Thursday, October 31, 2013

இராமாயணம் - நீ என் பிழைதனை ?

இராமாயணம் - நீ என் பிழைதனை ?


பிள்ளைகள் அம்மாவிடம் வந்து அப்பா திட்டினார், அப்பா அடித்தார் என்று குற்றச் சாட்டு கூறினால் பெரும்பாலான அம்மாக்கள் என்ன ஏது என்று கேட்காமல் அப்பாவை திட்டத் தொடங்கி  விடுவார்கள்.

அப்பா என்று இல்லை, பிள்ளை யாரைப் பற்றி குற்றம் சொல்லிக் கொண்டு வந்தாலும், உடனே அவன் யார் பேரில் குற்றம் சொல்கிறானோ அவனை வைய வேண்டியது.

என்னை காடு போ என்று அரசன் சொன்னான் என்று இராமன் சொன்னவுடன் கோசலை வருந்தினாள்.

ஆனால் உடனே இராமனிடம் கேட்டாள் "உன் மேல் அன்பு கொண்ட அரசன் உன்னை கானகம் போகச் சொல்லும் அளவிற்கு நீ என்ன தவறு செய்தாய் " என்று.

இராமன் தவறு செய்திருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். இருந்தாலும், அவள் கேட்கிறாள்.

உணர்ச்சி வசப் படக் கூடாது. வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் "நீ என்ன செய்தாய் " என்று கேட்கிறாள்.

கோசலையின் வருத்தம் பற்றி கம்பன் கூறுகிறான்

ஏழை ஒருவன் கொஞ்சம் பொன் பெற்று பின் அதை இழந்தால் எப்படி வருந்துவானோ அப்படி வருந்தினாள் என்று கூறுவான்.

பிள்ளை இல்லாமல் பல காலம் இருந்து பெற்ற பிள்ளை, இப்போது இழக்கப் போகிறாள்.

வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்கள்....ஏழைக்கு லாட்டரியில் பாத்து கோடி  பரிசு விழுந்தது. தன்  வறுமை எல்லாம் போய் விட்டது. இனி வாழ்வில் வசந்தம் தான் என்று இருந்தவனுக்கு , பரிசுச் சீட்டு தொலைந்து போனால் எப்படி இருக்கும்  ? அப்படி வருந்தினாள் கோசலை.


பாடல்

‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ
என் பிழைத்தனை? ‘என்று நின்று ஏங்குமால்;
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்
பொன் பிழைக்கப் பொதிந்தனர் போலவே.


பொருள் 

Tuesday, October 29, 2013

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்


அரசன் என்னை கானகம் போகச் சொன்னான் என்று இராமன் சொன்ன அந்த வாசகம் தீ போல் கோசலையின் காதில் நுழைந்தது. தீயை தொட வேண்டும் என்று அல்ல..அருகில் சென்றாலே  சுடும்.அது போல அந்த வாசகம் அவள் காதைத் தொடவில்லை...அதற்கு முன்பே சுட்டது என்றான் கம்பன்.


பாடல்

ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ.


பொருள்


Monday, October 28, 2013

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி


என்னை நல்ல நெறியில் செலுத்த சக்கரவர்த்தி சொன்ன பணி ஒன்று உண்டு என்று இராமன் கோசலையிடம் கூறினான்.

மெல்ல மெல்ல தான் கானகம் போக வேண்டும் என்ற செய்தியை சொல்ல வருகிறான்.

"பெரிய கானகத்தில் உள்ள பெரிய தவம் செய்யும் முனிவர்களோடு பதினாலு வருடம் இருந்துவிட்டு வர வேண்டும்" என்று கூறினார் என்று கூறினான்.

பாடல்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு,
'"ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை
மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். 

பொருள்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு = இன்று உரைத்த வேலை என்ன என்று கேட்ட கோசலையிடம்

ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் = பதினாலு வருடம்

அகல் கானிடை = அகன்ற கானகத்தில், விலகி நிற்கும் கானகத்தில்

மாண்ட = மாண்புள்ள 

மாதவத் தோருடன் = மா தவம் செய்தோருடன்

வைகிப் பின் = உடன் இருந்து பின்

மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். = மீண்டும் நீ வர வேண்டும் என்று கூறினான் என்றான்.

முனிவர்களை சென்று பார்த்து விட்டு வரும்படி சொன்னான் என்று மிக மிக   எளிதாக  சொல்கிறான்.

பிரச்சனைகளை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இராமன் பாடம் நடத்துகிறான்.

கைகேயி சொன்னது

"தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நணுகி, புண்ணிய துறைகள் ஆடி" என்று.

இராமன் சொல்கிறான். முனிவர்களை பார்த்துவிட்டு வரும்படி அரசன் சொன்னான் என்கிறான்.

துன்பங்களை துச்சமாக எண்ணிப் பாருங்கள். அவை பெரிதாக இருக்காது.

சின்ன விஷயத்தை கூட பெரிதாக பெரிதாக ஊதி பெரிதாக்கி கவலைப்  படுபவர்களும்  இருகிறார்கள். அவர்கள் வாழ்கையை நரகமாக்கி கொள்பவர்கள்.

காலா, என் காலருகில் வாடா என்று பாரதி சொன்னது  போல...

மரணப் பிரமாதம் நமக்கு இல்லை என்றார் அருணகிரி

துன்பங்களை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது அதன் வேகம்....


இராமனிடம் இருந்து படிப்போம். .



திருவாசகம் - கண்டேன் கண்டேன்

திருவாசகம் - கண்டேன் கண்டேன்

இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. காணதவர்கள் , இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இறைவனை கண்டவர்கள் , கண்டேன் கண்டேன் என்று சொல்கிறார்கள்.

மாணிக்க வாசகர் தான் இறைனை கண்டதாக வாக்கு மூலம் தருகிறார் - கண்ட பத்து என்ற பத்து பாடல்களில்.

நமக்கு வரும் மூன்று பெரிய துன்பங்கள் எவை ?

பிணி, மூப்பு, சாக்காடு - இந்த மூன்றிலும் இருந்து யாரும் தப்ப முடியாது. மூப்பு வந்தே தீரும். சாக்காடும் வந்தே தீரும். இடையில் பிணி வரும் போகும்.

இந்த மூன்றையும் தவிர மனிதனுக்கு துன்பம் தருவது - ஆசை அல்லது பற்று.

உறவுகள் மேல் , பொருள்கள் மேல், அனுபவங்கள் மேல் கொள்ளும் பற்று.

மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த நான்கையும் மாற்றி தனக்கு காட்சி தந்ததாகச் சொல்கிறார்.

பாடல்



பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே.

பொருள்


Sunday, October 27, 2013

குறுந்தொகை - காமர் மாந்தி

குறுந்தொகை - காமர் மாந்தி 


இது நடந்ததா, நடக்குமா இல்லை வெறும் கற்பனையா என்று தெரியாது. இருந்தாலும் மனதைத் தொடும் பாடல்.

தோழி சொல்கிறாள் தலைவனிடம்

கரிய தலையை கொண்ட ஆண்  குரங்கு இறந்த  பின்,அதன் ஜோடி பெண் குரங்கு அதன் குட்டிகளை தன் உறவினர்களிடம் கொடுத்து விட்டு மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து உயிரை  மாய்த்துக் கொள்ளும் மலைகளை கொண்ட நாட்டைச் சேர்ந்தவனே, இனிமேல் இரவு நேரத்தில் தலைவியை காண வராதே...இரவில், மலை பாங்கான வழியில் உனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று எங்களுக்கு வருத்தமாய் இருக்கிறது.....

பாடல்

கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

பொருள்

கருங்கண் = கரிய கண்கள் 

தா(க்) = தாவும்

கலை =  ஆண் குரங்கு

பெரும் பிறிது = பெரிய பிரிவு , அதாவது மரணம்

உற்றனக் = அடைந்ததை

கைம்மை = விதவையான

உய்யாக் = வாழும் வழி தெரியாத, வாழ விருப்பம் இல்லாத

காமர் மந்தி = காதல் கொண்ட பெண் குரங்கு

கல்லா = வயதாகத

வன் பறழ் = சுட்டித் தனம் நிறைந்த குட்டியை

கிளை முதல் சேர்த்தி = உறவினர்களிடம் சேர்த்துவிட்டு

ஓங்கு = உயர்ந்த

வரை = மலை

அடுக்கத்துப் பாய்ந்து = பள்ளத்தில் பாய்ந்து

உயிர் செகுக்கும் = உயிரை விடும்

சாரல் நாட = அந்த மாதிரி உள்ள நாட்டைச் சேர்ந்தவனே

நடுநாள் = நடு இரவில்

வாரல் = நீ வராதே 

வாழியோ = நீ வாழ்க 

வருந்துதும் யாமே. = நாங்கள் வருந்துவோம்

குரங்குக்கு அவ்வளவு காதல், அவ்வளவு பொறுப்பு....அப்படி என்றால் அந்த ஊர் மக்களைப் பற்றி  என்ன சொல்லுவது....




இராமாயணம் - நாயகன் ஏவியது

இராமாயணம் - நாயகன் ஏவியது 


அரசை பரதனுக்கு கொடுத்து நீயும் உன் தம்பியும் ஒன்றாக நீண்ட நாள் வாழுங்கள் என்று கோசலை சொல்லி விட்டாள் .

அடுத்ததாக , தசரதன் கானகம் போகச் சொன்னான் என்று சொல்ல வேண்டும்.

அதை எப்படி சொல்கிறான் என்று பாப்போம்.

அதற்க்கு முன்னால்,  நீங்கள் இராமன் இடத்தில் இருந்தால் இந்த செய்தியை எப்படி சொல்லி இருப்பீர்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

"அந்தக் கிழவன், அந்த சிங்காரி கைகேயி பேச்சை கேட்டு என்னை காடு போ என்று சொல்கிறான் " என்று கூட நாம் சொல்லலாம்.

அரசு போனது மட்டும் அல்ல, காடும் போக வேண்டும் என்றால் எப்படி இருக்கும் ?

அரசை பரதனுக்கு கொடு என்று கோசலை சொன்னவுடன் இராமன் மகிழ்ந்தான் என்கிறான்  கம்பன். எங்கே தாய் அரசை பரதனுக்கு தருவதற்கு தடை சொல்லி விடுவாளோ என்று நினைத்திருக்கலாம், அல்லது இந்த செய்தியை கேட்டு கோசலை வருந்துவாளோ என்று நினைத்திருக்கலாம்....அப்படி இல்லாமல் கோசலை அரசை பரதனுக்கு கொடு என்று சொன்னவுடன் அதைக் கேட்டு மகிழ்ந்து "சக்கரவர்த்தி, என்னை நல்ல வழியில் செலுத்துவதற்கு இன்னும் ஒன்று சொன்னான் " என்று அடுத்த வரத்தை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான்.

பாடல்

தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
‘நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு, ஒர் பணி’ என்று இயம்பினான்.


பொருள்


தேவாரம் - கொடுமைபல செய்தன நான்அறியேன்

தேவாரம் - கொடுமைபல செய்தன நான்அறியேன்


நமக்கு துன்பம் வரும்போது எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று நாம் வருந்துகிறோம். நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கு ஏன் இந்த துன்பம், இந்த வருத்தம் வந்தது என்று கவலைப் படுகிறோம்.


ஒரு செயலை செய்தால் அதற்கு ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவு நாம் எதிர் பார்த்ததாய் இருக்கலாம் அல்லது வேறு மாதிரி கூட அமையலாம். ஆனால் வினைக்கு விளைவு என்று ஒன்று உண்டு.

அதையே மாற்றி சிந்தித்தால் ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு வினை இருக்க வேண்டும்.

இன்று ஒரு துன்பம் நமக்கு இருக்கிறது என்றால் அதற்கு நாம் ஏதோ செய்திருக்க வேண்டும்.  அதன் விளைவு தான் இந்தத் துன்பம் என்று அறிய வேண்டும்.

நமக்கு நினைவு தெரிந்து நாம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்திருக்க மாட்டோம். அல்லது நாம் செய்தது சரியா தவறா என்று கூட நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

துன்பம் என்று வந்து விட்டால் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. நாம் செய்த வல் வினை என்று இருக்க வேண்டும்.

நாவுக்கரசருக்கு பொறுக்க முடியாத வயிற்று வலி வந்தது. என்னனவோ செய்து பார்த்தார் .....வலி குறைவதாய் இல்லை.

இறைவனிடம் முறையிடுகிறார்.

இந்த வலி வந்ததற்கு காரணம் நான் ஏதோ கொடுமை செய்திருக்க வேண்டும். என்ன கொடுமை என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதும் உன் திருவடிகளையே வணங்கி வந்திருக்கிறேன். அப்படி இருக்க எனக்கு ஏன் இந்த பொறுக்க முடியாத வலி ? இந்த வலியை நீக்கி என்னை காக்க வேண்டும்

பாடல்

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பொருள்


கூற்றாயின வாறு = கூற்று ஆயினவாறு. கூற்றுவன் என்றால் எமன். உயிரையும் உடலையும் கூறு செய்வதால் அவன் கூற்றுவன். எனக்கு வந்த இந்த நோய் எமனைப் போல என்னை வருத்துகிறது. வலி உயிர் போகிறது.

விலக்ககிலீர் = விலக்கி அகற்றி அருளவில்லை

கொடுமைபல செய்தன = நான் பல கொடுமைகளை செய்திருக்கலாம்

நான்அறியேன் = அவை என்ன கொடுமைகள் என்று நான் அறிய மாட்டேன்

ஏற்றாய் = எருதின் மேல் அமர்ந்தவனே

அடிக்கே = உன் திருவடிகளுக்கே

இரவும் பகலும் = இரவும் பகலும்

பிரியாது = இடை விடாமல்

வணங்குவன் எப்பொழுதும் = எப்போதும் வணங்குவேன்

தோற்றாது என் வயிற்றின் = என் வயிற்றில் தோன்றிய

அகம்படியே = உள்ளும் புறமும்

குடரோடு = குடலோடு

துடக்கி = துடக்கி என்றால் தீட்டு. பெண்களுக்கு மாதவிடாய் வரும்போது அதை தீட்டு என்று சொல்லுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு வற்றில் ஒரு வலி வரும். துடக்கி என்றால் அந்த சமயத்தில் வரும் வலி போல என்று கொள்ளலாம். ஒரு ஆணால் அறிந்து கொள்ள முடியாத வலி அது. நாவுக்கரசர் சொல்கிறார்.

முடக்கியிட = என்னை முடக்கிப் போட

ஆற்றேன்  அடி யேன் = என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை

அதிகைக் = திரு வதிகை என்ற ஊரில்

கெடில = கெடில நதிக் கரையில்  உள்ள

வீரட்டா னத்துறை = எட்டு வீரட்டானத் துறைகளில் ஒன்றான அந்த ஊரில் உறையும் 
 
அம்மானே = அம்மானே

Saturday, October 26, 2013

இராமாயணம் - நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து

இராமாயணம் - நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து

பரதன் உன்னை விட மூன்று மடங்கு நல்லவன் , அவனுக்கு அரசாட்சியை கொடு என்று கோசலை கூறியதை முந்தைய ப்ளாகில்  பார்த்தோம்.

மேலும் கோசலை சொல்கிறாள்

இராமா, மன்னன் இட்ட கட்டளை எதுவாயினும், அது நீதி அல்ல என்று நீ எண்ணக் கூடாது. அதை அப்படியே  ஏற்று செய்வது உனக்கு அறம்.. இந்த அரசை உன் தம்பிக்கு நீ கொடுத்து அவனுடன் ஒற்றுமையாக பல்லாண்டு வாழ்க " என்று வாழ்த்துகிறாள்.


பாடல்

என்று, பின்னரும், ‘ மன்னவன் ஏவியது
அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்;
நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து,
ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள்.


பொருள்

என்று, பின்னரும் = மேலும் சொல்லுவாள்

மன்னவன் ஏவியது = அரசன் இட்ட கட்டளை

அன்று எனாமை =   நீதியின் பாற்பட்டது என்று எண்ணாமல்

மகனே!  = இராமா

உனக்கு அறன் = அரசன்  அப்படியே செய்வது உனக்கு அறன்

நன்று =  நல்லது

நும்பிக்கு =  உன் தம்பிக்கு

நானிலம் நீ கொடுத்து = இந்த அரசை நீ கொடுத்து

ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள் =  ஊழிக்  ஒன்றாக வாழுங்கள் என்று வாழ்த்தினாள்


 அப்பா  சொன்னது என்று  நினைக்காதே. அரசன் இட்ட கட்டளை என்று .எடுத்துக் கொள் இராமா என்று கூறுகிறாள்.

அப்பா சொன்னார் என்று எடுத்துக் கொண்டால் "போப்பா , உனக்கு வேறு வேலை இல்லை " என்று அதை உதாசீன படுத்த எண்ணியிருக்கலாம்.

அது மட்டும் அல்ல , அதை செய்வது அரச கட்டளை என்பதால் மட்டும் அல்ல , அதை செய்வது உனக்கு அறன் , கடமை என்று கூறுகிறாள்.

தசரதன் இந்த அரசை பரதனுக்கு கொடுத்தான் என்று கொள்ளாதே.

நீ இந்த அரசை அவனிடம் கொடு என்று கூறுகிறாள் கோசலை.

"நீ இதை நல்கு " என்கிறாள்.

சரி அரசை கொடுத்துவிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக் கொண்டு இருக்காதீர்கள். ஒன்றாக ஒற்றுமையாக ஆண்டு பல வாழுங்கள் என்று வாழ்த்துகிறாள்.

என்ன ஒரு நிதானம். என்ன ஒரு தெளிவு.

அடுத்து இராமன் மெல்ல அடுத்த ஒரு சேதி சொல்லப் போகிறான்...தான் காடு போக வேண்டிய வரத்தை சொல்லப் போகிறான்.

எப்படி சொல்கிறான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.





Friday, October 25, 2013

இராமாயணம் - நின்னும் நல்லன்

இராமாயணம் - நின்னும் நல்லன் 


நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ  கேட்ட கோசலையிடம் இராமன் சொன்னான் , நெடு முடி புனைய தடை ஒன்றும் இல்லை. எனக்கு பதில் உன் அன்பு மகன் , பங்கமில் குணத்து என் தம்பி பரதனே துங்க மா முடி சூட்டுகின்றான் என்றான்.

போன ப்ளாகில் சொன்ன மறந்து போனது பரதன் முடி சூட்டுகிறான் என்று இராமன்  சொல்லவில்லை.பரத'னே' முடி சூட்டுகிறான் என்றான். ஏகாரம் உயர்வு சிறப்பு. அவன் மட்டும் தான் முடி சூட்டுகின்றான்.

சரி, இராமன் சொல்லி விட்டான்.

கோசலை அதற்கு என்ன மறு மொழி சொன்னாள் ?

நம் வீட்டில் வந்து "என்னை வேலையை விட்டு போகச் சொல்லி விட்டார்கள்" என்று ஒரு மகனோ, கணவனோ தாயிடமோ, மனைவியிடமோ சொன்னால் என்ன நடக்கும் ?

அவர்களும் கவலைப் பட்டு, அவனையும் கவலைப் படுத்தி, பயப்பட்டு, மற்றவர்களை திட்டி சூழ்நிலையை இன்னும் மோசமாக்கி விடுவார்கள்.

ஒருவர் நம்மிடம் ஒரு துக்க செய்தியை சொல்கிறார் என்றால் அவரை மேலும் பயப் படுத்தக் கூடாது.  காயப் படுத்தக் கூடாது.

அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று அந்த துக்க செய்தியின் தாக்கத்தை குறைக்க முயல வேண்டும்.

கோசலை சொல்கிறாள் ...."முறை என்று ஒன்று உண்டு. அதைத் தவிர்த்துப் பார்த்தால், பரதன் உன்னை விட மூன்று மடங்கு உயர்ந்தவன் , நின்னும் நல்லவன், எந்த குறையும் இல்லாதவன் " என்று கூறினாள் ...

அப்படி கூறியது யார் ? நான்கு சகோதரர்களுக்கும்  அன்பைச் செலுத்தி அவர்களுக்குள் உள்ள வேற்றுமையை மாற்றிய கோசலை என்றான் கம்பன்.

பாடல்

‘முறைமை அன்று என்பது ஒன்று
     உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
     நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
     கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
     வேற்றுமை மாற்றினாள்.

பொருள்


இராமாயணம் - பங்கம் இல் குணத்து எம்பி

இராமாயணம் - பங்கம் இல் குணத்து எம்பி


கோசலை இராமனிடம் கேட்டாள் - நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ - என்று.

இராமன் நினைக்கிறான்....என்ன இருந்தாலும் கோசலை  ஒரு பெண், அதிலும் வயதானவள்...தன் மகனுக்கு முடி சூட்டு விழா இல்லை என்றால் வருந்துவாள். உணர்ச்சி வசப் படுவாள். எனவே, அவளிடம்  கொஞ்சம் மெதுவாக நிதானமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இராமன் நினைக்கிறான்.

எப்போதும் ஒரு துன்பமான செய்தியை சொல்வது என்றால் , யாரிடம் சொல்கிறோம், அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று  அறிந்து,ரொம்பவும் அதை பெரிது படுத்தாமல் சிந்தித்து சொல்ல வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், நாமாக இருந்தால் எப்படி சொல்லி இருப்போம் இந்த செய்தியை...

அழுது, ஆர்பாட்டம் பண்ணி, நாமும் கவலைப் பட்டு, கோசலையும் கவலைப் பட வைத்து, பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி இருப்போம்.

இராமன் எப்படி சொல்கிறான் என்று பாருங்கள்....


பாடல்

மங்கை அம்மொழி கூறலும், மானவன்
செங்கை கூப்பி , 'நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,

துங்க மா முடி சூடுகின்றான்' என்றான்

பொருள்

மங்கை அம்மொழி கூறலும் = கோசலை அப்படி கேட்டவுடன்

மானவன் = பெருமை நிறை இராமன்

செங்கை கூப்பி  = தன் சிவந்த கைகளை கூப்பி

'நின் காதல் திரு மகன், = உன்னுடைய அன்பிற்குரிய திரு மகன்

பங்கம் இல் = குறை இல்லாத

குணத்து எம்பி = குணங்களை கொண்ட

பரதனே = பரதனே


துங்க மா முடி சூடுகின்றான் என்றான் = தூய்மையான முடியை சூட்டுகின்றான் என்றான்


உன் மகனுக்கு முடி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பரதனும் உன் மகன் தானே. அவனுக்கு முடி என்கிறான்.

கோசலை புரிந்து கொண்டிருப்பாள். இராமனுக்கு இதில் வருத்தம் இல்லை என்று. ஒரு வேளை  இராமன், "கைகேயின் மகன் பரதனுக்கு முடி"  என்று சொல்லி இருந்தால் கோசலை வருந்தி இருப்பாள். கோசலையை   வருந்த விடக் கூடாது  என்று மிக மிக பக்குவமாக  சொல்கிறான்.

பரதன் யார் - பங்க மில் குணத்தவன் - குறை ஒன்றும் இல்லாத குணம் உள்ளவன்.

எம்பி - என் தம்பி.

நின் காதல் திருமகன் - உன் அன்பிற்குரிய திருமகன்

எனவே, அரசாங்க காரியமான முடி சூட்டுதல் நிற்கவில்லை. அது நடக்கும். எனக்கு பதில் பரதன் முடி சூட்டுகிறான் என்றான்.

எவ்வளவு பெரிய சிக்கலான, கடினமான ஒரு விஷயத்தை எவ்வளவு பக்குவமாக எடுத்தச் சொல்கிறான் என்று பாருங்கள்.

இப்படி பேசி பழக வேண்டும்.

நாமும் பயப் பட்டு, மற்றவர்களையும் பயப் படுத்தும்படி பேசக் கூடாது.

அடுத்து கோசலையின்  முறை. அவள் எப்படி பதில் சொல்கிறாள் என்று பார்போம்.





Thursday, October 24, 2013

தேவாரம் - சொல்லும் நா நமச்சிவாயவே

தேவாரம் - சொல்லும் நா நமச்சிவாயவே 


பழக்க வழக்கம் என்றொரு சொற்றொடர் உண்டு. பழக்க வழக்கம்  என்றால் என்ன ?

ஒன்றை பழக்கப் படுத்தி விட்டால் அது வழக்கமாகி விடும்.

நல்ல விஷயங்களைப் நம் உடலுக்கு பழகப் படுத்தி விட்டால் பின் எப்போதும் அதை  மறக்காது.

இறுதிக் காலத்தில் அறிவு குழம்பும், நினைவு தப்பும், புலன்கள் தடுமாறும்...எப்போதும் நல்லதையே செய்து பழக்கப் படுத்திவிட்டால் புலன்கள் அப்போதும் நல்லதையே செய்யும் ...

சுந்தரர் சொல்கிறார், "என் மனம் மறக்கினும், என் நினைவு உன்னை மறக்கினும் ..என் நாக்கு நமச்சிவாய  என்று சொல்லிக் கொண்டே இருக்கும்".

சொல்லும் நா நமச்சிவாயவே

பாடல்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.

சீர் பிரித்த பின்

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

பொருள்

மற்றுப் = மற்ற

பற்று = பற்றுதல்கள்

எனக்கு இன்றி = எனக்கு இல்லாமல்

நின் திரு பாதமே = உன் திருவடிகளையே

மனம் பாவித்தேன் = மனதில் நினைத்தேன்

பெற்றலும் பிறந்தேன் = பெற்றதால் பிறந்தேன்

இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்  = இனி பிறவாத தன்மை
அடைந்தேன்

கற்றவர் = கற்றவர்கள்

தொழுது  = வணங்கி

ஏத்தும்  = போற்றும்

சீர்க் கறையூரிற் = கறையூரில்

பாண்டிக் கொடுமுடி = பாண்டிக் கொடு முடி என்ற ஊரில்

நற்றவா = நல்ல தவத்தின் பலனே

உன்னை  நான் மறக்கினும் = உன்னை நான் மறந்தாலும்

சொல்லும் நா நமச்சிவாயவே = என் நாக்கு சொல்லும் நமச்சிவாயா என்று

"நமச்சிவாயவே" என்று சுந்தரரின் நாக்கு சொல்லும்.

நம் நாக்கு என்ன சொல்லுமோ , யாருக்குத் தெரியும் ....




Wednesday, October 23, 2013

குறுந்தொகை - யாயும் ஞாயும்

குறுந்தொகை - யாயும் ஞாயும் 


தலைவியும் தலைவனும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வயப் படுகிறார்கள். அவர்கள் உள்ளம் ஒன்றோடு ஒன்று கலக்கிறது.

என்ன ஆச்சரியம் !

கலந்தது அவர்கள், ஆனால் அவளின் தாய்க்கும் அவனின் தாய்க்கும் உறவு ஏற்பட்டது. அவர்கள் உறவினர்கள் ஆகி விட்டார்கள். அவனின் தந்தைக்கும் அவளின் தந்தைக்கும் உறவு ஏற்பட்டது. அவர்களும் உறவினர்கள் ஆகி விட்டார்கள். நிலத்தோடு கலந்த நீர் நிலந்தின் தன்மையை பெறுவதைப் போல அவளின் மனம் அவனோடு இரண்டற கலந்து விட்டது.

குறுந்தொகையில் உள்ள ஆச்சரியமான எளிமையான பாடல்

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பொருள்


யாயும் ஞாயும் யார் ஆகியரோ? = என் தாயும் உன் தாயும் யார் ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? = என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்தில் உறவினர்கள்

யானும் நீயும் எவ்வழி அறிதும்? = நீயும் நானும் எந்த வழியில் உறவினர்கள் ?

செம்புலப் பெயல் நீர் போல = சிவந்த நிலத்தில் விழுந்த நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. = அன்பு கொண்ட நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே

கம்ப இராமாயணம் - இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு - 2

கம்ப இராமாயணம் -  இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு


கோசலை அரண்மனையின் மேலிருந்து பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருகிறான். இந்நேரம் முடி சூட்டி இருக்க வேண்டும். தலையில் கிரீடம் இல்லை. இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறான். அவன் முடி புனித நீரால் நனையவில்லை என்பது தெரிகிறது. இராமன் இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான். வந்தவன் கோசலையை வணங்குகிறான். அப்படியே அன்பால் குழைந்து வாழ்த்துகிறாள். பின் கேட்கிறாள் முடி புனைவதற்கு ஏதேனும் தடை உண்டோ என்று கேட்டாள்.

பாடல் 

புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?' என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
'நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள்


பொருள் 



புனைந்திலன் மௌலி = மணி மகுடம் சூடவில்லை 
குஞ்சி = தலை முடி 
மஞ்சனப் புனித நீரால் = மஞ்சள் நிறம் கொண்ட புனித நீரால் 

நனைந்திலன்; = நனையவில்லை 
என்கொல்?' = என்ன ஆகி இருக்கும் 
என்னும் ஐயத்தால் = என்ற சந்தேகத்த்தால் 
நளினம் பாதம் = அவளுடைய நளினமான பாதத்ததை 
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும் = பொன்னாலான கழலை அணிந்த இராமன் வணங்கைய போது 
குழைந்து வாழ்த்தி = மனம் நெகிழ்ந்து வாழ்த்தி 
'நினைந்தது என்? = நினைத்தது என்ன 
இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள் = மணிமுடி சூட இடையூறு உண்டோ என்று கேட்டாள் 

இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ?

கோசலை "இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?" என்று கேட்டாள்.

"நீ" நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ என்று கேட்கவில்லை. 

முடி சூட்டுவது என்பது ஒரு அரசாங்கம் சம்பந்தப் பட்ட விஷயம். இராமன் முடி சூட்டினானா இல்லையா என்பதல்ல கேள்வி. முடி சூட்டுதல் என்ற முறை நடந்ததா , அதில் ஏதேனும் தடை வந்ததா என்று கேட்கிறாள். 

முடி சூட்டு விழா தடை பட்டால் அரசாங்க  காரியம் தடை பட்டு விட்டதாக  அர்த்தம். 

எவ்வளவு நாசூக்காக கேட்கிறாள். 

தாய் மகன் உறவை தள்ளி வைத்து விட்டு கேட்கிராள் ..


அதற்கு இராமன் சொன்ன பதில் இன்னும் சுவாரசியாமானது 


Tuesday, October 22, 2013

கம்ப இராமாயணம் - இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு

கம்ப இராமாயணம் -  இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு


கோசலை அரண்மனையின் மேலிருந்து பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருகிறான். இந்நேரம் முடி சூட்டி இருக்க வேண்டும். தலையில் கிரீடம் இல்லை. இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறான். அவன் முடி புனித நீரால் நனையவில்லை என்பது தெரிகிறது. இராமன் இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான். வந்தவன் கோசலையை வணங்குகிறான். அப்படியே அன்பால் குழைந்து வாழ்த்துகிறாள். பின் கேட்கிறாள் முடி புனைவதற்கு ஏதேனும் தடை உண்டோ என்று கேட்டாள்.

பாடல் 

புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?' என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
'நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள்


பொருள் 

புனைந்திலன் மௌலி = மணி மகுடம் சூடவில்லை 
குஞ்சி = தலை முடி 
மஞ்சனப் புனித நீரால் = மஞ்சள் நிறம் கொண்ட புனித நீரால் 

நனைந்திலன்; = நனையவில்லை 
என்கொல்?' = என்ன ஆகி இருக்கும் 
என்னும் ஐயத்தால் = என்ற சந்தேகத்த்தால் 
நளினம் பாதம் = அவளுடைய நளினமான பாதத்ததை 
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும் = பொன்னாலான கழலை அணிந்த இராமன் வணங்கைய போது 
குழைந்து வாழ்த்தி = மனம் நெகிழ்ந்து வாழ்த்தி 
'நினைந்தது என்? = நினைத்தது என்ன 
இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள் = மணிமுடி சூட இடையூறு உண்டோ என்று கேட்டாள் 

இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ?


திருக்குறள் - வாயால் சொலல்

திருக்குறள் - வாயால் சொலல் 


எப்பவாவது யாரையாவது திட்டி இருக்கிறீர்களா ? எப்போதாவது பொய் சொல்லி இருக்கிறீர்களா ? பிறர் மனம் வருந்தும்படி பேசி இருக்கிறீர்களா ?

அவை எல்லாம் ஒழுக்கக் குறைவான செயலகள். 

ஒழுக்கம் உடையவர்கள் மறந்து கூட தீய சொற்களை வாயால் சொல்ல மாட்டார்கள். 

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயால் சொலல்.

பொருள்


ஒழுக்க முடையவர்க்கு = ஒழுக்கம் உள்ளவர்களுக்கு 
ஒல்லாவே  = முடியாதே 
தீய  = தீய சொற்கள் 
வழுக்கியும் வாயால் சொலல் = தவறிக் கூட வாயால் சொல்லுதல் 

ஒழுக்கம் உடையவர்கள் நினைத்த்தால் கூட முடியாது தவறகா பேசுவது. வழுக்குதல் என்றால் தெரியாமல் , தன் கட்டுப் பாடு இல்லாமல் நடப்பது. அப்படி கூட நடக்காதாம். 

 

Sunday, October 20, 2013

திருக்குறள் - நல்லதும் தீயதும்

திருக்குறள் - நல்லதும் தீயதும் 


திருக்குறளில் சில குறள்கள் "அட" என்று ஆச்சரியப் பட வைக்கும். அப்படிப் பட்ட குறள் ஒன்று. 

செல்வம் செய்வதற்கு நல்லவையெல்லாம் தீயவை ஆகும் ; தீயவை எல்லாம் நல்லவை ஆகும் என்கிறார் வள்ளுவர். 

அதாவது, தீமை செய்யாமல் செல்வம் சேர்க்க முடியாது என்கிறார். அது மட்டும் அல்ல, நல்ல வழியில் செல்வம் சேர்க்க நினைத்தால், அது கூட தீயதாக போய் முடியும் என்கிறார். 

நல்லவை யெல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

பொருள்

நல்லவை யெல்லாஅம் தீயவாம் = நல்லவை எல்லாம் தீயதாய் முடியும் 

தீயவும் = தீமைகளும் 

நல்லவாம் = நல்லாதாகும் 

செல்வம் செயற்கு = செல்வம் செய்வதற்கு 

நல்லதே செய்து, நேர்மையான வழியில் சென்று செல்வம் சேர்க்க நினைத்தாலும் அது தீயதாய் போய் விடும். 

தீமை செய்தாலும், அது நல்லதாக முடியும் செல்வம் சேர்க்கும் போது.

மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய குறள். 

இராமாயணம் - வாழ்க்கைப் பாடம் - ஒரு முன்னோட்டம்

இராமாயணம் - வாழ்க்கைப் பாடம் - ஒரு முன்னோட்டம் 


இராமாயணம் போன்ற காப்பியங்களை படிக்கும் போது , கதை, அதன் போக்கு, கதை சொல்லும் பாங்கு, பாத்திர படைப்பு என்று இரசிக்கும் போது, அவற்றில் இருந்து சில பாடங்களும் கற்றுக் கொள்ளலாம். 

காப்பியங்கள் சம்பவங்களை சற்று மிகைப் படுத்தி கூறினாலும், அது நம் மனதில் படியா வைக்க கையாளும் ஒரு யுக்தி என்று கொள்ள வேண்டும். 

நமக்கு ஒரு சிக்கல் வந்தால், இந்த சூழ்நிலையில் இராமன் இருந்தால் என்ன செய்திருப்பான், சீதை இருந்திருந்தால் எனன் செய்திருப்பாள் என்று சிந்திக்கும்போது அந்த சிந்தனைகள் நமக்கு வழி காட்டியாக அமையலாம். 

வீட்டில், சில சமயம் சிக்கல்கள் வரலாம். வரும். 

அந்த மாதிரி சமயங்களில் குடும்பத்தில் உள்ளவர்கள் சிக்கலில் உள்ளவர்களை திட்டுவதோ, பயப் படுத்துவதோ கூடாது. அது அந்த சிக்கல்களை மேலும் அதிகப் படுத்திவிடும். 

சில வீடுகளில் , பிரசாய் என்று வந்து விட்டால் , அதை விவாதிக்கிறேன் பேர்வழி என்று கணவனும் மனைவியும் மேலும் சண்டை போட்டு அந்த பிரச்சனையோடு கணவன் மனைவி பிரச்சனையும் சேர்த்த்து விடுவார்கள். 

பிரச்சனையை எப்படி அணுகுவது, எப்படி விவாதிப்பது, எப்படி தீர்வு காண்பது என்று கம்பன் நமக்கு பாடம் எடுக்கிறான். 

இராமன், முடி புனைவது மாறிப் போகிறது. காட்டிற்கு போக வேண்டும். 

இது பிரச்னை. 

இதில் மிகவும் பாதிக்கப்பட போபவர்கள் யார் யார் ?

கோசலை (தாய்), சீதை (மனைவி), இலக்குவன் (தம்பி)...

இயவர்களிடம் இராமன் இந்த பிர்ச்சனையை எப்படி எடுத்துச் சொல்லி சமாளிக்கிறான் என்று பார்ப்போம். 

அதற்கு முன்னால் சற்று யோசித்துப் பாருங்கள் 

கோசலை வருந்துவாள், தயரதனிடம் அவள் சண்டை பிடிக்கலாம்....

சீதை இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லலாம்....

இலக்குவன் சண்டை போடலாம். 

கதை எப்படி போனது என்று நமக்குத் தெரியும்....கதை வேறு மாதிரியும் போய் இருக்கலாம்...அப்படி போகாமல் இராமன் எப்படி மாற்றினான் என்று பார்ப்போம். 

அதற்கு அவனுக்கு மற்றவர்கள் எப்படி துணை செய்தார்கள், அல்லது அவனுக்கு தடையாக இருந்தார்கள்...என்றெல்லாம் நாம் பார்க்கப் போகிறோம்...

Saturday, October 19, 2013

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான்

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான் 


புகழ் அடைவதற்கு தானம் செய்வது சிறந்த வழி. தானம் என்பது பொருளாக இருக்க வேண்டும் என்று அல்ல. நல்ல சொல், கல்வி தானம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

திருக்குறளில் புகழ் என்று ஒரு அதிகாரம். அது ஈகை என்ற அதிகாரத்தின் பின் வருகிறது. வள்ளுவர் ஏன் அப்படி வைத்தார் என்பதற்கு பரிமேலழகர் உரை எழுதுகிறார் 

"புகழ் என்பது இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின் , அதன்பின் வைக்கப்பட்டது" 

ஈதலினால் புகழ் வரும். 

கர்ணனுக்கு எவ்வளவுதான் வலிமை இருந்தாலும், வித்தை இருந்தாலும் தன் குலம் பற்றி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. தகப்பன் பெயர் தெரியாதவன் என்று அவன் மேல் உள்ள பழி இருந்து கொண்டே இருந்தது. உள்ளுக்குள் அது அவனை அரித்துக் கொண்டு இருந்தது. 

அந்த பழியை போக்கி, புகழ் அடைய கர்ணன் தானம் செய்யத் தொடங்கினான். நாளடைவில் அது அவனது இயற்கை குணமாகி விட்டது. கடைசியில், உயிர் போகும் நேரத்தில், செய்த தானம் அத்னையும் கண்ணனுக்கு தானம் செய்தான். 

இது உண்மையா ? கர்ணன் தன் பழி போக்கவா தானம் செய்தான் ? அது அவனது பிறவி குணம் இல்லையா ? பழி போக்கவா தானம் செய்தான் ?

வில்லி புத்துராழ்வார் சொல்கிறார்..."புறம் சுவர் கோலம் செய்வான்" என்று. உள்ளுக்குள் ஆயிரம் அழுக்கு , வெளி சுவரை அழகு படுத்தி வைப்பது மாதிரி, என்று அர்த்தம். 

துரியோதனன் சபை. கண்ணன் தூது வரப் போகிறான் என்ற செய்தி வந்திருக்கிறது. என்ன செய்வது என்று ஆலோசனை நடக்கிறது. அப்போது கர்ணன் சொல்கிறான் என்று ஆரம்பிக்கிறார் வில்லியார்...

பாடல் 

இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து, எதிர்ந்த வேந்தர் 
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்தபோதில், 
அறம் செறி தானம், வண்மை, அளவிலாது அளித்து, நாளும் 
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்:

பொருள் 

இறைஞ்சிய = அடி பணிந்த 

வேந்தர்க்கு = அரசர்களுக்கு 

எல்லாம் = எல்லோருக்கும் 

இருப்பு அளித்து = (துரியோதனன்) அவர்கள் அமர இருக்கை தந்து 

எதிர்ந்த வேந்தர்  = துரியோதனை எதிர்த்த வேந்தர்களின் 

நிறம் செறி குருதி வேலான் = மார்பில் தன் வேலைப் பாய்ச்சி, அதனால் சிவந்த வேலைக் கொண்ட துரியோதான் 

நினைவினோடு இருந்தபோதில் = சிந்தித்துக் கொண்டு இருந்த போது  

அறம் செறி தானம் = அறம் நிறைந்த தானம். அதாவாது கெட்ட காரியத்துக்கு தானம் செய்து உதவ மாட்டான் கர்ணன் 

வண்மை = வீரம் அல்லது தியாகம் 

அளவிலாது அளித்து = அளவு இல்லாமல் அளித்து. இவ்வளவு தானம் செய்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ள மாட்டான் கர்ணன். 

நாளும் = ஒவ்வொரு நாளும் 

புறம்  சுவர் கோலம் செய்வான் = வெளிச் சுவரை அழகு படுத்தும் கர்ணன் 

பூபதிக்கு உரைக்கலுற்றான் = அரசனான துரியோதனுக்கு சொல்லத் தொடங்கினான் 

Friday, October 18, 2013

திருக்குறள் - தூக்கம்

திருக்குறள் - தூக்கம் 


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

தூங்கிச் செயற்பால தூங்குக = தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களை தூங்கிச் செய்ய வேண்டும் 
தூங்காது செய்யும் வினை, தூங்கற்க = தூங்காமல் செய்யும் வேலைகளை, தூங்காமல் செய்ய வேண்டும். 

அது என்ன தூங்கிச் செய்வது, தூங்காமால் செய்வது ?

வேலைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் - நல்லவை, கெட்டவை என்று. 

கெட்ட காரியம் மனதில் தோன்றினால் , அதைத் தள்ளிப் போட வேண்டும். உடனே செய்து விடக் கூடாது. ஆறுவது சினம் என்றாள் அவ்வை. ஆறப் போட்டால் ஆறி விடும் சினம். கோபம் வந்தவுடன் ஏதாவது எழுதுவது, பேசுவது கூடாது. கொஞ்சம் தள்ளிப் போட வேண்டும். 

வர்ற ஆத்திரத்திக்கு அவனை அப்படியே வெட்டிப் போடலாம் என்று தோன்றும். உடனே செய்து விடக் கூடாது. தள்ளிப் போட்டால் அந்த ஆத்திரம் வடியும்.

அழகான பெண் தான்....தொடலாம் போல தோணும்...தொட்டு விடலாமா ?

அதேப் போல நல்ல எண்ணம், காரியம் தோன்றினால் உடனே செய்து விட வேண்டும். தள்ளிப் போடக் கூடாது. 

படிக்க வேண்டும் என்று நினைத்தால், உடனே படிக்க வேண்டும். அப்புறம் நாளைக்கு படிக்கலாம் என்று தள்ளிப் போடக் கூடாது. 

ஒன்றே செய்யவும், நன்றே செய்யவும் வேண்டும், அதுவும் இன்றே செய்ய வேண்டும், அதுவும் இன்னெ செய்ய வேண்டும். 

எந்த வேலையும் செய்வதற்கு ஏற்ற நேரத்தில் செய்ய வேண்டும். 

எல்லா வேலையும் உடனே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

Wednesday, October 16, 2013

இராமாயணம் - விதியும் தருமமும்

இராமாயணம் - விதியும் தருமமும் 


பரதன் நாடாள்வான் , நீ காடாளாப் போ என்று கைகேயி சொன்ன பின், இராமன் அவள் மாளிகையை விட்டு வருகிறான். கோசலையை காண வருகிறான். 

தனியாக வருகிறான். முடி சூட்டி சக்ரவர்த்தியாக வர வேண்டிய இராமன், தனியாக யாரும் இல்லாமல் நடந்து வருகிறான். அதை தூரத்தில் இருந்து கைகேயி பார்க்கிறாள். 

முன்னால் வீசி விரும் கவரி இல்லை. 

பின்னால் தாங்கி வரும் வெண்கொற்றக் குடை இல்லை. 
 
பிள்ளை தனியாக வருகிறான். அவள் கண்ணுக்கு வேறு இரண்டு பேர் தெரிகிறார்கள். 

இராமனுக்கு முன்னே விதி செல்கிறது. அவன் பின்னே தர்மம் வருகிறது. 

விதி என்ன என்று யாருக்கும் முதலில் தெரியாது...வாழ்க்கை செல்ல செல்லத் தான் விதியின் வெளிப்பாடு தெரியும். அடுத்த அடி எடுத்து வைத்த பின் தான் அது எங்கே வைக்கிறோம் என்று தெரிகிறது. 

விதி இராமனை முன்னே பிடித்து இழுத்து செல்கிறது...இராமன் பிறந்தது , கானகம் சென்று இராவணணை கொல்ல. அந்த விதி அவனை முன்னே இருந்து இழுத்து செல்கிறது. 

பின்னால் தர்மமோ , போகாதே இராமா, நீ போவது தர்மம் அல்ல என்று பின்னால் நின்று கெஞ்சி கேட்கிறது. 

இந்த விதிக்கும், தர்மத்திற்கும் நடுவில், மகுடம் சூட்டி வருவான் என்று ஆவலோடு இருந்த கோசலை முன் இராமன் தனியாக வந்து நின்றான். 

பாடல் 

குழைக்கின்ற கவரி இன்றி,
     கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
     தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
     ஒரு தமியன் சென்றான்.

பொருள் 

குழைக்கின்ற கவரி இன்றி = வீசப் படும் கவரி இல்லாமல் 
கொற்ற வெண்குடையும் இன்றி, = வெண் கொற்ற குடையும் இல்லாமல் 
இழைக்கின்ற விதி முன் செல்ல = வரைக்கின்ற விதி முன்னால் செல்ல 
தருமம் பின் இரங்கி ஏக, = தர்மம் பின்னால் இருந்து ஏங்க 
‘மழைக்குன்றம் அனையான் = மழை மேகங்களால் சூழப் பட்ட மலையை போன்ற இராமன் 
மௌலி  = மணி முடி , கிரீடம் 
கவித்தனன் வரும்’ என்று என்று = சூடி வரும் என்று 
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன் = மகிழ்வோடு இருந்த (கோசலை யின் முன் 
ஒரு தமியன் சென்றான் = தனியாக சென்று நின்றான் 


குழைக்கின்ற கவரி இன்றி,
     கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
     தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
     ஒரு தமியன் சென்றான்.

Tuesday, October 15, 2013

இராமாயணம் - கணையாழியின் கதை

இராமாயணம் - கணையாழியின் கதை 


இராமன் கணையாழியை சீதையை காணச் சென்ற அனுமானிடம் கொடுத்து அனுப்பினான். சீதை அதைக் கண்டு மகிழ்ந்தாள். பின் , திரும்பி வந்த அனுமன் அந்த கணையாழியை இராமனிடம் திருப்பி தந்ததாக தெரியவில்லை. 

பதிநான்கு வருடம் முடிந்து இராமன் அயோத்தி வர வேண்டும். வரவில்லை. பரதன் தீயில் விழுந்து உயிரை விடுவேன் என்று துணிகிறான். 

எங்கே பரதன் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வானோ என்று பயந்து அனுமானை அனுப்புகிறான். 

அனுமன் நந்தியம்பதியை அடைந்து, பரதனை கண்டு, இராமன் வரும் செய்தியை சொல்லி அவனிடம் கணையாழியை காண்பிக்கிறான். 

பரதன் கணையாழியை கண்டு அடைந்த மகிழ்ச்சியை கம்பன் விவரிக்கிறான்....

பாடல் 


மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்

பொருள்

மோதிரம் வாங்கித் = கணையாழியை வாங்கி 
தன் முகத்தின் மேலணைத்து = தம் முகத்தின் மேல் அணைத்து. அணைத்து என்பது இனிய பத பிரயோகம். 
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ = இராமன் நினைவாகவே பரதன் விரதம் பூண்டு இருந்தான். ஊன் உறக்கம் மறந்து, உடல் மெலிந்து காணப் பட்டான். இராமன் வந்தால், அவன் அன்பை பெரும் அளவிற்க்கு இவன் உடல் தாங்குமா என்று எல்லோரும் நினைத்தார்கள். அந்த சந்தோஷத்திலேயே இவன் உயிரை விட்டு விடுவான்  

எனா ஓதினர் = என்று கூறியவர்கள் 

நாணுற = வெட்கப் படும்படி 

ஓங்கினான் = மகிழ்ச்சியில் உயர்ந்து பூரித்து எழுந்தான் 
தொழும் தூதனை = தன்னிடம் தொழுது நின்ற தூதனான அனுமானை 
முறைமுறை தொழுது துள்ளுவான் = மீண்டும் மீண்டும் தொழுது துள்ளுவான் 

கணையாழி கடைசியில் பரதனிடம் வந்து சேர்ந்தது. இராமாயணத்தில், அதன் பின் அந்த கணையாழி வேறு எங்கும் போக வில்லை. 

கணையாழி இரண்டாம் முறையாக உயிர் காத்தது....

அது சரி, அந்த கணையாழி இன்றும் பல்வேறு விதத்தில் இன்றும் நம்மிடம் நிலவி வருகிறது...அது எது தெரியுமா ?

நாளை அதைப் பற்றி சிந்திப்போம்....




Sunday, October 13, 2013

இராமாயணம் - கணையாழி என்ன ஆயிற்று ?

இராமாயணம் - கணையாழி என்ன ஆயிற்று ?


சீதையை காண அனுமன் போன போது, இராமன் தன் கணையாழியை அனுமானிடம் கொடுத்த்து அனுப்பினான். சீதை அதை கண்டு மகிழ்ந்தாள். அனுமானை வாழ்த்தினாள்....

அது எல்லாம் சரி, அந்த கணையாழி என்ன ஆயிற்று ? அனுமன் அதை இராமனிடம் திருப்பித் தந்தானா ?

அது பற்றி ஒரு குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. 

காப்பிய முடிவில் அந்த கணையாழி பரதனிடம் சென்று சேர்கிறது. 

ஏன் ? எப்படி ?

மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்

நெடுநல் வாடை - விசிறியும் குளிரும்

நெடுநல் வாடை - விசிறியும் குளிரும் 


நெடு நல் வாடை - பெயரே இனிமையானது. தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கிறார்கள். அது வாடைக் காலம். தலைவனைப் பிரிந்த தலைவிக்கு அது நீண்ட வாடைக் காலமாக இருக்கிறது. தலைவியை சென்று சேரப் போவதால் அவனுக்கு அது நல்ல வாடைக் காலமாக இருக்கிறது. 

இதில் உள்ள பாடல்கள் எல்லாம் வாடைக் காலத்தை பின்னனியாகக் கொண்டு எழுதப் பட்டவை. மிக மிக இனிமையான பாடல்கள். அதிலிருந்து சில பாடல்கள்....

அது ஒரு வாடைக் காலம். மாலை நேரம் தாண்டி முன்னிரவு வந்து விட்டது. குளிர் காற்று சிலு சிலு என்று அடிக்கிறது.  தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் குளிருக்கு இதமாக, நீண்ட பிரிவை ஆற்றும் வகையில் கட்டி அணைத்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் , பாடல் ஆசிரியர் இதை நேரடியயாகச் சொல்லவில்லை. மறைமுகமாக சொல்கிறார். 

எப்படி ?

அழகான விசிறி ஆணியில் தொங்குகிறது. குளிர் காற்று உள்ளே வராமல் இருக்க பள்ளி அறையின் கதவு தாழிடப் பட்டிருக்கிறது. அவ்வளவுதான் சொல்கிறார். 

ஏன் படுக்கை அறையின் கதவு தாழிடப் பட்டிருக்கிறது என்பதை நாம் யூகத்திற்கு விடுகிறார். 

சொல்லாமல் சொன்ன கவிதை இது 


கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க
வான் உற நிவந்த மேனிலை மருங்கின்
வேனில் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர் வாய் கதவம் தாழொடு துறப்பக் 

பொருள்

கைவல் = கை வேலைப்பாடு நிறைந்த 
கம்மியன் = தொழிலாளியின் 
கவின் பெறப் புனைந்த = அழகு நிறைந்த 
செங்கேழ் = சிவந்த விசிறி 
வட்டஞ் சுருக்கிக் = வட்டமான அந்த தோற்றத்தை சுருக்கி, மடக்கி வைத்து 
கொடுந்தறிச் = வளைந்த சுவற்றில் உள்ள ஆணியில் 
சிலம்பி = சிலந்தி 
வான் நூல் = வலை போல 
வலந்தன தூங்க = தூங்க. அதாவது, ஆணியில் மாட்டப்பட்ட விசிறி சிலந்தி வலை போல இருக்கிறதாம். என்ன ஒரு உவமை. 
வான் உற நிவந்த = வானத்தை எட்டும் படி உயர்ந்த 
மேனிலை = மாடி 
மருங்கின் = மாடத்தில் 
வேனில் = வேனில் காலத்தில் 
பள்ளித் = படுக்கை அறையில் 
தென்வளி = தென்றல் காற்று 
தரூஉம் = வரும் 
நேர் வாய்க் கட்டளை = நேராக வரும் வழி 
திரியாது = திரியாமல் , உள்ளே வர விடாமல் 
திண்ணிலைப் = தின்மையான, உறுதியான 
போர் வாய் = பெரிய வாசலை உடைய 
கதவம் =கதவு 
தாழொடு  துறப்பக் = தாழ்பாழை இட்டு கிடக்க 

பாடல் அவ்வளவுதான். அது சொல்லியது அவ்வளவுதான். சொல்லாமல் விட்டது ஏராளம். 

திருக்குறள் - மனைவிக்குப் பயந்தவன்

திருக்குறள் - மனைவிக்குப் பயந்தவன் 



மனையாளை யஞ்சு மறுமையி லாளன் 
வினையாண்மை வீறெய்த லின்று.

மனைவிக்கு பயந்தவனுக்கு இரண்டு தீமைகள் நிகழ்கின்றன. 

ஒன்று , இந்தப் பிறவியில் அவனுக்கு நன்மை கிடையாது. அவன் செய்யும் வினைகளுக்கு வெற்றி கிடையாது. அதாவது, மனைவிக்கு பயந்து அவள் சொல்வதை கேட்டு அதன்படி செய்பவனுக்கு காரியம் வெற்றி பெறாது. அவன் தோல்வியே அடைவான்.

இரண்டாவது, அவனுக்கு மறு பிறப்பிலும் அல்லது சொர்கத்திலும் நல்லது நடக்காது. இம்மை பயன் மட்டும் அல்ல, மறுமை பயனும் கிடைக்காது அவனுக்கு. 

பொருள் 

மனையாளை = மனைவியின். மனையாள் என்றால் அது மனைவியை குறிக்காது என்று தமிழ் தெரியாத சிலர் வாதம் புரியக் கூடும். மனையாள், மனை விழைவான் என்பன ஆகு பெயர்கள். அந்த வீடு சொர்கம் போல என்றால் அந்த வீட்டில் உள்ள செங்களும் சிமின்டும் அல்ல. அதில் உள்ள மனிதர்கள், அவர்களின் குண நலன்கள். தமிழில் பல ஆகு பெயர்கள் உண்டு. 

யஞ்சு = அஞ்சுபவன், அவள் சொல்வதை கேட்டு நடப்பவன், அவள் சொல்வதருக்கு மறுப்பு சொல்லாதவன் 

மறுமையி லாளன் = அவனுக்கு மறுமை பயன் எதுவும் இல்லை. வாழ்க்கையே இல்லை என்கிறோமே அது போல  

வினையாண்மை வீறெய்த லின்று = வினை + ஆண்மை + வீறு + எய்தல் + அன்று = அவன் செய்யும் வினைகள் எந்த பயனையும் தராது. 

இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராதது - மனைவி சொல்லை கேட்பது. 

வள்ளுவர் சொல்கிறார். பரிமேல் அழகர் சொல்கிறார்....

Saturday, October 12, 2013

பிரபந்தம் - புறம் சுவர் கோலம் செய்து

பிரபந்தம் - புறம் சுவர் கோலம் செய்து 


வீடு உள்ளே எப்படியோ அலங்கோலமாக இருக்கிறது. வெளியே மட்டும் அழகாக வெள்ளை அடித்து சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். 

மன அழுக்கு ஆயிரம் இருக்கு. ஆனால் வெளியே மத சின்னங்கள் ஆயிரம். நெற்றியில், கழுத்தில், கையில், தலையில், தோளில் என்று வித விதமான சின்னங்கள். 

சின்னங்கள் ஒவ்வொவுன்றும் ஒரு சுவர்கள். இந்தியன் என்று சுவர், இந்து என்று ஒரு சுவர், சைவன்/வைணவன் என்று ஒரு சுவர், அதற்க்குள் இன்னும் எத்தனையோ சுவர்கள். இத்தனை சுவர்களையும் தாண்டி அதற்கு பின்னால் நாம் இருக்கிறோம். இப்படி ஒவ்வொருவரை சுற்றியும் பலப் பல சுவர்கள். நம் கவனம் எல்லாம் சுவர்களை அழகு படுத்துவதில்தான். 

என்ன தான் இந்த உடம்பை பல வித மதச் சின்னங்கள் இட்டு அழகு படுத்தினாலும், இது ஓட்டைச் சுவர். ஒரு நாள் விழும். புரண்டு புரண்டு விழும். உயிர் போகும் நாள் ஒன்று வரும். இந்த புற சுவர்கள் நம்மை  எமனிடம் இருந்து காக்க முடியாது என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார் 

பாடல் 

மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.

பொருள்

இராமாயணம் - பெண்களால் மரணம்

இராமாயணம் - பெண்களால் மரணம் 


சுக்கிரீவனுக்கு முடி சூட்டிய பின், இராமன் அவனுக்கு சில அறிவுரைகள் கூறுகிறான். அந்த காலத்தில் ஒருவன் ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்ளப் போகிறான் என்றால் பெரியவர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவது வழக்கம். இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்று அறிவித்தவுடன் , அவனுக்கு வசிட்டர் அறிவுரை வழங்கினார்.

இங்கே இராமன் வழங்குகிறான்.

மக்களுக்கு பெண்களால் எப்போதும் துன்பம்தான். துன்பம் என்று லேசாக சொல்லவில்லை. பெண்களால் மரணம் வரும் என்கிறான். இதில் சந்தேகமே இல்லை. அவர்கள் கட்டாயம் உயிரை எடுப்பார்கள். வாலியின் வாழ்க்கையும் எங்கள் வாழ்க்கையும் இதற்கு உதாரணம் என்கிறான். 

பாடல் 

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ? 

பொருள் 

மங்கையர் பொருட்டால்  = பெண்களால் 
எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல், = மக்களுக்கு மரணம் வரும் 

சங்கை இன்று உணர்தி;  - சந்தேகம் இல்லாமல் இதை உணர்ந்து கொள் 
வாலி செய்கையால் சாலும்; = இது வாலியின் செய்கையாலும் 
இன்னும் = மேலும் 
அங்கு அவர் திறத்தினானே = அவர்கள் (பெண்களின்) திறமையால் 
அல்லலும் = துன்பமும்
பழியும் ஆதல் = பழியும் வந்து சேர்ந்ததை 
எங்களின் காண்டி அன்றே; = எங்கள் வாழ்க்கையில் இருந்து பார்த்துக் கொள்
இதற்கு  வேறு உவமை உண்டோ = இதற்கு வேறு ஒரு சான்றும் தேவையா 

இது இராமன் சொன்னது. 

இராமன் சொல்லாமல் விட்டது ....

கூனியால் , கைகேயியால் ... சக்ரவர்த்தி தசரதன் இறந்தான் 
சுக்கிரீவன் மனைவியால் வாலி இறந்தான் 
சூர்பபனாகியால், சீதையால் - இராவணன் இறந்தான், கும்ப கர்ணன் இறந்தான், இந்திரஜீத் இறந்தான், மாரிசன் இறந்தான்