Monday, July 13, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே 


நாம் வைகுந்தம் போவோமா அல்லது மாட்டோமா என்ற கேள்வி பக்தர்கள் மனதில் இருப்பது இயற்கை.

நாம் பாவம் செய்கிறோமா? புண்ணியம் செய்கிறோமா ? நல்வினையா அல்லது தீவினையா நாம் செய்வது?

சாத்திரங்களில் சொன்னதை நாம் சரியாக கடை பிடிக்கிறோமா இல்லையா என்ற சந்தேகங்கள் வரமால் இருக்காது.

சாத்திரங்கள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒன்றைச் சொல்கின்றன. சில ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன. நாம் எதைச் செய்வது, எதை விடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறோம்.

மேலும், இல்லறத்தில் ஈடுபடும்போது, அனைத்து அறங்களையும் கடை பிடிக்க முடியுமா ? சில பல நிர்பந்தங்களினால் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் நிகழ்ந்து விடலாம்.

அதுக்கெல்லாம் பரிகாரம் உண்டா?

அதுக்கெல்லாம் கவலைப் படாதீர்கள். நீங்கள் வைகுந்தம் போவது என்பது விதி. நீங்கள் கட்டாயம் போவீர்கள். போகாமல் இருக்க வழியே இல்லை. போய் தான் ஆக வேண்டும் ஏன் என்றால் நீங்கள் திருமாலின் உறவினர் என்கிறார் நம்மாழவார்.

வைகுந்த வாசலுக்குப் போனவுடன், அங்குள்ள தேவர்களும் முனிவர்களும் உங்களை வரவேற்று, நீங்கள் எமது சொந்தக் காரர் என்று உறவு கொண்டாடி, அழைத்துக் கொள்வார்களாம்.

இந்த மண்ணுலகில் பிறந்த உங்களின் விதி வைகுந்தம் அடைவதே. அதில் ஒரு சந்தேகமும் வேண்டாம் என்கிறார்.

பாடல்



வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதிடம் புகுதென்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே. 10.9.9 (நம்மாழவார்)



பொருள்

வைகுந்தம் புகுதலும் = வைகுந்தத்தில் புகும் பொழுது

வாசலில் = அதன் வாசலில்

வானவர் = வானவர்கள்

வைகுந்தன் =  வைகுண்ட வாசன் திருமால்

தமரெமர் = தமர் + எமர் = தமர் என்றால் சொந்தம். திருமால் நம்ம சொந்தக் காரன். அதாவது , உமக்கும் எமக்கும் அவன் பொதுவான சொந்தக்காரன். அவன் மூலம் நீரும் நாமும் சொந்தமாகி விட்டோம்.

எமதிடம் புகுகென்று = எங்கள் இடத்திருக்கு வாருங்கள் என்று

வைகுந்தத் தமரரும் = வைகுந்தத்து + அமரரும். வைகுந்தத்தில் உள்ள அமரர்களும்.

முனிவரும் = அங்குள்ள முனிவர்களும்

வியந்தனர் = ஆச்சரியத்தோடு அழைத்தனர்

வைகுந்தம் புகுவது = வைகுந்தம் செல்வது

மண்ணவர் விதியே = மண்ணில் வாழ்பவர்களின் விதியே

எல்லோரும் வைகுந்தம் போகலாம். அது நமக்கு விதிக்கப்பட்ட விதி என்கிறார்.



பரமபதத்தின் திருவாயிலை அடைந்தபோது, அங்கு நின்ற தேவர்களும் முனிவர்களும், "வைகுந்தனின் அடியார்கள் எங்கள் தலைவர்கள்! உங்களை வரவேற்பதில் எமக்கு பெருமகிழ்ச்சி!" என்று வியந்து போற்றி வரவேற்றார்கள். அத்துடன், "பூவுலக மாந்தர் பரமபதம் அடைவதும் விதிக்கப்பட்ட நற்செயலே!" என்றும் ஆனந்தப்பட்டனர்!

நாம் விரும்பும் ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் நாம் எப்படி அவரை ஆச்சரியத்தோடு, ஆர்வமாக "வாங்க வாங்க" என்று வரவேற்போம், அது போல  திருமாலின் பக்தர்களை முனிவர்களும் தேவர்களும் வரவேற்பார்களாம்.

அது மட்டும் அல்ல,  திருமால் தான் பூலோகத்திலே வாசம் செய்கிறாரே, அதை விட்டு விட்டு  நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள் என்று "ஆச்சரியத்தோடு  வரவேற்பார்களாம்"

அது மட்டும் அல்ல,  இந்த மண்ணில் மனிதர்களாக ப் பிறந்து, அவன் அடியார்களாக  ஆன பின், வைகுந்தம் போவது என்பது சர்வ நிச்சயம் என்கிறார் ஆழ்வார்.

திருமாலின் பக்தர்கள் என்று கூட சொல்லவில்லை. திருமாலின் உறவினர் என்று  அவ்வளவு அன்யோன்யமாக உறவு கொண்டாடுகிறார். நம்ம சொந்தக் காரர் வீட்டுக்கு நாம் செல்ல என்ன தயக்கம். எப்ப வேண்டுமானாலும் போகலாம்  என்பது போலச்  சொல்கிறார்.

இது போன்ற பாடல்களை  வாசிக்கும் போது , வார்த்தைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. அந்த உணர்ச்சியை, அந்த பாவத்ததை, அந்த அனுபவத்தை  உணர வேண்டும்.

கண்மூடி இரசித்துப் பாருங்கள். அந்தப் பாசுரம் அப்படியே மனதுக்குள் இறங்கும். முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_13.html

Sunday, July 12, 2020

திருக்குறள் - தவம்

திருக்குறள் - தவம் 


நமக்கு எப்போதும் இன்பம் வேண்டும். இன்பம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, துன்பம் கொஞ்சம் கூட வந்து விடக் கூடாது என்று நினைக்கிறோம்.

நம்மால் சிறு துன்பத்தைக் கூட சகித்துக் கொள்ள முடிவதில்லை.

செல்லும் போது, போக்கு வரத்து நெரிசலில் சற்று கால தாமதம் ஆனால், எரிச்சலும், கோபமும் வருகிறது. என்ன இந்த நாடு, ஒரு சாலை வசதி இல்லை, ஒருவரும் சாலை விதிகளை கடை பிடிப்பது இல்லை என்று எல்லோர் மேலும் எரிச்சல் கொள்கிறோம்.

சின்ன தலைவலி வந்தால் போதும், "தலை வலி மண்டையே வெடித்து விடும் போல் இருக்கிறது, தலை வலி மண்டையைப் பிளக்கிறது " என்று அதை பெரிது படுத்தி அங்கலாய்க்கிறோம்.

ஏதோ ஒரு வரிசையில் நிற்கிறோம். அந்த வரிசை சற்று மெல்லமாக சென்றால், "என்ன இது,  இவ்வளவு நேரம் ஆகிறது, வேலை தெரியாத ஆட்களைப் போட்டு நம் உயிரை வாங்குகிறார்கள் " என்று கோபிக்கிறோம்.

சிறிது நேரம் மின்சார தடை வந்தால் போதும். நாடு, மக்கள், நடை முறை (process ) என்று எல்லாவற்றின் மேலும் கோபம் கொள்கிறோம்.

பால் காய்ச்சும் போது பால் பொங்கி விட்டால், கோபம் வருகிறதா இல்லையா?

ஒரு சின்ன துன்பத்தைக் கூட சகிக்க முடியவில்லை.

அப்படியே வளர்ந்து விட்டோம். அப்படியே பிள்ளைகளையும் வளர்க்கிறோம்.


இப்படி இருந்தால், வாழ் நாள் முழுவதும் எப்போதும் எரிச்சல், கோபம், வெறுப்பு இதுதானே மிஞ்சும்.  ஏதாவது தடங்கல், ஏதாவது கால தாமதம் எங்காவது நிகழ்ந்து கொண்டே தானே இருக்கும்.

இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் பட்டால் வாழ்க்கை இனிமையாக இருக்குமா?

சரி, அதுக்கு என்ன செய்வது? போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டால்  கோபமும், எரிச்சலும் படாமல் என்ன செய்வது?

வள்ளுவர் வழி சொல்லித் தருகிறார்.

துன்பம் வரும். சின்ன துன்பங்கள், தடங்கல்கள், கால தாமதங்கள், தோல்விகள், நட்டங்கள் , ஏமாற்றங்கள் இவை எல்லாம் வாழ்வில் சாதாரணமாக நடக்கும்.  அவற்றை ஏற்று வாழப் பழக வேண்டும்.

துன்பத்தை எப்படி பழகுவது?  இதுக்காக எங்காவது போய் எனக்கு துன்பம் செய்யுங்கள்  என்று கேட்டு வாங்க முடியுமா?

முடியாது.

எனவே தான், நாமே நமக்கு சில துன்பங்களை வரவழைத்து அதில் இருந்து , அவற்றை அனுபவித்துப் பழக வேண்டும்.


எப்படி?

விரதம் இருப்பது என்பது அப்படிப்பட்ட ஒரு பழக்கம்.

பசிக்கும்.  உடம்பு சாப்பாட்டைக் கொண்டு வா என்று சொல்லும், "முடியாது..இன்று உனக்கு   சாப்பாடு கிடையாது " என்று பழக்க வேண்டும். பசி ஒரு துன்பம் தான்.  அந்தத் துன்பத்தை ஏற்றுப் பழக வேண்டும்.

அது போல, தூக்கம் வரும். தூங்காமல் இருந்து பழகுவது.

குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது.

சூடாக இருக்கும் போது , குளிர் சாதனத்தை (air conditionar ) கொஞ்ச நேரம் கழித்து  on செய்வது.  மின் விசிறியை சற்று நேரம் கழித்து ஓட விடுவது. அந்த சிறிது நேரத்தில்  உடம்பு சங்கடப்படும். படட்டும் என்று விட வேண்டும். அப்படி செய்து பழகி விட்டால், பின்னால் வேறு ஏதாவது துன்பங்கள் வந்தாலும், அவற்றை ஏற்று பழகி விடுவோம்.

காய்ச்சல் வந்தால், ஒரு நாள் பொறுத்துப் பழக வேண்டும்.

இது ஒரு விதத்தில் உடம்பை துன்பங்களுக்கு பழக்குவது.

இன்னொரு விதம் என்ன என்றால், பிறர்க்கு துன்பம் செய்யாமல் இருப்பது.

கணவனோ/மனைவியோ/உடன் பிறப்போ, கீழே வேலை செய்பவர்களோ,  யாராவது நமக்குத் தவறு செய்தால்,  அவர்கள் மேல் எரிந்து விழாமல், அவர்களை திட்டாமல், வெறுக்காமல் (மனதளவில்) பொறுமை காப்பது.  அதுவும் ஒரு வித பழக்கம்.

தனக்கு வந்த துன்பத்தைக் தாங்கிக் கொள்வது.

மற்றவர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது.

இது இரண்டும் தான் தவம் என்கிறார் வள்ளுவர்.

பாடல்


உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு


பொருள்


உற்றநோய்  = தனக்கு வந்த துன்பத்தை (நோய் = துன்பம்)

நோன்றல்  = பொறுத்துக் கொள்ளுதல்

உயிர்க்கு = மற்ற உயிர்களுக்கு

உறுகண் = துன்பம்

செய்யாமை =செய்யாமல் இருப்பது

அற்றே தவத்திற்கு உரு = அது தான் தவத்தின் அடையாளம்

அவ்வளவுதான் தவம் என்பது.தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல். பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது. அவ்வளவு தான்.

அடுத்த முறை

- நீங்கள் நிற்கும் வரிசை மெல்லமாகப் போனால்
- போக்கு வரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டால்
- ஏதாவது விடயத்தில் கால தாமதம் நிகழ்ந்தால்
- சிறு உடற் வலி ஏற்பட்டால்
- மற்றவர்கள் நாம் நினைத்தபடி செய்யாமல் இருந்தால்

கோபப் ப்டாமல் அமைதி காக்க. அப்படி இருப்பதே பெரிய தவம்.

தவம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று நினையுங்கள்.


கொஞ்சம் உடலையும் மனதையும்  பழக்கப் படுத்துங்கள். திடீரென்று ஒரு துன்பம் வந்தால்  அதை தாங்க முன்னமேயே பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.

துன்பத்தைத் தாங்க பயிற்சி வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_12.html

Friday, July 10, 2020

நளவெண்பா - திருமால் துதி

நளவெண்பா - திருமால் துதி 


செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை 


என்று ஒரு குறள் இருக்கிறது.

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த குறள் மேல் ஒரு சந்தேகம் உண்டு.

ஏன் செவிச் செல்வம் பெரிய செல்வம் என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர். காதை விட கண் தானே சிறந்தது? கண்ணால் எவ்வளவு காண முடியும். கண்ணால் காண்பதை எல்லாம் சொல்லில் வடிக்க முடியுமா?

ரொம்ப வேண்டாம், ஒரு மலர்ந்த ரோஜா மலரைப் பார்க்கிறோம். அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி புரிய வைக்க முடியுமா? கண்ணால் எவ்வளவோ வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாமே. பின் ஏன் காதை பெரிதாகச் சொன்னார்?

இன்று வள்ளுவர் நம்மிடம் இல்லை. அவர் "சொல்வதை'  நம்மால் கேட்க முடியாது. ஆனால், அவர் சொன்னதை நம்மால் வாசிக்க முடியும். இன்றும், குறளைப் படித்தது நாம் பயன் பெறுகிறோம். அப்படி இருக்க செவிச் செல்வம் எப்படி பெரிய செல்வமாக முடியும்?

இன்று நாம் கணனியில் ( கம்ப்யூட்டர்) எவ்வளவோ பார்த்து தெரிந்து கொள்கிறோம்.  தொலைக் காட்சியில் எவ்வளவு விடயங்கள் வருகிறது?

அந்தக் காலத்தில் இவை எல்லாம் இருந்திருக்காது. எனவே, வள்ளுவர்  செவிச் செல்வத்தை பெரிதாக சொல்லி இருப்பாரோ?

இல்லை.

மகான்களுக்கு, உண்மைகள் கேட்டது. அவர்கள் தவம் செய்த போது அரிய பெரிய உண்மைகள் அவர்களுக்கு கேட்டது. யாரும் எழுதிக் கொண்டு வந்து  காட்டவில்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நினைக்கலாம்.

நம் மதத்தில் மட்டும் அல்ல, பிற மதங்களிலும் உண்மைகள் சொல் வடிவாகாவே வெளிப்பட்டு இருக்கிறது.

"ஆதியில் சப்தம் இருந்தது. அது தேவனோடு இருந்தது. தேவன் சப்த வடிவமாக இருந்தார்" என்று கிறித்துவம் பேசுகிறது.

முகமது நபிக்கு குரான் சொல்லப்பட்டது. அவர் எழுதிக் கொண்டு வரவில்லை. அவருக்கு அவை கேட்டன.

நம்முடைய வேதங்களுக்கு "சுருதி" என்று ஒரு பெயர் இருக்கிறது. சப்த வடிவம்.

தமிழிலே வேதத்துக்கு இரண்டு பெயர்கள் சொல்கிறார்கள்

"எழுதா மறை", "எழுதா கிளவி" (கிளவி என்றால் சொல். இரட்டைக் கிளவி)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். - "எழுதாமறை"யின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

என்பார் அபிராமி பட்டர். 

எழுதாத  ஒன்று எப்படி தலை முறை தலை முறையாக காக்கப் பட்டு வந்திருக்கிறது?

ஒருவர் சொல்லி, மற்றவர் கேட்டு, பின் அவர் சொல்லி, அடுத்தவர் கேட்டு  கர்ண   பரம்பரையாக வந்திருக்கிறது. 

நமது வேதங்கள் ரிஷிகளுக்கு கேட்டது.  அவர்கள் கேட்டதை அவர்கள் தங்களுடைய  சீடர்களுக்குச் சொன்னார்கள். பின் அந்த சீடர்கள், தங்களின்  சீடர்களுக்குச் சொன்னார்கள். இப்படி குரு பரம்பரையாக இந்த வேதங்கள்  இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. 

யோசித்துப் பார்த்தால் பிரம்மிப்பாய் இருக்கிறது. 

இவற்றை காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, ஒரு தலை முறையில் இருந்து அடுத்த  தலை முறைக்கு அதை கொண்டு செல்வதற்கென்றே ஒரு சமுதாயமே பாடு பட்டு இருக்கிறது. 

இதில் நடுவில் யாராவது, "எனக்கு வேற நல்ல வேலை இருக்கிறது. இதைப் போய்  எவன் படிப்பான் " என்று ஒரு தலை முறை சொல்லி இருந்தாலும்,  அந்தத் தொடர்பு அறுந்து போய் இருக்கும். அந்த வேதம்  நமக்குக் கிடைக்காமலேயே போய் இருக்கும். 

இவற்றை காலம்  காலமாக காப்பாற்றிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் நாம் நன்றி  சொல்ல கடமை பட்டவர்கள் ஆவோம். 

இப்போது புரிகிறதா ஏன் செவிச் செல்வம் உயர்ந்தது என்று. 

மேலும்,  சில ஒலி அளவுகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. 

தமிழில் ஒரு க, ஒரு ப தான் இருக்கிறது. 

ஹிந்தியில், சமஸ்க்ரிதத்தில் மூன்று இருக்கிறது.  மூன்று போதும் என்று யார் சொன்னது?  இந்த மூன்று சப்தங்களுக்கு வெளியேயும், நடுவிலும் ஆயிரம் சப்த்தங்கள் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் ஒரு எழுத்து வடிவம் தர முடியாது.  

சரி, எழுத்து வடிவம்  இல்லாவிட்டால்,   இருக்கின்ற எழுத்தை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா   என்றால், சப்தம் மாறி விடும். சப்தம் மாறினால் பொருள் மாறி  விடும். 

வேதம் உண்மையின் வெளிப்பாடு. அது சப்த ரூபமாக சிலருக்கு கேட்டு அவர்  சொல்லி, அப்படியே வந்திருக்கிறது. 

எனவே, வேதம் என்பது யாரும் உட்கார்ந்து எழுதிய நூல் அல்ல.  

சரி, எதுக்கு இவ்வளவு பெரிய அறிமுகம்? நளவெண்பாவுக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம்? 

பாடல் கீழே இருக்கிறது.

அதன் பொருளை நாளை பார்ப்போமா?


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_10.html

Sunday, July 5, 2020

திருக்குறள் - அருளாள்வாற்கு இல்லை

திருக்குறள் - அருளாள்வாற்கு இல்லை 


பெரும்பாலானோர் இறைவனிடம் என்ன வேண்டுவார்கள்?

"என்னை காப்பாற்று...எனக்கு எந்த வித ஆபத்து இல்லாமலும் பார்த்துக் கொள். எல்லாவற்றிற்கும் மேலாக என் பிள்ளைகளுக்கு ஒரு துன்பமும், ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்" என்பதுதானே.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, அது தானே விருப்பமாக இருக்கும்.

அது நடக்குமா ?

எத்தனை உயிர்களை கொல்கிறோம். அத்தனை உயிர்களை கொன்று விட்டு,
என் பிள்ளைகளை காப்பாற்று என்றால் அதில் என்ன ஞாயம் இருக்கிறது?

கொலையா? நானா? அப்படியெல்லாம் ஒன்றுர் செய்வது இல்லையே என்று நாம் நினைக்கலாம். செய்யாமலா இருக்கிறோம்?

கோழி, ஆடு, மாடு, என்று அடித்துத்  தின்ன வேண்டியது.  சிக்கன் 65, சிக்கன் லாலி பாப்,  சில்லி சிக்கன், என்று வகை வகையாக விலங்குகளை கொன்று தின்பது.

அப்புறம், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் துன்பம் வரக்கூடாது என்று விரும்புவது....


"இல்லையே, நான் மாமிசம் சாப்பிடுவது இல்லையே...உயிர் கொலை செய்வதே இல்லை " என்று கூறினால் ...

சீனி டப்பாவில் எறும்பு வந்தால், வெயிலில் கொண்டு கொட்டுவது. அடுப்பில் தூக்கி வைத்து அவற்றைக் கொல்வது.

மேலே ஊறும் எறும்பை நச் சென்று அடித்துக் கொல்வது.

இதெல்லாம் பெரிய கொலையா ?

கொலை செய்வதை விட்டு விடுவோம்.

வீட்டில் வேலை செய்யும் ஆட்களை, நமக்கு கீழே வேலை ஆட்களை மனம் புண் படும்படி பேசுவது...எவ்வளவு வலிக்கும் என்று யோசித்துப் பார்ப்பது இல்லை.

மனைவியை, பிள்ளைகளை, கணவனை, வீட்டில் உள்ள பெரியோர்களை எடுத்து எறிந்து  பேசுவது. மனம் நோகும்படி பேசுவது.

மனதில் அன்பில்லாமல், அருள் இல்லாமல் நடந்து கொள்வது...பின் எனக்கு ஒரு துன்பமும் வரக் கூடாது  என்று விரும்புவது சரிதானா?

மற்ற உயிர்களை வதைத்து விட்டு, என் உயிருக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைப்பது  எந்த ஊர் ஞாயம்.?


பாடல்

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை


பொருள்

மன்னுயிர் = நிலைத்து நிற்கின்ற உயிர்களை

ஓம்பி = போற்றி

அருளாள்வாற்கு  = அவற்றின் மேல் அன்பு செய்பவர்களுக்கு

இல்என்ப = இல்லை என்று சொல்லுவார்கள்

தன்னுயிர் = அவர்களுடைய உயிர்

அஞ்சும் வினை = அஞ்சுகின்ற செயல்

இந்த உலகில் உடல் தான் பிறக்கும், இறக்கும். உயிர் என்றும் நிலைத்து நிற்பது. எனவே தான் மன்னுயிர் என்றார்.

மேலும்,

உயிர் என்று சொன்னதன் மூலம், மனிதர்களை மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், போன்ற உயிர்களையும் சேர்த்துச் சொன்னார்.

சரி ஏதோ மாமிசம் சாப்பிடுவது இல்லை என்றால் போதுமா என்றால் போதாது.

"ஓம்பி அருள் ஆள்வார்க்கு"

உயிர்களை போற்ற வேண்டும். நம் உயிர் போலத்தான் மற்ற உயிர்களும் என்று  அவற்றை போற்ற வேண்டும். அவற்றின் மேல் அருள் கொள்ள வேண்டும்.

தெருவில் செல்லும் நாய் மேலும் அருள் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால், என்ன நடக்குமோ, எப்போது நடக்குமோ என்ற பயம் வராது.

அந்த பயம் வரமால் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

உயிர் கொலை செய்யக் கூடாது, மற்ற உயிர்களை போற்றி அவற்றின் மேல்  அருள் செய்ய வேண்டும்.

அடுத்த முறை மாமிசம் உண்ணும் போது நினைக்க வேண்டும். இது என் உயிருக்கு அச்சத்தைத் தரப் போகிறது  என்ற எண்ணம் வர வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_5.html

Friday, July 3, 2020

திருக்குறள் - அறிவினுள் எல்லாம் தலை

திருக்குறள் - அறிவினுள் எல்லாம் தலை


பாடல்

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

பொருள்

அறிவினுள் =  அறிவினிற்குள்

எல்லாம் =  அனைத்திலும்

தலைஎன்ப = தலை சிறந்தது என்று சொல்லுவார்கள்

தீய = (தமக்கு)  தீமை

செறுவார்க்கும் = செய்தவர்களுக்கும்

செய்யா விடல் = மறு தீங்கு செய்யாமல் விடுவது

அறிவினில் எல்லாம் தலையாய அறிவு எது என்றால், நமக்கு தீமை செய்தவர்களுக்கும் தீமை செய்யாமல் விடுவது என்று சொல்லுவார்கள்.

ஹை, இது என்ன நல்ல போங்காக இருக்கிறதே. நமக்கு ஒருவன் தீமை  செய்தால், பதிலுக்கு அவனுக்கு தீமை செய்யாவிட்டால் அவன் நமக்கு மீண்டும் மீண்டும் தீமை செய்து கொண்டே இருப்பானே ...அவனை தண்டிக்காமல் விடுவது எப்படி  சிறந்த அறிவாகும்?  வள்ளுவர் சொல்லுகிறார்  என்பதற்க்காக ஏற்றுக் கொள்ள முடியுமா ?

செல்லாது ...செல்லாது ....வள்ளுவரே தீர்ப்பை மாத்திச் சொல்லும் என்று நாம் சொல்லலாம்  வள்ளுவர் பிழை செய்வாரா.

ஒருவன் தனக்குத் தானே தீமை செய்து கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம், அவனை அறிவுள்ளவன் என்று நாம் ஏற்றுக் கொள்வோமா?

எரிகிற தீக்குள் விரலை விடுகிறான், மின்சாரம் செல்லும் கம்பியை கையால் பிடிக்கிறான்,  தினம் நாலைந்து சிகரெட் பெட்டியை ஊதித் தள்ளுகிறான்...இப்படி எல்லாம்  ஒருவன் செய்தால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?  சரியான முட்டாளா இருப்பான் போல் இருக்கே என்று தானே நினைப்போம்.

அறிவு இருந்தால் என்ன செய்ய வேண்டும்? நமக்கு வரும் துன்பத்தை நீக்கி நமக்கு  இன்பம் தர வேண்டும். அது தானே அறிவின் வேலை?

மீண்டும் குறளுக்குப் போவோம்.

ஒருவன் நமக்குத் தீமை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

முதலில் என்ன நடக்கும், "எனக்கு இப்படி செய்து விட்டானே..." என்று அவன் மேல் கோபம் வரும். எப்போது கோபம் வருகிறதோ, அப்போதே மனதில் இருந்த சந்தோஷமும், சிரிப்பும் போய் விடும். கடு கடு என்று இருப்போம்.

இரண்டாவது, "எப்படியாது அவனுக்கு பதிலுக்குப் பதில் தீமை செய்ய வேண்டும் என்று பழி உணர்ச்சி பொங்கும்.  அது மனதை மேலும் வன்மையாக்கும் .

எப்படி அவனுக்கு தீமை  செய்வது என்று சிந்திக்கிறோம். தீமை செய்தால் எப்படி மாட்டிக் கொள்ளாமல்  தப்பிப்பது என்று திட்டம் போடுகிறோம். மாட்டிக் கொண்டாலும், எப்படி வெளியே வருவது என்று மனம் வழி தேடும்.

இப்படி மிக ஆழமாக சிந்தித்து தீமை செய்வதால் தீமை பற்றிய அச்ச உணர்வு போய் விடுகிறது.

முன்பே கூறியது போல, தீவினையில் அச்சம் போய் விட்டால், பின் தீவினைகள் செய்வது  மிக எளிதாக போய் விடுகிறது.

இப்பிறப்பில் செய்த தீமை, இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கும் தொடர்ந்து வந்து துன்பம்   தரும்.

இப்படி இருமைக்கும் துன்பம் தரும் செயலை செய்வது அறிவான செயலா?

அவனோ நமக்கு இம்மைக்கு மட்டும் தான் துன்பம் செய்தான். நாம் ஒரு படி மேலே போய் நமக்கு மறுமைக்கும் துன்பம் தேடிக் கொள்கிறோம்.

மாறாக, அவன் செய்த தீவினையை மறுத்து அவனுக்கு நாம் பதில் தீவினை செய்யாமல் விட்டால்  , நமக்கு இருமைக்கும் துன்பம் வராது அல்லவா?  எனவே தான்  அதை

"அறிவினுள் எல்லாம் தலை" என்றார்.

நம்மை ஒரு  பெரிய சண்டியர் தெருவில் போகும் போது அடிக்கிறான். அவனுக்கு  நாம் பதில் தீமை செய்யாமல் விடுகிறேன் என்று சொல்வதில் என்ன பெரிய  அறிவு இருக்கிறது. அவனை நான் அடித்தால், அவன் பதிலுக்கு பத்துத் தரம் அடிப்பான்.

வள்ளுவர் ஒரு சொல்லை தேர்ந்து எடுத்துப் போடுகிறார்

'செய்யாது விடல்".

பதிலுக்கு தீமை நம்மால் செய்ய முடியும், இருந்தும் செய்யாமல் விடல் என்பதில் இருக்கிறது  அறிவு.

செய்ய முடியாவிட்டால், எங்கிருந்து "விடுதல்" வரும். .

"விடல்" என்றால் விட்டு விட வேண்டும். மனதுக்குள் கருவிக் கொண்டே இருக்கக் கூடாது.


அப்படி யாராவது வாழ்ந்து இருக்கிறார்களா? சும்மா சொன்னால் போதாது, நிரூபணம்  வேண்டும் அல்லவா?

அந்த நிரூபணத்தை நாளை பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_3.html

Thursday, July 2, 2020

திருக்குறள் - தீயினும் அஞ்சப்படும்

திருக்குறள் - தீயினும் அஞ்சப்படும் 


பாடல்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

பொருள்

தீயவை  = தீய செயல்கள்

தீய பயத்தலால் = தீமை தருவதால்

தீயவை = அத் தீய செயல்கள்

தீயினும் = தீயை விட

அஞ்சப் படும் = அஞ்சத் தகுந்தவை

எளிமையான குறள். நேரடியாக பொருள் விளங்கக் கூடியது.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

பலர், பல குற்றங்களை செய்கிறார்கள். அதாவது தீமைகளைச் செய்கிறாரகள். அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். நிறைய சொத்து சேர்த்து விடுகிறார்கள். பெரிய வீடு, கார், தோட்டம், வேலையாள், புகழ், அதிகாரம் எல்லாம் தூள் பறக்கிறது.  அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை.

தீயவை செய்கிறவன் நல்லாத்தான் இருக்கிறான்..இந்த வள்ளுவர் சொல்வதை எல்லாம் எப்படி  நம்புவது என்ற சந்தேகம் எழலாம்.

இந்த குறளுக்கு உரை எழுதிய பரிமேல் அழகர் சொல்கிறார்

"பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று"

என்று.

என்ன அர்த்தம்?

தீ இன்று கை வைத்தால் என்று தான் சுடும். இரண்டு மாதம் கழித்து சுடாது போன வருடம் எண்ணெய் சட்டியில் கை வைத்தாயே, அதற்கு இப்போது சுடுகிறேன் என்று ஒரு வருடம் கழித்து  சுடாது.

ஆனால், நாம் செய்த தீமை இருக்கிறதே, அது காலம் பார்த்து சுடும்.

இன்று சுட்டால் நம்மால் சமாளித்துக் கொள்ள முடியும். கையில் காசு இருக்கிறது.உடம்பில் தெம்பு இருக்கிறது.  இப்ப சுடாது. "பிறிதொரு காலத்து" என்கிறார்  பரிமேல் அழகர்.

வயதான காலத்தில்,  யாரும் இல்லாத தனிமையில், அங்கு வந்து சுடும். அப்போது சுட்டால் தான்  வலி தெரியும் என்பதால்.

இல்லையே. கடைசிவரை நல்லாத்தான் இருந்து செத்தான். நாடே கூடி அவனுக்கு  மரியாதை செய்ததே. எங்கே அவன் செய்த தீமைகள் அவனை சுட்டன என்று  நாம் சந்தேகப் படலாம்.

"பிறிதோர் தேசத்தில், பிறிதொரு உடம்பில்" என்கிறார் பரிமேல் அழகர்.

இந்த உடம்பில், இந்த நாட்டில், சுட வேண்டும் என்று இல்லை.

நாம் எவ்வளவோ பேரை பார்க்கிறோம்.

ஆட்களை விடுங்கள். கசாப்பு கடைக்கு கோழி ஆடெல்லாம் எப்படி கொண்டு போவார்கள் தெரியுமா?  கொண்டு போய் துள்ள துடிக்க வெட்டுவார்கள். துடிக்க துடிக்க கழுத்தை அறுப்பார்கள்.

போர் மேகங்கள் எப்போதும் சூழ்ந்து இருக்கும் நாட்டில் பிறந்து,  எப்போது தலையில்   குண்டு விழுமோ, இந்த பிள்ளைகளை எப்படி காப்பாற்றப் போகிறோமோ  என்ற தவிப்பில் வாழ்பவர்கள் எத்தனை பேர்.

ஏன் அந்த துக்கம்?

முன்பு செய்த தீவினை.

கண் முன்னால் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகளை பார்க்க நேர்வது. 

இங்கே தப்பி விடலாம் என்று எண்ணி தீவினை செய்யக் கூடாது.

சாட்சிகளை வாங்கிவிடலாம், சட்டத்தை வாங்கி விடலாம் என்று இறுமாந்து இருக்கக் கூடாது.

தேசிய நெடுஞ்சாலையில் அடி பட்டு குத்து உயிரும் குலை உயிருமாய் கிடக்கும் நாய்களை பார்க்கும் போது   நினைவு வர வேண்டும். என்று செய்த தீவினையோ,  இன்று வந்து மூண்டது என்று.

யாரும் தப்ப முடியாது.

நல்லதே செய்து கொண்டிருப்பான். வறுமை  வாட்டும்.ஏன்? முன்பு செய்த தீ வினை.

இரண்டாவது,

தீயை தொட்டால், அது தொட்டவனை மட்டுமே சுடும். ஆனால் தீவினை இருக்கிறதே அது  சுற்றத்தையும் நட்பையும் சுடும்.

ஒருவன் களவாடி பொருள் சேர்கிறான். ஒரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான்.  தண்டனை அவனுக்கு மட்டுமா?

அவன் மனைவிக்கு இந்த சமுதாயத்தில் என்ன அங்கீகாரம் கிடைக்கும்? அவன் மகனுக்கு  என்ன மரியாதை கிடைக்கும்? அவன் மகளுக்கு எப்படி திருமணம் ஆகும்?  அவன் பெற்றோர்கள்  வெளியே தலை காட்ட முடியுமா?

எனவே தான் தீவினை , தீயை விட அஞ்சப்படும் என்றார்.

மற்றவன் எப்படியோ போகட்டும். நாம் செய்யும் தீவினை நம்மை வந்து சேரும்  என்பதால், தீவினை செய்யாமல் இருப்பது நலம்.

அவன் செய்கிறானே, நல்லாத்தானே இருக்கிறான் , நானும் செய்தால் என்ன  என்று நினைப்பவர்கள்  , அவர்கள் வழி செல்லட்டும்.

நாம் நல் வழியில் செல்வோம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_2.html


Wednesday, July 1, 2020

வில்லி பாரதம் - கண் மலரில் கை படாதோ ?

வில்லி பாரதம் - கண் மலரில் கை படாதோ ?



உறவுகளுக்குள்ளும், நட்பினிலும் சில சமயம் சிக்கல்கள் வந்து விடுகின்றன. உணர்ச்சி வேகத்தில் ஏதோ சொல் வந்து விழுந்து விடுகிறது அல்லது செயல் நிகழ்ந்து விடுகிறது.

அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அந்த உறவும் நட்பும் அற்றுப் போய் விடும்.

சரி சரி என்று ஏற்றுக் கொண்டு போகப் பழக வேண்டும்.

பதிலுக்கு பதில் சொல்வது, செய்வது என்று இருக்கக் கூடாது.

சில சமயம் தவறி நம் விரல் நம் கண்ணில் பட்டு விடுகிறது. வலி தான். கண் கலங்கித்தான் போகிறது. அதற்காக நாம் விரலை வெட்ட முடியுமா?

நம்மையும் அறியாமல் நம் பல் நம் நாக்கை நறுக்கென்று கடித்து விடுகிறது. என்ன செய்ய. சில சமயம் இரத்தம் கூட வரும். "என் நாக்கையா கடித்தாய்" என்று அந்தப் பல்லை பிடுங்கி வீச முடியுமா?

அது போல நண்பர்களும், உறவினர்களும் சில சமயம் நமக்குத் தவறு இழைத்து விடலாம். மன்னித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வனவாசம், அஞ்ஞாத வாசம் எல்லாம் முடிந்த பின் பாண்டவர்கள் கௌரவர்களிடம் கண்ணனை தூது அனுப்புகிறார்கள்.

அப்போது, தர்மன் சொல்கிறான்.

"கௌரவர்கள் செய்தது தவறுதான். பாஞ்சாலியின் துகிலை பற்றியது தவறுதான். என்ன செய்ய. சில சமயம் கண்ணில் கை படுவது போல  நிகழ்ந்தது அது.  நாங்கள் ஒருவருக்குள் ஒருவர். என் கண்ணில் என் கை பட்டால்  என் விரலை நான் வெட்டுவேனா. அது போல அவன் மேல் கோபித்து சண்டை போட வேண்டாம். சமாதானமாகப் போய் விடலாம்"

என்கிறான்.

பாடல்


'உரிமையுடன் தம்பியர் அன்று, உணர்வு அறியாமையின்,
                  அவைக்கண் உரைத்த மாற்றம்
பரிபவமோ? கேட்டோர்க்குப் பரிபவம் என்பது பிறரால்
                  பட்டால் அன்றோ?
கருதில், இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? கண் மலரில்
                  கை படாதோ?
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே!' என
                  மொழிந்தான்-புகழே பூண்பான்.

பொருள்


'உரிமையுடன் = உரிமையுடன் (பகையினால் அல்ல)

தம்பியர் அன்று = கௌரவர்கள் அன்று

உணர்வு அறியாமையின் = உணர்வு அல்லாமல்

அவைக்கண் = அரசவையில்

உரைத்த மாற்றம் = சொன்ன சொற்கள்

பரிபவமோ? = அவமானமா?

கேட்டோர்க்குப் = கேட்பவர்களுக்கு (அதாவது நமக்கு)

பரிபவம் என்பது  = அவமானம் என்பது

பிறரால் = நமக்கு உறவு அல்லாத பிறரால்

பட்டால் அன்றோ? = வருவது அன்றோ

கருதில் = இதை கருத்தில் கொண்டால்

இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? = இதை புரிந்து கொண்டால், இது எல்லோருக்கும் பொருந்தும் என்பது புரியும்

கண் மலரில் = கண்ணின் மேல்

கை படாதோ? = கை பட்டு விடாதா ?

பொரு தொழிலும் = பொருதல் சண்டை பிடித்தல். சண்டை பிடிக்கும் தொழில்

கடை நிலத்தில் கிடந்ததே!'  = கடைசியாக வருவது

என மொழிந்தான் = என்று கூறினான்

புகழே பூண்பான். = புகழை மட்டுமே அடைபவன்

இந்தப் பாட்டில் சில விடயங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

நாம் படிப்பது நமக்கு பயன் தர வேண்டும். சும்மா படித்து கொண்டே போவது. எவ்வளவு நல்ல நூல்களை படித்தாலும் வாழ்வில் ஒரு துளி கூட மாறாமல் அப்படியே செல்வது என்பது அறிவீனம்.

"அதெல்லாம் படிக்க நல்லா இருக்கும். நடை முறைக்கு சாத்தியம் இல்லை " என்று செக்கு மாடு மாதிரி பழைய வாழ்க்கையிலே சுத்தி சுத்தி வரக் கூடாது.

"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று படித்து இருக்கிறோம்.

குற்றம் பார்க்காமல் இருக்கிறோமா? பின் படித்ததின் பயன் என்ன?

தர்மன் அதை நடைமுறை படுத்திக் காட்டுகிறான்.

தனக்கும் தன் தம்பிகளுக்கும் எவ்வளவோ துன்பம் செய்து இருந்தாலும், அது கை விரல் கண்ணைக் குத்துவது மாதிரித்தான் என்று சொல்கிறான். கோபமே இல்லை.

இரண்டாவது,

"இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ?"

இது கௌரவர்களுக்கு மட்டும் அல்ல, எல்லோரும் நம் சொந்தம்தான்.  அப்படி   நினைத்து விட்டால், பின் யார் நம்மை அவமானம் செய்ய முடியும்?  சொல்பவன் அல்லது செய்பவன்  மற்றவன் என்று நினைத்தால்தானே கோபம் வரும்,  பகை வரும்..எல்லோரும் ஒரு குடும்பம் என்று நினைத்து விட்டால் பின் எங்கிருந்து அவமானம் வரும்.

இன்றைய சிக்கல் என்ன என்றால், பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி, உடன் பிறப்புகள் ஏதாவது சொன்னால் கூட தவறாக எடுத்துக் கொண்டு பகைமை பாராட்டும் ஒரு உலகிற்குள் வந்து விட்டோம் நாம்.

தர்மன், இந்த உலகத்தில் எல்லோரும் என் குடும்பம் தான். அவர்கள் சொன்னால் என்ன , செய்தால் என்ன என் தம்பிதானே என்று நினைக்கும் பக்குவத்துக்கு வந்து விட்டான்.

நம்மால் அந்த அளவு முடியாவிட்டாலும், நெருங்கிய சொந்தத்திற்குள்ளாவது  நாம் இதை கடை பிடிக்க முயல வேண்டும்..

மூன்றாவது,


"பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே"

சிக்கல் என்று வந்து விட்டால் சாம, தான, பேத , தண்டம் என்று சொல்லப் படும் நான்கு உபாயங்களில், தண்டம் அதாவது தண்டனை, சண்டை என்பது  நான்காவதாக, கடைசியில் வருவது. முதலில் சமாதானத்தை  செய்ய முயல்வோம்  என்கிறான்.

படித்ததை செயல் வாழ்க்கையில் கடை பிடிக்கிறான்.

நான்காவது,


"உரிமையுடன் தம்பியர் அன்று"


அவர்கள் செய்தது  கோபத்தால்,பொறாமையால். ஆனால் தர்மன் சொல்வதோ, "தம்பி என்ற உரிமையில் அப்படி செய்து விட்டார்கள்" என்று பெருந்தன்மையோடு  பார்க்கிறான். "சொன்னது யாரு, கணவன் தானே / மனைவி தானே/ பெற்றோர் தானே/ நம் பிள்ளை தானே...அவர்களுக்கு இல்லாத உரிமையா ...அவர்கள் என்னோடு இல்லாவிட்டால் வேறு யாரோடு சண்டை போடுவார்கள் " என்று நினைக்கும் பரி பக்குவம் வேண்டும்.

ஐந்தாவது,

உரிமை என்றால் ஏதோ நல்லது செய்வதற்கு மட்டும் தான் உரிமை என்று அல்ல. சில சமயம் கோபிக்கவும், அதனால் சில பல சொற்கள் வந்து விழுவதும், செயல் நிகழ்வதும் கூட உரிமையால் தான்.

ஆறாவது

"உணர்வு அறியாமையின்"

குழந்தைக்கு பல்  வளரும் போது  நம் கை விரலை இழுத்து வாயில் வைத்து  கடித்து விடும். கடிப்பது மட்டும் அல்ல, கடித்து விட்டு சிரிக்கவும் செய்யும்.  அது வலிக்கத்தான் செய்யும். அதற்காக குழந்தையை அடிக்க முடியுமா?  "நீ என் விரலை கடித்தாய் அல்லவா,  பார் பதிலுக்கு நான் உன் விரலை கடிக்கிறேன்" என்று  குழந்தையின் விரலை நாம் எடுத்துக்  கடிக்க முடியுமா?

நமக்கு வலிக்கும் என்று குழந்தைக்குத் தெரியாது. அதுக்கு ஈறு உறுத்தும். எதையாவாவது   கடிக்கும். தெரியாமல் செய்து விடும்.

அது போல, நம் சுற்றத்தார் நமக்கு ஏதாவது தவறு செய்தால், "தெரியாமல் செய்து விட்டார்கள் " என்று நினைத்து அதை பெரிது படுத்தக் கூடாது.

இதெல்லாம் வாழ்க்கையில் நடைமுறை படுத்த வேண்டும்.

இல்லை என்றால், பாடவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த குடும்பப் பகையை  அறிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? என்றோ நடந்த குடும்பச் சண்டை.  அதை ஏன் வேலை மெனக்கெட்டு படிக்க வேண்டும்?

கதையாகப் படிக்கக் கூடாது.

வாழ்க்கைப் பாடமாக படிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post.html