Tuesday, June 30, 2015

நளவெண்பா - மாறியவை

நளவெண்பா - மாறியவை 


நிடத நாட்டில் இது சிறப்பாக இருக்கிறது, அது சிறப்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே போனால் அந்த பட்டியல் எப்போது முடியும். எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும், பட்டியலும் நீளமாக போகக் கூடாது...எப்படி சொல்லுவது...?

புகழேந்தி சொல்கிறார்....

அந்த நாட்டில் வளைந்து இருப்பது வில் மட்டும்தான்...தளர்ந்து இருப்பது பெண்களின் கூந்தல் மட்டுமே...வாய் விட்டு அரற்றுவன பெண்களின் சிலம்பில் உள்ள மணிகள் மட்டும் தான், கலங்குவது நீர் மட்டும்தான், நல்ல நெறியை விட்டு விலகுவன பெண்களின் கண்கள் மட்டுமே...

பாடல்

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்கம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

பொருள்

வெஞ்சிலையே = கொடிய வில் மட்டும்

கோடுவன = வளைந்து இருப்பன. அப்படி என்றால் அரசனின் செங்கோலும், நீதி தேவதையின் துலாக் கோலும் வளையாமல் நிமிர்ந்து நின்றன.

மென்குழலே  = மென்மையான (பெண்களின் )  தலை முடியே

சோருவன = தளர்ந்து இருப்பன . மக்களிடம் சோர்வு இல்லை. அலை அலையாக பறக்கும் பெண்களின் கூந்தல் மட்டும் தான் தளர்ந்து இருக்கும்.

அஞ்சிலம்பே = கொலுசுகள் மட்டும் தான்

வாய்விட் டரற்றுவன = சத்தம் போட்டு அரற்றுவன. சிலம்பு ஏன் வாய் விட்டு அரற்றும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். வாய் விட்டு புலம்புபவர்கள் யாரும் இல்லை அந்த ஊரில் இல்லை. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

கஞ்கம் கலங்குவன = கலங்குவது நீர் மட்டும் தான்

மாளிகைமேல்  = மாளிகையின் மேல்

காரிகையார் = பெண்களின்

கண்ணே = கண்கள் மட்டும்தான்

விலங்குவன = விலகிச் செல்வன

மெய்ந் நெறியை விட்டு = உண்மையான நெறியை விட்டு

மெய் நெறி என்பது வீடு பேறு அடையும் வழி. பெண்களின் கண்கள் இந்த உலக இன்பங்களை  அனுபவிக்க நம்மை இழுக்கும். அந்தக் கண்கள், பற்றற்ற துறவற நிலைக்கு  நம்மை அழைத்துச் செல்லாது என்று சொல்ல வருகிறார்.

எதிர் மறையிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது.



1 comment:

  1. 1. பெண்கள் நடக்கும்போது அவர்கள் சிலம்புகள் புலம்புகின்றன!

    2. பெண்களின் கண்கள் நல்ல நெறியை விட்டு விலகுகின்றன என்றால், அந்த நாட்டுப் பெண்களுக்கு ஒழுக்கமே இல்லை என்று பொருளா? அவர்கள் எல்லோரையும் சைட் அடிக்கிறார்கள் என்று பொருளா?

    ReplyDelete