Friday, October 25, 2013

இராமாயணம் - பங்கம் இல் குணத்து எம்பி

இராமாயணம் - பங்கம் இல் குணத்து எம்பி


கோசலை இராமனிடம் கேட்டாள் - நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ - என்று.

இராமன் நினைக்கிறான்....என்ன இருந்தாலும் கோசலை  ஒரு பெண், அதிலும் வயதானவள்...தன் மகனுக்கு முடி சூட்டு விழா இல்லை என்றால் வருந்துவாள். உணர்ச்சி வசப் படுவாள். எனவே, அவளிடம்  கொஞ்சம் மெதுவாக நிதானமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இராமன் நினைக்கிறான்.

எப்போதும் ஒரு துன்பமான செய்தியை சொல்வது என்றால் , யாரிடம் சொல்கிறோம், அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று  அறிந்து,ரொம்பவும் அதை பெரிது படுத்தாமல் சிந்தித்து சொல்ல வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், நாமாக இருந்தால் எப்படி சொல்லி இருப்போம் இந்த செய்தியை...

அழுது, ஆர்பாட்டம் பண்ணி, நாமும் கவலைப் பட்டு, கோசலையும் கவலைப் பட வைத்து, பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி இருப்போம்.

இராமன் எப்படி சொல்கிறான் என்று பாருங்கள்....


பாடல்

மங்கை அம்மொழி கூறலும், மானவன்
செங்கை கூப்பி , 'நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,

துங்க மா முடி சூடுகின்றான்' என்றான்

பொருள்

மங்கை அம்மொழி கூறலும் = கோசலை அப்படி கேட்டவுடன்

மானவன் = பெருமை நிறை இராமன்

செங்கை கூப்பி  = தன் சிவந்த கைகளை கூப்பி

'நின் காதல் திரு மகன், = உன்னுடைய அன்பிற்குரிய திரு மகன்

பங்கம் இல் = குறை இல்லாத

குணத்து எம்பி = குணங்களை கொண்ட

பரதனே = பரதனே


துங்க மா முடி சூடுகின்றான் என்றான் = தூய்மையான முடியை சூட்டுகின்றான் என்றான்


உன் மகனுக்கு முடி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பரதனும் உன் மகன் தானே. அவனுக்கு முடி என்கிறான்.

கோசலை புரிந்து கொண்டிருப்பாள். இராமனுக்கு இதில் வருத்தம் இல்லை என்று. ஒரு வேளை  இராமன், "கைகேயின் மகன் பரதனுக்கு முடி"  என்று சொல்லி இருந்தால் கோசலை வருந்தி இருப்பாள். கோசலையை   வருந்த விடக் கூடாது  என்று மிக மிக பக்குவமாக  சொல்கிறான்.

பரதன் யார் - பங்க மில் குணத்தவன் - குறை ஒன்றும் இல்லாத குணம் உள்ளவன்.

எம்பி - என் தம்பி.

நின் காதல் திருமகன் - உன் அன்பிற்குரிய திருமகன்

எனவே, அரசாங்க காரியமான முடி சூட்டுதல் நிற்கவில்லை. அது நடக்கும். எனக்கு பதில் பரதன் முடி சூட்டுகிறான் என்றான்.

எவ்வளவு பெரிய சிக்கலான, கடினமான ஒரு விஷயத்தை எவ்வளவு பக்குவமாக எடுத்தச் சொல்கிறான் என்று பாருங்கள்.

இப்படி பேசி பழக வேண்டும்.

நாமும் பயப் பட்டு, மற்றவர்களையும் பயப் படுத்தும்படி பேசக் கூடாது.

அடுத்து கோசலையின்  முறை. அவள் எப்படி பதில் சொல்கிறாள் என்று பார்போம்.





1 comment:

  1. பண்பானவர் பேச்சு என்பது இப்படித்தான் இருக்கும் போலும்! என்ன ஒரு உயர் பண்பு! நமக்கு அதெல்லாம் வருமா?!

    ReplyDelete