Tuesday, February 10, 2015

திருவாசகம் - எதுவும் வேண்டாம்

திருவாசகம் - எதுவும் வேண்டாம் 


எல்லோரும் கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள்.

கேட்காவிட்டால் கூட, இருப்பதை எடுத்துக் கொள் என்று யாரும் வேண்டிக் கொள்ள மாட்டார்கள்.

"இறைவா, என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. இவ்வளவு வேண்டாம், கொஞ்சத்தை எடுத்துக் கொள்.

நான் நிறைய படித்துவிட்டேன். என் பட்டத்தில் ஒன்றிரண்டை எடுத்துக் கொள்.

எனக்கு ஊருக்குள் நல்ல பேரும் புகழும் இருக்கிறது. இவ்வளவு வேண்டாம். என் புகழை குறைத்து விடு.

எனக்கு ஆறு அறிவு இருக்கிறது. அதில் ஒன்றை குறைத்து என்னை ஒரு ஐந்தறிவு உள்ள விலங்காக மாற்றி விடு "

என்று யாராவது வேண்டுவார்களா ?

வேண்டிய ஒரே ஆள், மாணிக்க வாசகர்.

பாடல்

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

பொருள்

உற்றாரை யான் வேண்டேன் = சொந்தக்காரர்கள் வேண்டாம்

ஊர் வேண்டேன் = சொந்த ஊர் வேண்டாம்

பேர் வேண்டேன் = புகழ் வேண்டாம்

கற்றாரை யான் வேண்டேன்; = கற்றவர்கள் உறவு வேண்டாம்

கற்பனவும் இனி அமையும்; = படிப்பும் வேண்டாம்

குற்றாலத்து = குற்றாலத்தில்

அமர்ந்து = அமர்ந்து

உறையும் கூத்தா! = வாழும் கூத்தனே

உன் குரை கழற்கே = உன்னுடைய திருவடிகளுக்கே


கற்றாவின் = கன்றை ஈன்ற பசுவின் (கற்று + ஆ )

மனம் போல = மனம் போல்

கசிந்து, உருக வேண்டுவனே! = கசிந்து உருக வேண்டுவனே

பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்.

யோசிக்கவாவது முடிகிறதா நமக்கு ? இருக்கிறதை வேண்டாம் என்று சொல்ல  எப்படி பட்ட மனம் வேண்டும் ?

அப்படிப் பட்டவர்கள் வாழ்ந்த ஊரில் நாமும் வாழ்கிறோம்.

அவர்கள் எழுதியதை நாம் படிக்கிறோம்.

நாம் தான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ?



2 comments: