Sunday, April 7, 2019

கம்ப இராமாயணம் - தவம் செய்த மரவுரி

கம்ப இராமாயணம் - தவம் செய்த மரவுரி 





இராமன் கானகம் செல்லும் போது, பட்டு உடைகளை விடுத்து மரப் பட்டையால் ஆன உடைகளை உடுத்திக் கொண்டு சென்றான்.

சூர்ப்பனகை பார்க்கிறாள்.

அடடா, இவன் இடுப்பில் இந்த மர உரி (உடை) எப்படி ஒட்டி உறவாடுகிறது. இப்படி அவன் இடையில் உறவாட அந்த மர உடை என்ன தவம் செய்ததோ. இராமன் எப்போதும் உடுத்தும் பட்டாடைகள் அவ்வளவு தவம் செய்யவில்லை போல என்று நினைக்கிறாள்.


பாடல்

நல்கலை மதிஉற 
     வயங்கு நம்பிதன் 
எல்கலை திருஅரை 
     எய்தி ஏமுற, 
வற்கலை நோற்றன; 
     மாசு இலா மணிப் 
பொன்கலை நோற்றில 
     போலுமால்' என்றாள்

பொருள்


நல்கலை = சிறந்த ஒளி பொருந்திய பிறைகளை உடைய (கலை என்றா பிறை )

மதி உற  வயங்கு = வெண் மதி போல் விளங்கும் இந்த

 நம்பிதன்  = சிறந்த ஆண் மகனின். நம்பி என்றால் சிறந்த ஆண்மகன் என்று அர்த்தம். அதற்கு பெண் பால் நங்கை.

எல்கலை = எல்லையற்ற கலைகளை உடைய (சூரியன்) போல் ஒளி விடும்

 திருஅரை  = உயர்ந்த இடுப்பில்

எய்தி ஏமுற = சென்று இன்பம் அடைய

வற்கலை நோற்றன = மர உடைகள் தவம் நோற்றன

மாசு இலா = குற்றம் இல்லாத

மணிப் = மணி போல் ஒளி வீசும்

பொன்கலை = பொன் போல இருக்கும் பட்டு உடைகள்

நோற்றில = தவம் செய்யவில்லை

போலுமால்' என்றாள் = போல் இருக்கிறது என்றாள்

என்ன இது ரொம்ப அலுப்பாக இருக்கிறதே. சூர்ப்பணகை இராமனை இரசித்தாள் என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போக வேண்டியது தானே? எதுக்கு போட்டு இப்படி  ஜவ்வாக இழுக்கிறார் இந்த கம்பர் என்று தோன்றலாம்.

மேலோட்டமாக படித்தால் அப்படித்தான் தோன்றும். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் பல புதுப் பொருள்கள் தோன்றலாம்.

குடும்பத்தில் சில சமயம் நாம் செய்யாத தவறுக்காக துன்பப் பட நேரிடலாம்.   பெற்றோர்களுக்கு ஒரு பிள்ளை மேல் கொஞ்சம் அதிகமாக அன்பு இருக்கலாம். அதனால் மற்ற பிள்ளைகள் துன்பப் படலாம்.

மாமியாருக்கு ஒரு மருமகளை கண்டாலே பிடிக்காமல் இருக்கலாம். இன்னொரு மருமகளை தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடலாம்.

நாம் ஒரு தவறும் செய்யாமல் இருக்கும் போதும் நம் மீது பழி விழலாம். நாம் தண்டனை பெற  நேரலாம்.

கணவன் மனைவி உறவிலும் இது போன்ற சிக்கல்கள் வரலாம். "நீ அப்படித்தான் சொல்ல"  என்று ஒருவர் சொல்ல, "நான் அப்படி சொல்லவில்லை "  என்று இன்னொருவர் சொல்ல...சொல்லாத சொல்லுக்கு சண்டை வரலாம்.

என்ன செய்ய வேண்டும் ?

பதிலுக்கு சண்டை போடலாமா ? முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடலாமா? நீதிக்கு போராடலாமா?

தெரியாது.

இராமன் என்ன செய்தான் என்று பார்ப்போம்.

இராஜ்யம் அவனுக்கு வர வேண்டும். அவன்தான் சக்கரவர்த்தி திருமகன். முடி உனக்கு என்று தசரதன் சொல்லி விட்டான், அனைத்து அமைச்சர்கள் முன்னாலும்.

இருந்தும், பெண்டாட்டி பேச்சை கேட்டுக் கொண்டு, இராமனுக்கு நியாயமாக வர வேண்டிய  மகுடத்தை பிடுங்கி பரதனிடம் கொடுத்து விட்டான். அது மட்டும் அல்ல, இராமனை காட்டுக்கும் விரட்டி விட்டான்.

இராமன் செய்த தவறு என்ன? ஒன்றும் இல்லை.

 குடும்பத்தில் நிகழ்ந்த குழப்பம்.

ஒரு தவறும் செய்யாத இராமன் மேல் வந்து விழுந்தது.

ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, 14 ஆண்டுகள் வன வாசம்.

மர உரி.

மறு வார்த்தை பேசாமல் கானகம் போனான்.

குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்கும். குழப்பங்கள் இருக்கும். நீதி நேர்மை  எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். அது என்ன நீதி மன்றமா ?

பட்டாடை விடுத்து மர உரி உடுத்து கானகம் போனான்.

குடும்பத்தில் இப்படி சில சமயம் அநீதி நடக்கலாம். பெரியவர்கள் தவறு செய்யலாம்.  ஒரு மருமகள் அடங்கா பிடாரியாக இருக்கலாம். மாமியார் கொஞ்சம்  தாடகை சாயலில் இருக்கலாம்.

அனுசரித்துத்தான் போக வேண்டும்.

எவ்வளவு தூரம் அனுசரிக்க வேண்டும் என்றால்,  இராஜ்யம் விட்டு கானகம் போகச் சொன்னாலும், சரி என்று அனுசரித்துக் கொண்டு போக வேண்டும்.

இலக்கியங்கள் கொஞ்சம் மிகைப் படுத்தித் தான் சொல்லும்.  நமக்கு கானகம் செல்லும் அளவுக்கு  சிக்கல் வராது. கொஞ்சம் விட்டு கொடுக்கத்தான் வேண்டும். அது நியாயமாக இல்லாவிட்டாலும், அது அநீதியாக இருந்தாலும், அது ஒரு தலை பட்சமாக இருந்தாலும்.

சரி, இராமன் போனான். சீதைக்கு என்ன வந்தது. சீதையை யாரும் கானகம் போகச் சொல்லவில்லையே ?

அவள் நினைத்து இருந்தால் " சரி நீங்க போயிட்டு வாங்க  நான் உங்களுக்காக 14 வருடம் காத்து இருப்பேன்" என்று சொல்லி இருக்கலாம். இராமன் அப்படித்தான் அவளிடம்  சொன்னான்.

சரியோ, தவறோ, கணவன் ஒரு முடிவு எடுத்து விட்டான், அவனுக்கு துணை போவோம் என்று சீதை உடன் சென்றாள்.

"உங்க அம்மாதான், உங்களுக்கு வர வேண்டிய இராஜ்யத்தை தட்டி பிடுங்கிக் கொண்டாள் . நீங்க எதுத்து கேக்க வேண்டியது தானே. உங்க வீரம் எல்லாம் என் கிட்டாதான். தள்ளுங்க. நான் போய் இன்னிக்கு இரண்டுல ஒண்ணு பாத்துட்டு வரேன் "  என்று சீதை கிளம்பவில்லை.

ஏன், எதற்கு என்று கேட்கவில்லை. ஐயோ, சொத்து போச்சே என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை. "உங்கள கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தை கண்டேன்" என்று ஒப்பாரி வைக்கவில்லை.

"நின் பிரிவினும் சுடுமோ பெருங் காடு" என்று கிளம்பி விட்டாள் உடனேயே.

குடும்பம் என்பது அப்படி இருந்த காலம்.

இது பாடம்.

சூர்ப்பணகை படலம் தேவை இல்லாத ஒன்றா?


Saturday, April 6, 2019

கம்ப இராமாயணம் - உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ?

கம்ப இராமாயணம் - உலகம் மேல்  உரைக்க ஒண்ணுமோ? 


தமிழிலே உவமை என்று ஒன்று உண்டு. ஒன்றைக் காட்டி மற்றொன்றை விளங்கப் படுத்துவது.

தெரிந்த ஒன்றைக் காட்டி, தெரியாத ஒன்றை விளங்க வைக்கலாம் அல்லது ஒன்றின் சிறப்பைக் கூற அதை விட உயர்ந்த ஒன்றுக்கு அதை ஒப்பிடலாம்.

உதாரணமாக

புலி எப்படி இருக்கும் என்று தெரியாது என்று வைத்துக் கொள்வோம். பூனை தெரியும். எனவே, புலி என்பது பூனை மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரிய பூனை என்று சொல்லி விளங்க வைக்கலாம்.

அவளுடைய முகம் நிலவு போல இருக்கும், பல் முத்துப் போல இருக்கும் என்றெல்லலாம் உவமை கூறி இரசிக்கலாம்.

இராமனைப் பார்க்கிறாள் சூர்ப்பனகை. அவன் இதழ்களை பார்க்கிறாள். அந்த இதழுக்கு எதை உதாரணம் சொல்லலாம் என்று யோசிக்கிறாள். எதைச் சொன்னாலும் அது சரியாக இருக்காது. அப்படி உதாரணம் சொல்லுவதே இராமனின் இதழுக்கு செய்யும் தீங்கு. அப்படி உதாரணம் சொல்பவர்கள் கல் மனம் படைத்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்று சூர்ப்பனகை நினைக்கிறாள்.


பாடல்


குப்புறற்கு அரிய மாக் 
     குன்றை வென்று உயர் 
இப்பெருந் தோளவன் 
     இதழுக்கு ஏற்பது ஓர் 
ஒப்பு என, உலகம் மேல் 
     உரைக்க ஒண்ணுமோ? 
துப்பினில் துப்புடை 
     யாதைச் சொல்லுகேன்?

பொருள்

குப்புறற்கு = கடப்பதற்கு

அரிய = கடினமான

மாக் குன்றை  = பெரிய மலையை

வென்று = வென்று என்றால் அதை விட உயரமாக உள்ள

உயர் = உயர்ந்த

இப்பெருந் தோளவன் =இந்த பெரிய தோள்களை கொண்ட இவனின்

இதழுக்கு = உதட்டிற்கு

ஏற்பது = ஏற்ற

ஓர் = ஒரு

ஒப்பு என = சரி சமமான

உலகம் மேல் = உலகத்தில்

உரைக்க ஒண்ணுமோ?  = எதையாவது சொல்ல முடியுமா ?

துப்பினில் = துப்பு என்ற சொல்லுக்கு பவளம் என்று ஒரு பொருள் உண்டு.

துப்புடை = (பவளத்தை விட) உயர்ந்த

யாதைச் சொல்லுகேன்? = எதைச் சொல்லுவேன் ? (எதையும் சொல்ல முடியாது)


இதழுக்கு பவளத்தை உவமை சொல்லுவது வழக்கம்.

பச்சை மா மலை போல் மேனி, பவள வாய் கமலச் செங்கண்

என்பது பிரபந்தம்.

சிவ பெருமான் சிவந்த மேனி கொண்டவன்.

"பொன்னார் மேனியனே , புலித்தோலை அரைக்கு அசைத்து "

என்பது தேவாரம்.

பொன் போல ஜொலிக்கும் அந்த சிவந்த மேனியை சொல்லும் போது , நாவுக்கரசர் சொல்லுவார்

"பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்" என்று.

அந்த பவளத்தை இராமனின் சிவந்த இதழுக்கு உதாரணம் சொல்லலாம் என்றால் முடியாது. ஆனால், பவளத்தை விட சிறந்த ஒன்று இல்லையே என்று வருந்துகிறாள் சூர்ப்பனகை.

உன் பவள வாய் காண்பேனே என்பார் குலசேகர ஆழ்வார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

என்பது பிரபந்தம்.

சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி 
கோதை  குழலாள் அசோதைக்கு  போத்தந்த
பேதை  குழவி பிடித்து சுவைத்து உண்ணும் 
பாதக் கமலங்கள் காணீேர
பவள வாயீர் வந்து  காணீேர 

கண்ணன் தொட்டிலில் படுத்து இருக்கிறான். கால் கட்டை விரலை பிடித்து வாயில் வைத்து சுவைக்கிறான். "ஐயோ, இது எவ்வளவு அழகாக இருக்கிறது, இவனை வந்து பாருங்களேன், பவளம் போல் வாயைக் கொண்ட பெண்களே வந்து பாருங்கள் " என்று  அழைக்கிறார் பெரியாழ்வார் , பிரபந்தத்தில்.


பெண்ணின் இதழை வர்ணித்து நாம் கண்டிருக்கிறோம்.

ஆணின் இதழை வர்ணித்து எங்காவது கண்டிருக்கிறோமா? இராமனை அணு அணுவாக இரசிக்கிறான் கம்பன். இராமன், தசரதனின் பிள்ளை அல்ல. கம்பனின் பிள்ளை. அப்படித்தான் கம்பன் நினைக்கிறான். கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவன் அழகை கண்டு உருகுகிறான் கம்பன்.

புறத்தைப் பற்றிக் கொண்டுதான் அகத்துக்குப் போக வேண்டும்.

சில பேர் வெளியிலேயே நின்று விடுகிறார்கள். சூர்பனகையைப் போல.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_6.html

Friday, April 5, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பகல் கண்டேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பகல் கண்டேன் 


கடவுள் இருக்கிறா இல்லையா என்ற சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. அது முடிவதாகத் தெரியவில்லை.

ஆனால், கடவுளை கண்டேன் என்று பல பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் பொய்யா சொல்லுவார்கள்? அவர்களுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அதனால் அவர்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? கொஞ்சம் மரியாதை கிடைக்கலாம். கொஞ்சம் பேர் அவர்களை குருவாக அல்லது மகானாக ஏற்றுக் கொண்டு கொண்டாடலாம். அவ்வளவுதானே. அதற்காக பொய் சொல்லுவார்களா?

சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

அது இருக்கட்டும் ஒரு பக்கம்.

மேல் கோட்டை என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே செல்வ நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது. அங்குள்ள அந்த பெருமாள் சிலை எப்படி வந்தது தெரியுமா ?

ஒரு நாள் இராமானுஜர் அந்த மேல் கோட்டையில் உலவிக் கொண்டு இருந்தார். அவர் காலத்தில் அது ஒரு பெரிய காடாக இருந்திருக்கும். அங்கே ஒரு துளசிச் செடி இருந்தது. என்னடா இது, இந்த காட்டில் ஒரு துளசி செடியா என்று அந்த நீக்கி பார்த்தபோது, அங்கே ஒரு விக்ரகம் இருந்தது. அருகிலேயே ஒரு குளமும் இருந்தது.  புஷ்காரனி என்று அதற்குப் பெயர்.

அந்த இடத்திலேயே கோவில் கட்டினார். அது தான் மேல்கோட்டை கோவில்.

கதை அல்ல முக்கியம்.

அந்த விக்ரஹம் கண்ட போது, இராமானுஜர் பெரும் குரல் எடுத்து ஆனந்தத்தில் ஒரு பாசுரம் பாடினாராம். பூதத்தாழ்வார் சேவை சாதித்த பாசுரம். இராமனுஜருக்காகவே, இந்த சூழ்நிலைக்காகவே எழுதப்பட்ட பாசுரம் போல இருக்கிறது.

பாடல்


பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே- மிகக் கண்டேன்
ஊன் திகமும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு


பொருள்

பகல் கண்டேன் = பகல் கண்டேன்

நாரணனைக் கண்டேன் = நாராயணனைக் கண்டேன்

கனவில் மிகக் கண்டேன் = கனவில் மிகவும் பார்த்தேன்

மீண்டவனை  = மீண்டும் அவனை

மெய்யே- = உண்மையாகவே

மிகக் கண்டேன் = மிகவும் பார்த்தேன்

ஊன் திகமும் = உடலோடு

நேமி  = சக்ராயுதம்

ஒளி திகழும் = ஒளி விளங்கும்

சேவடியான் = சிவந்த திருவடிகளை உடைய

வான் திகழும் = வானில் வாழும்

சோதி வடிவு = சோதி வடிவு

சரி. இதில் என்ன இருக்கிறது? சாதாரணமான பாடல் தானே.

சாதாரண பாசுரமா ?

சிந்திப்போம்.

"பகல் கண்டேன்"....பகலை காண்பது என்பது என்ன பெரிய விஷயமா. கண்ணைத் திறந்தால் தெரிந்து விட்டுப் போகிறது. எல்லோரும் தான் பகலை பார்க்கிறோம், அதுவும் ஒவ்வொரு நாளும். இதை போய் வேலை மெனக்கிட்டு சொல்லுவானானேன் ?

இது நாம் நினைக்கும் இரவு பகல் அல்ல.

அஞ்ஞான இருளில் இருந்து வெளிப்பட்டு பகலை கண்டேன் என்கிறார். நாம், அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடக்கிறோம். ஏன் ஒரு காரியத்தை செய்கிறோம், அதற்கு காரணம் என்ன, நம் செயல்களுக்கு, எண்ணங்களுக்கு காரணம் என்ன   என்று அறியாமல் ஏதோ இயந்திரம் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அறிவை, அறியாமை என்ற இருள் மூடி மறைத்து இருக்கிறது. அறியாமை நீங்கினால், பகல் தெரியும். வீட்டுக்குள், எல்லா கதவையும், ஜன்னலையும் மூடிக் கொண்டு படுத்து இருந்தால் வெளியே உள்ள பகல் தெரியுமா ?

திருப்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும் இறைவனை எழுப்ப அல்ல. அறியாமை என்ற இருளில் உறங்கிக் கிடக்கும் நம்மை எழுப்பி பகலை காண வைக்கும் முயற்சிகள்.

"நாரணனை கண்டேன்"...இராமானுஜர் "பகல் கண்டேன்" என்று சொன்னவுடன் அருகில் இருந்தவர்கள் விழித்திருப்பார்கள். என்ன இது, இது பகல் தானே. இவர் என்ன பகல் கண்டேன் என்று  சொல்கிறாரே என்று குழம்பி இருப்பார்கள். அவர்களை பார்த்து சொல்கிறார், பகல் என்றால் இந்த வெளிச்சம் அல்ல, "நான் நாரணனை கண்டேன்" என்று விளக்குகிறார்.

இந்த நாரணன், நாராயணன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

பல அர்த்தம் சொல்கிறார்கள் விரிவுரையாளர்கள்.

நார என்றால் ஆத்மா. அயனம் என்றால் பாதை. (உத்தராயணம், தட்சிணாயனம், இராமாயணம்). ஆன்மாக்கள் சென்றடையும் பாதை என்று ஒரு பொருள்.

நாரம் என்றால் தண்ணீர் என்று ஒரு பொருள் உண்டு. தண்ணீரில் இருப்பவன், துயில்பவன் என்று இன்னொரு பொருள்.

"கனவில் மிகக் கண்டேன்"...கடவுளை பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருப்பர்வகளுக்கு அது தானே கனவில் வரும். நமக்கு கனவில் என்னென்னமோ வருகிறது. இராமானுஜர் சொல்கிறார், "நிறைய தடவை கனவில் பார்த்து இருக்கிறேன்" என்று.  பக்கத்தில் உள்ளவர்கள் நினைத்து இருப்பார்கள். "சரி, கனவு தானே...கனவில் நாங்க கூட என்னனென்னவோ பார்க்கிறோம்" என்று.


"மீண்டவனை மெய்யே- மிகக் கண்டேன்"...அது மட்டும் அல்ல, மீண்டும் அவனை உண்மையிலேயே நேரில் கண்டேன் என்கிறார். சரி, எப்ப பார்த்தாலும் கனவு கண்டு கொண்டே இருந்தால் பாக்கிறது எல்லாமே அப்படித்தான் தெரியும் என்று அருகில் உள்ளவர்கள் நினைத்து இருக்கலாம். அவர் சொல்கிறார், "ஒரு முறை அல்ல. பல முறை பார்த்தேன். ....மெய்யே மிகக் கண்டேன்" என்கிறார்.

"ஊன் திகமும் "...கண்டேன் கண்டேன் என்கிறீரே, எதை கண்டீர் என்று கேட்டு இருப்பார்கள். விளக்குகிறார் இராமானுஜர்.  உடலோடு கண்டேன் என்கிறார். உருவமாகக் கண்டேன். ஊன் திகழும்.

"நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு"

சக்கராயுதம் ஒளி வீச, சிவந்த திருவடிகளோடு, வானில் திகழும் அந்த ஜோதி வடிவை கண்டேன் என்கிறார்.


மேல் கோட்டை போனால், அந்த செல்வ நாராயணரை பார்த்து விட்டு வாருங்கள். பெங்களூருக்கு மைசூருக்கும் நடுவில் இருக்கிறது. மைசூருக்கு 50 கிமி தொலைவில் இருக்கிறது. 


Thursday, April 4, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழ்க்கையை இரசிக்க வேண்டும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழ்க்கையை இரசிக்க வேண்டும் 


வாழ்க்கை பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. எதுக்குமே நேரம் இல்லை. யாரைக் கேட்டாலும் , "நேரமே இல்லை " என்கிறார்கள்.

தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டே போகிறது. வேகமான வண்டிகள், விமானம், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என்று எத்தனையோ சாதனங்கள் வந்து விட்டன.  இருந்தும் நேரம் இல்லை என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது.

ஏன் ?

நாம் ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய நினைக்கிறோம். செய்கிறோம்.

சாப்பிடும் போது செல் போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறோம். கோவிலில் நின்று கொண்டு அலுவலத்தை நினைக்கிறோம். அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டு ஞாபகம். வீட்டில் இருக்கும் போது அலுவலக ஞாபகம். மனம் எதிலும் ஒன்றுவது இல்லை.

ஒரு நாளாவது, மனைவியை இரசித்து ஒரு பாராட்டு உண்டா. "இந்த சேலையில் நீ ரொம்ப அழகா இருக்க...இந்த necklace உனக்கு எடுப்பா இருக்கு" னு ஒரு பாராட்டு உண்டா ?

"அடடா இன்னிக்கு சாப்பாடு ரொம்ப ருசியாக இருக்கு..இன்னும் கொஞ்சம் போடு " னு இரசித்து சாப்பிட்டது உண்டா?

"ஏங்க, முடி வெட்டிட்டு வந்தா, ஒரு பத்து வயசு குறைஞ்ச மாதிரி இருக்கீங்க" னு கணவனை இரசித்து உண்டா?

மழையை, பனியை , இனிமையான சங்கீதத்தை, மனைவியின் வெட்கத்தை, பிள்ளைகளின் வெகுளித் தனத்தை, எதையுமே ரசிப்பது இல்லை.

வாழ்க்கை எப்படி இனிக்கும்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்க படிக்க வேண்டும்.

சில்லென்ற நீர் முகத்தில் படும் போது அந்த சிலிர்ப்பை இரசிக்க வேண்டும்.

shower ஐ திறந்து விட்டு குளிக்கும் போது கண்ணை மூடி, நீர் உடல் எங்கும் தழுவி செல்வதை இரசிக்க வேண்டும்.

சாப்பிடும் போது, அந்த நிறம், மணம் , சுவை என்று அனைத்தையும் இரசிக்க வேண்டும்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்,

"இறைவா, உன் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் இந்த சுவையே போதும். இதை விட்டு விட்டு சுவர்க்கம், பரமபதம், வைகுண்டம், இதெல்லாம் கிடைத்தாலும் வேண்டேன்" என்கிறார்.

இருப்பதை அனுபவிக்க வேண்டும். இரசிக்க வேண்டும்.

இறைவன் திருநாமத்தை அவர் எப்படி அனுபவிக்கிறார் என்று பாருங்கள்.

பாடல்

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பொருள்


பச்சைமா மலைபோல்மேனி  = பசுமையான மலை போன்ற மேனி

பவளவாய் = பவளம் போல சிவந்த உதடுகள்

கமலச் செங்கண் = தாமரை போல சிவந்த கண்கள்

அச்சுதா  = அச்சுதன் என்றால் கை விட்டு விடாதவன் என்று அர்த்தம்

அமர ரேறே  = அமரர் + ஏரே = அமரர்களில் ஏரு போன்றவனே

ஆயர்தம் கொழுந்தே = ஆயர்களின் இளைய பிள்ளையே

என்னும் = என்று கூறும்

இச்சுவை = இந்த சுவையை

தவிர = தவிர

யான்போய்  = நான் போய்

இந்திர லோக மாளும் = இந்திர லோகம் ஆளும்

அச்சுவை  = அந்த சுவையை

பெறினும் வேண்டேன் = பெற்றாலும் அதை வேண்ட மாட்டேன்

அரங்கமா நகரு ளானே. = திருவரங்கம் என்ற பெரிய ஊரில் உள்ளவனே

இப்போது உள்ளதை இரசிக்கத் தெரியாதவன், மற்றது வந்தால் மட்டும் இரசித்து விடவா போகிறான்?

இருப்பதை இரசி. அனுபவி. அதுவே பெரிய அனுபவம்.

ஸ்வர்கத்துக்குப் போனாலும், அது இல்லையே, இது இல்லையே என்று தான் ஏங்கிக் கொண்டு இருப்போம்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பார்களாம் ஸ்வர்கத்தில். ஒரே ஒரு இரம்பை , ஒரு திலோத்தமை, ஒரு ஊர்வசி, ஒரு காமதேனு, ஒரு கற்பக விருட்சம் இருக்கிறது.

நம் முறை எப்போது வருமோ....

அங்கேயும் பெரிய queue இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஆழ்வார் சொல்கிறார்...இறைவா, உன்னிடம் இருப்பது கூட வேண்டாம், உன்னை பார்க்கக் கூட வேண்டாம் , உன் திருநாமத்தை சொல்கின்ற இந்த சுகம் , இந்த சுவை இருக்கிறதே, அதுவே போதும் என்கிறார்.

இதையே தான் நாவுக்கரசரும் சொல்கிறார்

"இந்த மானிடப் பிறவி எவ்வளவு சுகமானது, சுவையானது. இறைவனது திரு உருவை காணும் பேறு பெற்றதால், "மனித்த பிறவியும் வேண்டுவதே" என்கிறார்"

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே



வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் இரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிற்றின்பத்தில் இருந்துதான்  பேரின்பம் பிறக்க முடியும்.  சிற்றின்பத்தையே அறியாமல் பேரின்பத்தை எப்படி அறிய முடியும்.

இன்றிலிருந்து வைத்துக் கொள்ளுங்கள்...எதையும் இரசித்துச் செய்வது என்று. மனம் ஒன்றி செய்வது என்று.

காலத்தை வெல்ல, மரணத்தை வெல்ல அதுவே வழி.

மனம் ஒன்றினால் காலம் நின்று போகும். அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம். எப்படி மார்க்கண்டேயன் மரணத்தை வென்றான் என்று.

அதுவரை, வாழ்க்கையை இரசிக்கப் படியுங்கள்.

வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும், அனைத்தையும் இரசியுங்கள்.

இறைவன் திருநாமத்தை இரசிப்பதில் அவ்வளவு சுவை இருப்பதைக் கண்டார் தொண்டரடி பொடி ஆழ்வார். நீங்களும் கண்டு பிடியுங்கள் எங்கெல்லாம் எவ்வளவு சுவை இருக்கிறது என்று.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_4.html

Wednesday, April 3, 2019

திருக்குறள் - தெய்வத்தோடு ஒப்பக் கொளல்

திருக்குறள் - தெய்வத்தோடு ஒப்பக் கொளல்


உள்ளதுக்குள்ளே பெரிய திறமை அல்லது அறிவு எது?

அறிவியில், புவியியல், கணிதம், வணிகம், உயிரியல், என்று எண்ணற்ற அறிவு சார்ந்த துறைகள் இருக்கின்றன.

விளையாட்டு, சண்டை, நடனம், பாடுதல், நீந்துதல், சமைத்தல்,  படம் வரைதல்,  என்ற எண்ணற்ற திறமைகள் இருக்கின்றன.

இது அனைத்திலும் உயர்ந்தது எது?

சிந்தித்துக் கொண்டிருங்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும். மீண்டும் வருவோம் அந்தக் கேள்விக்கு.

கணவன் வெளியில் இருந்து வீடு வருகிறான். முகம் சரி இல்லை. என்னமோ அலுவலகத்தில் குளறுபடி என்று மனைவி தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்கிறாளோ இல்லையோ, தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டால் எப்படி இருக்கும்? மாறாக, உள்ளே நுழையும் போதே "...அதை வாங்கி வரச் சொன்னேனே...வாங்கிட்டு வந்தீங்களா..." என்று ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.

கணவன் வருகிறான், மனைவி சோர்ந்து அமர்ந்து இருக்கிறாள். அவளைப் பார்த்த உடனேயே சரி, அவளுக்கு உடல் நலம் இல்லை. அல்லது மனதில் என்னமோ கிடந்து குழம்புகிறது என்று அறிந்து கொண்டு, "என்னடா ஆச்சு, ஏன் ஒரு மாதிரி  இருக்க" என்று ஆறுதலா கேட்டா எப்படி இருக்கும்? அதை விடுத்து, "டீ போட்டியா...சாப்பிட ஏதாவது இருக்கா ...பசி உயிர் போகுது " என்று சொல்லிக் கொண்டே நுழைந்தால் எப்படி இருக்கும்.

எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. சொல்லாமலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

கணவனுக்கு / மனைவிக்கு இது வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இது கணவன் மனைவி உறவில் மட்டும் அல்ல, பிள்ளைகளிடம், பெற்றோரிடம், உறவு,நட்பு, அலுவலகம் என்று எல்லா இடத்திலும் குறிப்பு அறிந்து  நடக்க வேண்டும்.

தெய்வம் இருக்கிறதே, அதுக்குத் தெரியும் நமக்கு என்ன வேண்டும் என்று. நாம் போய் கேட்க வேண்டாம்.  எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்க வேண்டுமா? கடவுளுக்குத் தெரியாதா? எல்லாம் தெரிந்த கடவுளுக்கு  நமக்கு  என்ன வேண்டும் என்று தெரியாதா ?

வேண்ட தக்கது அறிவோய் நீ 
வேண்ட முழுவதும் தருவோய் நீ 
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ 
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்கில் அதுவும் உந்தன் விருப்பன்றே 

என்பார் மணிவாசகர் (திருவாசகம்).

நீ எனக்கு ஏதாவது தருவதாய் இருந்தால், அதுவும் உன் விருப்பம் என்கிறார்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து

என்பார் மணிவாசகப் பெருந்தகை.

பிள்ளை பசித்து, அம்மாவிடம் போய் , அம்மா, எனக்கு பசிக்கிறது, கொஞ்சம் பால் தர முடியுமா என்று கேட்பது இல்லை. பிள்ளைக்கு பசிக்குமே என்று அவள் நினைத்து பால் தருவாளாம்.

பால் நினைந்து ஊட்டும்

அந்த தாயை விட அன்பு கொண்டவன் கடவுள்.

அதாவது, நமக்கு வேண்டியதை, நாம் கேட்காமலேயே நமக்குத் தருபவன்.

அப்படி கேட்காமலேயே, குறிப்பறிந்து செய்பவர்களை தெய்வத்தோடு ஒப்பாக கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

குறிப்பறிதல், தெய்வத்தின் குணம். உள்ள குணங்களிலேயே, திறமைகளிலேயே மிக   உயர்ந்த குணம் குறிப்பறிதல்.

பாடல்


ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்

பொருள்


ஐயப் படாஅது = சந்தேகம் இல்லாமல்

அகத்தது = உள்ளத்தில் உள்ளதை

உணர்வானைத் = உணர்பவனை

தெய்வத்தோடு = தெய்வத்து

ஒப்பக் கொளல் = இணையாக கொள்ள வேண்டும்

எங்கே? நாம் எப்போதும் நமக்கு என்ன வேண்டும் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

மற்றவர்களை பற்றி எங்கே நினைக்கிறோம்?

சுயநலமே தலை தூக்கி நிற்கிறது.

மற்றவர்களின் மனதை அறிந்து கொள்பவனை தெய்வத்தோடு வைக்க வேண்டும் என்கிறார்.

வந்தவன் நம்மை ஏமாற்றும் எண்ணத்தோடு வந்திருக்கலாம். அதை அறிந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் மனதை அறிந்து கொள்வது தெய்வத்துக்கு மட்டுமே முடிந்த காரியம். எனவே, அதை எவன் செய்கிறானோ, அவன் தெய்வத்துக்கு சமமாவான்.

குறிப்பறிய முடியாதவனை மனிதன் என்றே சொல்லக் கூடாது. அவன் ஒரு மரம் போன்றவன் என்கிறார் ஒளவை.

"குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம்" என்பது ஒளவை வாக்கு.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.


குறிப்பறிதல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

பத்து குறள்.

மற்றவர்களின் குறிப்பை எப்படி அறிவது? அதற்கும் வழி சொல்கிறார் வள்ளுவர்.

அதை வரும் நாட்களில்  சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_3.html


Tuesday, April 2, 2019

கம்ப இராமாயணம் - நாணலன் மீமிசை நடக்கின்றான்

கம்ப இராமாயணம் - நாணலன் மீமிசை நடக்கின்றான்


நல்லவர்கள் உடலில் இருந்து ஒளி வீசுமாம்.

இது என்ன புது கதையாக இருக்கிறது. உடலில் இருந்து எப்படி ஒளி வீசும் என்று கேட்கலாம்.

அந்தக் காலத்தில் பிரதீபன் என்று ஒரு மஹா ராஜா இருந்தார். அவர் உடலில் இருந்து தீப ஒளி வீசுமாம்.

இராமன் கானகம் செல்கிறான். மேலே சட்டை இல்லை. வெயில் கொளுத்துகிறது.

கம்பன் பதறுகிறான். ஐயோ, இராமன் மேல் வெயில் படுகிறதே. அவனுக்கு சுடுமே என்று கம்பன் பதறுகிறான்.


"வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,"

சூரியனின் ஒளி, தன்னுடைய மேனியின் ஒளியில் மங்கும்படி இராமன் நடந்து சென்றானாம்.



வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.


எங்கே சூர்ப்பனகை பார்க்கிறாள்.

"இந்த சூரியனுக்கு கண்ணு இல்லையா என்ன? இராமனின் உடலில் இருந்து வெளி வரும் ஒளியைப் பார்த்து விட்டால், அவன் நாணத்தில் எங்காவது சென்று மறைந்து கொள்ளுவான். இது வரை பார்க்கவில்லை போலும்...எனவே தான் வெட்கம் இல்லாமல் இப்படி சுத்தித் திரிகிறான் "

என்கிறாள்


பாடல்


வாள் நிலா முறுவலான் வயங்கு சோதியைக் 
காணலனே கொலோ கதிரின் நாயகன் 
சேண் எலாம் புல் ஒளி செலுத்திச் சிந்தையின் 
நாணலன் மீமிசை நடக்கின்றான் 'என்றாள் .

பொருள்

வாள் நிலா = ஒளி வீசும் நிலா

முறுவலான் = (அது போன்ற ) புன்னகை உடைய

வயங்கு சோதியைக் = ஒளி வழங்கும் இராமனை

காணலனே கொலோ = பார்க்கவில்லையோ

கதிரின் நாயகன்  = அந்தக் கதிரின் நாயகன் (சூரியன்)

சேண் = தூர இடங்களுக்கு

எலாம் = எல்லாம்

புல் ஒளி செலுத்திச் =  சிறிய  ஒளியை செலுத்தி

சிந்தையின் = உள்ளத்தில்

நாணலன் = வெட்கமில்லாதவன்

மீமிசை நடக்கின்றான் ' = உலகெலாம் சுத்தித் திரிகிறான்

என்றாள் . = என்றாள் சூர்ப்பனகை

சேண் என்றால் தூரம். தொலை தூரம் 


சேண் விளங்கு அவிர் ஒளி என்பார் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்.



உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு 
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு 
ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி. 




" சேண்விளங்கு இயற்கை வாள்மதி " இதுவும் திருமுருகாற்றுப்படை தான்.


 சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ
 அகலா மீனின் அவிர்வன இமைப்ப
 தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்
 மனன்நேர்பு எழுதரு வாள் நிறமுகனே ..." - - - - 


ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆணின் மேல் இத்தனை இலயிப்பு.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_2.html


Monday, April 1, 2019

கம்ப இராமாயணம் - அடித்தலம் தீண்டலின்

கம்ப இராமாயணம் - அடித்தலம் தீண்டலின் 


மனப் பயிற்சி பற்றி முன்பு ஒரு முறை சிந்தித்தோம். உடற் பயிற்சி செய்து உடலை உறுதி செய்வது போல, மனப் பயிற்சி செய்து மனதை உறுதி செய்ய வேண்டும்.

மனிதன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? மனம் வேலை செய்பவன் என்று அர்த்தம். மனம் வேலை செய்யாவிட்டால் அவன் மனிதனே அல்ல.

ஆறு மாதக் குழந்தையை நாம் "அது தூங்கிருச்சு, அதுக்கு பசிச்சிருச்சு போல " என்று சொல்லுகிறோம்.

ஏன் ?

குழந்தை உயர்திணை தானே? பின் ஏன் குழந்தையை ஆடு மாடு போல அது, இது என்கிறோம் ?

ஏன் என்றால் குழந்தைக்கு மனம் இன்னும் வேலை செய்யத் தொடங்கவில்லை.

மனம் வேலை செய்தால் தான் மனிதன்.

அந்தக் குழந்தையே ஒரு இரண்டு வயதான பின், "அவன் வெளியே எங்காவது விளையாட போயிருப்பான்" என்று சொல்லுவோம்.

அதுவாக இருந்தது அவனாக மாறிவிட்டது. காரணம் மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

மனம் எந்த அளவுக்கு வேலை செய்கிறதோ அந்த அளவுக்கு உயர்வு வரும்.

வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர்த்தம்
உள்ளத்து அணையது உயர்வு

என்பார் வள்ளுவப் பெருந்தகை

வாழ்வில் உயர வேண்டுமா? மனம், உயர வேண்டும்.

மனம் உயர வேண்டும் என்றால், மனதிற்கு பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சி தான் இலக்கியங்கள்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.

புல் பார்த்து இருக்கிறீர்களா? தெருவோரம், பூங்காவில் என்று எல்லா இடத்திலும் முளைத்து இருக்கும். அந்த புல்லை பற்றி உங்களால் என்ன கற்பனை பண்ண முடியும்?

அது ஒரு பயிற்சி. முயன்று பாருங்கள்.

புல்லிடம் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது? உயரம், வலிமை, அழகு, சுவையான காய் அல்லது பழம், அழகான மலர் என்று ஏதாவது இருக்கிறதா? ஒன்றும் இல்லை.  பின் எதை வைத்து அதை சிறப்பாக எண்ணுவது?

கம்பன் சிந்திக்கிறான்.

காதலன் கை பட்டால், காதலிக்கு உடல் சிலிர்க்கும். புல்லரிக்கும். உடலில் உள்ள முடி எல்லாம் சிலிர்த்து எழுந்து நிற்கும் அல்லவா.

அது போல

இந்த பூமகள் என்ற பெண்ணுக்கு இராமன் அடி தீண்டியவுடன் உடல் சிலிர்த்ததாம். அவள் உடலில் உள்ள உரோமங்கள் எல்லாம் சிலிர்த்து எழுந்து நின்றதாம். அந்த உரோமங்கள் தான் இந்த புற்கள் என்கிறார்.

பாடல்


'உடுத்த நீர் ஆடையள் , உருவச் செவ்வியள் , 
பிடித்தரு நடையினள் பெண்மை நன்று ! இவன் 
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் 
பொடித்தன போலும் இப் புல் 'என்று உன்னுவாள்


உடுத்த நீர் ஆடையள் = See through dress. கடலை ஆடையாக உடுத்திக் கொண்டுள்ள இந்த பூமகள்.

உருவச் செவ்வியள் = அழகிய உருவம் கொண்டவள்

பிடித் தரு நடையினள் = பெண் யானை போன்ற நடையினை கொண்டவள்

பெண்மை நன்று; = பெண்மைக்கு உண்டான குணங்கள் எல்லாம் நன்றாக
கொண்டவள்

இவன் = இராமன்

அடித்தலம் = திருவடி

தீண்டலின் = தீண்டப் பெற்றதால்

அவனிக்கு = இந்த பூமிக்கு

அம்மயிர் = அந்த மயிர்

பொடித்தன போலும், = சிலிர்த்தன போலும்

இப்புல்என்று = இந்த புற்கள் எல்லாம் என்று

உன்னுவாள் = எண்ணுவாள்


அழகிய பெண். பெண்ணுக்கு உரிய குணங்கள் எல்லாம் நிரம்பப் பெற்றவள். கடல் என்ற  ஆடை உடுத்தவள்.

கற்பனை செய்து பாருங்கள்.

காற்றில் பெண்ணின் ஆடை சலசலப்பது போல, கடலின் அலைகள். பூமகளின் ஆடை காற்றில் அலைவது போல இருக்கிறது.

ஆண் கை பட்டால் எல்லா பெண்களுக்குமா உடல் சிலிர்க்கும்?  பெண்மை குணம்  நிரம்பி இருக்க வேண்டும். அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற குணங்கள்  இருக்க வேண்டும். இந்த பூமகளுக்கு இவை எல்லாம் நிரம்பி இருக்கிறது. எனவே, அவள் உடல் சிலிர்த்தது.

கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அறிவு செல்ல முடியாத இடங்களுக்கு கற்பனை உங்களை இட்டுச் செல்லும்.

அறிவினால் இறைவனை அடைய முடியாது என்பது நம் முன்னவர்களின் கணிப்பு.

"சித்தமும் செல்லா சேச்சியான் காண்க "

என்பார் மணிவாசகர் (திருவாசகம்). அங்கே சித்தம் செல்லாது.

" உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" 

என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார். (பெரிய புராணம்)

அவனை அறிந்து கொண்டு ஓத முடியாது.

பின், எப்படித்தான் இறைவனை கண்டு கொள்வது என்றால், மனம் விரிய வேண்டும். அறிவு செல்லாத இடங்களுக்கு அது செல்லும்.


அறிவு மெல்லமாகத்தான் செல்லும். கற்பனை உங்களை கண நேரத்தில் எங்கும் கொண்டு  சேர்க்கும்.

அறிவினால் முன்னோக்கித்தான் போக முடியும்.

கற்பனை உங்களை மூன்று காலத்துக்கும் கொண்டு செல்லும். இராமனும் சூர்பனகையும் இருந்த காலம் எது என்று நமக்குத் தெரியாது. இருந்தாலும், இந்தப் பாடல்கள் உங்களை அங்கு கொண்டு செல்லும்.

உங்கள் மனதை விரிவாக்க வேண்டுமா?

கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களைப் படியுங்கள். மனம் விரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post.html