Saturday, April 13, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - உயிர் பிரிந்த உடல்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - உயிர் பிரிந்த உடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2024/04/blog-post.html

தவறுகள் நிகழ பல காரணங்கள் இருக்கலாம். அதில் இரண்டை நாம் சிந்திப்போம். 


நம் வீட்டில், நாம் பிறந்தது முதலே ஒரு பழக்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது தவறு என்றே நமக்குத் தெரியாது. ஏன் என்றால், சிறு வயதில் இருந்தே அப்படித்தான் செய்கிறோம். நம் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் அதைத்தான் செய்கிறார்கள். அது எப்படி தவறாக இருக்க முடியும்? அது தவறு என்ற எண்ணமே நமக்கு எழாது. 


இரண்டாவது வகை என்ன என்றால், எந்த ஒரு தவறும் முதல் முறை செய்யும் போது மனம் உறுத்தும். அப்புறம் அப்புறம் பழகிப் போய் விடும். நாளடைவில், அப்படிச் செய்தால் என்ன தவறு என்று வாதிக்கச் சொல்லும். அப்படி செய்யாமல் இருப்பதுதான் தவறு என்று கூட சொல்லும். 


நிறைய பேர் புலால் உண்ணாமல் இருப்பார்கள். கல்லூரியில், வேலை பார்க்கும் இடத்தில் நண்பர்கள் பழக்கி விட்டு விடுவார்கள். நாக்கு உருசி கண்டு விடும். பின் அதை விட மனம் வராது. அது மட்டும் அல்ல, அந்த மாமிச உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது, ஏன் அதை கட்டாயம் உண்ண வேண்டும் என்றெல்லாம் மனம் வாதிக்கத் தொடங்கும். 


அது போல, அசைவ உணவு உண்ணும் குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு அது தவறு என்று புரியவே புரியாது. 


தீவிர சைவ உணவு உண்பவர்களிடம் "மாட்டின் பால் என்பது மாட்டின் இரத்தம் தான். அதைத் தான் நீ குடிக்கிறாய்" என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அது எப்படி என்றுதான் வாதம் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"என்னதான் சொன்னாலும், மாமிச உணவு என்பது, பிணத்தை தின்பது மாதிரி. உயிர் அற்ற ஒரு விலங்கை தின்பது, அந்த விலங்கின் பிணத்தைத் தின்பது மாதிரித்தானே. குற்றமற்ற பார்வை, நோக்கம் உள்ளவர்கள் அதை புரிந்து கொண்டு, அந்தக் காரியத்தை செய்ய மாட்டார்கள்" என்கிறார். 


பாடல் 


செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்


பொருள் 



செயிரின்  = குற்றத்தில் இருந்து 


தலைப்பிரிந்த = விலகி நிற்கும், அதோடு தன்னை ஒன்று படுத்தாமல் இருக்கும் 


காட்சியார் = நோக்கம், பார்வை உள்ளவர்கள் 


 உண்ணார் = உண்ண மாட்டார்கள் 


உயிரின் = உயிரை விட்டு 


தலைப்பிரிந்த = பிரிந்து வந்த 


ஊன் = மாமிசம் 


குற்றத்தை நீண்ட நாள் செய்து வந்தால், அது குற்றமாகத் தெரியாது. அதோடு ஒன்றிப் போய் விடுவோம். 


அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்து இருப்பவர்கள் ஒரு வகையில் திருடர்கள்தான் என்று சிலர் சொல்கிறார்கள். பணக்கார்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா?  


நாம் செய்வது சரியா தவறா என்று சற்று தள்ளி நின்று யோசிக்க வேண்டும். நான் செய்வதால் அது சரி என்று ஆகிவிடக் கூடாது. 


சிந்திக்க வேண்டிய குறள்.




3 comments:

  1. பசுவின் பால் பசுவின் இரத்தம் என்ற தவறான கருத்தை எடுத்து விடுங்கள்.அப்படி என்றால் நாம் எல்லோரும் அன்னையின் இரத்தத்தை குடித்து வளர்ந்தவர்கள் .

    ReplyDelete
  2. பசுவின் பால் பசுவின் இரத்தமா? இது என்ன அறிவியல்?!

    ReplyDelete