரியாதையுடன் குறிப்பிடுகிறான். 

பெண்ணின் மேல் காதல். 
பெண்ணின் மேல் மரியாதை.
பெண்ணின் அழகின் மேல் மதிப்பு.

அவள் மேல் கொண்ட அன்பால், மரியாதையால், மதிப்பால் அவளிடம் உள்ளத்தை  திறந்து உண்மையை சொல்லும் பாங்கு. 

எல்லாவற்றிற்கும் நடுவில் நின்றது  - அறம்.

Wednesday, August 27, 2014

சிவ புராணம் - பூவில் மணம் போல

சிவ புராணம் - பூவில் மணம் போல


தோற்றம், நிலைப்பு, இறுதி என்ற இந்த மூன்றும் இல்லாதவனே. அனைத்து உலகையும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய். என்னை இந்த உலகில் போக்குவாய். என்னை உன்னுடைய பணியில் புகுவிப்பாய். பூவில் மணம் போல இருப்பவனே. தூரத்தில் இருப்பவனே. அருகில் இருப்பவனே.

பாடல்

ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

பொருள்


ஆக்கம் = தொடக்கம்

அளவு = இருத்தல்

இறுதி யில்லாய் = முடிவு இல்லாதவனே

அனைத்துலகும் = அனைத்து உலகையும்

ஆக்குவாய் = ஆக்குவாய்

காப்பாய் = காத்தருள்வாய்

அழிப்பாய் = அழிப்பாய்

அருள்தருவாய் = அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் = என்னை இந்த பிறவியில் போக்குவாய்

புகுவிப்பாய் நின்தொழும்பின் = உன் பணியில் என்னை புகும்படி செய்வாய்

நாற்றத்தின் நேரியாய் = பூவின் மணம் போல

சேயாய் = தூரத்தில் இருப்பவனே

நணியானே = அருகிலும் இருப்பவனே


சரி. மிக எளிமையான பகுதி. மேலே செல்வோம் என்று அவசரப் படக்கூடாது.

எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு உண்டு. ஒரு நியதி உண்டு.

பிறத்தல், வளர்தல்,அழிதல் என்று ஒரு வரை முறை உண்டு. இதைத்தான் நாம் தினமும்  காண்கிறோம்.

நாம் காணாத  ஒன்றை நம்மால் புரிந்து கொள்ள  முடியாது.

பிறக்காத ஒன்றை, இறக்காத ஒன்றை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா ?

இறைவன் இந்தக்  கணக்கில்   அடங்காதவன்

காலமும் கணக்கும் நீத்த காரணன் என்பார் கம்பர்

'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும்,கணக்கும், நீத்த காரணன்-கை வில் 
                                  ஏந்தி,
சூலமும்திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும்வெள்ளி்ப்பொருப்பும் விட்டு,-
                         அயோத்தி வந்தான்;

இறைவன் பிறந்து, வளர்ந்து, அழிவது என்ற கணக்கில் வராதவன். அதை எப்படி நாம் புரிந்து கொள்வது ?

"ஆக்கம் அளவு இறுதி இல்லாய்" என்றார்.

ஏன் பூவின் மணம் என்று சொன்னார் ?

பூ தெரிகிறது. ஆனால் அதில் உள்ள மணம் தெரியாது.

கணவனும் மனைவியும் தெரிகிறார்கள். அவர்களுக்கு இடையே உள்ள அன்பு தெரியாது.

செயல் தெரியும். செயலுக்கு  பின்னால் இருக்கும் அறிவு தெரியாது.

அது போல உலகம் தெரிகிறது. அதற்கு பின்னால் உள்ள இறைவன் தெரியாது.

பூவை நுகர்ந்தவர்களுக்கு அதன் மணம் தெரியும்.

மணி வாசகர் சொல்கிறார் ....அனைத்து உலகையும் ஆக்குவாய், அழிப்பாய், காத்து  அருள்வாய் என்று.

நாம் செய்யும் செயல்களில் எத்தனை சதவீதம் நாம் நினைத்து, முடிவு செய்து நடப்பது.

நாளை என்ன செய்வோம் என்று நமக்குத் தெரியாது.

படுக்கப் போகும் போது திருமகள் போல இருந்த கைகேயி, சிறிது நேரத்தில் கூனி சொல் கேட்டு  கொடுமையிலும் கொடுமையான பெண்ணாக ஆனாள் . நினைத்திருப்பாளா இப்படி தான் செய்வோம் என்று.


என் செயல் ஆவது ஒன்றும் இல்லை இனி தெய்வமே உன் செயல் என்று உணரப்  பெற்றேன் என்றார்  பட்டினத்தார்.

 என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
     உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன் இந்தஊனெடுத்த
     பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
     முன்செய்த தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே



நான் இங்கு வந்து பிறந்ததும், இப்படி வளர்ந்ததும், இன்று இப்படி இருப்பதும் இறைவா உன் செயல் என்று அனைத்தையும் அவனிடம் விட்டு  விடுகிறார்.

"போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில் "

 எல்லாம் அவன் செயல்.   சரணாகதி.

"சேயாய் நணியானே" - அறிந்து கொள்ளும் வரை அவன் தூரத்தில் இருப்பவன். அறிந்து கொண்டவ பின் அண்மையில் இருப்பவன்.

யாவர்க்கும் அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பெம்மான் இவன் அன்றே என்றார் திரு ஞான  சம்பந்தர். பெம்மான் அவன் அன்றே என்று   .சொல்லவில்லை.  "இவன்" என்பது அண்மைச் சுட்டு.  "அவன்" என்பது  சேய்மைச் சுட்டு.

மிக மிக நிதானமாக படிக்க வேண்டிய நூல் சிவ புராணம்.


Tuesday, August 26, 2014

சிவ புராணம் - பொய்யாயின போய் அகல வந்து அருளி - பாகம் 2

சிவ புராணம் - பொய்யாயின  போய் அகல வந்து அருளி - பாகம் 2

பாடல்

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

வெப்பமாய் இருப்பவனே. குளிர்ச்சியாய் இருப்பவனே. நியமங்கள் என்ற மலம் (அழுக்கு, குற்றம்) இல்லாதவனே. என்னை விட்டு பொய்யாயின போய் விட அருள்  .செய்தவனே.  எனக்கு ஒரு ஞானமும் இல்லாத எனக்கு அஞ்ஞானத்தை போக்கி நல்ல அறிவை கொடுத்தவனே


பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி


பொய்யாயின எல்லாம் எப்படி போகும் ? 

மணிவாசகர் சொல்கிறார் - அவனே "வந்து அருளினான்" என்று.

இறைவன் யார், அவன் எப்படி இருப்பான், கறுப்பா சிவப்பா, உயரமா குட்டையா என்று நமக்குத் தெரியாது. பின் எப்படி இறைவனை தேடிக் கண்டு அடைவது. 

நமக்கு அவனைத் தெரியாது. அவனுக்கு நம்மைத் தெரியும் அல்லவா ? 

அவனே வந்து அருள் செய்ததனால் பொய்யாயினவெல்லாம் போயிற்று. 

இதையே சொல்ல வந்த அருணகிரி நாதரும் 

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"  என்றார்.


"அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே"

ஒளி வந்தால் இருள் தானே விலகும். நல்லறிவு வந்தால் அஞ்ஞானம் தானே விலகும். அப்படி அஞ்ஞானத்தை விலக்கும் நல்லறிவாக அவன் இருக்கிறான். 

சிவ புராணம் சிந்திக்க சிந்திக்க விரியும். 













Monday, August 25, 2014

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 3

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 3


சீதையை அசோக வனத்தில் சந்தித்து இராவணன் அவளிடம் பேசுகிறான்.

மிக மிக மரியாதையுடன்...பேசுகிறான். கடைசியில் "அம்மா " என்று முடிக்கிறான்.

தோல்வி என்றால் என்ன என்றே தெரியாத என்னை தோற்கச் செய்தீர்.
சந்திரனை கொண்டு என்னை சுடும் படி செய்தீர்
தென்றால் என் மேனி வேர்க்கும்படி செய்தீர்
வைரம் போன்ற வலிய என் தோள்களை மெலிய வைத்தீர்
மன்மதனை என்னை வெற்றி கொள்ளச் செய்து அவனை மகிழ்வித்தீர்
துன்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்.
தேவர்களின் அச்சத்தை போக்கி வைத்தீர்
இன்னும் என்னென்ன செய்து தீர்க்கப் போகிறீர்களோ ...அம்மா

பாடல்

தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில்
                                       வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர்
                                        அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர்
                                       அம்மா!

பொருள்

தோற்பித்தீர்; = என்னை தோற்கடித்தீர்

மதிக்கு மேனி சுடுவித்தீர் = சந்திரனைக் கொண்டு என் உடலை கொதிக்க வைத்தீர்

தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர் = தென்றலைக் கொண்டு என்னை வேர்பித்தீர்

வயிரத் தோளை மெலிவித்தீர் = வைரம் போன்ற தோளை மெலிய வைத்தீர்

வேனில் வேளை ஆர்ப்பித்தீர் =இள வேனில் கால மன்மதனை வெற்றிக் கொள்ளச் செய்து ஆரவாரம் கொள்ள வைத்தீர்

என்னை இன்னல் அறிவித்தீர் = எனக்கு துன்பத்தை அறிமுகம் செய்து வைத்தீர்

அமரர் அச்சம் தீர்ப்பித்தீர் = அமரர்களின் அச்சத்தை போக்கினீர். இராவணன் மெலிந்தான், துன்பத்தில் உழல்கிறான், மன்மதனின் பானத்துக்கு இலக்காகி விட்டான் என்று தேவர்கள் மகிழ்ந்தார்கள்


இன்னம் = இன்னமும்

என் என் செய்வித்துத் தீர்திர் = என்னென்ன செய்து தீர்கப் போகிறீர்களோ

அம்மா! = அம்மா !


இதை விடவும் காதலை மென்மையாகச் சொல்ல முடியுமா என்ன ? இதை விட ஒரு மனிதன்  கீழே இறங்கி வர முடியுமா என்ன ?

ஒன்று மட்டும் தெரிகிறது....பெண் ஆணிடம் என்ன விரும்புகிறாள் என்று தெரிகிறது .....




சிவ புராணம் - பொய்யாயின போய் அகல வந்து அருளி - பாகம் 1

சிவ புராணம் - பொய்யாயின  போய் அகல வந்து அருளி - பாகம் 1




பாடல்

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

வெப்பமாய் இருப்பவனே. குளிர்ச்சியாய் இருப்பவனே. நியமங்கள் என்ற மலம் (அழுக்கு, குற்றம்) இல்லாதவனே. என்னை விட்டு பொய்யாயின போய் விட அருள்  .செய்தவனே.  எனக்கு ஒரு ஞானமும் இல்லாத எனக்கு அஞ்ஞானத்தை போக்கி நல்ல அறிவை கொடுத்தவனே


பொருள்

வெய்யாய் = வெப்பமானவனே
தணியாய் = குளிர்சியாணவனே
இயமானனாம் = இதற்கு ஆத்மாவாக  நின்றவனே,நியமங்களாக  இருப்பவனே என்று பொருள் சொல்கிறார்கள்

விமலா = குற்றம் அற்றவனே

பொய்யாயின எல்லாம் = பொய்யாயினவெல்லாம்

போயகல வந்தருளி = அகன்று போய் விட வந்து அருள் செய்தவனே

மெய்ஞ்ஞானம் ஆகி = உண்மையான ஞானம் ஆக நின்று

மிளிர்கின்ற மெய்ச்சுடரே= ஒளி வீசும் உண்மையான சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் = எந்தவித ஞானமும் இல்லாதவன் நான்

இன்பப் பெருமானே = இன்பத்தின் உறைவிடமாய் இருப்பவனே

அஞ்ஞானம் தன்னை,  = அறியாமையை

அகல்விக்கும் நல்லறிவே = அகற்றிடும் நல் அறிவே


என்று மாணிக்க வாசகர் இறைவனை  புகழ்கிறார்.

மேலோட்டமான அர்த்தம் அவ்வளவுதான்.

சற்று ஆழமாக சிந்தித்தால்....


பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி

அது என்ன போய் அகல ? போய் என்றாலே அகல்வது தானே. gate கதவு, நடு center , மாதிரி போய் அகல ?

ஆசையினால் துன்பம் வருகிறது என்று தெரிகிறது. அதை விட்டு விட வேண்டும் என்றும் தோன்றுகிறது. பல சமயங்களில் விட்டும் விடுகிறோம்.  உடல் விட்டாலும் மனம் விட மாட்டேன் என்று அடம்  பிடிக்கிறது.

இனிப்பு கெடுதல் என்று அறிவுக்குத் தெரிகிறது. விட்டும் விடுகிறோம். இருந்தாலும் மனம் விடுகிறதா ? இனிப்புப் பொருள்களை கண்டால் ஜொள்ளு விடுகிறது.

அறிவும் விட வேண்டும், மனமும் விட வேண்டும்.

முதலில் அறிவை விட்டு போக வேண்டும் பின் மனதை விட்டுப் போக வேண்டும்.

இதைத்தான் வள்ளுவரும்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

யாதனின் யாதனின் என்று இரண்டு முறையும்
அதனின் அதனின் என்று இரண்டு முறையும் சொல்கிறார்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன் என்று சொல்லி இருக்கலாம்.

மனமும் நீங்க வேண்டும். அறிவும் நீங்க வேண்டும்.

போய் அகல என்றால் புரிகிறது.

ஆனால் இந்த பொய்யாயின எல்லாம் என்று சொல்கிறாரே...அது என்ன பொய்யாயின ?

எது பொய் எது உண்மை என்று எப்படி அறிந்து கொள்வது ? ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதா?  யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளலாமா ?

அதையும் அவரே சொல்கிறார்

மேலும் சிந்திப்போம்


Sunday, August 24, 2014

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 2

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 2


அசோகவனத்தில் சீதையிடம் ஜொள்ளுகிறான் இராவணன்.

"நான் வஞ்ச மனம் கொண்டவன். பெண் போல வடிவுகொண்ட நஞ்சு தோய்ந்த அமுதத்தை உண்ண விரும்பினேன். உன்னை நாளும் உன் நினைவால் என் நெஞ்சு நொந்து தேய்ந்து போகிறது. சரி,இந்த துன்பத்தை தாங்க முடியாமல் உயிரை விட்டு விடலாமா என்றால் அதற்கும் பயமாக இருக்கிறது. அடியவனான நான் உன் அடைக்கலம்.  அமுதின் வந்தீர்"

என்று புலம்புகிறான்.

நாயேன், அடியேன் என்று தன்னுடைய அத்தனை பெருமைகளையும் விட்டு விட்டு மிக மிக கீழிறங்கி வருகிறான்.

பாடல்

 வஞ்சனேன் எனக்கு நானே,
    மாதரார் வடிவு கொண்ட
நஞ்சுதோய் அமுதம் உண்பான்
    நச்சினேன்; நாளும் தேய்ந்த;
நெஞ்சு நொந்து உம்மை நாயேன்
    நினைப்பு விட்டு, ஆவி நீக்க
அஞ்சினேன்; அடியனேன் நும்
    அடைக்கலம், அமுதின் வந்தீர்!

பொருள் 

 வஞ்சனேன் எனக்கு நானே = எனக்கு நானே வஞ்சனை செய்து கொள்கிறேன்

மாதரார் வடிவு கொண்ட = பெண் என்ற வடிவு கொண்ட

நஞ்சுதோய் அமுதம் = நஞ்சு தோய்ந்த அமுதத்தை

உண்பான் நச்சினேன் = உண்ண விரும்பினேன்

நாளும் தேய்ந்த = தினமும் தேய்ந்த

நெஞ்சு நொந்து = என் நெஞ்சம் நொந்து

உம்மை = உன்னை, உங்களை

நாயேன் = நாய் போன்றவனான நான்

நினைப்பு விட்டு, = நினைப்பு விட்டு

ஆவி நீக்க அஞ்சினேன்; = உயிரை விட அஞ்சினேன்

அடியனேன் நும் அடைக்கலம் = அடியேன் உங்கள் அடைக்கலம்

அமுதின் வந்தீர்! = அமுதத்தில் இருந்து வந்தவளே

இதில் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

நச்சினேன் . நச்சினேன் என்றால் விரும்பினேன். சிவனின் திருநாமங்களில் நச்சினார்க்கினியன் என்பதும் ஒன்று. விரும்பியவர்களுக்கு இனியவன்.

வேண்டிய ஒன்றை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு பெயர் நச்சரித்தல் (nagging ) என்று பெயர்.

நச்சு என்பது இரண்டு விதத்தில் பொருள் தருகிறது.

வினை வடிவில் அது விரும்புதல் என்ற பொருளைத் தருகிறது.

அதுவே பெயர் சொல்லாக வரும்போது "நஞ்சு" என்ற பொருளில் வருகிறது.

முதல் வரியில் நஞ்சு தோய்ந்த அமுதம் என்று வந்தது. அதை தொடர்ந்து நச்சினேன் என்ற தொடர் மிகப் பொருத்தமாக இருக்கிறது.

நச்சினேன் என்றால் விரும்பினேன்.

விரும்பும்படி இருந்தால் "நச்" சென்று இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

விரும்பும் படி இருப்பவர் - நச்சியார் அல்லது ஆதி நீண்டு நாச்சியார்.

"அமுதின் வந்தீர்" என்று தெரிந்து சொன்னானா அல்லது தெரியாமல் சொன்னானா என்று தெரியவில்லை. திருமகள் , அமுதத்தோடு சேர்ந்து பாற்கடலில் இருந்து தோன்றியவள். சீதை, திருமகளின் அவதாரம்.

உன் நினைப்பை விட்டால் இறந்து போவேன். இறப்பதற்கும் அச்சமாக இருக்கிறது.

காதல் படுத்தும் பாடு !







ஆத்திச் சூடி - அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்

ஆத்திச் சூடி - அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் 


இரண்டாம் வகுப்பிலோ மூன்றாம் வகுப்பிலோ படித்தது.

மனப்பாடம் செய்து, ஒப்பித்து, மதிப்பெண்கள் வாங்கி எல்லாம் முடித்து வந்தாகி விட்டது.

இதற்கு மேல் இதில் என்ன இருக்கிறது ?

அறம் செய்ய விரும்பு என்று சொன்ன அவ்வை ஏன் அடுத்த வரியில் ஆறுவது சினம் என்று சொன்னாள் ?

ஆறுவது காமம், ஆறுவது ஆசை என்று சொல்லி இருக்கலாம் தானே ? ஏன் சினத்தை சொல்ல வேண்டும் ?

அறம் செய்யும் போது கோபம்  வரும்.

ஏன் ?

அறம் என்பதற்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

ஒன்று தானம் செய்வது.

இன்னொன்று தர்ம , ஒழுக்க நெறிப்படி வாழ்வது.

முதலில் தானம் செய்வதைப் பற்றி  பார்ப்போம்.

ஒருவர் தான தர்மம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் உதவி பெற்றவன்  நாலு பேரிடத்தில் சொல்லுவான். அவர்களும் உதவி கேட்டு  வருவார்கள். நாளடைவில் இது ஒரு தொல்லையாகப் போய் விடும். காலம் கெட்ட  நேரத்தில் போன் செய்வார்கள். அடிக்கடி தொடர்பு கொண்டு நச்சரிப்பார்கள். உதவி செய்ய முடியாவிட்டால் , "ரொம்பத்தான் அலட்டிக்கிறான், நெனச்சா செய்ய முடியாதா, அவனுக்கு செஞ்சான், இவனுக்கு  செஞ்சான் எனக்கு மட்டும் செய்யவில்லை " என்று பேசத் தலைப் படுவார்கள்.

ஒரு கட்டத்தில் எரிச்சலும் கோபமும் வருவது இயற்கை.

என்னத்துக்கு தானம் செய்யப் போவானே , இத்தனை பேர் கிட்ட கெட்ட பேர் வாங்குவானே , ஒண்ணும் செய்ய வேண்டாம் என்று நினைக்கத் தோன்றும்.

எனவே பாட்டி சொன்னாள்

"ஆறுவது சினம்"

சினம் ஆறி விடும். நீ தொடர்ந்து "அறம் செய்ய விரும்பு" அறம் செய்வதை வெறுத்து விடாதே என்று சொன்னாள் .

இரண்டாவதை எடுத்துக் கொண்டால்..

அற வழியில் நிற்பவர்களை இந்த உலகம் என்ன சொல்லும் ....

"பிழைக்கத் தெரியாத ஆள்", "அப்பாவி" , " சரியான ஏமாளி" என்றெல்லாம் பட்டம்  கொடுக்கும்.

அவர்கள் மேல் மட்டும் அல்ல, நம் மேலேயே நமக்கு கோபம் வரும்.

நாமும் மற்றவர்கள் மாதிரி கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிடலாமா என்று  தோன்றும். அறத்தின் மேல் வெறுப்பு வரும்.

அவ்வை சொல்கிறாள் .... "ஆறுவது சினம்"....நீ தொடர்ந்து "அறம் செய்ய விரும்பு". அதை வெறுத்து விடாதே.


இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 1

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 1


அசோக வனத்துக்கு இராவணன் வருகிறான்.

வந்து, சீதையின் முன்னால் பொன்னால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து அவளிடம் பேசத் தொடங்குகிறான்.

பேசினான் என்பதை விட, கொஞ்சுகிறான், கெஞ்சுகிறான்.

எப்போது தான் இந்த அடியேனுக்கு இரக்கம் காட்டுவாய் ? எப்போதுதான் இந்த இந்த நிலவுக்கும் சூரியனுக்கும் நான் வித்தியாசம் காண்பது, எப்போதுதான் நான் இந்த மன்மதனின் அம்புகளுக்கு பலி ஆகாமல் இருப்பது என்று மனதில் பட்டதை எல்லாம் எடுத்துச் சொல்கிறான்.

பாடல்

‘என்றுதான், அடியனேனுக்கு
    இரங்குவது? இந்து என்பான்
என்றுதான், இரவியோடும்
    வேற்றுமை தரெிவது என்பால்?
என்றுதான், அநங்க வாளிக்கு
    இலக்கு அலாது இருக்கல் ஆவது?
என்று, தான் உற்றது எல்லாம்
    இயம்புவான் எடுத்துக் கொண்டான்

பொருள் 

என்றுதான் = எப்போதுதான்
அடியனேனுக்கு = அடியவனான எனக்கு
இரங்குவது?  = இரக்கம் காட்டுவது ?

இந்து என்பான் = சந்திரன் என்பவன்

என்றுதான் = எப்போதுதான்

இரவியோடும் = சூரியனில் இருந்து

வேற்றுமை தெரிவது என்பால்? = வேற்றுமை காட்டுவது என்னிடம்

என்றுதான் = எப்போதுதான்

அநங்க வாளிக்கு = மன்மதனின் அம்புக்கு

இலக்கு அலாது இருக்கல் ஆவது? = இலக்கு ஆகாமல் நான் இருப்பது

என்று = என்று

தான் = அவன்

உற்றது எல்லாம் = மனதில் கொண்டதை எல்லாம்

இயம்புவான் எடுத்துக் கொண்டான் = சொல்லத் தொடங்கினான்.

இது பாட்டின் மேலோட்டமான பொருள்.

கொஞ்சம் உள்ளே போய் அதன் சுவையை அறிவோம்.

"அடியேன்" என்கிறான் இராவணன்.

இராவணன் யார் ?

முக்கோடி வாழ் நாளும்,
முயன்று உடைய பெரும் தவமும்,
எக்கோடி யாராலும் வெல்லப் படாய் என்ற வரமும்
நாரத முனிவர்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
திக்கொடு உலகு அனைத்தையும் வென்று அடக்கிய புய வலியும்

அது மட்டுமா

வாரணம் பொருத மார்பன்
வரையினை எடுத்த தோளன்
பத்துத் தலை
இருபது தோள்
சங்கரன் கொடுத்த வாள்

என்று அவன் பெருமை கணக்கில் அடங்காதது.

அவன், இந்த பெண்ணின் முன்னால் போய் "அடியேன் மேல் என்று தான் இரக்கம் கொள்வது " என்று கெஞ்சுகிறான்.

அவன் கைக்கு எட்டாத ஒன்றும் இந்த உலகில் இருக்கிறது. அது சீதையின் சம்மதம்.


என்றுதான், என்றுதான் என்று நான்கு முறை சொல்கிறான்.   

அதில் முதல் மூன்று முறை உள்ளதில் உள்ள 'தான்' என்ற சொல் அசைச் சொல்.

அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாத சொல். பாடலில் இலக்கணம் மற்றும் ஒலி நயத்திற்காக சேர்ப்பது. 

என்றுதான் எனக்கு இரங்குவது என்ற தொடரில் 'தான்' என்ற சொல் இல்லா விட்டாலும்  அர்த்தம் மாறாது. 

"என்று எனக்கு இரங்குவது" என்றாலும் அதே பொருளைத்தான் தரும்.

"தான்" என்ற அகந்தை அர்த்தம் இல்லாதது தானே ?

கடைசியில் வரும் "என்று , தான் "  என்ற தொடர் "என்று, தான் நினைத்ததை சொல்லத் தொடங்கினான் " என்ற அர்த்தத்தில் வருகிறது. 

என்றுதான் எனக்கு இரங்குவது 
 
என்று - தான்   நினைத்ததை 

வார்த்தையில் விளையாடுகிறான் கம்பன். 

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எவ்வளவு பெரிய ஆளையும் காமம், காதல் எப்படி குழந்தையாக மாற்றி விடுகிறது ?

ஏன் என்று சிந்திப்போம். 

Friday, August 22, 2014

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - பாகம் 2

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - பாகம் 2 


கடவுளை எங்கே வைப்பது ?

சிலர் பூஜை அறையில் வைத்து இருப்பார்கள்.

சிலர் பர்சில் வைத்து இருப்பார்கள்.

சிலர் கழுத்தில் உள்ள டாலரில் மாட்டி தொங்க விட்டிருப்பார்கள்.

கையில், இடுப்பில் என்று எங்கெல்லாமோ இறைவன்.

கடவுளை மனதில், நெஞ்சில், கருத்தில் வைக்க வேண்டும். கக்கத்தில் வைக்கக் கூடாது.


எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.

என்பார்  பட்டினத்தார்.

இதைத்தான் மணிவாசகரும் ,


உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே


உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றவன் என்கிறார்.

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று சிவ புராணத்தில்  முன்னால்  குறிப்பிட்டார்.

ஞானிகள் எல்லோரும் ஒரே விதமாக சிந்தித்து இருக்கிறார்கள்.




இராமாயணம் - இராவணன் புறப்பாடு

இராமாயணம் - இராவணன் புறப்பாடு 


சீதை அசோக வனத்தில் இருக்கிறாள். அவளைக் காண இராவணன்  புறப்படுகிறான்.

அவன் எப்படி சென்றான் என்று கம்பர்  கட்டுகிறார்.

அவனைச் சுற்றி பெண்கள் விளக்கு ஏந்தி  வந்தார்கள்.அப்படி விளக்கு ஏந்திய பெண்கள் எப்படி இருந்தார்கள் ? அவர்களே ஒரு விளக்கு போல அவ்வளவு அழகாக ஒளி வீசும்படி இருந்தார்கள். அவர்கள் அழகு ஜொலிக்கிறது. விளக்கே விளக்கை தாங்கி வந்தது போல இருந்தது.

அவர்கள் இடையில் மேகலை போன்ற ஆபரணங்களை சுற்றி இருக்கிறார்கள்.அது ஏதோ பாம்பு அவர்கள் மேல் சுற்றி இருப்பதைப் போல இருக்கிறது.

நாம் நடந்து  போகிறோம்.என்றாவது நம் கையையும், காலையும், இந்த தலையையும் நான் சுமந்து கொண்டு போகிறேனே என்று நினைத்தது உண்டா.  ஆனால்,அந்த கையோ, காலோ அடிபட்டு வீங்கி விட்டால் அது ஏதோ மாற்றுப் பொருளை சுமந்து போவதைப் போல நோகும் நமக்கு.

அந்த விளக்கு ஏந்திய பெண்களுக்கு அவர்களின் மார்புகளை தூக்கிச் செல்வது அவர்களின் இடைக்கு பெரிய பாரமாய் இருந்ததாம்.

அவர்களின் நெற்றி  பிறைச் சந்திரனைப் போல இருந்தது.

ஒரு புறம் இப்படி அழகான பெண்கள். மற்றொரு புறம்,  தவ முனிவர்கள் அவனை வாழ்த , இவர்கள் எல்லோரும் புடை சூழ இராவணன் நடந்து வந்தான். 

பாடல்

‘விளக்கு ஒரு விளக்கம் தாங்கி, மின் அணி அரவின் சுற்றி,
இளைப்புறும் மருங்குல் நோவ, முலை சுமந்து இயங்கும்’
                                           என்ன
முளைப் பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும்
                                     பின்னும்,
வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான்.

பொருள்

‘விளக்கு ஒரு விளக்கம் தாங்கி = விளக்கே விளக்கை தான்கியதைப் போல

மின் அணி = மின்னல் போல் ஒளி விடும்

அரவின் சுற்றி = பாம்பை போல நெளியும் ஆடைகளை மேலே படர  விட்டிருந்தார்கள்.அந்த மெல்லிய ஆடைகள் அசைவது பாம்பு நெளிவது போல இருந்தது. 

இளைப்புறும் மருங்குல் நோவ = மூச்சு வாங்கி, இடுப்பு நோக

முலை சுமந்து இயங்கும் = தங்கள் மார்புகளை சுமந்து

என்ன = அப்படி இருக்கும் போது

முளைப் பிறை நெற்றி = நிலவு அப்போதுதான் முளைத்து வருவது போல தோன்றிய பிறை நிலவு. அந்த பிறை நிலவைப் போன்ற நெற்றி. பிறை நிலவை முளை விட்ட நிலவு என்ற உவமை இனிமையானது.

வான மடந்தையர் = அப்படிப் பட்ட தேவ மங்கையர்

முன்னும் பின்னும் = முன்னாலும் பின்னாலும்

வளைத்தனர் வந்து சூழ = சூழ வந்தனர்

வந்திகர் வாழ்த்த = வணக்கத்திற்கு உரிய பெரியவர்கள் வாழ்த்த

வந்தான் = வந்தான்.

எவ்வளவு பெரிய  வாழ்க்கை. எவ்வளவு சிறப்பு.

எல்லாம் அழிந்தது.

எதனால் ?

அறம் பிறழ்ந்த வாழ்க்கை நெறியால்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்

அறம் நின்று  கொன்றது.



சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே



உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

நான் உய்யும் படி என் உள்ளத்தின் உள்ளே ஓங்காரமாய் நின்றவனே.
உண்மையானவனே.
விமலனே.
எருதை மேய்பவனே.
வேதங்களால்  ஐயா என்று ஓங்கி உச்சரிக்கப்படுபவனே.
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே.

இவ்வளவுதான் அர்த்தம் - மேலோட்டமாகப் பார்த்தால்.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

வாழ்வில் எது உண்மை, எது பொய் என்று எப்படி அறிவது ? ஏன் அறிய வேண்டும்.

பொய்யானவற்றின் பின்னால் போனால் அவை திருப்தி தராது.

நீர் குமிழியை விரட்டிப் பிடிப்பதில் என்ன பயன் ?

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான் ஆம், மாணாப் பிறப்பு.

என்பார் வள்ளுவர். பொருள் அல்லாதவற்றை பொருள் என்று உணரும் மயக்கத்தினால் இந்த பிறவி மீண்டும் மீண்டும் உண்டாகிறது.

எது உண்மையானது, எது பொய்யானது என்று அறியும் அறிவு வேண்டும்.

அடிகள் சொல்கிறார் - "மெய்யா". உண்மையானவனே, மெய்யே வடிவானவன்.

இறைவன் என்பது மெய். உண்மை என்று அறிவிக்கிறார்.

அந்த உண்மையை, மெய்யை எப்படி அறிவது ?

நீர் மேல் பாசி படிந்திருக்கும். பாசி விலகினால் நீர் தெரியும்.

கண்ணாடி மேல் தூசி படிந்திருக்கும். தூசியை துடைத்தால் பிம்பம் தெளிவாகத் தெரியும்.

செம்பின் மேல் களிம்பு  படிந்திருக்கும். களிம்பு போனால், செம்பு பளிச்சென்று இருக்கும்.

நம் அறிவின் மேல் எத்தனை அழுக்கு. மலம்.

மலம் என்பது அழுக்கு. கழிவு. வேண்டாதது.

நாம் தான் எத்தனை அழுக்குகளை சுமந்து கொண்டு இருக்கிறோம்.

அழுக்குகளை அழகுகள் என்று நினைத்து இறுகப் பற்றிக் கொண்டு இருக்கிறோம்.

 நமக்கு இருக்கும் மலங்களை மூன்று விதமாக  பிரிக்கிறார்கள்.

ஆணவம் - கன்மம் - மாயை என்று.

இந்த மூன்று மலங்களும் நீங்கினால் சீவன் சிவன் ஆகும். சீவனுக்கும் சிவனுக்கும் ஒரே வித்தாயசம் தான்.

மலம் உள்ளது சீவன். இல்லாதது சிவன்.

அவன் எந்த மலமும் இல்லாதாவன் - வி-மலன். மலம் இல்லாதவன்.

மனிதன் தெய்வம் ஆகலாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப்படும் 

என்பார் வள்ளுவர்.


வி என்றால் இல்லாதது என்று  அர்த்தம். எல்லோருக்கும் ஒரு தலைவன் , நாயகன்  உண்டு. தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.


மெய்யா - விமலா.

அழுக்குகள் (மலம்) இல்லாதவனை அறிய அறிவு வேண்டும்.  அவன் ஞானமே வடிவானவன். அந்த ஞானம், அறிவு எப்படி இருக்கிறது.

அறிவு - ஆழமாகவும் இருக்க வேண்டும், அகலாமாகவும் இருக்க வேண்டும், கூர்மையாகவும் இருக்க வேண்டும்.

எனவே, அவனை

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார் அடிகள்.

ஆழமாக சிந்திப்போம்.

அகலாமாக ,  விரிவாக சிந்திப்போம்.

நுண்மையாக சிந்திப்போம்.


Thursday, August 21, 2014

இராமாயணம் - இராவணன் தோற்றம்

இராமாயணம் - இராவணன் தோற்றம் 


சீதை எப்படி இருந்தாள் என்று நேற்று பார்த்தோம்.

சீதையை சந்திக்க புறப்படும் இராவணன் எப்படி இருந்தான் என்று  பார்ப்போம்.

பெரிய மலை. அந்த மலையில் இருந்து அருவி விழுகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் , அந்த அருவி ஏதோ வைரத்தால் செய்த மாலை அந்த மலையின் கழுத்தில் தொங்குவது போல இருக்குமே அந்த மாதிரி இராவணின் கழுத்தில் மணி மாலை தொங்குகிறது.

அவன் மகுடம் மின்னலைப் போல ஒளி வீசுகிறது.

கோடி சூரியன் ஒன்று சேர்ந்தார் போல இருக்கிறது அவன் மகுடம்.

யானையின் நடை கம்பீரமாக இருக்கும். உணவில்லாமல், சோர்ந்த யானை  அல்ல. நன்றாக உண்டு, தன் ஜோடியோடு இணைந்து களிப்புற்ற யானை எப்படி நடந்து வருமோ, அந்த யானை நாணும் படி நடந்து வந்தான்.

சீதையை  காணப் போகிறோம் என்ற குஷி.

பஸ் ஸ்டாண்டில் காதலியை பார்க்கப் போகும் போது நம் பசங்க எப்படி ஒரு தலையெல்லாம் சீவி, கொஞ்சம் பவுடர் அடித்து, காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, உற்சாகமாக செல்வது இல்லையா ....அது போலத்தான்...



பாடல்

மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச,
துன் இருள் இரிந்து தோற்ப, சுடர் மணித் தோளில்
                                    தோன்றும்
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப
நல் நெடுங் களி மால் யானை நாணுற, நடந்து வந்தான்.

பொருள்

மின் = மின்னல் போல்

ஒளிர் = ஒளிரும். திரும்பிய பக்கம் எல்லாம் மின்னல் அடிக்கும்

மகுட = மகுடம்

 கோடி வெயில் = கோடி சூரியப் பிரகாசம் போல

ஒளி விரித்து வீச = ஒளியை விரித்து நாலா பக்கமும் வீச

துன் இருள் = நெருங்கி வந்த இருள்

இரிந்து தோற்ப = தோற்று ஓடிப் போக

சுடர் மணித் = சுடர் வீசும் மணிகள்

தோளில் தோன்றும் = தோளில் தோன்றும்

பொன்னரி மாலை= பொன்னாலான மாலை

நீல வரையில் = மலையின் மேல்

வீழ் அருவி பொற்ப = விழுகின்ற அருவி போல

நல் = நல்ல

நெடுங் = பெரிய

களி = மகிழ்ச்சியான

மால் யானை  = ஆசை (மயக்கம்) கொண்ட யானை

நாணுற, நடந்து வந்தான் =  நாணம்    தோன்ற  நடந்து வந்தான்


நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே

நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே 


தலைவி சொல்கிறாள்.

இந்த உடையும், இந்த வளையல்களும் என்னுடையதாகத்தான் இருக்கும்..எப்போது என்றால் நந்தி வர்மன் எதிரிகளின் மேல் படை எடுத்துப் சென்றிருக்கும் பொழுது.

அப்படி அவன்  சண்டைக்குச் செல்ல வில்லை என்றால், என் அருகில் இருப்பான். அப்போது இந்த உடையும், இந்த வளையலும் என்னிடம் இருக்காது என்று சொல்லாமல் சொல்கிறாள்.

நந்தியின் வீரத்துக்கும் காதலுக்கும் கட்டியம் கூறும் பாடல்....

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது  

பொருள்

எனதே = என்னுடையதே

கலை = துகில், ஆடை

வளையும் = வளையலும்

என்னதே = என்னுடையதே

மன்னர் = மன்னனான

சினஏறு = சினம் கொண்ட காளை  அல்லது சிங்கம்

செந்தனிக்கோல் நந்தி = சிறப்பான செங்கோல் செலுத்தும் நந்தி

இனவேழம் = யானை போல

கோமறுகில்= கோபம் கொண்டு

சீறிக் = சீறி

குருக்கோட்டை = குருக்கோட்டை என்ற ஊரின் மேல்

வென்றாடும் = வெற்றிக் கொள்ள படை எடுத்துச் செல்ல

பூமறுகில் = பூமறுகில் (இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை )

போகாப் பொழுது = போன போது (செய்யா என்ற வாய்பாட்டு வினை. பெய்யா கொடுக்கும் மழை போல, கொய்யா பழம் போல )



சிவ புராணம் - மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

சிவ புராணம் - மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்



புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.


எளிமையான  வரிகள்.

சிவ புராணத்தில் இந்த பகுதியை பல பேர் சொல்லும் போது ,இது தற்கால evolution theory யை அடி ஒற்றி இருக்கிறது என்று  சொல்லுவார்கள்.

பறவையில் இருந்து பாம்பு வந்ததா ? பின் கல் எப்படி வந்தது என்று சர்ச்சைகள்  வந்தன.

அது ஒரு புறம்  இருக்கட்டும்.

பிறந்தோம் , வளர்ந்தோம்...எப்படி வளர்ந்தோம்...

மனிதனாக  வளரலாம்.

பணம், பதவி, பொருள் , பெண், மண் என்று பேயாகத் திரியலாம்.

பலம் கொண்டு எல்லோரையும் அடக்கி ஆண்டு அதிகாரம் செலுத்தி
அரக்கர்களைப் போல மாறலாம்.

படித்து,ஞானம் பெற்று, தானம் செய்து, தவம் செய்து முனிவராய், தேவராய் ஆகலாம்.



பிறந்தோம். வளர்ந்தோம். இறந்தோம்.

இறந்த பின் உடலை புதைத்தோ எரித்தோ விடுவார்கள்.

உடல் மீண்டும் மண்ணாகப் போகும்.

அதில் புல் முளைக்கலாம். செடி முளைக்கலாம். மரம் முளைக்கலாம்.

அந்த செடியிலோ, மரத்திலோ புழுக்களும், பறவைகளும், பாம்புகளும் வாழலாம்.

என்னவாக ஆவோம். எப்படி ஆவோம் என்று நமக்கு என்ன தெரியும் ?

என்னனவோ செய்து, எப்படியெல்லாமோ ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

ஒன்று மட்டும் உறுதி.

நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம். நேற்று மாதிரி இன்று இல்லை.  இன்று போல நாளை இருக்காது.

இப்படி ஒன்றில் இருந்து ஒன்றாய், இதிலிருந்து அதுவாய், அதில் இருந்து இதுவாய் மாறிக் கொண்டே போனால் இதற்கு முடிவுதான் என்ன ?

தான் ஒரு தொடர் சுழற்சியின் நடுவில் இருப்பதை அடிகள் உணர்ந்து...

"மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"  என்கிறார்.

எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய ஒன்று...திருவடி என்று எங்கெல்லாம் வருகிறதோ அது ஞானத்தையே  குறிக்கும்.

மெய்யான ஞானம் அடைந்து வீடு பேறு பெற்றேன் என்கிறார் அடிகள்



Wednesday, August 20, 2014

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல்

இராமாயணம் - இராவணன்  சீதை உரையாடல் 


இராவணனும் சீதையும் எப்படி பேசி இருப்பார்கள்.

சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். அவளைக் காண இராவணன் வருகிறான். அவளிடம் எப்படி பேசி இருப்பான் ? என்ன பேசி இருப்பான் ? அதற்கு சீதை என்ன மறுமொழி சொல்லி இருப்பாள் ?

சீதையைக் காண வருகிறான் இராவணன்...

அவன் வருவதே அவளை கலக்கியது என்கிறார் கம்பர்

ஒவ்வொரு பெண்ணிடம் ஒவ்வொன்று அழகாக இருக்கும். சிலருக்கு கண்கள், சிலருக்கு புருவம், சிலருக்கு நெற்றி, சிலருக்கு இதழ்கள், இடுப்பு என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று அழகாக இருக்கும்.

சிலபேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அவயங்கள் அழகாக அமைந்து விடலாம்.

உலகில் உள்ள அத்தனை அழகான அவயங்களையும் எடுத்து, அதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தாள் சீதை.

கொஞ்சம் அழகாய் இருந்தாலே நம் ஊர் பெண்களை பிடிக்க முடியாது. இத்தனை அழகு இருந்தால் அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் ?

ஆனால், சீதையிடம் தான் பெரிய அழகு என்ற ஆணவம் இல்லை, அகந்தை இல்லை...உலகில் உள்ள அத்தனை நல்ல குணங்களும் அவளிடம் இருந்தன.

அழகும், பண்பும் ஒன்றாக இருப்பது எவ்வளவு அபூர்வம்.

அவள் குரல் - இன்னிசை மாதிரி இருக்கும்.

அவள் இதழ்கள் - பவளம் போல சிறப்பு.

அப்படிப்பட்ட சீதையை தன இருபது கண்காலும் கண்டான் இராவணன். அவளுக்குள் ஒரு கலக்கத்தை உண்டாக்கினான்.

பாடல்


பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின்
                                          ஈட்ட,
எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து
                                   இயற்றினாளை,
கண்களால் அரக்கன் கண்டான், அவளை ஓர் கலக்கம்
                                      காண்பான்.

பொருள்

பண்களால் = இசைப் பாடல்களால்

கிளவி செய்து = கிளவி என்றால் மொழி. சீதையின் பேச்சு இன்னிசைப் பாடல் போல அவ்வளவு இனிமையாக இருக்கும்.

பவளத்தால் அதரம் ஆக்கி = பவளத்தால் இதழ் செய்து. பவளம் பட்டை தீட்ட தீட்ட ஒளி விடும்.


பெண்கள் ஆனார்க்குள் = பெண்கள் என்பவர்களுக்குள்

நல்ல உறுப்பு எலாம் = அழகான உறுப்புகள் எல்லாம் எடுத்து

பெருக்கின் = ஒன்று சேர்த்து, அவற்றை மேலும் மெருகூட்டி

ஈட்ட = செய்து

எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து = எண்ண முடியாத அளவு பெருமை வாந்த குணங்களை தொகுத்து

இயற்றினாளை = செய்தவளை

கண்களால் அரக்கன் கண்டான் = தன் இருபது கண்களால் இராவணன் கண்டான்

அவளை ஓர் கலக்கம் காண்பான் = அவளை ஒரு கலக்கு கலக்கினான்


Tuesday, August 19, 2014

தேவாரம் - இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ

தேவாரம் - இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ


எனக்காகவா நீ இத்தனையும் செய்தாய் ?

என்னை அன்பால் அணைத்துக் கொண்டாய். உன்னுடைய அருள் பார்வையால் என்னை நீர் ஆட்டினாய். நீ எவ்வளவு பெரிய ஆள், எனக்காக சாதாரண ஆளாக வந்தாய். என்னை ஆட் கொண்டாய். நான் செய்த பிழைகள் அனைத்தும் பொருத்தாய் . இத்தனையும் எனக்காகவா செய்தாய் ? உன் கருணையை என்னவென்று சொல்லுவேன் ....என்று உருகுகிறார் திரு நாவுக்கரசர்.

பாடல்  

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைதனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே.

பொருள்

அத்தா = தந்தையே

உன் அடியேனை = உன் அடியவனான என்னை

அன்பால் ஆர்த்தாய் = அன்பால் அனைத்துக் கொண்டாய்

அருள்நோக்கில் = உன்னுடைய அருள் பார்வை என்ற 

தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய் = தீர்த்த நீரால் என்னை நீராட்டினாய்

எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய் = எவ்வளவு பெரிய ஆள் நீ. எனக்காக எளியவனாக வந்தாய்

எனை ஆண்டுகொண்டு = என்னை ஆட் கொண்டு

இரங்கி = என்பால் இரக்கம் கொண்டு

ஏன்றுகொண்டாய் = ஏற்றுக் கொண்டாய்

பித்தனேன் = பித்தனேன்

பேதையேன் = பேதையேன்

பேயேன் = பேயேன்

நாயேன் = நாயேன்

பிழைதனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே = நான் செய்த பிழைகள் அனைத்தும் பொருத்தாய்

இத்தனையும் = இவை அனைத்தும்

எம் பரமோ = எனக்காகவா ?

ஐய ஐயோ = ஐய ஐயோ

எம்பெருமான் = எம் பெருமானே

திருக்கருணை இருந்தவாறே = உன் திருக்கருணை இவ்வாறு இருந்தது

.
இது மேலோட்டமாக நாம் அறியும் பொருள்.

எழுதியவர் நாவுக்கு அரசர். 


அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் =  பயத்தால் கூட இறைவனிடம் அடியவனாக இருக்கலாம். ஆனால், திருநாவுக்கரசரோ, அன்பால் அடிமை கொண்டாய்  என்கிறார்.  

அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய் = நம் மேல் தான் எத்தனை அழுக்கு. காமம், கோபம்,  மோகம், மதம், பொறாமை, பொய், அழுக்காறு என்று ஆயிரம் அழுக்கு. அத்தனை அழுக்கையும் அவனுடைய அருள் பார்வை என்ற புனித நீரால் நீராட்டினான்.

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை பிரபஞ்சம் என்னும் 
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ்சடா அடவியின் மேல் 
ஆற்றை பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றை புனைந்தவன் பெருமான் மகன் கிருபாகரனே 

என்பார் அருணகிரி நாதர். பிரபஞ்சம் என்ற சேற்றை அள்ளி பூசிக் கொண்டு இருக்கிறோம்.

பித்தனேன் = ஒரு வழி நில்லாதவன்,

பேதையேன் = ஒன்றும் அறியாதவன் , முட்டாள்

பேயேன் = வீணாக அலைபவன்

நாயேன் = கீழானவன்

நாவுக்கரசர் இப்படி என்றால், நாம் எல்லாம் எப்படியோ.

பிழைதனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே = இவ்வளவு மோசமானவன் செய்வதெல்லாம் பிழையாகத் தானே இருக்கும். அத்தனையும் பொறுத்தான்.

இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ = அவரால் தாங்க முடியவில்லை. ஐயோ, எனக்காகவா இத்தனையும் என்று உருகுகிறார்.

எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே.


சிவ புராணம் - புகழுமாறு ஒன்று அறியேன்

சிவ புராணம் - புகழுமாறு ஒன்று அறியேன் 



இன்று அறிவியல் "அனைத்தையும் விளக்கும் தத்துவம்" (A Theory of  Everything ) என்பது பற்றி  பேசுகிறது.

http://en.wikipedia.org/wiki/Theory_of_everything

அறிவியலில் இன்று பலப் பல தத்துவங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் விளக்கும் ஒரு தியரி இல்லை. புவி ஈர்ப்பு விசைக்கு ஒன்று, மின் காந்த சக்திக்கு ஒன்று, அணு விசைக்கு ஒன்று என்று பல்வேறு கோட்பாடுகள்  உள்ளன. சில சமயம் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவும் உள்ளது.

உலகில் உள்ள அனைத்தையும் விளக்கும் கோட்பாடு எது என்று அறிவியல் மிகத் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறது.

மாணிக்க வாசகர்  சொல்கிறார், விண்ணிலும்,மண்ணிலும் நிறைந்து அனைத்திலும் விளங்கும் ஒளியாய் இருப்பவனே என்று இறைவனை  குறிப்பிடுகிறார்.

எங்கும் நிறைந்து, அனைத்தையும் விளக்கும் ஒளி அவன்.

உன்னுடைய அளவற்ற பெருமைகளில் ஒன்றைக் கூட அறியாமல், உன்னை புகழுகின்ற ஒன்றையும் நான் அறியவில்லையே என்று அவை அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.

பாடல்

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்


சீர் பிரித்த பின்

விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கும் ஒளியாய் 
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 


பொருள்

விண் நிறைந்து = விண்ணில் எங்கும் நிறைந்து

மண் நிறைந்து = விண்ணில் மட்டும் அல்ல, இந்த மண்ணிலும் நிறைந்து

மிக்காய் = இவற்றைத் தாண்டி அனைத்து இடத்திலும்

விளங்கும் = விளங்கும்

ஒளியாய் = ஒளி  போன்றவனே.அனைத்தையும் காட்டும் ஒளி போன்றவனே

எண் இறந்து = எண்ணிக்கை இல்லாமல். எண்ணிப் பார்க்க முடியாத

எல்லை இலாதானே = இது இப்படித்தான் என்ற வரை முறை கடந்தவனே

 நின் பெரும் சீர் = உன்னுடைய பெருமைகளை

பொல்லா வினையேன் = பொல்லாத வினைகளை உடைய நான்

 புகழுமாறு ஒன்று அறியேன் = புகழ்ந்து சொல்ல ஒன்றும் அறிய மாட்டேன் 

Monday, August 18, 2014

திருக்குறள் - வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள் - வாழ்க்கைத் துணை நலம்


வாழ்க்கைத் துணை நலம் என்று மனைவியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இன்றுள்ள பெண்ணுரிமை போராட்டாக்காரர்கள் "அதெப்படி நாங்கள் என்ன துணை, கணவன் மட்டும் தான் main -ஆ" என்று கொடி பிடிக்கிறார்கள்.

உயர்ந்த நூல்களை படிக்கும் போது, நம் கீழ்மையை அதன் மேல் ஏற்றக் கூடாது. திருக்குறளை விட, திருவள்ளுவரை விட தாங்கள் அறிவில் மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வதால் வரும் வினைகள் இவை.

நாம் யாரைத் துணையாகக் கொள்வோம் ?

நம்மை விட பலசாலியையா அல்லது நம்மை விட பலவீனமானவனையா ?

துணை என்பது நம்மை விட சிறந்ததாக இருக்க  வேண்டும்.

துணையோடு அல்லது நெடு வழி போகேல் என்றாள் அவ்வைப்   பாட்டி. வாழ்க்கை நீண்ட பயணம். அதற்கு ஒரு நல்ல துணை வேண்டாமா ?

அபிராமி பட்டர் ஒரு படி மேலே போய் , துணை என்பது தெய்வம் என்கிறார்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்னுடைய துணை அபிராமி என்று அறிந்தேன் என்கிறார்.

பயந்த தனி வழிக்குத் துணை முருகனே என்கிறார் அருணகிரி நாதர்

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ என்பார் திருநாவுக்கரசர்.

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடை மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒன்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!

இப்படி , துணை என்பது நம்மை விட மிக மிக  உயர்ந்தது.

துணை என்பது தாழ்ந்தது அல்ல.

மனைவி எப்போது வாழ்க்கைத் துணையாவாள் என்றும் வள்ளுவர்  சொல்கிறார்.


மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

 சீர் பிரித்த பின்

மனைக்குத் தக்க மாண்பு உடையள் ஆகி தன்னைக் கொண்டான்
வளத்துக்கு தக்காள் வாழ்க்கைத் துணை

சீர் பிரித்த போது சற்று நீட்டியும் இருக்கிறேன், எளிதாகப் புரிந்து கொள்ள.

பொருள்

மனைக்குத் தக்க மாண்பு உடையள் ஆகி = வீட்டுக்கு ஏற்ற மாண்பு உடையவள் ஆகி

தன்னைக் கொண்டான் = தன்னை மணந்த கணவனின்

வளத்துக்கு தக்காள் = வளத்துக்கு தக்கபடி வாழ்பவள்

வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணைவி



மனைக்குத் தக்க மாண்பு என்றால் என்ன ?

பரிமேல் அழகர் சொல்கிறார் - துறவிகளுக்கு  உதவுவது, ஏழைகளுக்கு அன்னம்  அளிப்பது,விருந்தினர்களை உபசரிப்பது  போன்றது.

இது எல்லாம்  நல்லதுதான். இருந்தாலும், அதற்க்கு என்று ஒரு அளவு வேண்டாமா ? இருக்கின்ற செல்வத்தை எல்லாம் அள்ளி வழங்கி விட்டு பின் எப்படி குடும்பம்  நடத்துவது ?

எனவே அடுத்த வரியில் சொல்கிறார்

கணவனின் வளத்துக்கு தக்கபடி வாழ வேண்டும் என்று.

வீடு வேணும், கார் வேணும், பங்களா வேணும், நகை நட்டு வேண்டும் என்று நச்சரிக்கக்  கூடாது.

வளம் என்றால் வருமானம் மட்டும் அல்ல - சொத்து, நல்ல  பெயர்,செல்வாக்கு என்று அனைத்தும் அதில்  அடங்கும்.

குடும்பத்தின் நல்ல பெயருக்கு களங்கம் வராமல், வருமானத்திற்கு அதிகாமாக செலவு  செய்யாமல், சொத்துக்கு அதிகமாக கடன் வாங்காமல்...வளத்துக்கு தக்க வாழ்பவள் வாழ்க்கைத் துணை.

Sunday, August 17, 2014

திருப்புகழ் - இன்புற்று அன்புற்று அருள்வாயே

திருப்புகழ் - இன்புற்று அன்புற்று அருள்வாயே 


பெண்ணாசை மனிதனை விடாமல் துரத்துகிறது. 

அருணகிரியானாதர்  பதறுகிறார்.

பெண்களின் மார்புகள்  எமனின் படை என்று பயப்படுகிறார்.

பெண்களின் பின்னால் சென்று மருளும் எனக்கு அருள்புரிவாய்  என்கிறார்.அதுவும், இன்புற்று , அன்புற்று அருள் புரிவாய் என்று  வேண்டுகிறார்.

சந்தனம் பூசிய, மணம் வீசும் பெண்கள். அவர்களின் மார்புகள் எமப் படை. அவர்களின் கண்களில் இருந்து என்னை காப்பாய். அவர்கள் கூந்தலில் மலர்களை சூடி இருக்கிறார்கள். அந்த பூக்களில் வண்டுகள் ரீங்காரம் இடுகின்றன. அந்த கரிய கூந்தலில் மயங்கி விழும் என்னை காப்பாற்றி அருள் புரிவாய்.   

திருமாலின் மருகனே. சிவனின் மகனே எனக்கு அருள் புரிவாய். 

பாடல் 

பரிமள களபசு கந்தச் சந்தத்                  தனமானார்
படையம படையென அந்திக் குங்கட்       கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற்      குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற்         றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற்            றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித்    தெறிவேலா
திரிபுர தகனமு வந்திக் குஞ்சற்               குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப்        பெருமாளே.


சீர் பிரித்த பின் 

பரிமள களப சுகந்த  சந்த தன மானார்
படை எமப்  படையென அந்திக்கும் கண் கடையாலே
வரி அளி  நிரை முரல் கொங்கும் கங்குல் குழலாலே
மறுகிடும்  மருளனை இன்புற்று அன்புற்று  அருள்வாயே
அரி திருமருக கடம்பத் தொங்கல் திருமார்பா
அலை குமு குமு என வெம்பக் கண்டித்து  எறிவேலா
திரிபுர தகனம் வந்திக்கும் சற்  குருநாதா
ஜெய ஜெய ஹர ஹர செந்திற் கந்தப்  பெருமாளே.


பொருள் 

பரிமள = மணம் வீசும் 

களப = கலவை (சந்தனம், ஜவ்வாது போன்ற பொருள்களின் கலவை )

சுகந்த = நறுமணம் வீசும் 

சந்த = அழகிய 

தன = மார்புகள்  

மானார் = பெண்கள் 

படை எமப்  படையென = அவர்கள் கொண்ட படை எமனின் படைப் போல உயிரை வாங்குபவை 

அந்திக்கும் = இணையும் 

கண் கடையாலே = ஓரக் கண்ணாலே 

வரி = வரி உள்ள 

அளி = வண்டுகள் 

நிரை முரல் = ரீங்காரம் இடும் 

கொங்கும் = வாசனை உள்ள 

கங்குல் = கரிய 

குழலாலே = முடியாலே 

மறுகிடும் = உருகிடும் 

மருளனை = மருள் கொண்ட என்னை 

இன்புற்று = இன்பத்துடன் 

அன்புற்று = அன்பு கொண்டு 

அருள்வாயே = அருள் புரிவாயே 

அரி = திருமால் 

திருமருக = மருமகனே 

கடம்பத் தொங்கல் = கடம்ப மாலை அணிந்த 

திருமார்பா = மார்பை உடையவனே 

அலை = கடலில் அலை 

குமு குமு என = குபு குபுவென 

வெம்பக் = கொதிக்க 

கண்டித்து = அதைக் கண்டித்து 

எறிவேலா = வேலை எறிந்தவனே 

திரிபுர = முப்புரங்களை 

தகனம் = எரித்த சிவன் 

வந்திக்கும் = வணங்கும் 

சற்  குருநாதா = குருநாதா 

ஜெய ஜெய ஹர ஹர = வெற்றி வெற்றி 

செந்திற் கந்தப்  பெருமாளே.= திருச்செந்தூரில் வாழும் பெருமாளே 


Saturday, August 16, 2014

சிலப்பதிகாரம் - வினை விளை காலம்

சிலப்பதிகாரம் - வினை விளை காலம் 


மற்ற காப்பியங்களில் இருந்து சிலப்பதிகாரம் வித்தியாசப்பட்டது.

இதன் கதாநாயகன் கோவலன். கதாநாயகனுக்கு உரிய பெரிய வலிமையான குணங்கள் எதுவும் கிடையாது. முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து இருந்தது.

நடன மாதைக் (மாதவி) கண்டு சபலப் படுகிறான். அவள் பின்னே போகிறான். சொத்தை அழிக்கிறான்.

மானம் தாங்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடுகிறான்.

சாதாரண நடுத்தர வீட்டு குடும்பத் தலைவன் போல, மனைவியின் நகையை விற்கப் போகிறான். போன இடத்தில் பொற் கொல்லானால் காட்டிக் கொடுக்கப்பட்டு (தவறாக) வெட்டுப்பட்டு உயிரை விடுகிறான்.

பெரிய பலசாலி இல்லை. பெரிய நண்பர்கள் கிடையாது.  சாதாரண மனிதன். பலவீனன். மனைவியிடம் மன்னிப்பு கேட்க்கிறான். அவள் காலைத் தொடுகிறான். செய்த செயலுக்கு வருந்துகிறான்.

இப்படிப் பட்ட ஒரு சாதாரண மனிதனை சுற்றி பிணையப்பட்ட கதை.

இளங்கோ அடிகள் விதியை  நம்புகிறார்.

வாழ்கை விதியின் வழிப்படி செல்கிறது. தனி மனிதன் அதை ஒன்று செய்ய முடியாது என்று சொல்லிச் செல்கிறார்.

கோவலன் மாதவியைக் கண்டது, அவள் மேல் மனதை பறி கொடுத்தது, கண்ணகி அதை கண்டிக்காமல் விட்டது, அவர்கள் மதுரை சென்றது, அந்த நேரத்தில் அரசியின் கொலுசு காணாமல் போனது, அதை அறியாமல் கோவலன் தன் மனைவியின் கொலுசை விற்கச் சென்றது, பாண்டிய மன்னன் விசாரிக்காமல் கொலை செய்யச் சொன்னது....எல்லாம் விதியின் போக்கு.... யார் என்ன செய்திருக்க முடியும் என்பது போல கதை செல்கிறது.

 

மிக மிக வித்தியாசமான கதை.

அந்தக் கதையில்...

காவலர்கள் அரசனிடம் , அரசியின் கால் சிலம்பை களவாடிய கள்வன் கிடைத்து விட்டான் என்று சொல்ல, தீர விசாரிக்காமால், அவனைக் கொன்று அந்த சிலம்பி கொண்டு வாருங்கள் என்று சொல்கிறான்.

பாடல்

வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென்
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்

பொருள்

வினைவிளை கால மாதலின் = வினை விளைகின்ற காலம் ஆதலின்.

யாவதும் = ஆவதும்

சினையலர் வேம்பன் = சினை என்றால் கிளை. கிளையில் பூத்த வேப்பம் பூவின் மாலையை அணிந்த பாண்டியன் 

தேரா னாகி = ஆராயாமல்

ஊர் காப்பாளரைக் கூவி = ஊர் காவலனைக் கூப்பிட்டு

ஈங்கென் = இங்கு என்

தாழ் பூங்கோதை = மனைவியின்

தன்காற் சிலம்பு = கால் சிலம்பை

கன்றிய கள்வன் = திருடிய கள்வன் 

கைய தாகில் = கையில் இருந்தால்

கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் = (அவனைக்) கொன்று சிலம்பை கொணர்க இங்கு என்றான்.

சற்று உன்னிப்பாக கவனித்தால், வார்த்தைகள் வாழ்கையை புரட்டிப் போட்டது விளங்கும்.

கன்றிய கள்வன் கையதாகில் = சிலம்பு அவன் கையில் இருந்தால் என்பது ஒரு அர்த்தம். திருடிய அந்த கள்வன் உங்கள் கையில் (அகப்பட்டு ) இருந்தால் என்பது இன்னொரு அர்த்தம்.

கொன்றச் சிலம்பு கொணர்க = கொன்ற என்பது கொண்ட என்று இருந்திருந்தால் , அவன் கொண்ட சிலம்பை இங்கு கொண்டு வாருங்கள் என்று  அர்த்தம் வரும். கொன்ற சிலம்பு கொணர்க என்றால் அவனை கொன்று அந்த சிலம்பை  கொண்டு வாருங்கள் என்று அர்த்தம் கொள்வது அவ்வளவு சரியாக இருக்காது.

எது எப்படியோ, வார்த்தைகள் தடம் மாறி, கோவலன் வாழ்க்கை பறி போனது.

அதற்கு காரணம் விதி விளையும் காலம் என்று விதி தான் காரணம் என்கிறார் இளங்கோ  அடிகள்.

வேறு எப்படிதான் இதை விளக்குவது ?


Friday, August 15, 2014

கந்த புராணம் - அயன் ஆரும் உவப்பு உற்றாரோ

கந்த புராணம் - அயன் ஆரும் உவப்பு உற்றாரோ 


சூரபத்மனின் கொடுமையால் அவதிப்பட்ட தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள்.

திருமால் "சிவன் தவத்தில் இருக்கிறான். அவர் தவம் முடித்து வந்தால், குமார சம்பவம் நிகழும். அவர் தவம் முடிய வேண்டும் என்றால், அது சாதாரண காரணம் இல்லை. மன்மதன் அவர் மேல் மலர் அம்புகளை போட்டால், அவர் தவம் கலையும் " என்று சொன்னார்.

அது கேட்ட பிரம தேவனும், மன்மதனை சிவன் மேல் அம்பு விட  அனுப்பினார்.மன்மதன் மறுத்தான். சிவன் தவம் கலைந்தால், அந்த கோபம் தன்னை என்ன செய்யுமோ என்று பயந்தான். போகாவிட்டால் இப்போதே சாபம் கொடுக்கப் போவதாக பிரமன் மிரட்டவே, வேறு வழியின்றி சென்றான்.

அவன் நினைத்தது போலவே, தவம் கலைந்த சிவன், தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து விட்டார்.

அங்கு வந்த இரதி புலம்புகிறாள்.

திருமாலுக்கு இரண்டு குமாரர்கள். ஒன்று பிரமன், மற்றவன் மன்மதன்.

இரதி சொல்கிறாள், "என் உயிரே நீ இறந்ததால், சொத்தில் ஒரு பங்கு குறைந்தது  என்று பிரமன் மகிழ்வான் " என்று.  நேரடியாகச் சொல்லவில்லை.

பாடலைப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.....

பாடல்

செம் பதுமை திருக் குமரா தமியேனுக்குக் ஆர் உயிரே    திருமால் மைந்தா
சம்பரனுக்கு ஒரு பகைவா கன்னல் வரிச் சிலை பிடித்த தடக்கை வீரா
அம் பவளக் குன்று அனைய சிவன் விழியால் வெந்து உடலம் அழிவு உற்றாயே உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ அயன்
                        ஆரும் உவப்பு உற்றாரோ.

பொருள் 

செம் பதுமை = அழகான சிலை போன்ற

திருக் குமரா = சிறந்த இளையவனே

தமியேனுக்குக் ஆர் உயிரே = எனக்கு ஆருயிரே

திருமால் மைந்தா = திருமால் மைந்தா

சம்பரனுக்கு ஒரு பகைவா = சம்பரன் என்ற அரக்கனுக்கு பகைவனே

கன்னல் வரிச் சிலை பிடித்த தடக்கை வீரா = கரும்பு வில்லைப் பிடித்த வீரனே

அம் பவளக் குன்று அனைய = பவளக் குன்று போன்ற (சிவந்த பெரிய)

 சிவன் விழியால் = சிவனுடைய விழியால்

வெந்து = வெந்து

உடலம் அழிவு உற்றாயே = உடல் அழிந்தாயே

உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ = தேவர்கள் எல்லாம் இந்த கொடுமையைக் கண்டு கண் மூடி இருகிறார்களோ

அயன் ஆரும் உவப்பு உற்றாரோ = பிரமனும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறானோ

கச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்த புராணம் படிக்க மிக மிக எளிமையானது. 

நேரம் இருப்பின், மூல நூலை படித்துப் பாருங்கள். 

தெள்ளு தமிழ் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். 


இராமாயணம் - புலியை மான் வெல்வதா ?

இராமாயணம் - புலியை மான் வெல்வதா ?


நம் மகனையோ மகளையோ நாம் கடைசியாக எப்போது கட்டி அணைத்து நம் அன்பை வெளிப் படுத்தி இருக்கிறோம் ?

தசரதன் இராமனை கட்டி அணைத்து , "தன் தோள்களால் இராமனின் தோள்களை அளந்தான் " என்பான் கம்பன்.

இந்திரசித்து போரில் இறந்து போனான் என்ற செய்தியைக் கேட்டவுடன் இராவணன் புலம்புகிறான்.

ஐயோ, என்னை தழுவிக் கொள்ள மாட்டாயா என்று அவனின் ஒரு தலை புலம்பியது. இன்னொரு தலையோ, புலியை மான் வெல்வதா என்று அரற்றியது. 

பாடல்

'எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவிக் கொள்கலையோ!' எனும், ஓர் தலை;
'உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே!
செழு வில் சேவகனே!' எனும், ஓர் தலை.

பொருள்

'எழுவின் = எழு என்றால் இரும்புத் தூண்.  இரும்புத் தூண் போன்ற

கோலம் எழுதிய தோள்களால் = சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் பூசிய தோள்களால்

தழுவிக் கொள்கலையோ! = தழுவிக் கொள்ள மாட்டாயா

எனும், ஓர் தலை = என்று புலம்பும் ஒரு தலை

'உழுவைப்  போத்தை  = ஆண் புலியை

உழை = பெண் மான்

உயிர் உண்பதே! = போராடி உயிரை பறிப்பதா ?

செழு வில் சேவகனே!' எனும், ஓர் தலை = வீரம் பொருந்திய செழுமையான வில்லை ஏந்தியவனே என்று புலம்பும் ஒரு தலை



தேவாரம் - தோடுடைய செவியன் - பாகம் 2

தேவாரம் - தோடுடைய செவியன் - பாகம் 2

திரு ஞான சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்த போது , ஒரு நாள் அவருடைய தந்தையார், ஞான சம்பந்தரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச்  சென்றார்.போகிற வழியில், கோவில் திருக் குளத்தில் நீராடி செல்லலாம் என்று குளத்தில் இறங்கி நீராடிக்  கொண்டிருந்தார்.அப்போது, ஞான சம்பந்தருக்கு பசி எடுத்தது. குரலெடுத்து  அழுதார்.அங்கு, பார்வதி , சிவனோடு தோன்றி தன் திருமுலைப் பாலை ஞான சம்பந்தருக்குத் தந்து அவரின் பசியைப்  போக்கினார்.

நீராடி வந்த தந்தையார், பிள்ளையின் வாயில் பால் ஒழுகுவதை கண்டு, யார் தந்தார்கள் என்று வினவ , குழந்தை மேலே காட்டி

கீழ்கண்ட பாடலைப் பாடியது....

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
சீர் பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்தபீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 
காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி,    சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான்  அவனே
என்று கூறி அருளினார்.

பொருள்
தோடு உடைய செவியன் = தோடு உள்ள செவியன்
விடை ஏறி = எருதின் மேல் ஏறி
ஓர் = ஒரு
தூ = தூய்மையான
வெண்  = வெண்மையான
மதி = நிலவை
 சூடிக் =  தலையில் சூடி
காடு உடைய = சுடு கட்டில் உள்ள
சுட லைப் = சாம்பலை
பொடி = பொடியாக
பூசி = உடல் எல்லாம் பூசி
என் உள்ளங் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்
ஏடு உடைய மலரான் = தாமரை மலரில் இருக்கும் பிரமன்
உன்னை = உன்னை (சிவனை )
நாள் பணிந்து  ஏத்த= அன்றொருநாள் பணிந்து துதிக்க
அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் = பெருமை மிக்க பிரமபுரம்
மேவிய = உள்ள
பெம்மான் இவன் அன்றே = பெருமான் இவன் அல்லவோ

---------------------------
பால் தந்தது பார்வதி. அவளைப் பற்றி ஒரு வரி கூட இல்லையே என்று கேள்வி  எழலாம்.
தோடுடைய செவியன் = தோடு என்பது பெண்கள் அணியும் காதணி. பெண்கள்    காதணியை அணிந்திருப்பவன் உலகிலேயே ஒருவன் மட்டும்தான். அவன் அர்த்தநாரியான சிவன். பார்வதி தனியாக வரவில்லை. சிவனோடு சேர்ந்து வந்தாள் . அர்தநாரியாக வந்தான் என்பதை  இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டார். "தோடுடைய செவியன்"

அது மட்டும் அல்ல, பிள்ளை அழுதபோது அதில் காதில் விழுந்து அவள் வந்தாள். எனவே, "தோடுடைய செவியன்" என்று செவியை முதலில் விளித்து  பாடினார்.
ஒவ்வொரு உயிரும் ஆணும் பெண்ணும் சேர்ந்த கலப்பில் வருவதுதான். நம் ஒவ்வொருவருக்குளும் ஆண் தன்மை, பெண் தன்மை இரண்டும் கலந்தே இருக்கும். நாயக , நாயகி பாவத்திற்கு ஆதாரமாக தோடுடைய செவியன் என்றார். 
சில பிள்ளைகளுக்கு அப்பாவிடம் அன்பு அதிகம் இருக்கும். சில பிள்ளைகளுக்கு அம்மாவிடம் அன்பு அதிகம் இருக்கும். இரண்டும் சரி விகிதத்தில் கலந்தால் பிள்ளைகள் மனம் அவர்கள் மேல் காதல் கொள்ளும். கோபம் மட்டும் கண்டிப்பை மட்டுமே காட்டும் தந்தைமேலும் சரி, எப்போதும் செல்லம் தரும் தாய் மேலும் சரி, பிள்ளைகளுக்கு  அதிக பிடிப்பு இருக்காது.  கண்டிப்பும் இருக்க வேண்டும், காதலும் இருக்க வேண்டும். 

இரண்டும் கலந்தால் "உள்ளம் கவர் கள்வன்" 
"தூவெண் மதி சூடி " = தூய்மையான வெண்மையான மதியை தலையில் சூடி. வெண்மை வெளியே தெரிவது. தூய்மை  உள்ளே உள்ளது. உள்ளும் புறமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது தூவெண் மதிசூடி என்ற தொடர். 
சுடலை பொடி பூசி = சுடலை என்றால் சுடு காடு. சுடு காட்டில் உள்ள சாம்பலை பூசி. அது என்ன சுடுகாட்டு சாம்பல் ? அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லையே 
சுடுகாட்டில் அவன் இருக்கிறான் . இறந்த பின் செல்லும் இடத்தில் அவன் இருக்கிறான். 
இறந்த பின், இறைவனால் என்ன பிரயோஜனம் ?

இறப்பது என்றால் என்ன ? உயிரை விடுவது அல்ல.
நான் என்ற ஆணவம் இறக்க வேண்டும்.  நான் என்ற ஆணவ மலம் இறந்த இடத்தில் அவன் நிற்கிறான். 

கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல்
மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

அயல் மாண்டு = சுற்று சூழல் எல்லாம் இறந்து
அருவினை சுற்றமும் மாண்டு = வினை மாண்டு, சுற்றம் மாண்டு 
மயல் மாண்டு = உலகின் மேல் உள்ள ஆசை இறந்து 
வாசகம் மாண்டு = நான் படித்து சொல்ல வேண்டும் என்று நினைத்த வாசகங்கள் அனைத்தும் இறந்து 
செயல் மாண்ட = என்னுடைய செயலும் இறந்து 

இத்தனையும் இறந்ததை எண்ணி மாணிக்க வாசகர் எண்ணி வருந்தவில்லை. தெள்ளேணம் கொட்டாமோ என்று கொண்டாடுகிறார்.
எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே என்று எல்லாம் இழந்ததை நலம் என்கறார் அருணகிரி. 
நான் என்ற அது இறந்த இடத்தில் ஆனந்த நடனம் ஆடுபவன் அவன். அதை சொல்ல வருகிறார் ஞான சம்பந்தர் "காடுடைய சுடலை பொடி பூசி" என்றார். 





 

Thursday, August 14, 2014

தேவாரம் - தோடுடைய செவியன்

தேவாரம் - தோடுடைய செவியன் 


திரு ஞான சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்த போது , ஒரு நாள் அவருடைய தந்தையார், ஞான சம்பந்தரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச்  சென்றார்.போகிற வழியில், கோவில் திருக் குளத்தில் நீராடி செல்லலாம் என்று குளத்தில் இறங்கி நீராடிக்  கொண்டிருந்தார்.அப்போது, ஞான சம்பந்தருக்கு பசி எடுத்தது. குரலெடுத்து  அழுதார்.அங்கு, பார்வதி , சிவனோடு தோன்றி தன் திருமுலைப் பாலை ஞான சம்பந்தருக்குத் தந்து அவரின் பசியைப்  போக்கினார்.

நீராடி வந்த தந்தையார், பிள்ளையின் வாயில் பால் ஒழுகுவதை கண்டு, யார் தந்தார்கள் என்று வினவ , குழந்தை மேலே காட்டி

கீழ்கண்ட பாடலைப் பாடியது....

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

சீர் பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 

காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி,    சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான்  அவனே

என்று கூறி அருளினார்.


பொருள்

தோடு உடைய செவியன் = தோடு உள்ள செவியன்

விடை ஏறி = எருதின் மேல் ஏறி

ஓர் = ஒரு

தூ = தூய்மையான

வெண்  = வெண்மையான

மதி = நிலவை

 சூடிக் =  தலையில் சூடி

காடு உடைய = சுடு கட்டில் உள்ள

சுட லைப் = சாம்பலை

பொடி = பொடியாக

பூசி = உடல் எல்லாம் பூசி

என் உள்ளங் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்

ஏடு உடைய மலரான் = தாமரை மலரில் இருக்கும் பிரமன்

உன்னை = உன்னை (சிவனை )

நாள் பணிந்து  ஏத்த= அன்றொருநாள் பணிந்து துதிக்க

அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடு உடைய பிரமா புரம் = பெருமை மிக்க பிரமபுரம்

மேவிய = உள்ள

பெம்மான் இவன் அன்றே = பெருமான் இவன் அல்லவோ

மிக மிக அருமையான  பாடல்.

இதற்குள் கொட்டிக் கிடக்கும் அர்த்தம் ஆயிரம்.

மேலோட்டமான அர்த்தம் இவ்வளவுதான். ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க ஊற்று போல பொங்கி வரும் இதன் அர்த்தங்கள்.

அவை என்ன என்று பின் வரும் ப்ளாகில் சிந்திப்போம்.





Wednesday, August 13, 2014

இராமாயணம் - மகன் எனும் காதலன்

இராமாயணம் - மகன் எனும் காதலன் 


போரில் இறந்து போனான் இந்திரஜித்து. அந்த செய்தி கேட்டு புலம்புகிறான் இராவணன்.

மகன் என்று கூட சொல்ல வில்லை, காதலன் என்கிறான். அவ்வளவு அன்பு மகன் மேல்.

மகனே மகனே என்று பல முறை வாய் விட்டு அழைத்தான்.  ஒரு மானிடன் என் காதலனை கொன்று விட்டானே என்று அரற்றுகிறான்.

சீதை மேல் கொண்ட காமம், மகனை பலி கொண்டது.

இந்திரசித்து இறந்தான் என்ற செய்தி சொன்ன தூதர்களை வெட்டினான் இராவணன். அவர்களை கெட்டவர்கள் என்கிறான். கொன்றது மானிடர்கள் என்கிறான்.

அவன் அறிவுக்கு எட்டவில்லை - இத்தனை அழிவுக்கும் காரணம் அறம் பிறழ்ந்த அவன் வாழ்கை முறை என்று.


யார் யாரையோ நோகிறான்.

எல்லா துன்பத்திற்கும் காரணம் - எங்கோ அறம் பிறழ்ந்த வாழ்கை முறைதான். உடல் துன்பத்திற்கும், மன துன்பத்திற்கும் காரணம் அறம் தப்பிய வாழ்கை.

இராவணனுக்குத் தெரியவில்லை. இலக்குவன் தன் மண்கனை  கொன்றான் என்று நினைக்கிறான்.

நமக்கு வரும் துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் - நெறி அல்லா நெறி சென்ற வாழ்கை.

பாடல்

‘'கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு
கட்ட மானிடன் கொல்ல, என் காதலன்
பட்டு ஒழிந்தனனே!' எனும்; பல் முறை
விட்டு அழைக்கும்; உழைக்கும்; வெதும்புமால்.

பொருள்

கெட்ட தூதர் = என் மகன் இறந்தான் என்ற செய்தியை சொன்ன தூதர்கள் கெட்டவர்கள் 

கிளத்தினவாறு = சொல்லியவாறு

ஒரு கட்ட மானிடன் = துன்பம் தரும் ஒரு மானிடன்

கொல்ல = கொல்ல

என் காதலன் = என் காதலன்

பட்டு ஒழிந்தனனே!' = இறந்து போனானே

எனும்; = என்று சொல்வான்

பல் முறை = பல முறை

விட்டு அழைக்கும் = (வாய்) விட்டு அழைப்பான்

உழைக்கும்; வெதும்புமால் = வருந்துவான், நொந்துகொள்வான்



Tuesday, August 12, 2014

சிலப்பதிகாரம் - வண்டு ஊசலாடும் புகார் எம் ஊரே

சிலப்பதிகாரம் - வண்டு ஊசலாடும் புகார் எம் ஊரே 


அவளை, அவன் அப்படி காதலித்தான். அவளோ முதலில் அவனைத் திரும்பி கூட பார்க்கவில்லை. இருந்தும் அவன்  விடவில்லை.அவளுக்கு பரிசு பொருள் எல்லாம் வாங்கித் தருவான்.

நாள் ஆக நாள் ஆக அவளுக்கும் அவன் மேல் அன்பு பிறந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

அப்படியே  சிறிது நாள் சென்றது.

முதலில் இனித்த காதல், நாள் பட நாள் பட சுவாரசியம் குறையத் தொடங்கியது.

அவளை பார்க்க வருவது குறைந்தது. அவளோடு பேசும் நேரமும் குறைந்தது.

அவன் அவளை கெஞ்சியது போக, இப்போது அவள் அவனை கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

அந்த ஊரில், வண்டுகள் இருக்கும். அவை குளத்தில் மலரும் நீல மலர்களைத் தேடி வரும். அங்கே பெண்கள் நீராட , நீர் எடுக்க வருவார்கள். அவர்களின் முகம் நீரில் பட்டு பிரதிபலிக்கும்.

அந்த வண்டுகளுக்கு குழப்பம் . எது மலர் என்று ?

உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் தள்ளாடும் வண்டுகளைக் கொண்டது எம் ஊர் என்கிறாள் தோழி.


 ஊடாடும் அர்த்தம் ... நீ நல்லவனா அல்லது மற்றவனா என்று தெரியாமல் தலைவி உன்னிடம் மனதை பறிகொடுத்து விட்டாள்

பாடல்


காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்

காதலராகிக் கழிக் கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் 
ஏதிலர் தாமாகி யாம் இரப்ப நிற்பதை யாம் அறியோம் ஐய 
மாதரார் கண்ணு மதி நிழல்நீரிணை கொண்டு மலர்ந்த நீலப்
போதும்  அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம்மூர்.


பொருள்


காதலராகிக் = காதலராகி

கழிக் கானற் = கடற்கரையில் உள்ள சோலையில்

கையுறை = பரிசுகள்

கொண்டு எம் பின் வந்தார் = கொண்டு எம் பின்னால் வந்தார்

ஏதிலர் = (இன்று) யாரோ போல

தாமாகி = அவர் ஆகி

யாம் இரப்ப  நிற்பதை = நாங்கள் வேண்டி நிற்பதை

யாம் அறியோம் ஐய = நாங்கள் அறியவில்லை ஐயா. இப்படியும் நடக்கும் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை ஐயா

மாதரார் கண்ணு = பெண்களின் கண்ணும்

மதி நிழல் = நிலவின் நிழலைக்  

நீரிணை கொண்டு = நீரினில் கொண்டு

மலர்ந்த = மலர்ந்த 

நீலப் போதும்  = போது என்றால் மலர். நீல மலர்களை

அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம்மூர் = அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எங்கள் ஊர்

கோவலனும் மாதவியும் தனித்து இருக்கும்போது , மாதவி பாடிய பாடல்