Tuesday, November 26, 2019

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர்

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர் 


எது சரி, எது தவறு என்று மக்கள் குழம்பும் போது, உண்மை அறிந்த ஞானியர்களை மக்கள் நாடினார்கள்.

அனைத்தும் துறந்த, சுயநலம் இல்லாத ஞானிகள் அவர்கள். அவர்கள் சொல்வதை மக்கள் சந்தேகம் கொள்ளாமல் ஏற்று நடந்தார்கள்.

புத்தர், இயேசு, சங்கரர், இராமானுஜர், வள்ளலார், வள்ளுவர் போன்றவர்கள் மக்களை வழி நடத்தினார்கள்.

ஆனால், இன்று அப்படி யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் கேட்பது?

யார் உண்மையானவர், யார் பொய்யானவர் என்று தெரியமால் மக்கள் குழப்புகிறார்கள்.

பட்டினத்தார், உண்மை ஞானம் கண்டு தெரிந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவர்களின் இலக்கணம் சொல்லுகிறார்.

நீங்கள் யார் பேச்சையாவது கேப்டதாய் இருந்தால், அவர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கேட்காதீர்கள்.


பாடல்

பேய்போற்றிரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லா
நாய்போலருந்திநரிபோலுழன்றுநன்மங்கையரைத்
தாய்போற்கருதித்தமர்போலனைவர்க்குந்தாழ்மைசொல்லிச்
சேய்போலிருப்பர்கண்டீருண்மைஞானந்தெளிந்தவரே.


பொருள்

பேய்போற்றிரிந்து= பேய் போல் திரிந்து

பிணம்போற்கிடந்து = பிணம் போல கிடந்து

இட்டபிச்சையெல்லா = இட்ட பிச்சை எல்லாம்

நாய்போலருந்தி = நாய் போல் அருந்தி

நரிபோலுழன்று = நரி போல் உழன்று

நன்மங்கையரைத் = நல்ல பெண்களை

தாய்போற்கருதித் = தாய் போல கருதி

தமர்போலனைவர்க்குந் = உறவினர் போல அனைவருக்கும்

தாழ்மைசொல்லிச் = பணிவாகப் பேசி

சேய்போலிருப்பர் = குழந்தையைப் போல இருப்பார்கள்

கண்டீர் = கண்டீர்

உண்மை ஞானந் தெளிந்தவரே. = உண்மையான ஞானம் தெளிந்தவரே


பேய் போல திரிந்து - பேய்க்கு ஒரு இருப்பிடம் கிடையாது.  அது பாட்டுக்கு காட்டில் அலையும்.  அதன் பேரில் ஒரு வீடு, பேங்க் அக்கௌன்ட் எல்லாம் கிடையாது.

பிணம் போல கிடந்து - பிணத்துக்கு உணர்ச்சி இருக்காது. நல்ல உணவு,  குளிர் சாதன அறை, பெரிய கார், பெண்கள், என்று உணர்ச்சிகளுக்கு அடிமையாக மாட்டார்கள்.

இட்ட பிச்சை எல்லாம் - அந்த உணவு வேண்டும், இந்த உணவு வேண்டும் என்று கேட்பது எல்லாம் கிடையாது. கிடைத்த பிச்சையை

நாய் போல் அருந்தி - தட்டு கூட கிடையாது

நன் மகளிரை தாய் போல் கருதி - பெண்களை தாயைப் போல கருதுவார்களாம்.

எல்லோரையும் உறவினர் போல நினைத்து பணிவாகப் பேசுவார்கள்.  என் ஜாதி,  என் மதம். இது பார்க்கும் நேரம். அதற்கு கட்டணம்.  யார் கிட்ட வரலாம், யார் தள்ளி நிற்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு கிடையாது.

சேய் போல் இருப்பர் - சின்ன பிள்ளை போல கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார்கள்.

முதலில், சாமியாருக்கு மடம் எதற்கு?  எல்லாவற்றையும் வேண்டாம் என்று தானே  துறவறம் பூண்டு சாமியாராக ஆனாய். பின் எதற்கு மடம் , அதில் ஏக்கர் கணக்கில்  நிலம், பணம், தங்கம், சொத்து, வருமானம், வரி என்றெல்லாம்.  இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?  மடத்தில் இருக்கும்  யாரும், பட்டினத்தார் பட்டியலில் வர மாட்டார்கள்.

சொத்து சேர்த்து, அதை காப்பாற்றி, அதை பெருக்கி, அதை நிர்வாகம் பண்ண ஆளை போட்டு, அவன் ஏமாற்றாமல் இருக்கிறானா என்று தெரிந்து  கொள்ள  ஒரு ஆடிட்டர் ஐ போட்டு...இதெல்லாம் ஞானம் அடைந்ததின் குறியீடா?

உண்மையான ஞானிகளை பார்க்க போக வேண்டும் என்றால் மடத்திற்குப் போகாதீர்கள்.

எந்த மதத்திலும், எந்த பிரிவிலும், எங்கே பணமும் சொத்தும் புரள்கிறதோ அங்கே ஞானம் இருக்காது. உங்களுக்கு பணம் வேண்டும், செல்வாக்கு வேண்டும், காரியம் நடக்க யாரையாவது பிடிக்க வேண்டும் என்றால் அங்கே போங்கள். ஞானம்?

ஞானிகள் தங்களை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஞானம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் தேடிப்  போக வேண்டும்.

அந்தத் தேடல் தான் உங்கள் ஞானத்தின் முதல் படி.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_26.html

Monday, November 25, 2019

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும்

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும் 


கர்ணன் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறான். அர்ஜுனன் எத்தனையோ அம்புகளை விடுகிறான். அவை கர்ணனை தீண்டவில்லை. கர்ணன் செய்த தர்மம் அவனை காத்து நின்றது.

பார்த்தான் கண்ணன். கர்ணன் செய்த தர்மம் அவனுக்கு பக்க பலமாக உள்ளவரை அவனை கொல்ல முடியாது என்று கருதி, கிழ வேதியர் வடிவம் தாங்கி, கர்ணனிடம் அவன் செய்த தவங்கள் யாவையும் தானமாகப் பெற்றான். (செய் தர்மம் - வினைத்தொகை). அதற்குப் பின், அர்ஜுனனிடம் "நீ இனி அம்பு விடு, அவன் இறந்து விடுவான்" என்று சொல்கிறான்.

அதே போல் அர்ஜுனனும், அம்பு விட்டு அவனை கொல்கிறான்.

நான் சொல்ல வந்தது இந்த கதை அல்ல.

அர்ஜுனன் விட்ட அம்பு குறி தவறாமல் கர்ணனின் மார்பை துளைத்தது என்பதற்கு ஒரு உவமை சொல்ல வேண்டும் என்று நினைத்த வில்லி புத்தூர் ஆழ் வார் ஒரு உவமையை தேர்வு செய்கிறார்.

"தகலுடையார் மொழி போல"

என்று சொல்கிறார்.

அதாவது தவம் செய்த பெரியவர்கள் சொன்ன சொல் எப்படி தவறாகாதோ , அது போல் தவறில்லாமல் அந்த அம்பு அதன் இலக்கை அடைந்தது என்கிறார்.

அந்த மாதிரி பெரியவர்கள் சபித்தாலும் சரி, ஆசீர்வாதம் செய்தாலும் சரி, அது பலிக்கும் என்று நம்மவர்கள் நம்பினார்கள்.

சொல்லுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. அது சொல்பவர்களைப் பொறுத்தது.

பாடல்

பகலவன்தன்மதலையைநீபகலோன்மேல்பாற்பவ்வத்திற்
                    படுவதன்முன்படுத்தியென்ன,
விகல்விசயனுறுதியுறவஞ்சரீக மெனுமம்பாலவ
                            னிதயமிலக்கமாக,
வகலுலகில்வீரரெலாமதிக்கவெய்தா னந்தவாசுக
                         முருவியப்பாலோடித்,
தகலுடையார்மொழிபோலத்தரணியூடு தப்பா
               மற்குளித்ததவன்றானும்வீழ்ந்தான்.


பொருள்

பகலவன்தன்மதலையை = பகலைத் தருகின்ற சூரியனின் மகனை (கர்ணனை)

நீ = நீ (அர்ஜுனா)

பகலோன் = சூரியன்

மேல்பாற் = மேற்கு திசையில்

பவ்வத்திற் = உள்ள கடலில்

படுவதன்முன் = மறைவதன் முன்

படுத்தியென்ன, = அம்புகளை விடுவாய் என்று  சொல்ல

விகல்விசயனும் = இகல் விஜயன் - வீரம் பொருந்திய அர்ஜுனன்

உறுதியுற = உறுதியாக,

அஞ்சரீக மெனும் அம்பால்  = அஞ்சீரகம் என்ற அந்த அம்பால்

அவனிதயமிலக்கமாக, = அவன் (கர்ணன்) இதயம் இலக்காக  (குறி வைத்து)

அகலுலகில் = அகன்ற உலகில்

வீரரெலாமதிக்க = வீரர் எல்லாம் மதிக்க

வெய்தா னந்த = எய்தான், அந்த

ஆசுகம் = அம்பு

முருவியப்பாலோடித், = உருவி அப்பால் ஓடி

தகலுடையார் = தவமுடையவர்

மொழிபோலத் = மொழி போல

தரணியூடு = உலகத்தின் வழி

தப்பாமற் = தப்பாமல்

குளித்ததது = விழுந்தது

வன்றானும்வீழ்ந்தான். = அவனும் (கர்ணனும்) வீழ்ந்தான்

வார்த்தைகள் வலிமை மிக்கவை. அவற்றை நாம் வீணடிக்கக் கூடாது.

பெரியவர்களின் ஆசி அப்படியே பலிக்கும்.

பெரியவர்கள் என்றால் வயதில் பெரியவர்கள் அல்ல. திருதராட்டிரன் கூட வயதில் பெரியவன் தான். அதற்காக அவன் சொன்னது எல்லாம் நடக்கும் என்று கொள்ளக் கூடாது. காட்டு எருமைக்கும், காண்டா மிருகத்துக்கும், கடல் ஆமைக்கும் கூடத்தான் வயதாகும். வயது ஒரு பொருட்டு அல்ல.

தவத்தால், ஒழுக்கத்தால் , அறிவால் பெரியவர்கள்.


அப்படிப் பட்டவர்கள் ஆசியைப் பெற வேண்டும்.

நாமும் அப்படிப்பட்டவர்களாக முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_25.html

Sunday, November 24, 2019

திருப்புகழ் - ஏது புத்தி

திருப்புகழ் - ஏது புத்தி 


கொஞ்சம் பெரிய பாடல் தான். படிக்கவும் சற்று கடினமான பாடல் தான். பொறுமையாகப் படித்தால் அவ்வளவு சுவை நிரம்பிய பாடல். சீர் பிரித்து பொருள் அறியலாம்.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை, திடீரென்று அருகில் அப்பா அம்மா யாரும் இல்லாததை கண்டு திகைக்கிறது. எங்கு போய் தேடுவது என்று தெரியாமல் குழம்புகிறது. பின், அதுவே நினைக்கிறது. எனக்கு என்ன புத்தியா இருக்கு அப்பா அம்மாவை தேடி கண்டுபிடிக்க என்று நினைத்து ஓ வென்று அழ ஆரம்பிக்கிறது. பிள்ளை அழுதால் அப்பா அல்லது அம்மா யாராவது ஓடி வருவார்கள் தானே. நாம் எதுக்கு போய் தேடணும். அழுதா போதுமே, அவங்களே வந்து தூக்கிக் கொள்வார்கள் அல்லவா என்ற அந்த பிள்ளையின் அறிவு கூட எனக்கு இல்லையே.

இத்தனை காலம் இந்த உலகில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்து விட்டேன். திடிரென்று உன் ஞாபகம் வந்தது முருகா. உன்னை எங்கே போய் தேடுவேன். எனவே, அழுகிறேன். அழுதால் உன் பிள்ளையான என்னை நீ வந்து தூக்கிக் கொள்வாய் அல்லவா ? எனக்கு வேறு யாரைத் தெரியும்?

நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். பிள்ளை அழும் போது அதை கவனிக்காவிட்டால் ஊரில் அதன் அப்பா அம்மாவைப் பற்றி என்ன சொல்லுவார்கள். பிள்ளையை கவனிக்காம அப்படி என்ன வேலையோ என்று பெற்றோரைத் தானே திட்டுவார்கள்.

முருகா, நீ என்னை கவனிக்காவிட்டால் ஊரில் உன்னைத் தான் எல்லோரும் திட்டுவார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். பெரிய கடவுளாம், பக்தன் அழும் போது வந்து  கவனிக்கக் கூட தெரியவில்லை என்று.  இது தேவையா உனக்கு?

என்று சொல்லிவிட்டு, முருகனை துதிக்கிறார்.

அற்புதமான பாடல். சந்தம் கருதி கொஞ்சம் வார்த்தைகளை அங்கே இங்கே பிரித்துப் போட்டு இருக்கிறார். நாம் அதை கொஞ்சம் சீர் பிரித்து வாசித்தால் அதன் அழகு தெரியும்.

பாடல்



ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.



பொருள்



ஏது புத்தி = ஏது புத்தி

ஐயா = ஐயா

எ னக்கு = எனக்கு

இனி = இனிமேல்

யாரை = யாரை

நத்திடுவேன் = நாடுவேன்

அவத்தினிலே = வீணாக

இறத்தல்கொ லோ = இறப்பதுதான்

எனக்கு = எனக்கு

நீ = நீ

தந்தைதாயென்று = தந்தை தாய் என்று


இருக்கவும் = இருக்கவும்

நானு மிப்படியே  = நானும் இப்படியே

தவித்திடவோ = தவித்திடவோ

சகத்தவர் = உலகில் உள்ளவர்கள்

ஏசலிற் படவோ = திட்டும் படியாக

நகைத்தவர் = என்னைப் பார்த்து சிரிப்பவர்கள்

கண்கள்காணப் = அவர்கள் கண்கள் என்னை காணும் படி

பாதம் வைத்திடை யா = உன் பாதங்களை வைத்திடு ஐயா

ஆதரித்து எனை = ஆதரித்து எனை

தாளில் வைக்க = உன் திருவடிகள் என் தலைமேல் வைக்க

நி யேம றுத்திடில் = நீயே மறுத்தால்

பார் நகைக்குமை யா  = பார் நகைக்கும் ஐயா

தகப்பன்முன் = தகப்பன் முன்

மைந்தனோடிப் = பிள்ளை ஓடி

பால்மொழி = குழந்தையின் பால் போன்ற மொழியில்

குர லோல மிட்டிடில் = குரல் ஓலம் இட்டிடில்

 யாரெடுப்பதென = யார் எடுப்பது என

நா வெறுத்தழ =நாக்கு வெறுத்து அழ

பார்வி டுப்பர்க ளோ = பாரில் (உலகில்) விட்டு விடுவார்களா

எனக்கிது = என்று இதை

சிந்தியாதோ =  சிந்திக்க மாட்டார்களா?


ஓத முற்றெழு = வெள்ளம் முழுவதுமாக எழுவது போல

பால்கொ தித்தது =பால் கொதித்தது

போல = போல

எட்டிகை = எட்டு திசையில் உள்ள

நீசமுட்டரை = நீசம்முற்ற அசுரர்களை

யோட வெட்டிய = ஓட வெட்டிய

பாநு  = சூரியனை போல் ஒளிவிடும்

சத்திகை = சக்தியான வேலைக் கொண்ட

யெங்கள்கோவே = எங்கள் அரசனே


ஓத மொய் = வெள்ளம் பெருகும்

சடை யாடவும்  = சடை ஆடவும்

உற்ற மான் மழு கரம் ஆட = மானும் மழுவும் கையில் ஆட

பொற்கழ லோசை  = பொன்னால் அணிந்த கழல் ஓசை

பெற்றிடவே நடித்தவர் = தோன்றும்படி நடனமாடியவர்

தந்தவாழ்வே = தந்த எங்கள் வாழ்வான முருகனே


மாதி னை = மாதினை

புன மீதி ருக்கு = புனை மீது இருக்கும்

மை = மை பூசிய

வாள்விழிக் = வாள் போன்ற விழிகளைக் கொண்ட

குற மாதினைத் = குற மாதினை

திருமார்ப ணைத்த = மார்போடு அனைத்துக் கொண்ட

மயூர = மயில் மேல் ஏறும்

அற்புத = அற்புதமான

 கந்தவேளே = கந்தக் கடவுளே

மாரன் வெற்றிகொள் = மன்மதனை வெற்றி கொள்ளும்

பூமு டிக்குழலார்  = பூக்கள் முடிந்த குழலை உடைய பெண்கள்

வியப்புற = வியக்கும்படி

நீடு மெய்த்தவர் = நீண்ட மெய் தவம் செய்பவர்

வாழ் = வாழும்

திருத்தணி  = திருத்தணியில்

மாமலைப் = பெரிய மலை

பதி  தம்பிரானே.= அதிபதியான தம்பிரானே

கொஞ்சம் பொறுமையாக பாடலை வாசித்துப் பாருங்கள். சந்தம் துள்ளும்.

அர்த்தம் தோய்ந்த இனிய பாடல்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_24.html

Friday, November 22, 2019

திருக்குறள் - பொதுநோக்கு நோக்குதல்

திருக்குறள் - பொதுநோக்கு நோக்குதல்



கல்லூரி நாட்களில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார காதலித்தார்கள். ஆனால், வெளியே காட்டிக் கொல்வதில்லை. எப்போதாவது பேசிக் கொள்வது. ஓடை நீர் பார்வை பரிமாற்றம் மட்டும்தான். கல்லூரி  முடிந்து ஆளுக்கு ஒரு பக்கமாய் போய் விட்டாலும், தொலை பேசியிலும், whatsapp லும் அவர்கள் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

அவர்களின் நண்பர்களுக்கு அரசல் புரசலாகத் தெரியும். இருந்தும் யாரும் அதை பெரிது படுத்தவில்லை. என்ன பெரிய விஷயம் என்று விட்டு விட்டார்கள்.

எப்போதாவது, ஆண்டுக்கு ஒரு முறை, அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நண்பர்கள் எல்லோரும் கூடுவார்கள். அல்லது நண்பர்கள் வீட்டில் ஏதாவது திருமணம் போன்ற விஷேசம் வந்தால் கூடுவார்கள்.

அவர்களும் வருவார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒன்றும் இல்லாதது போல பார்த்துக் கொள்வார்கள்.

அவளுடைய தோழிகளும், அவனுடைய தோழர்களும் அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். ம்ஹூம் ...ஒன்றும் தெரியாது.  யாரோ, எவரோ போல இருப்பார்கள்.

இரண்டும் சரியான கல்லுளி மங்கர்கள். அழுத்தமான ஆளுகள் தான்....


இது இன்று நடக்கும் ஏதோ சினிமாவோ அல்லது சீரியலோ அல்ல, திருவள்ளுவர்  காலத்தில் நடந்த நாடகம்...அவரே சொல்கிறார் பாருங்கள் ....


பாடல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

பொருள்

ஏதிலார் = ஒருவரை ஒருவர் அறியாதவர்

போலப் = போல

பொதுநோக்கு நோக்குதல் = பொதுப்படையாக நோக்குதல்

காதலார் =காதலர்கள்

கண்ணே உள = கண்ணில் மட்டும் தான் இருக்கும்

உள என்பது பன்மை. இரண்டு பேர் மனத்திலும் காதல் இருப்பதால் உள என்ற பன்மையை போடுகிறார் வள்ளுவர்.


நோக்குதல் என்பது ஒன்று தானே?  இரண்டு பேரும் ஒரே காரியத்தைத்தானே செய்கிறார்கள். பின் எதற்கு பன்மை போட வேண்டும்?

எல்லோரையும் நோக்குவது ஒரு தொழில். காதலியை (காதலனை) நோக்குவது இன்னொரு தொழில். அது வேறு பார்வை. இது வேறு பார்வை. பார்த்தால் ஒரே மாதிரிதான்   இருக்கும். இருந்தாலும், உள்ளுக்குள் வேறுபாடு உண்டு   என்பதால்,  "உள" என்ற பன்மையை கையாள்கிறார் வள்ளுவர்.


அவளுக்கு , அவன் மேல் காதல்.

அவனுக்கு, அவள் மேல் காதல்.

இருவரும் மனதுக்குள் அந்த காதலை நினைத்து மகிழ்கிறார்கள். அருகில் இருப்பது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.  இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஒன்றும் தெரியாதவர் போல பார்த்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் அந்த கண நேரத்தில் பட்டுத் தெறிக்கும் காதல். அதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்று மறைத்து வைக்கும் செயல் என்று   பல செயல்கள் நடப்பதால், "உள" என்றார்.

சரி, அது என்ன "காதலார்". காதலர் என்று தானே இருக்க வேண்டும். ஏன் 'லார்" என்று ஒரு பொருந்தாத சொல்லப் போடுகிறார் ?

அவர்கள் காதலிக்கிறார்கள். ஆனால், காதலை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அது ஒரு  முரண் தானே. அந்த முரணைக் பாட்டில் கொண்டு வருகிறார் வள்ளுவர்.

"காதலார்" என்று ஒரு நெருடலான சொல்லைப்  போடுகிறார்.

அந்த சூழ்நிலையில் அவர்கள் செயல் அப்படி பொருத்தம் இல்லாததாக இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார்.

எவ்வளவு சுவையாக இருக்கிறது.  படிக்கும் போதே ஒரு சுகம் தெரிகிறது அல்லவா? முகத்தில் ஒரு புன்னகை வருகிறது அல்லவா?

ஆண் பெண் உறவை அவ்வளவு இனிமையாக சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

படிக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_22.html


Thursday, November 21, 2019

கந்த புராணம் - பழி ஒன்று நின்பால் சூழும்

கந்த புராணம் - பழி ஒன்று நின்பால் சூழும்


அவனுக்கு அவள் மேல் கொள்ளை காதல். எட்ட இருந்து, பார்த்து, இரசித்து , எப்படியாவது பேசி விட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறான்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது.

அவளிடம் போய்

"ஏங்க , ஏதாவது சொல்லுங்க. பிடிச்சுருக்குனு சொல்லுங்க, இல்லை பிடிக்கலேன்னு சொல்லுங்க...ஏதாச்சும் சொல்லுங்க" என்று சொல்கிறான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"சரிங்க, பேச வேண்டாம், ஒரு புன்சிரிப்பு?"

அதற்கும் அவள் ஒன்று செய்யாமல் நிற்கிறாள்.

"சரி போகட்டும், புன்னகை கூட வேண்டாம், ஒரே ஒரு பார்வை பாருங்க...அது போதும்" என்கிறான்.

அவள் மசியவில்லை. நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

"என்னங்க நீங்க, நான் கிடந்து தவிக்கிறேன்...எனக்கு ஒரு வழி சொல்லுங்க "

அவள் அப்போதும் மெளனமாக இருக்கிறாள்.

"ஏங்க, உங்க மனசு என்ன கல் மனசா ? எனக்கு சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல...பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு...எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா , அந்த பழி உங்க மேல தான் வரும் " என்று கூறுகிறான்.

அந்த அவன் = முருகன்.

அந்த அவள் = வள்ளி.

மேலே சொன்ன dialogue , அப்படியே கச்சியப்ப சிவாச்சாரியார் சொன்னது.

பாடல்

மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய்  ஆயின்விழி ஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்  வேன் உய்யும்வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய் ஆயின்பழி ஒன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி என்றான்.



பொருள்


மொழி ஒன்று புகலாய் ஆயின் = ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தால்

முறுவலும் புரியாய்  ஆயின் = ஒரு புன்னகை கூட புரியவில்லை என்றால்

விழி ஒன்று நோக்காய் ஆயின் = ஒரு கண் ஜாடை கூட காட்டவில்லை என்றால்

விரகம் மிக்கு = விரகம் அதிகமாகி

உழல்  வேன் உய்யும் = துன்பப்படும் நான் தப்பிக்கும்

வழி ஒன்று காட்டாய் ஆயின் = வழி ஒன்றும் காட்டாவிட்டால்

மனமும் சற்று உருகாய் ஆயின் = எனக்காக மனம் உருக்காவிட்டால்

பழி ஒன்று நின்பால் சூழும் = உன் மேல் தான் பழி வரும்

பராமுகம் தவிர்தி என்றான். = எண்னை பார்க்காமல் இருப்பதை விட்டுவிடு என்றான்.

தெய்வீகக் காதல்தான். முருகன் , வள்ளி மேல் கொண்ட காதல். அதை விட பெரிய தெய்வீக  காதல் என்ன இருக்க முடியும்?

அந்த காதலின் பின்னாலும், காமமே தூக்கி நிற்கிறது.

"விரகம் மிக்கு உழல்  வேன் உய்யும்" என்கிறான் முருகன்.

பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக சொல்கிறார் கச்சியப்பர். "விரகம்" தான்  இந்தப் பாடு படுத்துகிறது என்று.

சரி, அது பக்கம் இருக்கட்டும்.

பக்தர்கள் பலர் இறைவனை வேண்டுவார்கள்..."ஆண்டவா, எனக்கு முக்தி கொடு,  வீடு பேறு கொடு, மோட்சம் கொடு, உன் திருவடி நிழலில் இருக்கும் பேற்றைத் தா " என்று.

"சரி பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். புறப்படு" என்று கூப்பிட்டால் எத்தனை பேர்  போவார்கள்?

மற்றவர்களை விடுங்கள்.

மணிவாசகர் போகவில்லை. இறைவன் வலிய வந்து அழைத்தான். இவர் போகவில்லை.

காரணம், மனம் பக்குவப்  படவில்லை.

பின்னால், அதை நினைத்து நினைந்து, நைந்து நைந்து புலம்பினார். அந்த புலம்பலின் மொத்த  தொகுப்புதான் திருவாசகம்.

இறைவன் கூப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறான்.

நமக்கு கேட்பதில்லை.

கேட்டாலும், கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறோம்.

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் படிப்பு, அதுகளுக்கு ஒரு கல்யாணம், வயதான பெற்றோர், என்று இவ்வளவையும் விட்டு விட்டு எங்க போறது?

அப்புறம், இந்த இறைவனுக்கு என் மேல் கருணையே இல்லையா என்று புலம்ப வேண்டியது.

முருகன் வலிய வந்து வள்ளியிடம் கேட்கிறான்.

அவளோ,ஒன்றும் பேசாமல் இருக்கிறாள்.

முருகன் சொல்கிறான் "இங்க பாரு...நான் வந்து கூப்பிடுகிறேன்...நீ வரவில்லை என்றால் , பழி உன் மேல் தான் வரும். என்னை யாரும் குறை சொல்ல முடியாது ..எனவே என் கூட வா" என்கிறான்.

பக்குவம் இல்லாத ஆன்மா. வந்திருப்பது இறை என்று அறியாமல் விழிக்கிறது.

எங்கோ இருந்த குகனுக்குத் தெரிந்தது , அருகில் இருந்த கூனிக்குத் தெரியவில்லை.

பிள்ளை பிரகாலதனுக்குத் தெரிந்தது, தந்தை இரணியனுக்குத் தெரியவில்லை.

தம்பி வீடணனுக்குத் தெரிந்தது, அண்ணன் இராவணனுக்குத் தெரியவில்லை.

என்ன செய்ய?

பக்குவம் வேண்டுமே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_21.html

Monday, November 18, 2019

கந்த புராணம் - பேரினை உரைத்தி

கந்த புராணம் - பேரினை உரைத்தி 


அவளை அன்று தற்செயலாக வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெரிய  கடையில் பார்த்தான்.  வீணையின் ஒற்றை தந்தியை சுண்டி விட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு. யார் இவள் ? இவ்வளவு அழகா? சிரிக்கிறாளா இல்லை முகமே அப்படித்தானா? என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். பக்கத்தில போய் பேசலாமா என்று நினைக்கிறான். அதற்குள் அவள் போய் விட்டாள்.

அவனுக்குள் ஏதோ ஒரு அவஸ்தை.

சிறிது நாள் கழித்து, மீண்டும் அவளை ஒரு நூலகத்தில் பார்த்தான். அவள் பாட்டுக்கு படித்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்குள் ஒரு இனம் புரியாத பரபரப்பு. பேசவும் முடியாது. அவள் இருக்கும் மேஜைக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்து கொள்கிறான்.

அவள் வாசித்து முடித்து விட்டு செல்கிறாள். அவனும் அவள் பின்னையே போகிறான்.

ஏதாவது அவளிடம் பேச வேண்டும் என்று ஆசை. என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தவிக்கிறான். ஏதாவது கேட்டால் , அவள் தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்றும் பயம்....

ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அணுகி, தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு, அவள் பெயரை கேட்கிறான்.

அவள் பதில் சொல்லாமல் போய் விடுகிறாள்.

அப்புறம் சிறிது நாள் கழித்து, "ஏங்க , பேர் சொல்லாட்டாலும் பரவாயில்ல, நீங்க எந்த ஊருன்னாவது சொல்லுங்க" என்றான். அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.

கொஞ்ச நாள் சென்றது, "சரிங்க , ஊர் பேர் சொல்லாட்டாலும் பரவாயில்லை, உங்க ஊருக்கு போற வழியையாவது சொல்லுங்க. ஏதாவது சொல்லுங்க "  என்று  அவளை பேச வைக்க பாடாய் படுகிறான். ....

இது ஏதோ நம்ம ஊர் +2 , காலேஜ் படிக்கும் பையன் , பொண்ணுங்க கதை மாதிரி இருக்கா?

இல்லை, இது கந்தபுராண கதை.

நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். பாடலைப் பாருங்கள்.


பாடல்


வார் இரும் கூந்தல் நல்லாய் மதி தளர் வேனுக்கு  உன்றன்
பேரினை உரைத்தி மற்று உன் பேரினை உரையாய் என்னின்
ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.


பொருள்

வார் இரும் = வாரி, வகிடு எடுக்கப்பட்ட

கூந்தல் = கூந்தலை கொண்ட

நல்லாய் = நல்ல பெண்ணே

மதி  தளர் வேனுக்கு = புத்தி தடுமாறும் எனக்கு

உன்றன் = உன்னுடைய

பேரினை உரைத்தி = பேர் என்னனு சொல்லு

மற்று  = அல்லாமல்

உன் பேரினை உரையாய் என்னின் = பேரை சொல்லமாட்டியா, சரி, அப்படினா

ஊரினை உரைத்தி = உன் ஊர் பேராவது சொல்லு

ஊரும் உரைத்திட முடியாது என்னில் = அதையும் சொல்ல முடியாது என்றால்

சீரிய = சிறந்த

நின் = உன்னுடைய

சீறுர்க்குச் = சிறப்பான ஊருக்கு

செல்வழி உரைத்தி என்றான். = போகிற வழியாவது சொல்லு  என்றான்

அது சிறந்த ஊருனு இவனுக்கு எப்படித் தெரியும்? ஊர் பேரே தெரியாது. ஆனால், அது சிறந்த ஊர் என்று எப்படித் தெரியும்?

அவள் பிறந்ததனால், அது சிறந்த ஊராகத்தான் இருக்க முடியும் என்பது அவன் எண்ணம்.

காதல் இரசம் கொஞ்சும் பாடல்.

இது கந்த புராணத்தில் 10149 ஆவது பாடல்.

எவ்வளவு பாடல்கள் இருக்கின்றன. என்னைக்கு அதை எல்லாம் படித்து இன்புறுவது?

whatsapp , youtube , facebook பாக்கவே நேரம் இல்லை...இதில் கந்த புராணத்தை  எங்கே போய்  படிப்பது ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_18.html

Saturday, November 16, 2019

கந்த புராணம் - அயன் படைத்திலன்

கந்த புராணம் - அயன் படைத்திலன் 


ஆயிரம் ஆனாலும், பெண்களுக்கு தங்கள் பிறந்த வீட்டைப் பற்றி குறை கூறினால் பிடிப்பது இல்லை. அதுவும் கட்டிய கணவனோ, அவனைச் சார்ந்தவர்களோ சொன்னால் இன்னும் பிடிப்பது இல்லை.

அதற்காக, சில சமயம் உண்மையை சொல்லாமல் இருக்க முடியுமா?

வள்ளி, தினை புனத்திற்கு காவல் இருக்கிறாள். பயிர்களை, காகம் முதலிய  பறவைகள் வந்து சேதப்படுத்தால் அவைகளை விரட்டி, பயிரை காவல் செய்கிறாள்.

அங்கே முருகன், வயோதிக அந்தணர் வேடத்தில் வருகிறான்.


வந்து, வள்ளியிடம் சொல்கிறான்

" கூர்மையான வாளைப் போன்ற கண்களை உடைய பெண்ணே, கேள். உலகில் உள்ள பெண்கள் எல்லாம் கண்டு கை தொழும் படி இருக்கும் உன்னை, இந்த பயிர்களை பாதுகாக்க வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்களே, அந்த வேடர்களுக்கு, ஆய்ந்து அறியும் அறிவை அந்த பிரம்மன் வைக்கவில்லை போலும் " என்கிறான்.

உங்கப்பா முட்டாள் னு சொன்னா, எதை பொண்ணு பொறுத்துக் கொள்வாள்? அதையேதான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறான் கந்தன் "உங்கப்பாவுக்கு , அந்த பிரம்மன் அறிவை வைக்க மறந்து விட்டான் போல் இருக்கு
 னு. தப்பு உங்க அப்பா மேல இல்ல, அந்த பிரம்மன் மேல்தான் என்று சொல்லுமாப் போல.....


பாடல்


நாந்தகம் அனைய உண்கண் 

நங்கை கேள் ஞாலம்  தன்னில்

ஏந்திழையார் கட்கு எல்லாம் 

இறைவியாய் இருக்கும் நின்னைப் 

பூந்தினை காக்க வைத்துப் போயினார் 

புளினர் ஆனோர்க்கு 

ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் 

அயன் படைத்திலன் கொல் என்றான்.



பொருள்

நாந்தகம் = கூறிய கொடுவாள்

அனைய போன்ற

உண்கண் = பார்ப்பவரை உண்ண க் கூடிய கண்களைகே கொண்ட

 நங்கை கேள் = பெண்ணே !, கேள்

ஞாலம்  தன்னில் = இந்த உலகம் தன்னில்

ஏந்திழையார் கட்கு = பெண்களுக்கு 

எல்லாம் = எல்லாம்

இறைவியாய் இருக்கும்   = தலைவியாய் இருக்கும்

நின்னைப் = உன்னை

பூந்தினை = தினைப்புனம் உள்ள  வயல் காட்டை

காக்க வைத்துப்  = காவல் காக்க  வைத்து  விட்டு

போயினார் = போனார்கள்

புளினர் = வேடர்கள்

ஆனோர்க்கு = அவர்களுக்கு

ஆய்ந்திடும் = ஆராய்ச்சி செய்யும்

உணர்ச்சி ஒன்றும் = ஒரு உணர்ச்சியையும்

அயன் = பிரம்மன்

படைத்திலன் = படைக்கவில்லை

கொல்  = அசைச் சொல்

என்றான். = என்றான் (முருகன்)

கச்சியப்ப சிவாச்சாரியாரின் தமிழ் கொஞ்சுகிறது.

இராமாயணம்,பாரதம் அளவுக்கு  கந்த புராணம் அவ்வளவாக பேசப் படுவது இல்லை.

இருந்தும், அதில் உள்ள பாடல்கள், அவ்வளவு இனிமையானவை.  எளிமையானவை.

வேறென்ன சொல்லப் போகிறேன்? மூல நூலை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_1.html