Tuesday, June 30, 2015

அறநெறிச்சாரம் - யார் நண்பன் ?

அறநெறிச்சாரம் - யார் நண்பன் ?


உங்களின் நல்ல நண்பர்கள் யார் யார் என்று கேட்டால் ஒரு பட்டியல் தருவீர்கள்.

நல்ல நண்பன் என்றால் யார் ?

ஆபத்துக்கு உதவுபவன், நம்ம வீட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் கூட இருந்து உதவி செய்பவன், நம் அந்தரங்கங்கள் தெரிந்தவன், நமக்கு சமயத்தில் புத்தி சொல்லுபவன் என்று ஒரு கணக்கு வைத்திருப்போம்.

இதுதான் சரியான கணக்கா ?

நல்ல நண்பன் என்றால் யார் என்று அறநெறிச்சாரம் சொல்கிறது....

"இந்தப் பிறவியில் நம் புலன் அடக்கத்திற்கு உதவி செய்து, நாம் புகழ் அடைய துணை செய்து, மறுமையில் உயர்த கதிக்கு உயர்த்த பாடு படும் நல்ல குணம் உள்ளவரே நண்பர் என்று சொல்லப் படுவார்கள் "

பாடல்

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நாட்டா ரெனப்படு வார்.

சீர் பிரித்த பின்

இம்மை அடக்கத்தைச் செய்து  புகழ் ஆக்கி 
உம்மை உயர் கதிக்கு உய்தலால் -மெய்ம்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும்  பண்புடையாளரே
நாட்டார் எனப் படுவார்.

பொருள்

இம்மை  - இந்தப் பிறவியில்

அடக்கத்தைச் செய்து = புலன் அடக்கத்திற்கு வழி செய்து

புகழ் ஆக்கி = நமக்கு புகழ் உண்டாகும் படி செய்து

உம்மை = மறு பிறப்பில்

உயர் கதிக்கு  = வீடு பேற்றை அடைய

உய்தலால் = வழி செய்து

மெய்ம்மையே = உண்மையிலேயே

பட்டாங்கு = உலகில்

அறம் உரைக்கும் = அறத்தை கூறும்

பண்புடையாளரே = நல்ல பண்பு உள்ளவர்களே

நாட்டார் எனப் படுவார் = நண்பர்கள் என்று கூறப் படுவார்கள்.

எனவே நண்பன் என்று சொல்லுவதற்கு என்னென்ன குணம் வேண்டும் ?

- புலன் அடக்கத்திற்கு வழி செய்ய வேண்டும்.  "வாடா , தண்ணி அடிக்கப் போகலாம், தம் அடிக்கப் போகலாம்" என்று கூட்டிக் கொண்டு போகக் கூடாது.

- புகழ் அடைய வழி செய்ய வேண்டும் - புகழ் எப்படி வரும் ? கடின உழைப்பு, புத்திசாலித் தனம் போன்றவை இருந்தால் புகழ் வரும். தவறு செய்யாமல் இருந்தால் புகழ் வரும்.  வாய்மையை கடை பிடித்தால் புகழ் வரும். நல்ல ஒழுக்கம் இருந்தால் புகழ் வரும்.



- மறு பிறப்பில் உயர் கதி அடைய வழி காட்ட வேண்டும்

- நல்ல அறங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்

- நல்ல பண்பு உள்ளவனாக இருக்க வேண்டும்.

உங்கள் நண்பர்களை விடுங்கள்.

நீங்கள் எத்தனை பேருக்கு இப்படிப் பட்ட நல்ல நண்பனாக , நண்பியாக இருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று வரை இல்லாவிட்டால் என்ன, நாளை முதல் இப்படி இருக்கப் பாருங்கள்....




நளவெண்பா - மாறியவை

நளவெண்பா - மாறியவை 


நிடத நாட்டில் இது சிறப்பாக இருக்கிறது, அது சிறப்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே போனால் அந்த பட்டியல் எப்போது முடியும். எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும், பட்டியலும் நீளமாக போகக் கூடாது...எப்படி சொல்லுவது...?

புகழேந்தி சொல்கிறார்....

அந்த நாட்டில் வளைந்து இருப்பது வில் மட்டும்தான்...தளர்ந்து இருப்பது பெண்களின் கூந்தல் மட்டுமே...வாய் விட்டு அரற்றுவன பெண்களின் சிலம்பில் உள்ள மணிகள் மட்டும் தான், கலங்குவது நீர் மட்டும்தான், நல்ல நெறியை விட்டு விலகுவன பெண்களின் கண்கள் மட்டுமே...

பாடல்

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்கம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

பொருள்

வெஞ்சிலையே = கொடிய வில் மட்டும்

கோடுவன = வளைந்து இருப்பன. அப்படி என்றால் அரசனின் செங்கோலும், நீதி தேவதையின் துலாக் கோலும் வளையாமல் நிமிர்ந்து நின்றன.

மென்குழலே  = மென்மையான (பெண்களின் )  தலை முடியே

சோருவன = தளர்ந்து இருப்பன . மக்களிடம் சோர்வு இல்லை. அலை அலையாக பறக்கும் பெண்களின் கூந்தல் மட்டும் தான் தளர்ந்து இருக்கும்.

அஞ்சிலம்பே = கொலுசுகள் மட்டும் தான்

வாய்விட் டரற்றுவன = சத்தம் போட்டு அரற்றுவன. சிலம்பு ஏன் வாய் விட்டு அரற்றும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். வாய் விட்டு புலம்புபவர்கள் யாரும் இல்லை அந்த ஊரில் இல்லை. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

கஞ்கம் கலங்குவன = கலங்குவது நீர் மட்டும் தான்

மாளிகைமேல்  = மாளிகையின் மேல்

காரிகையார் = பெண்களின்

கண்ணே = கண்கள் மட்டும்தான்

விலங்குவன = விலகிச் செல்வன

மெய்ந் நெறியை விட்டு = உண்மையான நெறியை விட்டு

மெய் நெறி என்பது வீடு பேறு அடையும் வழி. பெண்களின் கண்கள் இந்த உலக இன்பங்களை  அனுபவிக்க நம்மை இழுக்கும். அந்தக் கண்கள், பற்றற்ற துறவற நிலைக்கு  நம்மை அழைத்துச் செல்லாது என்று சொல்ல வருகிறார்.

எதிர் மறையிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது.



Monday, June 29, 2015

பிரபந்தம் - மணத்தூணே பற்றி

பிரபந்தம் - மணத்தூணே பற்றி 


ஓடுகின்ற தண்ணீரில் நின்று இருக்கிறீர்களா ? பெரிய அலை அடைக்கும் போது கடற்கரையில் கால் நனைத்து இருக்கிறீர்களா ?

தண்ணி அப்படியே இழுத்துக் கொண்டு போவது போல, தள்ளிக் கொண்டு போவது போல இருக்கும் அல்லவா ?

நிற்கவும் முடியாது, அதே சமயத்தில் விழுந்தும் விடுவது இல்லை...இரண்டுக்கும் நடுவில் கிடந்து தத்தளிப்போம். எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொள்ளலாம் போல இருக்கும் அல்லவா ?

அந்த அனுபவம் ஒரு புறம் இருக்கட்டும்.....

வாழ்வில் உங்களுக்கு கிடைத்த வரங்களை, இன்பங்களை எண்ணிப் பாருங்கள்...

முதலில் ஆரோக்கியமாக பிறந்து இருக்கிறீர்கள்...நொண்டி, முடம், குருடு இல்லாமால்,

நல்ல படிப்பு, நல்ல குடும்பம், நல்ல ஊரில் பிறந்து வளர்ந்து இருக்கிறீர்கள், நல்ல நண்பர்கள், நல்ல உறவு, இனிமையான கணவன் மனைவி, பிள்ளைகள், கொஞ்சம் சொத்து...இப்படி எத்தனையோ நல்லவை உங்களுக்கு வாய்த்திருக்கிறது . எல்லோருக்கும் எல்லாமும் இருக்கும் என்று சொல்லவில்லை...பொதுவாகவே நமக்கு எல்லாம் கிடைத்து இருக்கிறது....

எத்தனை சந்தோஷம்....எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கூறுவது போல....

இதை எண்ணிப் பார்க்கிறார் குலசேகர ஆழ்வார்...

அவன் அன்பை, அருளை எண்ணி எண்ணி உருகுகிறார்...ஏதோ அவனிடம் இருந்து அருள் , அன்பு வெள்ளம் பொங்கி வருவது போல இருக்கிறது...அந்த வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகாமல் கோவில் மண்டபத்தில் உள்ள தூணை பற்றிக் கொள்கிறார்...

அப்படி ஒரு அருள் வெள்ளம்....

பாடல்

வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

சீர் பிரித்த பின்

வாய் ஓர் ஈர் ஐநூறு  துதங்கள் ஆர்த்த  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந் தீ

வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன் மேலும் மிக எங்கும்  பரந்த தன் கீழ்

காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன  மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத் தூணே பற்றி நின்று ஏன்  வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே!


பொருள் 

வாய் = வாய்

ஓர் ஈர் ஐநூறு = இரண்டு ஐநூறு அதாவது ஆயிரம்

துதங்கள் = துதம் என்றால் தோத்திரம். துதித்தல் என்பது  அதிலிருந்து வந்தது. துதங்கள் , அதன் பன்மை. பலப் பல தோத்திரங்கள்.  

ஆர்த்த  = பொங்கி வரும். அல்லது தொடர்ந்து வரும்.

ஆர்த்த பிறவித் துயர் கெட என்பார் மணிவாசகர்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

வளை உடம்பின்  = வளைந்த உடம்பின்

அழல் = தீயின் நாக்கு

நாகம் உமிழ்ந்த  = நாகம் (ஆதி சேஷன் ) உமிழ்ந்த

செந் தீ = சிவந்த தீ

வீயாத = கீழே விழாத

மலர்ச் = மலர்களால் ஆன

சென்னி = தலைக்கு மேல் உள்ள

விதானமே போல் = பந்தல் போல

மேன் மேலும் = மேலும் மேலும்

மிக எங்கும் = எங்கும்

பரந்த = பரந்து விரிந்து

தன் கீழ் = தனக்கு கீழே

காயாம்பூ  = காயாம்பூ

மலர்ப் = மலர்

பிறங்கல் அன்ன  மாலைக் = ஒளி பொருந்திய மாலை

கடி அரங்கத்து = சிறந்த திருவரங்கத்தில்

அரவணையில் = அரவு + அணையில் = பாம்பணையில்

பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும்

மாயோனை = மாயோனை

மணத் தூணே பற்றி = மணத்  தூணைப் பற்றிக் கொண்டு

நின்று = நின்று

என்  வாயார = என் வாயார

என்று கொலோ வாழ்த்தும் நாளே! = என்று வாழ்த்துவேனோ

நாம் எல்லாம் கோவிலுக்குப் போனால் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும்  என்று கேட்போம். ஒரு படி மேலே போனால், கொடுத்ததற்கு நன்றி சொல்லப்  போவோம்.

ஆழ்வார் ஒரு படி இன்னும் மேலே போகிறார்.

"நீ நல்லா இருக்கணும் " என்று இறைவனை இவர் வாழ்த்துகிறார். "பாவம் , நீ தான் எவ்வளவு கஷ்டப் படுகிறாய்...நீ நல்லா இருக்கணும்" என்று இறைவனை வாழ்த்துகிறார்.

இரண்டாவது,  மணத் தூணே பற்றி நின்று. வைணவக் கோவில்களில் சந்நிதியில் இரண்டு தூண்கள் இருக்கும். அவற்றிக்கு "திருமணத்தூண்கள் " என்று பெயர்.

பக்தி பெருகும்போது, ஆனந்த வெள்ளம் கரை புரண்டு வரும்போது, பற்றிக் கொள்ள உதவும்  தூண்கள் அவை.

இப்படி கரை புரண்டு வெள்ளத்தை , குலசேகர ஆழ்வார் மட்டும் தான் உணர்ந்தாரா ?

இல்லை . அபிராமி பட்டர் கூறுவார்

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே

கரை காணாத வெள்ளம் என்கிறார்.


இதையே அருணகிரிநாதரும் 

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே

தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே என்று கூறுவார்.

ஆனந்தமான கடல்.

ஒன்றும் இல்லாமலா எல்லோரும் சொல்லி இருப்பார்கள் ?

 


Friday, June 26, 2015

தாயுமானவர் பாடல் - எது ?

தாயுமானவர் பாடல் - எது ?


தாயுமானவர், வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வேலை பார்த்து, பின் இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தவர். 1700 களில் வாழ்ந்தவர்.

தமிழ், சமஸ்கிரதம் இரண்டிலும் புலமை பெற்றவர்.

கிட்டத்தட்ட 1700 பாடல்கள் பாடியுள்ளார்.  மிக மிக எளிமையான பாடல்கள்.

இராமலிங்க அடிகளும், பாரதியாரும் எளிமையான பாடல்கள் பாட இவர் ஒரு உதாரணம் என்று சொல்லுபவர்களும் உண்டு.

இவரை சித்தர் என்று சொல்பவர்களும் உண்டு.

எளிமையான பாடல்கள்தான் என்றாலும் ஆழ்ந்த பொருள் செறிந்த பாடல்கள்.

எல்லோரும் பாடத் தொடங்கும்போது பிள்ளையார் மேல் பாடல் பாடுவார்கள், அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தைப் பாடி நூல் தொடங்குவார்கள்.

தாயுமானவர், கேள்வியோடு பாடலை ஆரம்பிக்கிறார்.

எங்கும் நிறைந்தது எது ? ஆனதமானது எது ? அருள் நிறைந்தது எது ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விகளுக்கு விடையான அதை வணங்குவோம் என்று முடிக்கிறார்.

பாடல்

அங்கிங் கெனாதபடி  எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி
  அருளடு  நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
      அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
       தழைத்ததெது மனவாக்கினில்
  தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
       தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
       எங்கணும் பெருவழக்காய்
  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
       என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
       கருத்திற் கிசைந்ததுவே
  கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
       கருதிஅஞ் சலிசெய்குவாம்.   


கொஞ்சம்  .சீர் பிரிப்போம்


அங்கு இங்கு எனாத படி எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி அருளடு  நிறைந்தது எது ?

தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் 
தங்கும் படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு உயிராய் 
தழைத்தது எது ?

மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது ?

சமய கோடிகள் எல்லாம் தன் தெய்வம் என் தெய்வம் 
என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது ?

எங்கணும் பெரு வழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது அது ? 

கங்குல் பகல் அற நின்ற எல்லையுள்ளது எது அது  ? 

கருத்திற்கு இசைந்ததுவே 
கண்டன எல்லாம் மோன  உரு வெளியதாவும் 
கருதி அஞ்சலி செய்குவாம்.   

கடின பதம் எதுவம் இல்லை. 

பொருள் வேண்டுமா என்ன ?


Wednesday, June 24, 2015

நள வெண்பா - மனம் விரியட்டும்

 நள வெண்பா - மனம் விரியட்டும் 


இலக்கியங்கள் நம் மனதை விரிவடையச் செய்கின்றன.

மனம் ஏன் விரிய வேண்டும் ? மனம் பரந்து விரிவதால் என்ன பயன் ?

இரண்டு பயன்கள்

முதலாவது, துன்பங்கள் குறையும். பொதுவாகவே துன்பங்கள் நான், எனது, என் வீடு, என் கணவன், என் மனைவி, என் மக்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தினால் வருகிறது.

தரையிலே செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியும். ஆகாய விமானத்தில் செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியாது. மனம் உயர உயர, விரிய விரிய மேடு பள்ளம் மறைந்து சம நோக்கு வரும்.

இரண்டாவது, இறை அனுபவம் பெறலாம். நாம் தெரிந்ததில் இருந்து தெரியாததை அறிந்து கொள்கிறோம். புலி எப்படி இருக்கும் என்றால் பூனை போல இருக்கும், ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும் இன்று பிள்ளைகளுக்கு சொல்லித்தருவோம். இப்படி தெரிந்த பூனையில் இருந்து தெரியாத புலியை நம்மால் யூகம் பண்ண முடியும்.

எதைச் சொல்லி இறைவனை யூகம் பண்ண முடியும் ? இறைவன் யாரைப் போல இருப்பான் ? எதைப் போல இருப்பான் ? தெரியாது.  மனம் விரிந்து கொண்டே போனால் , எல்லாவற்றிலும் பெரியவன், உயர்ந்தவன், சிறந்தவன் என்று சொல்லப்படும்   இறைவனை அறிய முடியும்.

அதீத கற்பனைகளினால், இலக்கியங்கள் நம் மனதை பெரிதும் விரிவடையச் செய்கின்றன.

நிடத நாடு.

அங்குள்ள மாளிகைகள் எல்லாம் உயரமாக இருக்கின்றன. எவ்வளவு உயரம் என்று கேட்டால், அந்த மேகம் வரை உயரமாக இருக்கின்றன. அந்த மாளிகைகளில் மேகம் முன் வாசல் வழி வந்து பின் வாசல் வழி போகும். அவ்வளவு உயரம்.

அந்த மாளிகைகளில், பெண்கள் குளித்து முடித்து தங்கள் கூந்தலில் உள்ள ஈரம் போக  அகில், சாம்பிரானி புகை காட்டுகிறார்கள். அந்த புகை , அங்கு வரும் மேகங்களோடு  கலந்து விடுகிறது.  பின், அந்த மேகங்கள் மழை பொழிகிற பொழுது, இந்த நறுமண வாசனைகளும் கலந்து பொழிகின்றன. அதனால்  அந்த ஊரில் பெய்யும் மழை எல்லாம் பன்னீர் தெளிப்பது போல வாசமாக இருக்கிறது.

பாடல்

நின்றுபுயல் வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல்
அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.

பொருள்

நின்று = (வானில்)  நின்று

புயல் = மேகம்

வானம் = வானம்

பொழிந்த நெடுந்தாரை = பொழிந்த நீண்ட மழை

என்றும் = எப்போதும்

அகில் கமழும் என்பரால் = அகில் (சந்தனம் போல ஒரு நறுமண மரம்) வாசம் வீசும் என்று கூறுவார்கள்

தென்றல் = தென்றல் மெல்ல வந்து

அலர்த்தும் = வருடிப் போகும்

கொடிமாடத் = கொடிகள் உள்ள மாடத்தில்

தாயிழையார் = ஆயிழையார் = ஆராய்ந்து எடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்கள்

ஐம்பால் = ஐந்து பிரிவு எடுத்து பின்னப்பட்ட கூந்தல். இப்போதெல்லாம் மூன்று பிரிவு எடுத்து பின்னுகிறார்கள். அந்தக் காலத்தில் அவ்வளவு அடர்த்தியான முடி. ஐந்து பிரிவாக கூந்தலைப் பிரித்து பின்னுவார்களாம். எனவே பெண்களுக்கு ஐம்பால் என்று ஒரு அடை மொழியும் உண்டு.

புலர்த்தும் = புகை போடும்

புகை = புகை

வான் புகுந்து = வானில் உள்ள மேகங்களின் ஊடே புகுந்து

சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கற்பனை விரியும். காணாத  ஒன்றை உங்கள் கற்பனையில் காண முடியும். 

இப்படியே பழகுங்கள்...ஒரு நாள், காணாத ஒன்றை, கடவுளைக் கூட காண இது உதவலாம்.

Tuesday, June 23, 2015

கந்தர் அலங்காரம் - எப்போது படிக்க வேண்டும்

கந்தர் அலங்காரம் - எப்போது படிக்க வேண்டும் 


எதைப்  படிக்க வேண்டும் என்பது ஒரு பிரச்னை.

எப்போது படிக்க வேண்டும் என்பது அதை விட பெரிய சிக்கல்.

எப்படி படிக்க வேண்டும் என்பது அதனினும் பெரிய சிக்கல்.

கற்க கசடு அற , கற்பவை , கற்றபின், நிற்க, அதற்குத், தக என்று சொன்ன வள்ளுவர் கூட எப்போது கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை.

எப்போது படிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று அருணகிரியார் சொல்கிறார்....

இந்தப் பிறவியை அழித்து, பின் பிறக்க விடாமல் செய்யும் முருகனின் கவியை அன்போடு , பிழை இல்லாமல் படிக்க மாட்டீர்கள். தீ பிடித்தது போல கண்களில் புகை எழ, கோபத்தோடு எமன் வந்து பாசக் கயிற்றை உங்கள் கழுத்தில் போட்டு இழுக்கும் போதா கற்பீர்கள் ?


பாடல்

அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீ  ரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

அருணகிரியாரின் பாடல்களை சீர் பிரிக்காமல் படிப்பது சற்று கடினம்.

சீர் பிரித்தபின்

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் 
எழுத்துப் பிழை அற கற்கின்றிலீர்  எரி மூண்டதென்ன
விழித்துப் புகை எழ  பொங்கு வெங் கூற்றன் விடும் கையிற்றால் 
கழுத்தில்  சுருக்கிட்டிழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.

அடடா ! புரிகிற மாதிரி இருக்கே !!

அழித்துப்  = இந்த பிறவி என்ற தொடரை அழித்து

பிறக்க ஒட்டா = மீண்டும் பிறக்க விடாமல் செய்யும்

அயில் = கூர்மையான

வேலன் = வேலை உடையவன்

கவியை = கவிதையை

அன்பால் = அன்போடு

எழுத்துப் பிழை அற  = எழுத்துப் பிழை இல்லாமல்

கற்கின்றிலீர் = கற்க மாட்டீர்கள்

எரி மூண்டதென்ன = தீ பிடித்தாற்போல்

விழித்துப் = விழித்துக் கொண்டு

புகை எழ  = எங்கும் புகை எழ

பொங்கு = கோபத்தோடு வரும்

வெங் கூற்றன் = வெம்மையான கூற்றன்

விடும் கையிற்றால் = விடும் பாசக் கயிற்றால்

கழுத்தில் = கழுத்தில்

சுருக்கிட்டிழுக்கும் = சுருக்குப் போட்டு இழுக்கும்

அன்றோ  = அன்றைய தினமா

கவி கற்கின்றதே = கவி கற்பது ?

பின்னாளில் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள்.

காலன் எப்போது நம் கழுத்தில் கயிற்றை மாட்டுவான் என்று தெரியாது.

நல்லவற்றை முடிந்தவரை சீக்கிரம் படித்து விடுங்கள்.

நமக்கு கிடைத்தது போல் பெரியவர்கள், குருமார்கள் யாருக்குக் கிடைத்தார்கள் ?

நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். உங்கள் முன்னவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காசு போட்டால் கிடைக்குமா கந்தரலங்காரம் ?


அறநெறிச்சாரம் - எதைப் படிக்க வேண்டும் ?

அறநெறிச்சாரம் - எதைப் படிக்க வேண்டும் ?


ஒரு புத்தகத்தை படித்து முடிக்க மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகலாம். ஒரு வருடத்தில் பத்து அல்லது பன்னிரண்டு புத்தகங்கள் வாசித்து முடிக்கலாம்.

ஒரு அம்பது வருடம் தொடர்ந்து வாசித்து வந்தால் 500 முதல் 600 புத்தகங்கள் அதிக பட்சம் வாசிக்கலாம்.

இருக்கின்ற புத்தககளோ கோடிக்கணக்கில்.

இனி வரப் போகும் புத்தகங்களோ கணக்கில் அடங்காதவை.

இவற்றில், எதைப் படிப்பது, எதை விடுவது  என்று மலைப்பாக இருக்கும்.

இருக்கின்ற கொஞ்ச நாளில் மிக மிக சிறந்த நூல்களை வாசிக்க வேண்டும்.

எது சிறந்த நூல், அதை எப்படி தேர்ந்து எடுப்பது என்று அறநெறிச்சாரம் சொல்கிறது.

ஒரு புத்தகத்துக்கு நீங்கள் இரண்டு விலை கொடுக்கிறீர்கள்.

ஒன்று, அந்த புத்தகம் வாங்க கடைகாரனுக்கு தரும் விலை. இது மிக மிக சிறய விலை.

இரண்டாவது, அந்த புத்தகத்தை நீங்கள் படிக்க செலவழிக்கும் உங்களின் மதிப்பு மிக்க நேரம். இது, மிக மிக அதிகமான விலை.

பணம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வினாடி நேரம் கூட நம்மால் அதிகமாக சம்பாதிக்க முடியாது.

எனவே, மிக மிக விலை கொடுத்து ஒரு புத்தகத்தை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிகமான விலை கொடுத்துதங்கத்தை வாங்குபவன் எப்படி வாங்குவான் ?

அதை நிறுத்து, அதை வெட்டிப் பார்த்து, நெருப்பில் சுட்டு, கல்லில் உரைத்து தங்கத்தை வாங்குவதைப் போல, நல்ல நூல்களை தரம் பார்த்து வாங்க வேண்டும்.

தங்கத்தை வாங்க வேண்டும் என்றால் இப்படி வாங்க வேண்டும்.

புத்தகங்களில் தங்கம் போல உயர்ந்தவை எது ?

 இந்த பிறவி என்ற பந்தத்தை அறுக்கும் நூல்களே தங்கம் போல உயர்ந்த நூல்கள். அந்த மாதிரி நூல்களை தேடிப்  பிடித்து படிக்க வேண்டும்.

பாடல்


நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால்--பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகுமற் றாகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.


பொருள்

நிறுத்தறுத்துச் = நிறுத்து , அறுத்து

சுட்டுரைத்துப் = சுட்டு (தீயில்) , உரைத்து (கல்லில்)

பொன் கொள்வான் போல = பொன்னை (தங்கத்தை) வாங்குபவன் போல

அறத்தினும் = அற நூல்களையும்

ஆராய்ந்து புக்கால் = ஆராய்ந்து பார்த்தால்

பிறப்பறுக்கும் = பிறப்பை அறுக்கும்

மெய்ந்நூல் = உண்மையை உரைக்கும் நூல்கள்

தலைப்பட லாகும் = கிடைக்கும்

மற் றாகாதே = மற்று ஆகாதே

கண்ணோடிக் கண்டதே கண்டு = கண்ணால் கண்ட நூல்களை எல்லாம் வாங்கக் கூடாது.


அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

அழித்து பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் 
எழுத்துப் பிழை அற கற்கின்றிலீர் 

என்பார் அருணகிரி.

பிறக்காமல் இருக்க உதவும் நூல்களை படியுங்கள் , தவறு இல்லாமால் அன்போடு படியுங்கள்  என்கிறார்.

இதையே வள்ளுவரும்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

குறள் விளக்கம்

நல்ல நூல்களை கற்று அதன் உண்மையான பொருள்களை அறிந்தவர் மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியை அறிவார்கள் என்கிறார்.

அடுத்த முறை வார பத்தரிகைகள், மாத நாவல்கள்,  சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், மர்ம நாவல்கள், என்று வாங்குமுன் சற்று சிந்தியுங்கள்.

அவை பிறப்பறுக்கும் நூல்களா என்று ?

Sunday, June 21, 2015

அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும்

அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும் 


துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த இடத்தை தந்திருக்கிறது.

நீத்தார் பெருமை என்று ஒரு அதிகாரமே ஒதுக்கி இருக்கிறார் வள்ளுவர்.

அப்படி என்ன துறவிகளுக்குப் பெருமை ?

மனித மனம் மயக்கமுறும் தன்மை கொண்டது. நல்லது எது, கெட்டது எது என்று அறியாமல் தடுமாறும் இயல்பு கொண்டது. எது சரி, எது தவறு என்று தெரியாமல் மயங்கும்போது யாரிடம் போய் கேட்பது ? யார் நமக்கு சரியான வழியை காட்டுவார்கள் ?

தனி மனிதன் மட்டும் அல்ல, சில சமயம் சமுதாயமே குழம்பி தவிக்கும் ?

இன்றும் கூட சமுதாயம் அப்படி பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.

உதாரணமாக ஒரே இனத்தில் உள்ளவர்கள்  (ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் ) திருமணம் செய்து கொள்ளலாமா ? துப்பாக்கி வைத்துக் கொள்ளலாமா ? விவாகரத்து சரியான தீர்வா ? என்று பல சிக்கல்களில் கிடந்து உலகம் உழல்கிறது.

யாரை கேட்டு உலகம் தெளிவு பெற முடியும் ?

துறவிகளுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது, வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகு பாடு கிடையாது...ஆசை கிடையாது , நாம்  செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இலாபமும் இல்லை , நட்டமும் இல்லை.

எனவே, அறிவுரை பெற சமுதாயமும், தனி மனிதர்களும் அவர்களிடம் போய் நின்றார்கள்.

அப்படி அறிவுரை சொல்லத் தக்கவர்கள் யார் என்று அறநெறிச்சாரம் கூறுகிறது.


பாடல்

அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
பன்னுதற்குப் பாற்பட் டவன்.

சீர் பிரித்த பின்

அறம் கேட்டு அருள் புரிந்து  ஐம்புலன்கள் மாட்டும்
 இறங்காது  இருசார் பொருளும்-துறந்து அடக்கி 
 மன்னுயிர்க்கு உய்ந்து போம் வாயில் உரைப்பானேல் 
 பன்னுதற்குப் பாற் பட்டவன்.

பொருள்

அறம் கேட்டு = பல அற நூல்களை  கேட்டு அறிந்து

அருள் புரிந்து = அருள் புரியும் நோக்கத்தோடு

 ஐம்புலன்கள் மாட்டும் = ஐந்து புலன்களின் பால்

 இறங்காது = சாராமல்

 இருசார் பொருளும் =   அகப்பற்றையும் புறப் பற்றியும்

துறந்து = துறந்து

அடக்கி = புலன்களை அடக்கி

மன்னுயிர்க்கு  = உயிர்களுக்கு

உய்ந்து போம் = பிறவிப் பிணியில் இருந்து விட்டு வீடு பெற

வாயில் = வழியை

உரைப்பானேல் = உரைப்பவனே

பன்னுதற்குப் = அற உரைகளை சொல்லப்

பாற் பட்டவன் = நல்லவன்


அறவுரை சொல்வதற்கு இத்தனை தகுதிகள் வேண்டும் என்கிறது அறநெறிச் சாரம். 

முதலில் , தெளிந்த அறிவு 

இரண்டாவது, புலனடக்கம் 

மூன்றாவது, உயிர்கள் மேல் அருள் 

நான்காவது , உயிர்கள் வீடு பேறு பெற வேண்டும் என்ற சிந்தனை 

இவை நிறைந்தவனே அறவுரை சொல்லச் சிறந்தவன்.

பிறர் சொல்லும் அறிவுரையை கேட்பதன் முன்னம்,  அவர்களுக்கு இந்த தகுதி இருக்கிறதா  என்று பாருங்கள்.




நள வெண்பா - சேற்றில் வழுக்கிய யானைகள்

நள வெண்பா -  சேற்றில் வழுக்கிய யானைகள் 


இலக்கியங்கள் நமக்கு அழகாக எழுத பேசக் கற்றுத் தருகின்றன.

நிடத நாட்டின் வளம் பற்றி கூற வருகிறார் புகழேந்தி.

ஒரு நாட்டின் வளம் பற்றி நாலு வரியில் கூற வேண்டும்.

அந்த ஊர் செல்வச் செழிப்போடு இருந்தது.

பெண்கள் எல்லாம் அழாக இருந்தார்கள்.

படை பலம் பொருந்தி இருந்தது.

மக்கள் எல்லாம் நன்றாக கல்வி கற்று இருந்தார்கள்.

கலை செழித்து இருந்தது.

கலை செழிக்க வேண்டும் என்றால், அதை பார்த்து இரசிக்க மக்கள் வேண்டும்.  மக்கள் கலை இரசனையோடு இருந்தார்கள்.

ஊரில் சண்டையும் சச்சரவும் இருந்தால் கலையை இரசிக்க நேரம் இருக்காது. ஊர் அமைதியாக இருந்தது.

என்று இத்தனையும் நாலு வரியில் சொல்ல வேண்டும். அதுவும் அழகாக சொல்ல வேண்டும்.

சொல்கிறார் புகழேந்தி....

பாடல்

கோதை மடவார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீதக் களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்தம்  என்றுளதோர்

ஞானக் கலைவாழ் நகர்.


பொருள்

பெண்கள் குளிக்கும் போது குங்குமம், சந்தனம் போன்ற வாசனைப் பொருள்களை  நீரில் சேர்த்துக் குளிப்பார்கள். அப்படி குளித்து விட்டு, உடை மாற்றி, அணிகலன்களை அணிந்து கொண்டு தெருவில் செல்கிறார்கள். அவர்கள் அப்படி செல்லும் போது அவர்களின் கூந்தலில் உள்ள நீர்  சொட்டு சொட்டாக வடிகிறது. அப்படி வடிந்த நீர், தெருவில் உள்ள மணலோடு சேர்ந்து அதை சேறாகச் செய்கிறது. அந்தச் சேற்றில் நடந்து வந்த பெரிய கரிய யானைகள் தொப் தொப்பென்று வழுக்கி வழுக்கி விழுகின்றன. அந்த ஊரில் ஞானமும், கலையும் செழிந்து வாழ்ந்தது.

கோதை = பூ மாலை அணிந்த

மடவார் = பெண்கள்

தம் = தங்களுடைய

கொங்கை = மார்பின் மேல்

மிசைத் = அசைச் சொல்

திமிர்ந்த = பூசிய, தடவிய

சீதக் = குளிர்ந்த

களபச் = கலவை

செழுஞ்சேற்றால் = செம்மையான சேற்றால்

வீதிவாய் = வீதியின் வழியே

மானக் = பெரிய

கரி = யானைகள்

வழுக்கும் = வழுக்கி விழும்

மாவிந்தம் = மாவிந்தம்

என்றுளதோர் = என்று உள்ள


ஞானக் = ஞானம்

கலை = கலைகள்

வாழ் நகர் = வாழுகின்ற நகரம்.

யானைகள் நிறைந்த ஊர் என்பதால் ஊரின் பலம் புலப்படும்.

ஞானமும், கலையும் வாழும் ஊர்.



பிரபந்தமும் , இன்னொரு சேறு செய்வதைப் பற்றி கூறுகிறது.

திருமாலின் பெருமைகளை எண்ணி எண்ணி பக்தர்கள் கண்ணில் இருந்து ஆறாக ஓடிய நீர் திருவரங்கத்து பிரகாரங்களை நனைத்து சேறாகச் செய்து விடுமாம். அந்த சேறே என் என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் திருமண் என்று உருகுகிறார் ஆழ்வார்.

பாடல்

ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே







Friday, June 19, 2015

பிரபந்தம் - படியாய் கிடக்கும் படி வேண்டுவனே

பிரபந்தம் - படியாய் கிடக்கும் படி வேண்டுவனே 


காரணம் இல்லாமல் காரியம் இல்லை. வாழ்வில் ஒன்று நடக்கிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அப்படி என்றால் விதி ஒன்று இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். விதி ஒன்றை ஏற்றுக்கொன்றால் பின் நம் செயல் என்று ஒன்றும் இல்லை. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். எதற்கு வேலை செய்ய வேண்டும், எதற்கு இறைவனை வணங்க வேண்டும் என்ற கேள்வியும் எழும்.

நல்ல வினை செய்தால் நல்லது நடக்கும். தீய வினை செய்தால் தீயது நடக்கும் என்று கொண்டால் அதிலும் ஒரு சிக்கல். நல்லது செய்து, அதனால் வரும் நன்மையை அனுபவிக்கும் போது ஏதாவது ஒரு தீமை செய்து விடலாம். பின் , அந்த தீமையை அனுபவிக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். இப்படி முடிவு இல்லாமல் போய் கொண்டே இருந்தால் என்ன செய்வது. இதுக்கு ஒரு முடிவுதான் என்ன ?

குலசேகர ஆழ்வார் சொல்கிறார்.

செடி போல அடர்ந்து வளர்ந்து கிடக்கும் இந்த வலிமையான வினைகளை அவன் தீர்த்து தீர்த்து வைப்பான். அப்படிப்பட்ட திருமாலின் கோவில் வாசலில் பக்தர்கள் நாளும் வந்து போவார்கள். அப்படி அவர்கள் வந்து போகும் வழியில் இருக்கும் படியாக வேண்டுவனே என்று வேண்டுகிறார்.

படியாகக் கிடப்பதில் ஒரு சௌகரியம். பக்தர்களையும் பார்க்கலாம். ஆண்டவனையும்  பார்க்கலாம்.

பாடல்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

பொருள்


செடியாய = செடி போல வளர்ந்து கிடக்கும் 

வல்வினைகள் = வலிமையான வினைகளை

அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

வல் வினை போகும் என்கிறது விவேக சூடாமணி 

இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க 
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம் 
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே. 
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே

நன்மை தீமை என்று வாழ்வோடு இழையும் வினைகளின் வழியே சென்று வாழ்வு முடியும் போது நீ வந்து அந்தத் துயரில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்பார் அபிராமி பட்டர் 



தீர்க்கும் = தீர்த்து வைக்கும்

திருமாலே = திரு மாலே

நெடியானே = உயர்ந்தவன். உலகளந்தவன்

வேங்கடவா = திருவேங்கட மலையில் இருப்பவனே

நின் = உன்னுடைய

கோயி லின் = கோவிலின்

வாசல் = வாசலில்

அடியாரும் = அடியவரும்

வானவரும் = தேவர்களும்

மரம்பையரும் = அரம்பையுரும்

கிடந்தியங்கும் = கிடந்து இயங்கும்

படியாய்க் = படிக்கல்லாக

கிடந்துன் = கிடந்து உன்

பவள வாய் = பவளம் போன்ற சிவந்த ஆதாரங்களை

காண்பேனே = காண்பேனே

இது மேலோட்டமான அர்த்தம்.



இன்னும் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டவனை அடைய முடியாது என்பது வைணவத்தின்  ஆழ்ந்த நம்பிக்கை. ஒரு விதத்தில் அது சரிதான். இறைவனை நமக்கு  யார் அடையாளம் காட்டுவார்கள்.

அப்பாவை , அம்மா அடையாளம் காட்டுவாள். அம்மா சொல்லாவிட்டால் , அப்பா யார் என்று தெரியாது நமக்கு.

குருவை , அப்பா அடையாளம் காட்டுவார். கை பிடித்துக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்து விடுவது அப்பாவின் கடன். "சான்றோனாக்குவது தந்தைக்கு கடனே".

ஆண்டவனை, குரு அடையாளம் காட்டுவார். கல்வியின் மூலம் கடவுளை அடைய வேண்டும் என்பது கருத்து.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர். குரு அறிவைத் தருவார். அறிவு இறைவனிடம் கொண்டு சேர்க்கும் .

எனவே, மாதா, பிதா, குரு , தெய்வம் என்று வரிசைப் படுத்தினார்கள் நம் முன்னவர்கள்.

இறைவனுக்கும் , நமக்கும் இடையில் இருப்பவர் ஆசாரியன்.

இறைவனுக்கும் , நமக்கும் இடையில் இருப்பது வாசல் படி. அந்தப் படியைத் தாண்டி தானே  இறைவனை அடைய முடியும் ?

அந்த படியாக நான் இருக்கிறேன் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

உங்களை, இறைவனிடம் கொண்டு சேர்கிறேன் என்கிறார்.

இதற்கு முந்தைய பாசுரத்தில் , வழியாக இருப்பேன் என்றார். (இந்த ப்ளாகில் போடவில்லை. மூலத்தை தேடிச் சென்று படியுங்கள் ....)

வழியைத் தாண்டி , படியாகவும் இருக்கிறேன் என்கிறார்.

சீக்கியர்கள் தங்கள் கோவிலை குருத்வாரா என்று அழைப்பார்கள்.

த்வாரா என்றால் வழி.

ஹரித்துவார் என்று கூறுவதைப் போல.

குருவே வழி - குருத்வார்...

படியாய் கிடந்து ....

இன்றும் கூட  அனைத்து வைணவத் தலங்களிலும் , கோவில் வாசலுக்கு குலசேகரப் படி  என்றே கொண்டாடுகிறது வைணவம்.

அவர் படியாக கிடக்கிறார் என்பதல்ல பொருள்...அவர் வழியாகவும் இருக்கிறார் என்பது  பொருள்.

பிரபந்தத்தைப் படியுங்கள்...அதுதான் வழி.


நள வெண்பா - நிடத நாட்டுச் சிறப்பு

நள வெண்பா - நிடத நாட்டுச் சிறப்பு


எதையும் இரசிக்க எங்கே நேரம் இருக்கிறது நமக்கு.

மழையை, மனைவியின் புன்னகையை, காதோரம் கவிதை பேசும் காற்றை, பிள்ளைகளின் வெகுளித்தனத்தை, புது ஆடையின் மணத்தை , குளிர் காற்று தரும் உற்சாகத்தை, ஜன்னலோரம் கசியும் சூரிய ஒளியை...இப்படி எதையுமே ஒரு நிமிடம் நின்று பார்த்து இரசிக்க நேரம் இல்லை.

இயந்திர கதியாக வாழ்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

புது இடத்துக்கு சுற்றுலா போனால் கூட, அங்குள்ள இடங்களை புகைப்படம் பிடிக்கவும், facebook ல்  போடுவதிலும்தான் எண்ணம் போகிறதே தவிர அவற்றை இரசிக்க நேரம் இல்லை.

இலக்கியங்கள் , வாழ்வை இரசிக்கக் கற்றுத் தருகின்றன.

இலக்கியங்கள் இல்லாவிட்டால் வாழ்கை வெறிச்சோடிப் போய் விடும்.

நளனின் நாடான நிடதை நாட்டை புகழேந்தி வர்ணிக்கிறார்....அடடா என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு சொல் வளம், கவிதையின் ஓட்டம்...

வாருங்கள் இரசிப்போம்....

பாடல்

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.


பொருள்

காமர் = அழகான, விருப்பமான. என்ன ஒரு அருமையான சொல். அழகும் விருப்பமும் ஒரே சொல்லில். அழகில்லாத ஒன்றின் மேல் விருப்பம் வருமா ?

கயல் = மீன்கள்

புரளக் = புரள

காவி = சிவந்த

முகை = மொட்டு, அரும்பு

நெகிழத் = மலர

தாமரையின் = தாமரை மலரின்

செந்தேன் = சிறந்த தேன்

தளையவிழப் = மலரில் இருந்து வழிய

பூமடந்தை = திருமகள்

தன் = அவளுடைய

நாட்டம் = பார்வை, இங்கு கண் என்று கொள்ளலாம் 

போலும் = போல

தகைமைத்தே = சிறப்பு உடையதே

சாகரஞ் சூழ் = கடல் சூழ்ந்த

நன்னாட்டின் = நல்ல நாடுகளில்

முன்னாட்டும் நாடு = முன்னால் நிற்கும் நாடு

சரி, இதில் என்ன அப்படி சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா ...பொறுமை, பொறுமை....இது ஒரு முன்னுரைப் பாடல்...இனி வரும் பாடல்களைப் பாருங்கள்...

வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தெரியாமலா சொன்னார்கள் !

Wednesday, June 17, 2015

பிரபந்தம் - பெருமாளை தரிசனம் பண்ண சிறப்பு வழி

பிரபந்தம் - பெருமாளை தரிசனம் பண்ண சிறப்பு வழி 


பெருமாளை தரிசனம் பண்ண எத்தனையோ பேர் காத்து இருப்பார்கள். எத்தனையோ நாள் காத்து இருப்பார்கள். நாமும் காத்து இருக்க வேண்டி இருக்கும்.

ஆழ்வாருக்கு பொறுமை இல்லை.

உடனே பார்க்க வேண்டும் பெருமாளை.

குருகாய் பிறப்பேன், மீனாய் பிறப்பேன் என்று நினைத்தார்.

குருகு என்றால் பறந்து போகும்.

மீன் என்றால் நீர் வற்றினால் இறந்து போகும்.

பின் எப்படி பெருமாளை தரிசிப்பது.

ஆழ்வார் ஒரு வழி கண்டு பிடித்தார்.

பெருமாளுக்கு கைங்கரியம் செய்யும் ஒரு ஆளாக போனால் மற்றவர்கள் விலகி வழி  விட்டு விடுவார்கள். நாம் நேராக பெருமாளுக்கு பக்கத்தில் போய் விடலாம். அது மட்டும் அல்ல, ஜர்கண்டி ஜர்கண்டி என்று விரட்டவும்  மாட்டார்கள்.எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கேயே இருக்கலாம் என்று நினைத்து, பெருமாள் உமிழும் பொன் வட்டில் கொண்டு செல்லும் ஆள் ஆவேனே என்று வேண்டுகிறார்.

பாடல்


பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

சீர் பிரித்த பின் 

பின்னல் இட்ட  சடையானும் பிரமனும் இந்திரனும் 
துன்னிட்டு  புகல் அரிய  வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடர் ஆழி வேங்கடக் கோன் தான் உமிழும் 
பொன் வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேனாவேனே

பொருள் 

பின்னல் இட்ட  சடையானும் = சிவனும்

பிரமனும் = பிரமனும்

இந்திரனும் = இந்திரனும்

துன்னிட்டு  = நெருங்கி

புகல் அரிய = உள்ளே செல்ல முடியாத

வைகுந்த நீள்வாசல் = நீண்ட வைகுந்தத்தின் வாசலில்

மின்வட்டச்  = மின்னல் வட்டம் இடுவதைப் போன்ற

சுடர் = சுடர் விடும்

ஆழி = சக்கரத்தைக் கொண்ட

வேங்கடக் கோன் = திரு வேங்கட மலையின் தலைவன்

தான் உமிழும் = அவன் உமிழும்

பொன் வட்டில் = தங்க வட்டில் (எச்சில் உமிழும் பாத்திரம் )

பிடித்து = பிடித்து

உடனே புகப் பெறுவேனாவேனே = உடனே உள்ளே செல்வேன்

சரி, அது என்ன சிவன், பிரமன், இந்திரன் போக முடியாத வாசல் ? ஆழ்வாருக்கு  சிவன் மேல் கோபமா ? பெரியவர்களுக்கு இப்படி ஒரு வெறுப்பு இருக்குமா ? துவேஷம் இருக்குமா ?  

இருக்கவே இருக்காது.

சரியாகப் புரிந்து கொள்ளமால், பல பேர் வைணவம் படித்தால் சைவம் படிப்பது இல்லை, சைவம் படித்தால் வைணவம் படிப்பது இல்லை ஒரு வெறுப்பு கொள்கிறார்கள். 

சைவ வைணவ சண்டை எல்லோரும் அறிந்ததே. 

ஆழ்வார் என்ன சொல்ல வருகிறார் என்றால் 

சிவன் - எல்லாம் துறந்து சுடுகாட்டில் போய் இருக்கிறான். சிவன் துறவறம்.

பிரமன் - கல்விக் கடவுளான சரஸ்வதியை மணந்தவன். பிரமன் ஞான மார்க்கம். 

இந்திரன் - நீண்ட பல யாகங்களைச் செய்து, அரக்கர்களை வென்று , தேவலோக பதவி பெற்றவன். அது கர்ம யோகம். 


இறைவனை கர்ம யோகத்தாலோ, ஞான யோகத்தாலோ, துறவினாலோ இறைவனை அடைவது என்றால் நீண்ட காலம் ஆகும். நீள் வைகுண்ட வாசல். 

அதை விட பக்தி மார்க்கம் எளிதானது நிரந்தரமானது என்று சொல்ல வருகிறார். 

ஞான மார்கத்தில் சென்றாலும் பின்னால் சந்தேகம் வரும். வெளியே அனுப்பி விடுவார்கள். மீண்டும் உள்ளே செல்ல வேண்டும். 

பக்தி அப்படி அல்ல. ஒரு முறை அடைந்து விட்டால், எப்போதும் அவன் கூடவே இருக்கலாம் என்று சொல்ல வருகிறார். 

சிந்திப்போம்.

 

Tuesday, June 16, 2015

அறநெறிச்சாரம் - அற உரைக்கு தேவையான நான்கு

 அறநெறிச்சாரம் - அற உரைக்கு தேவையான நான்கு 


யாரைப் பார்த்தாலும் அறிவுரை வழங்கத் தொடங்கி விடுகிறார்கள். அதுவும் கொஞ்சம் வயசு ஆகிவிட்டால் , அதுவே ஒரு தகுதி போல அறிவுரை சொல்லத் தொடங்கி விடுவார்கள்.

யார் சொல்வதை  கேட்பது ? எதை கேட்பது ? எதை விடுவது ? என்ற குழப்பம் நமக்கு வரும்.

அவர்கள் சொல்வது சரிதானா என்று எப்படி அறிந்து கொள்வது ? இல்லை என்றால் பெரியவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா ?

அறநெறிச்சாரம் சொல்கிறது.

அற உரைக்கு நான்கு முக்கியமான தேவகைள் இருக்கின்றன.

முதலாவது - சொல்பவன்

இரண்டாவது -   கேட்பவன்


மூன்றாவது - சொல்லப்படுவது

நாலாவது - சொன்னதால் விளையும் பயன்
   
இந்த நான்கிலும் உள்ள குறைகளை நீக்கி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாடல்

 உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ
  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி
  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
  வான்மையின் மிக்கார் வழக்கு.

பொருள்

உரைப்பவன் = சொல்பவன். கண்ட சாமியார் சொல்வதையும் கேட்கக் கூடாது. 

கேட்பான்  = கேட்பவன்

உரைக்கப்படுவது = சொல்லப் படுவது

உரைத்தனா லாய பயனும் = சொன்னதால் ஆன பயனும்

புரைப்பின்றி = குற்றம் இன்றி

நான்மையும் = இந்த நான்கிலும்

போலியை நீக்கி = குறைகளை நீக்கி

அவைநாட்டல் = அவற்றை எடுத்துக் கொள்ளுதல்

வான்மையின் மிக்கார் வழக்கு = அற நெறியில் நின்றவர்களின் வழி


யாரோ சொன்னார்கள் என்பதற்காக அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

இப்படி ஒரு நூல் யாருக்குக் கிடைக்கும் ? நான் சொல்கிறேன் என்பதற்காக  நீ இவற்றை  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நீயே ஆராய்ந்து பார்த்து  சரி என்றால் ஏற்றுக் கொள் என்று சொல்லும் துணிவும் நம்பிக்கையும் உள்ள புத்தகம் அறநெறிச்சாரம்.

அதைப் படிக்க வேண்டுமா இல்லையா ?


நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?


நமக்கு ஒரு துன்பம் வரும்போது, "ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நிகழ்கிறது...நான் என்ன பாவம் செய்தேன்...யார் குடியையும் கெடுத்தேனா, பொய் சொன்னேனா, கொலை களவு செய்தேனா...எல்லாருக்கும் நல்லது தானே செய்தேன்...எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை " என்று மனம் சோர்ந்து வாடிப் போவோம்.

அந்த மாதிரி சமயங்களில் இலக்கியங்கள் ஆறுதலும் தேறுதலும் தருகின்றன.

எப்படி ?

முதலாவது, நமக்கு வந்த துன்பங்கள் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. நம்மை விடவும் அதிகமான, மிக அதிகமான துன்பங்கள் அடைந்தோர் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அதைப் பார்க்கும் போது நம் துன்பம் அப்படி ஒன்றும் தாங்க முடியாத ஒன்று அல்ல என்று தோன்றும்.

இரண்டாவது, அப்படி துன்பம் வந்தபோது அதை அந்த இலக்கியத்தில் வந்த கதா பாத்திரங்கள் எப்படி சமாளித்தன என்று கூறி நம்மை வழி நடத்தும்.

இப்படி நம் மனதுக்கு இலக்கியங்கள் இதம் தரும்.

மகா பாரதம்.

இதிகாசங்கள் மூன்று.

இராமாயணம், மகா பாரதம், சிவ இரகசியம்.

இதில் மகா பாரதத்துக்கு மட்டும் தான் மகா என்ற அடை மொழி உண்டு.

ஏன் என்றால் அதில் இல்லாத தர்மம் இல்லை.

தர்மன் சூதாடி, நாடு நகரம் எல்லாம் இழந்து, அவமானப் பட்டு, காட்டில் வந்து இருக்கிறான்.

ஒன்றல்ல, இரண்டல்ல பன்னிரண்டு வருடங்கள்.

யோசித்துப் பாருங்கள், ஒரு சக்ரவர்த்தி, அத்தனையும் இழந்து, காட்டில் வாழ்வது என்றால் எப்படி இருக்கும்.

அதிலும் ஒரு நன்மை விழைந்தது. பலப் பல முனிவர்களும், சான்றோர்களும் தருமனை  சந்தித்து அவனுக்கு ஆறுதலும், தேறுதலும் , உபதேசமும் செய்தார்கள்.

12 வருடங்கள். மிகப் பெரிய ஞானிகள் தந்த அரிய பெரிய அறிவுரைகள். யாருக்குக் கிடைக்கும்.

அப்படி கிடைத்த ஒன்று தான் நளவெண்பா.

தருமன், வியாச முனிவரிடம் கேட்கிறான்....

"கண்ணை இழந்து, மாய சூது ஆடி, மண்ணை இழந்து, காட்டுக்குப் போய் , என்னை போல துன்பப் பட்டவர்கள் யாரும் உண்டா "

என்று வருந்தி வினவுகிறான்.

அப்போது , தருமனுக்கு அவனை விட துன்பப் பட்ட நள மன்னனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

நள வெண்பா....படிக்கப் படிக்கப் திகட்டாத பாடல்கள்.

மிக எளிமையான, இனிமையான, மனித உணர்வுகளை அழகாகச் சொல்லும் வெண்பாக்கள்.

படிக்கும் போது நம்மை மிக மகிழச் செய்யும் பாடல்கள். அருமையான உதாரணங்கள், அற்புதமான சொற் தெரிவுகள்....

காதல், ஊடல், கூடல், வெட்கம், நாணம், பரிவு, பிரிவு, துயரம், ஏக்கம் என்று கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அத்தனை நுணக்கமான உணர்வுகளை படம் பிடிக்கும் நூல்.

அதிலிருந்து சில பாடல்கள் இன்னும் வரும் ப்ளாகில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.

பொருள்

கண்ணிழந்து = கண்ணை இழந்து. இங்கே கண் என்று கூறியது அறிவை. அறிவுக் கண்ணை. கண் பார்க்க உதவுகிறது. அது போல அறிவும் உண்மையைக் காண உதவுகிறது.

 மாயக்  = மாயமான

கவறாடிக் = கறவு + ஆடி = சூது ஆடி

காவலர் தாம் = அரசர்கள் தான்

மண்ணிழந்து = மண்ணை இழந்து

போந்து = போய்

வனம் = காட்டை

நண்ணி  = சேர்ந்து

விண்ணிழந்த = வானில் இருந்து விழும்

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூல் = பூனூலை அணிந்த

மார்ப  = மார்பனே (வியாசனே )

மேதினியில் = உலகில்

வேறுண்டோ = வேறு யாராவது இருக்கிறார்களா

என்போல் = என்னைபோல

உழந்தார் இடர்.= துன்பத்தில் உழன்றவர்கள் ?

என்னமோ தனக்கு மட்டும் தான் துன்பம் வந்தது போல் நம்மை போலவே தருமனும் நினைக்கிறான்.

வியாசன் சொல்லத் தொடங்குகிறான்.

என்னவென்று மேலும் சிந்திப்போம்



Monday, June 15, 2015

பிரபந்தம் - மீனாய் பிறக்கும் விதி உடையவன் ஆவனே

பிரபந்தம் - மீனாய் பிறக்கும் விதி உடையவன் ஆவனே 


என்ன வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்...

நிறைய செல்வம்,  நல்ல ஆரோக்கியம், புகழ், அதிகாரம், செல்வாக்கு...வேண்டும் என்று கேட்போம். அதுவும் அந்த செல்வம் குறையக் கூடாது. செலவழிக்க செலவழிக்க அப்படியே இருந்து கொண்டு இருக்க வேண்டும்.

மரணத்திற்குப் பின், மேல் உலகம் போன பின், அந்த ஊரிலும், செல்வம், புகழ், அதிகாரம், செல்வாக்கு வேண்டும் என்று கேட்போம்.

இந்த இரண்டையும் கொடுத்தாலும் வேண்டாம் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

இது வேண்டாமாம்.

இதை விட பெரிதாக என்ன கேட்டு விடப் போகிறார் என்று பார்த்தால், வேங்கட மலையில் உள்ள குளத்தில் மீனாக பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

மகான்களுக்கு செல்வத்தில் பற்று இல்லை. அதிகாரம், புகழ், பெண், இதில் எல்லாம் பற்று இல்லை.  இறைவனோடு சம்பந்தப் பட்டிருக்க வேண்டும், அவன் கூடவே  இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பாடல்

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே

பொருள்


ஆனாத = குறையாத

செல்வத் = செல்வத்தோடு

அரம்பையர்கள் தற் சூழ = அரம்பையர்கள் போன்ற தேவ மாதர்கள் சூழ

வானாளும் = தேவ லோகத்தை ஆளும்

செல்வமும் = செல்வமும்

மண்ணரசும் = மண்ணில் பெரிய அரசும்

யான் வேண்டேன் = நான் வேண்ட மாட்டேன்

தேனார் = தென் சொரியும்

பூஞ் = பூக்கள் நிறைந்த

சோலைத் =  சோலைகள் நிறைந்த

திருவேங்க டச்சுனையில் = திரு வேங்கட மலையில் உள்ள குளத்தில்

மீனாய்ப் = மீனாகப்

பிறக்கும் = பிறக்கும்

விதியுடையே னாவேனே = விதி உடையவன் ஆவனே.

முந்தைய பாசுரத்தில் குருகாய் (நாரையாக ) பிறக்கும் படி வேண்டினார்.

நாரைக்கு சிறகு இருக்கிறது. பறந்து வேறு மலைக்குப் போய் விடலாம். குளத்தில் நீர் வற்றினால் நாரை பறந்து போய் விடும்.  துன்பம் வந்த காலத்தில் இறைவனே இல்லை, இறைவன் இரக்கம் இல்லாதவன் என்று அவனை வைபவர்களும் உண்டு.  அது போல் துன்பம் வந்த காலத்தில் விட்டு விட்டு ஓடி  விடாமல், எப்போதும் அவன் கூடவே இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

குளத்தில் உள்ள மீன் , நீர் வற்றினாலும் அதிலேயே கிடந்து மடியும். குளம் விட்டு குளம்  போகாது. எனவே எப்போதும் வேங்கட மலையிலேயே இருக்கும் பேற்றினை வேண்டுகிறார்.



Sunday, June 14, 2015

அறநெறிச்சாரம் - அற நூல்களைப் படிக்க வேண்டும்

அறநெறிச்சாரம் - அற நூல்களைப் படிக்க வேண்டும்


நம் முன்னால் எத்தனை விதமான நூல்கள் இருக்கின்றன.

ஒரு புத்தகக் கடைக்குப் போனால் என்னென்ன வகை புத்தகங்கள் இருக்கின்றன ?

மர்ம நாவல்கள், சண்டை நாவல்கள், thrillers , என்று ஒரு வகை.

ஆசையை தூண்டும், காமத்தை தூண்டும், வகையான நூல்கள் இன்னொரு வகை.

இது போக மக்களை குழப்பும் ஏனைய நூல்கள். வாரப் பத்திரிகைகள், மாத நாவல்கள், என்று பலவிதமான நூல்கள்.

"மக்களை நல் வழிப் படுத்த, மக்களின் நிலையை உயர்த்த, மக்களுக்கு நல்லது கெட்டதை சொல்ல உள்ள புத்தகங்கள் மிக மிக குறைவு. அவற்றை தேடி கண்டு பிடித்து படிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அவர்களே பிறவி என்ற துன்பத்தை கடந்து போகும் பேறு பெற்றவர்கள்."


பாடல்

மறவுரையும் காமத் துரையும் மயங்கிய 
பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

சீர் பிரித்த பின்

மற உரையும்  காமத்து உரையும் மயங்கிய 
பிற உரையும் மல்கிய ஞாலத்து அற உரை 
கேட்கும் திரு உடையோரே பிறவியை
நீக்கும் திரு உடையோர் .

பொருள்

மற உரையும் = சண்டை, சச்சரவு, அடி தடி என்று உரைக்கும் நூல்கள்

காமத்து உரையும் = காமம் மற்றும் ஆசையைத் தூண்டும் நூல்களும்

மயங்கிய = அறிவை மயக்கும்

பிற உரையும் = மற்ற பிற நூல்களும்

மல்கிய = நிறைந்து கிடக்கும்

ஞாலத்து = இந்த உலகில்

அற உரை = அறத்தை சொல்லும் நூல்களை

கேட்கும் = படித்தும் , கேட்டு அறியும்

திரு உடையோரே = புண்ணியம் உடையவர்களே

பிறவியை நீக்கும் = பிறவியை நீக்கும்

திரு உடையோர் = புண்ணியம் உடையவர்கள்

குப்பைகளை தள்ளி விட்டு, நல்லதை தேடி, கண்டு பிடித்து, படியுங்கள்.

பிறவி பிணியை போக்கும் அரு மருந்து அதுவே ஆகும்.

Saturday, June 13, 2015

இராமாயணம் - பிறவியின் பகைவன்

இராமாயணம் - பிறவியின் பகைவன் 



இறைவனை யாரும் கண்டதில்லை. இறைவனைப் பற்றி நிறைய கதைகள் கேள்விப் பட்டிருக்கிறோம். அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று தெரியாது.

அப்படி இருக்கும் போது , காணாத ஒன்றின் மேல் எப்படி அன்பு, பக்தி எல்லாம் வரும் ?

வீடணன் எவ்வளவோ புத்தி சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாய் இல்லை. இராவணனை விட்டு விட்டு இராமனிடம் செல்வதாக முடிவு செய்து விட்டான்.

"நான் இராமனை இதற்கு முன்னாள் பார்த்தது இல்லை. அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை. ஆனாலும் அவன் மேல் அன்பு தோன்றக் காரணம் எதுவும் தெரியவில்லை. எலும்பு வரைக் குளிர்கிறது. நெஞ்சு உருகுகிறது. இந்த புன்மையான பிறவியின் பகைவன் அவன் போலும் "

என்று உருகுகிறான்.

பாடல்

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.


பொருள்

'முன்புறக் கண்டிலென் = முன்பு அவனைக் கண்டதில்லை

கேள்வி முன்பு இலென் = அவனைப் பற்றி முன்பு கேட்டது கூட இல்லை

அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன் = அவன் மேல் அன்பு வரக் காரணம் தெரியவில்லை

என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிரும்

நெஞ்சு உருகுமேல் = என் மனம் உருகுகிறது

அவன் = இராமன்

புன் புறப் பிறவியின் = புன்மையான பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல் இருக்கிறது .

காணவும் இல்லை.

கேட்கவும் இல்லை.

இருந்தும் அன்பு பிறக்கிறது.

எனவேதான் அரக்க குலத்தில் பிறந்த வீடணனை விபீஷண ஆழ்வார் என்று கொண்டாடுகிறது வைணவம்.

நம்புங்கள், காண்பீர்கள்.

You will see it, when you believe it.



திருவாசகம் - கற்பனவும் இனி அமையும்.

திருவாசகம் - கற்பனவும் இனி அமையும்.


முந்தைய ப்ளாகில் திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டியிருந்தேன். அதில் வரும் ஒரு வரி, "கற்பனவும் இனி அமையும்" என்பது.

அதன் அர்த்தம் என்ன ?

கற்பனவும் + இனி + அமையும் = இனி மேல் கற்க வேண்டியது ஒன்றும் இல்லை. நூல்களை கற்று பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள முடியாது என்ற தொனியில். படித்தது எல்லாம் போதும். இது வரை படித்தது போதும்...இறைவன் என்பவன் படித்து அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அல்ல என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

அமையும் என்ற சொல்ல அபிராமி பட்டரும் கையாண்டிருக்கிறார்.....


உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

என்ற பாடலில்


உலகம் என்பது உணர வேண்டிய ஒன்று. அறிய வேண்டிய ஒன்றல்ல.

பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்லுவார்

"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்"  என்று.

இறைவனை உணர முடியும். ஓத முடியாது.

அதாவது, படித்து புரிந்து கொள்ள முடியாது. உணர முடியும்.

கன்றை ஈன்ற பசு எப்படி தன் கன்றை உணர்கிறதோ அப்படி. பசு படித்து அறிவது அல்ல. ஆனாலும் அது உணர்கிறது.

பிறிதொரு இடத்தில் மாணிக்க வாசகர் சொல்லுவார்.


சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 

பல்லோரும் ஏத்தப் பணிந்து.


சொல்லிய பாட்டின் பொருள் "உணர்ந்து" சொல்லுவார் என்றார்.

சொல்லிய பாட்டின் பொருள் "அறிந்து " சொல்லுவார் என்று சொல்லவில்லை.

இறை என்பது தனி மனித அனுபவம்.

மனித அறிவுக்கு எல்லை உண்டு. அந்த எல்லையை தாண்டிய ஒன்று இறை அனுபவம்.


சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க

என்பார் மணிவாசகர்.

சொல்லும், பதமும், சித்தமும் செல்லாத இடம் அது.


பிரபந்தம் - வேண்டியதும், வேண்டாததும்

பிரபந்தம் - வேண்டியதும், வேண்டாததும் 


இன்பமும் நிம்மதியும் எங்கு இருக்கிறது ?

சேவை செய்வதில் இருக்கிறது. எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும் மனதில் ஒரு திருப்தி, நிம்மதி, சுகம் எப்போது வரும் என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது . பலன் கருதா உதவி செய்யும் போது இன்பம் பிறக்கும்.

எனக்கு, எனக்கு என்று ஆலாய் பறந்து பணம் சேர்த்துக் கொண்டே இருந்தால் செல்வம் பெருகும், ஆனால் இன்பம் பெருகுமா ?

பக்தி மார்கத்தில் இதை இறைவனுக்கு அடிமை செய்வது என்று சொல்கிறார்கள். அடிமை என்றால் ஏதோ கேவலமான வார்த்தை இல்லை. பலன் எதுவும் எதிர் பார்க்காமல், அவனுக்கு என்று செய்வது. அவ்வளவுதான்.

எல்லோருமே அவன் குழந்தைகள் தானே ? அவனுக்குச் செய்தால் என்ன, அவன் குழந்தைகளுக்குச் செய்தால் என்ன ?

பிரதி பலன் எதிர்பாராமல் பிறருக்குச் செய்யும் உதவி, அவனுக்குச் செய்யும் பக்திதான்.

நாம் இறைவனிடம் என்ன வேண்டுவோம் ?

நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடு, செல்வம் கொடு, பட்டம் , பதவி கொடு என்று கேட்போம்.

குலசேகர ஆழ்வார் இதையெல்லாம் வேண்டாம் என்று ஆண்டவனை வேண்டுகிறார்.

இந்த உடல் இருக்கிறதே, ஒவ்வொரு நாளும் மாமிசத்தால் எடை ஏறிக் கொண்டே போகிறது.  வேண்டாம் இந்த உடலே வேண்டாம்.  பெருமாளே உனக்கு அடிமை செய்வது மட்டும் தான் வேண்டும். திருவேங்கட மலையில் உள்ள கோனேரி என்ற தீர்த்தத்தில் குருகு (நாரை) ஆக பிறப்பதையே வேண்டுவேன் என்கிறார்.

பாடல்

ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

சீர் பிரித்த பின்

ஊன் ஏறு  செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ்  வென்றான் அடிமை  திறம் அல்லாமல் 
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

பொருள் 

ஊன் ஏறு = மாமிசம் ஏறும்

செல்வத்து = செல்வத்துடன் கூடிய

உடற் பிறவி  = இந்த உடலை

யான் வேண்டேன் = நான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ்  = ஏழு காளைகளை

 வென்றான்  = வென்ற கண்ணனின்

அடிமை  திறம் அல்லாமல் = அடிமை செய்யும் தொழில் அல்லாமால்

கூன் ஏறு சங்கம் = வளைந்த சங்கை

இடத்தான் தன் = இடக்கையில் கொண்ட

வேங்கடத்து = திரு வேங்கட மலையில்

கோனேரி = கோனேரி என்ற தீர்த்தத்தில்

வாழும் = வாழும்

குருகாய்ப் பிறப்பேனே = நாரையாகப் பிறக்கும் படி வேண்டுவேன்

அது என்ன மனிதப் பிறவியை வேண்டாம், ஆனால் நாரையாகப் பிறக்க வேண்டும் என்கிறாரே ஆழ்வார் என்று நமக்குத் தோன்றும்.

மனிதப் பிறவியை விட நாரை உயர்ந்ததா ?

இல்லை. ஆனால், விலங்குகளிடம் பேராசை இல்லை, பத்து தலைமுறைக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணுவது இல்லை, அளவுக்கு அதிகமாக உண்பது இல்லை, மிக எளிமையாக வாழ வேண்டும் என்று சொல்ல வருகிறார் ஆழ்வார்.

இதே கருத்தை மாணிக்க வாசகரிலும் நாம் பார்க்கலாம்.

இவர் நாரையாக பிறக்க வேண்டும் என்றார் ,அவர் கன்றை ஈன்ற பசுவைப் போல ஆக வேண்டும்  என்றார்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

(கற்றா = கன்றை ஈன்ற ஆ , பசு )

நாரை,  நீர் இருக்கும் வரை இருக்கும். நீர் வற்றிப் போனால் திருவேங்கட மலையை விட்டுப்   போய்விடுமே ...என்ற சந்தேகம் ஆழ்வாருக்கு வருகிறது.

அதற்கு அடுத்த பாசுரத்தில் சொல்கிறார் ஆழ்வார்....



Friday, June 12, 2015

வில்லி பாரதம் - இறைவனுக்குத்தான் வேறு வேலை என்ன இருக்கிறது ?

வில்லி பாரதம் - இறைவனுக்குத்தான் வேறு வேலை என்ன இருக்கிறது ?


நம்பிக்கை.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும், எவ்வளவு செல்வம், அதிகாரம், இருந்தாலும்...வாழ்வில் சில நேரம் வரும்...நம்பிக்கை தளரும் நேரம் வரும்....

அத்தனை செல்வமும், அதிகாரமும், உறவும், நட்பும் உதவாமல் போகும் காலம் வரும்.

நம் பலத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று சில நேரம் வரும்.

நம்பிக்கை தளரும். என்னால் முடியாது என்று மனமும் உடலும் சோர்ந்து போகும் நேரம் வரும்.

என்ன செய்வது ? யாரைக் கேட்பது, யார் உதவுவார்கள், எப்படி சமாளிப்பது என்று திகைக்கும் காலம் வரும்.

அந்த நேரத்தில் நம்பிக்கையை ஊட்ட நம் இலக்கியங்கள் உதவுகின்றன.

இறைவனை நம்பு. அவன் உனக்கு உதவே காத்து இருக்கிறான்...அவனுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது என்று படித்துப்  படித்து சொல்கின்றன.

அப்படி ஒரு நெருக்கடி பாண்டவர்களுக்கு வந்தது.....

பாண்டவர்கள் வன வாசம் செய்யும் காலம்.

அந்த நேரத்தில் துருவாசர் என்ற முனிவர் தன் சீடர்கள் புடை சூழ துரியோதனின் அரண்மனைக்கு வந்தார். துரியோதனனும் அவரை நன்றாக உபசரித்தான். அதில் மகிழ்ந்த அவர், "உனக்கு என்ன வேண்டும் " என்று கேட்டார்.

"முனிவரே, எப்படி இங்கு வந்து விருந்து உண்டு எங்களை மகிழ்வித்தீர்களோ, அதே போல் பாண்டவர்களையும் மகிழ்விக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

பாண்டவர்களோ வனத்தில் இருக்கிறார்கள். முனிவரின் கூட்டமோ பெரியது. எப்படியும் பாண்டவர்களால் முனிவரின் கூட்டத்திற்கு உணவளிக்க முடியாது. அதனால் சினம் கொண்டு முனிவர் அவர்களை   சபிப்பார்...பாண்டவர்கள் நல்லா கஷ்டப்பட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அப்படி கேட்டான் துரியோதனன்.

முனிவரும் தன் மாணவ குழாத்துடன் பாண்டவர்கள் இருக்கும் இடம் வந்தார்.

பாண்டவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள். பாண்டவர்களில் புத்திசாலி சகாதேவன்.

அவன் சொன்னான் "கண்ணனை அழைப்போம்...அவன்தான் நம்மை காக்க முடியும் " என்று.

கண்ணன் இருப்பது துவாரகையில். பாண்டவர்கள் இருப்பதோ கானகத்தில். முனிவர் குளிக்கப் போய் இருக்கிறார். அவர் குளித்து வருவதற்குள் கண்ணன் வந்து  இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்.

முதலில் கண்ணனுக்கு எப்படி செய்தி அனுப்புவது ?

இறைவன் , தன்னை யார் எப்போது எங்கு அழைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பானாம். கூப்பிட்ட உடனே ஓடி வந்து விடுவானாம்.

தருமன் , கண்ணனை நினைத்தவுடன் உடனே அவன் மனத்தில் வந்து நின்றானாம்.

பாடல்

தப்பு ஓதாமல், தம்பியர்க்கும் தருமக் கொடிக்கும் இதமாக, 
அப்போது உணரும்படி உணர்ந்தான், அசோதை மகனை 
                           அறத்தின் மகன்; 
'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்' 
                           என நின்ற 
ஒப்பு ஓத அரியான், உதிட்டிரன்தன் உளப்போதிடை 
                           வந்து உதித்தானே.

பொருள்

தப்பு ஓதாமல் = தவறாக எதையும் பேசாத (தருமன்)

தம்பியர்க்கும் = தம்பிகளுக்கும்

தருமக் கொடிக்கும் = தர்மமே கொடியாக வந்தது போல் இருந்த பாஞ்சாலிக்கும்

இதமாக = இதமாக

அப்போது = அந்த நேரத்தில்

உணரும்படி = தன்னை உணரும்படி கண்ணனிடம் வேண்டினான்

உணர்ந்தான் =  அதை உணர்ந்தான். யார் ?

அசோதை மகனை = யசோதை மகன்

அறத்தின் மகன்= தர்மத்தின் மகன் (தர்ம புத்திரன்)

'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்'
                           என நின்ற = எப்போது , யாவர், எவ்விடத்தில் என்னை நினைப்பார்கள்  என்று இருக்கும்

ஒப்பு ஓத அரியான் = தனக்கு ஒப்பு இல்லாத , வாசித்து அறியமுடியாத அவன்

உதிட்டிரன் தன் = தர்ம புத்திரனின்

உளப்போதிடை = உள்ளித்தில்

வந்து உதித்தானே = வந்து உதித்தான்


நம்புங்கள். அதுதான் வாழ்க்கை. 


Wednesday, June 10, 2015

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே 



பிள்ளை இல்லை என்றால் அது ஒரு கவலை.

பெற்ற பிள்ளையை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை என்றால் அது எவ்வளவு துன்பமாக இருக்கும் ஒரு தாய்க்கு ?

தேவகி கண்ணனை பெற்றாள் .

பெற்ற அன்றே அவனை ஆயர்பாடிக்கு அனுப்பி விட்டாள் .

அவனை, கொஞ்சி கொஞ்சி வளர்த்தது எல்லாம் யசோதைதான்.

தேவகி, கண்ணனை தாலாட்டி , சீராட்டி , கொஞ்சி வளர்க்க முடியவில்லையே என்று உருகி வருந்திப் பாடுவதாக குலசேகர ஆழ்வார் பத்துப் பாடல்கள் பாடி இருக்கிறார்.

படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் வரும்.

பாடல்

ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை
நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே

சீர் பிரித்தபின்

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ,  அம்புயத் தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று உன்னை என் வாயிடை 
நிறைய தால் ஒலித்திடும் திருவினை  இல்லாத் தாயரில் கடையாயின தாயே

பொருள்

ஆலை = ஆலையில்

நீள் கரும்பு = நீண்ட கரும்பு

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

அம்புயத் = அன்புஜம், தாமரை போன்ற

தடங் = அகன்ற

கண்ணினன் தாலோ = கண்ணினைக் கொண்டவனே தாலேலோ

வேலை = கடல்

நீர் = நீர்

நிறத்து = நிறம்

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

வேழப் = யானை

போதகம் = குட்டி

அன்னவன் தாலோ = போன்றவனே தாலேலோ

ஏலவார் குழல் = மணம்மிக்க  முடியை உடைய 

என் மகன் தாலோ = என் மகனே தாலேலோ

என்று = என்று

உன்னை  = உன்னை

என் வாயிடை = என் வாயால்

நிறைய = நிறைய

தால் ஒலித்திடும் = தாலாட்டுப் பாடிடும்

திருவினை = திருவினை , புண்ணியம்

இல்லாத் தாயரில் = இல்லாத தாயரில்

கடையாயின தாயே = மிக கடைப் பட்டவள் நானே

கரும்பு போல இருப்பானாம்....கண்ணன் தலையில் மயில் பீலி செருகி இருப்பான். கருப்பாய் இருப்பான். அது போல கரும்பும் கருப்பாய் தலையில் தோகையோடு இருக்கும். பொருத்தமான உதாரணம்.

கண்ணன், பாலும், வெண்ணையும், நெய்யும் தின்று குண்டு குண்டாக கறுப்பாக இருப்பன் அல்லவா ...எனவே யானைக் குட்டி என்றாள்.

தால் என்றால் நாக்கு என்று பொருள்.

தால் + ஆட்டு = தாலாட்டு.

தாய்மார்கள், குழந்தையை தூங்கப் பண்ண "ரோ ரோ...",. "லா லா " என்று  நாக்கை அசைத்து  ஒலி எழுப்புவார்கள். குழந்தைக்கு மொழி தெரியாது. அந்த நாக்கு அசையும் சத்தத்தில் அது தூங்கிப் போய்விடும். எனவே அதற்கு தாலாட்டு என்று பெயர்.

எப்படி எல்லாம் யசோதை கண்ணனை கொஞ்சி, தாலாட்டி சீராட்டி இருப்பாள்....எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வருந்துவதாக  குலசேகர ஆழ்வார் பாடுகிறார்.

தேவகியே கூட இவ்வளவு உருகி இருப்பாளா என்று தெரியாது. ஆழ்வார் அவ்வளவு உருகுகிறார்.

மனம் ஒன்றி வாசித்துப் பாருங்கள்....மனதுக்குள் என்னவோ செய்யும்.

 





Monday, June 8, 2015

பிரபந்தம் - எப்போது பக்தி செய்ய ஆரம்பிக்கலாம் ?

பிரபந்தம் - எப்போது பக்தி செய்ய ஆரம்பிக்கலாம் ?


பொதுவாக ஒரு அம்பது, அறுபதுகளில் பக்தி செய்யலாம் என்று ஒரு விதி வைத்து இருக்கிறோம்.

கோவில், கதா கலாட்சேபம் என்று பார்த்தால் வயதானவர்கள்தான் பொதுவாக இருப்பார்கள்.

படிக்கணும், வேலை தேடணும் , கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும், பின் பிள்ளைகள், பின் பிள்ளைகளை வளர்க்க வேண்டும், அதுகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும், அதுகளுக்கு ஒரு வாரிசு வேண்டும், இதற்கிடையில் வயதான பெற்றோர், அவர்களை வேறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எல்லாம் முடிந்து, இவற்றில் இருந்து விடுதலை அடைந்த பின், இறைவன் மேல் பக்தி செலுத்த நேரம் இருக்கும் என்று நினைக்கிறோம். அது வரை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

இராமலிங்க அடிகள் கூறினார்...பக்தியில் தோய்ந்து இறைவனை வழிபட முதலில் தாய் தடை என்றேன், பின் தாரம் தடை என்றேன், பின் பிள்ளைகள் தடை என்றேன், இப்படி ஒவ்வொரு தடையாக வந்து கொண்டே இருந்தால் நான் எப்போதுதான் உன் அருளை பெறுவது என்று...

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

என் செய்வேன், என் செய்வேன் என்று புலம்புகிறார்.


அப்புறம், நாளை, அடுத்த வருடம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

சரி, ஒத்துக் கொள்கிறேன்...அம்பது அறுபது கொஞ்சம் தாமதமான வருடம் தான்...ஒரு நாப்பது ? முப்பது சரியாக இருக்குமா என்று பொய்கை ஆழ்வாரிடம் கேட்போம்....

இல்லை, அதுவும் ரொம்ப தாமதமான காலம் என்கிறார்.

சரி, ஒரு இருபது , முப்பது ?

இல்லவே இல்லை என்று சாதிக்கிறார்.

சரி, ஒரு அஞ்சு பத்து வயசு சரியாக இருக்குமா என்று கேட்டால், இல்லை அதுவும் late என்கிறார்.

பின் எப்ப ஆரம்பிப்பது ? பிறந்த உடனேயா என்றால் , இல்லை அதுவும் காலம் கடந்தது என்கிறார்.

கருவிலேயே பக்தி செய்யத் தொடங்கி விட்டாராம்....

பாடல்

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

சீர் பிரித்த பின்

ஒன்றும்  மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கரு அரங்கத்துள் கிடந்து  கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

பொருள்

ஒன்றும்  மறந்து அறியேன் = எதையும் நான் மறக்க வில்லை

ஓத நீர் = பொங்கும் நீர் (கடல் )

வண்ணனை நான் = போன்ற வண்ணம் கொண்ட (கடல் போன்ற நிறம் கொண்ட அவனை )

இன்று மறப்பனோ ஏழைகாள் = இன்று மறப்பேனா ?

அன்று = அன்று

கரு அரங்கத்துள் கிடந்து = கருவில் இருக்கும் போதே

கை தொழுதேன் = கை தொழுதேன்

கண்டேன் = கண்டேன்

திருவரங்க மேயான் திசை = திருவரங்கத்தில் உள்ள அவன் திசை

இது ஆழ்வார் மட்டும் சொல்லவில்லை.

திருநாவுகரசரும் இதையே சொல்கிறார்.

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

சீர் பிரிப்போம்.

கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும்  கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உந்தன் நாமம் பயின்றேன் உனதருளால் 
திருவாய்ப் பொலியச் "சிவாய நம" என்று  நீறு அணிந்தேன் 
தருவாய் சிவ கதி நீ பாதிரிப் புலியூர் அரனே.

நம்மால் கருவில் இருந்து இப்போது தொடங்க முடியாது.

நாம் இரண்டு செய்யலாம்...

ஒன்று, பக்தி பற்றி இன்றிலிருந்து சிந்திக்கத் தொடங்கலாம்.

இரண்டு, பிள்ளைகளுக்கு, இளையவர்களுக்கு அது பற்றி சிந்திக்கக் கற்றுத் தரலாம்.

பெரியவர்கள் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள்...இளமையிலேயே பக்தி என்ற உணர்வைப் பெறுவதில் ஏதோ நன்மை இருக்கலாம்.

சிந்திப்போம்.

Sunday, June 7, 2015

பிரபந்தம் - உன் வழிகளை நான் அறியேன்

பிரபந்தம் - உன் வழிகளை நான் அறியேன் 


நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் செலுத்தும் அன்புக்கு ஏதாவது விதி வைத்து இருக்கிறோமா ?

படித்தால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று பிள்ளைகளிடம் சொல்கிறோமா ?

பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று கணவனிடம் சொல்கிறோமா ?

நம் பிள்ளை, நம் கணவன், நம் மனைவி, என்று எல்லோரிடமும் அன்பு செலுத்த நாம் காரணம் கேட்பது இல்லை. நம் பிள்ளைகள், என் மனைவி, என் கணவன் என்பது மட்டும் போதும்.

அது போல, இறைவனிடம் அன்பு செலுத்தவும், காரணம் ஒன்றும் வேண்டாம்.

அவன் நமக்காக அற்புதங்கள் செய்து காட்ட வேண்டாம், மலையை தூக்கினால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று சொல்ல வேண்டாம்.




பொய்கை ஆழ்வார் சொல்கிறார்....நீ ஓரடியால் இந்த உலகம் அனைத்தையும் நீ அளந்தாய் என்று சொல்கிறார்கள். இன்னோர் அடியால் மேல் உலகத்தை அளந்தாய் என்று சொல்கிறார்கள். நீ சிறு பிள்ளையாக இருக்கும் போது பேய் உருவில் வந்த பூதகியை கொன்றாய் என்று சொல்கிறார்கள். நீ எப்படி செய்தாயோ எனக்குத் தெரியாது. ....என்று சொல்லும் போதே , உன் மேல் எனக்குள்ள அன்பு  இந்த வித்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லுவது நமக்குப் புரியும்.

பாடல்

பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.

சீர் பிரித்தபின்

பார் அளவு ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த 
நீர் அளவும்  செல்ல நிமிர்ந்ததே –  சூர் உருவில் 
பேய் அளவு  கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.

பொருள்

பார் அளவு = இந்த உலகின் அளவை

ஓர் அடி வைத்து = ஓர் அடி வைத்து அளந்தாய்

ஓர் அடியும் = இன்னோர் அடியாள்

பார் உடுத்த = இந்த உலகை சூழ்ந்த

நீர் அளவும்  =  ஆவரண நீர் என்று சொல்வார்களே

செல்ல நிமிர்ந்ததே –  அது வரை சென்றது

சூர் உருவில் = தெய்வப் பெண் வடிவில் வந்த

பேய் = பூதகியின்

அளவு  கண்ட = ஆயுளின் எல்லை கண்ட (அவளை கொன்ற )

பெருமான் = பெருமானே

அறிகிலேன்,= நான் அறிய மாட்டேன்

நீயளவு கண்ட நெறி = நீ எப்படி, யாரை அளக்கிறாய் என்பதை

குணங்களைத் தாண்டி, அவனை , அவனுக்காகவே நேசித்தார் பொய்கை ஆழ்வார்.

காரணம் இல்லாத அன்பு.

எதிர் பார்ப்பு எதுவும் இல்லாத அன்பு.

ஒரு தாய் , தன் பிள்ளையின் மேல் செலுத்தும் அன்பைப் போல.

பக்தியின் புதிய எல்லை.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தை வாசித்துப்  பாருங்கள்.

Saturday, June 6, 2015

பிரபந்தம் - ஒன்றும் உணரேன் நான்

பிரபந்தம் - ஒன்றும் உணரேன் நான் 



பாடல்

என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.

கொஞ்சம் சீர்  பிரிப்போம் 

என்று கடல்கடைந்தது ? எவ்வுலகம் நீர் ஏற்றது,
ஒன்றும் அதனை உணரேன்  நான், - அன்று
தடைத்து உ டைத்துக் கண்படுத்த ஆழி, இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்.

பொருள்

என்று கடல்கடைந்தது ? = கடலை கடைந்தது எப்போது ?

எவ்வுலகம் நீர் ஏற்றது = எந்த உலகத்துக்காக மாவலியிடம் நீர் ஏற்றது (தானம் பெற்றது)

ஒன்றும் அதனை உணரேன்  நான் = அதெல்லாம் எனக்குத் தெரியாது

அன்று = அன்றொரு நாள்

தடைத்து  உ டைத்துக் = தடைகளை உடைத்து (இலங்கை செல்ல)

கண்படுத்த = நீ துயில் கொள்ளும்

ஆழி இது = கடல் இது ,

நீ = நீ

படைத்து = படைத்து

இடந்து = இகழ்ந்து (தோண்டி எடுத்து )

உண்டு =பிரளய காலத்தில் உண்டு 

உமிழ்ந்த பார் = பின் உமிழ்ந்த பார்

மேலோட்டமாக பார்த்தால் இது தான் பொருள்.  பெரியவர்களின் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
 
சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 


அந்தக் காலத்தை விட இப்போது அநியாயங்களும், அநீதிகளும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இருந்தும் ஆழ்வார்களும், நாயனமார்களும் இப்போது ஏன் வருவது இல்லை?

இன்று தான் அவர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இருந்தும் பெரியவர்கள் யாரும் உதிப்பாதாகக் காணோம்.

மக்கள் அறம் எது, நீதி எது, தர்மம் எது என்று அறியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். அவர்களை வழி நடத்த ஏன் பெரியவர்கள் யாரும் தோன்ற மாட்டேன் என்கிறார்கள் ?

எப்போதோ சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். அது இன்றைக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது.  கீதையும், குறளும் , வேதங்களும், உபநிஷத்துக்களும் நடை முறைக்கு சாத்தியமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.

தேவாரமும் , திருவாசகமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் இன்று நம் வாழ்க்கைக்கு துணை செய்யுமா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

பொய்கை ஆழ்வார் விடை சொல்கிறார்.

பாற்கடலை எப்போது கடைந்தார்கள்  ?

மாவலியிடம் மூன்று அடியை எப்போது தானமாகப் பெற்றான் ?

இலங்கைக்கு எப்போது பாலம் கட்டியது ?

யாருக்குத் தெரியும் ?

ஆனால் , அது இன்றுபோல் இருக்கிறது.

இதோ இந்த கடல் இன்றும் யாரோ கடைவது போல அலை பொங்குகிறது. நுரை பொங்குகிறது.

அன்று மூவடியால் அளந்த உலகம் இதோ இந்த உலகம்தான்.

என்றோ உண்டு, அகழ்ந்து எடுத்து, உமிழ்ந்தது இந்த உலகம்தான்.

நீங்கள் நிற்கும், அமர்ந்து இருக்கும் இந்தத் தரைதான் உலகளந்த பெருமாள் அன்று அளந்தது.

அவை எல்லாம் முடிந்து போனது மாதிரி  இருந்தாலும்,இன்று வரை அவற்றுள்   ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பக்தியும், தெளிந்த அறிவும் இருந்தால் காலம் மறைந்து போகும். அன்று நடந்தது இன்று நடப்பது போல இருக்கும்.

அன்று சொன்ன கீதை இன்று சொல்வது போல இருக்கும்.

எதுவும் முடிந்து போகவில்லை. அன்று சொன்னது இன்றும் பொருந்தும்.

சிந்திப்போம்.





Friday, June 5, 2015

திருவாசகம் - நெறி அல்லா நெறி

திருவாசகம் - நெறி அல்லா நெறி 


நமக்கு கை கால்கள் நன்றாக இருக்கிறது, கண் தெரிகிறது, மற்ற உறுப்புகள் எல்லாம் சரியாக இயங்குகின்றன, அமைதியான இந்த நாட்டில் பிறந்திருக்கிறோம்,  பெற்றோர்கள், அன்பான உடன் பிறப்பு, தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் படித்திருக்கிறோம்...

இது எல்லாம்  சம்பாதித்துப் பெற்றதா ?

எப்படியோ நமக்கு கிடைத்தது. நாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை இவை எல்லாம்  கிடைக்க.

பின் எப்படி இவை நமக்கு கிடைத்தது ? என்று ஆச்சரியப் படுகிறார் மணிவாசகர். "அச்சோவே" என்று அவருக்கு ஆச்சரியம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றைப் பார்க்கும் போதும்....

வெளிய விட்ட மூச்சு மீண்டும் உள்ளே போகிறது...அட !

பசிக்கிறது, சாப்பிடுகிறோம்...அதுவே செரிமானமாகி விடுகிறது...அட !

வாழ்வில் எத்தனை ஆச்சரியங்கள் ....

இது போக இறை அருளும் கிடைத்து விட்டால் ? ஆச்சிரியதிற்கு அளவே இல்லை.

அச்சோவே என்று பத்து பாடல் பாடி இருக்கிறார் மணிவாசகப் பெருந்தகை...அத்தனையும்  ஆச்சரியம்தான்

அதில் இரண்டாவது பாடல்...

இந்த வாழ்வின் குறிக் கோள் என்ன ? எதற்காகப் பிறந்தோம் ? என்ன செய்யப் படித்தோம் ? இந்த  வேலை,  கல்யாணம், பிள்ளைகள், சொத்து, சம்பாத்தியம் எல்லாம் எதற்காக ? இந்த வாழ்வின் குறிக்கோள் (objective ) என்ன ?

எதற்காக இறைவன் அல்லது இயற்கை நம்மைப் படைத்தது ? நம் மூலம் அது என்ன  நினைக்கிறது ?

ஒன்றும் இல்லை.

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று   கிடையாது. நீங்களாகவே கற்பித்துக் கொண்டால்தான் உண்டு. அப்படி நீங்கள் நினைக்கும் அர்த்தமும் மாறிக் கொண்டே இருக்கும்.
   
வாழ்கையை ரொம்ப தீவிரமாக (serious ) எடுத்துக் கொண்டு சிரமப் படாதீர்கள். இது ஒரு விளையாட்டு. அவ்வளவுதான்.

இறைவனுக்கு அல்லது  இயற்கைக்கு ஒரு  குறிகோளும் இல்லை. எல்லாம் ஒரு விளையாட்டுக்குத்தான்.

இதில் என்ன நான் பெரியவன், சிறியவன், உயர்ந்தவன் , தாழ்ந்தவன்,  உள்ளவன்,இல்லாதவன் என்று அடி தடி சண்டை.

விளையாட்டாக எடுத்துக் கொண்டு போங்கள் . வாழ்கை லேசாக இருக்கும்.

மணிவாசகர் .சொல்கிறார்..இறைவனுக்கே ஒரு குறிக்கோளும் கிடையாதாம். சும்மா  கூத்து அடித்துக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கே இல்லை  என்றால் நீங்கள் ஏன்  கவலைப் படுகிறீர்கள். ஆடிப் பாடி மகிழ்ச்சியாக இருங்கள்.

சாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.

பாடல்

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பொருள்

நெறியல்லா நெறிதன்னை = நெறி  அல்லாத நெறி தன்னை. நெறி என்றால் வழி. வழி அல்லாத வழி என்றால் என்ன ? பெரியவர்கள் எது சொன்னாலும் நல்லதையே சொல்லுவார்கள். நினைப்பார்கள். அவர்கள் நெறி என்று சொன்னால் அது நல்ல நெறியையே குறிக்கும். எனவே "அல்லாத நெறி" என்றால்  தீய வழி. " நல்ல வழி அல்லாதவழியை " அதாவது தீய வழியை.  தீய வழி என்று  கூட தன் வாயால் சொல்ல மறுக்கிறார் மணிவாசகர்.  தீய வழி என்று சொன்னால்,  அது என்ன வழி என்று குதர்க்கம் பேசும் ஆட்கள் இருப்பார்கள். அது எப்படி தீய வழி ஆகும் என்று தர்க்கம் பண்ணுவார்கள். எனவே, நல்ல வழியை மட்டும் சொல்லி விட்டு, அது அல்லாதது தீய வழி என்று சொல்கிறார் அவர்.

தீமைகளை விவரித்துச் சொல்லக் கூடாது. ஏன் என்றால், அப்படி விவரித்துச் சொன்னால் , நாளடைவில் நமக்கு அதில் ஒரு ருசி வந்துவிடும். அப்படி செய்து பார்த்தால்  என்ன என்று  தோன்றும். ஒரே முறை செய்து பார்ப்போம் என்று மனம் நினைக்கும்.   எனவே தான் "நெறி அல்லாத நெறி தன்னை" என்றார். 

வழியே ஏகுக , வழியே மீளுக என்றாள் ஔவைப் பாட்டி.

நல்ல வழியில் போய் , நல்ல வழியில் திரும்பி வா என்று அர்த்தம்.

வழியே என்று தானே சொன்னாள் , நல்ல வழி என்று சொல்லவில்லையே என்று வாதம் பண்ணக் கூடாது. வழி என்று பெரியவர்கள் சொன்னால் அது நல்ல  வழிதான்.


நெறியாக நினைவேனைச் = அதையே நெறியாக நினைக்கும் என்னை. நெறி அல்லாத  நெறியை, நெறியாக நினைக்கும் என்னை. அதாவது, நல்ல வழி இல்லாத வழியை நல்ல வழி என்று நினைக்கும் என்னை.


சிறுநெறிகள் சேராமே = சிறு நெறிகள் சேராமே. சிற்றின்பத்தை அடையும் வழியில் செல்லாமல் 

திருவருளே சேரும்வண்ணம் =  திருவருளே சேரும் வண்ணம்

குறியொன்றும் இல்லாத கூத்தன் = ஒரு குறிக்கோளும் இல்லாத கூத்தன். ஒரு நோக்கமும் இல்லாமால் ஆடிக் கொண்டிருக்கிறான்.  ஆனந்தம்,ஆட்டம் வருகிறது. அவ்வளவுதான்.

தன் கூத்தையெனக் = அவனுடைய கூத்தை

அறியும் வண்ணம் = நான் அறிந்து கொள்ளும் படி

அருளியவா றார் பெறுவார்= அருளியவாறு யார் பெறுவார்

 அச்சோவே = அய்யோ  !

நான் அறிந்து கொண்டது மாதிரி யார்  அறிந்து கொள்வார் என்று ஆச்சரியப் படுகிறார்.

நல்ல வழியில் சென்றால் கூத்தனின் கூத்து  புரியும்.

சிற்றின்பத்தை நோக்கிப் போகாமல் இருக்கும் வழி சரியான வழி.

செல்லத் தொடங்குகள்...எல்லாம் புரிபடும்.




Thursday, June 4, 2015

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 2

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 2


துன்பங்கள் யாருக்கும் வேண்டாம். ஆனாலும், எல்லோருக்கும் துன்பம் வருகிறது.

துன்பம் ஏன் வருகிறது ? அந்த துன்பத்தை எப்படி வராமல் தடுத்துக் கொள்வது ? துன்பம் இல்லாத வாழ்வை எப்படி வாழ்வது ?

குறுகிய மனதால் துன்பம் வருகிறது. நான் , எனது என்ற எண்ணங்களால் துன்பம் வருகிறது.

எனக்கு வேண்டும், எனக்கு மட்டும் வேண்டும், அவனுக்குக் கிடைக்கக் கூடாது, என் வீடு, என் பிள்ளை, என் குடும்பம் , என் நாடு , என் மதம் என்று பல்வேறு பிரிவினைகளால் நமக்குத் துன்பம் வருகிறது.

நம் பாட முறைகள், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் இந்த எண்ணங்களை வலுப் படுத்துகிறது.

அறிவியல் என்ன செய்கிறது ?

அது பொருள்களை ஆராய முற்படுகிறது. ஆராயும் போது அது பொருள்களை பிரித்துக் கொண்டே போகிறது. முதலில் அணு, பின் அதற்குள் உள்ள ப்ரோடான், எலெக்ட்ரான், நியுட்ரான் என்று போகிறது. பின் அவற்றையும் உடைத்துப் பிரித்து உள்ளே செல்கிறது.

இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் நுணுக்கமாக ஆராய்வதே அறிவியலின் வேலை.

எத்தனை அறிவியல் துறைகள்? பிரிந்து பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது.

இதில் சிக்கல் என்ன என்றால், அதிகமாக இவற்றைப் படித்து படித்து நம் மனமும் மூளையும் எதையும் இதே முறையில் ஆராய தொடங்குகிறது.

எதைக் கொடுத்தாலும் பியித்து பிரித்து போட்டு விடுகிறோம். மனமும் அறிவும் சுருங்கிப் போய் விடுகிறது.

எந்த பிரச்னை என்றாலும் அதை சரியாக பிரித்தால் தான் அதற்கு ஒரு தீர்வு காண முடியும்.

சரி.

ஆனால், வாழ்கை என்பது பிரச்சனையா ? வாழ்க்கையில் பிரச்னைகள் வரலாம். ஆனால், வாழ்கையே பிரச்னை அல்ல.

நமக்குத் தெரிந்ததெல்லாம் அறிவியல், கணிதம், தர்க சாஸ்திரம் (logic ). இதை வைத்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வாழ்கையை எப்படி வாழ்வது ?

இங்குதான் ஆன்மீகமும் இலக்கியமும் வருகின்றன.

இவை இரண்டும் வாழ்கை என்பது ஒரு பிரமாண்டமான ஒன்று, அனைத்தையும் சேர்த்தது, ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று சொல்ல வருகிறது.

நம் அறிவையும், மனதையும் விசாலமாக்க வருகின்றன.

குறுகிய வட்டத்துக்குள் இருந்து நம்மை விடுவித்து மிகப் பெரிய ஒரு பிரமாண்டத்தை நமக்குக் காட்டுகின்றன.

இந்த பிரமாண்டம் , விஸ்வரூபம் புரியும்போது நான், எனது என்பவை மிக மிகச் சிறியது ஆகி மறைந்தே போகின்றன. நாமும் இந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு  என்று அறிகிறோம். பிரிவினைகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற  நிறைவான  எண்ணம் வருகிறது.

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி , முதல் திரு மொழி, முதல் பாசுரம் அப்படி ஒரு பிரமாண்டத்தை நமக்குத் தீட்டிக் காட்டுகிறது.

இந்த உலகமே அகல் விளக்காக, இந்த கடல்நீர் எல்லாம் அந்த விளக்கில் இடும் நெய்யாக, சூரியனே அந்த விளக்கின் சுடராக இருக்க , அப்படி ஒரு விளக்கை ஏற்றினேன், என் துயரமெல்லாம் நீங்க வேண்டி என்கிறார்.

பாடல்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.

பொருள்

வையம் = உலகம், பூமி

தகளியா = விளக்காக

வார்கடலே = ஆர் + கடலே = ஆர்பரிக்கும் கடலே

நெய்யாக = நெய்யாக

வெய்ய கதிரோன் = வெம்மையான கதிரோனே

விளக்காக = அந்த விளக்கின் சுடராக

செய்ய சுடர் = சிவந்த சுடரைக் கொண்ட, ஒளி பொருந்திய

ஆழி யானடிக்கே  = ஆழியான் அடிக்கே, திருமாலின் திருவடிகளுக்கே

சூட்டினேஞ் = சூட்டினேன்

சொன் மாலை = சொற்களால் ஆன மாலை

இடராழி நீங்குகவே என்று = இடர் + ஆழி + நீங்குவே என்று. இடர் என்றால் துன்பம். துன்பம் என்ற கடல் நீங்க வேண்டி.


துன்பம் என்ற கடல் நீங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறார்  ஆழ்வார்.

பெரிதாக சிந்தியுங்கள். மிக மிகப்  பெரிதாக.

உலகமே விளக்காக. கடலே நெய்யாக. சூரியனே சுடராக

இப்படி ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். இதை மனதில் நிறுத்துங்கள்.

முடிந்த நேரம் எல்லாம் இந்த பாசுரத்தை உணர்ந்து சொல்லுங்கள்.

இந்த பிரமாண்டம் விளங்குகிராதா ? மனம் விரிகிறதா ?

இந்த பாசுரம் இன்னும் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது. அதை மேலும் சிந்திப்போம்.

==================== பாகம் 2 ============================================

உலகமே விளக்கு. 
கடல் நீரே அந்த விளக்கில் இட்ட நெய்.
சூரியனே அந்த விளக்கின் சுடர் 

இதை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.

இந்த உவமைகளால என்ன சொல்ல வருகிறார் ஆழ்வார் ?

சூரியன் - நித்தம் நித்தம் எழுகிறது, வெளிச்சம் தருகிறது. மழை பொழிவிக்கிறது, மாலையில் மறைகிறது. அது பாட்டுக்கு தன் கடமையை செய்து கொண்டு  இருக்கிறது. யார் இருக்கிறார்கள், யார் இல்லை, யார் என்ன சொல்லுவார்கள் என்றெல்லாம் அது பார்ப்பது இல்லை. தன் கடமையைச் செய்கிறது. அதற்கு பிரதி பலனாக அது வேறு ஒன்றையும் எதிர்பார்ப்பது இல்லை. 

கடைமையைச் செய். பலனில் நாட்டம் வைக்காதே என்று கீதையில் கண்ணன் சொன்னது போல.

இது கர்ம யோகம். 

 கடல் - எத்தனை மழை பொழிந்தாலும் அது பொங்கி வழிவது இல்லை. மழையே பெய்யாவிட்டாலும் வற்றி  வறண்டு போவது இல்லை. இன்பத்தில் ஆடுவது இல்லை, துன்பத்தில் துவள்வது இல்லை. ஒரே திட சிந்தையுடன் அது இருக்கிறது. 

ஸ்தித பிரஞன் என்று கீதையில் கண்ணன் சொன்னது போல.

இது ஞான யோகம். 

இந்த விளக்கை ஏற்றியது 

செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன்

சிவந்த சுடர் விடும் சக்கரத்தைக் கொண்ட அவனின் திருவடிகளில் சூட்டினேன் என்றார்.

இது பக்தி யோகம்.

கடைமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே,
இன்பத்திலும் துன்பத்திலும் கலங்காமல் உறுதியாக இரு
அவன் மேல் பக்தி செய்

ஒரே பாடலில் கீதையின் சாரம்சத்தை கொண்டு தருகிறார் ஆழ்வார்.

மீண்டும் ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள்.

ஆழ்வார் தீட்டிய கோலம் புரியும். அதில் உள்ள ஆழ்ந்த அர்த்தம் புரியும்.

இதைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால், வாழ்வில் துன்பம் , இடராழி வருமா என்ன ?


இப்படி ஒவ்வொரு பாடலும் தன்னுள் ஆழ்ந்த கருத்துகளை சுமந்து கொண்டு இருக்கின்றன.

எப்போது அனைத்தையும் படிக்கப் போகிறீர்கள் ?

Wednesday, June 3, 2015

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 1

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 1


துன்பங்கள் யாருக்கும் வேண்டாம். ஆனாலும், எல்லோருக்கும் துன்பம் வருகிறது.

துன்பம் ஏன் வருகிறது ? அந்த துன்பத்தை எப்படி வராமல் தடுத்துக் கொள்வது ? துன்பம் இல்லாத வாழ்வை எப்படி வாழ்வது ?

குறுகிய மனதால் துன்பம் வருகிறது. நான் , எனது என்ற எண்ணங்களால் துன்பம் வருகிறது.

எனக்கு வேண்டும், எனக்கு மட்டும் வேண்டும், அவனுக்குக் கிடைக்கக் கூடாது, என் வீடு, என் பிள்ளை, என் குடும்பம் , என் நாடு , என் மதம் என்று பல்வேறு பிரிவினைகளால் நமக்குத் துன்பம் வருகிறது.

நம் பாட முறைகள், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் இந்த எண்ணங்களை வலுப் படுத்துகிறது.

அறிவியல் என்ன செய்கிறது ?

அது பொருள்களை ஆராய முற்படுகிறது. ஆராயும் போது அது பொருள்களை பிரித்துக் கொண்டே போகிறது. முதலில் அணு, பின் அதற்குள் உள்ள ப்ரோடான், எலெக்ட்ரான், நியுட்ரான் என்று போகிறது. பின் அவற்றையும் உடைத்துப் பிரித்து உள்ளே செல்கிறது.

இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் நுணுக்கமாக ஆராய்வதே அறிவியலின் வேலை.

எத்தனை அறிவியல் துறைகள்? பிரிந்து பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது.

இதில் சிக்கல் என்ன என்றால், அதிகமாக இவற்றைப் படித்து படித்து நம் மனமும் மூளையும் எதையும் இதே முறையில் ஆராய தொடங்குகிறது.

எதைக் கொடுத்தாலும் பியித்து பிரித்து போட்டு விடுகிறோம். மனமும் அறிவும் சுருங்கிப் போய் விடுகிறது.

எந்த பிரச்னை என்றாலும் அதை சரியாக பிரித்தால் தான் அதற்கு ஒரு தீர்வு காண முடியும்.

சரி.

ஆனால், வாழ்கை என்பது பிரச்சனையா ? வாழ்க்கையில் பிரச்னைகள் வரலாம். ஆனால், வாழ்கையே பிரச்னை அல்ல.

நமக்குத் தெரிந்ததெல்லாம் அறிவியல், கணிதம், தர்க சாஸ்திரம் (logic ). இதை வைத்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வாழ்கையை எப்படி வாழ்வது ?

இங்குதான் ஆன்மீகமும் இலக்கியமும் வருகின்றன.

இவை இரண்டும் வாழ்கை என்பது ஒரு பிரமாண்டமான ஒன்று, அனைத்தையும் சேர்த்தது, ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று சொல்ல வருகிறது.

நம் அறிவையும், மனதையும் விசாலமாக்க வருகின்றன.

குறுகிய வட்டத்துக்குள் இருந்து நம்மை விடுவித்து மிகப் பெரிய ஒரு பிரமாண்டத்தை நமக்குக் காட்டுகின்றன.

இந்த பிரமாண்டம் , விஸ்வரூபம் புரியும்போது நான், எனது என்பவை மிக மிகச் சிறியது ஆகி மறைந்தே போகின்றன. நாமும் இந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு  என்று அறிகிறோம். பிரிவினைகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற  நிறைவான  எண்ணம் வருகிறது.

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி , முதல் திரு மொழி, முதல் பாசுரம் அப்படி ஒரு பிரமாண்டத்தை நமக்குத் தீட்டிக் காட்டுகிறது.

இந்த உலகமே அகல் விளக்காக, இந்த கடல்நீர் எல்லாம் அந்த விளக்கில் இடும் நெய்யாக, சூரியனே அந்த விளக்கின் சுடராக இருக்க , அப்படி ஒரு விளக்கை ஏற்றினேன், என் துயரமெல்லாம் நீங்க வேண்டி என்கிறார்.

பாடல்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.

பொருள்

வையம் = உலகம், பூமி

தகளியா = விளக்காக

வார்கடலே = ஆர் + கடலே = ஆர்பரிக்கும் கடலே

நெய்யாக = நெய்யாக

வெய்ய கதிரோன் = வெம்மையான கதிரோனே

விளக்காக = அந்த விளக்கின் சுடராக

செய்ய சுடர் = சிவந்த சுடரைக் கொண்ட, ஒளி பொருந்திய

ஆழி யானடிக்கே  = ஆழியான் அடிக்கே, திருமாலின் திருவடிகளுக்கே

சூட்டினேஞ் = சூட்டினேன் 

சொன் மாலை = சொற்களால் ஆன மாலை

இடராழி நீங்குகவே என்று = இடர் + ஆழி + நீங்குவே என்று. இடர் என்றால் துன்பம். துன்பம் என்ற கடல் நீங்க வேண்டி.


துன்பம் என்ற கடல் நீங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறார்  ஆழ்வார். 

பெரிதாக சிந்தியுங்கள். மிக மிகப்  பெரிதாக.

உலகமே விளக்காக. கடலே நெய்யாக. சூரியனே சுடராக

இப்படி ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். இதை மனதில் நிறுத்துங்கள்.

முடிந்த நேரம் எல்லாம் இந்த பாசுரத்தை உணர்ந்து சொல்லுங்கள். 

இந்த பிரமாண்டம் விளங்குகிராதா ? மனம் விரிகிறதா ? 

இந்த பாசுரம் இன்னும் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது. அதை மேலும் சிந்திப்போம்.