Showing posts with label திருப்பாவை. Show all posts
Showing posts with label திருப்பாவை. Show all posts

Monday, February 19, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 1

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 1



திருப்பாவைக்கு எத்தனையோ உரைகள் இருக்கின்றன. எவ்வளவோ பெரியவர்கள் , எத்தனையோ வகைகளில் உரை எழுதி இருக்கிறார்கள்.

எனக்கு பக்தியும் இல்லை, தமிழ் அறிவும் கிடையாது. நான் என்ன எழுதப் போகிறேன்.

இந்தத் திருப்பாவை பாடல்களை பல விதங்களில் பார்க்கலாம்.

மிக எளிமையான தமிழ் பாசுரங்களாக பார்க்கலாம். ஆயர் பாடி பெண் ஒருத்தி , தன் தோழிகளை அழைத்துக் கொண்டு இறைவனை தரிசனம் பண்ண போகிறாள். அது சம்பந்தமான பாடல்களாகப் பார்க்கலாம். அது ஒரு வகை.

இன்னொரு வகை, மிக ஆழ்ந்த அர்த்தங்களோடு கொண்டதாக பார்க்கலாம். ஒவ்வொரு  வார்த்தைக்கும் ஒரு தத்துவார்த்த விளக்கமாக பார்க்கலாம். உதாரணமாக  "கோட்டுக் கால் கட்டில் மேல்" என்று வந்தால், கட்டிலுக்கு நாலு கால் என்பது   நான்கு வேதங்களை குறிக்கும். வேதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதை  ஆண்டாள் குறிக்கிறாள் என்று அர்த்தம் சொல்லலாம்.  அது இன்னொரு வகை.

இந்த இரண்டு முறையிலும், நமக்கு என்ன பலன்? இந்த பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன. தத்துவம் என்றால் , வேதாந்தம் படிப்பவர்கள் படித்து இரசித்து விட்டு போகட்டும். எளிமையான தமிழ் பாடல் விளக்கம் என்றால், சரி, வாசித்தோம், என்று மேலே போய் விடலாம்.

இரண்டிலும் நமக்கு ஒன்றும் இல்லை.

இந்த இரண்டும் தான் பொருள் என்றால், இந்த பாடல்கள் காலம் கடந்து நிற்க வேண்டிய  காரணம் என்ன. இதில் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது.


உண்மை உறங்கிக் கிடக்கிறது. வெளியே வர முடியாமல் , காலம் காலமாய் நம் கதவுகளை  தட்டிக் கொண்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

அப்படியானால், அந்தப் பாடல்கள் நம்மிடம் சொல்ல வரும் சேதி என்ன?


அதில் வரும் பெண்கள், வீடு, நிலம், மாடுகள், பால், ஒலிக் குறிப்புகள் எல்லாமே ஏதோ ஒன்றின் குறியீடு என்று கொண்டால், அது என்ன என்று நாம் நினைத்துப் பார்க்கலாம்.

அந்த கோணத்தில் நான் சிந்தித்தை, பகிர்ந்து கொள்கிறேன். நான் கூறுவது முற்றிலும் தவறாகக் கூட இருக்கலாம்.  ஒரு புதிய சிந்தனை என்ற முறையில் இதை பார்க்க வேண்டுகிறேன். அவ்வளவுதான்.

ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

சரி, முதலில் இந்த பாவை நோன்பின் பொருள் என்ன.  பெண்கள் , அதி காலையில் எழுந்து , உறங்கும்  தங்கள் தோழிகளை எழுப்பி , அவர்களையும்  அழைத்துக் கொண்டு , நீராடி, பின் இறைவனை வழிபடுவது பாவை நோன்பு என்று சொல்லப் படுகிறது.

ஆண்டாள் இயற்றிய பாவைப் பாடல்கள் திருப்பாவை என்று அழைக்கப் படுகிறது. மொத்தம் 30 பாசுரங்கள்.

முதல் பாசுரம்.

* மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

எல்லோரும் சலிக்க சலிக்க கேட்ட பாடல். மனப்பாடம் ஆன பாடல். அர்த்தம் தெரிந்த பாடல்.

இந்தப் பாடலில் இதுவரை காணாத பொருள் என்ன இருக்கக் கூடும் ?

முதலில், இதை ஏன் பெண்கள் பாடுவதாக அமைந்திருக்கிறது ?  பெண் பிள்ளைகள் பாடுவதாக ஏன் அமைக்க வேண்டும் ?

பொதுவாகவே இறைவனைப் பற்றி பாடும் அடியார்கள் தங்கள் பெண்ணாக பாவித்தே  பாடுகிறார்கள். நாயகன் நாயகி பாவம் என்கிறார்கள்.

ஏன் ?

பெண் என்பவள் ஆணின் சக்தியை ஏற்று, அதைக் காத்து, தன்னுள் வளர்த்து, உயிராக்கி, தருபவள்.

நிலம் போன்றவள் பெண். நிலம், தன்னுள் விதையை வாங்கி, உயிரூட்டி, வளர்த்து செடியாக, கொடியாக , மரமாக மாற்றித்தரும்.

விதையை மரமாகும் வித்தை பெண்ணிடம்தான் உள்ளது.

அதற்கு ஒரு மன பக்குவம் வேண்டும். பொறுமை வேண்டும். வலி பொறுக்கும் சகிப்பு தன்மை வேண்டும். காத்திருக்கும் மன உறுதி வேண்டும்.

இறைவன் அருளை பெற்று, அதை தன்னுள் வாங்கி, அதை வளர்த்து, உலகுக்கு பயன்பட  வைக்கும் அந்த பக்தி மனமும் பெண்ணுக்கு சமமானதுதான்.

எனவே தான், பக்தி வரும் போது, மனம் தானாக பெண்ணின் மனம் போல இளகி, அன்பும் , கருணையும், நெகிழ்வும் பிறக்கிறது.

நெஞ்ச கன கல்லு நெகிழ்ந்து உருக என்று அருணகிரிநாதர் சொன்னது மாதிரி.

பெண்ணின் மனம் வந்தால்தான், பக்தி வரும்...

ஆணின் மனம் கொஞ்சம் முரட்டு மனம். கரடு முரடானது. கல் போல, இரும்பு போல கடினமானது.

கல்லாய் இருந்த என் மனதை , கனி போல் பிசைந்தாய் என்கிறார் மணிவாசகர்.


கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.


இறையருளை பெற வேண்டுமா ? முதல் படி, மனம் அன்பால், கருணையால் , நெகிழ வேண்டும்.

பெண்மை என்ற குணம் வர வேண்டும்.

இது திருப்பாவை காட்டும், முதல் பாடம்.

இன்னும் பாட்டுக்குள் செல்ல வில்லை.

நாளை பாசுரத்தின் உள் அர்த்தம் பற்றி சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_19.html

Thursday, November 9, 2017

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்



மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

இது என்ன காலம் இல்லாத காலத்தில் திருப்பாவை ? இது என்ன மார்கழி மாதமா ?

இல்லையில்லை.

ஆண்டாள் பாசுரங்களில் பல இடங்களில் "பறை" என்ற சொல் வருகிறது.

மேலே உள்ள பாடலில்

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

என்று வருகிறது.

இப்படி பறை என்ற சொல்லை பல இடங்களில் ஆண்டாள் பயன் படுத்தி இருக்கிறாள்.

உரை எழுதிய பல பெரியவர்கள் பறை என்பதை ஒரு வாத்தியம் என்றே கொண்டு எழுதி இருக்கிறார்கள்.

"நாராயணன் பறை தருவான் "  என்றே குறிப்பிடுகிறார்கள்.

மேலும் சிலர்  எத்தனை வகையான பறைகள் உண்டு என்று ஆராய்ச்சியில்  இறங்குகிறார்கள்.

நாராயணன் ஏன் ஆயர் பாடி பெண்களுக்கு பறை என்ற வாத்தியத்தைத் தர வேண்டும் ?

பெண்கள் பறை அடிப்பார்களா ? அப்படி வேறு எங்கும் இல்லையே ...

இது கொஞ்சம் நெருடலாகவே இருந்து வந்தது எனக்கு.

தமிழில் பல சொற்கள் காலப் போக்கில் பொருள் மாறி விட்டன. ஒரு சொல்லுக்கு பல  பொருள் இருந்தால் ,  அவற்றில்  சில வழக்கத்தில் இருந்து  போய் விட்டன

அப்படி போனாலும், தமிழில் இருந்து மற்ற மொழிக்கு சென்ற சில சொற்கள் அப்படியே இருக்கின்றன.

நாம் அவற்றில் இருந்து சில வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை கண்டு கொள்ளலாம்.

உதாரணமாக மலையாளத்தில் பறை என்றால் "சொல்" என்று அர்த்தம்.

நீ பற என்றால் நீ சொல்லு என்று அர்த்தம்

நீ எந்து பறையுன்னது என்று சொன்னால் நீ என்ன சொல்கிறாய் என்று அர்த்தம்.

நிங்கள் பறையுன்னது மனசில ஆகில்லா என்றால் நீங்கள் சொல்வது மனதில்  புரியவில்லை என்று அர்த்தம்.

எனவே, பறை என்ற சொல்லுக்கு "சொல்", "வாக்கு", "பேச்சு" என்று அர்த்தம்.

இந்தச் சொல் தமிழில் இருந்து மலையாளத்துக்கு சென்று அங்கு நிலைத்து விட்டது. இங்கே மறைந்து விட்டது.

இப்போது, அந்த அர்த்தத்தில் இந்த வரியைப் பார்ப்போம்.

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

நாராயணன் நமக்கு வாக்கு தருவான். நமக்கு ஒரு உறுதியான , நம்பிக்கையான சொல்லைத்த தருவான்.

இறைவனோடு பேசுகிறாள் ஆண்டாள். நாராயணனோடு அவ்வளவு அன்யோன்யம். அவன் இவளிடம் ஏதோ சொல்கிறான். அவன் சொன்னதை தனக்கு மட்டும் என்று  வைத்துக் கொள்ளாமல் "நம் எல்லோருக்கும் அவன் வாக்கு தருவான் " என்று தனக்கு கிடைத்த அந்த இறை அருளை எல்லோருக்கும் கிடைக்கும் படி சொல்லுகிறாள் ஆண்டாள்.


கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கண அறிவு இலக்கியத்தை மேலும் சுவைக்க உதவும். சொற்களின் ஆழத்தை, அதன் வீரியத்தை அறிய உதவும்.

நாராயணனே நமக்கே பறை தருவான்


என்று சொல்லும் போது , ஆண்டாள் இரண்டு இடத்தில் ஏகாரத்தை பயன் படுத்துகிறாள். 

நாராயணனே
நமக்கே

ஏன் ?

இதற்கு உயர்வு சிறப்பு ஏகாரம் என்று  பெயர்.

நாராயணன்  நமக்கு  பறை தருவான்

என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

நாராயணன் நமக்கு பறை தருவான் என்று சொன்னால், நாராயணன் தந்தான், அவனுக்கு மேலும் வேறு யாரும் தர  .வாய்ப்பு இருக்கிறது. அது இதை விட  உயர்ந்த வாக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும் அல்லவா.

சுப்ரீம் கோர்ட் சொன்னது என்றால், வேறு ஏதாவது கோர்ட் அதை விட உயர்வாக சொல்லலாம்.

சுப்ரீம் கோர்டே சொல்லியாச்சு என்றால் அதுக்கு மேல அப்பீல் கிடையாது.

நாராயணனே என்று சொல்லிவிட்டால் அதுக்கு மேல ஒன்றும் இல்லை. 

தலைவர் வந்து விட்டார். கூட்டத்தை ஆரம்பிக்கில்லாம் என்றும் சொல்லலாம்.

தலைவரே வந்து விட்டார்...என்று சொன்னால் , இனிமேல் வேறு யாருக்கும் காத்திருக்க  தேவையில்லை என்பது புலனாகும்.


நமக்கே தருவான் ....நமக்கு மட்டும் தான தருவான். எனக்கே எனக்கா என்று கூறுவது போல. நமக்கு கொஞ்சம் தந்து விட்டு மற்றவர்களுக்கு மீதியை தருவான் என்று  இல்லாமல், அனைத்தையும் நமக்கே தருவான்  என்கிறாள்.நமக்கே தருவான், வேறு யாருக்கும் தர மாட்டான். எனக்கே தருவான் என்று சொல்லவில்லை. நமக்கே தருவான் என்று தன்னோடு உள்ள அனைவரையும் சேர்த்துக் கொள்கிறாள்.

ஆண்டாளின் திருப்பாவையில் பத்து இடங்களில் இந்த பறை என்ற சொல் வருகிறது.

அது ஒரு வாத்தியம் என்று வைத்துப் பார்த்தால் சற்று நெருடத்தான்  செய்யும். அதை "சொல்" "வாக்கு " என்று வைத்துப்  பாருங்கள்.

மிக அழகான அர்த்தம் கிடைக்கும்.

பறை என்ற சொல் வரும் பாசுரத் தொகுப்பு கீழே உள்ளது.



 1. பறை தருவான்  (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
4. அறை பறை –  (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30)


மற்றவற்றையும் எழுத ஆசைதான்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_9.html


Saturday, February 15, 2014

திருப்பாவை - அருள் எனும் வெள்ளம்

திருப்பாவை - அருள் எனும் வெள்ளம் 



காதல் என்பது கொடுப்பது. பெறுவது அல்ல.

ஒரு தாய், தன் பிள்ளைக்கு பால் அமுது ஊட்டுவது போல. அந்த கைக் குழந்தையிடம் அவள் என்ன எதிர்பார்ப்பாள் ? ஒன்றும் இல்லை. அவளின் அளவு கடந்த அன்பினால் அந்த குழந்தைக்கு அவள் பால் தருகிறாள்.

சில சமயம் குழந்தை உடல் நலக் குறைவால் பால் குடிக்காது. குழந்தை பால் அருந்தாத அந்த நாட்களில் அந்த தாய் படும் வேதனை அவளுக்குத்தான் தெரியும். குழந்தைக்கென்று சுரந்த பால், குழந்தை குடிக்காவிட்டால் மார்பில் கட்டிக் கொள்ளும். அவளுக்கு மிகுந்த வேதனையைத் தரும். சில சமயம், அந்தப் பாலை கிண்ணத்தில் பெற்று தூர ஊத்தி விடுவது கூட உண்டு. பால் தராமல் அவளால் இருக்க முடியாது.

அது போல, பிள்ளைகளுக்குத் தருவதற்கு என்று ஆண்டவன் அருளை தன் மனம் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். பல சமயம் நாம் தான் அவற்றை பெற்றுக் கொள்வதில்லை. பால் அருந்தாத குழந்தையைப் போல.

அருள் வெள்ளம் வழிந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.

ஆண்டாள் அந்த அருளின் பல வடிவங்களை காட்டுகிறாள்..எப்படி அது உயிர்களுக்கு உறுதி செய்கிறது என்று. அவள் பார்வையில் இறைவனின் அருள் எங்கும் பொங்கி பரவிக் கிடக்கிறது.

பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்

ஓங்கி உலகளந்த = ஓங்கி உலகை அளந்த

உத்தமன் பேர்பாடி = உத்தமனாகிய திருமாலின் பேரைப் பாடி

நாங்கள் = நாங்கள் 

நம் = நம்முடைய

பாவைக்குச் சாற்றி = பாவைக்கு நோன்பு மேற்கொண்டு

நீ ராடினால் = நீராடினால்

தீங்கின்றி = ஒரு தீங்கும் இன்றி

நாடெல்லாம் = நாடெங்கும்

திங்கள்மும் மாரிபெய்து = மாதம் மூன்று முறை மழை பொழிந்து

ஓங்கு பெறும்செந் நெல் = ஓங்கி வளர்ந்த நெல் பயிர்களின்

ஊடு = ஊடே , இடையில் 

கயலுகளப் = கயல் என்ற மீன் அசைந்து ஓட

பூங்குவளைப் போதில் = குவளை மலரில்


பொறிவண்டு கண்படுப்பத் = வண்டுகள் கண் அயர்ந்து தூங்க

தேங்காதே = அஞ்சி, பயந்து 

புக்கிருந்து = உள்ளிருந்து  

சீர்த்த முலைபற்றி வாங்க  = சீரிய முலைகளைப் பற்றி

 குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் = குடங்களை நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் = என்று நீங்காத செல்வம் 

நிறைந்தேலோர் எம்பாவாய். = நிறையட்டும் என் பாவையே

மழை நன்றாகப் பெய்கிறது. வயல்கள் எல்லாம் நிறைந்து விட்டன. நெல் வயல்களில்  மீன்கள் விளையாடுகின்றன. இருந்தும் அவை குவளை மலர்களை  தொந்தரவு செய்யவில்லை. அதில் வண்டுகள் நிறைய தேன் குடித்து விட்டதால் கண் அயர்ந்து தூங்குகின்றன.

மழை நன்றாகப் பெய்ததால் ஊரில் புல் நன்றாக விளைந்திருக்கும். அவற்றை உண்ட பசுக்கள் மடி நிறைய பாலை சுமந்து கொண்டிருக்கும்.

பசுக்களின் மடியைத் தொட்டால் எங்கே அவை பாலை குடம் குடமாக தந்து அவை வழிந்து இல்லமெல்லாம் சேறு ஆகி விடுமோ என்று தயங்கி தயங்கி அவற்றின் மடியைப் பற்றினால், உடனே அவை குடங்களை நிறைத்து விடுமாம்.

இறைவனிடம் கொஞ்சம் கேட்டால் போதும் அவன் குடம் குடமாக நிறைத்து விடுவான் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.

அருளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான் ? கேளுங்கள்.



Tuesday, April 10, 2012

திருப்பாவை - மனதுக்குள் மழை


திருப்பாவை


உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களின் பெயரைக் கேட்டால் உங்களுக்கு மனதுக்குள் மழை அடிக்குமா ?
 
ஆண்டாளுக்கு அடிக்கிறது.
 
உள்ளம் புகுந்து குளிர்கிரதாம்.
 
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்




புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ!
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

 
நம் வாழ்க்கை சக்கரம் நம்மை எங்கெங்கோ இட்டு செல்கிறது.

பல சமயம் நல்ல வழியில்.

சில சமயம் வழி அல்லா வழியிலும் இட்டு செல்லும்.

அது அப்படி செல்லாமல் தடுத்து அதை நல வழியில் செலுத்துவது எது ?

அவனின் திருவடி தான்.
 
புள்ளும் = பறவைகளும்

சிலம்பினகாண் = சிலம்பு போல் சப்தித்தன

புள்ளரையன் = பறவைகளின் தலைவன், கருடன் 

கோயிலில் = கோவிலில்

வெள்ளை = வெண்மையான 

விளிசங்கின் = விளிக்கின்ற, சப்திகின்ற சங்கின் 

பேரரவம் = பெரிய சப்தத்தை 

கேட்டிலையோ = கேட்கவில்லையோ
பிள்ளாய்! எழுந்திராய் = பிள்ளை போன்ற மனம் கொண்டவளே, எழுந்திராய் 

பேய்முலை நஞ்சுண்டு = பூதகியின் நஞ்சை உண்டு 

கள்ள சகடம் கலக்கழிய காலோச்சி

சகடம் = சக்கரம்

கள்ள சகடம் = கெட்ட (வழியில் செல்லும் )
சக்கரம்

கலக்கழிய = அந்த வழியில் சென்று அழியாமல்

கால் ஓச்சி = ஓச்சி என்றால் ஆளுதல் என்று 
பொருள். கோல் ஓச்சி என்றால் அரசு ஆளுதல்.

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை


வெள்ளத்து = வெள்ளம் போல் உள்ள பார் கடலில்


அரவில் = பாம்பின் மேல்

துயில் = உறங்கிய

அமர்ந்த = இருந்த

வித்தினை = விதையை, மூலத்தை

உள்ளத்துக் கொண்டு = உள்ளத்தில் கொண்டு

முனிவர்களும் யோகிகளும் = முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து = அரக்க பறக்க அல்ல, மெல்ல எழுந்து

அரியென்ற பேரரவம் = அரிஎன்ற உச்சரிக்கும் ஒலி

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!