Showing posts with label nala venpaa. Show all posts
Showing posts with label nala venpaa. Show all posts

Tuesday, June 16, 2015

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?


நமக்கு ஒரு துன்பம் வரும்போது, "ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நிகழ்கிறது...நான் என்ன பாவம் செய்தேன்...யார் குடியையும் கெடுத்தேனா, பொய் சொன்னேனா, கொலை களவு செய்தேனா...எல்லாருக்கும் நல்லது தானே செய்தேன்...எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை " என்று மனம் சோர்ந்து வாடிப் போவோம்.

அந்த மாதிரி சமயங்களில் இலக்கியங்கள் ஆறுதலும் தேறுதலும் தருகின்றன.

எப்படி ?

முதலாவது, நமக்கு வந்த துன்பங்கள் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. நம்மை விடவும் அதிகமான, மிக அதிகமான துன்பங்கள் அடைந்தோர் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அதைப் பார்க்கும் போது நம் துன்பம் அப்படி ஒன்றும் தாங்க முடியாத ஒன்று அல்ல என்று தோன்றும்.

இரண்டாவது, அப்படி துன்பம் வந்தபோது அதை அந்த இலக்கியத்தில் வந்த கதா பாத்திரங்கள் எப்படி சமாளித்தன என்று கூறி நம்மை வழி நடத்தும்.

இப்படி நம் மனதுக்கு இலக்கியங்கள் இதம் தரும்.

மகா பாரதம்.

இதிகாசங்கள் மூன்று.

இராமாயணம், மகா பாரதம், சிவ இரகசியம்.

இதில் மகா பாரதத்துக்கு மட்டும் தான் மகா என்ற அடை மொழி உண்டு.

ஏன் என்றால் அதில் இல்லாத தர்மம் இல்லை.

தர்மன் சூதாடி, நாடு நகரம் எல்லாம் இழந்து, அவமானப் பட்டு, காட்டில் வந்து இருக்கிறான்.

ஒன்றல்ல, இரண்டல்ல பன்னிரண்டு வருடங்கள்.

யோசித்துப் பாருங்கள், ஒரு சக்ரவர்த்தி, அத்தனையும் இழந்து, காட்டில் வாழ்வது என்றால் எப்படி இருக்கும்.

அதிலும் ஒரு நன்மை விழைந்தது. பலப் பல முனிவர்களும், சான்றோர்களும் தருமனை  சந்தித்து அவனுக்கு ஆறுதலும், தேறுதலும் , உபதேசமும் செய்தார்கள்.

12 வருடங்கள். மிகப் பெரிய ஞானிகள் தந்த அரிய பெரிய அறிவுரைகள். யாருக்குக் கிடைக்கும்.

அப்படி கிடைத்த ஒன்று தான் நளவெண்பா.

தருமன், வியாச முனிவரிடம் கேட்கிறான்....

"கண்ணை இழந்து, மாய சூது ஆடி, மண்ணை இழந்து, காட்டுக்குப் போய் , என்னை போல துன்பப் பட்டவர்கள் யாரும் உண்டா "

என்று வருந்தி வினவுகிறான்.

அப்போது , தருமனுக்கு அவனை விட துன்பப் பட்ட நள மன்னனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

நள வெண்பா....படிக்கப் படிக்கப் திகட்டாத பாடல்கள்.

மிக எளிமையான, இனிமையான, மனித உணர்வுகளை அழகாகச் சொல்லும் வெண்பாக்கள்.

படிக்கும் போது நம்மை மிக மகிழச் செய்யும் பாடல்கள். அருமையான உதாரணங்கள், அற்புதமான சொற் தெரிவுகள்....

காதல், ஊடல், கூடல், வெட்கம், நாணம், பரிவு, பிரிவு, துயரம், ஏக்கம் என்று கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அத்தனை நுணக்கமான உணர்வுகளை படம் பிடிக்கும் நூல்.

அதிலிருந்து சில பாடல்கள் இன்னும் வரும் ப்ளாகில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.

பொருள்

கண்ணிழந்து = கண்ணை இழந்து. இங்கே கண் என்று கூறியது அறிவை. அறிவுக் கண்ணை. கண் பார்க்க உதவுகிறது. அது போல அறிவும் உண்மையைக் காண உதவுகிறது.

 மாயக்  = மாயமான

கவறாடிக் = கறவு + ஆடி = சூது ஆடி

காவலர் தாம் = அரசர்கள் தான்

மண்ணிழந்து = மண்ணை இழந்து

போந்து = போய்

வனம் = காட்டை

நண்ணி  = சேர்ந்து

விண்ணிழந்த = வானில் இருந்து விழும்

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூல் = பூனூலை அணிந்த

மார்ப  = மார்பனே (வியாசனே )

மேதினியில் = உலகில்

வேறுண்டோ = வேறு யாராவது இருக்கிறார்களா

என்போல் = என்னைபோல

உழந்தார் இடர்.= துன்பத்தில் உழன்றவர்கள் ?

என்னமோ தனக்கு மட்டும் தான் துன்பம் வந்தது போல் நம்மை போலவே தருமனும் நினைக்கிறான்.

வியாசன் சொல்லத் தொடங்குகிறான்.

என்னவென்று மேலும் சிந்திப்போம்



Sunday, September 28, 2014

நளவெண்பா - என்றும் நுடங்கும் இடை

நளவெண்பா - என்றும் நுடங்கும் இடை 


தமயந்தியின் இடை மிக மிகச் சிறியது என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று யோசிக்கிறார் புகழேந்தியார்.

அவள் கூந்தலில் மலர் சூடி இருக்கிறாள். அப்போதுதான் பறித்த மலர்கள். அந்த மலர்களில் இருந்து தேனை உண்ண வண்டுகள் வருகின்றன.

அந்த வண்டுகள் தங்கள் சிறகுகளை அடிக்கின்றன. அந்த சிறகில் இருந்து காற்று வருகிறது. அந்த காற்று தமயந்தியின் தலை மேல்  உள்ள பூவின் மேல் மோதுகிறது. அதனால் அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது, வளைகிறது. இப்படி அங்கும் இங்கும் அசைந்து அவள் இடை நாளடைவில் தேய்ந்தே போயிற்றாம்.

பாடல்

என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசம்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.


பொருள்


என்றும் = எப்போதும்

நுடங்கும் = காற்றில் பட படத்தல்

இடைஎன்ப = எடை என்று சொல்லப் படுவது

ஏழுலகும் = ஏழு உலகிலும்

நின்ற = நிலைத்து நிற்கும்

கவிகை = குடையின்  (வெண்கொற்றக் குடை )

நிழல்வேந்தே = நிழலில் கொண்ட அரசனே

ஒன்றி = ஒன்றுபட்டு

அறுகால் = ஆறு கால்களைக் கொண்ட

சிறுபறவை = சிறு பறவை (வண்டு)

அஞ்சிறகால் = அசையும் சிறகால்

வீசம் = வீச

சிறுகாற்றுக் = வரும் சிறிய காற்றுக்கு

காற்றாது = ஆற்றாது , தாங்க முடியாமல்

தேய்ந்து = தேய்ந்து (விடும்)


Monday, May 26, 2014

நள வெண்பா - கன்னி மனக்கோயில் கைக்கொள்ள

நள வெண்பா - கன்னி மனக்கோயில் கைக்கொள்ள


அன்னப் பறவை வந்து நள மகாராஜாவிடம் தமயந்தியின் அழகைப் பற்றி சொல்லத் தொடங்கியது. அந்த சொல் அவனின் காதில் சென்று விழுவதற்குள் தமயந்தி அவன் மனம் என்ற கோவிலில் சென்று அதை கைப் பற்றிக் கொண்டாள் . அந்த நேரத்தில், நளன் "அவள் யாருடைய பெண் " என்று அன்னத்திடம் கேட்டான்.  அதே சமயம் மன்மதன் தன் கரும்பு வில்லை வளைத்து நளன் மேல் மலர் அம்புகளைத் செலுத்தத் தொடங்கினான். நளனும் அதனால் உடலும் உள்ளமும் பதைத்தான்.

பாடல்

அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்ப
பார்மடந்தை கோமான் பதைத்து.

பொருள்

அன்னம் = அன்னப் பறவை

மொழிந்த = சொன்ன

மொழிபுகா முன்புக்குக் = சொல் அவன் காதில் நுழைவதற்கு முன்

கன்னி = கன்னியாகிய தமயந்தி

மனக்கோயில் = நளனின்  மனமாகிய கோவிலை

கைக்கொள்ளச் = கைப்பற்றிக் கொள்ள

சொன்னமயில் = "நீ சொன்ன அந்த மயில்"

ஆர்மடந்தை = யார் பெற்ற பெண்

என்றான் = என்று நளன்  கேட்டான்

அனங்கன் = மன்மதன்

சிலைவளைப்ப = வில்லை வளைக்க (சிலை = வில்)

பார்மடந்தை = பூலோகத்தின்

கோமான் = அரசன்

பதைத்து = உடல் பதைத்துக் கேட்டான்

இவளுக்க சும்மா இருக்கிறது இல்ல. மனசுக்குள்ள ஏறி உக்காந்துகிட்டு படுத்தறது. பதறாம என்ன செய்யும் ?


Thursday, May 22, 2014

நள வெண்பா - புலம்பும் சிலம்பும்

நள வெண்பா - புலம்பும் சிலம்பும்  


தமயந்தி நடந்து வருகிறாள். அவள் காலில் கொலுசு ஒலிக்கிறது. அந்த கொலுசு என்ன சொல்லுகிறது தெரியுமா ?

இந்த தமயந்தியின் தனங்களை இவளின் சிறிய இடை தாங்காது என்று அவளின் கொலுசுகள் அவளின் காலைப் பிடித்துக் கொண்டு புலம்பியதாம்.

பாடல்

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.

பொருள்

மோட்டிளங் கொங்கை = உயர்ந்த இளமையான கொங்கைகள்

முடியச் = வாழ்நாள் முடிய , எப்போதும். இப்போது இளமையாக  இருக்கிறது.இவை இன்னும் வளர்ந்து முடிய நாள்  ஆகும். இப்பவே இதன் பாரம் தாங்க முடியவில்லை. இன்னும் வளர்ந்தால், இந்த இடை என்ன ஆகுமோ என்று கொலுசுக்குத் தவிப்பு.


சுமந்தேற = சுமக்க

மாட்டா திடையென்று = மாட்டாது இடை என்று

வாய்விட்டு = வாய் திறந்து

நாட்டேன் = நாள் + தேன்

அலம்புவார் = அலம்பும் பூக்களை சூடிய. பதமயந்தி சூடிய பூக்களில் தேன் ததும்புகிறது.

கோதை = தமயந்தி

அடியிணையில் = இரண்டு பாதங்களிலும்

வீழ்ந்து = விழுந்து

புலம்புமாம் = புலம்பின

நூபுரங்கள் = கொலுசுகள்

பூண்டு = அணிந்து

காலில் அணிந்துள்ள கொலுசுகள், அவள் காலைப் பற்றிக் கொண்டு புலம்பின.

ஹ்ம் .....

Wednesday, May 21, 2014

நள வெண்பா - பெண்மை அரசு

நள வெண்பா - பெண்மை அரசு 



எல்லா பெண்களும் அரசிகள்தான்.

அவர்கள் எந்த நாட்டுக்கு அரசிகள் ? அவர்களின் படைகள் என்ன, அவர்களின் வெண் கொற்ற குடை எது ?

நள வெண்பா பாடிய புகழேந்திப் புலவர் கூறுகிறார்....

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு வித குணங்களே நான்கு விதமான படைகள் (இரதப் படை, யானைப் படை, குதிரைப்படை , காலாட்படை) , ஐந்து புலன்களும் அவர்களை வழி நடத்தும் அமைச்சர்களாக, இரண்டு கண்களும் வில்  படையும்,வேல் படியுமாக, அவர்களின் அழகிய முகமே வெண்கொற்றக் குடியாக பெண்மை அரசு செய்கிறது....


பாடல்

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.

பொருள்

நாற்குணமும் = நான்கு குணங்களும்

நாற்படையா = நான்கு படைகளாக

ஐம்புலனும் = ஐந்து புலன்களும்

நல்லமைச்சா = நல்ல அமைச்சர்களாக

ஆர்க்கும் சிலம்பே = ஒலி எழுப்பும் சிலம்பே

அணிமுரசா = அழகிய முரசாக

வேற்படையும் = வேல் படையும்

வாளுமே = வாள்  படையும்

கண்ணா = கண்களாக

வதன = முகம்

மதிக் =  நிலவு

குடைக்கீழ் = குடையின் கீழ்

ஆளுமே = ஆட்சி செய்யுமே

பெண்மை அரசு = பெண் என்ற அரசு

அவர் சொன்னது தமயந்திக்குத் தான் என்றாலும், எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும்.

படுத்துராளுக !



Monday, May 12, 2014

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு 


முதலிலேயே சொல்லி விடுகிறேன், இந்த பாடல் வயது வந்தவர்களுக்கு மட்டும்.  வயது வராதவர்கள், அல்லது ஆண் பெண் உடல் கூறு சம்பந்தப் பட்ட வார்த்தைகளால் சங்கப்படுபவர்கள் இதை மேலும் படிக்காமல் இருப்பது நல்லது.

தமயந்தியின் நினைவால் நளன்  .வாடுகிறான். காமம் அவனை சுட்டு எரிக்கிறது.

அந்த சூட்டை தணிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான்.

சூட்டுக்கு இதமாக ஏதாவது இளநீர் பருகலாம், கரும்புச் சாறு நல்லது, குளிர்ந்த நீர் குளத்தில் நீராடலாம், நல்ல நிழலில் போய் நிற்கலாம்....இவற்றால் இந்த காமம் என்ற சூட்டினால் விளைந்த தாகம் தீரலாம்....

பாடல்

கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளம் சொல்கரும்பால்
பொங்குசுழி என்னும் பூந்தடத்தில் - மங்கைநறும்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ

வெய்தாமக் காம விடாய்.


பொருள்

கொங்கை இளநீரால் = (தமயந்தியின்) மார்புகள் என்ற இள நீரால்

குளிர்ந்த = குளிர்ச்சியான

இளம் = இளமையான

சொல்கரும்பால் = அவளுடைய சொல் என்ற கரும்பால்

பொங்கு = பொங்கி

சுழி = சுழித்து ஓடும்

என்னும் = என்ற

பூந்தடத்தில் = அவளுடைய தொப்பூழ் (வயறு)

மங்கை = பெண்

நறும் = வாசம் வீசும்

கொய் = கொய்த

தாம = மலர் சூடிய

வாசக் = வாசம் வீசும்

குழல் = குழல், தலை முடி

நிழற் கீழ்= நிழலின் கீழே. குழல் நிழல் தரலாம்....நிழல் போல குழலும் கருமையாக இருக்கும்.

ஆறேனோ = குளிர்வேனோ ?


வெய் = கொடுமையான

ஆம் = ஆன

காம விடாய். = காமத்தினால் வந்த தாகம்

அவள் மேல் எத்தனை ஆசை அவனுக்கு. உருகுகிறான்.




Thursday, August 8, 2013

நளவெண்பா - பூவாளி உள்ளரிக்க

நளவெண்பா - பூவாளி உள்ளரிக்க 


தமயந்தியைப் பார்த்த பின் நளன் பிரிந்து சென்று  விட்டான்.

தமயந்தி  வாடுகிறாள்.

அவள் உள்ளம் அவன் பின்னே போய்  விட்டது.அதனால் அவள் நாணமும் சென்று விட்டது.  பேச்சில்லை.கண்ணில் நீர் வற்றி விட்டது.  தளிர் போன்ற அவள் உடல்  வேகிறது. மன்மதன் பூவால் செய்த கணைகளை அவள் மேல்   விடுகிறான்.அது அவளின் உள்ளத்தை  அரிக்கிறது. அவள் உயிரும்  சோர்கிறது.

பாடல்

உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல்-பிள்ளைமீன்
புள்ளரிக்கு நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர்.


பொருள்

உள்ளம்போய் = அவள் உள்ளம் அவன் பின்னே போய் விட்டது

நாண்போய் = அதனால் நாணமும் போனது

உரைபோய் =  மனமும்,நாணமும் போனதால் திகைத்து அவள் பேச்சு மூச்சு அற்றுப் போய் விட்டாள்

வரிநெடுங்கண் = நீண்ட நெடுங்கண்

வெள்ளம்போய் = கண்ணீர் வற்றிப் போய்

வேகின்ற மென்தளிர்போல் = வெயிலில்   மென்மையான தளிரைப் போல்

பிள்ளைமீன் = மீன் குஞ்சுகளை

புள்ளரிக்கு = கொக்கு உண்ணும்

நாடன் திருமடந்தை= நாட்டைச் சேர்ந்த அரசனின் (வீமன்) மகளான தமயந்தி

பூவாளி = பூவால் செய்யப்பட்ட அம்பு

உள்ளரிக்கச் = உள்ளத்தை அரிக்க

 சோர்ந்தாள் உயிர் = உயிர் சோர்ந்தாள்

Tuesday, June 25, 2013

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?


நளனின் காதலை தமயந்தியிடம் அன்னப் பறவை  சொன்னது. நளன்  உன் மேல்  எப்படி எல்லாம் காதல் கொண்டிருக்கிறான் என்று கூறியது.

அதை கேட்ட தமயந்தி உருகுகிறாள். ஐயோ , என் மேல் இத்தனை அன்பா, இத்தனை காதலா என்று அவள் மனம் கரைகிறது. ஏற்கனவே அவனை திருமணம் முடித்து, அவனை கட்டி அணைத்தார்ப் போல இருக்கிறது அவளுக்கு. அந்த அபரிமிதமான காதலால், மகிழ்ச்சியில் அவள்  மார்புகள் விம்முகின்றன. அதை அவள் பார்க்கிறாள். மயங்குகிறாள்.

பாவம் பெண், வேறு என்ன செய்ய முடியும் ?

பாடல்

மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க அகமுருகி - முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினாள் என்செய்வாள் மற்று.

பொருள்



Saturday, June 22, 2013

நளவெண்பா - கற்பின் தாழ் வீழ்த்த கதவு

நளவெண்பா - கற்பின் தாழ் வீழ்த்த கதவு 


தமயந்தி, நளனை காண்கிறாள்.

ஒரு புறம் காதல். மறு புறம் ஆசை. இரண்டுக்கும் நடுவில் நாணமும் கற்பும்.

பெண் பாவம்தான். எவ்வளவு சிக்கல்.

தாமரை போன்ற தமயந்தியின் முகம். நீலோற்பலம் போன்ற நளனின் கண்கள் சென்று தீண்டியதுதான் தாமதம் ... ஆசையை மனத்தில் அடக்கி, கற்பு என்ற தாழ் போட்டு பூட்டி வைத்திருந்த கதவு, அவள் கொண்ட அன்பின்/காதலின் வேகத்தால் திறந்து கொண்டது.

ஆசை மனதில் இருக்கிறது. ஆனால், அந்த ஆசை அல்ல மனம் திறக்க காரணம்.

அவன் மேல் கொண்ட அன்பினால் அந்த கதவு திறந்து கொண்டது.

பாடல்  


நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்த்த கதவு.


பொருள்


Friday, June 21, 2013

நள வெண்பா - நாணம் என்னும் தறி

நள வெண்பா - நாணம் என்னும் தறி 


தமயந்திக்கு, நளன் மேல் அவ்வளவு காதல். அவனை அப்படியே இறுக கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை.

இறுக என்றால் எவ்வளவு இறுக?

தன் மார்பும், அதில் தவழும் பொன் ஆரமும் நளனின் மார்பில் அழுந்தி மறைந்து போகும் அளவுக்கு இறுக கட்டி அணைக்க ஆசை.

ஆசை என்றால் எவ்வளவு ஆசை ?

யானை அளவுக்கு பெரிய ஆசை.

ஆனால், இந்த பாழாய் போன நாணம் இருக்கிறதே, இத்துணுண்டு தான் இருக்கு, இருந்தாலும் அந்த நாணம் பெரிய யானையை கட்டி அடக்கும் அங்குசம் போல என் ஆசைகளை எல்லாம் கட்டிப் போட்டு விடுகிறதே என்று நொந்து கொள்கிறாள் தமயந்தி....

ஜொள் வடியும் அந்த பாடல்


மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்ப புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி.

சீர் பிரித்த பின்


மன்னன் அகத்துள் அழுந்தி  வார் அணிந்த மென்முலையும்
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவென் என்று உன்னா 
எடுத்த பேரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி.

பொருள்


Wednesday, April 24, 2013

நளவெண்பா - தெரிந்ததும் தெரியாததும்

நளவெண்பா - தெரிந்ததும் தெரியாததும் 



நான் சில பல  ஊர்களில் கடைத் தெருவில் பார்த்திருக்கிறேன்...ஏதேதோ கடைகள் இருக்கும்...ஒரு நல்ல புத்தக கடை இருக்காது....இருந்தாலும் ஏதோ பேருக்கு சில புத்தகங்கள் இருக்கும்.

என்ன அர்த்தம்...ஊரில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.


நள சக்கரவர்த்தி ஆளும் ஊரை வர்ணிக்கிறார் புகழேந்தி.


அந்த ஊரில் தெரிவது எல்லாம் புத்தகங்களும், படிப்பவர்களும் தான். எங்கு பார்த்தாலும் ஒரே புத்தகங்கள்.

தெரியாதது ஒன்று இருக்கிறது அந்த ஊரில்...அது பெண்களின் இடையாம்.....தேடினாலும் கிடைக்காது....அவ்வளவு சின்ன இடை.

அந்த ஊரில் இல்லாதாது ஒன்று உண்டு - பிச்சைகாரர்கள். பிச்சைக்காரர்களே கிடையாது.

அந்த ஊர் மக்கள்  ஒன்றே ஒன்று மட்டும் கற்றுக் கொள்ளவில்லை - அது தான் வஞ்சம்.

பாடல்  



தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.



பொருள்


Tuesday, April 23, 2013

நள வெண்பா - எங்கட்கு இறை


நள  வெண்பா - எங்கட்கு இறை 


வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி என்பார்கள். வெண்பா என்ற பா வடிவம் புகழேந்தியிடம் அப்படி விளையாடுகிறது

புகழேந்தி பாடிய நளவெண்பாவில் இருந்து சில பாடல்கள் ....

முதலில் யாரும் அழைக்காமலே தானே பன்றியாக வந்து  அவதரித்தான்.

பிரகலாதன் என்ற சிறுவன் அழைத்ததற்காக தூணில் நரசிம்மமாகத் தோன்றினான்

அவ்வளவு ஏன், ஒரு யானை ஆதி மூலமே என்று கூப்பிட்ட உடன் ஏன் என்று கேட்டான் எங்கள் இறைவன் என்று திருமாலை கொண்டாடுகிறார் புகழேந்தி. யானை கூப்பிட்டபோது வந்தவன், நீங்கள் கூப்பிட்டால் வரமாட்டானா ?



பாடல்


ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை.

பொருள்


Tuesday, January 29, 2013

நளவெண்பா - மை புகுந்த கண்ணீர்


நளவெண்பா - மை புகுந்த கண்ணீர் 


நளனும் தமயந்தியும் காட்டு வழி செல்கின்றார்கள். நாடிழந்து, செல்வம் எல்லாம் இழந்து செல்கின்றார்கள். 

இரவு வந்து விட்டது. இருவரும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தூங்குகிறார்கள். 

தூக்கம் வரவில்லை. முதலில் நளன் எழுந்திரிக்கிறான். தமயந்தி உறங்குவது போல் பாவனை செய்கிறாள். நளன் அவளைப் பார்த்து வருத்தம் அடைகிறான். பின் அவன் படுத்துக் கொள்கிறான். தமயந்தி எழுதிரிக்கிறாள். நளன் உறங்குவததைப் பார்க்கிறாள். 

எவ்வளவு பெரிய சக்ரவர்த்தி. எப்படி அம்ச துளிகா மஞ்சத்தில் படுத்து உறங்க வேண்டியவர்...இப்படி வெறும் தரையில் படுத்து உறங்குகிறாரே என்று வருந்துகிறாள். ...அவர் தலைக்கு வைத்து படுக்க என் முந்தானை கூட இல்லை என்று கவலை பட்டு தன் கையையை அவனின் தலைக்கு  கீழே வைக்கிறாள்...கொஞ்ச நேரத்தில் அதுவும் அவனுக்கு சுகமாய் இல்லை என்று உணர்ந்து அவன் தலையயை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொள்கிறாள்...அவனின் துன்பத்தைப் பார்த்து அவள் கண்ணில் நீர் வழிகிறது....

தன் துன்பத்தைக் கூட பார்க்காமல், அவனின் துன்பத்தை கண்டு அவள் கவலைப் படுகிறாள்....

மனதை உருக்கும் புகழேந்தியின் பாடல் ....

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.

பொருள் 

Tuesday, October 16, 2012

நள வெண்பா - நீண்ட இரவு


நள வெண்பா - நீண்ட இரவு


இந்த இரவு ஏன் இப்படி நீண்டு கொண்டே போகிறது. எவ்வளவு நேரம் ஆகிறது பொழுது விடிய. நகரவே மாட்டேன் என்கிறதே இந்த இரவு. இந்த சேவல் கோழிகளுக்கு எல்லாம் என்ன ஆகிவிட்டது ? ஏன் அவை கொக்கரிக்க மாட்டேன் என்கிறது. இந்த இரவு விடியவே விடியாதா ? இந்த கடல் ஏன் இப்படி அலை அடித்துக்கொண்டே இருக்கிறது. தூங்கவே தூங்காதா ? இந்த நிலவு ஏன் இப்படி வெயிலாய் காய்கிறது ? ஏன்  இப்படி சுடுகிறது ? இந்த சூட்டில் என் உடலே உருகி விடும் போல் இருக்கிறதே...என்று புலம்புகிறாள் தமயந்தி...காதல் பிரிவு அவளை வாட்டுகிறது ....


பாடல் 

Sunday, September 23, 2012

நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


எருமை.

மந்த புத்தி மகிஷம்.

வெயில் என்றாலும் விலகாது.

மழை வந்தாலும் மயங்காது.

என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.

அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை. 

அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி. மாட்டிற்கும் யானைக்கும் உடல் எல்லாம் வயிறு தானே.

எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம். அதிலே 
ஒரு குவளை மலர்.

அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியது.

அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.

அந்த இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.

அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தி.

அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்...பெரிய யானையின் வலிமையையை கொண்டவன் இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள் அவளுடைய தோழி...

பாடல் 

Saturday, August 18, 2012

நள வெண்பா - பெண்மை அரசு


நள வெண்பா - பெண்மை அரசு 


பெண்மை அரசாளுகிறது. 

ரத, கஜ, துரக, பதாதி என்ற நால் வகை படை இருப்பது போல அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால் வகை படைகளோடு,

தன்னுடைய ஐந்து புலன்களும் அமைச்சர்கள் போல் வழி நடத்த,

காலில் அணிந்த கொலுசே முரசாக ஒலிக்க (அவள் வருவதை அறிவிக்கும்),

பத்தாதற்கு அவளுடைய கண்ணே வேல் படையாகவும், வாள் படையாகவும், 

அவள் நிலவு போன்ற முகமே வெண் கொற்ற குடையாகவும் 

அவள் ஆட்சி செய்கிறாள்...

Sunday, August 12, 2012

நள வெண்பா - எரியம் இரவு


நள வெண்பா - எரியம் இரவு


அவள் தனித்து இருக்கிறாள். இரவு சுடுகிறது.

ஏன் என்று யோசிக்கிறாள்.

பகல் எல்லாம் இந்த சூரியன் இருக்கிறது. இராத்திரி எங்கே போகிறது ? இந்த இரவு சூரியனை விழுங்கி இருக்குமோ ? அதுனால தான் இப்படி இந்த இரவு கொதிக்கிறதோ?

இல்லைனா, என் மார்பில் இருந்து கிளம்பிய சூடு காரணமாய் இருக்குமோ ? 

ஒரு வேளை, இந்த நிலவு குளிர்ச்சிக்கு பதில் வெப்பத்தை தர ஆரம்பித்து விட்டதோ?

ஏன்னே தெரியலையே..இந்த இரவு இப்படி எரிகிறதே....

Sunday, July 1, 2012

நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளன் ஆண்ட நகரை சிறப்பித்து கூற வருகிறார் புகழேந்தி.

பொதுவாக கவிஞர்கள் அது நன்றாக இருந்தது, இது நன்றாக இருந்தது என்று வர்ணித்து கூறுவார்கள்.

புகழேந்தி சற்று வித்தியாசமாய் சிந்திக்கிறார்.

இந்த நாட்டில் சில விஷயங்கள் கொஞ்சம் கோணலாய் இருக்கின்றன, சில சோர்ந்து போய் இருக்கின்றன, சில வாய் விட்டு அரட்டுகின்றன, சில கலங்குகின்றன, சில நேர் வழி விட்டு செல்கின்றன என்று சொல்கிறார்.
படிக்கும் நமக்கு, "அட, அப்படி என்ன இருக்கு...அதில் என்ன சிறப்பு" என்று சிந்திக்க தோன்றுகிறது அல்லவா ?

Saturday, June 23, 2012

நளவெண்பா - காமனை எரித்தது பொய்


நளவெண்பா - காமனை எரித்தது பொய்


புராணகள் எல்லாம் சிவன் காமனை எரித்ததாக சொல்கிறது.

தமயந்தி அதை நம்பவில்லை. காமன் எரிந்து போனது உண்மையானால், தான் இப்படி காதலில் கஷ்டப் பட வேண்டியது இருக்காதே என்று நினைக்கிறாள்.

Sunday, June 3, 2012

நள வெண்பா - சூடான நிலா


நள வெண்பா - சூடான நிலா 


காதலனை காணாமல் தவிக்கும் காதலிக்கு நிலவு குளிராது, சுடும் என்று நிறைய படித்து இருக்கிறோம்.

நளவெண்பா பாடிய புகழேந்தி புலவர் ஒரு படி மேலே போகிறார்.

அந்த கொதிக்கும் நிலாவினால், வானம் கொப்புளம் கொண்டது...அந்த கொப்புளம் தான் நட்சத்திரங்கள் என்று கூறுகிறார்.

என்ன ஒரு அருமையான கற்பனை.