Tuesday, July 13, 2021

திருக்குறள் - இல்வாழ்வான் என்பான் துணை

 திருக்குறள் - இல்வாழ்வான் என்பான் துணை


இல்லறம் என்பது மிகப் பெரிய பொறுப்பு என்பது வள்ளுவம் காட்டும் நெறி.  ஒரு பெண்ணும், ஆணும் இணைந்து நடத்தும் இல்லறம் என்பது ஒரு சமுதாய பொறுப்பாகவே  காணப்பட்டது.  


முதல் குறளில் பிரமச்சாரிக்கும், வானப்ரஸ்தத்தில் உள்ளவர்களுக்கும், துறந்தவர்களுகும் அவர்கள் நல் வழியில் செல்ல துணை நிற்க வேண்டும் என்று பார்த்தோம். 


அடுத்தகாக, 


"துறந்தார்க்கும், ஏழ்மையில் உள்ளவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணை" என்கிறார். 


பாடல் 


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_13.html


(Please click the above link to continue)



துறந்தார்க்கும் = துறந்தவர்களுக்கும் 


துவ்வா தவர்க்கும் = வறுமையில் உள்ளவர்களுக்கும் 


இறந்தார்க்கும் = இறந்தவர்களுக்கும் 


இல்வாழ்வான் என்பான் = இல்லறத்தில் உள்ளவன் 


 துணை = துணை 


முந்தைய குறளில் துறந்தார் என்று கூறினாரே, மீண்டும் இந்தக் குறளில் ஏன் துறந்தார்? 


பரிமேலழகர் இல்லை என்றால் இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் நமக்கு பதில் கிடைத்து இருக்காது. 


பரிமேலழகர் கூறுகிறார்....


துறந்தார் என்பார், காக்கப்பட வேண்டியவர்களால் துறக்கப் பட்டவர்கள். பல குடும்பங்களில்,  காக்கப் பட வேண்டிய முதியவர்கள், காக்கப் படாமல் விடப் படுகிறார்கள். 


அவர்களை யார் காப்பாற்றுவது? அரசாங்கமா? சமுதாயமா? அல்லது அவர்களை ஏதாவது அநாதை ஆசிரமத்தில் விட்டு விடலாமா? 


வள்ளுவர் சொல்கிறார், இல்லறத்தில் இருப்பவன், அவர்களைப் போன்றவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.  இது நாலாவது கடமை. 


அடுத்தது, "துவ்வாதார்கு" 


துவ்வாதார் என்றால் வறுமை வயப்பட்டவர்.  அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். செல்வமும் வறுமையும் நம் கையில் இல்லை. சிறுக சிறுக சேர்த்து, கொஞ்சம் கடன் வாங்கி, வீடு வாங்கினால், சின்ன நில நடுக்கம் வந்தால் போதும், வாழ் நாள் சேமிப்பு போய் விடும். பெரிய நோய் வந்தால், மருத்துவ செலவில் செல்வம் கரைந்து போகலாம். களவு போகலாம். 

ஏதோ ஒரு காரணத்தால் வறுமையால் வாடுபவர்களை கை கொடுத்து தூக்கி விட வேண்டியது இல்லறத்தானின் கடமையாகும்.  அவர்களின் குடும்பத்தை காத்து, இருக்க இடம் கொடுத்து, அவர்கள் தங்கள் காலில் நிற்கும் வரை உதவி செய்ய வேண்டும். 


மூன்றாவது, "இறந்தார்க்கு".  இறந்தவருக்கு எவ்வாறு உதவி செய்வது? ஒருவன் அனாதையாக இறந்து போனால், அவன் எந்த ஜாதி, மதம், குலம் என்று பார்க்க வேண்டியதில்லை. அவனை நல்லடக்கம் செய்து, அவனுக்கு செய்ய வேண்டிய நீர்க் கடன் செய்ய வேண்டியது இல்லறத்தானின் கடமை. 


மீண்டும், அனாதை பிணம் என்று விட்டுவிடக் கூடாது. அல்லது அது அரசாங்கத்தின் வேலை என்றும் விட்டு விடக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார். 


இராமாயணத்தில், ஜடாயு என்ற பறவைக்கு இராமன் நீர்க் கடன் செய்கிறான். 


காக்கப் படவேண்டியவர்களால் கை விடப் பட்டவர்கள் 

வறுமையில் வாடுபவர்கள் 

துணையின்றி இறந்தவர்கள் 


இந்த மூன்று பேருக்கும் துணையாக இருக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை. 


யோசித்துப் பாருங்கள்.  இன்று சோசியலிசம், கம்யுனிசம் போன்ற சிந்தாதங்கள் என்ன சொல்கிறன. இருப்பவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்கின்றன.  


இல்லறம் என்பது எவ்வளவு பெரிய கடமை, பொறுப்பு, முக்கியத்வம் வாய்ந்தது என்று பாருங்கள். 


ஒரு தனி மனிதன், குடும்பம், சமுதாயம், நகரம், நாடு, உலகம் என்று அது விரிந்து கொண்டே போகிறது. 


இது வரை ஆறு கடமைகளை சொல்லி இருக்கிறார். 






Monday, July 12, 2021

திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 2

திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 2


(இதன் முதல் பகுதியை கீழே உள்ள தளத்தில் காணலாம்

)



பாடல்


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


பொருள்




(please click the above link to continue reading)


இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்


இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு


நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக


நின்ற துணை = துணையாக


"இயல்பு உடைய மூவர்க்கும்" என்றால் யார் யார் அந்த மூவர்?


நாம் முன்பே சிந்தித்தபடி தனி மனித வாழ்கையை நம்மவர்கள் நான்கு கூறுகளாக பிரித்துக் கொள்கிறார்கள். 


பிரமச்சரியம் 
இல்லறம் 
வானப்ரஸ்தம் 
துறவறம் 


இது பற்றி முன்பு பலதடவை சிந்தித்து விட்டபடியால், மேலே செல்வோம். 


இதில் இல்லறத்தில் வாழ்பவன் ஏனைய மூவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்கிறார். 

யார் அந்த மூவர் ?


பிரம்மச்சாரி 
வானப்ரஸ்தத்தில் இருப்பவன் 
துறவறம் கொண்டவன் 


இந்த மூவருக்கும் உதவி செய்வது ஒரு இல்லறத்தானுக்கு கடமை. 



நீங்கள் இல்லறத்தில் ஈடு பட்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் வீட்டுக்கு வந்து ஒரு ஏழை மாணவன் உதவி கேட்க்கிறான். பள்ளிக்கு பணம் கட்ட வேண்டும், பரிட்சைக்கு பணம் செலுத்த வேண்டும், புத்தகம் வாங்க வேண்டும் என்று உதவி கேட்கிறான். 



அவனுக்கு உதவி செய்வது என்பது உங்கள் சௌகரியத்தைப் பொறுத்தது அல்ல. அது உங்கள் கடமை. செய்தே ஆக வேண்டும். 



அதே போல ஒரு துறவி பசி என்று கேட்டால், அவனுக்கு உதவி செய்ய வேண்டியது இல்லறத்தானின் கடமை. 


இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு....யாரை நம்ப முடிகிறது இந்த உலகில்...பரிட்சைக்கு பணம் என்று வாங்கிக் கொண்டு போய் தண்ணி அடித்து விட்டு வருவான்,  சாமியார் என்ற பெயரில் பணம் கேட்டு அதை தவறான வழியில் செலவு செய்வான்...எப்படி இவர்களை நம்பி உதவி செய்வது என்ற கேள்வி எழலாம்.


இந்தச் சிக்கல் இன்றல்ல, அன்றே இருந்திருக்க வேண்டும். வள்ளுவர் அதற்கும் விடை தருகிறார். 



"இயல்பு உடைய மூவர்க்கும்" - இந்த மூன்று நிலைகளும் (பிரமச்சாரி போன்ற நிலைகள்) அவர்களுக்கு இயல்பாக அமைந்து இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை.  அதாவது, நாற்பது வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல், நான் பிரம்மச்சாரி, எனக்கு மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்றால் அது சரி அல்ல. கல்வி கற்கும் காலம் வரைதான் பிரம்மச்சாரி. அது இயல்பான நிலை. அதற்கு மேல் காதல் தோல்வி அது இது திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், அவனும் பிரம்மச்சாரிதான், ஆனால் அது இயல்பான ஒன்று அல்ல. 


அது போல, துறவறம் என்பது இயல்பாக அமைய வேண்டும். மூத்த மடாதிபதி அடுத்தவரை தேர்ந்து எடுப்பது இயல்பான துறவறம் அல்ல. 



பட்டினத்தார் போனாரே "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற வரியை படித்தவுடன், அது துறவறம். 



இயல்பான துறவிக்கு உதவி செய்ய வேண்டும். செயற்கை துறவிகளுக்கு அல்ல. 


இன்றெலாம் துறந்தவனிடம் அதிகம் இருக்கிறது. 



சரி, இந்த மூவருக்கும் உதவி செய்யலாம்....எவ்வளவு செய்வது? ஒரு கல்லூரி மாணவன் பைக் வாங்க வேண்டும் என்று உதவி கேட்கிறான், நண்பர்களோடு உல்லாசமாக  உணவு உண்ண, கேளிகைகளில் ஈடுபட பணம் கேட்கிறான்...கொடுக்க வேண்டுமா?


சாமியார் கார் கேட்கிறார், சொத்து பத்துகளை கேட்கிறார்...கொடுக்க வேண்டுமா?


"நல்லாற்றின் நின்ற துணை"


என்கிறார் வள்ளுவர். 



அப்படி என்றால், 

ஆறு என்றால் வழி. நல் + ஆறு = நல்ல வழி. 


நல்ல வழியில் அவர்கள் செல்ல உதவ வேண்டும். 


ஊதாரித்தனமாக செலவழிக்க, கூத்தடிக்க அல்ல. 



இதற்கு அற்புதமாக பரிமேலழகர் உரை எழுதி இருக்கிறார். 


"இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்"



"பசி, நோய், குளிர் முதலிய"...அதாவது மிகக் குறைந்த அளவு ....bare minimum என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல. 


பசி வந்தால் - உணவு கொடு 
நோய் வந்தால் மருந்து கொடு 
குளிர் வந்தால் - நல்ல உடை கொடு


அது போல குறைந்தபட்ச உதவியை செய்யச் சொல்கிறார்.  பைக் வாங்கவும், சினிமாவுக்குப் போகவும் உதவி செய்யச் சொல்லவில்லை. 



அதுவும் எதற்காக ?


"அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான்"


அவர்கள் அந்த ஒழுக்கங்களை தவறில்லாமல் கடைபிடிக்க உதவ வேண்டும். 



யாருக்குக் கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும், எதற்கு கொடுக்க வேண்டும், ஏன் கொடுக்க வேண்டும் என்று அனைத்தையும் ஒரு குறளுக்குள் அடக்கி விடுகிறார். 



சரி, இப்போது குறளை விட்டு வெளியே வருவோம். 



இன்று student loan என்பது எவ்வளவு பெரிய சுமையாக இளைய சமுதாயத்தின் மேல் அழுத்திக் கொண்டு இருக்கிறது.  அமெரிக்காவில், இந்த கடனின் சுமை கிட்டத்தட்ட 1.7 ட்ரில்லியன் டாலர் அளவு. 


இந்தியாவில் எத்தனையோ அறிவுள்ள குழந்தைகள் பணம் இல்லாத காரணத்தால் மேலே படிக்க முடியாமல், படிப்பை விட்டு விட்டு ஏதோ சில்லறை வேலை செய்யப் போகின்றன. அதில் எத்தனை மருத்துவ மேதைகள் இருப்பார்களோ, எத்தனை துன்பங்களை அவர்கள் தீர்த்து இருப்பார்களோ தெரியாது. 



இந்த சிக்கலுக்கு அன்றே விடை கண்டவர்கள் நம்மவர்கள். 


வயதான காலம் என்பது எவ்வளவு கொடுமையான காலம். முதியோர் இல்லங்கள் எத்தனை வந்து விட்டன.  காரணம் என்ன? 


இதற்கும் விடை இந்த குறளுக்குள் இருக்கிறது. 


ஒரு பக்கம் இளைஞர்கள் , மறு புறம் முதியவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டு செல்லும் பொறுப்பு இல்லறத்தில் இருப்பவனுக்கு இருக்கிறது. 


இல்லற தர்மத்தின் முதல் மூன்று பொறுப்புகளை சொல்லி விட்டார். 



இதுக்கு மேல என்ன இருக்கும்? இன்னும் எட்டு இருக்கா? அப்படி என்னதான் இருக்கும்? 



Tuesday, July 6, 2021

14 Lacs Page Views on this blog - thanks to all the readers

 




சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே

 சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே


இன்று ஒரு முதல் மந்திரியையோ, பிரதம மந்திரியையோ பார்க்க வேண்டும் என்றால் எவ்வளவு கடினம். 


அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும், காத்துக் கிடக்க வேண்டும், அனுமதி கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது. 


ஐந்து வருடம் ஆளும் அனுமதி பெற்ற இவர்கள் பாடே இப்படி என்றால் அந்தக் காலத்தில், ஒரு அரசனை சென்று காண்பது என்றால் எளிதான காரியமா?


சூரியனிடம் கேட்கிறாள் "என் கணவன் கள்வனா" என்று. சூரியனும் இல்லை என்று சொல்லி விட்டான். 


புறப்படுகிறாள் கண்ணகி. 


நடுவில் உள்ள கொஞ்சம் பக்கத்தை விட்டுவிட்டு அவள் பின் செல்வோம். 


அரண்மனை வாசலை அடைகிறாள். 


"வாயில் காப்போனே, வாயில் காப்போனே, அறிவு கொஞ்சம் கூட இல்லாமல், அறம் தப்பி, அரச முறை தப்பிய அரசனின் வாயில் காப்போனே, கையில் முத்து உள்ள ஒரு சிலம்பைஏந்திக் கொண்டு கணவனை இழந்த ஒரு பெண் வாயிலில் நிற்கிறாள் என்று போய் உன் அரசனிடம் சொல்" என்று ஆணையிடுகிறாள். 


பாடல் 


வாயி லோயே வாயி லோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே, என


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_6.html


(please click the above link to continue reading)



வாயி லோயே வாயி லோயே = வாயில் காப்பவனே வாயில் காப்பவனே 


அறிவறை போகிய = அறிவு முற்றும் இழந்த 


பொறியறு நெஞ்சத்து = அறம் இல்லாத நெஞ்சினோடு 


இறைமுறை பிழைத்தோன் = அரச தர்மம் பிழைத்தவன் 


வாயி லோயே = வாயில் காப்பவனே 


இணை = இணையான இரண்டில் ஒன்றை 


யரிச் சிலம்பொன் றேந்திய கையள் = முத்துகளை உடைய சிலம்பு ஒன்றை ஏந்திய கையோடு 


கணவனை யிழந்தாள்= கணவனை இழந்த அவள் 


கடையகத் தாளென்று = வாசலில் நிற்கிறாள் என்று சொல் 


என்கிறாள். 


வாயிலோயே வாயிலோயே என்று இரண்டு தரம் ஏன் அழைக்க வேண்டும் ?


அரசனுக்கே அறிவு இல்லை. அந்த அரசன் மாளிகை காவல் காரனுக்கு என்ன அறிவு இருக்கப் போகிறது என்று உணர்த்த அவனுக்கு இரண்டு தரம் சொல்கிறாள். எல்லாவற்றையும் இரண்டு இரண்டு தரம் சொல்கிறாள். 


சிலம்பை காலில் அணிவார்கள். இவளோ கையில் கொண்டு வந்திருக்கிறாள். அது அந்தக் காவல் காரனுக்கும் தெரியும். எங்கே அந்த மடையன் சொல்லமால் விட்டு விடுவானோ என்று நினைத்து, கையில் சிலம்போடு ஒரு பெண் வந்து இருக்கிறாள் என்று சொல் என்கிறாள்.  காலில் மற்றொரு சிலம்பு இல்லை. ஒரு சிலம்பு கையில் இருக்கிறது. 


காவலனிடம் அரசனைப் பற்றி கூறுக்கிறாள் ...."அறிவில்லாதவன், அறம் இல்லாதவன், அரச நீதி தப்பியவன்" என்று அடுக்குகிறாள். அரச குற்றமாவது மண்ணாவது என்று எல்லாவற்றையும் காலில் போட்டு மிதிக்கிறாள். 


ஒரு பெண்ணிடம் இவ்வளவு வசை வாங்கிய ஒரே அரசன் அந்தப் பாண்டியனாகத் தான் இருக்கும். 


அந்தக் காவலனுக்கு எப்படி இருந்திருக்கும் ?






திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 1


திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 1 


இல்லறதுக்குள் அடி எடுத்து வைக்கிறோம். 


இல்லறம் என்றால் மனைவி, பிள்ளைகள் என்று இல்லற நெறியில் வாழ்வது. 


அதற்கு, முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். 


எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்? 


இது என்ன கேள்வி? 


கல்யாணம் பண்ணிக் கொண்டால் மனைவியோடு (அல்லது கணவனோடு) உல்லாசமாக இருக்கலாம், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம், அவர்களை வளர்ப்பது ஒரு சுகம், நமக்கென்று ஒரு வீடு, மனைவி, மக்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கலாம் ...இதற்குத்தானே கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்பதே நம் விடையாக இருக்கும்.


இவை எல்லாம் சுய நலத்தின் பாற்பட்டது.


திருமணம், குடும்பம் என்பது அவ்வளவுதானா ? குடும்பத்திற்கு ஒரு சமுதாயப் பொறுப்பு என்று ஒன்றும் இல்லையா ?


இருக்கிறது.


ஒன்றல்ல இரண்டல்ல, பதினொரு பொறுப்புகளைச் சொல்கிறார் வள்ளுவர்.


திருமணம் என்பதே ஒரு மிகப் பெரிய பொறுப்பு என்கிறார்.


இந்தப் பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து கொள், இல்லையென்றால் திருமணம் உனக்கு ஏற்றது அல்ல என்கிறார்.


அது என்ன பதினொரு கடமைகள் ?


இருப்பது ஒண்ணே முக்கால் அடி, ஏழே ஏழு வார்த்தைகள் அதில் பதினொரு கடமையை எப்படிச் சொல்ல முடியும்?


மூன்று குறளாக பிரித்துக் கொண்டு, அந்த பதினொரு பொறுப்புகள் அல்லது கடமைகளைச் சொல்கிறார்.


முதல் குறள்


பாடல்


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


பொருள்



(please click the above link to continue reading)


இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்


இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு


நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக


நின்ற துணை = துணையாக


இந்தக் குறளின் விரிவு நம்மை வியக்க வைக்கும். 


ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் அவ்வளவு அர்த்தச் செறிவு 


அதிலும் பரிமேலழகர் செய்திருக்கும் உரை, நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. 


"இல்வாழ்வான் என்பான் "


"இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது."

என்பது பரிமேலழகர் உரை. 

இல்வாழ்வான் என்றால் இல்லத்தில் வாழ்பவன் என்று அர்த்தம். இல்லத்தில் வாழாமல் வேறு எங்கு வாழ்வது?  இதை ஏன் சொல்கிறார் வள்ளுவர் என்று பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 

இல் என்பது ஆகுபெயர். ஆகு பெயர் என்றால் ஒன்றின் பெயர் மற்றதிற்கு ஆகி வருவது. 

உலகம் பழிக்கும் அல்லது போற்றும் என்றால் உலகம் வந்து போற்றாது. உலகில் உள்ள மக்கள் போற்றுவார்கள் என்று அர்த்தம். இங்கே உலகம் என்பது உலகில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது. 

அது போல,

இல்வாழ்வான் என்றால் இல்லற நெறியின் கண் நின்று வாழ்வான் என்று பொருள். 

இல்லம் என்பது இல்லற நெறிக்கு ஆகி வந்தது. 

சரி.

"இல்வாழ்வான் என்பான்" என்றால் அது யாரைக் குறிக்கிறது? இல்லற நெறியில் வாழ்பவனையா அல்லது அப்படி ஒருவன் வாழ்கிறான் என்று சொல்பவனையா?

உதாரணமாக, இராமன் இல்லற நெறியில் வாழ்கிறான். முருகன் எல்லோரிடமும் போய் இராமன் இல்லற நெறியில் வாழ்கிறான் என்று சொல்கிறான். 

இங்கு, "இல்வாழ்வான் - என்பான்" என்ற இரண்டு சொல் இருப்பது போலத் தெரிகிறது அல்லவா? வாழ்பவன், வாழ்வான் என்று சொல்லுபவன். இதில் யாரைச் சொல்கிறார் வள்ளுவர். 


பரிமேலழகர் விளக்கம் செய்கிறார் 

"என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது"

என்கிறார். "என்பான்" என்ற சொல் வாழ்வான் என்ற வினைக்கு முதல் போல சொல்லப்பட்டாலும், அது அல்ல. வாழ்பவனைத்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார் என்று விளக்கம் செய்கிறார். 


அடுத்தது 

"இயல்புடைய மூவர்க்கு"

என்கிறார்.

யார் அந்த மூவர்?

நாளை சிந்திப்போமா?


Sunday, July 4, 2021

சிலப்பதிகாரம் - ஒள் எரி உண்ணும் இவ் ஊர்

சிலப்பதிகாரம் - ஒள் எரி உண்ணும் இவ் ஊர் 


"என் கணவன் கள்வனா ?" என்று சூரியனைப் பார்த்து கேட்கிறாள் கண்ணகி. 


கற்புடைய பெண்கள் கேட்டால், அவர்கள் ஆணையிட்டால் இயற்கையும் அடங்கும், பஞ்ச பூதங்களும் அடங்கும் என்று நம் இலக்கியங்களில் பல இடங்களில் வருகிறது. 


அவள் அப்படி கேட்டவுடன் , வானில் இருந்து ஒரு அசரீரி வருகிறது 


"உன் கணவன் கள்வன் அல்லன். உன் கணவனை கொன்று அறம் தவறிய இந்த ஊரை தீ உண்ணும்" 


என்கிறது. 


பாடல்  


கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் 

ஒள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_4.html


(please click the above link to continue reading)



கள்வனோ அல்லன் = கள்வன் அல்லன் 


கருங்கயற்கண் = கரிய மீனைப் போன்ற கண்களை உடைய 


மாதராய்  = பெண்ணே 


ஒள்ளெரி = ஒளி வீசும் எரி (தீ) 


யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல். = உண்ணும் இந்த ஊரை என்றதொரு குரல்.



இது முக்கியமான இடம். 


பாண்டிய மன்னன் தவறாக தீர்ப்புச் சொல்ல அதனால் கோவலன் மாண்டான். 


அது பாண்டிய மன்னனுக்கும், கண்ணகிக்கும் இடையே உள்ள வழக்கு. ஊர் என்ன செய்யும்? அதற்கு எதற்கு ஊரை எரிப்பானேன். 


கண்ணகி செய்தது சரி என்றால், நாளை யார் யாருக்கெல்லாம் அநீதி நடக்கிறதோ, அவர்கள் எல்லாம் ஊரை எரிக்க புறப்பட்டு விடுவார்கள். கண்ணகியே செய்தாள், அது தமிழர் பண்பாடு என்று. 


அது ஒரு புறம் இருக்க, இந்தப் பழங்கதை எல்லாம் எதுக்கு நாம் படிக்க வேண்டும். அந்த நேரத்துக்கு வேறு ஏதாவது உருப்படியாக படிக்கக் கூடாதா  என்றும்  ஒரு கேள்வி எழலாம். 


எல்லாவற்றிற்கும் பதில் இருக்கிறது. 


முதலாவது, ஒரு தலைவன் தவறு செய்தால் அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் நிர்வகிக்கும் நிறுவனத்தைப் பாதிக்கும். அரசன் என்றால் நாட்டை, ஒரு நிறுவனத்தின் தலைவர் (CEO) என்றால், அந்த நிறுவனத்தை, ஒரு குடும்பத் தலைவன் என்றால் அந்தக் குடும்பத்தை அது பாதிக்கும்.  


கணவன் இலஞ்சம் வாங்கி சிறை சென்றால், அது மனைவியை, பிள்ளைகளை, அண்ணன் தம்பியை, பெற்றோரை பாதிக்காதா?  


பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யக் கூடாது. தவறு செய்ய அஞ்ச வேண்டும். 


பாண்டிய மன்னன் வேண்டும் என்றே செய்த குற்றம் இல்லை. தெரியாமல் நிகழ்ந்த குற்றம். இருந்தும், அவன் நாடே அந்த குற்றத்துக்கு பலி ஆனது. 


அது மன்னனுக்கு மட்டும் அல்ல, குடும்பத் தலைவன்,குடும்பத் தலைவி என்று எல்லோருக்கும் பொருந்தும். 


இரண்டாவது, இந்த அறத்தை சொல்வது இந்த இலக்கியம். இது தெரிய வேண்டுமா இல்லையா. நான் தவறு செய்தால் அது என்னைத் தானே பாதிக்கும். பரவாயில்லை, என் பெண்டாட்டி பிள்ளைகள் நல்லா இருப்பார்கள் என்றால் நான் தவறு செய்கிறேன் என்று நினைக்கக் கூடாது. 


ஈன்றாள் பசிக் காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. 


மூன்றாவது, கண்ணகி எப்படி ஊரை எரிக்கலாம் என்ற கேள்விக்கு விடை, அவள் எரிக்கவில்லை. மன்னன் அறம் தவறியதால் இந்த ஊரை தீ தின்னும் என்று அசரீரி கூறுகிறது. ஊர் எரியப் போகிறது என்பது முன்பே முடிவாகிவிட்டது. எப்போது பாண்டியன் தவறு செய்தானோ, அப்போதே அந்த ஊரின் அழிவு முடிவாகிவிட்டது.  


கண்ணகி எரித்தால் என்பது ஒரு குறியீடு. ஊர் எரியப் போகிறது என்று முன்னமேயே முடிவாகிவிட்ட ஒன்று. 


நான்காவது, அறத்துக்கு, நீதிக்கு, எந்த அளவுக்கு நம் முன்னவர்கள் முக்கியத்வம் கொடுத்து இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. சரி, ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது. அதற்கு உரிய நட்ட ஈடை கொடுத்து காரியத்தை முடிப்போம் என்று நினைக்கவில்லை. 


பாண்டியன் தன் உயிரை கொடுத்தது மட்டும் அல்ல, அந்த நகரமே அந்த அநீதிக்கு பதில் சொல்ல வேண்டி இருந்தது. 


ஏதேனும் தவறு செய்யுமுன், இதை நினைத்தால் தவறு நிகழுமா? 



Friday, July 2, 2021

சிலப்பதிகாரம் - கள்வனோ, என் கணவன் ?

சிலப்பதிகாரம் - கள்வனோ, என் கணவன் ?


பாண்டிய மன்னனின் தவறான முடிவால், கோவலன் கொலையுண்டு போகிறான். 


அந்த துக்கச் செய்தியை ஆயர் குலப் பெண் ஒருத்தி கண்ணகியிடம் தெரிவிக்கிறாள். 


வாழ்க்கை பூராவும் மெளனமாக இருந்த அந்தப் பெண், புயல் என புறப்படுகிறாள். கண்ணகியின் கோபத்தின் உக்கிரத்தை வேறு எந்த காப்பியத்திலும் காண முடியாது. 


எத்தனையோ பலசாலிகள், அசுரர்கள், பெரும் வரம் பெற்ற சூரர்கள் என்று எவ்வளவோ பேரை பார்த்து இருக்கிறோம். யாருடைய கோபமும், அதன் வெளிப்பாடும் கண்ணகியின் கோபத்துக்கு உறை போடக் காணாது. 


கணவன் இறந்தான் என்ற செய்தியை கேட்டதும் எழுகிறாள். 


தன் கணவன் களவு செய்திருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். 


அவளுக்குத் தெரிந்தால் போதுமா? அது உண்மையாகி விடுமா?


அவள் கோபத்தின் வெளிப்பாடு, சூரியனை கூப்பிடுகிறாள். 


"ஏய் காய் கதிர் செல்வனே (சூரியனே), நீ சொல். என் கணவன் கள்வனா என்று" என்று சூரியனுக்கு உத்தரவு போடுகிறாள். 


சூரியன் தான் எல்லாவற்றையும் மேல் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறானே. அவனுகுத் தெரியாமல் ஒன்றும் இருக்க முடியாது. எனவே, சூரியனே, நீ சொல். என் கணவன் கள்வனா இல்லையா என்று கேட்கிறாள். 


பாடல் 


 காணிகா,

வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்;

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க;

பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி,

காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post.html


(please click the above link to continue reading)


காணிகா = (ஆயர் குலப் பெண்களே) காண்பீர்களாக 


வாய்வதின் = வாய்த்த, தானாக நிகழும் தீய சகுனங்களை நீக்க 


வந்த = வந்த 


குரவையின் வந்து ஈண்டும் = இங்கு குரவைப் பாட்டினை பாடும் 


ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்; = ஆயர் குலப் பெண்களே எல்லோரும் கேளுங்கள் 


ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க; = ஆயர் குலப் பெண்களே எல்லோரும் கேளுங்கள் 


பாய் = பாய்ந்து 


திரை  = அலையால் 


வேலிப் = வேலி அமைந்த 


படு பொருள்  = இந்த உலகை 


நீ அறிதி, =  நீ அறிவாய் 


காய் கதிர்ச் செல்வனே! = சுடும் கதிர்களை உடைய செல்வனே 


கள்வனோ, என் கணவன்?’ = என் கணவன் கள்வனா? 


ஒரு பெண்ணின் சீற்றம் எப்படி இருக்கும் என்று இளங்கோ காட்டுகிறார். ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு கோபமா? 


அவளால் தாங்க முடியவில்லை. 


எதைப் பற்றியும் அவள் கவலைப் படவில்லை. 


தனி ஒரு பெண்ணாக நின்று ஊரையே எரிக்கிறாள். 


சீதையைப் போல், "என் சொல்லினால் சுடுவேன்" என்று சொல்வதோடு நிற்காமல் சுட்டுக் காட்டுகிறாள். மதுரையை சாம்பல் ஆக்குகிறாள். 


அவள் கோபக் கனலில் என்னென்ன எரிந்து சாம்பலானதோ? 


எவ்வளவோ இலக்கியங்கள் போய் இருக்கலாம், மருத்துவம், சாத்திரம், ஆகமங்கள்,  இசை நூல்கள், கட்டிடக் கலை சார்ந்த நூல்கள் என்று எண்ணற்ற நூல்கள், கலைஞர்கள் அதில் எரிந்து போய் இருக்கலாம். 


அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு முன்னால், இது எல்லாம் ஒரு துரும்பு என்று நம் இலக்கியமும், பண்பாடும், கலாச்சாரமும் ஏற்றுக் கொண்டு உள்ளது. 


அவளை தெய்வமாக இன்று வரை கொண்டாடுகிறோம். 


பெண்ணுக்கும், அவள் உணர்வுகளுக்கும் நாம் தரும் மதிப்பு அது. 


என்ன நடந்தது என்றால்.....