Wednesday, April 6, 2022

திருக்குறள் - கேடும் பெருக்கமும்

திருக்குறள் - கேடும் பெருக்கமும் 


மிக மிக பிரமிப்பூட்டும் குறள்களில் இதுவும் ஒன்று. 


ஒரு மனிதனால் எப்படி இந்த அளவு சிந்திக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது. சிந்திப்பது மட்டும் அல்ல, அதை ஒண்ணே முக்கால் அடியில் எப்படி சொல்லவும் முடிகிறது. 


அவர் சொல்வதை நாம் நம்பலாம், அல்லது நம்பாமல் இருக்கலாம். ஆனால், அந்த சிந்தனையின் ஆழம் நம்மை எங்கோ கொண்டு செல்லும். 


மேலும் காலம் தாழ்த்தாமல், குறளுக்கு செல்வோம். .


பாடல் 


கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_6.html


(Pl click the above link to continue reading)


கேடும் = கெடுதலும் 


பெருக்கமும் = நன்மையும், செல்வமும் 


இல்லல்ல = இல்லாதவை அல்ல 


நெஞ்சத்துக் = மனதில் 


கோடாமை = நடுவு நிலைமை தவறாமல் இருத்தல் 


சான்றோர்க்கு அணி = சான்றோருக்கு சிறந்த அணிகலன் 


மேலோட்டமாக பொருள் சொல்வது என்றால் 


"வாழ்க்கைனா நல்லது கெட்டது நாலும் இருக்கத்தான் செய்யும். நடுவு நிலைமை தவறாமல் இருப்பது பெரியவர்களுக்கு அழகு"


இதுல என்ன பெரிய பிரமாண்டம் இருக்கிறது?  நாம கூட இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கலாமே. இதுக்கு எதுக்கு ஒரு வள்ளுவர்?


விரித்து பொருள் காண்போம்.


ஒருவன் ஏன் அறம் தவறி நடக்கிறான்?


ஏதோ வறுமை, அல்லது கொஞ்சம் அதிகம் ஆசைப் பட்டு விட்டான். பிள்ளையை பெரிய படிப்பு படிக்க வைக்க நினைப்பது தவறா? பெண்ணை ஒரு பெரிய நல்ல இடத்தில் கட்டி கொடுக்க நினைப்பது தவறா? உடம்பு சரி இல்லாத பெற்றோரை ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க நினைப்பது தவறா? ஆசைப் பட்ட பெண்டாடிக்கு நாலு நகை நட்டு வாங்கித் தர நினைத்தது தவறா?


அதற்காக கொஞ்சம் அப்படி இப்படி இருந்து நாலு காசு பார்த்தால் என்ன ஆகி விடப் போகிறது என்று நினைத்து தானே பலர் தவறு செய்கிறார்கள்?


அதாவது நடுவு நிலை தவறி நடந்தால் இப்போது உள்ளை துன்பத்தை நீக்கி விட முடியும் என்று நினைக்கிறார்கள். சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைக்கிறார்கள். 


பரிமேலழகர் உரை செய்கிறார் 


"தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன"


நமக்கு வரும் கேடும், பெருக்கமும் நாம் முன் செய்த நல் மற்றும் தீவினையால் வந்தவை. அது இப்போது வந்தது என்று நினைக்கக் கூடாது. முன் செய்த வினை இப்போது வந்து நிற்கிறது. 


ஒரு நல்லவன் துன்பப் படுகிறான் என்றால் சான்றோர் என்ன நினைப்பார்கள் என்றால், அவன் மடையன், அவன் அறிவு இல்லாதவன், அவன் பிழைக்கத் தெரியாதவன் என்று நினைக்க மாட்டார்கள். .ஏதோ அவன் முன் செய்த வினை அவனை வாட்டுகிறது என்று நினைப்பார்களாம. 


அதேபோல் கெட்டவன் சந்தோஷமாக இருந்தால் ஏதோ அது அவன் சாமர்த்தியம் என்று நினைக்க மாட்டார்கள். அவன் முன் செய்த நல் வினை என்று நினைப்பார்களாம்.


எனவே, ஒருவன் தன் சாமர்த்தியத்தால், அறிவால், திறமையால், ஊக்கத்தால் தான் பெரிய ஆள் ஆகி விட்டோம் என்று நினைக்கக் கூடாது. அதே போல வறுமை வந்தாலும், ஏதாவது தவறானவற்றைச் செய்து வறுமையை போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. என்ன செய்தாலும் செய்த வினை விடாது. 


பரிமேலழகர் மேலும் சொல்கிறார் 


"அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக்"


அதாவது அந்த இன்பமும், துன்பமும் ஏதோ இப்போதுதான் வருகிறது என்று நினைத்துக் கொண்டு 



" கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். "


நமக்கு வரும் கேடும். பெருக்கமும் நாம் செய்த முன்வினைப் பயனால் வந்தது என்று உறுதியாக நம்ப வேண்டும். (ஒருதலைக் கண் என்றால் உறுதியாக என்று அர்த்தம்) 




"அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்."


நாம் தவறான வழியில் பொருள் சேர்த்தாலும் நாம் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இருந்தால் அனுபவித்தே தீருவோம்.


என் வறுமையை போக்குகிறேன் என்று தவறு செய்தால், அந்த வினையும் சேர்ந்து கொள்ளும். 


இலாபமோ, நட்ட்டமோ, இன்பமோ, துன்பமோ என்ன ஆனாலும் தவறு செய்வதில்லை என்று உறுதியாக இருக்க வேண்டும். 


நம் சாமர்த்தியத்தால் எதுவும் நடந்து விடாது என்று அறிய வேண்டும். 


எவ்வளவோ பெரிய புத்திசாலிகளை காலம் புறம் தள்ளி இருக்கிறது. ஒன்றும் படிக்காதவனை தலையில் வைத்து கொண்டாடி இருக்கிறது. 


பெரிய பணக்காரன் எல்லாம் இழந்து ஏழ்மையில் இறந்து இருக்கிறார்கள். 


ஒன்றும் இல்லாதவன் தொட்டதெல்லாம் தங்கமாகி பெரும் பணக்கார்களாக ஆகி இருக்கிறார்கள். 


வரும் போது வரும். போகும் போது போகும். 


அதற்காக நாம் தவறான வழியில் செல்லக் கூடாது என்கிறது குறள். 


நாம் நமக்கு வரும் துன்பத்தை சகித்து இருந்து விடுவோம். பிள்ளையை ஒரு சாதரண கல்லூரியில் சேர்த்து விடலாம். பிரச்னை ஒன்றும் இல்லை. 


ஆனால், இந்த உறவுக் காரர்கள் கேலி செய்வார்களே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏளனமாக பார்ப்பார்களே என்று நினைத்து அவர்கள் மத்தியில் நல்ல பேர் எடுக்க எப்படியோ காசு சம்பாதித்து பெரிய கல்லூரிக்கு அனுப்பி, பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ணி ஏதேதோ செய்கிறோம். 


வள்ளுவர் சொல்கிறார், இந்த அக்கம் பக்கம், உறவு, whatsapp நண்பர்கள் இவங்க என்ன நினைபாங்க என்று கவலைப் படாதே. 


சான்றோர், அதாவது படித்தவர்கள், நல்லவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசி என்கிறார். 


உன் வறுமையை துன்பத்தை கண்டு அவர்கள் உன்னை இகழ மாட்டார்கள். மாறாக, இந்த வறுமையிலும், துன்பத்திலும் தவறான வழியில் செல்லாமல் நேர்மையாக வாழ்கிறானே என்று உன்னைப் போற்றுவார்கள் என்கிறார். 


"சான்றோருக்கு அணி". 


அவங்களுக்கு அது தான் சிறப்பு. 


நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். யாருடைய எண்ணம் நமக்கு முக்கியம் என்று. 


எவ்வளவு ஆழமான குறள்!



Monday, April 4, 2022

திருக்குறள் - எச்சத்தால் காணப்படும்

 திருக்குறள் - எச்சத்தால் காணப்படும் 


ஒருவன் உயிரோடு இருக்கும் போது அவன் எவ்வளவோ காரியங்களை செய்யலாம்.  அப்படி செய்பவன் பெரிய அதிகாரத்தில் உள்ளவனாக அல்லது பெரிய பணக்காரனாக இருந்தால் மக்கள் அவன் செயலை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். காரணம், பயம். அவனைப் பற்றி ஏதாவது சொன்னால் தங்களுக்கு தீமை வந்து விடுமோ என்று எண்ணி பேசாமல் இருந்து விடுவார்கள். 


ஆனால், அவன் இறந்த பின், அவன் செயல் பற்றி பல விமர்சினங்கள் எழும். அவன் தான் இல்லையே. எனவே மக்கள் பயம் இல்லாமல் அவன் செய்த தவறான காரியங்களைப் பற்றி பேச முற்படுவார்கள். 


எனவே, ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது அவன் உயிரோடு இருக்கும் போது தெரியாது. அவன் மறைவுக்குப் பின்னரே தெரியவரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 



தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_4.html


(pl click the above link to continue reading)


தக்கார் = தகுந்தவர் 


தகவிலர் = தகவு இல்லாதவர் = தகுதி இல்லாதவர் 


என்பது = என்பது 


அவரவர் = அவர்களுடைய 


எச்சத்தால் காணப் படும் = மீதியால் காணப்படும் 


என்ன தகுதி, என்ன மீதி ? 


அகாரதியை எடுத்துப் பார்த்தால் புரியாது. 


பரிமேலழகர் உரையின் ஊடாக நாம் இதை புரிந்து கொள்ளலாம். 


இந்த அதிகாரம் 'நடுவு நிலைமை' பற்றியது. 


எனவே, தகுதி என்று இங்கே சொல்லப் படுவது நடுவு நிலையில் நிற்கும் தகுதி என்று பொருள் கொள்கிறார். 


ஒருவன் நீதி, நேர்மை இவற்றிற்கு கட்டுப்பட்டு ஒழுகாக இருந்தால் அவன் தகுதி வாய்ந்தவன். இல்லை என்றால், தகுதி இழந்தவன் என்று பொருள். 


எச்சம் என்றால் பரிமேலழகர் பிள்ளைகள் என்று பொருள் சொல்கிறார். வேறு பல உரை ஆசிரியர்கள் ஒருவன் விட்டுச் செல்லும் அனைத்தும் எச்சம் என்று பொருள் சொல்கிறார்கள். நாம் இந்த இடத்தில் பரிமேலழகரை விட்டு விட்டு மற்ற உரை ஆசிரியர்களை பின்பற்றலாம். 


காரணம், பிள்ளை இல்லாதவனை எப்படி கணிப்பது? ஒருவன் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றால் அவனை எப்படி கணிப்பது? பிள்ளை பெறுவதற்கு ஆண், பெண் என்ற இருவர் வேண்டும். ஒருவர் தக்கார், இன்னொருவர் தகவு இல்லாராக இருந்தால் என்ன செய்வது? 


மேலும், பிள்ளைகள் வெளி உலகில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொள்கின்றன. 


எனவே, எச்சம் என்றால் பிள்ளைகள் என்பதை விட்டுவிட்டு புகழ், இகழ், அவர்கள் எழுதி வைத்து சென்ற புத்தகங்கள், இசை, அறிவியல் கோட்பாடுகள் என்று அவற்றைக் கொண்டு தீர்மானிக்கலாம் என்கிறார்கள். 


வள்ளுவருக்கு பிள்ளை இருந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது. ஆனாலும் நாம் இன்றும் அவரைப் போற்றுகிறோம், காரணம் அவர் நமக்கு விட்டுச் சென்ற திருக்குறள் என்ற அவரின் எச்சம். 


பெரிய ஓவியக் கலைஞர்கள், இசை மேதைகள், ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் மேதைகள் இவர்களின் தகுதியை அவர்களின் எச்சத்தால் காண முடியும். 


ஆனால், சிக்கல் என்ன என்ன்றால், அதற்கும் நடுவு நிலைக்கும் என்ன சம்பந்தம்? 


அவர்கள் படைப்புகளுக்கும் அவர்களின் நடுவு நிலைமைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. 


எனவே அந்த உரையையும் நாம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. 


எச்சம் என்றால் விட்டுச் சென்ற பேரும், புகழும் என்று எடுத்துக் கொள்ளலாம். 


ஒருவன் மோசமானவனாக இருந்தால் உலகம், அவன் காலத்துக்குப் பிறகு அவனை தூற்றும். ஹிட்லர் இருந்த காலத்தில் அவருக்கு எதிராக யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள். அவர் காலத்துக்குப் பின், அவர் செய்த நிறை குறைகளைப் பற்றி பேசுவார்கள். அதில் இருந்து அவர் எப்படிப் பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம். 


எனவே, நாம் என்ன நினைக்க வேண்டும் என்றால், நம் காலத்துக்குப் பின், நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்று.  


இருக்கும் போது நம் முகத்துக்கு எதிரே எல்லோரும் நம்மை புகழ்தான் செய்வார்கள். அதையெல்லாம் உண்மை என்று நம்பி விடக் கூடாது. நம் காலத்துக்குப் பின் நாம் செய்த ஒவ்வொரு தவறும் வெளியில் வரும். அப்போது என்ன பேசுவார்கள் என்று நினைத்து தவறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


அதுதான் பாடம். 




Sunday, April 3, 2022

பக்தி இலக்கியம் - ஒரு மீள் பார்வை

 பக்தி இலக்கியம் - ஒரு மீள் பார்வை 


கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் இந்த ப்ளாகை எழுதி வருகிறேன். பெரும்பாலான தமிழ் இலக்கிய பாடல்கள் பக்தி இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. தேவாரம், திருவாசகம், பிரபந்தம், கந்தர் அலங்காரம், போன்ற நூல்களில் இருந்து நான் இரசித்த பாடல்களை பதிவு இட்டுருக்கிறேன். 


பொதுவாக பக்தி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?



https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_3.html


(click the above link to continue reading)


இறைவன் பற்றிய வர்ணனை - நீ இப்படி இருப்பாய், உன் கையில் இது இருக்கும், நீ இந்த ஆயுதம் வைத்து இருப்பாய், இப்படி உடை உடுத்து இருப்பாய், உன் கண் இப்படி இருக்கும், சடை முடி இப்படி இருக்கும் என்று வர்ணனணைகள். 


இந்த வர்ணனைகளால் நமக்கு என்ன பலன்? அவர் எந்த உடை உடுத்தால் நமக்கு என்ன? அவர் சௌகரியத்துக்கு அவர் உடுக்கிறார். மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒரே மாதிரியா உடை உடுத்துக் கொண்டு இருப்பார்? சரி, ஒரு பாடல், இரண்டு பாடல் என்றால் பரவாயில்லை. பெரும்பாலான பாடல்கள் அவ்வாறே இருக்கின்றன. 


அடுத்தது, இறைவன் செய்த வீர தீர சாகசங்கள். நீ அவனை இப்படி அழித்தாய், இவனை அப்படி அழித்தாய், இப்படி உதவி செய்தாய், அப்படி உதவி செய்தாய் என்று இறைவனின் பெருமைகளை கூறுகின்றன.  


உலகம் தொடங்கி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன. இறைவன் அதற்கும் முன்னால் இருந்து இருக்க வேண்டும். மனிதர்கள் வந்தது நேற்று. அதிலும் மொழி வந்தது இன்று காலை. ஒரு இருநூறு ஆண்டுகள் பக்தி இலக்கியம் இருந்து இருக்கலாம். அதற்குப் பின் இறைவன் என்ன செய்தான், என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. யாரும் அது பற்றி எழுதுவது இல்லை. 


சரி, அவற்றை தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? என்றோ ஒரு நாள், இறைவன் யாரோ ஒரு அரக்கனை ஏதோ ஒரு விதத்தில் அழித்தான். பெரிய விடயம் தான். அதனால் என்ன இப்போது? அதைத் தெரிந்து என்ன்ன செய்ய? இன்று உள்ள அரக்கர்களை அழிக்க வேறு விதமான ஆயுதங்கள் வேண்டும். 


மேலும், அரக்கர்களுக்கு வரத்தைக் கொடுத்து விட்டு, தேவர்களை இன்னலுக்கு ஆளாக்கி விட்டு பின் அந்த அரக்கர்களை அழிப்பது என்ன ஒரு புத்திசாலித்தனம்? புரியவில்லை.


மூன்றாவது, உன்னை பாராட்டினால், புகழ்ந்தால், உன்னைப் பிடித்துக் கொண்டால் எனக்கு வீடு பேறு தருவாய். நீ எவ்வளவு பெரிய ஆள். எனக்கு உதவி செய்ய மாட்டாயா , இந்த உலகம் பிடிக்கவில்லை , அங்கே வந்து விடுகிறேன் என்று பல பாடல்கள்.


சரி, பாடிய அந்த பக்தருக்கு உலகம் பிடிக்கவில்லை, அவர் இறைவனை புகழ்ந்து தள்ளுகிறார். சரியோ தவறோ, அது அவருக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள ஒரு புரிதல். அதனால் நமக்கு என்ன? 


நான் என் மேல் அதிகாரியை புகழ்ந்தால் எனக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அதைத் தெரிந்து உங்களுக்கு ஆவது என்ன? 


நான்காவது, மற்ற சமயங்களை, இந்து சமயத்தின் மற்ற உட் பிரிவுகளை, அதில் உள்ள கடவுள்களை இழிவு படுத்திப் பாடுவது. நீ எவ்வளவு பெரிய ஆள். மற்ற கடவுள்கள் எல்லாம் உன் முன் தூசு. அவர்கள் உன் முன் கை கட்டி நிற்பார்கள். நீ தான் உயர்ந்தவன். உன்னை விட்டால் யார் இருக்கா என்று சமய, ஜாதி பேதங்கள், பகை வளர்க்கும் பாடல்கள் பல உண்டு. 


இவற்றை எல்லாம் கழித்து விட்டுப் பார்த்தால் என்ன மிஞ்சும்?


வாழ்க்கைக்கு துணை செய்யும் பாடல்கள் எத்தனை? நம்மை உயர்த்தும் பாடல்கள் எத்தனை? மிக மிக குறைவு. 


உங்கள் கணிப்பு என்ன?



Saturday, April 2, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடி நிழல் தடமன்றி யாமே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடி நிழல் தடமன்றி யாமே 


தமிழ் இலக்கியத்திலே அந்தாதி என்று ஒரு வகை உண்டு. முதல் பாடலின் இறுதிச் சீர், அடுத்த பாடலின் முதல்சீராக வரும். 


அந்தம், ஆதியாகி வரும் அந்தாதி. 


திருமோகூரில் பாடிய பத்துப் பாடல்களும் அந்தாதியாக அமைந்தவை. .


முதல் பாடல் 'இலம் கதியே' என்று முடிந்தது. அது கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 


அடுத்த பாடல் 'இலம் கதியே' என்று தொடங்குகிறது. 


முதல் பாடலை மனப்பாடம் செய்து விட்டால் போதும். ஒன்றில் இருந்து அடுத்ததாக எல்லா பாடல்களும் நினைவில் வந்து விடும். 


'எங்களுக்கு வேறு கதி இல்லை. இன்று மட்டும் அல்ல, என்றுமே வேறு கதி இல்லை. எதை விட்டால் வேறு கதி இல்லை? ஆழ்வார் ஒரு நீண்ட அடை மொழியோடு அதைக் கூறுகிறார். 


பொய்கை (நீர் நிலை)யைத் தவிர வேறு கதி இல்லை. 

நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


எப்போதுமே இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

இப்போது மட்டும் அல்ல எப்போதுமே இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


வேறு கதி இல்லை இப்போது மட்டும் அல்ல எப்போதுமே இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


பாடல் 

 

இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்


அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்


நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்


நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. (3892) 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_12.html


(pl click the above link to continue reading)



இலங்கதி = இல்லை கதி. கதி இல்லை 


மற்றொன் றெம்மைக்கும் = மற்றொன்று எப்போதும் 


ஈன் = இங்கே, ,இந்த 


தண் துழாயின் = குளிர்ந்த துளசியினால் ஆன 



அலங்கல் = மாலை 


அம் கண்ணி  = அவனைத் தவிர 


ஆயிரம் பேருடை அம்மான் = ஆயிரம் திரு நாமங்களை உடைய  அம்மான் 



நலங்கொள் =நல்லவற்றைக் கொள்ளும் 


நான்மறை = நான்கு வேதங்கள் 


வாணர்கள் = வானவர்கள் 



வாழ்திரு மோகூர் = வாழ்கின்ற திருமோகூர் 



நலங்க ழலவன் = பெருமாளுக்கு ஆழ்வார் சூட்டிய புதுப் பெயர். நலங்கழலவன். கழல் என்றால் திருவடி. ஆண்கள் காலில் அணியும் ஆபரணம் கழல். (பெண்கள் அணிவது கொலுசு). நன்மை தரும் திருவடி 


அடிநிழல் = திருவடியின் நிழல் 


தடமன்றி = பொய்கை அன்றி 


யாமே. = எமக்கு 



நலம் தரும் பொய்கை போன்ற திருவடி. 


குளம் இருக்கிறது. அதில் குளிர்ந்த நீர் இருக்கிறது. இனிய மலர்களின் வாசம் வருகிறது அதில் இருந்து. பார்க்க அழகாக இருக்கிறது. இந்த இன்பத்தை எல்லாம் அது யாருக்குத் தரும்?


எல்லோர்க்கும் தரும். 


படித்தவன், படிக்காதவன், பணக்காரன், ஏழை, நல்லவவ்ன், கெட்டவன் என்றெல்லாம் பார்க்காது. யார் வேண்டுமானாலும் அதில் உள்ள நீரை முகர்ந்து பருகலாம். யார் தாகத்தையும் தீர்க்கும். 


அது போல் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். யார் வந்தாலும், அவர்களுக்கு அருள் செய்வான். 


அப்படி ஒரு திருவடி இருக்கும் போது வேறு என்ன வேண்டும். இதுவே போதும் என்கிறார் ஆழ்வார். 


---------- முதல் பாசுரம் கீழே உள்ளது -------------------------------------------------------------



தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்


நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்


தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்


காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே. (3891)




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_31.html


திருக்குறள் - நன்றே தரினும்

திருக்குறள் - நன்றே தரினும் 


அயோக்கியத்தனம் , அராஜகம் செய்பவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான். நாளுக்கு நாள் அவனுக்கு செல்வம் சேர்ந்து கொண்டேதான் போகிறது. இந்த பாவம், புண்ணியம், அறம் என்பது எல்லாம் சும்மா பேச்சுக்குத் தான். நல்லவன் துன்பப்படுவதும், தீயவர்கள் ஆனந்தமாக வாழ்வதும் நாம் எங்கும் காணக் கிடைக்கிறது. 


அப்படி இருக்கும் போது இந்த அற நூல்கள் எல்லாம் தேவையா? 


நடுவு நிலை பிறழ்ந்தால் செல்வம் வராதா?


திருவள்ளுவர் சொல்கிறார்...


"வரும். அதில் ஆனந்தமாக வாழலாம். பணம் இருந்தால் பல இன்பங்களை துயிகலாம். இல்லை என்று சொல்வதற்கு இல்லை. அப்படியே இன்பம் வந்தாலும், அது வேண்டாம் என்று சொல்" என்கிறார். 


பாடல் 


 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_2.html


(pl click the above link to continue reading)


நன்றே தரினும் = நன்மையே தந்தாலும் 


நடுவிகந்தாம் = நடுவு நிலைமை தவறியதால் வரும் 


 ஆக்கத்தை = செல்வத்தை 


அன்றே = அப்போதே 


ஒழிய விடல் = விட்டு விடுக 


திருடினால் பணம் கிடைக்குமா? கிடைக்கும். அந்த பணத்தில் இன்பமாக வாழ முடியுமா? முடியும். அதற்காக திருடலாமா என்றால் திருடக் கூடாது. ஏன் திருடக் கூடாது ? திருடர்கள் எல்லோரும் இன்பமாகத் தானே இருக்கிறார்கள் என்றால் அந்த செல்வம் திருடியவனுக்கு மட்டும் அல்ல, அவன் சந்ததிக்கே பயன்படாமல் போய் விடும் என்ன்று முந்தைய குறளில் கூறினார். 


நமக்கு திருடர்களின் செல்வம், கார், பெரிய வீடு, நகை, ஆடம்பரம் மட்டும்தான் தெரியும்.  இரவு படுக்கப் போகும் போது அவன் என்ன பாடுபடுகிறான் என்று யாருக்குத் தெரியும். 


யார் அவனை கொலை செய்வார்களோ, யார் காட்டிக் கொடுப்பார்களோ, எப்போது கைது செய்யப் படுவோமோ, எந்த சிறையில் எப்படி துன்பப் பட்டப் போகிறோமோ என்று நாளும் செத்து செத்து பிழைப்பான். அது ஒரு வாழ்க்கையா?


"நன்றே தரினும்" என்று ஒரு 'ம்' போடுகிறார். அது தராது, ஒரு வேளை தந்து விட்டாலும், அதை அன்றே ஒழிக என்கிறார். 


சிலர் நினைக்கிறார்கள், தவறு செய்து வந்தப் பணத்தில் கொஞ்சத்தை கோவில் உண்டியலில், கொஞ்சம் அன்ன தானத்தில் செலவழித்தால் செய்த பாவம் போய் விடும் என்று. 


அதற்கு, அந்தப் பணத்தை வைத்து இருக்க வேண்டும். கோவிலுக்குப் போக வேண்டும், அன்ன தானம் ஒழுங்கு பண்ண வேண்டும். அது வரை அந்தப் பணம் அவன் கையில் இருக்கும். அந்த நேரத்தில் வருமான வரி சோதனை வந்து விட்டால்? 


அப்படிப்பட்ட பணத்தை ஒரு நிமிடம் கூட கையில் வைத்து இருக்காதே. உடனே, உடனே தீர்த்து விடு என்கிறார். 


ஒரு வேளை பணம் வந்தாலும், கையில் தொடாதே என்று எச்சரிக்கிறார். 


வள்ளுவர் 'அன்றே' என்று சொன்னதை பரிமேலழகர் 'அப்பொழுதே" என்று உரை செய்கிறார். 


ஒரு கணம் கூட அந்தப் பணம் உன்னிடம் இருக்க வேண்டாம் என்கிறார். 


ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். தவறனா வழியில் ஒருவர் கூட பணம் சம்பாதிக்க ஒரு சமுதாயம் எப்படி இருக்கும் என்று?


இலஞ்சம் என்பதே கிடையாது. ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்பது கிடையாது. தனி வழி, சிறப்பு வழி, management quota, என்று எந்த பாகுபாடும் கிடையாது. புறம் போக்கு நிலத்தில் பட்டா போட்டு கொள்வது, பொது இடத்தை ஆக்ரமித்துக் கொள்வது, வரி கட்டாமல் ஏய்ப்பது என்று ஒரு தவறும் இல்லாத சமுதாயம் எப்படி இருக்கும்?


இந்த அதிகாரத்தை எல்லோரும் கடை பிடித்தால், அப்படி ஒரு உன்னத சமுதாயம் உருவாகும். 


நம்மில் இருந்து தொடங்குவோமே.



Friday, April 1, 2022

கம்ப இராமாயணம் - நயனங்களை உடையாள்

கம்ப இராமாயணம் - நயனங்களை உடையாள் 


வாழ்கையை இரசிக்க எங்கே நேரம் இருக்கிறது. 


எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு கவலை. ஏதோ ஒரு அவசரம். ஒன்று முடிந்தால், இன்னொன்று வந்து நிற்கிறது.


ஒரு கவலையும் இல்லாவிட்டாலும், ஏதோ ஒன்றை கற்பனை பண்ணிக் கொண்டு கவலைப் படுகிறோம்.


முடி நரைக்கிறதே. உடல் எடை போடுகிறதே. இந்த பிள்ளைகள் எப்படி சமாளிக்கப் போகிறார்களோ இந்த உலகத்தை என்று புதிது புதிதாக கற்பனை பண்ணிக் கொண்டு கவலைப் படுகிறோம்.


இந்தப் பிரச்னை எல்லாம் தீர்ந்த பின்  அக்கடா என்று ஓய்வு எடுத்து, இதை எல்லாம் இரசிக்கலாம் என்று நினைக்கிறோம். 


அந்த நாள் ஒரு போதும் வரப் போவது இல்லை. 


பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அவை ஒரு நாளும் நிற்கப் போவது இல்லை. அதற்காக வாழ்கையை தள்ளிப் போடுவதா? 


வாழ்வை இரசிக்க வேண்டாமா?  மழை, புல், காற்று, உறவின் நெருக்கம், சுவையான உணவு, இனிய இசை, நல்ல புத்தகம், நகைச்சுவை, அறிவான பேச்சுக்கள், அன்பான அளவளாவல்கள் என்று வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இரசிக்கப் படிக்க வேண்டும். 


இராமனுக்கும், சீதைக்கும் வராத பிரச்னையா? 


நாட்டை விட்டு காடு வந்து விட்டார்கள். ஒரு சுகமும் கிடையாது. 


இந்த பதினாலு வருடத்தை எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால் பின் அரண்மனையில் சௌகரியமாக இருக்கலாம் என்று தானே நாம் நினைப்போம். அதற்குள் பதினாலு வருடம் போய் விடும். இளமை போய் விடும். 


இராமயணத்தில் மற்றவற்றை எல்லாம் விட்டு விடுங்கள். 


உலகமே தலைகீழான பின்னும், இராமனும், சீதையும் வாழ்கையை இரசிப்பதை விடவில்லை. அவர்கள் சோகத்திலும், துயரத்திலும் வாழ்கையை அனுபவிக்கும் அந்த அனுபவிப்பு இருந்தது. அதை பற்றிக் கொண்டால் கூட போதும் என்று தோன்றுகிறது.


கங்கைகரையை அடைகிறார்கள். முதல் முறை அரண்மனை விட்டு, வருகிறார்கள். 


இன்னும் பதினாலு வருடம் இருக்கிறது. எவ்வளவு கவலை இருக்க வேண்டும். 


சீதைக்கு ஒரு கவலையும் இல்லை. 


"மன்மதனின் ஐந்து அம்புகளையும், இராமனின் அம்புகளையும் நினைத்து, இது என் கண்களை விட கூர்மையானவை அல்ல என்று நஞ்சு போன்ற கண்களை உடைய சீதை அவற்றை தூக்கிப் போட்டு விடுகிறாள். அவள் குழலில் தாமரை மலர்களை சூடி இருக்கிறாள். அதில் வண்டுகள் மொய்க்கின்றன. அவை சிரிப்பதைப் போல இருக்கிறதாம். ஏன் சிரிகின்றன என்றால், இந்த மலர்கள் இராமனின் திருவடி அழகுக்கு ஈடாகுமா என்று எண்ணி சிரிக்கின்றனவாம்".


பாடல் 

 


அஞ்சு அம்பையும் ஐயன்தனது

     அலகு அம்பையும் அளவா,

நஞ்சங்களை வெல ஆகிய

     நயனங்களை உடையாள்,

துஞ்சும் களி வரி வண்டுகள்

     குழலின்படி சுழலும்

கஞ்சங்களை மஞ்சன் கழல்

     நகுகின்றது கண்டாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_1.html



(pl click the above link to continue reading)


அஞ்சு அம்பையும் = மன்மதனின் ஐந்து அம்புகளையும் 


ஐயன்தனது = ஐயன் இராமனின் 


அலகு அம்பையும்  = கூர்மையான அம்பையும் 


அளவா  = (மனதுக்குள்) அளவெடுத்து 


நஞ்சங்களை = கொடிய விஷங்களை 


வெல ஆகிய = வெல்லக் கூடிய 


நயனங்களை உடையாள், = கண்களை உடைய சீதை 


துஞ்சும்= உறங்கும் 


களி வரி வண்டுகள் = தேனை உண்டதால் களிப்புற்ற வண்டுகள் 


குழலின்படி சுழலும் = அவளின் குழலை சுற்றி வந்து மொய்க்கும் 


கஞ்சங்களை = தாமரை மலர்களை 


மஞ்சன் கழல் = மைந்தனாகிய இராமனின் திருவடிகளுக்கு 


நகுகின்றது கண்டாள். = ஒப்பாகுமா என்று நினைத்து சிரிப்பதாக நினைத்தாள் 


சந்தோஷமாக இருக்க பணம், பதவி, செல்வாக்கு, ஆள், அம்பு, சேனை, ஒன்றும் வேண்டாம். 


மனம் இருந்தால் போதும். எவ்வளவு பெரிய சிக்கலுக்கு நடுவிலும், வாழ்வின் ஏனைய சுகங்களை இரசிக்கலாம். 


அலுவலகத்தில் பிரச்சனை என்றால் மனைவியை கொஞ்சாமல் இருப்பதா?பிள்ளைகளோடு விளையாடாமல் இருப்பதா? எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு உலகமே இடிந்து போனது போல உட்கார்ந்து விடுவதா?


கங்கைப் படலம் ஒன்றும் கதைக்கு அவ்வளவு தேவையான ஒன்று அன்றல்ல. இருந்தும் வேலை மெனக்கெட்டு கம்பன் ஒரு படலம் பாடுகிறான்.


எவ்வளவு நுணுக்கமாக வாழ்வை இரசிக்கலாம் என்று காட்டுகிறான். 




திருக்குறள் - நடுவு நிலைமை - சிதைவின்றி

 திருக்குறள் - நடுவு நிலைமை - சிதைவின்றி 


ஒருவன் நடு நிலை தவறி ஏன் தவறு செய்கிறான்?


ஏதோ நாலு காசு பார்க்கலாம் என்று நினைபதால் தானே? 


சரி, நாலு காசு பார்த்தாச்சு, அதற்குப் பிறகாவது நிறுத்த வேண்டியது தானே? இன்னும் கொஞ்சம் சேர்த்து வைத்தால் நம் பிள்ளைகளுக்கு உதவுமே, பேரப் பிள்ளைகளுக்கு உதவுமே என்று நினைக்கிறான். 


இலஞ்சம் வாங்கி, பொய் சொல்லி, அறத்தில் இருந்து வழுவி இந்தக் காரியம் எல்லாம் எதற்கு செய்கிறான் என்றால் தானும் தன் சந்ததியும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணித்தானே செய்கிறான்?


அப்படி வரும் செல்வம் நிற்காது என்கிறார் வள்ளுவர்.  


நடுவு நிலை தவறி சேர்க்கும் செல்வம் அவனுக்கு மட்டும் அல்ல, அவன் சந்ததிக்கும் பயன் தராது என்கிறார். 


அப்படி என்றால் எதற்கு இவ்வளவு பாடு பட்டு சேர்க்க வேண்டும் ?


பாடல் 


செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post.html


(Pl click the above link to continue reading)


செப்பம் உடையவன் ஆக்கம் = நடுவு நிலை தவறாமல் இருந்து சேர்பவனது செல்வம் 


 சிதைவின்றி = ஒரு குறையுமின்றி, அழிவு இன்றி 


எச்சத்திற்கு = அவன் சந்ததிக்கும் 


ஏமாப்பு உடைத்து = வலி உடையது ஆகும் 


ஆக்கம் என்றால் ஆக்கியது. உண்டாக்கிய செல்வம். 


இந்தக் குறளில் ஒரு எழுத்தில் பரிமேலழகர் செய்யும் நுட்பம் வியக்கத் தக்கது. 


அது என்ன ஒரு எழுத்து?


தவறு செய்யாமல் சேர்த்த செல்வம்,ஒரு குறைவும் இல்லாமல் சந்ததிக்கு போய்ச் சேரும் என்பது குறள். 


அப்படி என்றால் தவறு செய்து சேர்த்த பணம் குறையோடு போய் சேரும் என்ற பொருள் வரும். அது மட்டும் அல்ல, சந்ததிக்குதத் தானே குறையோடு போய்ச் சேரும், எனக்கு ஒன்றும் இல்லையே. நான் நன்றாக அனுபவித்திட்டுப் போகிறேன். கொஞ்சம் குறையோடு பிள்ளைகளுக்கு போய் சேரட்டும் என்று ஒருவன் நினைக்க இடம் தருகிறது அல்லவா இந்தக் குறள்.


பரிமேலழகர் அப்படி அல்ல என்கிறார். 


"எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து" என்ற அடியில்,  எச்சதிற்கு'ம் ' என்று ஒரு 'ம்' சேர்கிறார். 


அதனால் பொருள் எப்படி மாறுகிறது என்று பாருங்கள். 


முதலாவது, எச்சத்திற்கும் என்றதால் தனக்கும் என்பது புரியும். நடுவு நிலையோடு இருந்து சேர்த்த செல்வம் சந்ததிகளுக்கும் பயன் தரும் என்றால் அது உனக்கும் பயன் தரும் என்றுதானே அர்த்தம்.  


இரண்டாவது, அறவழியில் சேர்த்த பொருள் உனக்கும், உன் சந்ததிக்கும் வலிமை சேர்க்கும் என்றதனால், அறம் பிறழ்ந்து சேர்க்கும் பணம் என்ன ஆகும்? உனக்கும், உன் சந்ததிக்கும் வலிமை சேர்க்காது என்று புரிகிறது அல்லவா? எனக்கும் பயன் இல்லை, என் பிள்ளைகளுக்கும் பயன் இல்லாத ஒன்றை செய்வானேன்?


மூன்றாவது, ஏமாப்பு உடைத்து என்றால் வலிமை சேர்க்கும். நேரான வழியில் செல்வம் சேர்த்தால் வலிமை சேர்க்கும். இல்லை என்றால் ? வலிமையை குறைக்கும். ஒருவன் களவாடி, பொய் சொல்லி, இலஞ்சம் பெற்று பொருள் சேர்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். எப்படியோ மாட்டிக் கொள்கிறான். 


ஒரு வேளை அவன் சேர்த்து வைத்த செல்வம் தப்பித்து விடலாம். 


அவன் பிள்ளைகளை ஊர் என்ன சொல்லும் ? "...இதோ போகிறானே இவன், இவனுடைய அப்பா அந்தக் காலத்தில் செய்யாத அட்டூழியம் எல்லாம் செஞ்சு சிறைக்கு போனவன். இவன் ஏதோ பெரிய மனிதன் போல நடக்கிறான்" என்று முகத்துக்கு நேரே சொல்லாவிட்டாலும் மனதுக்குள் நினைப்பார்கள் அல்லவா? நல்லவர்கள் அவனோடு ஒன்றாக இருப்பார்களா? 


அதெல்லாம் ஒன்றும் இல்லை. பணம் இருந்தால் போதும். உலகம் தானே மதிக்கும். எவ்வளவோ மோசமான அரசியல் வாதிகளைப் பார்க்கிறோம். எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கிறது. எங்கே குறை பட்டு நிற்கிறார்கள்? என்று நமக்குள் ஒரு சந்தேகம் எழலாம். 


உலகம் மதிக்கிறது என்றால் யார் அந்த உலகம்? உலகம் என்பது நல்லோர் மாட்டு என்பது இல்லக்கணம். 


ஒரு அயோக்கியனை இன்னொரு அயோக்கியன் மதிப்பான். நல்லவன் மதிப்பானா?


ஒரு தவறானவனை நாம் மதிக்கிறோம் என்றால் நாம் தவறானவர்கள் என்று அர்த்தம். 


படித்தவன், ஒழுக்கம் நிறைந்தவன் ஒரு அயோக்கியனிடம் கை கட்டி சேவகம் செய்கிறான் என்றால் அது யார் தவறு? 


நாம் நல்லவர்களாக இருப்போம். கெட்டவர்களை மதிக்கக் கூடாது. அவர்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. அவர்கள் பேசுவதை கேட்கக் கூடாது. "நீ என்ன சொல்வது" என்று புறக்கணிக்க வேண்டும். நல்லவர்கள் மதிக்கவில்லை என்றால் அவன் வருந்துவான். திருந்துவான். 


நல்லவர்கள், நல்லவர்களாக இல்லாமல் இருப்பதால் தான் கெட்டவர்கள் , கெட்டவர்களாக இருக்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 

எச்சதிற்கும் என்று குறளில்  இல்லை. எச்சத்திற்கு என்று தான் இருக்கிறது. 


பரிமேலழகர் சொல்கிறார் "மகர மெய் தொக்கி நிற்கிறது" என்று. அந்த 'ம்' மறைந்து நிற்கிறது என்கிறார். .


"விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான்"


அந்த உம்மை விகாரத்தால் தொக்கி நிற்கிறது என்ன்கிறார். 


அது மட்டும் அல்ல. 


ஒருவன் நேரான வழியில் பொருள் சேர்த்தால் அது அவனுக்கு எவ்வளவு காலம் வரை பலன் தரும்என்றால் அவன் சாகும் வரை அது அவனுக்கு துணை நிற்கும் என்கிறார். 


அபப்டி எங்கே குறளில் போட்டிருக்கிறது என்றால், நேரடியாகப் போடவில்லை. 


"எச்சதிற்கும்" என்று சொன்னதால், அவன் உயிரோடு இருக்கும் வரை அந்த செல்வம் அவனிடம் இருந்தால் தானே அவன் பிள்ளைகளுக்கு அது போய் சேரும். அவன் இருக்கும் போதே அந்த செல்வம் அவன் கைவிட்டுப் போய் விட்டால் பின் எப்படி அது அவன் சந்ததிகளுக்குப் போய் சேரும்? 


எனவே, அவனின் கடைசி காலம் வரை அவன் சேர்த்த செல்வம் அவனுக்கு துணை நிற்கும் என்று புரிந்து கொள் என்கிறார். .


அதெல்லாம் சரிங்க, பிள்ளைகள், வாரிசு, சந்ததி என்றெல்லாம் குறளில் இல்லையே என்றால் "எச்சம்" என்பதின் பொருள் 


"இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்"


ஒருவன் இறந்த பின் எஞ்சி நிற்பது எச்சம் என்று வள்ளுவர் குறித்தார் என்று பரிமேலழகர் கூறுகிறார். 


நேரான வழியில் பொருள் சேர்.


அது உனக்கும் உன் சந்ததிக்கும் வலு சேர்க்கும். 


தவறான வழியில் பொருள் சேர்

அது உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும். 


எவ்வளவு ஆழமான, நுண்ணிய பொருள். எவ்வளவு சுருக்கமாகச் சொல்லி இருக்கிறார்.