Tuesday, February 10, 2015

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது - பாகம் 2

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது  - பாகம் 2  



இறைவனை அடைய விடாமல் நம்மை பல விதமான சிக்கல்கள் பின்னி பிணைத்து இருக்கின்றன.

அவற்றை சிக்கல்கள் என்று கூட சொல்லக் கூடாது, அவற்றை ஆபத்துகள் என்று சொல்கிறார் மணிவாசகர். எத்தனை ஆபத்துகளில் இருந்து பிழைத்தேன் என்று பட்டியல் தருகிறார்.

உணவு ஒரு பெரிய தடை. ஆபத்து. எந்நேரமும் பசி, உணவு, உண்டதைக் செரித்தல் பின் மீண்டும் பசி, உணவு என்று வாழ்நாளில் மிகப் பெரிய நேரம் உணவு தேடுவதிலும், உண்பதிலும் சென்று விடுகிறது.

இரை தேடும் மும்முரத்தில் இறை தேட முடியாமல் போகிறது.

உணவு தேட வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதில் அதிக நேரம் போகிறது.

வேலை செய்த களைப்பில் தூக்கத்தில் கொஞ்ச நேரம். வேலைக்காக அங்கும் இங்கும் அலைவதில் கொஞ்ச நேரம்.

இடைப்பட்ட நேரத்தில் காமம், அதில் இருந்து வரும் பிள்ளைகள், அதனால் வரும் சிக்கல்கள் என்று வாழ்வு செக்கு மாடு போல இவற்றிலேயே போய் விடுகிறது.

இவை போதாது என்று கல்வி என்ற பெரும் கடலில் இருந்து பிழைக்க வேண்டும். கல்வி குழப்பும். இறைவனை அடைய கல்வி ஒரு தடை.

செல்வம் ஒரு தடை.

வறுமை ஒரு தடை.

மணிவாசகரின் பட்டியல் இதோ

பாடல்


காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

பொருள்

காலை மலமொடு = காலையில் கழிக்கும் மலமொடு

கடும் பகல் பசி = பகலில் வரும் பசி

நிசி = இரவு

வேலை  = வேலை

நித்திரை = நித்திரை. மாற்றிப் படிக்க வேண்டும். பகலில் வேலை மற்றும் பசி. இரவில் நித்தரை.

யாத்திரை, பிழைத்தும் = அதற்காக அலையும் அலைச்சல்களில் இருந்து பிழைத்தும்

கரும் குழல் = கரிய முடி

செவ் வாய் = சிவந்த உதடுகள்

வெள் நகை = வெண்மையான (பற்கள் தெரிய சிரிக்கும்) சிருப்பும்

கார் மயில் = கரிய மயிலைப்

ஒருங்கிய சாயல் = ஒத்த சாயலும்

நெருங்கி = நெருங்கி

 உள் மதர்த்து = உள்ளே கிளர்ந்து எழுந்து

கச்சு அற நிமிர்ந்து = மார்பு கச்சை மீறி நிமிர்ந்து

கதிர்த்து = உயர்ந்து

முன் பணைத்து = முன் எழுந்து

எய்த்து = அடைந்து

இடை வருந்த = இடை வருந்த

எழுந்து = எழுந்து

புடை பரந்து = பரந்து விரிந்து

ஈர்க்கு = ஈர் குச்சி

இடை போகா = இடையில் போக முடியாமல்

இள முலை = இளமையான மார்புகள்

மாதர் தம் = பெண்களின்

கூர்த்த = கூர்மையான

நயனக் = கண்களின்

கொள்ளையில் = கொள்ளையில்

பிழைத்தும் = பிழைத்தும்

பித்த உலகர் = பித்தர்கள் நிறைந்த உலகில்

பெரும் துறைப் பரப்பினுள் = பெரிய கடல் சூழ்ந்த உலகில்

மத்தக் களிறு = யானை

எனும் = போன்ற

அவாவிடைப் பிழைத்தும் = ஆசையில் பிழைத்தும் (யானை போன்ற ஆசை; பேராசை)

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் = கல்வி என்ற பல கடலைப் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் = செல்வம் என்ற  துன்பத்தில் இருந்து பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் = வறுமை என்ற பழைய விஷத்தில் இருந்து  பிழைத்தும்

மிக ஆழமான பாடல். இதன் விரிவுரையை அடுத்து வரும் ப்ளாகுகளில் சிந்திப்போம்


=======================பாகம் 2 =========================================


எதுவெல்லாம் தடை, இவற்றில் இருந்தெல்லாம் தான் பிழைத்தேன் என்று சொல்ல வந்த  மணிவாசகர், எல்லாவற்றிற்கும் ஒரு வரி சொன்னார்...ஆனால் பெண்ணிடம்  இருந்து பிழைத்ததைச் சொல்ல ஆறு வரி எடுத்துக்  கொள்கிறார்.

கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:

காமம் மிகப் பெரிய ஆபத்து. அதை கடப்பது என்பது எளிதான காரியம் அல்ல. மணிவாசகருக்கு ஆறு வரி தேவைப்பட்டது.  

நமக்கு எத்தனை வரியோ ?

பெண்ணைக் கடந்து மேலும் சில ஆபத்துகளை சொல்கிறார். 

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;

கல்வி ஒரு தடை.  கல்வி தலையில் ஏற ஏற குழப்பமும் ஏறுகிறது. கல்வியின் கரையை  கண்டது யார் ?  ஞான மார்கத்தில் இறைவனை கண்டவர்களை விட பக்தி  மார்கத்தில் கண்டவர்கள்தான் அதிகம்.

கற்றாரை யான்  வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

என்பார் மணிவாசகர்.

படித்தவர்களின் சகவாசமே வேண்டாம்  என்கிறார்.படித்தவன், தான் அறிந்ததுதான்  உண்மை என்று சாதிப்பான். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவான் என்பது அவர் எண்ணம்.

அறிவு கர்வத்தைத் தரும். வித்யா கர்வம் என்பார்கள்.

கற்பனவும் இனி அமையும்....படித்தவரை போதும் என்கிறார். யாரால் முடியும் ?

படிப்பு வேண்டாம் என்று சொன்னவரின் பாடல் காலங்களை கடந்து நிற்கிறது. பெரிய பெரிய படிப்பு படித்தவர்களின் புத்தகங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.



செல்வம் எனும் அல்லலில் பிழைத்தும் 

அல்லல் என்றால் துன்பம். 

நாம் எல்லாம் செல்வம் துன்பத்தை தொலைக்கும் கருவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

பணம் மட்டும் இருந்து விட்டால், நமது எல்லா தொல்லைகளும் தொலைந்து போய் விடும்  என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், அந்த செல்வமே துன்பம் என்கிறார் அடிகள்.

சேர்க்க சேர்க்க, மேலும் மேலும் வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். சேர்த்த செல்வத்தை காக்க வேண்டும். முதலீடு செய்தால் நஷ்டம் வந்து  விடுமோ என்ற கவலை.

அதற்காக செல்வமே வேண்டாம் என்று இருந்தால் வறுமை வந்து சேருமே . அது மட்டும்  சரியா ?

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;


இல்லை. நல்குரவு என்றால் வறுமை.  வறுமை என்ற பழைய விஷத்தில் இருந்து  பிழைத்தும் என்கிறார்.

செல்வம் ஒரு அளவோடு வேண்டும். பேராசை கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டிய பாடல்.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடல்.

2 comments:

  1. அற்புதமான பாடல். என்ன தமிழ் நயம்!

    "நெருங்கி, உள் மதர்த்து, கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து, எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து, ஈர்க்கு இடை போகா இள முலை" - என்ன ஒரு வர்ணனை!

    "நயனக் கொள்ளை" - ஆஹா!

    நல்ல பாடலை தந்ததற்கு நன்றி. எப்படிப் பிழைக்கப் போகிறோமோ தெரியவில்லை!

    ReplyDelete
  2. மிகவும் அருமை ..... மிக்க நன்றி

    ReplyDelete